மாத்திரை என்பதை ‘அளவு’ என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன.
கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் செல்லாது யாண்டு பல கழிய
(புறநா.216)
முலைக்கோள் விடாஅ மாத்திரை
(பொ.ஆ.படை141)
மிக விரைவில் நிகழும் செயலை ‘மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை ‘நொடி', ‘கணம்' எனவும் வழங்குவர்.
மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான் (திருவாய்மொழி 10:7-8)
‘நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது.
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது (குறள்-29)
இதில் ‘கணம்' என்பது மாத்திரை என்னும் சிறிய கால அளவையைச் சுட்டுதல் காணலாம். கடிகை, நாழிகை என்பன மாத்திரையை அடுத்து வரும் சற்றுப் பெரிய கால அளவை. இதுவே பொழுதை அளவிடும் சிறிய மூல அளவை. ‘அல்லும் பகலும்' அறுபது நாழிகையும் என்பது தமிழ் வழக்கு.
"யாண்டும், மதியும், நாளும், கடிகையும்'' (சிலப்.27:1) என்பதனால், ‘கடிகைகள்’ சேர்ந்து ‘நாள்' என்னும் கால வரையறை கொண்டுள்ளதைக் காண்கிறோம்.
"நாழிகையும் பல ஞாயிறு ஆகி'' (தேவாரம் 8:107:7) நாழிகைகள் சேர்ந்து ஆகும் கால அளவை "யாமம்' என்பர்.
ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும் நாழிகையானே நடந்தன
என்கிறது நான்மணிக்கடிகை 71-ஆவது பாடல். இவ்வாறான நாழிகையை அளவிட்டு உரைப்போர் ‘நாழிகைக் கணக்கர்’ எனப்படுவர். இவர்கள் நீர்க்கன்னலின் உதவியால் நாழிகையைக் கணக்கிடுவர். இவருக்குக் ‘கடிகையார்' என்னும் பெயருமுண்டு. நாழிகைக் கணக்காயரான இக்கடிகையார் பொழுது அறிந்து உரைப்பவர் என்பதனை, முல்லைப்பாட்டு (55-58), மணிமேகலை (7:64-65) ஆகிய நூல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
இந்நாழிகைக் கணக்கர் நாழிகையைப் புலப்படுத்தும் கருவியான இக்கடிகையைத் தம் கழுத்தில் ஆரம்போல அணிந்து கொண்டு நேரத்தை அறிவிப்பர் என்பதை,
"கடிகை ஆரம் கழுத்தில் மின்ன'' (36:125) என்று பெருங்கதை நமக்கு எடுத்துக்கூறியுள்ளதைக் காண்கிறோம்.
எனவே, அன்று வழங்கிய கடிகை ஆரம் என்பது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் கால அளவைக் கருவியான ‘கிளாக்’ (Clock) என்பதை அப்படியே தமிழில் கடிகை ஆரம் - கடிகாரம் என வழக்கில் கொள்ளப்பட்டது. கையில் அணிந்து கொள்ளும் ‘ரிஸ்ட்வாட்ச்' (Wrist Watch) என்பதற்குக் கைக்கடிகாரம் என வழங்கவும் தலைப்பட்டனர். இதுவே ‘கடிகாரம்' என்பதற்கான வழக்கு என்பதைக் கூறவும் வேண்டுமோ?
புலவர் முத்து.எதிராசனின் ‘இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்' நூலிலிருந்து…
நன்றி தமிழ்மணி 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக