நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமியமும் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். ஆங்கிலத்தில் Folklore என்ற வார்த்தையை வில்லியம் ஜான் தாமசு (William John Thomas) என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் 1846-ல் உருவாக்கினார். இதற்கு முன்னர் பொது மக்களைச் சார்ந்த மரபு முறைகள் (popular Antiquities) என்ற சொல் வழக்கில் இருந்து வந்தது. தொல்காப்பியர் பண்ணத்தி என்ற நாட்டுப்புறப் பாடல்களைக் கூறுவார்.
வகைகள்:-
நாட்டுப்புறப் பாடல்களை அகம் எனவும் புறம் எனவும் பகுக்கலாம். வீட்டிற்குள் பாடப்படும், தாலாட்டு, ஒப்பாரி, விளையாட்டு, காதல், திருமணம், குடும்பம் ஆகியவை பற்றிய பாடல்களை அகப்பாடல்கள் என்றும் தொழில், தெய்வ வழிபாடு, ஊர்வலம், நாட்டுச் சிறப்பு, கலகம், பஞ்சம் ஆகியவற்றைப்பாடும் பாடல்களைப் புறப்பாடல்கள் என்றும் பகுக்கலாம்.
காதல்:-
காதல் என்பது மனிதனின் பருவ காலங்களின் வசந்தப் பாடல், அனைத்து உயிர்களிலும் இக்காதலைக் காணமுடிகின்றது. ஆண்மையும் பெண்மையும் ஒன்றில் ஒன்று கவரப்படுகின்றது. இனப்பெருக்கத்தின் முன்னோடியாக - முதல்படியாக அமைந்த காதல். பின்னர் இனத்தின் சிறப்புக்கே காரணமாகவும் அமைந்துவிட்டது. காதல் கொள்ளாத மனிதரே இன்று வரை இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம். ஆதாம் ஏவாள் தொடங்கி அடுத்தாத்து அம்புஜம் வரை இக்காதலை உயிராக எண்ணி வருகின்றனர். தோல்வி பெற்ற காதல்கள் காவியங்கள் ஆகியிருக்கின்றன.
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல்
என்று இளமைத் துடிப்பு நிறைந்த பாரதி காதலை உயர்த்திப்பாடினர். அக்காதலர்கள் சாவைத் தழுவிய பின்னரும் இன்றும் சரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தொல்காப்பியர் ஏழு திணைகளிலும் காதலைப் பற்றி இலக்கணம் வகுத்திருக்கிறார். திருவள்ளுவர் மலரினும் மெல்லிது என்றார். இளங்கோ அடிகள் காதலைக் குழைத்தே மாதவியைப் படைத்திருக்கிறார். காதலைப்பாடாத கவிஞர்கள் கவிஞர்களே அல்ல என்று சொல்லும் வகையில் காதலைப் பாடியிருக்கிறார்கள்.
காதலை எல்லோரையும் போலவே நாட்டுப்புற மக்களும் அனுபவிக்கிறார்கள். அக்காதல் உணர்வால் அவர்கள் தாம்பாடும் பாடல்களின் மூலம் தங்களைத் தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டுரையில் இப்பாடல்களை ஆராய்வதே நோக்கம்.
காதல் பாட்டின் அமைப்பு:-
நாட்டுப்புறக் காதல் பாடல் எல்லாம் நாடகக் கூற்றாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. இப்பாடல்களின் மூலம் ஆயிரமாயிரம் கலித்தொகைகளையும், காமத்துப்பால்களையும் படைக்கலாம். அத்தனை அளவுக்கு இப்பாடல்கள் சுவைகளையும் சிறப்புகளையும் பெற்றுத் திகழ்கின்றன. தலைவியின் கூற்றாக அமையும் பாடல்கள் ஆசைகளையும் வெளிப்படுத்துகின்றன.
மறந்திரு மறந்திருண்ணு
மனுசரெல்லாஞ் சொல்லுராக
மல்லிகைப் பூ வாசகத்தை
மறக்கமனம் கூடுதில்லை
என்பது போல் அவள் மட்டும் பாடும் பாடல்கள் உண்டு. தலைவன் கூற்றாக அமையும் பாடலும் உண்டு.
வாழையடி உன் கூந்தல்
வைரமடி பல்காவி
ஏழையடி நானுனக்கு
இரங்கலையே உன்மனசு
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இனிய நினைவுகளும் இவனது பாடலில் எதிரொலிக்கின்றன, தலைவனும், தலைவியும் சந்தித்துத் தங்களுக்குள் பாடல்கள் மூலமாக உறவாடிக் கொள்வது போன்று அமைந்த பாடல்களும் உண்டு. இவை வினா, விடைகளும், வேண்டுகோள்களாகவும் அமைகின்றதைக் காணலாம்.
ஆண் முத்துப் போல் பல்லழகி
முகங்கோணா சொல்லழகி - என்னைக்
கண்டாக் கசக்கு தோடி
கருத்து ஒண்ணூ ஆன பின்னே
பெண் கண்டால் கசக்காது
கருத்துள்ள அத்தானே - நான்
ஊரார் நகைக்கஞ்சி
ஓடுகிறேன் வெகுதூரம்
என்று காதலர்கள் பேசிக்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் துறந்து தாய் தந்தையரை மறந்து காதலனின் அன்பு மட்டுமே சிறந்து நிற்கும் நிலையையும் காண்கிறோம்.
உங்களை நெனச்சு நெனச்சு
உருகிச்சே எம்மனசு
சொந்த வீடு போல நீங்க
நெனச்சிருந்தா சொகுசு
ஓயாம தவம்செய்து
உருக்கமாப் பெத்தெடுத்த
தாயையும் தகப்பனையும்
மறந்தேன் உங்களாலே
என்று கூறும் காதலியை நோக்கிக் காதலன்
உன் குணத்துக்காக என்
உயிரையே தத்தம் செய்வேன்
மாங்கனியே என்சொத்தும் - நானும்
உனக்கே உனக்கே உனக்கே
உன்னைப் பாத்த நாள்முதலா
ஒரு நாளும் சாப்பிடலே
உன் முகம் என் மனதில்
பதிஞ்சிச்சே பதிஞ்சிச்சே
இவ்வாறு கூறுகிறான். காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலன் காதலிக்குக் சிறு சிறு அன்பளிப்புகளை அளிப்பதாகக் கூறுவதும் காதலி தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கூறுவதையும் விவரிக்கும் சில பாடல்கள் இலட்சியக் காதலாக இல்லாவிடினும் உலக நடைமுறையில் காணப்படும் இயல்பான காதலைக் காட்டுகின்றன.
முத்துமாலை வாங்கித் தாரேன்
மேலான கம்மல் தாரேன்
பத்தினியே உனக்கு - என் ஆசைக் கண்ணாட்டி
பளிங்கைப் போலப் பவளந்தாரேன் என் நேசக்கண்ணாட்டி
என்று காதலன் பாட
சம்பங்கி எண்ணெய் வேணும்
சைனாப்பட்டுச் சீலை வேணும்
பம்பாய்ச் சோப்பு வேணும் - என் திலக மச்சானே
இது போன்ற நீண்டதொரு பட்டியலைக் காதலி ஒப்புவிக்கிறாள் இது பல பாடல்களில் இடம்பெறுவதை நோக்க நாட்டுபுற நடைமுறையுலகில் வாழ்பவர்களாகத் தோன்றுகிறார்கள். கற்பின் சுவை காதல் பாடல்களில் அதிக அளவில் உண்டு.
ஒரு நாள் ஒரு பொழுது
உன்றன் முகம் பாறாமள்
ஊருணிக் கரையோரம்
உலுப்பிவிட்டேன் கண்ரை
என்ற பாடலில் ஊருணி நிறைந்தது அவர் கண்ரால் என்பது அதிக கற்பனை என்றாலும் அழகுக் கற்பனை.
இலக்கியப் பார்வை:-
எண்வகைச் சுவைகளும் இலக்கியத்துக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். இச்சுவைகளை எல்லாம் நாட்டுப் புறக் காதல் பாடல்களிலும் கண்டு கொள்ளலாம்.
இங்கிலீசு படிக்கையிலே - உங்களை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்
என்று அவள் கேட்பது நகையையும்
மறந்திட்டிருப்பதினும்
இறந்திட்டாலும் குத்தமில்லை
என்று அவள் தேம்புவது அழுகையையும்
எலும்பிருக்கச் சதைகுறைய
என்ன குத்தஞ் செய்தேனையா
என்று அவள் திகைப்பது இளிவரலையும்
மாடப்புறா வென்று - என் கண்ணம்மா
மதிமயங்கிப் போனேண்டி
என்று அவன் பாடுவது வியப்பையும்
பாரடா என் முகத்தை
பழிவந்து சேர்ந்திடுமே
என்று அவன் விலகுவது அச்சத்தையும்
காடு மலை தாண்டி
கரடி புலி வாயைக்கட்டி
வருவதாக அவன் கூறுவது பெருமிதத்தையும்
விருப்பமில்லை உன்மேலே
வேறுஇடம் தேடிக் கோடா
என்று அவள் விலகுவது வெகுளியையும்
மாராப்பு சேலைக்குள்ளே உண்டு
மாங்கனியும் இருக்கக் கண்டேன்
என்று அவன் மகிழ்ந்து கூறும் இன்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு எண் சுவைகளும் இங்கு எடுத்தாழப்படுவது இதன் இலக்கியச் சிறப்பு.
ஒப்பியல் பார்வை:-
ஒப்பிட்டுப் பார்ப்பது உவகையை அளிக்கும் செயலாகும். நாட்டுப்புறக் காதற் பாடல்களுடன் இலக்கியப் பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழக நாட்டுப்புறப் பாடல்களோடு பிற மொழியிலுள்ள நாட்டுப்புற பாடல்களையும் ஒப்பிடலாம். அகத்திணைகள் ஏழு என்பர். அவ்வேழு அகத்திணைகளையும் நாட்டுப்புறக் காதற் பாடல்களில் காணலாம்.
சங்க இலக்கியப் பாடல்களோடும் நாட்டுபுறக் காதற் பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிலவு வெளிப்பட வருந்தும் சங்கத் தலைவி
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே (குறுந் 47)
என்று பாடுகிறாள், நாட்டுப்புறத் தலைவியும்,
வெள்ளை வெள்ளை நிலாவே சாமி
வெளிச்சமான பால் நிலாவே
கள்ளி நிலாவே நீ
கருக்கலிட்டால் ஆகாதோ
என்று நிலவால் வந்த துன்பத்தைக் கூறுகிறாள்.
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல் என் வருந்திய உடம்பே (நற் 284)
என்று சங்கத்தலைவி வாடுவது போன்று
கல்லான மேனியெல்லாம்
கயிறாய் உருகிறேண்டி
என்று நாட்டுப்புற காதலனும் வாடுகிறான். தமிழக நாட்டுபுறப் பெண் பாடுகிறாள்,
சோளம் விதைக்கையிலே
சொல்லிவிட்டுப் போன மச்சான்
சோளம் பயிராச்சே
சொன்ன சொல்லும் பொய்யாச்சே
சட்டை போட்டு மார்பிறுக்கித்
தண்ர் சுமக்கும் மச்சி - உன்
தங்கநிறக் கையாலே கொஞ்சம்
தண்ர் தந்தால் ஆகாதோ
என்று தாகமுடன் தமிழக நாட்டுப்புறக் காதலனும் பாடுகிறான். அனைத்து உயிர்களிலும் இக்காதலைக் காணமுடிகிறது. இரண்டு மாடப்புறாக்களும், மந்திகளும், மான்களும், மீன்களும் ஒன்றில் ஒன்று மயங்கி, மருவிக் காதல் செய்வதுண்டு. மனிதனைப் போன்று அவை போலியாகவோ, புனிதமாகவோ ஆக்காமல் காதலை இயற்கையாகவும் இயல்பாகவும் அனுபவிக்கின்றன.
காதற்பாடல்களின் அடிப்படைக் கருத்துகளாகப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் கலந்திருக்கும், பிரிவிடைத் துன்பமும் உறவிடை இன்பமும் இப்பாடல்களில் காணலாம். காதற்பாடல்கள் காதலர்களுக்கு மட்டுமின்றி அல்லாதார்க்கும் இன்பமளிக்கின்றன.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக