11/03/2013

புதுவையில் மற்றொரு புரட்சிக்குயில்! - கலைமாமணி விக்கிரமன்


புதுவையில் பூத்த புரட்சி மலர்களுள் பாரதி, பாரதிதாசனுடன் இணையாக எண்ணத்தக்கவர் புதுவை சிவம். இவர் ஒரு சீர்திருத்த, சுயமரியாதைக் கவிஞர். நோக்கம், சமயம், கொள்கை வேறுபட்டாலும் தமிழ் வளர்த்த சிற்பி என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளமுடியாது.

புதுவை சிவம் என்று அறியப்பட்ட ச.சிவப்பிரகாசம் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி, புதுச்சேரி பகுதிகளில் ஒன்றான முத்தியாலுப்பேட்டையில் பிறந்தார். சண்முக வேலாயுதம் - விசாலாட்சி அம்மையாருக்குப் பிறந்த இரு புதல்வர்களில் மூத்தவர் சிவப்பிரகாசம்.

புதுவை பிரெஞ்சுப் பகுதியான முத்தியாலுப்பேட்டையில் புதுவை அரசின் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர், அவர் பாட்டனார் தளவாய் வேங்கடாசல நாயக்கர். அவர் பெயரால் தெரு ஒன்றே இருந்தது. அவர்களின் முன்னோர் உடையார் பாளையம் ஜமீன் பரம்பரையினர். இவர்கள் காலப்போக்கில் புதுச்சேரிக்குக் குடியேறியவர்கள் என்று கவிஞர் புதுவை சிவம் தன் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பரம்பரையாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் சிவப்பிரகாசம் குடும்பத்தினர். அந்தத் தொழிலில் நலிவு ஏற்பட்டதால், பிறகு நெசவுத் தொழிலுக்கு மாற நேர்ந்தது. தறித் தொழிலாளர் துயரம் குறித்துப் பிற்காலத்தில் சிவப்பிரகாசம் கவிதை எழுதுவதற்கு அவருக்கு அத்தொழிலில் இருந்த அனுபவமே காரணம்.

சிவப்பிரகாசம், கவிஞர் சிவமாக மாறப் பல சூழ்நிலைகள் காரணமாக அமைந்தன. முற்போக்குச் சிந்தனைகளின் தாக்கம் அவருக்கு ஏற்பட்டது. தன் நண்பர்களுடன் சேர்ந்து மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பேசி நண்பர்களையும் தன் வழிக்குச் சிறிது சிறிதாக மாற்றினார். ஈ.வெ.ரா.வின் எழுத்தையும் அவர் நடத்திய இதழையும் படித்து, சீர்திருத்தவாதியாக மாறினார்.

1926-ஆம் ஆண்டு, ஈ.வெ.ரா., புதுவைக்கு வந்தபோது அவர் பேச்சைக் கேட்டு ஈடுபாடு மிகக்கொண்டு அவருடைய இயக்கத்தில் இணைந்தார். அந்தச் சூழ்நிலையில்தான் பாரதிதாசன் அறிமுகம் கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது, பாரதிதாசனைச் சந்தித்தார். கவிதை எழுதுவதில் முதல் அத்தியாயமான "யாப்பு' இலக்கணத்தை அவரிடம் பயின்றார்.

1930-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "புதுவை முரசு' என்னும் சுயமரியாதை இதழின் பதிப்பாசிரியரானார். அவ்விதழில் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதன் காரணமாக, "புதுவை முரசு' இதழ் மீது சம்பந்தப்பட்டவர்களால் புதுவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 1932-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிவப்பிரகாசத்துக்கு 550 பிராங்க் (பிரெஞ்சு நாணயம்) அபராதமும், மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் சிவப்பிரகாசம் பிரபலமடையத் தொடங்கினார். பாரதிதாசன் நட்பு பலப்பட்டது. அவருடைய கவிதைகளைப் படியெடுக்கும் பணியை ஏற்றார். கட்டுரைகள் எழுதினார். நெசவுத் தொழிலில் அவருக்கு முன்பே இருந்த அனுபவமும், அத்தொழிலில் ஏழைகள் படும் துயரமும் முற்றிலும் அறிந்தவராதலால், நெசவாளர் துயர் குறித்துப் பாடல்கள் எழுதினார். அவற்றைத் திரட்டிப் "புதுவை நெசவுத் தொழில் - ஏழையர் எழுச்சிப் பாடல்' என்னும் தலைப்பில் கவிதை நூலாகத் தொகுத்து வெளியிட்டார். அந்தக் கவிதைத் தொகுப்பு பரபரப்பாக விற்பனை ஆயிற்று.

புதுவையில், மக்கள் ஆயிரக்கணக்கில் பஞ்சாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் நல வாழ்வுக்கு என்று தனிச் சட்டமில்லை. இந்தத் துயர் நிலையை பாரதிதாசனும், சிவப்பிரகாசமும் "புதுவை முரசு' இதழில் எழுதி எழுச்சி ஏற்படுத்தினர். தோழர் வ.சுப்பையா போன்றவர்கள் தொழிலாளர் நலனுக்குக் கனல்கக்கப் பேசியும் எழுதியும் வந்தனர். இதனால் சில ஆண்டுகளில் புதுவையில் தொழிலாளர் புரட்சி கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. கூட்டங்கள், வேலைநிறுத்தங்கள் பல ஏற்பட்டன. 1936-ஆம் ஆண்டில் ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பன்னிரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். "புதுவை சவானா மில் படுகொலைப் பாட்டு' என்னும் தலைப்பில் இந்த நிகழ்ச்சியைப் புதுவை சிவம் கவிதையாக எழுதினார்.

1940-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஜெகதாம்பாள் என்பவரை பாரதிதாசன் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.

1944-இல் புதுவையில் திராவிடர் கழகம் தொடங்கப் பெரும் பாடுபட்டார், பின்னர் அக் கழகத்தின் செயலாளரானார். பொருளாதாரம் காரணமாக "புதுவை முரசு' இதழ் நிறுத்தப்பட்டது. அதனால் அவர் ஓய்ந்துவிடவில்லை. தமிழ் நாட்டினின்று வெளிவந்த குடியரசு, நகர தூதன், சண்டமாருதம் முதலிய இதழ்களில் பாரதிதாசனுடன் இணைந்து கவிதை, கட்டுரைகள் எழுதினார்.

மகாகவி பாரதியிடமும் பெரும் ஈடுபாடு கொண்டவர் சிவப்பிரகாசம். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' என்னும் இதழை மீண்டும் புதுப்பித்து வெளியிட்டார். எஸ்.ஆர்.சுப்பிரமணியம் போன்ற பாரதிப் பித்தர்கள் பொருளுதவி செய்ய, பாரதிதாசன் ஆசிரியராக இருக்க, புதுவை சிவம் மேற்பார்வையில் "பாரதி கவிதா மண்டலம்' இதழ் முற்றிலும் கவிதை இதழாக வெளிவந்தது. பாரதியார் பாடல்களும், பாரதியாரைப் பற்றி பாரதிதாசன் எழுதிய கவிதைகள் பலவும் கவிதா மண்டலத்தில் பூத்துக் குலுங்கின. ஆனால், பாரதி கவிதா மண்டலம் இதழை ஓராண்டுக்கு மேல் நடத்த இயலவில்லை. பாரதியாரைப் போற்றிய புதுவை சிவத்தைப் பாரதி அன்பர்கள் மறந்துவிடக்கூடாது.

புதுவை சிவம் நாடக இலக்கியத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டார். சுயமரியாதை இயக்கத்திற்கென்று நாடகங்கள் பல எழுதி அவை மேடையேறின. ரஞ்சித சுந்தரம், நீதி வர்மன், பூங்கொடி, கோகில ராணி, சிதைந்த வாழ்வு ஆகிய நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

முத்தியாலுப்பேட்டைத் தொகுதியில் புதுவை நகர மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். புதுச்சேரி நகர மன்றத் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கான மாநில உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

இயக்கப் பணி காரணமாக அரசுப் பணியை ஏற்காமல் தனியார் பள்ளியில் பணியாற்றினார். "தமிழிசைப் பாடல்' என்னும் பாடல் தொகுதி உட்பட, 19 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு, புதுவை சிவத்துக்கு 1983-ஆம் ஆண்டில் "பாரதிதாசன்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

புதுவை சிவம் 1989-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி காலமானார்.

புதுச்சேரி அரசு, புதுவை சிவம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி, "நூற்றாண்டு பாமாலை' என்ற நூலை வெளியிட்டு அவர் நினைவைக் கொண்டாடியது. தமிழ்நாட்டிலும் அக் கவிஞருக்கு நாம் அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: