27/03/2011

நாட்டுப்புறவிலக்கியம் காட்டும் வேளாண்மை - முனைவர் சி.பா. சாந்தகுமாரி

மனிதன் பேசத் தொடங்குவதற்கு முன் தன் எண்ணங்களைச் சைகைகளாலும், உணர்ச்சிகளை ஓசைகளாலும் வெளிப்படுத்தினான். தன் உணர்ச்சிகளை ஓசைகளின் வழி உணர்த்தியபோது சொற்கள் பிறந்தன. இச்சொற்கள் காலப்போக்கில் பேச்சுமொழியாக மலர்ந்தன. இப்பேச்சு மொழியில் சொற்களும் ஓசைகளும் கலந்து வந்தபோது பாடல்களாக எழுந்தன. இலக்கணம் தோன்றுவதற்கு முன் சொற்கள் ஒழுங்குடன் இசையுடன் இணைந்து அமைந்ததே நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இலக்கணம் என்னும் சிறைக்குள் சிக்காது கட்டடற்ற காட்டாறாய் பெருகி வருவது சமுதாயத்தின் உயிர்த்துடிப்பு, உண்மையின் பிரதிபலிப்பு, உணர்ச்சி உந்தலின் அப்பட்ட வெளியீடு என்று நாட்டுப்புற பாடல்களின் பெருமையினைத் தமிழ்த்தந்தை ச.வே. சப்ரமணியனார் குறிப்பிடுவர்.

மனித நாகரிகம் தொன்மைக்காலத்தில் ஆற்றங்கரைகளிலே தொடக்கம் பெற்றதாக வரலாற்று வல்லுநர்கள் வகுத்துரைக்கின்றனர். தனிமனிதன் பிறரோடு வாழத்தொடங்கிய காலமே சமுதாயம் உருவான காலமாகும். தனக்கு என்ற மனப்பான்மை விலகி நமக்கு என்ற உணர்வோடு, ஒற்றமையோடு வாழ்வின் வளத்திற்கு உழைக்க முற்பட்டான். இவ்வாழ்வின் உன்னதநிலையே வேளாண்மைத் தொழிலாக உருப்பெற்றது. தொன்மை மிகுந்த தொழிலாகக் கருதப்பெறும் வேளாண்மைத் தொழில் குறித்த செய்திகள இலக்கியங்களில் சிறப்பாகக் காணப்படுகின்றன. குறிப்பாகப் புறநானூற்றுப் பாடலில்

''பொருடை தரூஉம் கொற்றமும் உழுபடை

ஊன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயனே'' (புறம்:35; 25-26)

எனப் பகைவர்களைப் போர்களத்தில் வென்று சிறப்பிப்பதற்கும் உழுதொழிலே அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது என்பது புலனாகின்றது. அது மட்டுமல்லாமல் உழவர்கள் உலக மக்களின் வாழ்வு வண்டிக்கு ஆணியாகக் கருதப்பட்டமையை நம் வள்ளுவப் பெருந்தகை ''உழவு'' என்ற அதிகாரத்தின் கீழ் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

உழுதொழிலின்போது ஏற்படும் களைப்பைப் போக்கப் பாட்டுப் பாடியுள்ளனர். ஏரைப் பூட்டி நின்றோர் பாடிய ''முகவைப் பாட்டு'' நெல்ல முகந்து அளந்து கொடுக்கும்போது பாடிய ''பொலிப்பாட்டு'' குறித்த குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

வேளாண்மைப் பாடல்கள் வழி காணப்பெறும் சிறப்புப் பண்பாட்டுக் கூறுகளை மூன்று நிலையில் முறைப்படுத்திக் காணலாம். அதாவது, (1) உழும் முன் (2) உழும போது (3) உழவு நிறைவுற்றபின். பழங்காலத்தில் நாட்டுப்புற மக்கள் ஒவ்வொரு நிலையிலும் பாடல் பாடினர். ''வேளாண்மையைப் பாடல்களின் நீட்டம் உழவன் ஏரில் காளைகளைப் பூட்டியதிலிருந்து தொடங்கி விதை விதைத்து அதனை அறுவடை செய்து, கதிரடித்துக் குவித்துக் குதிரில் போடுகின்றவரை நீடித்துச் செல்லும்'' என்று கூறுகின்றார்.

உழும் முன்:

உழுவதற்கு முன் நிலத்தை பேணுதல்:-

உழவர்களுக்கு நிலமும் நீரும் வாழ்வின் முதலீடுகளாகும். நிலத்தைத் தன் உயிரினும் மேலாகக் கருதினர். வயலை நாள்தோறும் பேணிக் காக்க தவறினால் ஏற்பட்ட இடர்பாட்டை வள்ளுவர் கூறுகையில்,

''செல்லான் கிழவ னிருப்புனிலம் புலன்ந்

தில்லாளி னூடி விடும்'' (குறள்: 1039)

என்று படம்பிடித்துக் காட்டுகிறார். ''நாட்டையாளுகின்ற மன்னனும் நிலத்தைப் போற்றும் உழவனைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற குறிப்பும் மறைமுகமாக உணர்த்தப்படுவதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இக்கருத்தை அரண் செய்யும் வகையில் மண்ணின் மகத்துவத்தை,

காணி அலங்கார மாம்

காணி காலு சிங்காரமாம்

காணி சுத்தி இருக்கும்

வரப்புகளும் ஒய்யாரமாம்''

என்று குளித்தலை வட்டார வழக்குப் பாடல்கள் புலப்படுகின்றன.

மாட்டின் நலம் காக்க வேண்டுதல்:-

நாட்டுப்புற மக்கள் உழவுத் தொழில் தொடங்குவதற்கு முன் தங்களின் வாழ்விற்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் மாடுகளின் நலத்திற்கு இறைஞ்சுகின்ற வழக்கம் காணப்படுகிறது. தங்களோடு சேர்ந்து வாழ்ந்து மரணமடையும் மாடுகளைத் தங்களின் உறவாகக் கருதி அவற்றிற்கு உழவுத்தொழில் நடைபெறும்போது துன்பம் வந்திடாதிருக்க இறைவனிடம் வேண்டுகின்றனர். ''காக்கை குருவிகள் எங்கள் சாதி'' என்று இந்நூற்றாண்டில் எண்ணுவதற்கு முன்பே நாட்டுமக்கள் மாடுகளைத் தமது உறவாகக் கொண்டு பழகியமை காணப்படுகிறது.

''பூட்டின மாட்டுக்கு

பிழைமேலும் வாராமல்

கட்டின மாட்டுக்குக்

கலகம் வந்து சேராமல்

காரும் கணபதியே''

எனும் வேண்டலிலிருந்து அறிய முடிகின்றது.

மழை வேண்டல்:-

உழவர்கள் பயிர்வளர, விளைச்சல் பெருக மழையைப் பெரிதும் எதிர்நோக்குவர், நீரின்றிப் போனால் மனிதனுக்கு வாழ்வின்றிப் போகும். நாட்டில் வளம் குன்றிப்போகும். இந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்,

''இருபதியா லெட்டால் இன்னைக்கு

இருட்டாதோ மானம்

இருட்டாதோ மானம் - அந்த

பிரட்டாசி மாசம்

பிரட்டாசி மாசம் - அங்கே

பேயாதோ மானம்

பேயாதோ மானம் - இன்னிக்கு

பெருகாதோ ஏரி''

என்ற புரட்டாசி மாதத்தில் மழை எதிர்பார்த்துத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மழை சோறு உண்ணல்:-

வேளாண் தொழிலுக்கு அடிப்படையாக விளங்குவது மழை. மழையைக் குறித்துப் பலவிதமான நம்பிக்கைகள் காணப்பெறுகின்றன. கிராம மக்களிடம் மழைபொழிய மழைச்சோறு உண்ணும் பழக்கம் காணப்படுகிறது. பருவமழை பெய்யாது பொய்த்து விட்டால் வருணபகவானிடம் வேண்டுதலும் வழிபாடும் நடத்துவர். மழை பொய்த்த காலத்தில் பெண்கள் வீடுவீடாகச் சென்று அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு முதலியவற்றைப் பெற்று ஒன்றாகச் சேர்ததுச் சமைத்து உப்பிடாது உண்பர். இதனை மழைச்சோறு என்றும் குறிப்பிடுவர். எல்லோரும் உண்டபின் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பரதேசம் போவதாகப் பாவனை செய்வர். வயது முதிர்ந்த பெண்கள் மாரடித்துக் கெண்டு இடுகாட்டை நோக்கிப் பாடிக் கொண்டு செல்வர். இவ்வாறு செய்தால் மழை பொழியும் என்னும் நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்பதை நினைவூட்டும் வகையில்,

''வருண பகவானே

உரிய மழை பெய்யவேணும்

மழை பெய்யலையே

மானமே போகுதடி

என்சோட்டு பெண்டுகளே

விரதங்கொள வாருங்கடி

மழைச்சோறு ஆக்கி

மனசாரக் குடிச்ச பின்னே

இடுகாட்டை பார்த்து

மாரடிச்சுப் போவோமடி

மனமிரங்கி மழைமேகம்

மழை பெய்ய வேணுமடி''

என்று பெரம்பலூர் வட்டப் பாடல் அமைந்துள்ளது.

உழும்போது:-

உழுதொழிலின் தொடக்கமாக ஏற்றம் இறைத்தல் காணப்படுகிறது. ஏற்றம் இறைத்தலின் மூன்று வகைகளை வழக்கத்தில் கொண்டுள்ளனர். (1) கவலை ஏற்றம் (2) ஆளேறும் ஏற்றம் (3) பரி ஏற்றம். ஏற்றம் இறைக்கும்போது பாடல் பாடும் பழக்கமும் இருந்தது என்பதை,

''ஏழை எல்லாம் கூடி

ஏத்திறைப்போம் வாங்க

பஞ்சை எல்லாம் கூடி

பரி இறைப்போம் வாங்க''

என்று பரியேற்றப்பாடல் துறையூர் வட்டத்தில் காண முடிகின்றது.

மழைக்குரிய பயிரிடுதல்:-

கிராமங்களில் வானம் வழங்கும் நீரின் அளவிற்கேற்பப் பயிரிடும் வழக்கம் இருந்து வருகிறது. மழையின் அளவைப் பொறுத்து அதற்குரிய பயிர் விளையச் செய்கின்றனர். நாள்தோறும் மழை பொழிந்தால் நெல்லைப் பயிரிடுவர். விட்டுவிட்டு மழைப் பொழிந்தால் சோளத்தை பயிர் செய்வர். கம்பி போன்று மழை பொழிந்தால் கம்பு பயிரிடுவர்.

''நித்தம் மழை பேஞ்சா

நம்ம நெல்லு பயிரேறும்

சோனை மழை பேஞ்சா

நம்ம சோளம் பயிரேறும்

கம்பி மழை பேஞ்சா

அங்கே கம்பு பயிரேறும்''

என்று முசிறிவட்ட வழக்கு பாடல்கள் சித்திரிக்கின்றன.

குலவைப்பாட்டு:-

வயலில் இறங்கி வேலை செய்யும் போதும், நாற்று நடும்போதும், அறுவடையின் போதும் குலவைப்பாடல் பாடுவது வழக்கம். குலவ ஒலி பெண்கள் உதடுகளைக் குவித்து நாவினார் உரசி ஒருவகை ஒலியைக் குரலில் கொடுப்பர். இவ்வொலி கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

''எஞ்சோட்டுப் பெண்டுகளா

எடுத்துக் குலவ போடுங்கடி''

என்று இரண்டு வரிகள் பாடியதும் மற்ற பெண்கள் குலவை இடுவர்.

உழத்தியர்களை உபசரித்தல்:-

வித்துக்கள் நாற்றுகளாய் வளர்ந்த நிலையில் நாற்றுகளைப் பறித்து வரிசைப்படுத்தி நடுவர். இப்பணிக்காகப் பெண்கள் மட்டுமே வருவர். நாற்று நடலின் முதல்நாள் அனைவருக்கும் உணவளிப்பர், பூவும், குங்குமமும் கொடுப்பார்கள். நடவுப்பணி மகிழ்வுடனும் செம்மையாகவும் நடைபெற இவ்வாறு உபசரிக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

''ஏலேலம்மா ஏலம்

ஏலோலங்கிடி ஏலம்

ஓல்த்தூ பண்ணை

எங்க நல்ல பண்ணை

நாத்து நட போவேருக்கு

சோறு போடும் பண்ணை

பூவும் பொட்டும் பணமும்

அள்ளிதரும் பண்ணை''

உழத்தியரை உபசரிப்பதோடு பண்ணையாரையும் பாராட்டுகின்ற பண்பு கிராம மக்களிடம் இருந்தது என்பதும் புலனாகிறது.

விலங்கினம் கொண்டு தாள் அடித்தல்:-

அறுவடை செய்தலின் போரடிப்பர். போரடிப்பதற்கு மாடும், யானையும், பயன்படுத்தப்பட்ட வழக்கம் பழங்காலத்திலேயே இருந்துள்ளது. இவ்வழக்கம் இன்றும் கிராம மக்களிடம் காணப்படுகிறது.

''மாடு கட்டி தாளடிக்க

மவராசன் பண்ணையிலே

கண்ணு கட்டி தாளடிக்க

காராழன் பண்ணையிலே

ஆனைகட்டி தாளடிக்க

ஆறுமாசம் செல்லும்

மாடுகட்டி தாளடிக்க

மறுவருசம் செல்லும்

குதிரை கட்டி தாளடிக்க

கோடிநாள் செல்லும்''

என்று நாட்டின் வளத்தை அறியும் முகமாக விலங்கினங்களைப் போரடிக்க பயன்படுத்தி வந்தமையை அறியலாம்.

உழவு நிறைவுற்றபின்:-

கிராம மக்கள் கதிரவனின் கதிர் நிலத்தில் விழும் முன் கழனிக்கு வந்து அந்திவரை அயராது உழைக்கும் பண்பாளர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை உடன்பெற விரும்புபவர்கள். வாங்கும் பணத்தைக் கொண்டு வயிற்றை நிரப்பும் வாழ்க்கையினர். இதனை,

''முதலாளி வந்தவுடன்

முதல் பணத்தை

பெத்துக்குவோம்

சீக்கிரமாய் நட்டுவாடி

சின்னபுள்ளே சிங்காரி''

எனும் பாடலில் கிராம மக்களின் உழைப்பின் உயர்வும், ஊதியத்தை விரைவில் பெற விரும்பும் எண்ணமும் புலப்படுகின்றன.

ஆகவே வேளாண்மைத் தொழில் நாட்டுப்புற மக்களின் உயிர்த்தொழிலாக விளங்குகிறது. உழுதொழில் தொடங்கும் முன் வயலைப் போற்றுவதும், ஏரில் பூட்டப்பட்ட மாட்டிற்கு தீங்கு வராது இறைவனை வேண்டுதலும், புரட்டாசி மாதத்தில் மழை பொழியும் என்ற நம்பிக்கையும், மழை பொய்த்தபோது மழைச்சோறு உண்கின்ற பழக்கமும் காணப்படுகின்றன. உழவுத்தொழில் புரிகிறபோது வயலுக்கு ஏற்றம் இரைத்து நீர் பாய்ச்சுவதில் கவலை ஏற்றம், ஆளேறும் ஏற்றம், பரிஏற்றம் என மூன்று வகைப்பட்ட ஏற்றங்கள் காணப்பட்டமையும் அறிய முடிகின்றன. நாற்று நடும்போதும் அறுவடையின் போதும், போரடிக்கும் போதும் குலவை ஒலி ஒலிக்கின்ற பழக்கம் காணப்படுகின்றனது. நாற்று நடுகின்ற நாளன்று உழத்தியர்களை உபசரிக்கும் வழக்கமும், பண்ணையாரைப் பாராட்டும் பண்புள்ளமும், போராடிப்பதற்கு யானை, மாடு, குதிரை போன்ற விலங்கினங்கள் பயன்படுத்தும் வழக்கமும் அக்காலத்தில இருந்து வந்துள்ளமையை நாட்டுபுறப்பாடல்கள் வழி அறியலாம்.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: