மாநகராட்சியின் குப்பைவண்டிகள் மட்டுமே வந்துபோகும் அவ்விடத்தில், மிகச்சமீபத்தில் சந்தைக்கு இறக்குமதியாகியுள்ள ஒரு வெளிநாட்டுக் கார் வந்து நிற்பது பொருத்தமற்றதாகத் தெரிந்தது. தலைநகரின் புறத்தே நீண்டோடும் தங்க எண்கரச்சாலையின் (என்.ஹெச் 001) ஏழாவது சுங்கச்சாவடியை நெருங்கும் எவரும் இவ்விடத்தை வேகமாக கடந்துவிடவே துடிப்பார்கள். மூர்ச்சையடைய வைக்குமளவு அங்கு துர்நாற்றத்தை விளவிக் கொண்டிருக்கும் அந்த குப்பைகள் யாவும் அவர்களது வீட்டிலிருந்து வந்தவைதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு மூக்கைப் பிடித்துக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதேயில்லை. ஆனால் இந்தக் காரில் வந்தவரோ கண்ணாடியை இறக்கிவிட்டு உள்ளிருந்தபடியே குப்பைமண்டியை வெறித்துப் பார்க்கத் தொடங்கினார்.
குப்பையைக் கிளறி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் தமது வேலையில் முனைந்திருந்த சிறுவர்கள் காரில் யாரென்றறிய ஆர்வம் மிகக் கொண்டவராகினர். நமக்குப் போட்டியா குப்பை பொறுக்குற வேலைக்கு யாரோ ஒருத்தன் கார்ல வந்திருக்கிற கொழுப்பைப் பாரேன் என்று ஒருத்தி கிண்டலடித்து அவ்விடத்தை சிரிப்புக்காடாக்கினாள். ஒருவேளை அவனும் தன்கிட்டயிருக்கும் ரூவாய்த்தாள்களை இங்க கொட்டிட்டுப் போக கொண்டாந்திருக்கானோ என்னமோ என்று மற்றொருத்தி சொல்ல, இருக்கும் இருக்கும்... எதுக்கும் உதவாத அந்த வெத்துக்காகிதம் இருக்கவேண்டிய இடம் இந்த குப்பைமண்டிதானே... என்று எல்லோரும் ஆமோதித்தனர். பதற்றமடைந்த அவர் இந்த ஏளனப்பேச்சை இடைமறிப்பவர்போல காரிலிருந்து இறங்கினார்.
விலையுயர்ந்த ஒட்டகரோமத்தின் இழைகளாலான நேர்த்திமிகு உடையணிந்த அந்த கனவானின் முகம் அவர்களுக்கு பரிச்சயமானதல்ல. கொழுத்த சதைத்துண்டம் ஒன்றிலிருந்து சதுரித்து வெட்டியெடுத்தது போன்ற இறுகிய முகம் கொண்ட அவர் ஒருவேளை இந்த குப்பைமண்டியிலிருந்து தங்களை விரட்ட வந்த அதிகாரியாக இருப்பாரோ என்ற பயம் அவர்களை திடுமெனக் கவ்வியது. எனவே அவர்கள் ஏதுமறியாதவர் போல தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு பழையபடியே தத்தமது வேலையை கவனிக்கிற பாவனை காட்டினர். தமக்கு வெகு அருகாமையில் ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதையே காணாதார்போல அவர்கள் குனிந்த தலைநிமிராமல் இரையெடுக்கும் கோழிகளாக குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. சினிமா நடிகர்கள்/ கட்சித்தலைவர்கள்/ கிரிக்கெட் சூதாடிகள்/ கடவுளின் தரகர்கள்/ கல்வித் தந்தைகளுடையதைப் போல அவரது முகம் அப்படியன்றும் பிரபலமானதல்ல. அரிதாக ஓரிருமுறை பத்திரிகைகளில் அவரது புகைப்படம் வெளியாகி இருந்த போதும் அது எவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணத்தில் அமைந்திருக்கவில்லை. அதுவுமின்றி வகித்த பதவியின் தன்மைப்படியும்கூட அவர் பரபரப்பாக செய்திகளில் அடிபடக்கூடியவரல்ல.
ஆள்தான் பிரபலமாகவில்லையே தவிர அவரது கையெழுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். ரிசர்வ் வங்கியின் கவர்னரான மேன்மை பொருந்திய திருவாளர் காசுநாதன் என்ற இந்த மகாமனிதரால் கையெழுத்திடப்பட்ட பணத்தாள்களின்றி இந்தநாட்டில் அரைநொடிகூட யாராலும் உயிர்வாழ முடியாது. பணம் பாதாளம் வரை பாயும் என்றால் அந்த பாதாளம் வரை இவரது கையெழுத்தும் பாயும் என்பதே உண்மையாக இருந்தது. உள்ளவர் இல்லாதவர் என்பதெல்லாம் அவரால் கையெழுத்திடப்பட்ட காகிதத்தை ஒருவர் எவ்வளவு கைவசம் வைத்திருக்கிறார் அல்லது வெறுங்கையோடு இருக்கிறார் என்பதைப் பொறுத்தே தீர்மானமாகியது.
ஆனால் அதெல்லாம் நேற்றையக் கதை. இன்றைக்கு அவரது கையெழுத்துக்கு அணாபைசா மரியாதையில்லை. லிபரல்பாளையத்தில் புழக்கத்திலிருந்த அணா, பைசா, ரூபாய் எல்லாமே நேற்று நள்ளிரவு 12 மணியோடு ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. இனி அங்கு ரூபாய்க்கே மரியாதை இல்லை என்றான பின் அவரோ அவரது கையெழுத்தோ யாருக்கும் தேவைப்படாமல் போவது இயல்புதானே. தன்னால் கையெழுத்திடப்பட்ட ரூபாய் நோட்டைப்போலவே தானும் செல்லாக்காசாகிவிடுவோம் என்று அவர் கனவிலும் நினைத்தாரில்லை.
ரூபாய், அணா, பைசா என்பவையெல்லாம் கி.பி.1990வரை இந்தியா என்கிற நாட்டின் பணமாகத்தான் இருந்தன. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்ளை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணியில் பிச்சைக்காரரின் வருமானத்தைக்கூட யு.எஸ். டாலரில் கணக்கிட்டுச் சொல்லும் முறை அங்கு 1991ல் தொடங்கியது. வேலையில்லாதவர்கூட தனக்கு வேலையில்லை என்று சொல்லாமல் 500 டாலர் வருமானம் தரக்கூடிய வேலை ஒன்றுக்காக காத்திருப்பவராகவே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். சாமிப்படங்களை சுருவங்களாகப் பொறித்து டாலர் என்ற பெயரில் கழுத்தில் கட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்நாட்டு மக்கள் தமது வருமானத்தையும்/ வருமானமின்மையையும் இப்படி டாலரில் சொல்லிக் கொள்வதை கௌரவமாகவே கருதினர். நேருவம்சத்தின் ஆட்சிக்காலத்தில் தனிநாடு அந்தஸ்தைக் கைவிட்டு அமெரிக்காவின் 42வது மாகாணமாக இந்தியா இணைக்கப்பட்டபோது அது ரூபாயைக் கைவிட்டுவிட்டு மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த டாலரையே தன் நாணயமாக ஏற்றுக்கொண்டது.
அமெரிக்காவுடன் இணைந்து ஒரு குட்டி வல்லரசாக/ வல்லரசுக் குஞ்சாகிவிட்ட இந்தியாவில் வாழும் பெருமிதத்தில் இந்திய நாய்கூட லொள்லொள் என்பதற்கு பதிலாக வல்வல் என்றே குரைக்கப் பழகியிருந்தது. இந்தியாவின் பெயரையே வல்லரசு என மாற்றிவிடும் யோசனையும்கூட அங்கு விவாதத்திலிருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்த பெயரில் விஜயகாந்த் ஒரு படமெடுத்துவிட்டதால் இந்த யோசனை கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
வல்லரசு என்ற நினைப்பு வந்ததுமே தனக்கு வேண்டாதவையென கழித்துக் கட்டுகிறவற்றை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் குணமும் இந்தியாவுக்கு உடனடியாகவே வந்துவிட்டிருந்தது. எனவே தான் கைவிட்ட ரூபாய் என்ற நாணயத்தையும், அதை அச்சடிக்கும் இயந்திரங்களையும் தொழில் நுட்பத்தையும் லிபரல்பாளையத்தின் தலையில் கட்டிவிட்டது இந்தியா. இப்படியாக லிபரல்பாளையத்தின் நாணயமாகி கடந்த இரு தசாப்தங்களாக புழக்கத்திலிருந்து ஆட்டிப்படைத்த ரூபாய் நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகிப் போனதால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் கவர்னரான இந்த காசுநாதன்தான்.
காசுநாதன் தனது அந்தஸ்துக்கு பங்கம் நேரக்கூடிய இந்த குப்பைமண்டி மாதிரியான இடங்களில் ஒருபோதும் இறங்கக்கூடியவர் அல்ல. ஆனால் கெடுங்காலத்தின் முன்னறிவிப்பென அதிகாலையிலிருந்து பரவிவரும் செய்தி உண்டாக்கிய பதற்றத்தின் அழுத்தம் தாளாமலே அவர் அவ்விடம் வந்திருந்தார். உண்மைதான், அந்த குப்பைமண்டியில் கத்தைகத்தையாக பணம் கேட்பாரற்று கொட்டிக் கிடந்தது. குப்பையைக் கிளறும் சிறுவர்கள் ரூபாய்க்கட்டு இடறும் போதெல்லாம் ‘அடத்தூ... சனியனே...’ என்று எரிச்சலோடு அவற்றைத் தூக்கி தூர எறிந்தனர். காயமுற்ற பறவையின் றெக்கையைப்போல படபடக்கும் அந்தத்தாள்கள் அவ்வளவிலும் அவரது கையெழுத்து மின்னிக் கொண்டிருந்தது.
நோட்டுக்கட்டுகளை முகர்ந்துப் பார்த்த கழுதையன்று இதுவரையறியாத புது வாசனையும் மளமளப்பும் கொண்ட அந்த காகிதத்தைத் தின்னலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் வேறுபக்கம் நகர்ந்தது. சாலையோர புளியமரத்தடியில் மலங்கழித்துக் கொண்டிருந்த சிறுமியருத்தி புத்தம் புதிதாக சரசரக்கும் சலவைத்தாள்கள் சிலவற்றைக் கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டபோது அவரையே எடுத்துச் சுருட்டி துடைப்பதுபோல இருந்தது. அவருக்கு முட்டிக்கொண்டு வந்தது அழுகை. நிலைபிறழ்ந்து துவளும் இதயத்தோடு வீடு திரும்பி விசயத்தை மனைவியிடம் சொல்லிப் புலம்பினார். ச்சே, அந்த சிசுவுக்கு இருக்கிற அறிவு நமக்கில்லாமப் போச்சே... நாம்கூட ரூவாத்தாள்களை குப்பையில வீசாம டிஷ்யூ பேப்பரா பயன்படுத்திக்கிட்டா செலவு குறையும், மிட்டாயும் மிச்சமாகும் என்பதுதான் மனைவியின் பதிலாயிருந்தது. ஆதூரமாய் தலைகோதி ஆற்றுப்படுத்த வீட்டிலும்கூட ஒருவருமற்ற தனியனாகிப் போனோமே என்று பிதற்றம் கண்டது அவருக்கு.
நிலைமை இந்தளவுக்கு மோசமாவதற்கு முன்னாள் நிதியமைச்சர் வட்டியப்பன் தான் காரணம் என்று மனதிற்குள்ளேயே குற்றம்சாட்டிக் கொண்டார். அவர் நிதியமைச்சராய் இருந்தபோதுதான் இவரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்தார். நிதியமைச்சர் என்ற கோதாவில் அந்த ஆள் ஆடிய ஆட்டங்கள் ஏதோ விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் என்று உறுத்திக் கொண்டேதான் இருந்தது இவருக்கு. ஆனால் இப்படி என்தலையிலேயே இடிவிழும் என்று தெரியலியே என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டவர், வட்டியப்பனின் இப்போதைய நிலையை எண்ணி குரூரமாக திருப்தியடைந்தார்.
ஒருகாலத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தவர் வட்டியப்பன். பிணவீக்கமென ஊதி உப்பி நாறிக்கொண்டிருந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தாத போதும்கூட அவரைப்போல திறமையான நிதியமைச்சர் ஏழேழு லோகத்திலும் யாருமில்லை என்று ஊடகங்கள் அவரைப் போற்றின. தூந்திரப்பிரதேச பல்கலைக்கழகமொன்று ‘தவிட்டைக்கூட தங்கமாக்கும் ரசவாதி’ என்று பட்டமளித்து அவரை பாராட்டியிருந்தது. (இதுபோன்ற பட்டங்களைப் பெற மற்ற தலைவர்களைப்போலவே அவரும் ரகசியமாக பெருந்தொகையை செலவிட்டதும் கூட காசுநாதனுக்கு தெரிந்த விசயம்தான்).
அப்பேர்ப்பட்ட வட்டியப்பன், தன் பாவத்தில் விளைந்த கொடுங்கனிகளை தானே சுவைக்க நேர்ந்ததுதான் வரலாற்றின் தீர்ப்பாக இருந்தது. சமீபத்திய தேர்தலில் அவர் தோற்றுப்போய்விட்டதாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. கடைசிநேர தில்லுமுல்லுகள் செய்துதான் ஒன்னேகால் ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொள்ள முடிந்தது. ஆனாலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் நிலையில் அவரது கட்சி இல்லை. இவ்வளவு காலமாக அமைச்சராயிருந்தும்கூட கமுக்கமாக திருட்டுத்தனம் செய்ய முடியாத நீயெல்லாம் கட்சியில் இருக்கவே லாயக்கில்லை என்று நினைத்தோ என்னவோ புதிய அமைச்சரவையில் இலாகா இல்லாத மந்திரியாகக் கூட அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. லிபரல்பாளையத்தின் நிரந்தர நிதியமைச்சர் என்று கொண்டாடப்பட்ட தான் இனி வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள முடியாமல் நடுங்கும் மனதோடு ஊர் திரும்பியிருந்தார். வீட்டின் முகப்பில் வெண்கலத்தால் பொறிக்கப்பட்டிருந்த ‘வட்டியப்பன், ஃஎப்.எம்’ என்றிருந்த பெயர்ப்பலகையின் கீழே ஃஎப்.எம்= ஃபிராடு மேன் என்று யாரோ கரிக்கட்டையால் கிறுக்கியிருந்தார்கள். தெருவில் போனால் களவாணிப்பயலே, களவாணிப்பயலே என்று யாரோ விரட்டுவதைப் போன்ற அச்சவுணர்வில் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வேகமாக நடக்கும் ஒருவகை மனநோய்க்கு ஆட்பட்டுவிட்ட வட்டியப்பனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று கவர்னர் காசுநாதன் நினைத்துக்கொண்டார்.
துர்சொப்பனம் எதையும் காண்கிலராயினும் காசுநாதனின் மறுநாள் அஸ்தமனத்தைப்போல விடிந்தது. ஆட்சியாளர்களின் பிள்ளைகளும் பேரன்களும் நடத்துகிற தொலைக்காட்சிகளில் மட்டுமே வெளியாகும் அரசாங்கத்தின் முடிவுகளை அறியும் பதற்றத்தோடு காத்திருந்தார். பட்ட காலிலே படும் என்பது சரிதான் போலும். ரூபாய் நோட்டில் கையெழுத்துப் போடுகிற வேலை இல்லை என்றாலும் அலுவலகத்திற்குப் போய் வருவதில் பிரச்னையேதும் இருக்காது என்ற அவரது நினைப்பில் இந்த அதிகாலையிலேயே அரசாங்கம் வலிமையான ஆப்பை அறைந்திருந்தது. பழைய நாணயம் புழக்கத்தில் இருக்கப்போவதில்லை என்றானதால் ரிசர்வ் வங்கியையும், அதன் கட்டுப்பாட்டில் நோட்டு மற்றும் நாணயங்களை அச்சடிக்கும் ‘மின்ட்’ ஆலைகளையும், நிதிசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வங்கிகளையும் உடனடியாக மூடுவதென்று நள்ளிரவில் கூடிய புதிய அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக தொலைக்காட்சிகள் அறிவித்தன.
அந்த வட்டியப்பன் நிதியமைச்சராயிருந்த காலம்தான் இப்படியான சீரழிவின் தொடக்கம். மில்லியன் பில்லியன் டிரில்லியன் என்று பெருந்தொகையை மட்டுமே பினாத்திக்கொண்டிருந்த அவர், நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த சில்லறைத் தட்டுப்பாட்டை ஒரு பிரச்னையாகவே கருதவில்லை. பிச்சைத்தட்டில் இடுவதற்காக சேகரித்து வைக்கப்படும் தேவைப்படாத ஒருதுண்டு தகடு என்றே சில்லறைக்காசுகளை அவர் கருதிவந்தார். சில்லறைக்காசுகளின் மதிப்பைவிட அவற்றை அச்சடிக்க ஆகும் செலவு கூடுதலாயிருப்பதாகச் சொல்லி முழுசாகவே பைசாக்களை ஒழித்துவிடும் யோசனையும் அவருக்கிருந்தது. எனவே மக்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் சில்லறைக்காசுகளின் தேவை இருக்கிறது என்பதை அவர் உணரவேயில்லை. அந்த ஆள்தான் பொறுப்பில்லாத தறுதலை என்றால் ரிசர்வ் வங்கி கவர்னர் என்ற முறையில் நானாவது சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கியிருக்க வேண்டும் என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொண்டார் காசுநாதன்.
சின்ன விசயத்தை சில்லறை விசயமென உதாசீனம் செய்கிற நாட்டில், சில்லறையை ஒரு விசயமாக முன்னெடுத்துப் பேச ஒருவருமில்லாத நிலை. மக்களோ தினசரி மல்லுக்கட்டி சண்டையிடத் தள்ளப்பட்டனர். பேருந்தில், பில் கட்டும் இடங்களில், பெட்ரோல் பங்க்கில், கட்டணக் கழிப்பிடத்தில் என்று எங்கு போனாலும் அவர்கள் சில்லறையா கொடுங்க என்று கேட்க, இருந்தா தரமாட்டமா என்று மக்கள் எதிர்க்கேள்வி கேட்க, சண்டையும் சச்சரவும் ராவும்பகலும் மூண்டு லிபரல்பாளையத்தை திணறடித்துக் கொண்டிருந்தது. வெளியே போய் வீடு திரும்புவதற்குள் ‘என்னை இளிச்சவாயன்னு நினைச்சு சில்லறை தராம ஏமாத்தப் பாக்கிறயா?’ என்று எங்காவதொரு இடத்தில் வாக்குவாதமாகி ரத்தக்கொதிப்பேறிப் போவது யாவருக்கும் தினப்படி வாழ்வானது. படிப்படியாக 5,10,20,25 பைசா நாணயங்கள் புழக்கத்திலிருந்து ஒழிந்து 50பைசாதான் குறைந்தபட்ச நாணயம் என்றானது. அதாவது 5/10/20/25 பைசா மட்டுமே பெறுமானமுள்ளதை 50 பைசா கொடுத்து வாங்குவதற்கு மக்கள் பழகிக்கொண்டார்கள்.
எல்லாம் கொஞ்சநாள்தான். மீண்டும் பிரச்னை தொடங்கியது. ஆனால் இம்முறை அது வெறும் சில்லறைப் பிரச்னையாக மட்டுமே இல்லாமல் புழக்கத்திலிருந்த நாணயமுறை மீது மக்கள் நம்பிக்கையற்றுப் போகவும் பரிவர்த்தனைக்கான மாற்று நாணயமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கும் இட்டுச்சென்றது. லாபம் தராத எதையும் நடத்த வேண்டியதில்லை என்கிற அமைச்சரின் முடிவை மீறி 50 பைசா நாணயத்தை அச்சடிக்கும் துணிச்சல் காசுநாதனுக்கில்லை. எனவே தட்டுப்பாடாகிவிட்ட 50 பைசாவை ஈடுசெய்ய பல்வேறு மாற்றுவழிகளைத் தேடும் நெருக்கடி உருவானது வியாபாரிகளுக்கு.
சிகரெட் வாங்கியவருக்கு மீதத்தைக் கொடுக்க 50 பைசா சில்லறை இல்லாத நிலையில் ஒரு பாக்குப்பொட்டலத்தைக் கொடுத்து கணக்கை நேர் செய்யத் தொடங்கிய ஊரும்பேருமறியாத யாரோ ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் இந்த மாற்று நாணயமுறையின் தந்தையாக இருக்கக்கூடும் என்கின்றனர் நாணயவியல் வல்லுநர்கள். பாக்கியை நேர்செய்ய கொடுக்கப்பட்ட இந்த பாக்குப்பொட்டலம் திருட்டுத்தனமாய் தம்மடிக்கிறவர்களுக்கும் தேவையாக இருந்ததால் அப்போதைக்கு சிக்கலில்லாத ஒன்றாகத்தான் புழங்கியது. ஆனால் பாக்குப் பொட்டலத்தை எல்லோருமே விரும்புவதாக கொள்ள முடியாதென்பதால் 50 பைசாவுக்கு பதிலாக சளிமிட்டாய் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்ட், ஹால்ஸ், பெப்பர்மின்ட் போன்றவற்றை கொடுக்கத் தொடங்கியதிலிருந்துதான் பிரச்னை வேறு முகம் கொண்டதாக மாறியது.
சில்லறை இல்லை என்று உதட்டைப் பிதுக்காமல் மீதி 50 பைசாவுக்கு ஈடாக மிட்டாய் கொடுக்க ஆரம்பித்த புதிதில் கடைக்காரரின் நேர்மையையும், அல்லது கடைக்காரரிடம் ஏமாறாத தமது சாமர்த்தியத்தையும் மக்கள் மெச்சிக் கொள்ளவே செய்தனர். ஆனால் எப்போதாவது இப்படி கொடுத்தவர்கள், எங்கு போய் எதை வாங்கினாலும் மீதிக்கு ஒரு மிட்டாயை திணித்தபோதும்கூட இதுவும் ஒரு திட்டமிட்ட வியாபாரம்தான் என்று மக்களுக்கு உறைக்கவில்லை. பெரும்பாலான பொருட்களின் விலை முழுரூபாயாக (ரவுண்டாக) இல்லாமல் 50 பைசா சொச்சத்திலேயே முடிவதாக இருப்பதால் காலையிலிருந்து மாலைக்குள் அதையும் இதையும் வாங்குவதில் எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் பத்து சளிமிட்டாய்கள் சேர்ந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒன்றிரண்டு தரப்பட்டபோது சப்பித் தின்றுவிட்டவர்கள், எண்ணிக்கை கூடியபோது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். கொடுத்து விட்டார்களே என்று குதப்பிச் சப்பியவர்களுக்கு நாக்கில் எரிச்சல் கிளம்பியது. வாய்க்குள் மிட்டாய் இல்லாதபோதும் சப்புக்கொட்டும் வினோதப் பழக்கத்திற்கு அவர்கள் ஆட்பட்டிருந்தனர். இவ்வகை மிட்டாய்களின் நீலவண்ணம் அவர்களது நாவிலும் பற்களிலும் படிந்து ‘ப்ளூரைடு’ என்ற புதுவகை கறையை உருவாக்கி விட்டிருந்தது. பற்சிதைவு, ஈறுசுரக்கம் கண்ட நோயாளிகளின் விகிதமும் அதிகரித்து வந்தது.
10 பைசா அடக்கவிலையுள்ள ஒரு மிட்டாயை 50 பைசாவுக்கு விற்பதால் கிடைக்கிற லாபத்தால் குஷியாகிப்போன கடைக்காரர்களுக்கு இப்போது துணிச்சல் கூடிவிட்டிருந்தது. தினசரி 1000 மிட்டாய் விற்று இலக்கை எட்டுகிற வியாபாரியை சிங்கப்பூர் மலேசியாவுக்கு உல்லாசப் பயணம் கூட்டிப்போவதாக மிட்டாய்க் கம்பனி செய்திருந்த அறிவிப்பு வேறு அவர்களை வெறியேற்றியது. எனவே முன்பு 50 பைசா இல்லையெனக் கூறிக்கொண்டு ஒரு மிட்டாய் கொடுத்தவர்கள் இப்போது ஒருரூபாய் சில்லறை இல்லையென்று 2 மிட்டாய்களையும், படிப்படியாக முன்னேறி 10 ரூபாய் இல்லையென்று 20 மிட்டாய்களையும் தள்ளிவிடத் துணிந்தனர். மிட்டாய் கொடுப்பதால் கிடைக்கிற கமிஷன் என்கிற உபரி வருமானத்தையும் உல்லாசப்பயணத்தையும் கணக்கிட்டுப் பார்த்த பிறகு கடைக்காரர்கள் மட்டுமல்லாது பஸ் கண்டக்டர், ரயில்வே புக்கிங் கிளர்க், மின்/தொலைபேசி கட்டண வசூல்மையம், ரேஷன்கடை என எல்லா இடங்களிலும் மிட்டாய் ஆதிக்கம் நீக்கமற பரவிக் கொண்டிருந்தது. கடைசியில் சம்பளப் பட்டுவாடாவிலும் குறிப்பிட்ட தொகைக்கு மிட்டாய் கொடுக்கும் வழக்கம் வந்துவிட்டது.
பரவாயில்லை, 50 பைசாதானே என்று விட்டுத்தள்ளிவிட்டு வரவும் மனசில்லை. அல்லது சில்லறை வரும்வரை காத்திருந்து வாங்கிக்கொண்டு திரும்புவதற்கும் நேரமில்லை. எப்படி தின்று தீர்த்தாலும் பத்து மிட்டாய்களாவது கையில் மிச்சமிருந்தன. வெளியே போய்விட்டு வீடு திரும்புகிற ஒவ்வொருவரிடமும் பத்து மிட்டாய்கள். குறைந்தபட்சம் இரண்டுபேர் வெளியே போய்விட்டு வரும் ஒரு குடும்பத்தில் ஒருநாள் சராசரி 20 என்று வைத்துக்கொண்டாலும் ஒரு மாதத்துக்கு 600 மிட்டாய்கள். வருஷத்துக்கு 7200. யாருக்கும் வேண்டப்படாத சளி மிட்டாய்க்காக ஒரு வருசத்துக்கு 3200 ரூபாய் செலவழிக்கும் குடும்பம் விருத்தியாகுமா என்ற கேள்வி மக்களிடம் மெதுவே கிளம்பியது. 30கோடி குடும்பங்களைக் கொண்ட லிபரல்பாளையம் என்ற மிகப்பெரிய சந்தையை ஒரேயரு கம்பனி ஏகபோகமாக வைத்திருப்பது கண்டு வயிறெரிந்த பல்வேறு மிட்டாய்க் கம்பனிகளும் களமிறங்கி போட்டியாக புதிய சளிமிட்டாய்களை அறிமுகப்படுத்தின.
வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் மிட்டாய்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் அவற்றை வைக்கும் இடத்தின் கொள்ளவும் கூடிக்கொண்டேயிருந்தது. ஆரம்பநாட்களில் பாக்கெட்டிலிருந்து எடுத்து அலமாரியின் ஓரங்களில் சில்லறைக்காசுகளோடு போட்டுவைத்த நிலையிலிருந்து எல்லாவீடுகளிலும் எங்கு பார்த்தாலும் இறைந்தும் நிறைந்தும் கிடக்கிறப் பொருளாயின இந்த மிட்டாய்கள். சின்ன டப்பாவுக்கு மாறி பிறகு டின்னுக்கு ஏறி மூட்டை பிடிக்குமளவுக்கு எண்ணிக்கை பெருகியது. மிட்டாயிலிருந்து பெருகும் வாசனை உறையையும் மீறி நிரம்பியிருந்தது வீட்டுக்குள். யாரோ தலைவலி தைலத்தைப் பூசிக்கொண்டு நடுவீட்டில் நிரந்தரமாய் படுத்துக் கிடப்பது போன்ற நோய்மையுணர்வை ஏற்படுத்தியது அந்த வாசனை.
மிட்டாய் வாசனையிலும் ருசியிலும் கிளர்ச்சியுற்று எறும்புகளும் ஈக்களும் மொய்க்கத் தொடங்கின வீட்டில். அவை எப்படியோ உறைகளை பொத்துக் கொண்டு கொரிக்கத் தொடங்கின. சளி பிடித்திருக்கும் தருணங்களில் தொண்டை கரகரப்பைப் போக்கிட சப்பித் தின்கிற மிட்டாய் வகை என்பதெல்லாம் எறும்புகளுக்கும் ஈக்களுக்கும் தெரியாது போலும். புற்றுகளிலிருந்து சாரிசாரியாக கிளம்பிவந்த எறும்புகள், இரை இருக்கிற இடத்திலேயே இருப்பதுதான் சொகுசு என்று ஒரு கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே புற்றெடுத்து தங்கிவிட்டன. எங்கு பார்த்தாலும் மிட்டாய்களும் அவற்றைத் தின்ன மிலுமிலுவென்று எறும்புகளும் ஈக்களுமாகிப் போக வீட்டுக்குள் புழங்குவதே சாத்தியமற்றதாகிவிட்டது. எறும்புகளும் ஈக்களும் யானைகளைப் போல உருவெடுத்து தங்கள் வீடுகளை ஆக்கிரமித்துக் கொண்டதாக கருதிய மக்கள் அகதிகளைப்போல தெருவிலே அடுப்புமூட்டி ஆக்கியவித்து தின்றுவிட்டு திண்ணைகளில் படுத்து உறங்க வேண்டியிருந்தது.
சில்லறைப் பிரச்னையால் வருமானத்தின் பெரும்பகுதியையும், வீட்டையும் ஒருசேர இழந்து தவித்தனர் மக்கள். எறும்புகளிடமிருந்தும் ஈக்களிடமிருந்தும் தமது வீடுகளை மீட்க வேண்டுமானால் முதலில் மிட்டாயை வெளியேற்ற வேண்டுமென மிட்டாய் மறுப்பு இயக்கம் என்ற அமைப்பு பிரச்சாரம் செய்தது. 1000ரூபாய் பெறுமான பொருட்களை ஒருவர் வாங்குகிறார் என்றால் அவர் பணத்துக்கு பதிலாக 2000 மிட்டாய்களை கொடுக்குமாறு அது மக்களைத் தூண்டியது. மக்கள் பணத்துக்கு பதிலாக மிட்டாய்களை அள்ளிக்கொண்டு வந்து கடைகளில் கொட்டத் துணிந்துவிட்ட கெடுஞ்செய்தியால் வியாபாரிகள் நிம்மதியிழந்தனர். விற்றுத் தீர்த்த அவ்வளவு மிட்டாய்களையும் வாங்கி திரும்பவும் விற்க முடியாதென்பது ஒருபுறமிருக்க, 10 பைசாவுக்கு வாங்கி 50 பைசாவுக்கு விற்ற மிட்டாயை, அதே 50 பைசாவுக்கு ஈடாக திரும்ப வாங்கி தனக்குத்தானே 40 பைசா நஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள எந்த வியாபாரிதான் துணிவான்? எனவே விற்றது விற்றதுதான், திரும்ப வாங்கிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று கடைக்காரர்கள் மறுத்தனர். நீங்க கொடுத்தப்ப நாங்க வாங்கிக்கிட்டதுபோல நாங்க கொடுக்கிறப்ப நீங்க ஏன் வாங்கிக்கக்கூடாது என்று கேட்டு தகராறும் கைகலப்பும் நடக்காத இடமே இல்லையென்றானது. கடைகளில் மட்டுமல்லாது இதுவரை யாரெல்லாம் எங்கெங்கு மிட்டாய் கொடுத்து தங்களை ஏமாற்றி இந்த நிலைக்கு ஆளாக்கினார்களோ அங்கெல்லாம் அள்ளிக்கொண்டுபோய் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு தகராறு செய்தனர்.
தங்களது சேமிப்பிலிருக்கும் மிட்டாய்கள் அனைத்தையும் பண்டமாற்று முறையில் வாங்கிக் கொள்ளுமாறும், ஏற்பட்டிருக்கும் சில்லறைத் தட்டுப்பாட்டை உடனே போக்கவேண்டுமென்றும், சில்லறைக்கு பதிலாக மிட்டாய் விற்கிற மோசடியை உடனே கைவிடக் கோரியும் நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்தன. வெனிசூலாவில் சாவேஸ் அன்னிய எண்ணெய்க் கிணறுகளை தேசிமயமாக்கியது போல இங்கு மிட்டாய்க்கம்பனிகளை அரசாங்கம் தன்பொறுப்பில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. மிட்டாய்க் கம்பனிகளின் உள்ளூர் பங்குதாரர்களாக ஆளுங்கட்சியினரே இருந்த நிலையில் அவர்கள் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொள்ள தயாராயில்லை. தவிரவும் சமீபத்திய தேர்தலில் மிருகபலத்தோடு வெற்றிபெற்றிருந்ததால் மக்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்க வேண்டியதில்லை என்ற மமதையோடு இருந்தது ஆளுங்கட்சி. ஆட்சியாளர் எவ்வழியோ அவ்வழியே அதிகாரியும் என காசுநாதனும் சும்மாயிருந்தார்.
லிபரல்பாளையம் மக்கள் கைவசமிருந்த மிட்டாய்களில் சிறுபகுதியை அமைச்சர்களுக்கு பார்சல் அனுப்பும் அறவழிப் போராட்டத்தை அடுத்ததாக தொடங்கினர். மரியாதை நிமித்தமாக தொண்டர்களால் தங்களுக்குப் போர்த்தப்படுகிற சால்வைகளையே புழக்கடை வழியாக ஹோல்சேல் கடைகளில் விற்று காசாக்கிவிடுகிற அமைச்சர்கள், தினமும் தபாலில் வண்டிவண்டியாய் வந்து குமிகிற இந்த மிட்டாய்களை விற்கவும் முடியாதே என்ற அங்கலாய்ப்புடன் பிரதமரை சந்தித்து ஏதாவது செய்ய வேண்டுமெனக் கோரினர்.
இதனிடையே மக்கள் மிட்டாய் வாங்க மறுப்பதால் கோடிக்கணக்கான டன் மிட்டாய்கள் குடோன்களில் தேங்கிக் கிடப்பதாகவும், இதேநிலை நீடித்தால் ஆலைகளை இழுத்து மூடவேண்டிவரும் என்றும் மிட்டாய்க் கம்பனிகள் பிரதமரிடம் முறையிட்டன. வெளிநாட்டு முதலாளிகளின் கண்ணில் நீர் வழிந்தால் தன் நெஞ்சில் உதிரம் வழிவதாய் துயரப்படுமளவுக்கு இளகிய மனம் படைத்த பிரதமர் அன்றிரவே கேபினெட் கூட்டத்தைக் கூட்டினார். மிட்டாய்க் கம்பனிகளை மூடிவிட்டு அந்த முதலாளிகள் வெளியேறும் பட்சத்தில் அது நேரடி அன்னிய முதலீட்டாளர்களுக்கு (ஃஎப்டிஐ) விடுக்கப்படும் கெட்ட சமிக்ஞையாக இருக்கும் என்று கவலைகொண்டது அமைச்சரவை. போதாக்குறைக்கு, எங்களது உறுப்புநாட்டு கம்பனிகள் உங்கள் நாட்டில் நஷ்டப்பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்... அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜி20 அமைப்பு வேறு மிரட்டியதில் பிரதமர் காலோடு மூச்சா போகுமளவுக்கு பயந்திருந்தார்.
இந்தப் பின்னணியில்தான், ரூபாயைவிட சளிமிட்டாயும் அதன் துணை வகைகளுமே பெரும்பாலான மக்களிடம் கைவசமிருப்பதால் இனி அந்த சளிமிட்டாயே நாட்டின் நாணயமாக இருக்குமென்றும் புழக்கத்திலிருக்கும் ரூபாய் இந்த நள்ளிரவு முதல் செல்லாது என்றும் அரசாங்கம் அதிரடியாய் அறிவிக்க நேர்ந்தது. இந்த அதிமுக்கிய முடிவை எடுப்பதற்கு முன் சம்பிரதாயத்திற்குக்கூட ரிசர்வ் வங்கியின் கவர்னரான தன்னை அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லையே என்று வருத்தம் கொண்டார் காசுநாதன்.
பூச்சியரித்து விடாதிருக்க திரூநீறு தெளித்து ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் தொடங்கி உண்டியலில் சிறுவாடு சேர்த்தவர்கள் வரை எல்லோருமே அரசின் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளாகினர். இப்படியும் ஒரு அரசாங்கம் இருக்குமா இந்த உலகத்தில் என்று சபித்தபடியே தங்களிடமிருந்த ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து மாநகராட்சியின் குப்பைமண்டியில் வீசியடித்துவிட்டுப் போயினர். பதுக்கி வைத்திருந்த கறுப்புப்பணம் முழுவதையும் 24 மணிநேரத்தில் ஒழித்துக் கட்டிவிட்டதாக பொருளாதாரப் புலிகளும் பூனைகளும் அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆனால் மிட்டாய் விற்று பில்லியன் கணக்கில் வைத்திருந்த பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த கம்பனிகள், அதற்கு ஈடாக தங்கப்பாளங்களைப் பெற்று கப்பலில் ஏற்றி தமது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றது பற்றி அவர்களில் ஒருவரும் வாய்திறக்கவில்லை.
ரூபாய் ஒழிக்கப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் காசுநாதன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மிட்டாய் உறைமீது கையெழுத்திடும் அதிகாரம் அந்தந்த மிட்டாய்க் கம்பனிகளின் தலைமை நிர்வாகிக்கு தரப்பட்டது. நோட்டடித்த மின்ட் ஆலை, மின்ட் மிட்டாய் உற்பத்திக்கூடமாக மாற்றப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களை கருணையடிப்படையில் புதியவேலைக்கான அத்துக்கூலிகளாக சேர்த்துக்கொள்ள தயார் என்று அறிவிக்கை வெளியானது. நாடு முமுவதுமிருந்த வங்கிக் கிளைகள் அனைத்தும் மிட்டாய் குடோன்களாக மாற்றப்பட்டு ஹோல்சேல் டீலர்கள், உள்ளூர் ஏஜெண்ட்டுகள் பொறுப்பில் விடப்பட்டதால் வேலையிழந்த வங்கி ஊழியர்கள் மிட்டாய்களை எண்ணி டப்பாக்களில் அடைக்கும் வேலைக்கு பீஸ்ரேட் அடிப்படையில் சேர்ந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
புதிய நாணயத்தின்படி அமைச்சரின் அடிப்படைச் சம்பளம் 50000 சளிமிட்டாயும் 600 மீட்டர் ஜவ்வு மிட்டாயும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதேரீதியில் கலெக்டருக்கு 30000 சளிமிட்டாய்+ முன்னூறு கம்மர்கட் என்றும் நாட்டின் அதிகபட்ச ஊதியக்காரர்களான கம்ப்யூட்டர் என்ஜினியர்களுக்கு ஒரு டன் சளிமிட்டாயும் ஒன்பது கிலோமீட்டர் ஜவ்வு மிட்டாயும் நிர்ணயமானது. இதேபோல அரிசி பருப்பு உப்பு புளி மிளகாய் எல்லாமே மிட்டாய் கணக்குக்கு மாற்றி விலை நிர்ணயிக்கப்பட்டது. மிட்டாய்க்கு இணையான டாலரின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது ஒரேநாளில். புதிய நாணயத்தால் பங்குச்சந்தை தாறுமாறாக திமிறிக்கொண்டு எகிறியது. பங்குச்சந்தை வரலாற்றிலேயே என்றுமில்லாத அளவுக்கு பரிவர்த்தனையை சிலமணிநேரங்கள் நிறுத்தி வைக்குமளவுக்கு ஏற்றம் காணப்பட்டது.
நாட்டின் புதிய நாணயமாக மிட்டாய் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு கம்பனிகள் வெவ்வேறு அளவுகளில் மிட்டாய்களை அறிமுகப்படுத்தின. உதாரணத்துக்கு, பழைய 500 சில்லறை மிட்டாயை உருக்கி செய்கூலி சேதாரம் போக செங்கல் சைஸில் ஒரே மிட்டாயாக வார்க்கப்பட்டது. அதுவே 5000 என்றால் ஹாலோ பிரிக் சைஸ். 50 ஆயிரத்துக்கு 10 அடி நீளம் 15 அடி அகலமும் ஆறடி தடிமனும் கொண்ட மெகாசைஸ். சம்பளத்தேதிகளில் கிரேன் வைத்துத் தூக்கி கண்டெய்னரில் வைத்துதான் மிட்டாய்களை வீட்டுக்கு கொண்டுவர முடியும். மக்கள் கடைகண்ணிக்குப் போய்வருவதென்றால் இந்த பெரிய மிட்டாய்களை உளிவைத்து உடைத்து சிறுதுண்டை எடுத்துப்போய்தான் செலவழிக்க முடியும்.
மிட்டாய்களை ஏற்றிப்போவதற்கான வாகனங்களின் எண்ணிக்கை பெருகி ஆட்டோமொபைல் தொழில் வளர்ச்சியடையுமென்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒருகோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் எல்ஐஐ என்ற முதலாளிகள் சங்கம் வரவேற்றிருந்தது. மிட்டாய்களை சேமித்துவைக்க புதிய கிடங்குகளைக் கட்ட வேண்டியிருந்ததால் ரியல் எஸ்டேட் வியாபாரமும் கட்டுமானத் தொழிலும் சூடுபிடித்தன. எறும்பு, ஈ மற்றும் இன்னபிற பூச்சிகளால் சேதாரம் ஏற்படாமல் தடுப்பதற்காக விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் சந்தைக்கு வந்தன. துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் நிறுவனங்கள் மிட்டாய் களவு போவதைத் தடுக்க வீட்டுவாசலில் காவலெடுத்தன. கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுக் கொண்டிருந்த கும்பல் ஒன்று போலியாக கள்ளமிட்டாய் தயாரிக்கும் ஆலையன்றை அவசரடியாக தொடங்கியிருந்தது. நல்லமிட்டாய் எது கள்ளமிட்டாய் எது என்று சப்பியறிந்து சொல்வதற்காக ‘டேஸ்டர்’ என்ற புதுவகை நிபுணர்கள் உருவாகினர். நிதித்துறை மந்திரி மிட்டாய்த்துறை மந்திரியாகி வரும் மிட்டாய் ஆண்டில் இத்தனை கோடி மிட்டாய் பற்றாக்குறை என்று பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகிக் கொண்டிருந்தார்.
சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கி இந்த மிட்டாய்த் தொல்லையிலிருந்து விடுவிக்கச் சொல்லி போராடிய தங்களை அந்த மிட்டாய்க்குள்ளேயே மூழ்கடித்துக் கொல்வதற்கு துணிந்துவிட்ட அரசை எதிர்த்து போராடுவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. வெயிலுக்கு பயந்தவர்களைத் தூக்கி வெள்ளாவிப்பானையில் அடைக்கிற கொடுமைக்காரர்களாகிவிட்ட அமைச்சர்களின் வீடுகளுக்கும் பா£ராளுமன்றத்துக்கும் குடிநீர், மின்சாரம், பால் போக்குவரத்து, தகவல் தொடர்பு அனைத்தும் நிறுத்தப்பட்டன. மிட்டாய்க் கம்பனிகளும் அவற்றின் குடோன்களும் தீக்கிரையாக்கப்பட்டன. கட்டுக்கடங்காத கலவரத்தை தடுப்பதற்காக அனுப்பப்பட்ட காவல்துறையினரும் ராணுவத்தினரும் அரசின் ஆணைக்கு கீழ்படிய மறுத்தனர். எங்கிருந்தோ வந்த மிட்டாய்க் கம்பனியினருக்காக சொந்த மக்களை வதைக்கும் அரசு வீழ்ந்துபோம் என அறம்பாடி நின்றனர் கவிஞர்கள். இதுவரை ஆட்சியாளர்களின் ஊதுகுழலாய் இருந்த ஊடகங்கள்கூட வேறுவழியின்றி மக்களின் பக்கம் நின்று அதிர்ச்சியூட்டின.
சப்பித் திங்கிற மிட்டாயை ருப்பியாக மாற்றாதே
மின்ட் மிட்டாய் போதுமென்று மின்ட் ஆலையை மூடாதே
மிட்டாய்களை அள்ளிக்கிட்டு வீடுகளை திருப்பித்தா
கொள்ளையடித்த கம்பனியே உடனடியா திரும்பிப்போ
-என்று எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் கண்டன முழக்கங்களை ஒருமுறை தனக்குத்தானே ரகசியமாக சொல்லிப் பார்த்தார் காசுநாதன். நாக்கு தீய்ந்துவிடவில்லை என்பது உறுதியானதும் இன்னும் கொஞ்சம் உரக்க சொல்லிப்பார்த்தார். பார்முலா கதைகளின் கடைசிவரிகளில் முஷ்டியை உயர்த்திக்கொண்டு போராட்டத்தில் கலந்துகொள்ள ஆவேசமாக விரையும் கதாநாயகனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும் தைரியம் அவருக்கில்லை. நாளையே இந்த போராட்டம் வெற்றி பெறுமானால் மீண்டும் ரிசர்வ் வங்கியின் கவர்னராகிவிடக்கூடிய அவர் சாமானியர்களுடன் ஒருபோதும் தெருவிலிறங்கிவிடக்கூடாது என்று அவரது அதிகாரமூளை எச்சரித்தது. காதுகளை இறுக அடைத்து கண்களையும் மூடிக்கொண்டு நல்லசேதி வருமென்று அவர் காத்திருக்கத் தொடங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக