29/03/2011

தமிழ் நெஞ்சங்கள் மறவாத மூன்றெழுத்து - கி.வா.ஜ. - டி.எஸ்.ஜம்புநாதன்

கி.வா.ஜ. என்று தமிழ் கூறும் நல்லுலகம் மதிப்புடனும், மரியாதையுடனும் அழைக்கும் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றுள்ள கி.வா.ஜ. அவர்களுக்கு இந்தச் சிறு கட்டுரை ஒரு காணிக்கை.

தமிழ்த் தந்தை கி.வா. ஜகந்நாதன் அவர்கள் 1906ம் ஆண்டு ஏப்ரல் திங்களன்று திரு. வாசுதேவ ஐயர் அவர்களுக்கும் பார்வதியம்மாளுக்கும் பிறந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரிவதற்கிணங்க அவர் கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருவாசகம் ஆகிய பக்தி இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கத் துவங்கினார். ஒன்பதாவது படிக்கும் போதே செய்யுட்கள் எழுதத் துவங்கினார். நடராஜரைப் பற்றி எழுதிய ''போற்றிப் பத்து'' என்ற பதிகமே அவருடைய கன்னி முயற்சி.

காந்திஜியின் விடுதலை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு, சர்க்காவில் நூல் நூற்று, கதர் ஆடைகளையே அணியத் துவங்கினார். இறுதி நாள் வரை தூய கதர் ஆடையையே அணிந்து வந்தார்.

தமிழ்த்தாயின் கருணை நோக்கினால் உ.வே. சாமிநாத அய்யர் அவர்களுடன் அவருடைய சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு தமிழ் வரலாற்றில் ஒரு பொற்காலத்தைத் துவக்கி வைத்தது என்றே சொல்லலாம். கல்லூரியில் படிப்பதை விட உ.வே.சா. அவர்களிடம் தமிழ் மாணவனாக இருப்பதையே கி.வா.ஜ விரும்பினார். சங்க நூல்கள், காவியங்கள், பிரபந்தங்கள் உள்ளிட்ட பல பாடங்களை உ.வே.சா அவர்களிடம் ஒரு நாளைக்குப் பதினோரு மணி நேரம் கற்றுக் கொண்டதோடு, குருவின் ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தார். ''உ.வே.சா அவர்களுக்குக் கி.வா.ஜ. ஒரு செந்தமிழ் வாரிசு'' என்று அவருடைய நினைவு அஞ்சலி மலரில் குறிப்பிடுகிறார்கள்.

1932ம் ஆண்டு ''கலைமகள்'' பத்திரிக்கை துவங்கியபோது கி.வா.ஜ. அவர்களைப் பதிப்பாசிரியராக உ.வே.சா. அவர்கள் சிபாரிசு செய்தார்கள். துவங்கிய அன்று முதல் இறுதி வரை அவருடைய வாழ்க்கையுடன் கலைமகள் ஒன்றியிருந்தாள். ஒரு இலட்சியப் பத்திரிக்கையாக அதை நடத்தி வந்தார். பத்திரிகைப் பணி, உ.வே.சா. அவர்களுடன் இடையறாத தமிழ்ப் பணி என ஓய்வின்றி உழைத்தார்.

1942-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தன் தந்தையை இழந்த நான்கே நாட்களுக்குள் அவரின் குருவான சாமிநாத அய்யரை இழந்தது தான் அவருக்குப் பேரிழப்பாக இருந்தது. அவரின் வரலாற்றை என் ஆசிரியர் பிரான் என்ற தலைப்பில் நூலாக எழுதி நிறைவு செய்தார்.

கி.வா.ஜ. ஒரு பன்முகம் கொண்ட தமிழ் வித்தகர். தனது எளிமையான பேச்சாற்றலால் உலகத்தைக் கவர்ந்தவர். அவர் பங்கு பெறாத பட்டி மன்றங்கள் கிடையாது. அவருடைய பேச்சில் நகைச்சுவையும், நடைமுறை உதாரணங்களும் கலந்து மிகக் கடினமான பொருட்களைக் கூட எளிதாகக் காட்டும். அவருடைய சிலேடைகள் மிகவும் பிரபலமானவை. அவருடைய சிலேடைப் பேச்சுக்களே தனி நூலாக வெளிவந்துள்ளது. அவர் நாட்டுப்புற இலக்கியத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு பல கிராமங்களுக்குச் சென்று, பாடல்களையும், பழமொழிகளையும் சேகரித்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஏற்றப் பாடல்கள், திருமணப் பாடல்கள், தெய்வப்பாடல்கள், சுவையான தமிழ்ப் பழமொழிகள் என நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கியவர். கி.வா.ஜ. அவருடைய கதைகளில் நகைச்சுவை இழையும். பிற மொழிக் கதைகளையும், புராண வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதைகளையும் அவர் தந்திருக்கிறார்.

ஜோதி என்ற பெயரில் அவர் கவிதைகள் பல பொழிந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருக்கு ''வாகீச கலாநிதி'', ''திருமுருகாற்றுப்படை அரசு'' என்ற பட்டங்களை வழங்கியுள்ளார். செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

டாக்டர் உ.வே.சா. அவர்கள் தமிழ்த் தாத்தா என்றால், இவர் இன்றைய இலக்கிய மாணவர்களுக்குத் தமிழ்த் தந்தையாவார். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தமிழ்ச் சொத்துக்களோ 150க்கும் மேல் 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் ''மூச்செல்லாம் தமிழ்'' என்று இருந்த கி.வா.ஜ. அவர்களின் வாழ்வு நிறைவடைந்தது.

அவரைப் பற்றி எழுத்தாளர் அகிலன் கூறியுள்ள ஒரு மேற்கோள்:-

திரு. கி.வா.ஜ. அவர்கள் ஒருவர் தான். ஆனால் அவரைத் தமிழ்த் தாத்தாவின் சீடராகக் காண்பவர்கள் பலர். கலைமகள் ஆசிரியராகக் காண்பவர்கள் பலர். எழுத்தாளராகக் காண்பவர்கள் பலர். கவிஞரான ஜோதியைக் காண்பவர்கள் பலர். தலை சிறந்த பேச்சாளராய், சமயத்துறை அறிஞராய்க் காண்பவர்கள் பலர். எல்லோருமே அவரை எந்த உருவில் கண்டாலும், அங்கே அவர் அன்பு நிறைந்தவராக, பண்பின் உருவமாக, உழைப்பிலும், உள்ளத்திலும் உயர்ந்தவராகவே தோற்றமளிக்கிறார்.

கோவை மாவட்டத் தாலாட்டுப் பாடல்கள் அமைப்பு முறை - ஆறு நிலைபாடுகள்

முனைவர் மா. நடராசன் - 21 September, 2005

தாலாட்டில் தாயினுடைய ஆழங்காண முடியாத பாசத்தையும், அவள் தன் குழந்தை மூலம் பெற விரும்பும் எதிர்பார்ப்பின் விரிவையும் காணமுடியும். அதுவும் தனக்குத் தெரிந்த இசைக்கு ஏற்பச் சொற்களை வசப்படுத்தி வரிசைப்படுத்தும் படைப்பாக்கம் (Creativity) அந்த மனதுக்கும் ஆசைக்கும் உரிய வெளிப்பாடாகத் திகழ்கிறது. தாலாட்டு அழும் குழந்தையைத் தூங்கவைக்கும் ஆற்றல் கொண்டது.

இக்கட்டுரையில் தாலாட்டுப் பாடலின் படைப்பாக்கத்தில் (Creativity) காணப்படும் அமைப்புமுறை (Structure) ஒழுங்கையும் அதன் மூலம் தாயின் கருத்தியல் பெறும் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தின் தாலாட்டை மாரியம்மன் தாலாட்டு குழந்தைத் தாலாட்டு என இருவகை உள்ளது. இவ்வாய்வுக்குக் குழந்தைத் தாலாட்டுப் பாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஆலாபனை பல நோக்கத்தை உள்ளடக்கியது. தன் குறிக்கோளைச் சரிசெய்து கொள்வதற்கும், தயார்படுத்துவதற்கும் எங்கோ என்ன என்னவோ பேசிக்கொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைத் தன் வசப்படுத்தி ஒருமுகப்படுத்தவும் ஆன முதன்மைத் தேவைக்காக அது பயன்படுகிறது எனப் புரிந்துகொள்ளப்பட நேர்கிறது. அதுபோலக் குழந்தை அழுவதிலிருந்து மாற்றி, தூங்க வைக்கும் நோக்கத்திற்காகவும், குழந்தைக்கு இன்பம் ஊட்டி அதன் துன்ப மனநிலையிலிருந்து மாற்றித் தன் வசப்படுத்துவதற்காகவும், பாடப்போகும் தாலாட்டில் நல்ல வடிவமைப்புச் செய்யவும் தொண்டையைச் சரி செய்து கொள்ளவும், பாட்டுக்கட்ட ஏற்ற மனநிலையை உந்தி உருவாக்கவும் ஒரு வகை இன்ப அதிர்ச்சி தேவைப்படுகிறது தாய்க்கு அல்லது தாலாட்டுப் பாடுபவளுக்கு அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் ஓசையாக அமைக்கப்படும் ஒலி வடிவம்தான்.

''ராரீ ராரீ ராரா ரோ

தூரீ தூரீ தூராரோ...''

என்பது போன்ற கட்டமைப்பு. இங்கு தூரி என்பது பெயர்ச்சொல், தூரியின் வடிவம் வேறு; தொட்டிலின் வடிவம் வேறு. தொட்டில் என்பது தொட்டி என்ற சொல்லின் அடிப்படையால் வந்தது. தொட்டி ... தொட்டில்... தொட்டல் என்று மாறி மாறி வழங்குகிறது. தூளிதான் தூரி என்று ஆகியுள்ளது.

ஒற்றைக் கயிற்றை வீட்டின் உள்ளே விட்டத்திலோ, வெளியே மரக்கிளையிலோ, கயிற்றின் இரு முனைகளைக் கட்டிக் கயிற்றின் கீழ்ப்பாகத்தில் U வடிவில் இருக்கும் அந்தத் தொங்கு பகுதியில் உட்கார்ந்து ஆடுவதைத் தூரி ஆடுவது என்று இன்றும் ஆடிப் பதினெட்டுக்குக் கோவை மாவட்டத்தின் கிராமங்களில் ஒரு விளையாட்டாகக் கடைபிடிக்கப்படுவதுண்டு. ஆடிப் பதினெட்டாம் நாளைத் தூரி ஆடுகிற நோன்பி.. என்றே குழந்தைகள் சொல்லிக் கொள்வதுண்டு.

தொட்டில் என்பது செல்வந்தர்கள் விலையுயர்ந்த மரத்தால் செய்து சங்கிலியால் கட்டித் தொங்கவிடுவர். அது கட்டில்போல வடிவுடையது. ஆனால் நாலாப்பக்கமும் குழந்தை புரண்டு தரையில் விழாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். 3 அடி நீளம், 2 அடி அகலம் உடையதாக இருக்கும். நாலாப்பக்கமும் உள்ள தடுப்பு ஒன்றரை அடி உயரம் இருக்கும். இப்போது மருதுவமனைகளில் அதைத்தான் பயன்படுத்துகின்றனர். சேலையில் தொட்டில்கட்டு என்ற வழக்கம் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் அது செல்வந்தர்களைப் பார்த்துப் பழக்கப்படுத்திக் கொண்டே மேனிலை ஆக்கம் (Sanskritisation) என்று கருத வேண்டும். கிராமப்புற ஏழைகளாகிய பெரும்பான்மையினர் வீட்டில் தூரி (தூளி) தான் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்கும் படுக்கை. அது சேலையின் அல்லது போர்வையின் (துப்பட்டு என்றும் சொல்லப்படும்) இரண்டு முனைகளைக் கயிற்றால் பிணைத்து விட்டத்தில் அல்லது மரக்கிளையில் இடைவெளி விட்டுக் கட்டிவிடுவர். அதன் கீழ்ப்பகுதியான தொங்கு பகுதியில் குழந்தையைப் படுக்கவைப்பர். அது தாயின் வயிற்றுக்குள் இருப்பது போன்ற சுகத்தை நல்கும். அதைத்தான் தூரி (தூளி) என்று சொல்வர் கோவை மாவட்டத்தில். அதனால்தான் தாலாட்டின் தொடக்கம் அந்தத் தூரியை ஒட்டிய சிந்தனையின் அடிப்படையில்,

''தூரீ தூரீ தூராரோ

ஆரீ ராரீ ஆராரோ...''

என்று அமைந்துள்ளது. ஆராரோ ஆர் இவரோ என்று (யார் யாரோ, யார் இவர் யாரோ) தத்துவ விளக்கம் கொடுப்பது நம்முடைய மேதாவித்தனமான இட்டுக்கட்டல் தானே ஒழியக் கோவை மாவட்டத்துக் கிராமத் தாய்மார்களின் எதார்த்தமான நடப்புச் சிந்தனை (Current Thinking) ஓட்டத்தைச் சொல்வதாக அமையாது.

தூரிகை (தூளியை)ச் சொன்னவுடனே அந்தத்தூரியில் படுத்திருக்கும் குழந்தையைத் தானே யாருக்கும் உடனடி நினைவாக வரும். அந்தக் குழந்தையைப் பற்றிய தன் ஆசை மொழியை, பாசமொழியை வரிசைப்படுத்தி இசைக்கு ஏற்றவாறு கவிதை ஆக்குகிறாள். பாசத்தின் காரணமாக ஆசையின் வெளிப்பாடாகக்

''கண்ணுமணி பொன்னுமணி கந்தரோட வேலுமணி..'' என்று விளிக்கும் வகையில் அமைக்கிறாள். இதில் அக்குழந்தை அவளுக்குக் கண்ணின் கருமணி போன்றது, தங்கத்தின் அளவுக்கு மேன்மையானது, தெய்வத்தின் கையில் மின்னி, சூர பத்மன் போன்ற துஷ்டர்களை அழித்துக் காக்கக்கூடிய வேலின் வெளிச்சம் போல மின்னுவது என்ற பெருமைகளையும் மகத்துவங்களையும் ஆசையால் அடுக்குகிறாள்.

அடுத்து, அந்தத் தாயின் மனதில் ஆசையும் பாசமும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏன் இவ்வளவுக்கு உயர்ந்ததாக விளங்குகிறது? என்ன காரணம் என்று அவளே தனக்குள் கேட்டுக் கொண்டு பதிலை அமைத்துக் கட்டுகிறாள்.

கிடைத்தற்கரிய பொருளைக் கண்டாலோ, மிகமிகக் கஷ்டப்பட்டுப் பெறும் பொருளைக் கண்டாலோ, மற்றவர்களுக்கெல்லாம் கிடைக்காத பொருள் தனக்கு மட்டுமே கிடைத்துவிட்டாலோ அந்தப் பொருள் மீது ஒருவருக்கு அதீத ஆசையும் வெறியும்தானே தோன்றும். அந்த அடிப்படையில்தான் அடுத்து,

''வேலுமணி வேணுமின்னு வெகுநாளாத் தவமிருந்து

தவத்தூக்க அழுத கண்ணு தவமணியாய் வந்த கண்ணு''

என்று அத்தாலாட்டில் கட்டப்படுகிறது.

''தவம் இருந்து பெற்ற குழந்தை நீ...''

தவத்துக்கே தடைகள் வந்தபோது, அழுது அழுது தவம் இருந்த என்னுடைய கண்ணின் மணியாய் வந்த கண்ணே!... என்று பொருள்பட அமைகிறதல்லவா?

இந்தத் தாலாட்டுப் பாட்டின் அவசியம் என்ன? அந்த அவசியத்துக்குக் காரணமான அழுகைக்குக் காரணம் என்ன? என்ற சிந்தனை அந்தத் தாயின் மனதில் எழுகிறது! அதுதானே முறை! அதுதானே உளவியல் ரீதியில் (Psychological Attitude) சாதாரணத் தாய்க்குத் தோன்றும், உருவாகும் அடுத்த படிநிலை! அழுவது நீதானே! நான் காரணமில்லையே! நீதானே அந்தக் காரணத்தைச் சொல்ல வேண்டும்! அந்தக் காரணத்துக்குக் காரணமானவரைச் சொல்லி அழவேண்டுமே! நீ அதைச் சொல்லிவிட்டால் அவருக்குத் தண்டனை கொடுக்கத் தயார்! சொல் எனக்கேட்பது போல அடுத்த அடிகள்,

''ஆரடித்தார் நீ யழுக என் கண்ணே நீ அடித்தாரைச் சொல்லியழு.. அடித்தாரைச் சொல்லியழு! ஆக்கினைகள் செய்து வைப்போம்''

என்று அழைக்கப்படுகின்றன.

அந்தத் தாய்க்கு இந்தக் கேள்விகளைக் கேட்ட உடனே, உன்னை மற்றவர்கள் அடிப்பதற்கு உனக்குக் குறைந்த தகுதியோ, பழிக்கப்படும் குற்றமோ இருக்கின்றனவா? இல்லையே என்ற ரீதியில் அடுத்த அடியை சமைக்கிறாள்.

''ஆண்பனையின் நொங்கே! அணில் கோதா மாம்பழமே..!''

என்பது அந்த அடி.

ரோஜாப்பழம் என்று சொன்னால் எப்பேர்ப்பட்ட படிமம் தோன்றி உயர்வையும் மென்மையையும் மேன்மையையும் ஆய்வாளர்களுக்குத் தோற்றுவிக்குமோ அதைவிட மிக உயர்ந்த சிறப்பையும் மென்மையையும் மேன்மையையும் ....ஆண்பனையின் நொங்கு... என்ற (image) படிமம் தோற்றுவிக்க வேண்டும். அணில் கோதா மாம்பழம் என்பது மாசற்ற தன்மையை உணர்த்தும் சொல்லாட்சி.

இதற்கு அடுத்து, இதற்கு முன் பேசிய கருத்தைத் தொடர்கிறாள்.

உன்னை மற்றவர்கள் அடிக்கமுடியாது! உன்னைச் சார்ந்தவர்கள், உன் ரத்த உறவுடையவர்கள்தான் அடித்திருக்க முடியும். அதுவும் விளையாட்டுக்குத்தான் அடித்திருப்பார்கள் என்ற அர்த்தமும், அப்படியே அடித்திருந்தால் கூட அவர்களை ஆக்கினைகள் செய்துவிட முடியும்! அமைதியாய் உறங்கு! அழ வேண்டாம்... என்று ஆறுதல் சொல்வது போன்ற அர்த்தமும் தீவொனிக்கும் வகையில்

''அண்ணன் அடித்ததுண்டோ... அக்காவும் வைததுண்டோ!

கூப்பிடு நான் கேட்பேன்! குஞ்சரமே கண்ணுரங்கு...''

என்ற அடிகள் அமைக்கப்படுகின்றன, கட்டப்படுகின்றன.

அப்படியெல்லாம் அடிக்க மாட்டார்கள்! நீ வம்புக்கு அழுகிறாய்! உன் வாயில் அழுகையால் ஊறும் நீர் தேன் அல்லவா? தேனாகவே எனக்கு இருந்தாலும் உனக்கு உன் மெல்லிய செல்லமான வாய் நோகுமே! ஆகவே அழாதே! அதையும் மீறி நீ ஆழுகிறாய் எனில் உன்னை யாரோ ரத்த பந்தத்தினர்தான் அடித்திருக்க வேண்டும்! என்று உறவு முறைகளையெல்லாம் சொல்லி அவர்கள் அடித்தார்களோ? இவர்கள் அடித்தார்களோ? எதைக் கொண்டு அடித்தார்களோ? என்று அடுக்கடுக்காக வினாவைத் தொடுக்கிறாள்?

''வம்புக்கோ நீ ஆழுதாய் உன் வாய் எல்லாம் தேனூறு!

தேனுந்தான் ஊறுதோ உன் செல்வவாய் நோவாதோ?

பாலுந்தான் ஊறுதோ உன் பவளவாய் நோவாதோ?

மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச்செண்டாலே...''

என அப்பாடல் தாயின் உளவியல் ரீதியாகத் தொடர்கிற வகையில் அமைப்பு (Structure) கட்டப்பட்டுள்ளது

அந்த உளவியல் அணுகு முறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதால் ஆறு நிலைபாடுகள் தான் கோவை மாவட்டத் தாலாட்டுப் பாடலின் வடிவத்தை அதாவது அமைப்பை (Structure) நிர்ணயிக்கின்றன என்று சொல்லவேண்டும் அவை வருமாறு.

1. தன் தாலாட்டின் வடிவ (Structure) இசையைத் தாயின் சொல்லாட்சித் திறமைக்கேற்ப நிர்ணயிக்கும் தொடக்கம் ''தூரி தூரி! ஆரீ ஆரீ...'' என்ற சொல்லாட்சியால் உருவாகிறது.

2. குழந்தையின் சிறப்பை உணர்த்தும் மனநிலை வெளிப்பாட்டச் சொல்லாடல்.

3. குழந்தையைப் பெற்றெடுத்த மேன்மை உணர்த்தும் சொல்லாடல் (தவம்தான் மேன்மை)

4. அவ்வாறு பெற்ற குழந்தை அழும் அளவுக்கு வேறு குறையில்லை. யாரோ உறவுக்காரர்கள் விளையாட்டுக்காக அடித்திருப்பார்கள். அதுதான் காரணம் எனத் தீர்மானம் வெளிப்படுத்தப்படும் சொல்லமைப்பு.

5. தன் குழந்தை அழுவதும்கூடத் தனக்கு இன்பம் தரும் என்றாலும் அந்த அழுகை தன்குழந்தைக்கு வருத்தத்தை உண்டாக்குமே என்ற வெளிப்பாடு.

6. உறவுமுறைகளை வரிசையாக அடுக்கி விசாரித்தல் அதன் மூலம் எல்லாரையும் விடத் தாயாகிய தானே பலம் வாய்ந்தவள் என்பதை வெளிப்படுத்தும் உறுதிப்பாடு.

நன்றி: வேர்களைத்தேடி 2005

 

கருத்துகள் இல்லை: