24/03/2013

‘ஆதார ஸ்ருதி'யின் நாயகன் - ரஸவாதி! - எஸ்.குரு


‘ரஸவாதி' என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த எழுத்தாளரின் இயற்பெயர் ஆர்.சீனிவாசன்.

தஞ்சை நன்னிலம் தாலுக்கா, நல்லமாங்குடியைச் சேர்ந்த இவர், 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி பிறந்தார். அந்தக்கால பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். சீனிவாசனின் தந்தைக்கு ரயில்வே பணி. ஊர் ஊராக மாற்றலாகிக்கொண்டே இருப்பார். அதனால், சிறுவயதிலேயே பல ஊர்களையும் பல்வேறு மனிதர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ரஸவாதிக்குக் கிடைத்தது. பின்னாளில் இவர் எழுத்தாளராக மலர்ந்தபோது, இந்த அனுபவங்கள் இவர் எழுத்துக்குப் பக்கபலமாக இருந்தன.

மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தி இருக்கிறார். துணையாக இருந்தவர்கள் ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) மற்றும் பின்னாளில் கர்நாடக சங்கீத உலகில் புகழுடன் திகழ்ந்த டி.ஆர்.சுப்ரமணியம்.

கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கிய ரஸவாதி, 1949-இல் புகழ்பெற்ற எழுத்தாளராக ஒளி வீசிக்கொண்டிருந்தார். கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. 1956-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, "கலைமகள்' மாத இதழில் தொடர்கதையாக வெளிவந்த "ஆதார ஸ்ருதி' என்ற நாவல் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

கலைமகள் இதழில் வெளியான இந்நாவலைத் தொடர்ந்து வாசித்து வந்த பெண் வாசகிகள் பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். அந்தக் காலகட்டத்தில் இது மிகவும் புரட்சிகரமான நாவலாக அறியப்பட்டது - விவாதிக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த நாவலில் காணலாம்.

எளிமையான வார்த்தைகள், எதார்த்தமான நிகழ்ச்சிகள். "ஆதார ஸ்ருதி' கன்னட எழுத்து வேந்தர் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பேத்தி ரமா தேவியால் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, "ஜீவனா' என்கிற கன்னட வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற "அழகின் யாத்திரை' என்ற நாவலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஸவாதியே "அழகின் யாத்திரை'யை மேடை நாடகமாக்கி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.

"விடிந்தது' என்ற சிறுகதையின் மூலம் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய ரஸவாதி, சிறந்த பல சிறுகதைகளை எழுதிக் குவித்தார். ஆனந்த விகடன் வார இதழில் பல முத்திரைக் கதைகளை எழுதினார்.

"சங்கராபரணம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுதியும், "கடலூருக்கு ஒரு டிக்கெட்' என்ற மகுடம் சூட்டிக்கொண்ட இன்னொரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட நூற்றிருபது(120)சிறுகதைகள் இன்னும் தொகுக்கப்படாமல் உள்ளன.

தி.ஜா.வும், லா.ச.ரா.வும் ரஸவாதியின் ஆதர்ஷ புருஷர்களாக இருந்தார்கள். தி.ஜா.வும் ரஸவாதியும் நெருங்கிய நண்பர்கள். ஒருவர் எழுத்தை மற்றவர் கையெழுத்துப் பிரதியாகவே படித்து, விமர்சித்த அனுபவங்களும் உண்டு!

புல்லாங்குழல் மேதை மாலியின் வீட்டில் குருகுல வாசம் செய்த ரஸவாதி, குழல் ஊதவும் கற்றுக்கொண்டார். உடன் பயின்றவர் பிரபல புல்லாங்குழல் வித்வான் என்.ரமணி.

நாடகப் பிரியரான ரஸவாதி, "சேவா ஸ்டேஜ்' நாடகங்களில் மனதைப் பறிகொடுத்தார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தை அடிக்கடி சந்தித்துப் பேசி, அவரது அன்புக்குப் பாத்திரமானார். "பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', "பாஞ்சாலி சபதம்' ஆகிய சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். நடிகர் வி.எஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு இவர் எழுதிக்கொடுத்த நாடகம் "வழி நடுவில்'. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பரிசை வென்றது இந்தக் கலை ஓவியம்.

அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். வலது புறம் செயலிழந்து போனது. என்றாலும் அவர் அதிர்ச்சி அடையவில்லை. தன் கையைக் குணப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், "சேது பந்தனம்' என்கிற நாவலை அதே மணிமணியான கையெழுத்தில் எழுதி முடித்தார்.

1994-இல் ரஸவாதி காலமானார். "சேது பந்தனம்' 1999-ஆம் ஆண்டுதான் பிரசுரமானது. அதைக் கண்டுமகிழ அவர் இவ்வுலகில் இல்லை.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: