28/10/2012

கூந்தல் களைதலா? கூட்டி முடித்தலா? - முனைவர் ம.பெ.சீனிவாசன்


பாரதப் போர் நிகழாவண்ணம் தடுப்பதற்கு' என்ன உபாயம்? எனக் கண்ணபிரான் சகதேவனிடம் கேட்க, அதற்கு அவன், "" உன் திருவுளத்துக் கருத்து எதுவோ, அதுவே என் கருத்துமாகும். பாரதப் போரை நடத்திப் பூபாரத்தைத் தீர்க்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு வந்தவன் நீ. அதை நடத்தும் நீயே அல்லாமல் தடுத்து நிறுத்த வல்லவர் எவரும் இல்லையே'' என்கிறான்.

கண்ணபிரான் அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச்சென்று வலியுறுத்திக் கேட்கவே, பாரதப் போர் பயிலா வண்ணம் மூன்று யோசனைகளை முன் வைத்தான் சகதேவன். அவை:

 * கன்னன் பாராள்வதற்கு ஏதுவாக அவனுடன் மாறுபட்டு நிற்கும் அருச்சுனனை முதலில் கொல்ல வேண்டும்.

 * அடுத்து, திரௌபதியின் கருநிறமுள்ள கூந்தலைக் களைய (அரிந்து நீக்குதல்) வேண்டும்.

 * உனக்குக் கால் விலங்கு பூட்டி, உன் கைகளையும் பற்றி, உன்னையும் கட்டிவைக்க வேண்டும்.

 இம்மூன்றும் நடந்தால் பாரதப்போர் நடக்காமல் தடுக்கலாம் என்றான் சகதேவன்.

 ""பாராளக் கன்னன் இகல் பார்த்தனை
 முன் கொன்று, அணங்கின்
 காரார் குழல் களைந்து''

என்னும் அடிகளில் திரௌபதியின் "குழல் களைந்து' என்று வருவதன் பொருளில் ஒரு மருட்சி காணப்படுகிறது.

குழல் களைதல் என்பதற்குக் "குழலை நீக்குதல்' என்றே இதுகாறும் பொருள் கூறப்பட்டு வந்திருக்கிறது. வில்லிபாரத உரையாசிரியர் மூதறிஞர் வை.மு.கோ.வும் இவ்வாறே பொருள் கூறியுள்ளார்.

"முடியை நீக்குதல்' அதாவது, தலையை மொட்டையடித்தல் என்பது ஒருவரை இழிவுபடுத்தும் அடையாளமாகும். பாஞ்சால நாட்டு அரசன் மகள் திரெபதியின் சபதம் இங்ஙனம் இழிவுபடுத்துவதற்கு உரியதா என்ன? கண்ணபிரானால் மதிக்கப்பட்ட மதிநுட்பமிக்க சகதேவன் அந்தப் பொருளில் சொல்லியிருப்பானா?

"களைதல்' என்பதை "விரித்த கூந்தலை முடித்தல்' என்னும் பொருளிலேயே அவன் கூறியிருக்க வேண்டும். "உன் கூந்தலை நானே முடிக்கின்றேன்' என்று கண்ணபிரான் சொன்னதையும் இங்கு நினைவுகூரவேண்டும். ஒரு நோக்கத்திற்காகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவனை வலிந்தேனும் உணவுண்ணச் செய்து உயிர்காப்பது உலக வழக்கம். அதைப்போலவே, அவள் விரித்த கூந்தலை "முடித்து வைப்பது'தானே முறை?

இவ்வகைச் சிந்தனை உரையாசிரியர் வை.மு.கோ.வுக்கும் இருந்திருக்கிறது. அவர், "களைதல்' என்பதற்கு "முடியை நீக்குதல்' என்று உரை கூறியிருப்பினும் (கிருஷ்ணன் தூது, பா.35), அவ்வுரை நூலின் அரும்பத அகராதியில், "குழல் களைதல் - கூந்தலைக் கூட்டி முடித்தல் எனினுமாம்' என்று எழுதியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கருதுதற்கு ஆதரவாகத் தமிழ் நூல்களில் ஏதேனும் சான்று உண்டோ? என்ற கேள்விக்கு டாக்டர் உ.வே.சா.விடம் விடை கிடைக்கிறது.

ஐயனாரிதனார் எழுதிய "புறப்பொருள் வெண்பா மாலை'யில் ஒரு பாடல், இந்திரனை வென்ற முருகப்பெருமானின் செயலைப் பின்வருமாறு பேசுகிறது.

 ""பூந்தா மரையிற் பொடித்துப் புகழ்விசும்பின்
 வேந்தனை வென்றான் விறன்முருகன் - வந்து
 நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக்
 குடுமி களைந்தான் எங் கோ'' (209)

பாடாண் திணையுள் "குடுமி களைந்த புகழ் சாற்றுநிலை' என்னும் துறையுள் இடம்பெறும் பாடல் இது. இந்திரனை வென்ற பிறகு, குமரவேள் அவிழ்ந்த மயிர்முடியைக் கூட்டி முடித்த செயல் இதில் கூறப்பட்டுள்ளது.

"குடுமி களைந்தான் எம் கோ'' என்பதற்கு "மயிர்ச் சிகையைக் கூட்டி முடித்தான்'' என்று உ.வே.சாமிநாதையர் எழுதிய உரைக் குறிப்பாலும் இதை உணரலாம்.

இவ்வாறு, தமிழ் நூல்களில் நுட்பமாக நோக்கிப் பயிலத்தக்க இடங்கள் பல உண்டு.
அவை பயில்தொறும் கற்போர்க்குப் பேரின்பம் பயப்பனவாம்!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: