01/08/2012

"கள்' மயக்கம் தெளியுமா? - ப.குருநாதன்

நல்ல செய்திகளைவிட, கெட்ட செய்திகள் அதிவேகமாகப் பரவுகிறது. "வாழ்த்துக்கள்' என்பதை "வாழ்த்துகள்' என்று எழுதி, ஓரெழுத்தைக் கொலை செய்வது அதி வேகமாகப் பரவி வருகிறது. அது இலக்கணத்தை மீறிய செயலாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

வாழ்த்துக்கள் - இது கள்ளைக் குறிக்கிறது என்கிறார்கள். ஆம். இது கள்ளையும் குறிக்கிறது; ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்த்துக்கள் என்ற பன்மையையும் குறிக்கிறது. வாழ்த்துக்கள் - என்றொரு கள் இருக்கிறதா? இல்லையே. அதனால், இல்லாத கள்ளை விட்டுவிட்டு இருக்கிற பன்மையை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆண்கள், பெண்கள் என்று எழுதுகிறோம். அதற்காகக் கள்ளிலே இரண்டு வகை உண்டு; ஒன்று ஆண்; மற்றொன்று பெண் என்று சொல்லலாமா?

உண்மையில் பூக்கள், பழங்கள் என்பவை கள்ளையும் குறிக்கின்றன; பன்மையையும் குறிக்கின்றன. இடத்திற்கேற்ப பொருள் கொள்ளவில்லையா? அதைப்போல, "வாழ்த்துக்கள்' என்பதையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? வன்றொடர்க் குற்றுகரப் புணர்ச்சியில் மட்டும் கள் மயக்கம் ஏன்? எழுத்துக்கள் எனும் சொல் இலக்கண விதிகளிலேயே இடம்பெற்றுள்ளது. எழுத்துகள் என்றொரு வகையான கள் இல்லவே இல்லை.

தமிழில் பல பொருள் ஒரு சொல்லுக்கு உண்டு. இதற்குப் பஞ்சமே இல்லை. இடத்திற்கேற்பப் பொருள்கொள்ள வேண்டியதுதான்.
 ""நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' - இதில் எங்கே இருக்கிறது மதுவாகிய கள்? ""நல்வாழ்த்துக்கள்ளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' என்றால்தான் தவறு. ஏனென்றால், "நல்வாழ்த்துக்கள்' என்றொரு வகையான கள் கிடையாது.

உண்மையில், வாழ்த்துகள் என்பதுதான் கள்ளைக் குறிக்கிறது. ஆம். வாழ்த்திய கள், வாழ்த்துகின்ற கள், வாழ்த்தப் போகும் கள் - என வாழ்த்துகள் என்பது கள்ளை மட்டுமே குறிக்கிறது. இதில் பன்மை இல்லை.

"வாழ்த்துக்கள்' என்பதில் இரு பொருளிருந்தாலும், வாழ்த்துக்கள் என்றொரு கள் இல்லாததால், பல வாழ்த்துக்கள் என்ற பொருளையே தரும். இதைப் போன்றே எல்லா குற்றுகரச் சொற்களுக்கும் பொருந்தும்.

இன்னும் சிலர், "ஆள்கள்', "நாள்கள்' என்று எழுதுகிறார்கள். அதே கள் மயக்கம் இங்கும் வருகிறது. ஆட்கள் - என்றொரு வகையான கள் இல்லவே இல்லை. எனவே, ஆட்கள் என்பது பல ஆட்கள் என்ற பன்மையை மட்டுமே குறிக்கும். மாறாக, ஆள்கள் என்பதுதான் ஆண்ட கள், ஆளுகின்ற கள், ஆளப்போகும் கள் - எனக் கள்ளை மட்டுமே குறிக்கும். எனவே, ஆட்களைக் குறிப்பதற்கு "ஆள்கள்' என்பது தவறாகும். கள் ஆட்சி செய்யுமிடத்தில் வேண்டுமானால், ஆள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

நாட்கள் என்பது கள்ளையும் குறிக்கிறது; பன்மையையும் குறிக்கிறது. இடத்திற்கேற்பப் பொருள் கொள்ளலே நன்று. "நான்கு நாட்களாகப் படித்தேன்' - இது பன்மையைக் காட்டும். நான்கு நாட்கள்ளைக் குடித்தேன் - இது மதுவைக் குறிக்கும்.

"கண்' எனப்படும் வேற்றுமை உருபுக்கும், "கண்' எனப்படும் உடல் உறுப்புக்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியும்பொழுது, "கள்' எனப்படும் பன்மை விகுதிக்கும், "கள்' எனப்படும் மதுவுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது விந்தையிலும் விந்தை!

நன்றி - தமிழ்மணி

2 கருத்துகள்:

பாலராஜன்கீதா சொன்னது…

தொகுப்புக்கள் தொகுப்புகள் எது சரி ?

Singamani சொன்னது…

தொகுப்புகள் என்பதே சரி