16/06/2012

உடையார் (முன்னுரை) - பாலகுமாரன்

நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக்கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்றன ஓரு நிலைமை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று.

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா, உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்படாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளீயாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித் தருகிறேன்; அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுத முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்கள்.

பந்தல் எரிந்த கும்பாபிஷேகத்தையும்,பதவி பறிக்கப்பட்ட தலைவர்களையும், பாதிக்கப்பட்ட அமைச்சர்களையும், சுட்டிக்காட்டினார்களே. எனக்கும் அதுதான் கதி என்று சொன்னார்களே. அவர்கள் என்ன ஆனார்கள். இந்த நாவலை நான் எப்படி முடித்தேன் என்று யோசிப்பு வந்தபோது மிகத்தீவிரமாய் என் குருநாதரைப் பற்றிய நினைப்பு எனக்குள் பீறிட்டு எழுந்தது.
என் சத்குருநாதன் கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான், திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவரிகளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் இந்தப் புதினத்தை ஆறாவது பாகம் வரை எழுதி முடித்துவிட்டேன்.

இந்தப் பிரம்மாண்டமான சரித்திரத்தை என் புத்திக்கு எட்டியவரை உணர்ந்து அனுபவித்து உள்வாங்கி மிகுந்த கவனத்தோடு, இழை இழையாய் நெய்து, பூக்கள் நிறைந்த சால்வையாய் அவர் காலடியில் சமர்ப்பிதம் செய்து விட்டேன். இதை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன்.

உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் என்கிற தனி மனிதர் தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளாது தன்னைச் சேர்ந்த அத்தனை மக்களைப் பற்றியும் அக்கறைப்பட்டு அவர்களையும் இந்த இறைப்பணியில் சேர்த்துக் கொண்டு ஒரு நாகரிகத்தை கல்வெட்டாக விட்டுச்சென்ற கனிவை எண்ணி, அதில் மனம் கரைந்து, அதில் வசப்பட்டு, கதைக்கு நடுவே அந்தக் கனிவை காட்டவும், நான் முயற்சித்திருக்கிறேன்.

சரித்திரக் கதையாக இருப்பினும் போர் பற்றிய விமர்சனமும், பெண்கள் பற்றிய பார்வையும் ஒரு பொழுதுபோக்கு பற்றிய குறிப்புகளும், கடவுள் பற்றிய சிந்தனையும், அது குறித்த தத்துவமும் விவாதமும் என்றைக்கும் எப்போதும், எவரும் புரிந்து கொண்டு மேற்கொண்டு சிந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இதில் புகுத்தியிருக்கிறேன்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் வாழ்வினுடைய அடிப்படைத் தாகங்கள் அகன்று விடவில்லை. மனிதர்கள் இப்போதும், எப்போதும் ஓரே விதமாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
இந்த நாவலை சோழதேசம் நோக்கி பயணப்படுகையில் நான் முடிக்க நேர்ந்தது. ஒரு குவாலிஸ் வண்டியில் நண்பர்கள் அமர்ந்திருக்க தாம்பரத்தில் கதை துவங்கி இடையாறது இடையாறது ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்தேன். ஒரு கனத்த மழை போல தங்கு தடையின்றி இந்த நாவல் என்னிலிருந்து மிகச்சீராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது

பயணப்பட்டுக்கொண்டே நாவல் சொல்வதால் அதன் அடர்த்தியும், வேகமும், தெளிவும், அழகும் குறையவே இல்லை. உடன் வந்த என் நண்பர்கள் வியந்துபோனார்கள். அங்கங்கே நான் உணர்ச்சிவசப்பட என் தலையைத் தடவி, பிடரியை வருடி, தோளைத்தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.
சோழதேசத்தின் எல்லையைத் தொடும்போது உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லி முடித்துவிட்டு ஓலிநாடாவை பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே பார்த்து அழத்துவங்கினேன். இன்னும் என்னுள் அந்த நேரம் அந்த நினைப்பு பசுமையாக இருக்கிறது. அருகே ஒருவர் இறந்துவிட்டதுபோல, அவர் இறந்த செய்தி ஐந்து நிமிடத்திற்க்கு முன்புதான் எனக்கு தெரிவிக்கப்பட்டதுபோல, துக்கத்தோடு நான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்த அந்த மன்னனுக்காக கிட்டதட்ட கதறலாக அழுதேன். அப்பொழுது அப்படி உணர்ச்சி வசப்பட்டது நியாயமாகத்தான்படுகிறது. அந்த அழுகை சரி என்றுதான் தோன்றுகிறது.

வெறும் புத்தியால் மட்டும் ஒரு புதினத்தை எழுதிவிட முடியாது. ஒரு கல்வெட்டைப் பார்த்து விட்டு அதுபற்றிய தகவல் சொல்வது போல் ஒரு கட்டுரையாய் ஒரு புதினம் எழுதப்படக்கூடாது. விமானம் இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை வருடங்கள் முன்பு கட்டப்பட்டது. இதன் கற்களின் எடை இத்தனை. பிளந்த கற்கள் இவ்வளவு. பிளக்காத கற்கள் இவ்வளவு. உயரே இருக்கின்ற கலசத்தின் எடை இவ்வளவு. சுற்றியுள்ள மதில்சுவரின் அளவு எத்தகையது. ‘இவர்தான் மூலவர் எல்லாரும் சாமி கும்பிட்டுக்கோங்க, சீக்கிரம் வெளியே வாங்கஎன்று ஒரு வழிகாட்டியைப் போல ஒரு எழுத்தாளன் செயல்படமுடியாது.

அந்தக் கட்டிடத்திற்கு அருகே போய் அண்ணாந்து பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதை எப்படிக் கட்டினார்கள். அவர்களெல்லாம் யார். என்ன கணக்கு, என்ன கருவி என்று எவர் வியக்கிறாரோ. நம்முடைய முன்னோர் எத்தனை நேர்த்தியாக இதைச் செய்திருக்கிறார்கள் என்று எவர் பெருமிதப்படிகிறாரோ, இதைச் செய்கின்ற ஆற்றல் இருக்குமென்றால் அவர்களுக்கு இன்னும் என்னென்ன ஆற்றல் இருந்திருக்க வேண்டும். அந்த ஆற்றல் உள்ளவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் எவ்விதமாக குடித்தனம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து யோசிக்கிறார்களோ அப்படி உணர்ச்சிவசப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது இந்த நாவல்.

உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் எப்படியிருப்பார் கருப்பா, சிகப்பா, குட்டையா, நெட்டையா, ஒல்லியா என்று யாருக்கும் தெரியாது. சில சித்திரங்களும், சில சிலைகளும் அவர் இவ்விதமாக இருப்பார் என்று காட்டிகின்றன.அந்தச் சிலைகளிலிருந்து அவர் நிறமும், நடையும், உடையும், பாவனையும் வெளி வந்துவிடாது. படம் வெறும் அடையாளமாகத்தான் இருக்கும். அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு அதை என்னுள் தேக்கி அவர் இப்படி இருந்திருக்கக் கூடும் என்று நான் எழுதியிருக்கிறேன். அவருடைய மனைவிகள் இத்தனை பேர் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அதில் இவள் முக்கியமானவளாக இருந்திருப்பாள் என்று பல்வேறு காரணங்களை வைத்து ஒரு யூகம் செய்திருக்கிறேன்.

பட்டமகிஷிக்கோ, ராஜேந்திர சோழனை பெற்ற தாயார் வானதிக்கோ பள்ளிப்படை கோயில் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவி என்கிற பெண்மணிக்கு பள்ளிப்படைக் கோயில் இருந்திருக்கிறது. அதுவும் இராஜராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. தந்தையினுடைய அனுக்கிக்கு கோவில் எழுப்புகிற அரசனின் செயலை உற்றுப்பார்க்கிறபோது அவள் அற்புதமான பெண்மணியாய் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பட்டமகிஷிக்கு, வானவன் மாதேவிக்கு பள்ளிப்படை இருந்திருக்கலாம். சிதிலமாயிருக்கலாம். பஞ்சவன் மாதேவி கோவிலும் கண்ணெதிரே இடிபட இருந்தது. யார் செய்த புண்ணியமோ, அதை இந்து அறநிலையத்துறை மறுபடியும் தூக்கிக் கட்டியிருக்கிறது.

மாதேவடிகள் என்று இராஜராஜசோழனின் மகள் ஒருத்தி கட்டியகோயில் சிதிலமான நிலையில் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அது தரையோடு தரையாக மாறும். அதைத் காப்பாற்ற இன்னும் வேளை வரவில்லை. இந்தத் தமிழ்தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம்பெருமைகளை, போற்றிப் பாதுகாக்காதது, போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது பெருங்குறை. மக்கள் எவ்வழி அவ்விதம் அரசு.

கவிதை என்றால் சினிமாப்பாட்டு. ஓவியம் என்றால் வாரப்பத்திரிக்கை. இலக்கியம் என்றால் வேண்டாத விஷயம். தியாகிகள் என்றால் கட்சித்தலைவர்கள் என்று மிகவும் சுருங்கிப்போன இந்த மக்களிடையே தமிழர்களின் பழம்பெருமையை கொஞ்சம் உரத்துக் கூறித்தான் ஞாபகப்படுத்த வேண்டும். கொஞ்சம் அலங்காரமாகப் பேசித்தான் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும். ஹிந்தியை அழிப்பதால் தமிழ் வாழ்ந்து விடாது. தமிழை போற்றுவதால்தான் தமிழ் வாழும் என்பதை அவர்களுக்கு லேசாய் இடித்துரைக்க வேண்டும்.

ஆங்கிலப்படிப்பு மட்டுமே மேன்மையன்று. அதில் பேசுவதால் மட்டுமே ஞானம் வந்து விடாது. நம்முடைய தாய்மொழியான தமிழில் நுணுக்கங்கள் நிறைந்த பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. மனித உணர்வுகளை மிகத் துல்லியமாகத் காட்டுகின்ற அற்புதமான கவிதைகள் இருக்கின்றன. இப்படியும் யோசிக்க முடியுமா மனிதர்களால் என்று இன்றைக்கும் வியக்க வைக்கின்ற காவியங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப சொல்லப்பட்டதால் திருக்குறளுக்கு தமிழ் மக்களிடையே ஒரு மேன்மை வந்திருக்கிறது. ஆனால், ஸ்நேகம் வந்திருக்கிறதா. எனக்குச் சந்தேகமே. திருக்குறள் முக்கியமானதென்று என்று தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள். நெஞ்சுக்குள் இறக்கிக் கொள்கிறார்களா. கேள்விக்குறியே.
எனவே, தமிழ் மொழியின் தொன்மை மக்களுக்குத் தெரியாமல் போனது போல இந்தத் தமிழ் நாகரிகத்தினுடைய தொன்மை, பரப்பளவு, கனம் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இவளை உணர்ச்சிப் பூர்வமாக நான் அணுகி இந்தச் சோழதேசத்து வரலாற்றைச் சொல்லியிருக்கிறேன்.
காதுகள் உள்ளோர் கேட்கக்கடவர். இதற்கொரு காது வேண்டியிருக்கிறது. இதற்கொரு விதமான சிந்தனை வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு விதமான தாகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு தவிப்பு வேண்டியிருக்கிறது. இது எல்லோருக்கும் இருக்குமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. இருக்கின்ற சிலபேருக்கு எளிதாக்கி அரைத்துக் குடிப்பதற்கு கொடுக்க வேண்டுமல்லவா, அந்தச் செயலை நான் செய்திருக்கிறேன்.

தமிழ் நாகரிகத்தின் மேன்மையை ஒரு ஐரோப்பியர் பாழடைந்த கோயில்களுக்குள் ஏறி, உதவியாளர்களோடு கற்களின் மீது சுண்ணாம்புத் தடவி படித்து, படித்ததை எழுதி, மிகப் பெரிய குறிப்புகளாகச் செய்து வைத்திருக்கிறார் . திரு.ஹுல்ஷ் என்ற அந்த பிரிட்டானியப் பெருமகனுக்குத் தமிழ்தேசம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு திரு.நீலகண்ட சாஸ்திரியிலிருந்து இன்று மிகச்சிறப்பாக தனிமனிதனாக சரித்திர ஆராய்ச்சி செய்துவரும் டாக்டர் கலைகோவன் வரை, திரு. சதாசிவப் பண்டாரத்தாரிலிருந்து, அரசாங்க உத்தியோகஸ்தராக இருப்பினும் அதைத்தாண்டி சோழ தேசத்தின் மீது மாறாக காதல் கொண்ட டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் வரை பல்வேறு நண்பர்களுடைய கடும் உழைப்பை நான் உள்வாங்கி கொண்டு உங்களுக்கு புரியும் வண்ணம் தேன் குழைத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திரும்ப திரும்ப படித்த போது தேன் சுவை போதையில் நான் பல வருடங்கள் திளைத்திருந்தேன்.

கட்டுரைகள் கொடுத்த போதையோடு நான் நேரே சென்று இந்த பெரிய கோயில் என்கிற கவினுரு பொக்கிஷத்தைப் பார்க்கும் போது இன்னும் வசமிழந்தேன்.

ஒருமுறையா, இருமுறையா முப்பது வருடங்களுக்கு மேல் எத்தனையோ முறை இந்தக் கோயிலை விதம் விதமாக சுற்றிப்பார்த்திருக்கிறேன். கல்வெட்டுக்களைத் தடவித் தேம்பியிருக்கிறேன். உற்சாகத்தில் குதித்திருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களை அழைத்து வந்து பார், இதைப்பார், அதைப்பார், அங்கே பார், இங்கே பார் என்று கூவலாய் பேசியிருக்கிறேன். கையிலே ஒரு தடியை வைத்துக் கொண்டு அந்த கோபுர வாசலில் நின்றபடி
திருமகள்போல பெருநிலச் செல்வியும்
தமக்கே உரிமை பூண்டு மெனக்கொள
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி...
என்று கட்டியம்காரனாகக் கூவ ஆசைப்பட்டிருக்கிறேன்.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவிலுக்குப்போய் இருண்டு பாழடைந்து கிடந்த இடத்தை நீரும், துடைப்பமும் கேட்டு வாங்கி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றி, அவர் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து, அபிஷேகப்பொடி தூவி, கழுவி, பால் ஊற்றி சமனம் செய்து, விபூதி கொட்டி மணக்க வைத்து, நெய் விளக்குகள் ஏற்றி வைத்து, ஒரு வெண்கல விளக்கு ஒரு கண்ணாடி விளக்கு, பொருத்தி வைத்து ஐநூறு ரூபாய்ப் புடவை சார்த்தி, பூபோட்டு, தேவாரப்பதிகம், பாடியிருக்கிறேன்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே...
என்று கண்ணில் நீர் கசிய, இந்த இடம் நல்லபடி மிளிர வேண்டுமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.

கட்டிடக்கலைஞர் நண்பர் திரு. சுந்தர் பரத்வாஜரும், ஜோதிடர் K.P. வித்யாதரனோடும் ராஜராஜன் கால்பட்ட இடங்களெல்லாம் எவை என்று பல்வேறு முறைகள் பயணம் செய்திருக்கிறேன்.

உடையார்குடி என்ற காட்டுமன்னார் கோயிலிலும், குடந்தைக்கு அருகே இருக்கின்ற பழையாறை உடையாளூரிலும், சோழன்மேடு, சோழன் மாளிகை போன்ற இடங்களிலும் பகலும், இரவும் படுத்துக் கிடந்திருக்கிறேன். “பூச்சிப்புட்டு இருக்கும். இங்க என்னத்துக்கு கிடக்கறீங்கஎன்று கிராம மக்கள் விரட்டினாலும், உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஸ்பூரிக்க வேண்டுமென்று கிடந்திருக்கிறேன்.

பெருவுடையார் கோயில் உள்ளுக்குள் இருக்கின்ற ஓவியங்களையும், சிற்பங்களையும், நாற்பது ஐம்பது முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
காரில் பயணப்பட்டால் தூரம் தெரியவில்லை என்று ஸ்கூட்டர் கடன் வாங்கி குதிரையில் பயணப்படுவது போல் தஞ்சையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன். குடந்தை, தஞ்சை பெருஞ்சாலையை பல இடங்களில் நடந்தே கடந்திருக்கிறேன்.

மிக உக்கிரமான நிசும்பசூதனி சிலையையும், சில காளி கோவில் சிலைகளையும் அருகே நின்று தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறேன். அந்நேரங்களில் அந்தக் கோவில் சம்பந்தப்பட்டவர்களே கருவறைக்குள் அழைத்து நெருக்கமாய் நின்று தரிசனம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
பதினாறு வயதில் பெருவுடையார் கோவில் பார்க்கும் போதுஇது ஏதோ அற்புதம்என்ற எண்ணம் மனதில் பதிந்தது. திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. திரும்பத் திரும்பப் பார்த்தது கோயிலைப் பற்றிய விவரங்களை தெரிய வைத்தது. அப்படிப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகு உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் மீது ஈடுபாடு வந்தது. சோழ நாகரிகம் மொத்தமும் எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தனி மனிதனும், அவரைச் சுற்றியுள்ள நாகரிகமும், இந்தப் பெருவுடையார் கோவிலும் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாகி இதை எழுத வேண்டுமென்ற எண்ணம் முப்பத்திரண்டு வயதில் ஏற்பட்டது. முப்பத்தெட்டு வயதில் இதற்கான முயற்சிகளை நான் வேகமாகத் துவங்கினேன். இந்த அறுபது வயதில் எழுதி முடித்து விட்டேன்.

வாசகர்களுக்கு இவர்கள் உண்மையா, இது கற்பனையா என்று ஒரு புதினத்துக்குப் பிறகு கேள்விகள் வருவது இயற்கை. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது விழுக்காடு இதிலுள்ள பெயர்கள் உண்மையானவை. பல சம்பவங்கள் உண்மையானவைகள். கல்வெட்டு ஆதாரமுள்ள சம்பவங்கள். என்னுடைய கற்பனையும் இதில் கலந்திருக்கிறது.
பஞ்சவன் மாதேவி எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அவர் இறந்த விதம் என் கற்பனை. ஆனால் அவருக்காக பள்ளிப்படைக் கோயில் இராஜேந்திர சோழன் எழுப்பியது என்பது சரித்திரம்.

இராஜராஜ பாண்டிய ஆபத்துதவிகளான சேரதேசத்து நம்பூதிரிகள் தேடிக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது என் கற்பனை. ஆனால் மாதேவடிகள் ஸ்ரீ இராஜராஜ சோழர், மகள் என்பதும் அவர் நடுவிற் பெண்பிள்ளை என்பதும், அவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கக்கூடும் என்பதும் சரித்திரம்.

பாறைகள் வெட்டப்பட்ட இடம், கொண்டுவரப்பட்ட விதம் யூகம்தான். வேறு எப்படியும் இது இருந்திருக்காது என்பதுதான் அந்த யூகத்தின் அடிப்படை. சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி இத்தனை உயரம் கல் சுற்றியிருக்கிறார்கள் என்பது சிறிதளவுகூட நம்ப முடியாத ஒரு செய்தி. தஞ்சையில் வாழும் திரு. இராஜேந்திரர் என்ற பொறியல் வல்லுனரின் கூற்றுப்படி இது ஸ்பைரல் சாரமாக, வளைந்து வளைந்து போகும் பாதையாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பது ஒரு யூகம். அந்த மண் கொண்டுபோய் கொட்டப்பட்ட இடமும், ஒரு சிறு குன்றென அது நிற்கும் விதமும் இன்னமும் இருக்கின்றன.

அருண்மொழிபட்டனும், சீருடையாளும், சாவூர் பரஞ்சோதியும், வீணை ஆதிச்சனும், கோவிந்தனும் நிஜம். சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் பார்க்க விற்போர் நடந்தது நிஜம். கண்டன்காரியும், காரிக்குளிப்பாகையும் நிஜம். நித்த வினோதப் பெருந்தச்சன், குணவன் நிஜம். குஞ்சரமல்ல பெருஞ்தச்சர் நிஜம். ஆனால் உள் சாந்தாரத்திலுள்ள பரத நாட்டியச் சிற்பங்களுக்கு பஞ்சவன்மாதேவி தான் ஆதாரமாக இருந்தார் என்பது என் கற்பனை. நாவலுக்காகக் கொடுக்கப்பட்ட சுவை.
திருவாதிரை களியோடு தந்த கூட்டுக்கறியில் அவரை எத்தனை துவரை எத்தனை என்று எண்ணாது நன்கு ருசித்து உண்ணுங்கள். சோழதேசத்து மேன்மையும், தமிழர் நாகரிகமும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் உங்களுக்கு ஒரு கோடி காட்டுவதுதான் இந்தப் புதினத்தின் நோக்கம்.

இருநூற்று முப்பத்தேழு நாவல்கள் நான் எழுதியனுடைய அடிப்படைக் காரணமே இதை எழுதத்தான். மற்ற நாவல்கள் அத்தனையும் உடையார் எழுதுவதற்குண்டான பயிற்சி தான். ஏதேதோ செய்து, எங்கெங்கோ அலைந்து எதை எதையோ முக்கியம் என்று கருதி, சிதறி, சின்னாபின்னப்பட்டு பிறகு மறுபடியும் ஒன்று கூடி இப்படி ஆறு பாகத்திற்கு ஒரு புதினம் எழுத முடிந்திருக்கிறதென்றால் அது குருவருளன்றி வேறு என்ன.

என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் என்னை நேசித்தார். யூ ஆர் மை பென் என்று சொன்னார். மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்தப் பிச்சைக்காரன் (யோகி ராம்சுரத்குமார்) பாலகுமாரனோடு இருக்க விரும்புகின்றான் என்று சொன்னார். அவர் மகாஞானி. எல்லாம் கடந்தவர். அவருக்குப் பிறவி உண்டா. என்னுள் இருக்கிறார். என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த இயக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த உடையார். இந்த ஆறுபாகப் புதினம்.
சோழசாம்ராஜ்ஜியத்தின் மீது தன்பொன்னியின் செல்வன்மூலம் என்னைக் காதல் கொள்ள வைத்த பேராசிரியர் கல்கி அவர்களுக்கு என் வணக்கத்தையும், நன்றியையும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
நாவல் எழுத உதவி செய்த என்னுடைய இலக்கிய தொல்பொருள் ஆராய்ச்சி நண்பர்களுக்கும், சோழ தேசத்துக் காதலர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியம் படிக்க என்னை இடையறாது ஊக்கப்படுத்திபாலகுமாரன் நல்லவன். அவனால் பலருக்கு நல்லது நடக்கும்என்று வெகுநாட்களுக்கு முன்னே உறுதியளித்த, எனக்குத் தெம்பு கொடுத்த என் தாயார், தமிழ்ப் பண்டிதை தெய்வத் திரு. .சு.சுலோச்சனா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் தமிழ் அவர் போட்ட பிச்சை.

உடையார் எழுதி முடித்ததும் பொங்கிப் பொங்கி வந்த கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும், நேரே பார்க்கும் போது கட்டிக் கொண்டவர்களும்எப்படித் இந்த மாதிரி ஒரு நாவல் எழுதினேள்என்று கண்கலங்கியவர்களும், ‘இந்த தடவை ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போப்போறதில்லை. இந்த சம்மர்ல தஞ்சாவூர் முழுக்க இராஜராஜனை தேடிண்டு போகப் போறோம். போகும்படியா பண்ணிட்டீங்கஎன்று சொன்னவர்களும், இம்மாதிரி பாண்டியர்கள் பத்தி எழுதமுடியாதா என்று ஆதங்கப்பட்டவர்களுக்கும், சோழர்கள் காலத்துல தமிழ் எப்படியிருந்தது என்று கேள்வி கேட்டவர்களுக்கும், ஒரு பக்கம் லெட்டர் எழுதறதுக்கு முடியலை என்னால. இத்தனை பக்கம் எழுதியிருக்கீங்கன்னா நீங்க மனுஷனா, இல்ல வேற ஏதாவதா எனக்குத் தெரியலை என்று வியந்தவர்களுக்கும், என் படைப்புக்கு மறைமுகமாகத் துணைபுரிந்த என் துணைவியர் கமலா, சாந்தா இருவருக்கும், ‘சூப்பர் நாவல்பாஎன்று சொன்ன மகள் ஸ்ரீகெளரிக்கும், அப்பா ஒருநாள் உட்கார்ந்து முழுக்க படிக்கணும், படிப்பேன் என்று வாக்குறுதி அளித்த மகன் சூர்யா என்கிற வேங்கடரமணனுக்கும், ‘நாவல்ல இந்த இடம் தப்பு வந்துடுச்சு. மாத்தணும்என்று சுட்டிக்காட்டி மாற்றுவதற்கு வழியைச் சொல்லி உதவி செய்த சம்பத்லஷ்மிக்கும், ஒலி நாடாவில் கதை சொல்வதை அங்கிருந்து ஆர்வமாகக் கேட்டு உற்சாகப்படுத்திய பாக்யலஷ்மி சேகருக்கும், இந்திரா பாஸ்கருக்கும், தஞ்சாவூருக்குத் தானே போறீங்க. நாங்களும் வரோம் என்று உடன் வந்து என் பித்து பிடித்த நிலையை பார்த்து ரசித்த அந்தத் தோழிகளுக்கும், சென்னையிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும், சேவர்களுக்கும், என் நண்பர் திரு. ராஜவேலுவுக்கும், அவர் அதிகாரி திரு.சத்யமூர்த்திக்கும், பல நேரங்களில் இந்த ஆறு பாகத்திலும் எனக்குப் பிழைதிருத்தம் செய்தும், தேவையான குறிப்புகளை எடுத்து வைத்தும், என்னோடு விவாதித்தும் என்னைச் சரியான கோணங்களில் பார்க்க வைத்ததுமான என் உடன்பிறந்த சகோதரி, சரித்திர ஆசிரியை சிந்தா ரவி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுகிறது.
ஆறு பாக நாவல் கண்டு அசராது, ‘சீக்கிரம் எழுதுங்கைய்யாஎன்று ஊக்கப்படுத்திய விசா பப்ளிகேஷன் ஸ்ரீ திருப்பதி அவர்களுக்கும், இந்த நாவல் தொடர்ந்து வெளிவர தன் பல்சுவை நாவல் மாதபத்திரிகையின் இடம் கொடுத்து பெருமிதப்பட்ட திரு. பொன்சந்திரசேகர் அவர்கட்கும், ‘இந்த நாவல் நிற்கக்கூடாது, முடிக்கப்பட வேண்டும் என்ன உதவி தேவையெனினும் நான் செய்கிறேன்என்று உற்சாகம் தந்த என் அருமை நண்பர் ஸ்ரீ எம்.ரவிச்சந்திரன், கோவை அவர்கட்கும், சிறப்பாக அட்டைப்பட வரைந்த ஓவியர் ஷ்யாம் அவர்கட்கும், என் கண்பார்வையில் ஒரு கோளாறு ஏற்பட, இனி எப்படிப்படிப்பேன், எவ்விதம் எழுதுவேன் என்று பயந்தபோது அக்குறையை நீக்கி அருளிய எங்கள் மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக் கண்ணி பெருமாட்டிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

என் எழுத்து வேகத்திற்கு ஈடுகொடுத்து கேட்ட போதெல்லாம், சரித்திர[ புத்தகங்களை என் முன் பரப்பி இந்நாவலை ஒலி நாடாவிலிருந்து காகிதத்திற்கு மாற்றிய என் உதவியாளர் திரு. கிருஷ்ணமூர்த்திக்கு என் ஆசிகள்.

எந்த வியக்தியும் தனி மனிதனால் நடந்து விடுவதில்லை. ஒரு புல்கூட கூட்டு முயற்சியால் தான் முளைக்கிறது, மலர்கிறது. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை கணித மேன்மையை, செல்வச் செழிப்பை வெளிக்கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன்.

வாழ்க இராஜராஜத்தேவர்
வளர்க தமிழ் மொழி
சோழம் சோழம் சோழம்

என்றென்றும் அன்புடன்
பாலகுமாரன்

கருத்துகள் இல்லை: