24/03/2013

"வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!


தமிழ் சினிமாவில் முன்னணி கதை-வசன கர்த்தாக்களுள் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தவர் வலம்புரி சோமநாதன். நல்லறம் நோக்கி அகத்துறை வாழ்வியலை நகர்த்தும் குடும்பக் கதைகளுக்கான இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் 1928-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மரபிலக்கியங்களைப் பயின்றதுடன், ஆங்கில மொழியும் நன்கு அறிந்தார். அந்தக் காலத்தில் மன்னர் ஆட்சியின் கீழிருந்த புதுக்கோட்டையில் காகிதம் எளிதாகவும், மலிவாகவும் கிடைத்ததால், அவ்வூரில் தொடங்கப்பட்டப் பத்திரிகைகளில் ஒன்று "திருமகள்'. அப்பத்திரிகையில் முதன் முதலாக விளம்பரம் சேகரிக்கும் பணியில் கவிஞர் கண்ணதாசன் நியமனம் பெற்று, பிறகு ஆசிரியராக உயர்த்தப்பட்டபோது நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தவர் வலம்புரி சோமநாதன்.

ஆசிரியரான கண்ணதாசனுக்குப் பத்திரிகையின் அத்தனைப் பக்கங்களுக்கும் செய்திகள் அளிக்க அவகாசம் இல்லை. எனவே, சோமநாதனையும் சில பக்கங்களை நிறைவு செய்யும்படி உற்சாகப்படுத்தினார். கருத்துச் சாரமிக்க சோமநாதனின் கதை, கட்டுரைகள் பத்திரிகைக்குப் பலம் சேர்க்க, கண்ணதாசன் மேலும் ஊக்கப்படுத்த, வலம்புரி சோமநாதன் எழுத்தாளராக அரும்பினார்.

தமிழின் முக்கிய இலக்கியப் பத்திரிகையான "சக்தி' மாத இதழின் ஆசிரியரான வை.கோவிந்தன் தலைமையில் பணிபுரிந்த சோமநாதன், "எழுத்து முதிர்ச்சி' பெற்றார். சண்டமாருதம், முல்லை, பேசும் குரல், டாக்-எ-டோன் போன்ற மாத இதழ்களும் சோமநாதனுக்கு இடமளிக்க, அவரது படைப்பாற்றல் மீது மக்களின் கவனம் திரும்பியது. ஏவி.எம்.செட்டியார் தனது பட நிறுவனத்தில் கதை இலாகாவுக்கு அழைத்தார். ஏவி.எம்.மின் கதைக் குழுவில் முக்கியமானவர்களுள் ஒருவராகி, சோமநாதன் சினிமா உலகில் அறிமுகமானார்.

இந்தி மேதை மோஹன்லாலிடம் சோமநாதன் ஒரு படத்தின் கதையையும் அதன் வசனத்தையும் நுட்பமான ஆங்கிலத்தில் சொல்ல, அதை இந்தியில் எழுதி மோஹன்லால் தயாரிப்பாளருக்கு அனுப்பிவைத்தார். அவர் தொலைபேசியில் மோஹன்லாலைப் பாராட்ட, அதற்கு, "நீங்கள் அனுப்பிய கதாசிரியர் சோமநாதன்தான் உங்கள் பாராட்டுக்குரியவர். நான் இந்தியில் மொழிபெயர்த்து அனுப்பினேன்; அவ்வளவுதான் என் பங்கு'' என்று கூற, தயாரிப்பாளர் வலம்புரியாரின் ஆற்றலில் பிரமிப்பு அடைந்தாராம்.

ஏவி.எம்.மின் பழைய படமான "என் மனைவி' படத்தை சிங்களத்தில் மறு ஆக்கம் செய்ய ஒரு படக்குழு செட்டியாரை அணுகியபோது, "என்னிடம் இருக்கும் சோமநாதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் வெற்றியடைவது நிச்சயம்'' என்று கூறினாராம். எல்.வி.பிரசாத் தனது "மங்கையர் திலகம்' படத்துக்கு சோமநாதனையே எழுத வைத்தார். படம் மகத்தான வெற்றிபெற்றது.

வலம்புரியாரின் வசனங்கள், வெகுஜன ரீதியாகப் படங்கள் வெற்றிபெற பெரிதும் துணைபுரிந்தன. பி.பானுமதியின் "மணமகள் தேவை' படத்துக்கு வசனத்தை சோமநாதன் எழுத, படம் நகைச்சுவை சித்திரமாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜனரஞ்சக ரசனையை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல புத்திப் பூர்வமான படங்களைப் படைக்க வேண்டும் என்று தீவிர ஆர்வம் சோமநாதனுக்கு ஏற்பட, பானுமதி தயாரிக்க சரத்சந்திரர் நாவலை மூலக் கதையாக வைத்து, "கானல் நீர்' படத்தை எழுதினார். படம் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தபோதிலும், படத்தைப் பார்த்த டி.கே.சண்முகம், எழுத்தாளர் அகிலன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் சோமநாதனுக்கு மனம் நெகிழ்ந்து பாராட்டுகளை வழங்கினார்கள்.

சோமநாதன் சொந்தப் பட நிறுவனம் ஆரம்பித்து, "திருமணம்' என்னும் படத்தை பீம்சிங் இயக்கத்தில் எடுத்தார். படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து பீம்சிங்கும், சோமநாதனும் இணைந்து பல வெற்றிப் படங்களை வழங்கினார்கள். வெற்றிப் படத்துக்கான கதையை கட்டமைப்பதில் சோமநாதனுக்குச் சிறப்பான திறமை இருந்ததால், இந்தி நடிகர் திலீப்குமார் சோமநாதனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் நடிக்கும் படங்களின் கதைகளை சோமநாதனிடம் சொல்லி, ஆலோசனைகள் பெற்றபின்பே நடிக்கத் தொடங்குவாராம்.

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலை சோமநாதன் படமாகத் தயாரித்தார். அந்தப் படம் இந்தியன் பனோரமாவுக்கு அனுப்பப்பட்டு தமிழுக்கு மாநிலப் பரிசைப் பெற்றுத்தந்தது.

கதை, வசனம் தவிர்த்து, இயக்கத்திலும் ஈடுபட்ட சோமநாதன், கண்ணதாசனின் "சிவப்புக்கல் மூக்குத்தி' மற்றும் "லலிதா', "துணையிருப்பாள் மீனாட்சி', ஆகிய படங்களையும் இயக்கினார். "துணைவி' படத்தின் வசனத்துக்காக அந்த ஆண்டின் சிறந்த வசன கர்த்தாவுக்கான விருதைப் பெற்றார். ஆஸ்கார் விருது பெற்ற "காந்தி', என்.எஃப்.டி.சி. தயாரித்து மம்முட்டி நடித்த "டாக்டர் அம்பேத்கர்' போன்ற படங்களின் தமிழாக்க வசனங்களை எழுதினார். 1984-இல் தமிழக அரசின் "கலைமாமணி' விருது பெற்றார்.

தமிழ்ப் படங்களில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் குழுவில் அவர் பல ஆண்டுகள் இடம்பெற்றார். திரைப்படம் தொடர்பான சங்கங்களில் தலைவராகவும், நிர்வாகக்குழு அங்கத்தினராகவும் நேர்மையுடன் செயல்பட்டார். ரஷிய திரைப்பட விழாவுக்கு அந்த அரசு சோமநாதனை இருமுறை அழைத்து கெளரவப்படுத்தியது தமிழ்க் கலைஞனுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

திரையுலகில், பல கதாசிரியர்கள் உருவாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த சோமநாதன், 2010-ஆம் ஆண்டு தன் 82-வது வயதில் காலமானார்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: