07/03/2013

'தமிழ்த் தாயின் தவப்புதல்வர்' ம.கோபாலகிருஷ்ண ஐயர் - உஷா மகாதேவன்


தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் என்றே தம் வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர், 1878- ஆம் ஆண்டு மகாதேவன் - ப்ரவர்த்த ஸ்ரீமதி தம்பதிக்குப் புதல்வராகப் பிறந்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்க நிர்வாக அங்கத்தினராகவும், மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனராகவும், திருச்சி தேசியக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகவும், நச்சினார்க்கினியன், விவேகோதயம் ஆகிய பத்திரிகைகளின் நிறுவன ஆசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைகளின் மூலம் மொழிப்பற்றை வளர்த்ததுடன், நாட்டுப்பற்றையும் ஊட்டினார்

தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் கடமை என்பதை நாளும் வற்புறுத்திய சான்றோர்களுள் ம.கோ., குறிப்பிடத்தக்கவர்.

புலவர் நச்சினார்கினியர் பேரில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, அப்புலவருக்கு மதுரையில் நினைவுச் சின்னத்தை நிறுவினார். மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரை தேவருக்குப் பக்கபலமாக இருந்த ம.கோ., சுதேசமித்திரன் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

எட்டையபுரத்தை விடுத்து, மதுரை வந்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு உதவிய பெருமையும் ம.கோ.வுக்கு உண்டு. கந்தசாமிக் கவிராயர் நடத்திவந்த பத்திரிகையில், துணை ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பிறநாட்டு நல்லறிஞர்களின் படைப்புகள் சிலவற்றைச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார்.

சர்வால்டர்ஸ்காட் என்பவரின் கவிதைக்கு ம.கோ., ஆக்கிய மொழிபெயர்ப்பைக் கண்ட ஜி.யு.போப், ""அந்த ஆங்கில மூலத்தைத் தான் முன்னமே படித்திராதிருந்தால், ம.கோ.வின் மொழிபெயர்ப்பை மூலமென்றும், ஸ்காட்டின் மூலத்தை மொழிபெயர்ப்பு என்றும் உறுதியாகக் கூறியிருப்பேன்'' என்று பாராட்டியுள்ளார்.

கூப்பர் என்பவரின் கவிதையின் மொழிபெயர்ப்பைப் படித்து மகிழ்ந்த மகாகவி பாரதி, ""இதை நாம் முதலில் வாசித்தவுடன் மொழிபெயர்ப்பென்றே நினைக்கவில்லை. சாதாரணமாய் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள், விசேஷமாய் செய்யுள்கள் பாறைக்காட்டில் குதிரை வண்டி போவதுபோலக் கடபுட வென்று ஒலிக்கும். ஆனால், நமது ஐயர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பானது தெரிந்தவர்க்கன்றி மற்றவர்க்கு மொழிபெயர்ப்பு யெனவே தோன்றாது. இது அதை வாசிப்பார் மனத்திற்கே தோன்றும்'' என்று "இந்தியா' பத்திரிகை மதிப்புரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண் கல்வியையும் பெண்களின் முன்னேற்றத்தையும் ம.கோ., பெரிதும் ஆதரித்தார். 1916- ஆம் ஆண்டு தாம் நடத்தி வந்த "விவேகோதயம்' என்ற பத்திரிகையின் சந்தாவில் மகளிர்களுக்குத் தனி சலுகை அளித்து விளம்பரம் செய்தார்.

சுதேசமித்திரன் ஜி.சுப்ரமணிய ஐயர் நினைவு நிதி திரட்ட முடிவு செய்தபோது, "அந்த நிதியில் குறைந்தது ஐம்பது விழுக்காடு நிதியை ஒரு பெண்கள் பள்ளி நிறுவவும், பெண்கள் முன்னேற்றத்திற்கு என்றும் ஒதுக்க வேண்டும்' என்ற ஒரு வேண்டுகோளைத் தனது பத்திரிகையின் 1916 ஜுலை இதழ் மூலம் முன்வைத்தார். பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்த, அவர்களும் பொருள் ஈட்டும் வழிவகை செய்ய அவர்களுக்குக் கைத்தொழில் அறிவைப் புகட்டவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மிகப் பண்பாட்டுத் துறையிலும் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்த ம.கோ., பாஸ்கர சேதுபதி மன்னருடன் "பாம்பன்' சென்று, சுவாமி விவேகானந்தரை வரவேற்றார். மதுரையில் இயங்கி வந்த விவேகானந்தர் சங்கத்தின் தலைமைச் செயலராக ம.கோ., பணிபுரிந்துள்ளார். விவேகானந்தர் ஜூலை 1895-ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் இருக்கும் போது 13 பாடல்களை இயற்றினார். இந்த 13 பாடல்களையும் ம.கோ., அற்புதமாக மொழிபெயர்த்து ஜூலை 1904-இல் "விவேகசிந்தாமணி' இதழில் வெளியிட்டார்.

ம.கோ., திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியபோது, "நச்சினார்க்கினியன்' என்ற மாதப் பத்திரிகையைத் தொடங்கினார். தன் காலம் முடியும் வரையில் (1927) அந்த இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார். அதே ஆண்டு மார்ச் திங்கள் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். தான் இனிமேல் நெடுநாள்கள் வாழப்போவதில்லை என்றும், அதற்கடுத்த இதழைத் தன்னால் வெளிக்கொணர முடியாது என்றும் உணர்ந்த ம.கோ., ஆண்டுச் சந்தாவை முன்கூட்டியே செலுத்தியுள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, "பத்திராதிபர் குறிப்பும் அறிவிப்பும்' என்ற பகுதியில் "ஒருவேளை தனது காலம் முடிந்துவிட்டால், சந்தாதாரர்கள் வெளியீட்டார்களிடம் இருந்து அவரவர்கள் செலுத்தியுள்ள தொகைக்கு ஈடாக வேறு நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்' என்று குறிப்பிட்டுள்ளார் - இதுவொரு செயற்கரிய செயலன்றோ!

1927-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ம.கோ., இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்ந்த குறுகிய காலத்தில் இவர் ஆற்றிய தமிழ்ப் பணிகள் கணக்கில் அடங்கா.

தமிழுக்கென்றே வாழ்ந்த தமிழ்த்தாயின் இந்தத் தவப் புதல்வர் தம் இறுதிக் காலத்தில், மரணம் தம்மைத் தமிழில் இருந்து பிரித்துவிடுமே என்றுதான் வருத்தமுற்றார். இந்த ஒப்பில்லாத தமிழ்ச்சுடர், தமிழ்த்தாயின் பெருஞ்ஜோதியில் இரண்டறக் கலந்துவிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: