23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 14

தொன்மையான லத்தீன் மொழியில் "விளைவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "கொரோலேரியம்' என்ற சொல் பிற்கால லத்தீன் மொழியில் "மாலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்' அல்லது "அன்பளிப்பு' போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல்லாக மாறி, 14-ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிக்கு இறக்குமதி செய்யப்பட்டு, "கொரோலரி' (இர்ழ்ர்ப்ப்ஹழ்ஹ்) என்ற சொல்லானது.

ஆங்கிலத்தில் "கொரோலரி' என்ற சொல் கணிதம் அல்லது தர்க்கவியல் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் போது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக, அதை அடியொற்றி தாமாகவே நிரூபிக்கப்பட்டுவிடும் இன்னொரு கோட்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் "விளைவு' அல்லது "எளிதாக' அல்லது "இயல்பாகத் தீர்மானிக்கப்படும் முடிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு, இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.

ஷா.கமால் அப்துல் நாசர், "பொதுவாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை ஒட்டிவரும் அனுமானத்தை அல்லது விளைவை "கொரோலரி' என்று குறிப்பதாலும், சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்படுவதாலும், "உருத்துவிளைவு' அல்லது "தொடர் விளைவு' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம்' என்கிறார்.

ஆனந்தக்கிருஷ்ணன், "கொரோலரி என்ற சொல்லுக்கு தொடர் முடிவு, பின் தொடர்பு, துணை முடிவு, கிளைத்தேற்றம், பின் நிகழ்ச்சி, தொடர்ந்தேற்றி ஆகிய சொற்களையும், பழைய லத்தீன் மொழி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு முடிவு, முடிபு, இறுதி, வரிசை, செறிவு, பூங்கொத்து' ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "கண்ணாடியில் காணப்படும் பிரதிபிம்பத்தைப் போன்றது கொரோலரி என்பதால், "நிஜப்பிரதி' அல்லது "இணைப்போலி' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்' என்கிறார்.

டி.சிவா, "ஒரு செயலையோ, சொல்லையோ, நடைமுறையையோ, நிகழ்வையோ அடியொற்றி அதேபோல இருப்பதுதான் "கொரோலரி' என்றழைக்கப்படுகிறது' என்றும், இதை "ஒத்திசைவுச் செயல்', சொல், நடைமுறை, நிகழ்வு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதனால் "ஒத்திசைவு' எனக் கூறலாம்' என்கிறார்.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல், "கொரோலரி' என்ற சொல் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக அல்லது அதன் பிரதிபிம்பமாக நிரூபணம் தேவையற்றதாகப் போய்விடும் இன்னொரு கோட்பாட்டை குறிப்பதால், நாம் உருவாக்கும் சொல் நிரூபணம், கோட்பாடு என்ற இவ்விரு பொருளையும் உள்ளடக்கியதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். எனவே, "கொரோலரி' என்ற சொல்லுக்கு "வினைவிளைக் கோட்பாடு' என்பது பொருத்தமாக இருக்கும்.

நன்றி - தமிழ்மணி 10 02 2013


கருத்துகள் இல்லை: