07/10/2024

யாமத்து மழை - கி. வா. ஜகந்நாதன்

தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளை உடையவன்.

தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்?


தோழி : நீதான் அறிந்து கொள்ளப் போகிறாயே!


தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு உரிய முயற்சிகளைச் செய்யாமலே இருக்கிறாரே!


தோழி : அதைப்பற்றி நீ ஏன் கவலை அடைகிறாய்? அவனுடைய கடமையை அவன் மறக்க மாட்டான். உனக்கு வேண்டிய பரிசத்தைக் கொண்டு வந்து, உன்னுடைய தாய் தந்தையரிடம் வழங்கி, உன்னை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்பான், முதியோர்களை முன்னிட்டுக் கொண்டு வரைந்து கொள்ள வருவான்.


தலைவி : அவருடைய நாட்டின் வளப்பத்தைச் சொல்ல வந்தாயே! அவர் எவ்வகை நிலத்துக்குத் தலைவர்?


தோழி : குறிஞ்சிநிலத் தலைவன்; மலை நாடன்,


தலைவி : நாமும் குறிஞ்சி நிலத்தில் வாழ்கிறோம். இங்குக் கள்வர்களைப்போல அங்கும் மகளிர் உண்டோ? தினை கொல்லைகள் உண்டோ?


தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.


தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?


தோழி : ஆம்; அதே போலத்தான். ஆனால் பைந்தினையைக் காக்கும் கொடிச்சியர் யாவருக்கும் உனக்குக் கிடைத்த ஊதியம் கிடைக்குமா? நீதான் உன் காதலனைத் திணைப் புணத்தைக் காவல் செய்கையில் பெற்றாய். (சிரிக்கிறாள்).


தலைவி (நாணத்தோடு) சரி சரி; அவர்களுக்கு என்னதான் கிடைக்கும்?


தோழி: அற்புதமான காட்சிகள் காணக் கிடைக்கும். எவ்வளவுதான் ஊக்கத்தோடு காவல் புரிந்தாலும் ஏமாற்றந்தான் கிடைக்கும்.


தலைவி: அது என்ன? ஏமாற்றம் கிடைப்பதாவது?


தோழி! ஆம்; கவணெறிந்தும் தட்டையைத் தட்டியும் கிளிகளை ஒட்டிக் காவல் புரியும் அந்தக் கொடிச்சியரைச் சில விலங்குகள் ஏமாற்றிவிடும்.


தலைவி : யானையையா சொல்கிறாய்? .


தோழி : யானையைக் கொடிச்சியர் என்ன செய்யமுடியும்? கானவர் அம்பு எய்து அல்லவா அதை ஒட்ட வேண்டும்?


தலைவி ; பின்னே நீ எந்த விலங்கைச் சொல்கிறாய்?


தோழி: மிகவும் தந்திரம் கற்ற மந்தி. அது குறத்தியர் அயர்ந்திருக்கும் பொழுது தினைக்கதிரைப் பறித்துக் கொண்டு போய்விடும்!


தலைவி : பறித்துக் கொண்டா போகும்?


தோழி: ஆம். கொடிச்சி காக்கும் அடுக்கலில் உள்ள பைந்தினையில் முதல் முதலில் விளைகின்ற கதிர்களை அவை கொண்டுபோய்விடும்!


தலைவி : கொண்டு போய் என்ன செய்யும்?


தோழி : முந்து விளைந்த பெருங் கதிரைக் கொண்ட மந்தி, தன் கணவனாகிய கடுவனேடு மலைமேல் தாவி ஏறும்.


தலைவி : மந்திதான் திணைக்கதிரைப் பறிக்குமோ?


தோழி: அதற்குத் தான் மெல்லப் பறிக்கத் தெரியும். அவசரப்பட்டு அடி வாங்கிக் கொள்ளாது. அப்படித் திருட்டுத்தனமாகப் பறிக்கக் கற்ற மந்தி அது. ஆனால் ஆண்குரங்காகிய ஈடுவனே, இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும். இந்தத் தந்திரத்தை அது கற்றதில்லை; அது கல்லாக் கடுவன். கதிரைப் பறித்த மந்தி உடனே கடுவனேடு மலைமேலே ஏறிவிடும்.


தலைவி : பிறகு?


தோழி: நல்ல வரைமேல் ஏறி ஓரிடத்தில் மந்தியும் கடுவனும் அமர்ந்து கொள்ளும்,


தலைவி : அவற்றிடையே உள்ள காதல் எவ்வளவு அழகானது


தோழி: ஆம்; உலகமே காதல் நிறைந்ததுதான். மந்தி அந்தக் கதிரை உள்ளங்கையிலே வைத்து நிமிண்டித் தேய்க்கும். பல கதிர்களைக் பறித்து வந்ததல்லவா? அங்கை நிறைய அந்தத் தனக்கதிர்களை நெருடித் தேய்த்து அப்படியே உண்ணும். தன்னுடைய வளைந்த கவுளில் அடக்கிக்கொள்ளும். மேலும் மேலும் திணையை உண்ணும். தோல் தொங்கும் அதன் கழுத்துக்கூடப் 'பம்’ என்றாகிவிடும். கன்னமும் திரைந்த தாடைப் பகுதியும் நிரம்பும்படி உண்ணும்போது பார்க்க வேண்டும் மழை பெய்து கொண்டிருக்கும், வானம் பெய்த பெயலால் அதன் முதுகு நனைந்து போகும். கையிலே தினையை ஏந்தியபடியே அதை உண்ணுவதையும், அதன் உடம்பு நனைந்திருப்பதையும் பார்த்தால் சந்நியாசிகள் பிட்சை உண்ணுவது போலத் தோன்றும். நீராடிவிட்டு ஈரம் சொட்டச் சொட்டக் கரதல பிட்சை ஏற்று உண்ணும் நோன்பியரை நீ பார்த்ததுண்டா? அந்தக் காட்சியைப் போலவே இருக்கும்.


தலைவி : அவர் நாட்டில் குரங்குகள் எளிதிலே தினையைப் பறித்து உண்ணுகின்றன. குறிஞ்சி நில மக்கள் தினையை விளைத்துப் பயிர் செய்கின்றனர். கொடிச்சியர் அவற்றைக் காவல் புரிந்தாலும் குரங்குகள் அவற்றைக் கொள்ளுகின்றன. இங்கும் அப்படித்தான் இருக்கிறது.


தோழி : இங்கேயும் அத்தகைய காட்சியைக் கண்டிருக் கிறாயா?


தலைவி: அதே காட்சி அன்று, பிறர் காவல் புரியும் ஒன்றை மற்றென்று கவர்ந்து நுகரும் செயலாஈ இங்கேயும் பார்க்கிறோம். அன்னையும் பிறரும் என்னைக் காவல் புரிந்து என் பெண்ஆயைக் காத்து நிற்கிறார்கள். ஆனல் அவர்களையும் அறியாமல் தலைவர் என் நலத்தை வெளவிக்கொண்டார்.


தோழி: நன்ருகச் சொன்னாய்! அது அவனுடைய நாட்டின் இயல்புக்கு ஏற்றதே, கொடிச்சி காக்கும் அடுக் கற்பைந்தினையின் முந்து விளைந்த பெருங்கதிரை, அங்கே மந்தி கல்லாக் கடுவனோடு கொண்டு, கல்வரை ஏறி, அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன்னுடைய திரைந்த தாடையிலும் வளைந்த கவுளிலும் நிறையும் படி மொக்குகிறது; இங்கோ தாயும் தமையன்மாரும் பிறரும் காத்து ஓம்பும் நின் பெண்மை நலத்தைத் தலைவன் வந்து வெளவினான், ஆனால் குரங்கு நல்வரை ஏறி உண்ணுவது போல, தன் ஊருக்கு உன்னை அழைத்துச் சென்று உலகினர் அறியக் கணவன் மனைவியாக வாழும் நிலை வரவில்லை. அதுவும் வந்து விடும் என்றே நம்புகிறேன்.


தலைவி : வருமா, தோழி? அந்தக் காலம் வருமா? என் காதலர் என்னை வரைந்துகொள்வாரா?


தோழி : மட நங்கையே, இனி உன் கவலையெல்லாம் ஒழிந்தது. அவன் வந்தனன்


தலைவி : யார்?


தோழி : உன் உயிர்க் காதலனுமாகிய மலைநாடன்தான். உன்னை மணந்துகொள்ள வேண்டுமென்று உறுதி செய்து முதியவர்களை முன்னிட்டுக் கொண்டு வந்து விட்டான்.


தலைவி : என் காதலரா?


தோழி: ஆம்; தினைக் கதிரைப் பறித்து வரையின் மேல் ஏறிக் கை நிறையத் தேய்த்து, நோன்புடைய சந்நியாசிகள் கைபூண் நுகர்வது போலே மந்திஉண்ணும் நாடன் வந்தான். நீ இனிக் கவலையை ஒழி.


தலைவி : தோழி, இனி எனக்கு இடையீடில்லாத இன்பம் கிடைக்குமா? அவர் சில காலம் வராமல் இருந்தாரே; நான் எவ்வளவு துன்பத்தை அடைந்தேன்! தெரியுமா?


தோழி : எனக்குத் தெரியாமல் என்ன? நம் பெருமான் உன்னை மணந்துகொள்ள எண்ணி, அதற்கு வேண்டிய பொருளை ஈட்டத்தான் சென்றிருக்க வேண்டும். அந்தப் பிரிவை நீ தாங்காமல் துன்புற்றாய். மழை பெய்யாத பஞ்சகாலத்தில் குளங்களெல்லாம் வற்றிப் போய் நீரே இல்லாமற் போனபோது நெற்பயிர் வாடுவதுபோல நீ வாடினாய். முளையிட்டு இலைவிட்டு வளர்ந்து பூட்டை விட்ட சமயத்தில் நீர் இல்லாமையால் வாடிப்போன பயிரைப்போல, அவனுடைய தொடர்பினால் மகிழ்ச்சி பெற்ற நீ வாடி நின்றதை நான் பார்த்தேன்; வருந்தினேன். அந்த வாட்டம் பின்னே தீரும் என்று நம்பினேன். உழவன் நெற்பயிர் வாடுவது கண்டு, ‘மேல் மழை வந்தால் இந்தப் பயிர் தழைத்துக் கதிரி முற்றிப் பயன் தருமே!’ என்று ஏங்கினாற்போல நான் ஏங்கினேன். 'இவளைத் தலைவன் அருள் செய்து மணந்தால் அறமும் இன்பமும் இவளுக்கு வாய்க்குமே!’ என்று நைந்து வருந்தினேன். மழை வருமென்று வானத்தை நம்பியிருக்கும் உழ வனைப்போல நானும் நம்பிக்கையோடு இருந்தேன். பசுமையற்ற காலத்தில் குளங்களெல்லாம் ஈரமற்ற போது, திரங்கிய நெல்லுக்கு இராக் காலத்தில் மழை பொழிந்ததுபோல அவன் வந்துவிட்டான். நள் என்ற யாமத்தில் பெய்யும் மழை அடரப் பொழியும். உன் காதலனும் உன்பால் பேரருளை உடையவனுகி வந்திருக்கிறான், இனி உன்னை இன்பக் கடலில் ஆழ்த்துவான். நீ வரழி.


கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை

முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி,

கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி

அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன்

திரைஅணற் கொடுங்கவுள் நிறைய முக்கி,

வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்

கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன்

வந்தனன் வாழி, தோழி, உலகம்

கயங்கண் அற்ற பைதறு காலைப்

பீளொடு திரங்கிய நெல்லிற்கு

நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.


[தோழி, நீ வாழ்வாயாக! குறமகள் பாதுகாக்கும் மலையில் விளைந்த பசிய தினையில் முதலில் விளைந்த பெரிய கதிரை, (அக்குறமகள் அறியாமல் பறித்துக்) கொண்ட பெண் குரங்கு, (இத்தகைய தந்திரத்தைக்) கல்லாத ஆண் குரங்கோடு நல்ல மலைப் பக்கத்தில் ஏறி, உள்ளங் கை நிறைய (அந்தத் தினைக் கதிரைத்) தேய்த்துத் தன்னுடைய சுருங்கிய தாடையோடு, விளைந்த கன்னமும் நிறையும்படி உண்டு, வானத்திலிருந்து பெய்த மழையில் நனந்த முதுகை உடையனவாகி, விரதமுடையர் (ஆகிய துறவிகள்) கையில் உண்ணும் கோலத்தில் இருப்பது போலத் தோன்றும் மலை நாட்டையுடைய தலைவன் வந்தான்; உலகத்தில் குளங்களெல்லாம் தம் இடம் வெறுமையாகி அற்றுப்போன ஈரம் அழிந்த (பஞ்ச) காலத்தில் பூட்டையோடு வாடிப்போன நெற்பயிருக்கு, நள்ளிரவில் மழை பொழிந்தது போல.


தோழி, மந்தி தோன்றும் நாடன், பொழிந்தாங்கு வந்தனன் என்று கூட்டுக.


கொடிச்சி-குறத்தி; அடுக்கல்-மலைத்தொடர்; முந்து – முந்தி; குரல்-தினைக் கதிர்; மந்தி-பெண்குரங்கு,; கடுவன் - ஆண் குரங்கு; வரை-மலைப்பக்கம்; ஞெமிடி-நிமிண்டி தேய்த்து; திரை –சுருங்கிய; அனல்-தாடை, கன்னத்தின் கீழ்ப்பகுதி கொடுங்கவுள்-வளைந்த கன்னம், முக்கி - உண்டு; இப்போது மொக்கி என்று வழங்குகிறது. பெயல் -மழையில். நோன்பியர்-விரதத்தை உடைய துறவிகள். கையூண் இருக்கை- கரதல பிட்சை உண்ணும் கோலம்; நாடன்-குறிஞ்சி நிலத் தலைவன்; கயம்-குளம்; கண் - இடம். பைது அறு காலை-பசுமை அற்ற காலத்தில்; பீள் – பூட்டை;. திரங்கிய-வாடிய. நள்ளென் யாமம்-நடு இரவு; பொழிந்தாங்கு-பொழிந்தாற் போல.]


துறை : இது, வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல் லியது.


'மணம் செய்வதற்கு வேண்டிய முயற்சியுடன் தலைவன் பெண் பேச வந்த செய்தியை அறிந்த தோழி, அதனைத் தலைவிக்குச் சொல்லியது' என்பது இதன் பொருள். வரைவு மலிதல்-மனத்துக்குரிய முயற்சி பெருகுதல். ஒருத்தியைத் தன் மனைவியென்று உலகு அறிய வரையறுத்து உரிமையாக்கிக் கொள்வதால் மனத்திற்கு வரைவு என்ற பெயர் வந்தது.


இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியவில்லை.


இது நற்றினையில் இருபத்திரண்டாம் பாட்டு.

-----------------


கருத்துகள் இல்லை: