26/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 24

ஆங்கில-தமிழ் அகரமுதலிகள் பலவற்றில் "என்லைட்டென்' என்ற சொல்லுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. ஆனால், "என்லைட்டென்மென்ட்' என்ற சொல்லுக்கு, அகரமுதலிகள் எதிலும் பொருள் தரப்படவில்லை. முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்திலும் "என்லைட்டென்' என்ற சொல்லுக்கு "ஒளியூட்டு, அறிவுறுத்து, அறிவுகொளுத்து, கற்பி, தெரிவி, ஐயந்தெளிவி, தப்பெண்ணம் அகற்று, மூடநம்பிக்கையிலிருந்து விடுவி' ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளனவே தவிர, என்லைட்டென்மென்ட் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இச்சொல்லுக்கு மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. முதல் பொருள், ஞானம் பெறும் நிகழ்வு அல்லது வழி; இரண்டாவது, 18-ஆம் நூற்றாண்டில் பழமை சார்ந்த, சமூக, சமுதாய, அரசியல் கருத்துகளைப் புறந்தள்ளி, பகுத்தறிவின்பாற்பட்டு எழுந்த ஒரு மெய்யியல் இயக்கம்; மூன்றாவது, ஆசையும், துன்பமும் அற்ற, ஓர் அருள் கைவரப்பட்ட நிலை என்று புத்தமதம் கூறும் கோட்பாடு.

இதே போல், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு,   ஞானம் பெறும் நிலை அல்லது ஞானம் தரும் செய்கை; 17-ஆம் நூற்றாண்டில் மெய்யியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட, பழமை வாதத்தை எதிர்த்து நின்ற, சுய சிந்தனை மற்றும் பகுத்தறிவு சார்ந்த இயக்கம் என இருவகையான பொருள்களைத் தருகிறது.

ஐரோப்பிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், மூட நம்பிக்கை, கண்மூடிப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எதிர்த்து நின்று, காரணம், தர்க்கம், விமர்சனம், கருத்தியல் சுதந்திரம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் உருவான அறிவும், கலாசாரமும் சார்ந்த இயக்கத்தை குறிப்பதற்காகவே இச்சொல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பகுத்தறிவு காலம் அல்லது அறிவு மலர்ச்சிக் காலம் (age of reason, age of rationalism)என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு காலம் 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், கலிலியோ, நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளாலும், கணிதத்தின் வளர்ச்சியாலும், மனிதனுடைய சிந்தனை வளம் பெறத் தொடங்கிய காலம், "என்லைட்டென்மென்ட்' என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் உருவான அறிவு மலர்ச்சியே அமெரிக்க விடுதலை மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது என்றும் கூறப்படுகிறது.

ஜெர்மானிய மெய்யியல் அறிஞர் இம்மானுவேல் கான்ட் 1784-ஆம் ஆண்டில் ""என்லைட்டென்மென்ட் என்றால் என்ன?-இக்கேள்விக்கான பதில்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை மிகப் பிரபலமானது. அக்கட்டுரையில் அவர், இச்சொல்லைப் பின்வருமாறு விவரிக்கிறார்:-

""தனக்குத்தானே மனிதகுலம் தருவித்துக்கொண்ட முதிர்ச்சியின்மையில் இருந்து பெறும் விடுதலையே என்லைட்டென்மென்ட்''. அலெக்சாண்டர் போப் 1733-இல் எழுதிய மனிதனைப் பற்றிய ஒரு கட்டுரையில் ""உன்னை அறிந்துகொள்; மனிதகுலத்தைப் பற்றிய முறையான படிப்பு மனிதனே ஆகும்'' என்றார்.

என்லைட்டென்மென்ட் காலத்தின் காரணமாக மிகப்பெரிய பயனொன்று மனித குலத்திற்கு விளைந்தது. அதுதான், மனித குலம் பெற்ற அறிவுத் திறன் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து, 1751 முதல் 1772-ஆம் ஆண்டுக்குள் 28 தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதைத் தொகுத்தவர்கள் டெனிஸ் டிடேராட் மற்றும் ழான்லா ரோண்டு அலம்பர்ட். இந்தத் தகவல்களோடு, இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, "ஞானோதயம்' என்ற சொல்லையும், முனைவர் வே.குழந்தைசாமி "அறிவார்ந்தநிலை அல்லது அறிவுசால்நிலை' என்னும் சொற்களையும், வெ.ஆனந்தகிருஷ்ணன், "அறிவு மற்றும் அறிவுசார்ந்த அறிதல், சார்புநீங்கிய, ஐயம் தெளிதல், கல்வி, உணர்வு, ஞானம், போதனை, ஆன்மா ஆகியவைகளைத் தொடர்புபடுத்திப் புத்திபுகட்டுதல், கற்றுக்கொடுத்தல், தெளிவித்தல், ஞானம் பிறக்கச்செய்தல் அதன் மூலம் அறிவொளி அல்லது மெய்யறிவு தோன்றல் இவைகளில் ஏதேனும் ஒரு சொல்லைக் கையாளலாம்' என்றும், புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "ஞானம், மெய்ஞானம், மெய்ஞான விளக்கம், மெய்ஞானத்தெளிவு, மெய்மைத் தெளிவு, மெய்மை விளக்கம் என்னும் சொற்களையும், முனைவர் ஜி.ரமேஷ், "தெளிவாக்குதல், விளக்குதல், போதித்தல், அறிவூட்டுதல், புலமை' என்னும் சொற்களையும், தி.அன்பழகன் "ஒளிரறிவு' என்ற சொல்லையும், புலவர் உ.தேவதாசு, "மெய்யுணர்தல்' என்ற சொல்லையும், முனைவர் பா.ஜம்புலிங்கம், "பயில்வித்து உணரவைத்தல், தெளிவுபடுத்துதல், தெளிவித்தல், ஐயம் அகற்றல்' ஆகிய சொற்களையும்-  இவ்வாறு பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

ஆங்கில அகரமுதலிகள் அளித்திருக்கும் பொருள்களை வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் ஆங்கிலத்தில் அறிவுசார்புடைய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், பெரும்பாலும் நடைமுறையில், அதிலும் நமது கலாசாரப் பின்னணியில் இச்சொல் "ஞானம்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே, இச்சொல்லுக்கு "ஞானோதயம்' என்ற சொல்லே பொருத்தமாகத் தெரிகிறது.

என்லைட்டென்மென்ட் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுத்த இணையான தமிழ்ச் சொல் ஞானோதயம்.

நன்றி - தமிழ்மணி 21 04 2013

கருத்துகள் இல்லை: