28/10/2012

நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்!


சங்க காலத்தில் புலவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான தொடர்பு வெறும் புலவனுக்கும் அரசனுக்கும் உள்ள தொடர்பாக மட்டும் அமைந்திருக்கவில்லை. புலவர்கள், அரசர்களின் உயிருக்குயிரான நண்பர்களாகவும் அரசியல் ஆலோசகர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

மக்களிடமிருந்து திரைப்பொருளை நல்வழியில் பெறச் செய்வது, அதன் மூலம் நாட்டில் நல்லாட்சி நிலவச் செய்வது, அரசன் செங்கோன்மையிலிருந்து பிறழுங்காலத்து இடித்து அறிவுரை கூறுவது, பழி பாவங்கள் ஏற்பட்டால் அரசனைக் காப்பது முதலிய  அருஞ்செயல்களிலும் புலவர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய புலவர்கள், அரசர்கள் வீரம் முதலிய பண்புகளில் சிறந்து விளங்கிய காலத்து அவர்களைப் புகழ்ந்துரைக்கவும் தவறியதில்லை. அங்ஙனம் வெளிப்படையாகப் புகழ்வதோடு, குறிப்பாகப் புலப்படுமாறு புகழாப் புகழ்ச்சியாகவும் அமைத்துப் பாடத் தவறியதுமில்லை.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் ஒருவர், ஏனாதி திருக்கிள்ளி என்னும் மன்னனைப் புகழ்ந்துள்ளமையைக் காணலாம். ஏனாதி திருக்கிள்ளி, போரைக் கண்டுவிட்டால் உடன் அப்போரை வென்று, பகைவர் படையை விலக்கி எதிர்த்து நிற்பவனாதலால், அவனது உடல் முழுவதும் வாளால் ஏற்பட்ட விழுப்புண்கள் நிறைந்துள்ளன. எனவே, அவனது உடலோ காண்பதற்கு இனியதல்ல. அவனது பகைவர்கள் அவனைக் கண்ட அளவிலேயே புறங்காட்டி ஓடிவிடுகின்றனர். அதலால், அவர்கள் ஊறு அறியாத அழகிய யாக்கையோடு காட்சிக்கு இனியராக (அழகானவராக) உள்ளனர். புறங்கொடுத்த கீழ்மையால் அவர்கள் கேள்விக்கு இனியரல்லர். புலவர் இவ்வாறு உரைத்துவிட்டு அடுத்ததாக ஏனாதி திருக்கிள்ளியிடம் தம் ஐயத்தை எழுப்புகிறார்.

நீயும் ஒன்றில் இனியவன்; நின் பகைவரும் ஒன்றில் இனியவர்; அவரோடு ஒவ்வாதன வேறு எவை உள்ளன. ஆனால், உன்னை மட்டும் இவ்வுலகம் வியந்து போற்றுகிறதே; அதன் காரணம் யாதென்று எமக்கு உரைப்பாயாக என்று நயம்பட வினவுவதாக அப்பாடலை, வாகைத் திணையில், அரசவாகைத் துறையில் அமைத்துள்ளார்.

""நீயே, அமர்காணின் அமர் கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்றினியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்கும் இவ்வுலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே''
(புறம்-167)

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: