சொல்வேட்டை, பழைய மற்றும் புதிய சொற்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்தவில்லை. அதையும் தாண்டி, எங்கெங்கோ இருக்கும் மொழிப் பற்றாளர்களையும், அவர்கள் தங்களுக்கே உரிய ஆய்வுப் பார்வையோடு கொண்டிருக்கும் பல்வேறுபட்ட கருத்துகளையும் நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. ஒரு சிலர், கம்பனது காப்பியத்தில் பொன்மானைப் பற்றிய ஐயத்தைக் கிளப்பிய இலக்குவனிடம், ""இராமன் இல்லாதன இல்லை இளங்குமர'' என்று கூறியதைப் போல், தமிழ் மொழியில் இல்லாத சொற்களே இல்லை என்னும் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், புதிய பொருள்களையும், புதிய சூழ்நிலைகளையும், புதிய செய்திகளையும் குறிக்கும் சொற்கள் நமக்குத் தேவைதானா என்ற ஐயத்தையும், ஏற்கனவே முழுமையாக வளர்ச்சியடைந்து, செம்மொழியாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நம் மொழிக்கு இவை அவசியமில்லை என்றும் எண்ணுகிறார்கள். அவர்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.
அதே நேரத்தில், ஒரு கருத்தை அறிஞர்கள் முன் பதிவு செய்ய நான் விழைகிறேன். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு நாளேடும், காலத்தின் கட்டாயத்தினால், நமக்குத் தேவையான, தேவையற்ற, விரும்புகிற, விரும்பாத, மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத் தரும் பல செய்திக் குப்பைகளை நம் சிறு மூளைக்குள் கொண்டு வந்து கொட்டுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறிந்தோ, அறியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ, குப்பைத் தொட்டியாகிப் போய்க்கொண்டிருக்கும் நம் மூளைக்கும், மனதிற்கும் ஒரு மாற்றுப் பயிற்சியே இச்சொல் வேட்டை. இனி இந்த வார வேட்டைக்கு வருவோம்.
விழுப்புரத்திலிருந்து முதல்நிலை விரிவுரையாளர் வேல்.சிவ.கேதாரி சிவசங்கர், "ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பதும் இயலாது, அது தேவையும் அற்றது என்றும், ஆங்கிலத்தில் வரிவடிவமும், ஒலிவடிவமும் மாறுபடுவதனால் அக்ரோனிம் கிடைப்பதாகவும், தமிழ் மொழியின் இயல்பின்படி அக்ரோனிம் கிடையாது என்றும், அப்படியே செயற்கையாக உருவாக்க வேண்டுமானால், அதன் பயன்பாட்டைக் குறித்து அக்ரோனிம் என்பதை "விரிபதம்' என்று குறிப்பிடலாம்' என்கிறார். ஆனால், அவரது கருத்தில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது. தமிழிலும் சில நேரங்களில் சில எழுத்துகள் அவை பயன்படுத்தப்படும் இடங்களைப் பொறுத்து மாறுபட்ட ஒலிகளைக் கொடுக்கின்றன.
எடுத்துக்காட்டாக "அச்சு' என்ற சொல்லில் உள்ள "சு' என்ற எழுத்து உருவாக்கும் ஒலியும், அஞ்சு, நெஞ்சு, பஞ்சு போன்ற சொற்களில் உள்ள "சு' என்ற எழுத்து உருவாக்கும் ஒலியும் மாறுபடுகின்றன. அதைப்போல் "விரிபதம்' என்பது அப்ரிவியேஷன் என்ற சொல்லுக்கு எதிர்மறையான "எக்ஸ்பான்ஷன்' என்பதைக் குறிக்கலாமே தவிர, அக்ரோனிம் என்பதைக் குறிக்க முடியாது. அவ்வாசகரே எடுத்துக்காட்டாக சுரதா, கல்கி போன்ற சொற்களைக் காட்டியிருக்கிறார். சுரதா என்பதன் விரிபதம் "சுப்பு ரத்தின தாசன்' ஆக இருக்க முடியுமே தவிர, சுப்பு ரத்தின தாசன் என்ற பெயரின் விரிபதமாக சுரதா இருக்க முடியாது.
நெல்லையிலிருந்து பெருமணல் ராயர் என்னும் அன்பர், "சிநோனிம்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருஞ்சொல் என்ற சொல்லும், "ஆண்டனிம்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு எதிர்ச்சொல் என்ற சொல்லும் வழங்கப்படுவதால், அக்ரோனிம் என்ற சொல்லுக்கு "குறுஞ்சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
இலந்தை சு.இராமசாமி, "முதல் எழுத்து வருக்கம்' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார். பாடியிலிருந்து முனைவர் மு.அரங்கசுவாமி, சொல்சுருக்கம், சொல்ஒடுக்கம் போன்ற சொற்கள் பொருந்துவது போல் தோன்றினாலும், தமிழ் இலக்கணத்தில் இரண்டு சொற்களுக்கு இடையே சில உருபுகள் மறைந்து வந்து பொருளைத் தருவது "தொகை' என்று அழைக்கப்படுவதால், அக்ரோனிம் என்ற சொல்லுக்கு, சொல் இலக்கணத்தை அடியொற்றி "சொற்தொகை' என்ற சொல்லை உருவாக்கலாம் என்கிறார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து மாதா சம்பத், மகாபாரதப் போரில் ஈடுபட்ட படைவீரர்கள் அக்ரோனிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காரணத்தால், "அக்ரோனி என்ற சொல்லுக்குப் "படைவீரர்களின் கூட்டம்' என்பது பொருளாகும் என்றும், அதை அடியொற்றி அக்ரோனிம் என்ற சொல்லுக்கு "சேர்க்கை' என்று பொருள் கொள்வது பொருத்தமானதாகும் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் இக்கருத்து சரியானதாகத் தோன்றவில்லை. மகாபாரதப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் கூட்டம் வட மொழியில் அஷெளஹிணி சேனை என்றழைக்கப்பட்டதே தவிர, அக்ரோனி என்றழைக்கப்படவில்லை. ஓர் அஷெளஹிணி என்பது வடமொழியில், குறிப்பாக மகாபாரதத்தில், சுமார் 20,000 தேர்கள், 20,000 யானைகள், 65,000 குதிரைகள் மற்றும் 1,00,000 காற்படை வீரர்கள் அமைந்த ஒரு சேனைக்கு அளிக்கப்பட்ட பெயராகும். இதற்கும் அக்ரோனி அல்லது அக்ரோனிம் என்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ராசப்பாளையம் சத்திரப்பட்டியிலிருந்து தமிழ் பேராசிரியர் க.பாண்டித்துரை, வேலை ஆயுதமாக உடைய முருகனை வேல்முருகன் என்றழைப்பதும், பாலை உடைய குடத்தை பாற்குடம் என்றழைப்பதும் தமிழில் தொகை எனப்படும் என்றும், தொக்கி (மறைந்து) நிற்கும் சொல் தொகுசொல் ஆகுமென்றும், தொடராக விரியும் சொல் விரிசொல் ஆகுமென்றும் கூறுகிறார். எனவே, அக்ரோனிம் என்பதை "தொகுசொல்' என்றழைக்கலாம் என்கிறார்.
கல்லிடைக் குறிச்சியிலிருந்து இந்திய வருவாய்ப் பணியைச் சேர்ந்த (இ.வ.ப.) கமால் அப்துல் நாசர் அக்ரோனிம் என்ற சொல்லுக்கு "குறுஞ்சொற்றொடர்' என்ற சொல்லைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.
ஆலந்தூர் புலவர் இரா.இராமமூர்த்தி யாப்பருங் கலக்காரிகை என்னும் செய்யுள் இலக்கண நூலில், சீர், தளை, மா, இனம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டுப் பாடல்களை அவற்றின் முதல் அசைகளைத் தொகுத்து, "முதல் நினைப்புக் காரிகை' என்ற பாடலில் குறிப்பிடுவதாலும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பத்துப்பத்து பாடல்களின் முதல் அசைகளை இறுதியில் "அடிவரவு' என்ற தலைப்பில் தொகுத்தளிக்கும் காரணத்தினாலும் அக்ரோனிம் என்ற சொல்லுக்கு முதல் நினைப்பு, அடிவரவு, முதல் தொகுப்பு, முதல் எழுத்துச் சுருக்கம், சொற்சுருக்கம் ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார்.
சென்னை வழக்குரைஞர் இ.தி.நந்தகுமாரன், முருகா என்னும் பெயரே முகுந்தன் (திருமால்), ருத்ரன் (சிவன்) மற்றும் கமலன் (பிரம்மன்) ஆகிய மூவரின் பெயர்களின் முதல் எழுத்துச் சேர்க்கையே (மு, ரு, க) என்றும், சுப்பு ரத்தின தாசன், சுரதா ஆனது இவ்வழியே என்றும், இப்படிச் சுருங்கக் கூறுவது தமிழில் சுருங்கச்சொல் அணி அல்லது ஓர் அலங்காரம் என்றழைக்கப்படுவதாகவும் எழுதியுள்ளார். சுட்டி என்ற சொல் சுருங்குவதையும், சுட்டிக்காட்டுவதையும் குறிப்பதால், ஒரு சொல்லின் முதல் எழுத்துகளை மட்டும் எடுத்து உருவாக்கப்படும் இன்னொரு சொல்லை "சுட்டியம்' என்றழைக்கலாம் என்றும் கூறுகிறார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பா.ஜம்புலிங்கம், தமிழில் அக்ரோனிம் பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை என்றும், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., எம்.எஸ்., உ.வே.சா., மு.வ. போன்றவர்களின் பெயர்கள் மட்டும், மரியாதை நிமித்தமாகச் சுருக்கித் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு, அக்ரோனிம் என்பது சுருக்கமாகக் குறியீட்டு நிலையில் அமைவதால் "சுருக்கக் குறியீடு' என்பது பொருத்தமாக இருக்கலாம் என்கிறார்.
புலவர் அடியன் மணிவாசகன், படைப்பியற்கையின் உண்மையியல் நாதமான ஓம் என்பதே மூன்று சொற்களின் முதல் எழுத்துகளின் சேர்க்கையாக அமைவதாலும், திவ்யப் பிரபந்தத்தில் ஒரு பதிகத்தை நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு பாட்டின் முதல் சொல்லையும் எடுத்துத் தொகுத்து, அதை ஈரடிப்பாட்டுப் போல அமைத்து, அதற்கு "அடிவரவு' என்று பெயர் சூட்டியுள்ள காரணத்தாலும், அக்ரோனிம் என்ற சொல்லுக்கு "முதல் எழுத்து ஆக்கச்சொல்' அல்லது "முதல் எழுத்து வரவு' என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
இவை அனைத்தையும் அலசிப்பார்த்து ஒரு முடிவுக்கு வரும் முன், ஒரு செய்தியை வாசகர்கள் அறிய வேண்டும். அக்ரோனிம் என்ற சொல் ஆங்கில மொழியிலேயே 20-ஆம் நூற்றாண்டில்தான் பயன்பாட்டிற்கு வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. ஒரு சொற்றொடரின் முதல் எழுத்துகளை மட்டும் ஒன்று சேர்ப்பதினால் வரும் கூட்டுச்சேர்க்கை, தனியாக நின்று எந்தப் பொருளையும் தராதபோது, அது அப்ரிவியேஷன் என்றும், அந்தக் கூட்டுச்சேர்க்கையே ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லாக மாறிவிடும்போது, அது அக்ரோனிம் என்றும் குறிப்பிடப்படலாம். அந்த அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அக்ரோனிம் என்பதை "தொகுசொல்' என்றழைப்பதும், அப்ரிவியேஷன் என்பதை "சொற்சுருக்கம்' என்றழைப்பதும்தான் பொருத்தமாக இருக்கும்.
அக்ரோனிம் என்ற சொல்லுக்கு, வாசகர்கள் தரும் இணைச்சொல் தொகுசொல்.
அடுத்த சொல் வேட்டை
கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகள் ஒட்டு மொத்தமாக ஆங்கிலத்தில் "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' என்றும், அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறையை "பங்க்சுவேஷன்' என்றும் குறிக்கின்றனர். இவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உண்டா?
நன்றி - தமிழ்மணி 30 12 2012
நன்றி - தமிழ்மணி 30 12 2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக