விசித்ரி என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா
என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின் மதியப்பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறார்கள்
எனவும் சொன்னார்கள். அந்த மதியப் பொழுதில் என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் இந்நாள்
வரை அறிந்திருக்கவில்லை. அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில்கூட காற்றில்லை.
வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக்கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில்.
வீட்டுக் கூரைகள், அலுமினியப் பாத்திரங்கள் வெயிலேறிக் கத்திக் கொண்டிருந்தன. தெருவில்
நடமாட்டமேயில்லை.
சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஓடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும்
புழுதியும் படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில் இருந்தபடியே திருகை
அரைத்துக் கொண்டிருந்த வள்ளியம்மை கண்டதாகச் சொல்கிறார்கள். வள்ளியம்மை இறந்து போகும்வரை
இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தியபடியே இருந்தாள்.
அப்படி நினைவுபடுத்தும்போது நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து
கொண்டே வந்து முடிவில் சித்ரலேகாவை யாரோ துரத்திக் கொண்டு வந்ததையும் உடல் முழுவதும்
காயங்களுடன் அவள் அலறியபடியே ஓடி வந்ததையும் அவள் பின்னால் கறுத்த நாய் ஒன்று ஊளையிட்டபடியே
வந்ததாகவும் சேர்ந்து கொண்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சித்ரலேகா இன்று
வரை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி எட்டைக் கடந்திருக்கிறது.
ஓடிவந்த நாளில் இருந்து அவள் யாரோடும் பேசுவதும் பழகுவதும் குறைந்து
போனது. அத்தோடு அன்றிலிருந்துதான் அவளது விநோதப் பழக்கம் துவங்கியது. அவளிடமிருந்த
அத்தனை பாவாடை சட்டைகளையும் அவள் ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
ஏதோ பயத்தில் அப்படிச் செய்கிறாள் என்று அவளை அப்படியே உறங்க விட்டுவிட்டார்கள்.
ஆனால் மறுநாள் காலையில் அவள் அம்மாவின் பழம்புடவைகள், மற்றும் சகோதரிகளின்
உடைகள் அத்தனையும் சேர்த்து அணிந்து கொள்ளத் துவங்கிய போது அவள் முகத்துக்கு நேராகவே
சகோதரிகள் திட்டினார்கள். சித்ரலேகா அதைக் கண்டு கொள்ளவேயில்லை. அவள் தன் உடலை எப்படியாவது
மறைத்துக் கொண்டுவிடவேண்டும் என்று தீவிர முனைப்பு கொண்டவள் போல ஒரு உடைக்கு மேலாக
மற்றொரு உடையைப் போட்டு இறுக்கிக் கொண்டிருந்தாள். இதனால் அவள் ஒரு துணிப் பொம்மை போன்ற
தோற்றத்திற்கு வந்தபோதும்கூட அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
அத்தனை உடைகளுடன் அவள் உறங்கவும் நடமாடவும் பழகியிருந்தாள். குளிக்கும்
நேரத்தில் கூட அவள் இந்த உடைகளில் ஒன்றையும் கழட்டுவதில்லை. ஈர உடைகளுடன் இருந்தால்
உடம்பு நோவு கண்டுவிடும் என்று சகோதரிகள் திட்டி அவள் உடைகளை அவிழ்க்க முயன்ற போது
ஆத்திரமாகி இளைய சகோதரி கைகளில் கடித்து வைத்தாள்
சித்ரலேகா.
வலி தாங்கமுடியாமல் அவள் அழுதபடியே அம்மாவிடம் சொன்ன போது அம்மாவும்
சகோதரிகளும் சேர்ந்து அவளது ஈர உடைகளை அவிழ்க்க முயன்றார்கள். அவள் கூக் குரலிட்டு
அழுததோடு அத்தனை பேரையும் அடித்து உதைக்கத் துவங்கினாள். அப்படியே இருந்து சாகட்டும்
சனியன் என்று அம்மா திட்டியபடியே அவளை தனித்து விட்டுச் சென்றாள். ஈர உடைகள் அவளுக்குப்
பழகிவிட்டன.
ஆனால் அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து தன் உடைகளை அவிழ்த்துவிடுவார்களோ
என்று பயந்த அவள் சணல் கயிற்றாலும் ஊக்காலும் ஆடைகளை அவிழ்க்க முடியாதபடி பிணைத்துக்
கொண்டு உடலோடு கட்டிக் கொள்ளத் துவங்கினாள். அதன்பிறகு உடைகளை யாரும் தொடுவதைக்கூட
அவள் அனுமதிக்கவில்லை.
அதுவே கேலிப்பொருளாகி அவர்கள் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அவள் உடைகளை
அவிழ்க்கப்போவதாக பொய்யாக பாவனை செய்த போது சித்ரலேகாவிடமிருந்து அலறல் குரல் பீறிடும்.
சித்ரலேகாவை சமாதானம் செய்வது எளிதானதில்லை. அவள் வீட்டிலிருந்து ஓடி, தெருவில் வந்து
உட்கார்ந்து கொள்வாள். சிலநேரம் இரவில் தெருவிலே உறங்கிவிடுவதும் உண்டு. அப்போதும்
அவள் கைகள் உடைகளை இறுகப்பற்றிக் கொண்டேயிருக்கும்.
சித்ரலேகாவின் உடைப் பழக்கம்தான் அவளுக்கு விசித்ரி என்ற பெயரை உண்டாக்கியிருக்க
வேண்டும். அதன் பின்வந்த நாட்களில் எங்கே எந்தத் துணி கிடைத்தாலும் அதை எடுத்து உடுத்திக்
கொள்ளத் துவங்கினாள். இதனால் அவள் தோற்றம் அச்சமூட்டுவதாக மாறத்துவங்கியிருந்தது. இருபது
முப்பது பாவடைகள். அதன் மீது பத்து சேலைகள், அதன் மீது பழைய தாவணி அதன் மீது கிழிந்த
துண்டு என்று அவள் உடலைப் போர்த்தியிருந்த ஆடைகளைக் கண்டு பெண்களே எரிச்சல் கொண்டனர்.
ஒருவகையில் அவள் ஊரிலிருந்த மற்றப் பெண்களுக்கு தங்கள் உடல் குறித்த
கவனத்தைத் தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும்
தன் உடலை ஒருமுறை கவனம் கொள்வதும் உடைகளை கவனமாக இழுத்துவிட்டுக் கொள்வதும் நடந்தேறியது.
விசித்ரியின் இந்தப் பழக்கம் அறிந்தவர்கள் அவள் எவர் வீட்டிலிருந்து
எந்த உடையை எடுத்துக் கொண்டுபோன போதும் அவளிடம் கோவம் கொள்வதேயில்லை. விசித்ரியின்
ஆவேசம் பல வருசமாகியும் தணியவேயில்லை. கோடையின் முற்றிய பகலில் அவள் வீட்டைவிட்டு வெளியே
வருவதேயில்லை. நத்தைகள் சுவரில் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போன்று வீட்டுச் சுவரில் சாய்ந்து
ஒடுங்கிக் கொண்டிருப்பாள். சித்ரலேகாவின் மற்ற சகோதரிகள் திருமணமாகிப் போனபோதும்கூட அவள் வீட்டின் உள்ளேயே
அடைபட்டுக்கிடந்தாள்.
சில வேளைகளில் அவள்மீது ஆதங்கம் கொண்ட அம்மா அருகில் சென்று உட்கார்ந்து
சிறுமிகளை விசாரிப்பது போல தலையைத் தடவி விட்டுக் கொண்டு அன்னைக்கு என்னடி நடந்துச்சி
என்று கேட்பாள். விசித்ரியிடமிருந்து பதில் வராது. அவள் கண்களை மூடிக் கொண்டு விடுவாள்.
அல்லது நகத்தைக் கடிக்கத்துவங்கி ரத்தம் வரும்வரை கடித்துக் கொண்டேயிருப்பாள். அம்மாவிற்கு
அவளை தான் சித்திரவதை செய்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி வந்துவிடும். அப்படியே விலகிப்
போய் விடுவாள்.
விசித்ரியை என்ன செய்வது என்று அவர்கள் குடும்பத்திற்கு இந்த நாள்வரை
தெரியவேயில்லை. வீட்டுப் பெண்கள் திருமணமாகிச்
சென்று பிள்ளைகள் பெற்று அந்தப் பிள்ளைகளும்கூட இன்று திருமண வயதை அடைந்துவிட்டார்கள்.ஆனால்
விசித்ரியின் மனதில் நேற்று மதியம் நடந்தது போலவே அந்தச் சம்பவம் அப்படியே உறைந்து
போயிருந்தது.யார் அவள் மனதில் உள்ள அந்தச் சித்திரத்தை அழிப்பது. எந்தக் காட்சி அவள்
மனதில் அப்படியொரு கறையை உருவாக்கியது என்று உலகம் அறிந்து கொள்ள முடியவேயில்லை.
என்ன நடந்திருக்கக் கூடும் என்பது குறித்து சில சாத்தியங்களை விசித்ரியின்
அம்மா அறிந்திருந்தாள். அதில் அவள் நம்பிய ஒன்று. புளியந் தோப்பில் மதிய நேரங்களில்
யாரும் இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் சீட்டாடும் நபர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள்.
அதுவும் சந்தை நடக்கும் நாட்களில்தான் அதிகம் மனிதர்களைக் காண முடியும். மற்ற நாட்களில்
புளியந்தோப்பினுள் நடமாட்டமேயிருக்காது.
அங்கே ஒரு மனிதன் எப்போதுமே உதிர்ந்த புளியம்பழங்களைப் பொறுக்குவதற்காக
அலைந்துகொண்டிருப்பான். அவனுக்கு வயது முப்பது கடந்திருக்கும். சீனிக்கிழங்கு போல வளைந்து
பருத்த முகம். குள்ளமாக இருப்பான். எப்போதுமே அழுக்கடைந்து போன வேஷ்டியொன்றைக் கட்டியிருப்பான்.
மேல் சட்டை அணிந்திருப்பது கிடையாது. அவன் மார்பில் இருந்த நரைத்த ரோமங்கள் காய்ந்த
கோரைகளை நினைவுபடுத்தியபடி இருந்தன. அவன் புளியந் தோப்பினுள் உள்ள கிணற்றடியில் படுத்துக்கிடப்பான்.
அல்லது புளியம் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருப்பான்.
அவனுக்கு என்று குடும்பமோ, மனைவியோ இல்லை. அருகாமையில் உள்ள ஊரைச் சேர்ந்தவன்
என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். அவன் புளியந்தோப்பில் பெண்கள் யாராவது தனியே
நடந்து செல்வது தெரிந்தால் நாய் பின்தொடர்வது போல பின்னாடியே வருவான். சில நேரங்களில்
நாயைப் போலவே புட்டத்தை ஆட்டிக் காட்டுவான். பெண்களில் எவராவது, அப்படிச் செய்வதைக்
கண்டு சிரித்துவிட்டால் உடனே தன் வேஷ்டியை விலக்கி ஆண்குறியைக் கையில் எடுத்துக்காட்டுவான்.
அதைக் கண்டு பெண்கள் பயந்து ஓடிவிடுவார்கள். அது அவனை மிகுந்த சிரிப்பிற்கு உள்ளாக்கும்.
அப்படியொருமுறை சித்ரலேகாவின் அம்மாவின் முன்னால் அவன் தன் ஆண்குறியைக் காட்டியிருக்கிறான்.
அவள் தன் இடுப்பில் சொருகி வைக்கப்பட்டிருந்த கதிர் அரிவாளால் அவனைக் கொத்தப்போவதாகச்
சொன்னாள். அவனோ இடுப்பை ஆட்டியபடியே தன் வேஷ்டியை உரித்து எறிந்து விட்டு அவள் முன்னால்
ஆடினான். அவள் புளியந்தோப்பை விட்டு ஓடி வரும்வரை அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். வீட்டிற்கு
வந்த போதும் அந்தக் காட்சி மனதிலிருந்து விலகிப் போகவேயில்லை. அன்று இரவெல்லாம் நரகலை
மிதித்துவிட்டது போன்ற அசூயையை அவளுக்குத் தந்தபடியே இருந்தது.
அவன் சிறுமிகளிடமும் இப்படி நடந்துகொள்வான் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாள்.
ஒருவேளை அவன் தன்மகளிடம் ஆண்குறி காட்டி பயமுறுத்தியிருக்கக் கூடும். அவள் ஆத்திரமாகி
கல்லால் அடித்து விடவே அவள் பாவாடையை உரித்து எறிந்துவிட்டு அவளை வன்புணர்ச்சி கொள்ள
முயன்றிருக்கக் கூடும் என்று தோன்றியது. அதைப்பற்றி எப்படி சித்ரலேகாவிடம் கேட்பது
என்று அம்மாவிற்குப் புரியவில்லை.
இதற்காக ஒரேயொருமுறை சித்ரலேகாவை அழைத்துக் கொண்டு புளியந்தோப்பின்
உள்ளே நடந்து சென்றாள். அப்போதும் அந்த மனிதன் புளியங்காய்களைப் பொறுக்கிக் கொண்டு
அலைந்தான். அவர்களைப் பார்த்தவுடன் உடலைக் குறுக்கியபடி கும்பிடுறேன் தாயி என்று சொன்னான்.
அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். விசித்ரி அவனை நேர்கொண்டு
பார்த்த போதும் அவள் முகத்தில் மாற்றமேயில்லை. அம்மா அவனை நோக்கிக்காறித் துப்பிவிட்டு
பெண்ணைக் கூட்டிக் கொண்டு நடந்து போகத் துவங்கினாள்.
அவர்கள் தொலைதூரம் போன பிறகு அம்மா திரும்பிப் பார்த்தாள். அவன் வேஷ்டியை
அவிழ்த்து கையில் பிடித்தபடியே நிர்வாணமான உடலை அவர்களைப் பார்த்து ஆட்டிக் கொண்டிருந்தான்.
அம்மா கீழே குனிந்து மண்ணை வாரித் தூற்றினாள். அந்த மனிதன் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
ஒருவேளை அவனாக இல்லாமலும் இருக்கக்கூடும் என்று சித்ரலேகாவின் அம்மாவிற்கு
ஏனோ தோன்றியது.
விசித்ரி ஒரு இரவில் தன் உடலோடு
சேர்த்து துணியை ஊசி நூலால் தைத்துக்கொள்ள முயற்சித்தாள். அதனால் ரத்தம் கசிந்து ஓடத்
துவங்கியது. ஆனால் அவள் கத்தவேயில்லை. தற்செயலாக அவளைப் பார்த்த இளையவள் பயந்து கத்திய
படியே அய்யாவை அழைத்து வந்த போது அவர் செவுளோடு அவளை அறைந்து கையிலிருந்த ஊசியைப் பிடுங்கினார்.
அவளோ வெறிநாய் போல ஊளையிட்டபடியே ஊசியை அவரிடமிருந்து மீட்கப் பார்த்தாள். அய்யாவும்
ஆத்திரமாகி அவளைக் காலால் மாறிமாறி மிதித்தார். அவளது கையை முறுக்கிக் கொண்டு அடித்தார்.
அதில் அவளது வலதுகை பிசகியிருக்கக் கூடும். நாளைந்து நாட்களுக்கு வீக்கமாக இருந்தது.
யாரும் அதைத் தொட அவள் அனுமதிக்கவில்லை. படுத்தே கிடந்தாள்.
அப்போது அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த கொண்டிச்சி
சொன்னாள். ஊரில் புதிதாக வந்திருக்கும் தபால்காரனுக்கு பெண்மோகம் அதிகம் என்றும் கடிதம்
கொடுப்பது போல அவன் பெண்களின் மார்பைப் பிடித்துவிடுகிறான் என்றும் ஒருமுறை அவள் தனியே
இருந்தபோது அவளிடம், தன்னோடு படுக்கமுடியுமா என வாய்விட்டு கேட்டுவிட்டதாகவும் செங்கல்
சூளையில் வேலை செய்யும் செவஸ்தியாளை அவன் கீரைப்பாத்திகளில் தள்ளி உறவு கொண்டு விட்டான்
என்றும் சொன்னாள். அதை அம்மாவால் நம்பமுடியவில்லை. அவள் தபால்காரனைக் கண்டிருக்கிறாள். அவனுக்கு ஐம்பது
வயதை நெருங்கியிருக்கும். மனைவியும் இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள்.
அவர்களில் சிலர் சைக்கிளில் பள்ளிக்குப் போய்வருவதை அவளே கண்டிருக்கிறாள்.
எதற்காக அந்த மனிதன் பெண்களுக்கு அலைய வேண்டும் என்று கொண்டிச்சியிடம்
கேட்ட போது அவன் ஆசை அடங்காதவன். சொன்னால் நம்பமாட்டீர்கள், அவன் மனைவியே இதை எல்லாம்
தன்னிடம் சொல்லிப் புலம்பினாள் என்றும் அவன்
ஒருவனே பின்மதிய நேரங்களில் தனியே அலைந்து கொண்டிருப்பவன் என்றும் சொன்னாள்.
ஒருவேளை அதுவும் உண்மையாக இருக்கக் கூடும். சித்ரலேகாவின் அம்மா வயல்வேலை
செய்து கொண்டிருந்த பகல்பொழுதில் அந்த மனிதன் புழுதி பறந்த சாலையில் தனியே போய்க் கொண்டிருப்பதைக்
கண்டிருக்கிறாள். அதுபோலவே ஒருநாள் அவள் மூத்திரச் சந்து ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது
அந்த மனிதன் அதற்குள் தனியே நின்று கொண்டிருந்தான். அங்கே என்ன செய்கிறான் என்று புரியாமல்
அவள் அவசரமாகக் கடந்து போனாள். ஒருவேளை அவன் சித்ரலேகாவை ஏமாற்றி இது போன்ற மூத்திரச்சந்திற்கு
அழைத்துப் போய் புணர்ச்சிக்கு மேற்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இந்த சந்தேகம் ஒன்றால்
மட்டும் எப்படி அந்த மனிதனிடம் போய்க் கேட்க முடியும்.
சித்ரலேகாவின் அண்ணன் ஊரில் இருந்த ஜவுளிசெட்டி ஒருவன் மீது தனக்கு
அதிக சந்தேகம் இருப்பதாகச் சொன்னான். அந்த ஜவுளி செட்டியின் வீடு மிகப்பெரியது. அதில்
அவர்கள் அண்ணன் தம்பி இரண்டு பேர் மட்டுமே வசித்தார்கள். இருவரும் ரங்கூனிலிருந்து
திரும்பியவர்கள். அவர்களது மனைவியும் குழந்தையும் பர்மாவில் விட்டுவந்து விட்டதாக சொல்லிக்
கொள்வார்கள். அவர்களே அடிக்கடி பர்மாவிற்குப் போய்வருவதாகக் கிளம்பி சில மாதங்கள் ஆள்
இருக்க மாட்டார்கள்.
அவர்கள் வீட்டின் எதிரில் இருந்த பெண்கள் அத்தனை பேருக்கும் ஜவுளி செட்டிக்கும்
தொடர்பு இருக்கிறது, அந்தப் பெண்களில் பலரும் புதிது புதிதாக ரங்கூன் சேலைகள் கட்டிக்
கொள்வது இதனால்தான் என்றும் அந்தச் செட்டிகள் அடிக்கடி மதுரைக்குச் சென்றுவருவது வேசைகளுடன்
படுத்து உறங்கிக் கழிப்பதற்காக மட்டுமே என்று சொன்னான் சித்ரலேகாவின் அண்ணன்.
ஒருவேளை அப்படி செட்டிகளில் ஒருவன் நீலமும் மஞ்சளும் கலந்த பட்டுத்
துணி ஒன்றைத் தருவதாகச் சொல்லி சித்ரலேகாவை வீட்டில் தனித்து அழைத்து கட்டித் தழுவியிருக்கக்
கூடும். அவள் உடைகளை உருவி எடுத்திருக்க வேண்டும். அதில் பயந்து போய்தான் சித்ரலேகா
ஓடிவந்திருப்பாள். அவள் ஓடிவந்த திசையில் இருந்த ஒரே வீடு ஜவுளி செட்டியின் வீடு மட்டுமே.
அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தால் எதற்காக பகலும் இரவும் அந்த வீட்டின் கதவுகள்
ஜன்னல்கள் மூடப்பட்டேயிருக்கின்றன என்று கேட்டான் சித்ரலேகாவின் அண்ணன்.
இந்த வாதங்கள் சந்தேகங்கள் எதையும் விசித்ரி கண்டுகொள்ளவேயில்லை. அவள்
மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட துணி பொம்மை போல முகம் வெதும்பிப் போய் கண்கள் ஒடுங்கத்
துவங்கியிருந்தாள். அவள் உதட்டில் ஏதோ சில சொற்கள் தட்டி நின்று கொண்டிருந்தன. எதையோ
நினைத்து பெருமூச்சு விடுவதும் பின்பு அவளாகக் கைகளைக் கூம்பி சாமி கும்பிட்டுக் கொள்வதையும்
வீட்டார் கண்டிருக்கிறார்கள்.
ஒரு நாளில் விசித்ரி உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அவளிடம் வம்பு செய்வதற்காக
அவள் கால்பாதங்களில் கரித்துண்டை வைத்து தேய்த்திருக்கிறார்கள். கூச்சத்தில் அவள் நெளிந்தபோது
அவள் கால்கள் தானே உதறிக் கொண்டன. அவள் எழுந்து
தன்பாதங்களைக் கண்டபோது அதில் கரியால் ஏதோ சித்திரம் போல வரையப்பட்டிருப்பதைக் கண்டு
அலறி கத்தினாள். வீட்டிற்குள் ஓடிப்போய் காலில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். அப் படியும்
அவள் மனது நிலைகொள்ளவில்லை. உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். இரவு வரை கால்பாதங்களைத்
துடைத்துக் கொண்டேயிருந்தாள்.
அன்றிரவு வீட்டில் இருந்த சகோதரிகளின் பழைய சேலைகளைக் கிழித்து தன்
காலில் சுற்றிக் கொள்ளத் துவங்கினாள். அப்படிச் சுற்றிச் சுற்றி காலின் மீது பெரிய
பொதி போல சேலைகள் இறுகியிருந்தன. அத்தோடு அவள் சேலையை சணலாலும் இறுக்கிக்கட்டிக் கொண்டாள்.
காலில் சேலைகள் கட்டியதிலிருந்து அவளால் எழுந்து நடப்பதற்குச் சிரமமாக போயிருந்தது.
ஆனால் அதைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. மண்டியிட்டபடியே நடந்து போக ஆரம்பித்தாள்.
அது அவள் தோற்றத்தில் இன்னமும் பயத்தை உருவாக்கியது.
விசித்ரியை இப்படியாக்கியது கனகியாகக்கூட இருக்கக்கூடும் என்று சொன்னார்
பெட்டிக்கடை வைத்திருக்கும் மகாலிங்கம். அதை சித்ரலேகாவின் அண்ணன்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
கனகியைப் பற்றி அப்படியான சில கதைகள் ஊரிலிருந்தன. கனகியின் கணவன் ராணுவத்தில் இருந்தான்.
அவன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊர் திரும்பிவருவான். மற்றக் காலங்களில்
கனகி தனித்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்து கடந்திருக்கக் கூடும். எப்போதும்
கூந்தல் நிறைய பூவும் வெற்றிலைச்சாறுபடிந்த சிவப்பு உதடுகளுமாக இருப்பாள்.
தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அவளுக்கு நிகராக ஊரில் எவருமில்லை. முல்லைமொட்டுகளை
அவளுக்காக மட்டுமே கொண்டு வந்து தரும் பூக்காரன் ஒருவன் இருந்தான். அவளது உடைகளும்
கூட மினுக்கானவை. அவளோடு எப்போதுமே இரண்டு இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்களுடன் வாசல்படிகளில்
உட்கார்ந்து அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அப்போது அவர்கள் சிரிப்பு சப்தம் தெருவெங்கும்
கேட்கும்.
அவளுக்கு பகல் உறக்கம் கொள்ளும் பழக்கம் இருந்தது. தனது தோழிகளான இரண்டு
இளம் பெண்களுடன் அவள் வீட்டின் கதவை சாத்திக் கொள்வதை சித்ரலேகாவின் அண்ணன் கண்டிருக்கிறான்.
மாலையில் அந்த வீட்டுக் கதவு மறுபடி திறக்கும் போது காலையில் பார்த்ததை விடவும் அலங்காரியாக
கனகி வாசல்படியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். பின்பு இரவு வரை அந்தப் பெண்கள் பேசிக்
கொண்டிருப்பார்கள்.
கனகியின் மீது உள்ளூர் ஆண்கள் அத்தனை பேரும் மோகம் இருந்தது. ஆனால்
ஒருவன்கூட அதை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. கனகி முன்பொரு நாள் சித்ரலேகாவோடு பேசிக்கொண்டிருந்ததை
அவள் அண்ணன் கண்டிருக்கிறான். ஒருவேளை அவள் தன் தங்கையை மோகித்திருக்கக் கூடும் என்று
அவன் மனது சொல்லியது. ஆனால் கனகியோடு எந்த ஆணுக்கும் தொடர்பில்லை என்பதை ஊரே அறிந்திருந்தது. அவள் கணவன் வரும் நாட்களில் அவர்கள்
ஒன்றாக பைக்கில் சுற்றியலைவார்கள். அப்போது அவள் கணவன் கனகி பற்றிய கேலியை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வான்.
இப்படியாக சித்ரலேகாவை பயமுறுத்தியது நகருக்குப் படிக்கச் சென்றுவரும்
ஸ்டீபன் சாரின் மகன் மைக்கேல் என்றும், நாவிதர்களில் ஒருவனான கருப்பையாகூட தனியே பெண்கள்
கிடைத்தால் நோங்க கூடியவன் என்றும், பள்ளியின் கணித ஆசிரியராக உள்ள வையாளி கூட பெண்கள்
விஷயத்தில் துணிந்தவர் எனவும், தண்ணீர் வண்டியோட்டும் ராயன், ரயில்வே தண்டவாள வேலை
செய்யப்போன சங்கு, நில அளவையாளர் கடிகைமுத்து. நூற்பு ஆலைக்கு வேலை செல்லும் மச்சேந்திரனோ
அவனது தம்பியோ கூட காரணமாக இருக்கக் கூடும் என்றார்கள்.
இந்த சந்தேகம் ஊரில் இருந்த ஆண்கள் பெண்கள் மீது பட்டுத்தெறித்த போதெல்லாம்
அது உடனே மௌனத்தில் புதையுண்டு விடுவதாக இருந்தது. யாரும் இதைத் தொடர்ந்து சென்று உண்மையை
அறிந்து கொள்ள முடியவில்லை.
விசித்ரியின் முப்பத்திரண்டாவது வயதில் அவளை ஆறு நாட்கள் உப்பத்தூர்
அருகில் உள்ள தர்க்கா ஒன்றில் சிகிட்சைக்காகக் கொண்டு போய் விட்டுவந்தார்கள். பிரார்த்தனையும்
இரும்புக் கம்பியால் போட்ட சூடும், குடம் குடமாகத் தலையில் தண்ணீர் கொட்டியபோதும் விசித்ரியிடம்
ஒரு மாற்றமும் உருவாகவில்லை. அவளை மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஊர் வந்த
சில நாட்களுக்கு அவள் பசி தாளாதவள் போல சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். அதன்பிறகு அவள்
இயல்பாக மாறுவதற்கு ஒரு மாதகாலமானது. அவள் எப்போதும் போலவே முப்பது ஆடைகள் அணிந்தவளாக
இருந்தாள்.
விசித்ரியின் வீடு அவள் இளமையிலிருந்தது போன்ற வளமையை இழந்து போகவே
திசைக்கொரு சகோதரர்களாகப் பிரிந்து போகத் துவங்கினார்கள். வீட்டில் அவளும் வயதான அம்மையும்
மட்டுமேயிருந்தார்கள். பண்டிகைக்கு ஊருக்கு
சகோதரிகள் வருவதும் கூட நின்று போய் நாலு வருசமாகிவிட்டது. அவர்கள் வீடு இருந்த தெருவில்
இருந்த மனிதர்கள் கூட இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். வாகை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு
அங்கே தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டுவிட்டது. தெருவில் இருந்த வயதானவர்கள் இறந்து அதே
ஊரின் மண்ணில் புதையுண்டு அந்த இடங்களில் தும்பை முளைத்தும் விட்டது.
விசித்ரிக்குப் போக்கிடம் இல்லை. அவள் எப்போதும் போலவே தன் உடலைச் சுற்றி
முப்பது நாற்பது சேலைகளை சுற்றிக் கொண்டு கால் பெருவிரல் வரை துணியால் கட்டி முடிச்சிட்டு
வீட்டிற்குள்ளாகவே இருக்கிறாள். சமையல் அறையின் புகைக்கூண்டை ஒட்டியே வாழ்ந்த பல்லி
கறுத்து பருத்துப் போய் கண்கள் மட்டுமே பிதுங்க இருப்பது போன்று அவள் தோற்றம் மாறிப்போயிருந்தது.
ஒருவேளை அவள் இறந்து போன அன்று கூட அப்படியேதான் அவளைப் புதைக்கக் கூடும் என்று அம்மா
புலம்பிக் கொண்டிருந்தாள்.
விசித்ரியின் பனிரெண்டாவது வயதின் கோடைப் பகலில் என்ன தான் நடந்தது.
யார் அவள் உடலில் இருந்த உடைகளை உருவியது. எல்லோரும் உண்மையின் ஏதோ வொரு பகுதியை அறிந்திருக்கிறார்கள்.
உண்மையை முழுமையாக அறிந்த விசித்ரி அதை விழுங்கிப் புதைத்துவிட்டாள்.
ஆனால் முற்றிய வெயில் காமம் உடையது என்பதையோ, அது ஒரு மனிதனின் அடக்கப்பட்ட இச்சையை பீறிடச் செய்யக்கூடியது
என்பதையும் பற்றி உள்ளூர்வாசிகள் அறிந்தே வைத்திருந்தார்கள். அல்லது வெயிலை காரணம் சொல்லி தன் மனதின் விகாரத்தை வெளியே நடமாட அனுமதித்திருக்கிறார்கள்.
அதை வெயில் அறிந்திருக்கிறது. இல்லை இரண்டுமே புனைவாகவோ, இரண்டுமே அறிந்து வெளிப்படுத்தப்படாத
ரகசியமாகவோ இருக்கக்கூடும்.
எதுவாயினும் காமம் தனி நபர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுடன் சம்பந்தமுடையது
மட்டுமில்லை. அது ஒரு புதைசுழல். கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாகக் கடந்து போய்விடக்கூடியவை
அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்து விடக்கூடும்
என்பதையே விசித்ரி நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறாள். அதுதான் பயமாக இருக்கிறது.
நன்றி - உயிர்மை
கருத்துகள்