13/03/2011

திராவிட இலக்கியங்களில் 'குறவஞ்சி' அடிக்கருத்து - பா. ஆனந்தகுமார்

இலக்கியங்களில் தொடர்ந்து வரும் குறிப்பொருள்களை - அவை அடிக்கருத்தாக உருமாறுவதை ஆய்வது ஒப்பிலக்கிய ஆய்வின் ஒரு பகுதி ஆகும். அடிக்கருத்தியல் ஆய்வு ஒர் இலக்கிய வகையின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிவதற்கும் உதவும். எந்த ஒரு இலக்கிய வகையும் திடிரென தோன்றிவிடுவதில்லை. அது விதையாகி, முளைத்து, வளர்ந்து பூத்துக் குலுங்கும் பரிணாம வளர்ச்சியுடையது. ஜான் அடிங்டன் சைமான்ஸ் வார்த்தைகளில் சொல்வதானால் ''ஒவ்வொரு இலக்கிய வகையும் முளைவிடுதல் வளர்தல், பூத்துக்குலுங்குதல், அழிதல் எனும் விதிமுறைக்குட்பட்டன''. ஓர் இலக்கிய வகையின் பரிணாம வளர்ச்சியில் அவ்விலக்கிய வகைக்கு அடித்தளமாக அடிக்கருத்தும் இணைந்தே பரியாமத்தை - மாற்றத்தை - வளர்ச்சியைப் பெறுகிறது.

திராவிட இலக்கியங்களில் நாடகம், கூத்து உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்களில் ''குறவஞ்சி'' ஒரு முக்கியமான பாத்திரமாக இடம் பெறுகிறது. இப்பாத்திரத்தோடு இணைந்து தலைவியின் காதல், குறிசொல்லுதல் என்கிற முதன்மை அடிக்கருத்துகளும் செயல்படுகின்றன. பின்னிடைக்கால தென்னிந்திய இலக்கியங்களில் ''குறவஞ்சி'' என்பது ஒரு தலைமைப்பாத்திரமாகவும் அடிக்கருத்தாகவும் இடம் பெறுகின்றது. குறவஞ்சி என்னும் ''குறிப்பான்'' தென்னிந்திய இலக்கியங்களில் குறிசொல்லுதல். தலைவியின் காதல் என்கிற குறிப்பீடுகளைக் கொண்டதாக அமைகிறது. தமிழில் குறம், குறவஞ்சி, குளுவநாடகங்கள் - மலையாளத்தில பாண்களி, குறத்தியாட்டம், முதலான நாடோடி நாடகங்கள் - தெலுங்கு, கன்னட யக்ஷகானங்கள், ஆகியவற்றுள் ''குறவஞ்சி' என்கிற அடிக்கருத்து சிறப்பிடம் பெறுகிறது. இந்த அடிக்கருத்தின் வேரினையும், அது விதையாய் முளைத்து வளர்ந்த பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

''குறவஞ்சி'' - சொல் விளக்கம்

குறம்+வஞ்சி = குறவஞ்சி. ''வஞ்சி'' என்றால் பெண் எனப்பொருள். எனவே ''குறவஞ்சி'' எனில் குறவ இனத்தைச் சேர்ந்த பெண் அல்லது குறத்தி என்று பொருள். ''குறவர்'' இன்றைய தமிழ்நாட்டின், ஏன் தென்னிந்தியாவின் பழங்குடியினர். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ''குரவர்'' என்ற பெயரிலும் கன்னடத்தில் ''கொறகர்'' என்றும் தெலுங்கில் ''எருக'' என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். ''எருக'' என்ற சொல்லினை ''குறவ'' என்ற சொல்லின் ஒலி இடம் பெயர்தலாகக் கருத வாய்ப்பிருக்கிறது. திராவிட மக்களான இவர்களின் வேர் திராவிடப் பண்பாட்டின் மூல இலக்கியக் களஞ்சியமான தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் சென்று சேர்கிறது. குறிஞ்சிப் பண்பாட்டில் - மலை மலை சார்ந்த வாழ்வியல் முறையில் குறவர்கள் தொடர்புடையவர்கள். முருகனோ முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்துகின்ற வேலனோடும் தொடர்புப்படுத்தப்பட்ட குறவர்கள் சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ளனர்.

''குறி'' கூறும் பாத்திரம்

குறவஞ்சி எனும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு தணித்த இலக்கிய வகை உருவாவதற்கு முன் குறி கூறும் பாத்திரங்கள் இலக்கியத்தில் ஆங்காங்கே சிதறல்களாக இடம் பெற்றுள்ளனர். சங்க இலக்கியத்தில் குறி கூறும் பாத்திரங்களாக கட்டுவிச்சி முதுவாய்ப் பெண்டிரும், அகவன் மகளும், வேலனும் அமைந்துள்ளனர். வேலன் சுழற்சிக்காய்களைப் போட்டுக் குறி சொல்கிறான். அகவன் மகள் பாடிக்குறி சொல்கிறாள். தலைவியின் காதல் நோயை அறிவதற்காகப் தாளர் கட்டும் கழங்கும் பார்க்கலாமென்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கட்டுவிச்சி முதுவாயப் பெண்டிர், அகவன் மகள் என்ற மூன்று பெண் பாத்திரங்களும் குற இனத்தவராகவே இருத்தல் வேண்டும். அகவன் மகள் குறி சொல்வதற்கான மாத்திரைக் கோலை வைத்திருந்ததாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பிற்கால இலக்கியங்களில் அகவன் மகள் பற்றிய குறிப்பு இல்லை. பக்தி இலக்கியத்தில் நிமித்தம் பார்க்கும் பெண்ணாக ''கட்டிவச்சி''/ ''கட்டுவிச்சி'' நம்மாழ்வாராலும் திருமங்கையாழ்வராலும் குறிப்பிடப்படுகிறாள். பின்னிடைக் காலத்தில் தோன்றிய மின்னொளியாள் குறத்தில் கட்டுவிச்சி என்ற சொல் குறத்தி என்ற சொல்லின் உரிச்சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

''வாடிமலைக் குறத்தி மலையாளக் கட்டுவச்சி

விண்ணின் குறத்தி வீரான கட்டுவச்சி''

எனவே கட்டுவிச்சி என்ற சொல் குறி கூறும் குறத்தியரைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் மானுடக் காதல் பின்னணியில் கட்டுவிச்சி பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் பழந்தமிழ் இலக்கியத்தில் குறிகூறம் ''கட்டுவிச்சி'' பாத்திரம் காதல் எனும் அடிக்கருத்தோடு இணைக்கப்பட்டே உருவாகியுள்ளது.

கூத்தாடும் பாத்திரம்

குறத்தியர் குறிகூறல் என்ற செயலைச் செய்வதோடு மட்டுமின்றி ''குரவை'' எனும் கூத்தோடு தொடர்புடையவர்களாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றனர். குரவை எனும் சொல் குலவையிடல் எனும் பொருளுடையது. குரவைக் கூத்து என்பது ஆறேழு பெண்கள் தங்கள் கைகளைப்பற்றி இணைந்து இனிமையான ஓசையை எழுப்பி ஆடிய ஓர் ஆட்டமாகும். ''குரவை' என்பது குறவர்களின் விழா நடனமாக சடங்கு நடனமாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில் வேலன் அமைத்த வெறியாட்டுக் களத்தில் வெண்கடுகு, மலர், குருதிதோய்ந்த திணை ஆகியவற்றைத் தூவி, இசைக்கருவிகளை முழக்கி ''குறமகள்'' முருகனை வழிப்படுத்தினாள். தெய்வமேறி ஆடினாள் என்கிற செய்தினைக் காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் ''குன்றக்குரவை'' என்கிற வெறியாட்டு நிகழ்வைப் பார்க்கமுடிகிறது. குன்றக்குரவை குறிகூறுதலைப் போலவே ''காதல்'' அடிக்கருத்தோடு இணைத்துப் பேசப்படுகிறது. குரவைக் கூத்தில் குறப்பெண்கள் காதலர் இணைவதற்காக இறைவனிடம் வேண்டுகின்றனர். பேராசிரியர் கா. சிவத்தம்பி பிற்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் அடிக்கருத்து ரீதியாக குன்றக் குரவையின் தொடர்ச்சி தான் என்று கருதுகிறார். (1986; வ.30)

''கலம்பக'' இலக்கியத்தில் ''குறம்'' தனி உறுப்பாக வளர்தல்

சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் முதன்மை அடிக்கருத்தில் இடம் பெறும். ஒரு துணைக் குறிப்பொருளாக குறி கூறும் குறத்தி பாத்திரம் அமைந்துள்ளது. வேறு வகையில் சொல்வதானால் குறி கூறுதல் என்பது கதைக்சூழல்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. பாத்திரத்தை மையப்படுத்தியதாக அமையவில்லை. ஆனால், இடைக்கால பிரபந்த இலக்கியத்தில், 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ''கலம்பக'' இலக்கிய வகையில் குறத்தி பாத்திரம் ஒரு தலைமைப் பாத்திரமாக - தலைமை அடிக்கருத்தாக . ''குறம்'' என்கிற அடிக்கருத்தாக வளர்ந்துள்ளது. ''கலம்பக'' இலக்கிய வகையின் 18 உறுப்புகளுள் ''குறம் என்பது ஒன்று. குறம் என்கிற உறுப்பு அல்லது அடிக்கருத்து குறத்தியின் மலைவளம், குறித்திறன், குடிவளம், குறி கூறம் முறை. நன் நிமித்தம் பார்த்தல் ஆகிய குறிப்பொருட்களைக் கொண்டமைகிறது. கலம்பக இலக்கியத்தின் வரலாறு தமிழில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. ''நந்திக் கலம்பகம்'' முதல் கலம்பக நூலாகும். இது தெள்ளாற்று எறிந்த மூன்றாம் நந்திவர்மனைக் கதைத்தலைவனாகக் கொண்டது.

குறத்திப்பாட்டு

இடைக்கால பிரபந்த இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களுள் காலப்பழமையுடைய பன்னிரு பாட்டியல் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாக ''குறத்திப்பாட்டு'' என்கிற ஒரு வகையைக் குறிப்பிடுகிறது. எனவே கலம்பகத்தில் ஓர் உறுப்பாக இருந்த ''குறம்'' ஒரு சில நூற்றாண்டுகளுக்குள் தனித்த ஓர் இலக்கிய வகையாக குறத்திப்பாட்டாக வளர்ந்திருக்கிறது.

''இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும்

திறப்படிவுரைப்பது குறத்திப் பாட்டே''

என்று பன்னிரு பாட்டியல் குறத்திப்பாட்டின் இலக்கணம் கூறுகிறது. அதாவது மூன்று காலத்து நிகழ்வுகளையும் குறத்தி குறியாக உரைப்பது குறத்திப்பாட்டின் உள்ளடக்கமாகும். பாட்டியல் நூலில் குறிப்பிடப்படும் இக்''குறத்திப்பாட்டு'' என்ற பெயரில் தமிழில் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. குறவஞ்சி, குறம், குளுவநாடகம் என்ற பெயரில் நாடகங்கள் தான் கிடைக்கின்றன. ஆனால் அவை பன்னிருபாட்டியல் குறிப்பிடுவது போன்று ஒரு எடுத்துறைப்பனுவல் அல்ல. மேலும் அவை குறத்திப்பாட்டின் இலக்கணத்தையும் தாண்டி சில உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் பன்னிருபாட்டியல் குறிப்பிடுகிற இலக்கணத்திற்கேற்ற ஒரு பாட்டாக எடுத்துரைப்பனுவலாக மலையாளத்தில் இராமயணக்கதை ஒன்று குறத்திப் பாட்டு வடிவில் கிடைக்கிறது. கேரளப் பல்கலைக்கழக கீழ்த்திசை ஆய்வகம் மற்றும் சுவடிப்புலம் 1968 - இல் வெளியிட்டுள்ள ''பாட்டுகள்'' நூல் வரிசையில் இரண்டாம் தொகுப்பில் இக்குறத்திப்பாட்டு இடம் பெற்றுள்ளது. 80 அடிகளைக் கொண்ட இப்பாட்டு, தமிழும், மலையாளமும் கலந்த ஒரு கலப்பு நடையில் - ''இராமசரிதம்'' கண்ணசக்ருதிகள் முதலான பழைய பாட்டிலக்கியங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அயோத்திக்கு வந்து சேர்ந்த குறத்தி ஒருத்தி, தசரதனின் கௌசள்யா முதலான மனைவியருக்கு அவர்களின் கைகளைப் பார்த்து வருங்காலப் பலன்களைக் கூறுகின்ற ரீதியில் இப்பாட்டின் கதை அமைந்துள்ளது. கணபதி முதலான தெய்வங்களை வாழ்த்தித் தொடங்கும் இப்பாட்டு முழுவதும் ஒரே குற்றில் குறத்தியின் கூற்றில் அமைந்துள்ளது.

''சீறினொடு நீங்கள் கரம் காட்டினம்மமாரே!

மேலில்வரும் நன்ம தின்ம சொல்லுவான் கைகாட்டை

மேனியுள்ள ராசாமடவார்கள் கரம் கட்டை''

என அரசியரின் கரத்தைக் காட்டச் சொல்லும் குறத்தி கோசலைக்கு மூத்தமகனாக இராமன் பிறப்பான். அவனுக்குப் பிறகும் சகோதரர்கள் மூவர் பிறப்பர் எனச் சொல்கிறாள். அதன்பின்,

''கார்குழலி கௌசலதன் மைந்தன் கணயாலே

மூர்ச்சமிகும் வாலிதன்னெ கொந்நு முக்தி நல்கும்

மூலமதினால் அனுமான் சாடும் கடலேழும்

மூவுலகமாண்ட வேந்தன் பத்தினியைத்தேடி

வாரிநடுவே இலங்கதன்னில் பார்த்து காணும்

வாங்கும் திருவாழியடயாளம் கொண்டு போந்து

தாமரக்கண்ணண் தனக்கு காட்டுமது கண்டு

போர்பெரியரக்கர்குலம் வேரறெ முடித்து

ராவணனென் கொந்நு வருத்தி

ராவணன்றெ தம்பி தன்னெ யந்நவிடெயாக்கி

வேந்தனிதயோத்ய புகிந்தந்நுபலரோடும்''

என வாலி வதம், அனுமான் கடல் தாண்டி சீதையைக் காணல், இராமன் இராவணனைக் கொன்று விபீணனை அரசனாக அமர்த்துதல், அயோத்தி மீளுதல் என இராமாயணக் கதையின் முக்கிய நிகழ்வுகள் கோசலையின் வருங்காலப் பயன்களாக குறத்தியால் குறி சொல்லப்படுகின்றன. இவ்வாறு குறி கூறி முடித்த பின் தனக்கு சன்மானமாக சோறுங்கறியும், சேலையும் கஞ்சியன்னமும் தர வேண்டுமென்று குறத்தி வேண்டி வாழ்த்திக்கதையை முடிக்கிறாள்.

''சோறுகறி மெத்த மெத்தை இந்நு தரவேணும்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

சாலெ நல்ல சேலெயெனக்கந்நு தரவேணும்

காடியோடு கஞ்சியன்னம் குஞ்சினு கொடம்மே!

தமிழ் இலக்கிய மரபு சார்ந்த கதை வடிவத்தைக் கொண்டே இக்குறத்திப்பாட்டு மடவார்கள். தாமரைக்கண்ணன், வேந்தன் முதலான தமிழ்ப்பெயர் வடிவங்களையும், ''சொல்லுவான்'' முதலான தமிழ் வினை வடிவங்களையும் மொழிநடையில் பெற்றுள்ளது. இக்குறத்திப்பாட்டில் மொழியிலும் இலக்கிய மரபிலும் தமிழ்ப்பண்பாட்டின் இணைவாக்கத்தைக் காணமுடிகிறது. வேறுவகையில் சொல்வதானால் மலையாளப் பண்பாட்டில் உருவான இப்பாட்டு இலக்கியம் தமிழ்மொழி, இலக்கியப் பண்பாட்டு மரவினைத் தனக்குள் உட்செரித்துள்ளது.

குறத்திப்பாட்டிலிருந்து குறம்

குறத்திப்பாட்டுக்கு இலக்கணம் சொல்லி இலக்கியம் கிடைக்காத தமிழ் மரபில் ''குறம்'' எனும் பெயரில் 18 நூல்கள் கிடைத்துள்ளன. இதில் கலத்தால் முந்தியது குமரகுருபரின் மீனாட்சியம்மை குறம் குறத்திபாட்டின் ஒரு விரிந்த வடிவமாக குறம் இலக்கியம் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து, குறிசொல்லுதல், சன்மானப் கேட்டல், வாழ்ந்து என்கிற குறிப்பொருட்கள் குறத்தியை மையமாக வைத்து குறத்திப்பாட்டில் இடம் பெறுகின்றன. இந்த வடிவத்தில் மேலும் பல புதிய குறிப்பொருட்களைச் சேர்த்து ''குறம்'' குறி கூறுதல் என்கிற அடிக்கருத்தை விரிவாக்கம் செய்துள்ளது. குறத்தி சார்ந்து, குறத்தி தன் நாடு, மலையின் வளத்தினைக் கூறுதல், தன் குலப் பெருமையைக் கூறுதல், குறிச்சிறப்பைக் கூறுதல். குறத்தியின் அழகுத் தோற்றத்தை எடுத்துரைத்தல் எனக் குறத்திப்பாட்டில் இடம் பெறாத குறிப்பொருட்கள் - கலம்பக உறுப்பான ''குறத்தில்'' இடம் பெற்றுள்ள சில குறிப்பொருட்கள் - ''குறம்'' இலக்கிய வகையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் குறி கூறதல் என்ற அடிக்கருத்தோடு குறி கேட்பவளின் காதல் என்கிற ஒரு புதிய அடிக்கருத்தும் குறம் இலக்கிய வகையில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இவ்வடிக்கருத்தில் தலைவனின் பவனி, தலைவி, தலைவனைக் கண்டு மையல் கொள்ளுதல், புலம்புதல் என்கிற குறிப்பொருட்கள் இடம் பெறுகின்றன.

மேலும் ''குறம்'' என்ற இலக்கியவகை கலம்பக உறுப்பான குறத்தின் - குறத்திப்பாட்டின் - ஒரு கூற்றுத் தன்மையிலிருந்து வளர்ந்து தலைவி மற்றும் பிறர் கூற்றுக்களுக்குரியதாக விரிவடைகிறது. இவ்வாறு ''குறம்'' என்னும் இலக்கிய வகை குறத்திப்பாட்டிலிருந்து கூற்று அடிப்படையிலும் குறிப்பொருள் மற்றும் அடிக்கருத்து அடிப்படையிலும் பரிணாமம் பெற்று வளர்ந்த. ஓர் இலக்கிய வகைக்கு ஒரு நாடகத் தன்மையைக் கொடுக்கின்றன.

குறத்திலிருந்து ''குறவஞ்சி'' நாடகம்

கடவுள் வாழ்த்து, குறத்தி வருகை, தலைவன் பவனி, தலைவியின் காதல், காதல் புலம்பல் குறத்தி மலை வளம், நாட்டுவளம், குறித்திறன், குலச்சிறப்பு கூறுதல். குறி கூறுதல், நிமித்தம் பார்த்தல் என்கிற குறத்திற்குரிய குறிப்பொருட்கள் யாவும் குறவஞ்சி நாடகத்திலும் இடம் பெறுகின்றன. அத்தோடு குறிகேட்கும் தலைவியைச் சார்ந்து தலைவி கும்மியடித்தல், பந்தாடுதல், ஊஞ்சாடுதல், மலர் பறித்தல் என்கிற புதிய குறிப்பொருட்கள் குறவஞ்சியில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தலைவியின் காதற் புலம்பல் என்கிற குறிப்பொருள் நிலவைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல், குயிலைப் பழித்தல், மாலைப் பொழுதைப் பழித்தல், தோழி தலைவி நிலை கண்டு வருந்துதல் எனத் துணைக் குறிப்பொருட்களைப் பெற்று விரிவாக்கம் பெறுகிறது.

மேலும் தலைவியின் காதலுக்கு இணையாக குறத்தியின் காதல் என்கிற புதிய அடிக்கருத்து குறவஞ்சி நாடகத்தில் உருவாக்கம் பெறுகிறது. இதன் விளைவாக குறத்தியின் காதலன் சிங்கனின் வருகை. அவன் தன் நண்பனோடு சேர்ந்து பறவைகளை வேட்டையாடுதல், குறத்தியைத் தேடுதல், குறத்தியைச் சந்தித்தல், குறத்தியோடு தருக்கம் செய்தல் ஆகிய புதிய குறிப்பொருட்கள் குறத்தியின் காதல் என்கிற அடிக்கருத்து சார்ந்து குறவஞ்சி நாடகத்தில் இடம்பெறுகின்றன. தலைவி - தோழி உரையாடல் குறவன் - குறத்தியரின் உரையாடல் என்பன குறவஞ்சி நாடகமாக்கும் முக்கிய கூறுகளாக அமைகின்றன. குளுவ நாடகம் குறவஞ்சி நாடகத்தில் இடம்பெறும் எல்லாவிதமான அடிக்கருத்துக்களும் குறிப்பொருட்களும் குளுவ நாடகத்தில் இடம் பெறுகின்றன. குறவஞ்சிக்கும் குளுவ நாடகத்திற்கும் இடையே ஒரே ஒரு வேறுபாடுதான் உள்ளது. குறவஞ்சியின் கதையின் நோக்குநிலை, அல்லது கதையின் இயக்கம் ''குறத்தி'' என்கிற பாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளது. குளுவ நாடகத்தில் குறவஞ்சியின் காதலனான சிங்கனை/குளுவான முன்னிலைப்படுத்தி கதை விவரிக்கப்படுகிறது; நாடகமாக்கம் செய்யப்படுகிறது

தென்னகத் தெலுங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலின் - இலக்கியத்தின் - தாக்கத்தால் ''கொறவஞ்சி'' இலக்கிய வகை தோற்றம் பெற்றுள்ளது. தமிழ்க் குறவஞ்சி நாடகங்களின் கதையமைப்பைக் கொண்ட நாடகங்கள்/யக்ஷகானங்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. தஞ்சையை ஆண்ட விஜயராகவ மாமன்னார் தாஸ் விலாசமு'' எனும் குறவஞ்சியை இயற்றியுள்ளார். விஜயராகவ நாயக்கன் மீது இராமச்சந்திர மகாராஜாவின் மகள் காந்திமதி கொள்ளும் காதலே இதன் கதைப்பொருளாகும். மைசூரை ஆண்ட சிக்கதேவராயரின் மகனான கண்டீவராஜு (1704-1713) 4 வகை குறவஞ்சி நாடகங்களை இணைத்து ''குறவஞ்சிகட்லே'' எனும் நூலை தெலுங்கில் இயற்றியுள்ளார். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சஹாஜியின் கிரிராஜகவி ''ராமமோஹன கொறவஞ்சியை'' தெலுங்கில் உருவாக்கியுள்ளார். கன்னடத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ''குறவஞ்சியை'' அடிக்கருத்தாகக் கொண்ட யக்ஷகானங்கள் பல எழுந்துள்ளன.

குறவஞ்சி - புராணமயமாக்கலும் தெய்வமயமாக்கலும்:-

தமிழில் பின்னிடைக் காலத்தில் புகழேந்திப் புலவர் எழுதியதாகச் சொல்லப்படும் நாட்டுப்புறக்கதைப் பாடல்கள் சில ''குறவஞ்சியை'' அடிக்கருத்தாகப் பெற்றுள்ளன. இவ்வகையில் துரோபதை குறம், மின்னொளியாள் குறம் எனும் இரண்டு கதைப்பாடல்கள் குறிப்பிடத்தக்கன. இதில் புராணப் பாத்திரங்கள் குறவேடந்தாங்கி வந்து தங்கள் வெற்றியைப் பெறுகின்றனர். மின்னொளியாள் குறத்தில் அர்ச்சுனனின் பல மனைவியருள் ஒருத்தியான சோழன் மகளாகக் குறிப்பிடப்படும் மின்னொளியாள் அருச்சுனனோடு ஊடல் கொள்கிறாள். சிவ பூசையிலிருந்த மின்னொளியாளை அருச்சுனன் தழுவியதே ஊடலுக்குக் காரணம். இவ்வூடலைத் தடுக்க அருச்சுனனின் மனைவியரான திரௌபதியும் அல்லியும் ஒரு சூழ்ச்சி செய்கின்றனர். அதன்படி அருச்சுனன் குறவேடத்தில் சென்று மின்னொளியாளுக்குக் குறி கூறி அவளை அடைகின்றான். துரோபதை குறத்தில் வனவாசத்திலிருந்த பாண்டவர்களுக்கு நகர் நிலையை அறிவிப்பதற்காக பாஞ்சாலி குறத்தி வேடத்தில் சென்று நகர் நிலையை அறிந்து பாண்டவர்களுக்குத் தெரிவிக்கிறாள். இவ்விரண்டு கதைப்பாடல்களிலும் வேடம் போடுவதற்கான வரலாறு நூலின் முன்பகுதியில் இடம் பெறுகின்றன. அது மட்டுமல்லாது அருச்சுனனும், துரோபதையும் குறத்தியர் கக்கத்தில் வைத்திருக்கும் கூடையினை சிவபெருமானிடம் வரம் வேண்டிப் பெறுகின்றனர்.

இதே போன்று தெலுங்கில் மெலட்டூர் ராமசாஸ்திரியின் ''சீதா கல்யாணம்'' எனும் பாகவதமேளாவில் கதைத்தலைவன் குறத்தி வேடத்தில் வந்த கதைத் தலைவியைச் சந்தித்துக் குறி சொல்கின்றான். கன்னடத்தில் ''பார்வதி'' குறவஞ்சியில் பரமேசுவரனின் மனைவியான பார்வதி குறவேடத்தில் அயோத்திக்கு பார்வதியைக் கண்டடைகிறார். தென்திருவிதாங்கூர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட மலையாள நாடோடி நாடகமான குறத்தியாட்டத்தில் இதே போன்று பார்வதி - பரமேஸ்வரன் குறவன் - குறத்தி வேடமேற்று வருகின்றனர். ஏழரை நாட்டுச் சனியிலிருந்து அவர்கள் விலகுவதற்காக பூமியின் இவ்வேடமேற்று வனாந்தரங்களில் சஞ்சரிக்கின்றனர். இங்கு தெய்வங்கள் குறவன் - குறத்தியர் வேடந்தாங்குகின்றனர். அல்லது குறவன் - குறத்தியர் தெய்வீக மயமாக்கப்படுகின்றனர்.

குறவஞ்சியிலிருந்து ஏசல்:-

குறவஞ்சி நாடகத்தில் குறத்தியைத் தேடி வந்து அவளை அடையும் குறவன் அவள் மீது சந்தேகம் கொண்டும் தருக்கம் செய்கிறான். குறவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் குறத்தி சுவையாகப் பதில் சொல்வாள். சான்றுக்கு குற்றாலக் குறவஞ்சியிலிருந்து ஒன்று.

குறவன் : காலுக்கு மேலே என்ன பெரிய விரியன் பாம்பு

குறத்தி : அது சேலத்து நாட்டார் சிலம்பு

குறவன் : முட்டப்படா முலையானையை முட்டவோ சிங்கி

குறத்தி : மண்ணோடு முட்டடா சிங்கா

இவ்வாறு ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்ளும் இப்பகுதி தமிழில் ''ஏசல்'' எனும் ஒரு தணி இலக்கியவகையாகவே வளர்ந்திருக்கிறது. வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஏசல், தோட்டிக்கும் தோட்டிச்சிக்குமான ஏசல் என சென்ற நூற்றாண்டில் முற்பகுதியில் தமிழில் பல ஏசல் நாட்டுப்புற இலக்கிய வடிவில் வெளிவந்துள்ளன.

மலையாளத்தில் புலையர்கள், பாணர்கள் நிகழ்த்தும் புறாட்டு நாடகம், குறத்தி நாடகம், குறத்தியாட்டம் என்னும் நாட்டுப்புற நாடகங்களில் இடம் பெறும் ''குறவஞ்சி'' அடிக்கருத்து குறவன் - குறத்தியருக்கான ஏசலை மையங்கொண்டே அமைந்துள்ளது. ஸ்ரீ செறுபறம்பத்து உண்ணிப்பிள்ள நிகழ்த்திக்காட்டிய குறத்தியாட்டத்தில் குறவன் - குறத்தியர் ஏசலுக்கு இணையாக, குறத்தியர் வேடத்தில் வந்த பார்வதி - மகாலெட்சுமியின் ஏசல் அமைகிறது. இரண்டு தெய்வங்களும் மற்றவரின் கணவரைப் பழித்துப் பேசுகின்றனர்.

லட்சுமி : உன் கணவன் மாடு மேய்த்தவன்

பார்வதி : உன் கணவன் பிச்சையெடுத்தவன்

லட்சுமி : உன் கணவன் காமனை எரித்தான்

பார்வதி : உன் கணவன் வாலியைக் கொன்றான்.

புறாட்டு நாடகத்திலும் குறவன் - குறத்தி புறப்பாட்டில் குறவன் - குறத்தி தருக்கமே பெரிதும் இடம் பெற்றுள்ளது. இது தவிர குறத்தி சிலருக்கு குறி கூறுவதில் குறவன் வருகையும் இடம் பெற்றுள்ளன. பாணர்கள் நிகழ்த்திக் காட்டும் இந்த நாடகக் கூத்தில் தமிழ்ச் சொற்களும் பாடல்களும் மிகுதியாக இடம் பெறுகின்றன. சான்றாக குறவன் புறப்பாட்டில் வரும் குறவன் அருணாகிரிநாதரின் ''திருப்புகழ்'' பாடலை சில வேறுபாடுகளுடன் பின்வருமாறு பாடி வருகிறான்.

''ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே

ஈசனுடெ ஞானமொழி பேசும் முகம் ரண்டே

வள்ளியை மனம் குளிர வைத்த முகம்மூன்றே

அறுபடை சூரரெவதித்த முகம் நாலே

கூறுமடியாரினைத் தவித்த முகம் அஞ்சே

ஆறுமுகமான வடியாரு மறியாதோ.''

பானர்கள் நிகழ்த்தும் காக்காரிஷ’ நாகடத்திலும் குறவன் - குறத்தியர் ஏசலைப்போல காக்கானுக்கும் காக்காச்சிக்கும் ஏசல் வருமாறு நிகல்கிறது.

காக்கான் : சுற்றியுடுத்திப் பட்டுப் பாவாடையது எப்படிப் போச்சுதடீ - காக்காத்தி

காக்காத்தி : சுற்றி ஒடிக்கப் காட்டுக்குப் போனபோது முள்ளில் சிக்கியதடா - காக்கானே

காக்கான் : மூக்கில் கிடந்த கல்லு மூக்குத்தியது எப்படிப் போச்சுதடீ - காக்காத்தி

காக்காந்தி : மொந்தையிலே தண்­ மோந்து குடிச்சபோது மொந்தையில் போனதடா -

இவ்வாறு குறவஞ்சியில் உள்ள ஏசல் என்ற ஒரு குறிப்பொருள் ஒரு முதன்மை அடிக்கருத்தாக தமிழ், மலையாள நாட்டுப்புற வடிவங்களில் வளர்ச்சி பெற்றுள்ள்து. இதன் வளர்ச்சியை தொடர்ந்து தென்னகத் திரைபடங்களிலும் காணலாம்.

முடிவுரை:- பின்னிடைக்கால தென்னிந்திய இலக்கியங்களில் ''குறவஞ்சி'' - ஓர் அடிக்கருத்தாகவும், தலைமைப் பாத்திரமாகவும் இடம் பெற்றுள்ளது. ''குறவஞ்சி'' அடிக்கருத்து குறி சொல்லுதல், காதல் என்கிற முதன்மைக் குறிப்பொருட்களைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் ''குறத்தி'' பாத்திரம் குறிகூறும் பாத்திரமாகவும் கூத்தாடும் பாத்திரமாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. முதன்மை அடிக்கருத்தில் இடம்பெறும் ஒரு துணைக் குறிப்பொருளாக அமைந்துள்ளது. கலம்பக இலக்கிய வகையில் குறத்தி பாத்திரம் ஒரு தலைமைப் பாத்திரமாக - தலைமை அடிக்கருத்தாக - குறம் எனும் உறுப்பாக வளர்கிறது. இதில் மலை வளம் கூறுதல் என்கிற புது குறிப்பொருள் உருப்பெறுகிறது. பாட்டியல் நூல்களில் குறிப்பிடப்படும் ''குறத்திப்பாட்டு'' வகைக்கு உரிய இலக்கிய நூல்கள் தமிழில் கிடைக்கவில்லை. மாறாக மலையாளத்தில் இராமாயணக் குறத்திப் பாட்டு ஒன்று கிடைத்துள்ளது. குறத்திப் பாட்டின் ஒரு கூற்றுத் தன்மையிலிருந்து வளர்ந்து தலைவி மற்றும் பிறர் கூற்றுக்களுக்குரியதாக ''குறம்'' இலக்கிய வகை விரிவடைந்துள்ளது. இதில் குறி கேட்பவளின் - தலைவியின் - காதல் என்கிற புதிய அடிக்கருத்தும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. குறத்திலிருந்து வளர்ச்சி பெற்ற குறவஞ்சி நாடகத்தில் தலைவியின் காதலுக்கு இணையாக குறத்தியின் காதல் என்கிற புதிய அடிக்கருத்து உருவாக்கம் பெறுகிறது; தலைவியின் காதல் நிலை விளையாட்டு காதற் புலம்பல் என்கிற புதிய குறிப்பொருட்களைப் பெற்று விரிவாக்கம் பெறுகிறது. தமிழ்க் குறவஞ்சி நாடகத்தின் தாக்கம் தென்னகத் தெலுங்கு இலக்கியத்திலும் - கன்னட யக்ஷகானங்களிலும் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது. குளுவநாடகம் ''குறத்தி'' நோக்குநிலையில் அமைய, குளுவ நாடகம் குறவன் நோக்குநிலையில் அமைந்துள்ளது. தமிழ், மலையாள, தெலுங்கு நாட்டால் கூத்து, இலக்கிய வடிவங்களில் ''குறத்தி'' பாத்திரம் புராணமயமாக்கலுக்கும் தெய்வமயமாக்கலுக்கும் ஆட்பட்டுள்ளது. இவற்றுள் புராண மாந்தர் தெய்வமாந்தர் குறத்தி வேடந்தாங்கி வருவதாகப் படைக்கப்பட்டுள்ளனர். குறவஞ்சி நாடகத்தில் இடம்பெறும் ''ஏசல்'' தமிழ்-மலையாள நாட்டார் கூத்து வடிவங்களில் புதிய பாத்திரங்களின் பின்னணியில் வளர்ச்சி பெற்றுள்ளன.

 

கருத்துகள் இல்லை: