09/10/2024

ஜனனி - லா.ச.ராமாமிருதம்

அணுவுக்கு அனுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை


ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக் கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில், எந்தக் கோவிலிலிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில், ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க முயலும் கூச்சல்களும் வெளிப்படுவதைக் கேட்டாள். குளப்படிக்கட்டில் ஒர் ஆண்பிள்ளை குந்தியவண்ணம் இரு கைவிரல் நகங்களையும் கடித்துக் கொண்டு பரபரப்போடு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தான்,


ஒர் இளம் பெண் மரத்தடியில் மல்லாந்து படுத்தவண்ணம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு துடித்தாள்.


ஜன்மம் எடுக்க வேண்டுமெனவே பரமாணுவாய் வந்திருக்கும் தேவியானவள், உடனே அவ்விளந்தாயின் உள்மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில் பிரவேசித்தாள். ஆனால், ஏற்கெனவே அவள் வகுத்திருந்த விதிப்படி அவ்விடத்தில் ஒரு பிண்டம், வெளிப்படும் முயற்சியில் புரண்டு கொண்டிருந்தது.


அதனுடன் தேவி பேசலுற்றாள்:


"ஏ ஜீவனே, நீ இவ்விடத்தை விட்டுவிடு. நான் இந்தக் காயத்தில் உதிக்கப் போகிறேன்."


"தேவி, சத்திய ஸ்வரூபியாகிய உனக்குக் கேவலம் இந்த ஜன்மத்தில் இப்பொழுது ஆசை பிறப்பானேன்? இதன் உபாதைகளைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படித் தவிக்கிறோம்?"


"குழந்தாய், நான் குழந்தையாயிருக்க விரும்புகிறேன். அன்னையாய் இருந்து, என் குடும்பமாகிற இவ்வுலகங்களைப் பராமரித்துப் பராமரித்து நான் கிழவியாகிவிட்டேன். எனக்கு வயதில்லையாயினும், குழந்தையாக வேண்டும் என்னும் இச்சை ஏற்பட்டுவிட்டது-"


"தேவி, இப்பொழுது நீ நினைத்திருப்பது அவதாரமா?"

08/10/2024

தமிழில் பாளிமொழிச் சொற்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி

வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.

தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் சில கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாளி மொழியிலிருந்தும் சில சொற்கள் கலந்து காணப்படுகின்றன. பாளி மொழி இப்போது வழக்காறின்றி இறந்து விட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்துவந்தது. 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாளி மொழியிலேதான் தமது உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாளி மொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப்பெயர் பெற்றது போலும். வைதீக மதத்தாருக்குச் சம்ஸ்கிருதம் 'தெய்வ பாஷை'யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்த மாகதி 'தெய்வ பாஷை'யாகவும் இருப்பதுபோல, பௌத்தர்களுக்கு மாகதி என்னும் பாளிமொழி 'தெய்வபாஷை'யாக இருந்துவருகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாளிமொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள், பாளி மொழியைத் தள்ளி, சம்ஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்று தொட்டு இன்று வரையில் பாளிமொழியையே தங்கள் 'தெய்வ மொழி'யாகப் போற்றிவருகின்றார்கள். பௌத்த மதம், தமிழ் நாட்டில் பரவி நிலைபெற்றிருந்த காலத்தில், அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாளி மொழியும் தமிழ் நாட்டில் இடம் பெற்றது.

07/10/2024

யாமத்து மழை - கி. வா. ஜகந்நாதன்

தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளை உடையவன்.

தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்?


தோழி : நீதான் அறிந்து கொள்ளப் போகிறாயே!


தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு உரிய முயற்சிகளைச் செய்யாமலே இருக்கிறாரே!


தோழி : அதைப்பற்றி நீ ஏன் கவலை அடைகிறாய்? அவனுடைய கடமையை அவன் மறக்க மாட்டான். உனக்கு வேண்டிய பரிசத்தைக் கொண்டு வந்து, உன்னுடைய தாய் தந்தையரிடம் வழங்கி, உன்னை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்பான், முதியோர்களை முன்னிட்டுக் கொண்டு வரைந்து கொள்ள வருவான்.


தலைவி : அவருடைய நாட்டின் வளப்பத்தைச் சொல்ல வந்தாயே! அவர் எவ்வகை நிலத்துக்குத் தலைவர்?


தோழி : குறிஞ்சிநிலத் தலைவன்; மலை நாடன்,


தலைவி : நாமும் குறிஞ்சி நிலத்தில் வாழ்கிறோம். இங்குக் கள்வர்களைப்போல அங்கும் மகளிர் உண்டோ? தினை கொல்லைகள் உண்டோ?


தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.


தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?

06/10/2024

முத்திரைப் பதிவுகள் - 3

தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புக் கொள்கை!

முதல்நூல், வழிநூல் என நூல் இருவகைப்படும் என்பார் தொல்காப்பியர். வழி நூல்கள் நான்கு வகை என அவர் பகுத்துக் கூறியுள்ளார்.

 

"மரபு நிலை திரியா மாட்சியவாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின''

(தொல்.பொருள்.மரபியல்-92)

 

என்பது நூல்கள் முதல்நூல், வழிநூல் என் இருவகைப்படும் என்பதைக் குறிக்கின்ற நூற்பாகும்.

 

"வழியெனப்படுவது அதன் வழித்தாகும்''

(மேற்படி-95) என்பதும், "வழியின் நெறியே நால்வகைத்தாகும்'' (95) என்பதும் வழிநூல் பற்றிய பொதுவிளக்கம் தருவன.

 

"தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே'' (97)

 

என்பது வழி நூல்களின் வகைகளைப் பெயரிட்டுக் கூறும் சூத்திரமாகும். "மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்” என்று சுட்டுவதில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றித் தொல்காப்பியர் அறிந்திருந்தார் என்பது தெளிவு.


"மொழிபெயர்ப்பு' என்பதில் மூல மொழி நூலைப் பெயர்க்கும்போது இலக்கு மொழிக்குரிய மரபு கட்டாயம் பேணப்பட வேண்டும். "அதர்ப்படயாத்தல்” என்ற சொற்றொடர் இதனை உணர்த்தும். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் பொருள் விளங்காது. காரணம், அந்தந்த மொழிக்குரிய நடை மரபு உண்டு என்பதேயாகும்.

05/10/2024

அகத்தியர் தொடங்கிய சங்கம் - கி. வா. ஜகந்நாதன்

"பெருமானே, நான் தென்னாடு போக வேண்டுமாயின், அங்கே நாலு பேரோடு பேசிப் பழக வேண்டாமா? சிறப்பான நிலையில் இருக்க வேண்டாமா? அங்கே வழங்கும் தமிழ் மொழியில் எனக்குப் பழக்கம் இல்லையே!" என்று அகத்திய முனிவர் சிவபெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.

தேவரும் மக்களும் கூடியதால் கைலாசம் என்றும் இல்லாத பெருஞ்சிறப்போடு விளங்கியது. உலக முழுவதுமே காலியாகிவிட்டதோ என்று கூடத் தோன்றியது. தென்னாட்டிலிருந்து பார்வதி கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஜனங்களெல்லாம் வடக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்களை மறுபடியும் போய்த் தென்னாட்டில் வாழ்க்கை நடத்தும்படி சொல்ல முடியவில்லை. தென்னாட்டில் அரக்கர்கள் தங்கள் ஆட்சியை விரித்து, மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வந்த நல்லோரை நலிவு செய்தார்கள். ஆதலின், அந்த நாட்டில் நல்லோர் வாழ்வு அமைதியாக இருக்கவில்லை; சிவபெருமானுடைய கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு அறிவும் தவமும் மிக்க பல பெரியோர்கள் கைலாசத்துக்கே வந்து விட்டார்கள்.


தென்னாட்டில் அரக்கர் கொடுங்கோன்மை பரவுமானால், அங்கே வாழும் குடிமக்கள் என்னாவது! பெரிய வர்களே அஞ்சி ஓடி வந்துவிட்டால், தென்னாடு முழுவதும் அரக்கருக்கு அடங்கி, தெய்வநினைவின்றிக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிடுமே! என் செய்வது?

04/10/2024

பாலையின் அரங்கேற்று மண்டபம் - பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை

பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16-கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.

தத்து நீர்வரால் குருமி வென்றதும்

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்

பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்

பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (இராச-21)


என்று கலிங்கத்துப் பரணி கூறும். சங்கர சோழன் உலாவிலும்,


பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு

கோடி பசும்பொன் கொடுதோனும் (10)


என இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்ததாகிய தமிழ்விடு தூதும்,


பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு

கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே


என்று கூறுகிறது. இவ்வொரு செய்தியே இதுவரை அறியப்பட்டது. இப்பொழுது புதுச் செய்தி ஒன்று ஒரு சாசனத்தால் வெளியாகின்றது. பட்டினப்பாலையை அரங்கேற்றுவதற்குப் பதினாறு தூண்கள் அமைந்த பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என ஓர் சாசனச் செய்யுள் தெரிவிக்கிறது. அச்செய்யுள் வருமாறு:

03/10/2024

செண்டலங்காரர் - உ.வே.சாமிநாதய்யர்

வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர்களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்ககாலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால், உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர்தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற்றும் கிடைக்கவில்லை. அதைப் படித்து இன்புறுவார் அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவரவில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ்நூலை முறையாகப் பாடங்கேட்பவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.

நான் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும் தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலே இலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.


சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரும்வண்ணம் தன தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.


"தண்டார் விடலை தாயுரைப்பத்

      தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்

செண்டால் அவள்பைங் குழல்பற்றித்

      தீண்டா னாகிச் செல்கின்றான்

வண்டார் குழலு முடன்குலைய

      மானங் குலைய மனங்குலையக்

கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்

      கொண்டா ளந்தோ கொடியாளே"


என்ற செய்யுளில், அவன் திரௌபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. தன்னுடைய தாயாகிய காந்தாரி, 'நீ போய் வா' என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலை பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி அந்தோ! தன் குழல் குலைய மானங்குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள் என்பது இச்செய்யுளின் பொருள்.


திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில், "தீண்டாத கற்புடைய செழுந்திருவை" என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன்.


'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி' என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது?

02/10/2024

முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர் - அ.க. நவநீத கிருட்டிணன்

தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு

'ஐம்பெருங் காவியங்கள்' என்று போற்றப்பெறும் ஐந்து அரிய நூல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் சிறந்தது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியம் ஆகும். இது கண்ணகி என்னும் கற்பரசியின் காற்சிலம்பால் விளைந்த கதையை விளக்கும் நூலாகும். தமிழில் தோன்றிய முதல் காவியம் இச்சிலப்பதிகாரமே. இஃது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவிய முத்தமிழ்க் காவியம் ஆகும். அதனால் இந்நூலை ‘இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்' என்று அறிஞர் போற்றுவர். இதனைத் தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு என்றே புலவர் போற்றுவர். ‘நெஞ்சை - அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு’ என்று இந்நூலைக் கவிஞர் பாரதியார் பாராட்டினார்.


சிலம்பைப் பாடிய இளங்கோ


இத்தகைய முத்தமிழ்க் காவியத்தைப் பாடிய புலவர் ஒரு முனிவர் ஆவர். சேர நாட்டு வேந்தனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மைந்தர் இருவர். மூத்தவன் செங்குட்டுவன், இளையவன் இளங்கோ. இவ்விளங்கோவே இளம் பருவத்தில் துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் எனப்பட்டார். இவரே சிலப்பதிகாரக் காவியத்தைப் பாடிய செந்தமிழ் முனிவர் ஆவர்.


அரசவையில் நிமித்திகன்


ஒரு நாள் சேர வேந்தனாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் அத்தாணி மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் மைந்தர் இருவரும் அமர்ந்திருந்தனர். அமைச்சரும் பரிவாரத்தாரும் புடை சூழச் சேரன் வீற்றிருந்தான். அவ்வேளையில் வேந்தனைக் காண நிமித்திகன் ஒருவன் வந்தான். அவன் மைந்தர் இருவருடன் மன்னன் வீற்றிருப்பதைக் கண்டான். அம்மூவரையும் நிமித்திகன் கூர்ந்து நோக்கினான். முடி மன்னனாகிய சேரலாதனை நோக்கி, ‘அரசே! தங்கட்குப் பின்பு முடி சூடும் தகுதியுடையவன் இளங்கோவே’ என்று இயம்பினான்.


தம்பியின் தவக்கோலம்


அதைக் கேட்ட மூத்த மைந்தனாகிய செங்குட்டுவனுக்குச் சினம் பொங்கியது. அதைக் கண்ட இளங்கோ,

முத்திரைப் பதிவுகள் - 2

மாத்திரை என்பதை ‘அளவு’ என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்

காண்டல் செல்லாது யாண்டு பல கழிய

(புறநா.216)

முலைக்கோள் விடாஅ மாத்திரை

(பொ.ஆ.படை141)

 

மிக விரைவில் நிகழும் செயலை ‘மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை ‘நொடி', ‘கணம்' எனவும் வழங்குவர்.

 

மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான்   (திருவாய்மொழி 10:7-8)

 

‘நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது.

முத்திரைப் பதிவுகள் - 1

விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். ‘பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம்.

அபிதானமணிமாலை என்னும் நூல், ‘பகைவர்’ என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.