23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 17

மொழியியலின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் பல நேரங்களில் பல சொற்கள் ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, காலப்போக்கில் அதன் பயன்பாட்டின் காரணமாக வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக அமைந்துவிடும் என்பதை நாம் உணரலாம். "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லும் இந்த வகையைச் சேர்ந்ததேயாகும்.

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டையோ, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தையோ சார்ந்து அமைந்துவிடும் பல பொருள்களின் சேர்க்கை "பாராஃபெர்நேலியா' என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஆனால், 1650-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இடைக்கால லத்தீன் மொழியிலிருந்தும், கிரேக்க மொழியிலிருந்தும் "பாராஃபெர்நா' என்ற சொல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டபோது, அச்சொல் வரதட்சிணையைத் தாண்டி ஒரு மணப்பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. ரோமானியர்களின் குடும்பச் சட்டங்களின்படி, திருமணமான ஒரு பெண்ணுக்கு அவளுடைய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மேல் முழுச்சொத்துரிமை அளிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி, ஒரு பெண்ணின் ஆடை மற்றும் ஆபரணங்களை விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ அவளுடைய கணவனுக்கு அதிகாரமில்லை. அவள் தன் விருப்பப்படி தன்னுடைய ஆடைகளையும், அணிகலன்களையும் உயில் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் அளித்துவிடலாம். இப்படி ஒரு பெண்ணின் சொத்துரிமைப் பொருள்களைக் குறிக்கும் சொல்லாக ஆதியில் தோன்றிய இச்சொல் தற்போது அதைத்தாண்டி எங்கோ போய்விட்டது. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியைப் புரட்டினால், "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு இரண்டு விதமான பொருள்கள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை அல்லது செயல்பாட்டை நடத்துவதற்குத் தேவையான பல்வேறு பொருள்கள் என்பது. இன்னொன்று, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தோடோ அல்லது செயல்பாட்டோடோ எப்பொழுதும் அடையாளம் காணப்படும் பல சடங்குப் பொருள்கள் என்பதாகும். எனவே, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியைப் பொருத்தளவில் பாராஃபெர்நேலியா என்ற சொல், திருமணப் பெண்ணின் சொத்து (வரதட்சிணையைத் தவிர) என்ற பொருளிலிருந்து மாறி வெகுதூரம் வந்துவிட்டது. ஆனால், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருள்களைத் தருகிறது. அவை (1) திருமணமான ஒரு பெண்ணுக்குச் சொந்தமான, அவளால் உயிலின் மூலம் உரிமை மாற்றம் செய்யக்கூடிய அதிகாரத்திலமைந்த தனிப்பட்ட சொத்து (2) தனிப்பட்ட உடைமைகள் (3) மேசை, நாற்காலி போன்ற உடைமைகள் மற்றும் துணைப்பொருள்கள். இந்த முன்னுரையோடு இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, "பாராஃபெர்நேலியா' என்ற சொல் ஒரு நிறுவன அமைப்பின் தலைமைப் பீடத்தையும், அதிகார அடையாளங்களையும் காட்டக்கூடிய சின்னங்களைக் குறிப்பதாகும் என்றும், அதற்குச் சான்றாக அமைச்சர், கலெக்டர், நீதிபதி போன்றோரின் அலுவலக அடையாளங்களாக வாகன முத்திரை, கொடி, சுழல் விளக்கு, ஆயுதமேந்திய காவலர்கள், குறுக்குப்பட்டை அணிந்த பணியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, அதன்காரணமாக இச்சொல்லுக்கு "அதிகாரக் குறியீடுகள்' அல்லது "அதிகாரச் சின்னங்கள்' என்னும் இணைச்சொல் பொருத்தமாக இருக்குமென்கிறார்.

பாபாராஜ், சென்னை பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தில் "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு பரிவாரம், எடுபிடி, இடைத்துணுக்குகள் ஆகிய பொருள்களும்; ஆங்கில-தமிழ் அகரமுதலியில் "உடைமைப்பொருள்' என்ற சொல்லும் கொடுக்கப்பட்டிருப்பதால், இச்சொல்லுக்கு, "பணிக்களத்துணைப்பொருள்' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார்.

சோலை.கருப்பையா, "உரிமை கொண்டாடுவது அல்லது உரித்தானது' என்ற சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார். ஆனந்தகிருஷ்ணன், "ஒருவரது உடைமைப்பொருள் தொகுதி அல்லது துணைத்தொகுதி' என்ற சொல்லைக் கையாளலாம் என்றும், "அரசர்கள் குதிரையிலோ, யானையிலோ பவனிவரும் போது அவைகளுக்குச் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனைகள் இந்த வகையில் அடங்கும்" என்றும் குறிப்பிடுகிறார். 

முனைவர் ஜி.ரமேஷ், தன்குறிதானவைகள், தனம், பணிப்பொருள்கள், உபகரணங்கள், செயல்பாட்டுக்கருவிகள் மற்றும் சிறுகருவிகள் என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தைக் குறிக்கும் ஸ்ரீதனம் என்பதும் இச்சொல்லுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பொருளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "ஒரு மருத்துவருக்கு ஸ்டெதஸ்கோப், தெர்மாமீட்டர் போன்ற கருவிகள் தொழில்சார் கருவிகளாக விளங்குவதைப் போலவும், ஒரு மன்னருக்கு கிரீடம், செங்கோல் போன்றவை பதவிசார் பொருள்களாக பயன்படுவதைப் போலவும், ஒரு தொழிலையோ, ஒரு பதவியையோ குறிக்கும் அடையாளப் பொருள்களை "பாராஃபெர்நேலியா' என்று குறிக்கலாம்' என்று கூறி, இச்சொல்லுக்கு தொழில்சார் கருவிகள் அல்லது பதவிசார் பொருள்கள் என்ற இணைச்சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

வாசகர்களில் சிலர் குறிப்பிட்டது போல், ஆட்சியாளர்களோடு தொடர்புபடுத்தி இச்சொல் கையாளப்படும்போது, ஒரு காலத்தில் வடமொழியில் ரத, கஜ, துரக பதாதிகள் என்றும், தமிழில், படை-பரிவாரங்கள் என்றும் பயன்படுத்தப்பட்ட சொற்கள், கிட்டத்தட்ட "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்குப் பொருத்தமானவையாக இருந்தன. ஆனால், ஒரு தொழிலோடு அல்லது செயல்பாட்டோடு தொடர்புடைய கருவிகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படும் காரணத்தால் படை-பரிவாரம் போன்ற பழைய சொற்கள் முற்றிலும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

முறையாகச் சொல்லப்போனால், வீடுகட்டும் கொத்தனார் கொண்டுபோகும் மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருள்களும், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் ஒருவர் கொண்டுபோகும் கத்தரிக்கோல், கத்தி, பஞ்சு, பாண்டேஜ் துணி போன்ற பொருள்களும்,  திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர் வழக்கமாகக் கொண்டுபோகும் பொருள்களும், ஒரு மடாதிபதியோடு எடுத்துச்செல்லப்படும் பசைக்கான பொருள்கள், தண்டம் ஆகியனகூட "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லில் அடங்கும்.

எனவே, இச்சொல்லுக்கு இணையான சொல், அதிகாரம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், தொழில் செயல்பாடு சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் "அடையாளச் சின்னங்கள்' அல்லது "அடையாளப் பொருள்கள்'  என்பதே பொருந்தும். ஆனால் ஒரு தொழில் அல்லது செயல்பாடு அல்லது அதிகாரம் அல்லது ஒரு நிறுவனம் சார்ந்த அடையாளப் பொருள்கள் காலப்போக்கில், அவற்றை அடையாளம் காட்டும் சின்னங்களாகவே மாறிப்போவதை நாம் பார்க்கிறோம். ஸ்டெதஸ்கோப் மருத்துவருக்கும், ஏர் மற்றும் கலப்பை உழவனுக்கும் அடையாளச் சின்னம் ஆனதைப்போல். எனவே, "பாராஃபெர்நேலியா' வுக்கான தமிழ்ச்சொல் "அடையாளச் சின்னங்கள்'.

நன்றி - தமிழ்மணி 03 03 2013

கருத்துகள் இல்லை: