சங்க காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன! - ச. சுப்புரெத்தினம்


இளம் பெண்களின் கைகளுக்கு அவர்கள் அணிந்திருக்கும் வளையல்கள் அழகூட்டுவனவாகும். அகத்திணைத் தலைவன் ஒருவன், தான் விரும்பிய தலைவியை ஊரறியத் திருமணம் செய்து கொள்ளக் காலம் தாழ்த்துகிறான். இதனால் அவனது தலைவியும் தலைவியின் தோழியும் வருத்தமுறுகின்றனர்.


இந்நிலையில், களவில் இரவு நேரத்தில் தலைவியின் இல்லத்தருகே வந்து தலைவியின் கண்ணில் படாமல் நின்று கொண்டிருக்கிறான் தலைவன். இதனையறிந்த தோழி, அவனது வருகையை அறியாதவள்போல் நின்றுகொண்டு, தலைவியின் இக்கட்டான நிலையை அத்தலைவனுக்குப் புலப்படும்படி தலைவியிடம் கூறுவாள்போல் பின்வருமாறு கூறுகின்றாள்:


'மழைக்கால ஆம்பல் மலர்போன்ற தோற்றத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு கொக்கினது பார்வைக்கு அஞ்சித் துன்புற்ற நண்டு, அதனிடமிருந்து தப்பி, கட்டறுத்துக் கொண்டு விரைந்து செல்லும் எருதினைப் போன்று, அருகிலுள்ள தாழஞ்செடியின் வேருக்கு அருகேயுள்ள தனது வளையினுள் புகும்பொருட்டு விரைந்து செல்லும் அத்தகைய கடல்துறையை உடையவன் தலைவன். அவன் தலைவியாகிய உன்னைக் காண வாராதிருந்தாலும் இருக்கட்டும். ஏனென்றால், அவனது வருகை தொடர்பாக இரண்டு இடையூறுகள் உள்ளன.


முதலாவது, களவு ஒழுக்கத்தில் தலைவன் இங்கு வருதலென்பது, பிறரறிந்து தூற்றவும் பின்பு தலைவியாகிய உன்னை “இற்செறித்தல்” (வெளியே வரத் தடை விதித்து இல்லத்தே அடைத்து வைத்தல்) செய்யவும் காரணமாகி, அது நமக்கு இன்னலைத் தந்துவிடும். இரண்டாவது, அவன் வாராமலிருந்து விட்டாலோ, உனது தோள்கள் மெலிந்து, கைவளையல்களும் நெகிழ்ந்துவிடும்.


ஆக, இவ்விரண்டும் துன்பம் தரக் கூடியனவே ஆயினும், இவற்றுள் தலைவன் வாராத வழி, கைகளுக்கு மிகவும் பொருந்திய அளவிலான பெரிய வளையல்கள் உனது உடல்மெலிவால் கழன்று வீழ்ந்துவிட்டாலும் பரவாயில்லை. வளையல் விற்போரிடத்துச் சிறிய வளையல்களும் உள்ளன. அவற்றை வாங்கிச் செறிய அணிந்து கொண்டு உடல் மெலிவைப் பிறரறியாமல் தவிர்த்துவிட முடியும். தலைவன் வருகையைப் பிறர் அறியாமல் நாம் மறைத்தல் கூடாது. அதைவிடத் தலைவன் வாராதிருத்தலே நன்று!'' என்கிறாள் தோழி.


இதன்மூலம், களவுக்காலத்தில் இரவிலும் பகலிலும் வந்து செல்ல வேண்டாம். மாறாக, தலைவியை விரைந்து வரைதலே (திருமணம் செய்து கொள்ளுதல்) நல்லது என்று தலைவனின் மனத்தில் படும்படி குறிப்பாகச் சொல்கிறாள் தோழி.


குன்றியனார் என்ற சங்க காலப் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் இதுதான்.


மாரி ஆம்பல் அன்ன கொக்கின்


பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு


கண்டல் வேர்அளைச் செலீஇயர் அண்டர்


கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்


வாராது அமையினும் அமைக


சிறியவும் உளஈண்டு விலைஞர்கை வளையே


(குறுந்தொகை 117)


வானில் பறக்கும் பொழுது வெண்ணிறத்தில் தோன்றும் கொக்கு, நீர்நிலையில் இரைக்காகக் கூர்ந்து நோக்கிக் கூம்பி நின்றுகொண்டிருக்கும்பொழுது, கார்காலத்தில் கூம்பி நிற்கும். அல்லியின் மொக்குப் போன்ற உருவிலும் நிறத்திலும் இருக்கும் என்பது புலவரின் உவமை நயத்தைச் சுட்டுகிறது.


தலைவனை நெடுநாட்களாகச் சந்திக்கவில்லையெனில் தலைவியின் உடல் மெலிவதுண்டு. இம்மெலிவால் கையிலுள்ள வளையல்களும் கழன்று வீழ்தலும் இயல்புதான் என்பதை இப் பாடலாசிரியர் கூறுகின்றார். தலைவன் பிரிந்தமையைத் தனது முன்கையின் மணிக்கட்டிலிருந்து கழல்கின்ற வளையல்கள் பலரறியப் பழி கூறாது இருக்குமோ எனக் கூறி வருந்தும் திருக்குறள் தலைவியின் கூற்றும் (குறள் 1157) இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.


உடல் மெலிவால், தலைவியின் வளையல்கள் கழன்றுவிட்ட நிகழ்வினை மறைக்க வேண்டும். அதற்கு, சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி, தலைவி செறிய அணிந்து கொள்ளலாம் என்பது தோழி அறிந்த நல்ல உளவியல் நுட்பமாகும்.


நண்டு விரைந்து சென்று அதன் வளையினுள் புக முயல்வது, "அலர்' வெளிப்படுமுன் கற்பு வாழ்க்கை நிகழ்த்தத் தலைவனின் இல்லத்திற்கு (வரைவுக்குப் பின்) விரைந்து சென்றுவிட வேண்டும் என்ற தோழியின் குறிப்பான செய்தியை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.


தலைவியின் உடல்மெலிவை மறைக்கச் சிறிய வளயைல்களே போதுமாதலால், சின்ன வளையல்களும் வளையல் விற்போரிடம் உள்ளன என்பது நல்ல இலக்கியநயம் ஆகும்.


நன்றி - தமிழ்மணி ஜூலை 2024


குடும்பம் - மரபும் மாற்றமும்! - முனைவர் அரங்க. பாரி

வையகமே ஒரு குடும்பமாக வேண்டுமென்பது சான்றோர் கருத்தாகும். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என உலகைத் தன் உள்ளத்துள் வளைத்துக் கொண்டது தமிழியம். மனிதன் கண்ட அமைப்புகள் யாவற்றிலும் சிறந்தது குடும்பம் என்னும் நிறுவனமேயாகும். இந்த நிறுவனத்தில் குறைகள் இருப்பினும் இதனை விட்டுவிட முடியாது.  இதுவே மனிதப் பண்பாட்டுப் பரிணாமத்தில் பழுத்த கனி; இதுவே மனிதநேய மாண்பின் சின்னம். இந்தக் குடும்ப அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. விழுமியங்களின் இருப்பிடமாவது குடும்பம். இது நேற்று எப்படி இருந்தது, இன்று எப்படி உள்ளது, நாளை எப்படி இருக்கும் எனக் காண்போம்.


குடும்ப அமைப்பும் உறவுமுறையும்:


பண்டைக் காலத்தில்  கூட்டுக் குடும்ப அமைப்பே பெரிதும் இருந்துள்ளது. தலைவன் - தலைவி தனித்து வாழும் குடும்ப  அமைப்பும் அறியப் பெறுகின்றது. புறநானூற்றில் பெருஞ்சித்திரனாரின் குடும்பம் கூட்டுக் குடும்ப அமைப்பைச் சித்தரிக்கின்றது. "என் தாய் கோல் கொண்டு மெல்ல நடப்பவள்; சிலந்தி வலை போலச் சுருக்கம் மலிந்த முகத்தினள். என் மனைவி வறுமையில் மெலிந்தவள்; என் குழந்தை தாயின் மார்பில் பால் பெறாது வருந்துவது', (புறம். 159) எனக் கூறும்போது, தாயுடன் வாழும் கூட்டுக் குடும்ப அமைப்பு அறியப்படும்.


"மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன் ஐ

யானை எறிந்து களத்தொழிந்தனனே' (புறம். 279)


என்பதில் தந்தையும் குடும்ப உறுப்பினன் என்றறியப்படும். பாட்டன் உறவு முறை கூறும் பகுதியும் அறியப்படுகின்றது.


"நுந்தை தந்தைக் கிவன்தந்தை தந்தை

எடுத்தெறி ஞாட்பின் இமையான்' (புறம். 290)


எனப் போர் வீரர் குடியில் பாட்டன், தந்தை, மகன் என மூன்று தலைமுறைகள் நடக்கக் காணலாம். குடும்ப அமைப்பில், பல பிள்ளைகள் உடைமையினைப் புறநானூறு காட்டும் (159). அதே போல, குடும்பத்தில் ஒரே மகனுடைய நிலையையும் புறநானூறு காட்டும் (279). "ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்' என்னும் புறப்பாட்டுப் பகுதி (183) அண்ணன்- தம்பி உறவு முறைகளைச் சொல்லும். உறவிலேயே திருமணம் அமைவதை, "சுடர்த்தொடீஇ கேளாய்' எனத் தொடங்கும் கலித்தொகை காட்டும் (கலி. 50). முன்பு தொடர்பற்ற இருகுடிகள் புதுவதாக மணவினைத் தொடர்பு கொள்வதை "யாயும் ஞாயும்'  எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் விளக்கும்.


கணவன் - மனைவி உறவு:

பழந்தமிழ் இலக்கியத்தில் கணவன்- மனைவி உறவு வேறு எம்மொழி இலக்கியங்களிலும் கூறப்படாத அளவு பிரிவில்லா ஒருமைப்பாட்டுடன் விளங்குவதாகக் கூறப்படுகிறது.


"இம்மை மாறி மறுமை யாயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே (குறுந். 49)


என்று தலைவி "எல்லாப் பிறப்புகளிலும் நாமே கணவனும் மனைவியும் ஆவோம்' என உரைக்கக் காண்கிறோம்'. "நாம் இரண்டு பேராகப் பிறந்தோம்; பூ இடைப்பட்டாலும் பல ஆண்டுகள் கழிந்தாற் போலத் துயருறுகின்ற அன்றில் பறவைகளென வாழ்ந்தோம். நம் உயிர் எப்போதும் பிரிவின்றி இருந்து போகும் காலத்தில் ஒன்றாகப் போவோம் (குறுந். 57) எனத் தலைவி கூறுகிறாள். பண்டைக்காலத் தலைமக்களின் இல்லறம், பிறவி தோறும் தொடர்வதாகவே கருதப்பட்டது.  கணவன் - மனைவி இருவரும் இணைந்து பேணும் இல்லறத்தைக் "கற்பு வாழ்வு' எனக் குறித்தனர் நூலோர். இந்த இல்லறத்தில் இருவருக்கும் கடமைகள் (குறுந். 135) இருந்தன.


பல்லாண்டுகளின் இல்லறம் இளமை தீர்ந்து முதுமை எய்தியக் கண்ணும் அன்பகலாத துணைமையொடு தொடரும். 


இடையில் கொழுநன் இறந்துபடின் தலைவி ஆற்றாத் துயரும் தனிமையும் எய்துவள். அவளுடைய கைம்மை கொடுந்துயர் தருவது

 (புறம். 246).


மனைவி இறப்பின் கணவனது துயரும் எல்லையின்றிப் போகும். 


"என் துணைவி இன்னே மறைந்தனள்; நான் இன்னும் வாழ்கின்றேனே' எனக் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக்கோதை புலம்பக் காண்கிறோம்

(புறம். 245).


மரபு மாற்றங்கள்:


மேற்குறித்த குடும்ப இலக்கணங்கள் காலப் போக்கில் மாறியுள்ளன. இன்று பாலுணர்வு வரையறைகள் நெகிழ்ந்துள்ளன.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றை இன்றைய பெண் பண்டைக் கால அளவில் கொள்ள இயலாது. பெண் பணிக்குச் செல்ல வேண்டும்; காவற்பணி பூண வேண்டும்; துப்பாக்கி ஏந்த வேண்டும்; வானூர்தி இயக்க வேண்டும்; சட்டங்கள் இயற்ற வேண்டும்; சமுதாயத்தை ஆளும் அரசியல் தலைமை பூண வேண்டும். இந்நிலையில், பெண்மை என்பதன் இலக்கணம் பெரிதும் மாறியிருக்கிறது.


பெண்ணின் உரிமை இன்று அவளைப் பல புதிய உலகங்களைக் காணத் தூண்டியுள்ளது. விதியே என்று வாழ்ந்த வாழ்க்கைக் கட்டுப்பாடுகளை உதறிச் சமஉரிமை மறுக்கப்படினும், உடம்பு உடைமைகளுக்கு ஊறு ஏற்படினும் மணவிலக்குப் பெறும் நிலையில் இன்றைய பெண் மகள் உரிமைக் கொடி ஏந்துகிறாள். கைம்மை வேலியை அகற்றி மறுமணத் தோட்டத்திற்குள் புகுகின்றாள். வாழ்க்கை முழுவதும் ஒருவன்- ஒருத்தி என்ற அறம் இன்று மாற்றம் எய்தியிருப்பினும், பெரும்பான்மைச் சமூகம் அந்த நெறியில்தான் சென்று கொண்டிருக்கிறது. மணமுறிவு, மணவிலக்கு என்பன இடம்பெறாத தமிழ்ச் சமூகத்தில் மேலை நாகரிகத் தாக்கத்தால், இவை இடம் பெற்றிருக்கின்றன. ஊர் மன்றங்களும் நீதி மன்றங்களும் உச்சநீதிமன்றமும் ஏராளமான மணவிலக்கு முறையீடுகளை ஆய்ந்து கொண்டிருக்கின்றன. குடும்பத் தகராறு கொலுமண்டபம் ஏறியிருக்கிறது. பல்பிறவிகளிலும் மாறாத இணை என்பது மாறிப் பணிவாய்ப்புகளில் தற்காலிக நிலை என்பது போலவே மணவாழ்க்கையிலும் நிலையாமை குடிகொண்டுவிட்டது.


திருமணச் சடங்குகள் பழைய முறையில் கட்டாயமானதாகவும், சமூகம் தழுவியதாகவும் இன்று இல்லை. நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வது போலத் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளும் வழக்கம் உண்டாகியிருக்கிறது. 


உறவுக்கிளைகள் மலிந்த குடும்பம் என்ற நிலைமாறி கணவன் -மனைவி, பிள்ளைகள் என்ற முக்கோண வாழ்க்கை முறை தோன்றியதில் சிவப்பு முக்கோணம் குடும்ப நடைமுறையாகி உள்ளது.  இதனால் அண்ணன் தம்பிகளைக் காணோம்; மாமன் மாமி, சிற்றப்பா, பெரியம்மா, சின்னம்மாக்கள் அரிதாகி வருகின்றனர்.


சுருங்கக் கூறின், தமிழ்க் குடும்பம், மேலை வண்ணமும் வடிவமும் பெற்றுவிட்டது. உறவுக் கிளைகள் தோன்றாத தனிச் செடியாக உருவாகியுள்ள இன்றைய குடும்பத்தில் தமிழர்க்கே உரிய ஒப்புரவு விருந்தோம்பல், மனிதநேயம், மதநல்லிணக்கம் போன்ற பண்புப்பூக்களைக் காணோம். தமிழ்க் குடும்பம் ஒன்றைப் பார்த்துத்தான் தீரவேண்டுமென்றால்,  மட்டக்களப்புக்கோ டொரண்டோவுக்கோ போகலாம்.


நன்றி - தமிழ்மணி 2019






"கண்ணகி போன்ற வீர தேவதை"

(புறநானூற்று பாடல் 282ஐ அடிப்படையாகக் கொண்ட கதை)

மலையமான் திருமுடிக்காரியின் அரண்மனையில் ஒரு மாலைப்பொழுது. மன்னன் தன் படைத்தலைவர்களுடன் போர் திட்டங்களை ஆலோசித்துக்கொண்டிருந்தான். அப்போது வாயிற்காவலன் ஓடி வந்தான்.

"அரசே! சேர மன்னன் பெரும்படையுடன் நம் எல்லையை நெருங்குகிறான்!" என்றான் பதற்றத்துடன்.

திருமுடிக்காரி அமைதியாக எழுந்தான். "நம் வீரர்களைத் திரட்டுங்கள். இன்றிரவே களத்திற்குச் செல்வோம்" என்றான்.

அவன் மனைவி அமுதன் தேவி கவலையுடன் அருகில் வந்தாள். "நாதா! சேர மன்னனின் படை மிகப் பெரியது. மேலும் உங்கள் உடல்நிலை சரியில்லை. போரை தவிர்க்க முடியாதா?"

"வீரத்தின் விதை"

பாண்டிய நாட்டின் மதுரையை ஆண்டு வந்த நெடுஞ்செழியன் காலத்தில், சிற்றூர் ஒன்றில் வாழ்ந்த வீரன் வல்லவன். அவன் தந்தை பகைவர் படையெடுப்பில் வீரமரணம் அடைந்தவர். வல்லவன் சிறுவயது முதலே வேல் எறிதல், வாள் வீசுதல், குதிரையேற்றம் என அனைத்து போர்க்கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்.

ஒருநாள், அவன் ஊருக்கு வந்த பாணர் ஒருவர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்று அவனை பெரிதும் பாதித்தது:

"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"

இந்த வரிகள் வல்லவனின் உள்ளத்தை உலுக்கின. தனிமனிதனாக இருந்தாலும் நேர்மையுடன் வாழ வேண்டும், பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி வாழக்கூடாது என்ற கருத்து அவனை ஆட்கொண்டது.

சில நாட்கள் கழித்து, அவன் ஊரை நோக்கி வடநாட்டு கொள்ளையர் கூட்டம் வருவதாக செய்தி வந்தது. ஊர் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் வல்லவன் தன் வீரத்தோழர்கள் சிலரை திரட்டி, கொள்ளையரை எதிர்கொள்ள முடிவு செய்தான்.

"வேள்பாரியின் வீர காவியம்"

பறம்பு மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது பாரியின் அரண்மனை. கருங்கற்களால் கட்டப்பட்ட அவ்வரண்மனையின் முற்றத்தில் எப்போதும் புலவர்களும், பாணர்களும், கூத்தர்களும், ஏழை மக்களும் கூடி நிற்பர். அவர்கள் அனைவருக்கும் வேள்பாரி தன் செல்வத்தை வாரி வழங்குவான்.

மலை நெடுகிலும் பசுமையான காடுகளும், வயல்களும், அருவிகளும் நிறைந்திருந்தன. பாரியின் ஆட்சியில் மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர். அவனது இரு பெண் மக்கள் - அங்கவை, சங்கவை - தந்தையின் கொடைப் பண்பைக் கற்றுக்கொண்டு வளர்ந்தனர்.

ஒரு குளிர்கால மாலையில், பாரி தன் தேரில் பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது, பனியில் நடுங்கிக்கொண்டிருந்த முல்லைக் கொடிகளைக் கண்டான். உடனே தன் பொற்றேரை நிறுத்தி, "இக்கொடிகள் படர்வதற்கு என் தேரே துணையாகட்டும்" என்று கூறி, தேரை அங்கேயே விட்டுச் சென்றான். நடந்தே அரண்மனை திரும்பினான்.

இச்செய்தி கேட்ட கபிலர், "பாரியின் கொடைக்கு நிகர் பாரியே" என்று பாடினார். அவரது புகழ் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவின. இதனால் பொறாமை கொண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் நாட்டைக் கைப்பற்ற எண்ணினர்.

யாமத்து மழை - கி. வா. ஜகந்நாதன்

தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளை உடையவன்.

தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்?


தோழி : நீதான் அறிந்து கொள்ளப் போகிறாயே!


தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு உரிய முயற்சிகளைச் செய்யாமலே இருக்கிறாரே!


தோழி : அதைப்பற்றி நீ ஏன் கவலை அடைகிறாய்? அவனுடைய கடமையை அவன் மறக்க மாட்டான். உனக்கு வேண்டிய பரிசத்தைக் கொண்டு வந்து, உன்னுடைய தாய் தந்தையரிடம் வழங்கி, உன்னை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்பான், முதியோர்களை முன்னிட்டுக் கொண்டு வரைந்து கொள்ள வருவான்.


தலைவி : அவருடைய நாட்டின் வளப்பத்தைச் சொல்ல வந்தாயே! அவர் எவ்வகை நிலத்துக்குத் தலைவர்?


தோழி : குறிஞ்சிநிலத் தலைவன்; மலை நாடன்,


தலைவி : நாமும் குறிஞ்சி நிலத்தில் வாழ்கிறோம். இங்குக் கள்வர்களைப்போல அங்கும் மகளிர் உண்டோ? தினை கொல்லைகள் உண்டோ?


தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.


தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?

அகத்தியர் தொடங்கிய சங்கம் - கி. வா. ஜகந்நாதன்

"பெருமானே, நான் தென்னாடு போக வேண்டுமாயின், அங்கே நாலு பேரோடு பேசிப் பழக வேண்டாமா? சிறப்பான நிலையில் இருக்க வேண்டாமா? அங்கே வழங்கும் தமிழ் மொழியில் எனக்குப் பழக்கம் இல்லையே!" என்று அகத்திய முனிவர் சிவபெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.

தேவரும் மக்களும் கூடியதால் கைலாசம் என்றும் இல்லாத பெருஞ்சிறப்போடு விளங்கியது. உலக முழுவதுமே காலியாகிவிட்டதோ என்று கூடத் தோன்றியது. தென்னாட்டிலிருந்து பார்வதி கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஜனங்களெல்லாம் வடக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்களை மறுபடியும் போய்த் தென்னாட்டில் வாழ்க்கை நடத்தும்படி சொல்ல முடியவில்லை. தென்னாட்டில் அரக்கர்கள் தங்கள் ஆட்சியை விரித்து, மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வந்த நல்லோரை நலிவு செய்தார்கள். ஆதலின், அந்த நாட்டில் நல்லோர் வாழ்வு அமைதியாக இருக்கவில்லை; சிவபெருமானுடைய கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு அறிவும் தவமும் மிக்க பல பெரியோர்கள் கைலாசத்துக்கே வந்து விட்டார்கள்.


தென்னாட்டில் அரக்கர் கொடுங்கோன்மை பரவுமானால், அங்கே வாழும் குடிமக்கள் என்னாவது! பெரிய வர்களே அஞ்சி ஓடி வந்துவிட்டால், தென்னாடு முழுவதும் அரக்கருக்கு அடங்கி, தெய்வநினைவின்றிக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிடுமே! என் செய்வது?

சங்க இலக்கியங்களில் இசைத்தமிழ் - முனைவர் வெ.வரதராசன்

கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம்.


சங்ககாலத்து மக்களின் அன்றாட வாழ்வில்இசைபெரிதும் இடம்பெற்றிருந்தது. இசையை அனுபவிக்க மொழி தடையில்லை, பகுத்தறிவும் தேவையில்லை, பொருள் விளக்கமும் கட்டாயமன்று. பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார்,


ஆறலைக் கள்வர் படைவிட அருளின

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை (21-22)


எனப் பாலை யாழின் சிறப்பை, “வழிப்பறி செய்து பொருளை அபகரிக்கும் கள்வர்களின் கல்மனதையும் கரையச்செய்யும் தன்மை யாழிசைக்கு உண்டு. அதனால் அவர்தம் கையிலுள்ள கொலைக் கருவிகளை கைவிட்டு நல்லவர்களாக மாறிவிடுவர்என்று கூறியுள்ளார்.


ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “தலைவியின் பேச்சு யாழிசையின் இன்பம் போன்றதுஎன்பதை, “நரம் பார்ந்தன்ன தீங்கிளவி” (185) எனப் பாராட்டியுள்ளான் தலைவன். கலித்தொகைப் பாடல் ஒன்றில்,

'கிழார்' போற்றுதும்... - சிவமானசா

சங்க காலத்தில் "கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, .வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், .சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.


பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய 'கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

‘கிழார்' போற்றுதும்… - சிவமானசா

சங்க காலத்தில் ‘கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.

பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய ‘கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

அரிசில் கிழார் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடி எண்பத்து நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றவர் இவர். வையாவி கோப்பெரும் பேகனையும், அவனுடைய இல்லத்தரசியான கண்ணகியையும் இணைத்து வைத்தவர். குறுந்தொகையில் 193, புறம்-146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆலந்தூர் கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். குறு.112, 350, புறம்.34, 36, 69, 225, 324 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆவூர்க்கிழார் : உறையூர் அருகிலுள்ள ஆவூரைச் சேர்ந்தவர். புறம்-322வது பாடலைப் பாடியவர்.

கண்ணனார் கிழார் : இவர் ஆவூர்க்கிழாரின் மகனார். அகம்-202-ஆம் பாடலைப் பாடியவர்.

ஆவூர் மூலங்கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். அகநானூற்றில் 24, 156, 341, புறநானூற்றில் 38, 166, 177, 196, 261, 301 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பெருந்தலைச் சாத்தனார் கிழார் : இவர் ஆவூர் மூலங்கிழாருடைய மகன். நற்றிணையில் 262, அகம்.13, 224, புறம் 151, 164, 165, 205, 208, 294 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் : இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியவர். புறம்.76-79 (4 பாடல்கள்) வரை உள்ள பாடல்களைப் பாடியவர்.

உகாய்க்குடி கிழார் : குறுந்தொகையில் 63-ஆம் பாடலைப் பாடியவர்.

பரங்கொற்றனார் கிழார்: இவர் உமட்டூர் கிழாரின் மகனார். அகநானூற்றில் 69-ஆம் பாடலை இயற்றியுள்ளார்.

ஐயூர் மூலங்கிழார் : இவர், பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். புறம் 21-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

கயத்தூர் கிழார் : இவர் குறுந்தொகையில் 354-வது பாடலைப் பாடியுள்ளார்.

கருவூர்க்கிழார் : இவர் குறுந்தொகை 170வது பாடலைப் பாடியவர்.

காரிக்கிழார் : இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். புறம் 6-வது பாடலைப் பாடியவர்.

கிள்ளி மங்கலங்கிழார் : குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் : சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டிப் பாடியுள்ளார். புறம் 17, 20, 22-வது பாடலைப் பாடியவர்.


நன்றி - தமிழ்மணி 19 8 12

கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

சங்க காலத் தடயங்கள் என தமிழகத்தில் நூற்றுக்கும் மேலான ஊர்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் இன்றும் அகழ்வாய்வு மேற்கொள்கையில் அணிகலன்களும், முதுமக்கள் தாழியும், சங்கினால் பொருட்கள் செய்யும் தொழிலகங்களும் இருந்த மிச்சங்களைக் காண முடிகிறது. 

நான் சங்க கவிஞர்கள் வாழ்ந்த சுவடுகளைத் தேடிக்காண்பதில் விருப்பமுள்ளவன். வெள்ளிவீதியாரைப் படித்துவிட்டு மதுரையில் எந்த வீதி வெள்ளிவீதி, எங்கே வெள்ளிவீதியார் நடமாடியிருப்பார் என்று தேடி அலைந்திருக்கிறேன். ஆண்டாளின் திருப்பாவையை ஆண்டாள் கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து வாசித்துவிட்டு அந்தவீதிகளில் சுற்றியலைவதில் சுகம் காண்கிறவன் நான்.  

சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைத் தேடிப்போய் காணும்போது மனதில் இனம் புரியாத ஏதோவொரு சந்தோஷம் உண்டாகிறது. சங்க இலக்கியத்தின் கபிலர் தனிப்பெரும் ஆளுமை கொண்ட கவி. அவர் பாடிய பறம்பு மலைக்கு நண்பர்களுடன் போயிருந்தேன். பறம்பு மலை, வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். சங்க காலத்தில் பறம்பு மலை, திருநெலக் குன்றம், திருக்கொடுங்குன்றம் என இரண்டு விதமான பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தற்போது அதன் பெயர் பிரான்மலை. 

புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே நாற்பத்தைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. 2450 அடி உயரத்துடன்  கம்பீரமாக உள்ளது பிரான்மலை. பிரான்மலையைத் தொலைவில் இருந்து பார்க்கையில் ஒரு அனுபவமாகவும் நெருங்கி மேலேறிப் பார்க்கையில் இன்னொரு விதமான அனுபவமாகவும் இருக்கிறது.   

முந்திய நாள் அந்த மலையினை அருகாமை கிராமம் ஒன்றில் இருந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். என்னுடன் இருந்த நண்பர் முரளி சொன்னார்:   

“மலையினைப் பார்க்கப் பார்க்க பாரியின் நினைவு வருகிறது. எவ்வளவு பெரிய வள்ளல்!”  

“எனக்கு கபிலரின் நினைவுதான் மேலோங்குகிறது. எவ்வளவு மகத்தான கவி கபிலர். அவரது கவிதைகளுக்கு நிகரில்லை” என்றேன். இருவரும் மலையைப் பார்த்தபடியே மௌனமாக இருந்தோம். இதமான காற்று கடந்து போனது. அந்தக் காற்றில் கபிலரின் குரல் புதையுண்டிருக்கிறது என என் மனதில் தோன்றியது.

இந்த மலை காலத்தின் ஒரு சாட்சி. கபிலர் நடமாடி அலைந்த சுவடுகள் இம் மலை யினுள் உள்ளன. காலம் அவற்றினை நம் கண்ணில் இருந்து அழித்து மறைத்திருந்தாலும் மனது அதைக்  கற்பனை செய்து கொள்ளத்தானே செய்கிறது. 

கவிதைகளின் வழியே கபிலர் இந்த மலையை விட மிகஉயரமானவராக எனக்குள் பதிந்து போயிருக்கிறார். கிரேக்க கவிதைகளை உலகின் சிறந்த கவிதைகள் என வாசித்து வியக்கும் நாம் அதே காலகட்டத்தில் கிரேக்க கவிதைகளை விடவும் உன்னதமான கவிதைகளைத் தந்த கபிலரை வியந்து கொண்டாடுவதில்லை.  
கபிலர் பறம்பு மலையின் வளம் குறித்துப் புகழ்ந்து பாடியிருக்கிறார். இங்கே பல்வேறுவிதமான பூக்கள், பழங்கள், அரிசி கிடைத்தன என்ற நீண்ட பட்டியலை கபிலர் தருகிறார்.  அத்துடன் பறம்புமலையில் சுரக்கும் நீரின் ருசி அலாதியானது என்ற குறிப்பும் காணப் படுகிறது.   

பறம்பு நாடு என்பது பறம்பு மலையைத் தலைமை யிடமாகக் கொண்ட நிலவெளி. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. வள்ளல் பாரி இதனைச் சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறான். பாரியை ஔவையர், கபிலர், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.   

மலையின் அடிவாரத்தில் அருள்மிகு குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றீசர் கோவில் ஒன்று காணப் படுகிறது. இது குன்றக்குடி ஆதீனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் சுந்தரபாண்டியன் மண்டபம், ஆறுகால் மண்டபம், லட்சுமி மண்டபம் என மூன்று மண்டபங்கள் காணப்படுகின்றன.  

இங்கு குலசேகரப் பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 80 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். கல்வெட்டுகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் கோடுகள் இழுத்தும் கரியால் பெயர்களை எழுதியும் அசிங்கப்படுத்தியிருக் கிறார்கள். இந்தக் கோவிலில் பெயரில்லாத விருட்சம் என்று ஒரு செடியைக் குறிப்பிடுகிறார்கள், சித்திரை மாதம்  இங்கே நடைபெறும் “பாரி உற்சவம்” அன்று, முல்லைக்குத் தேர் கொடுத்த வைபவம் ஒரு நிகழ்ச்சியாக நடக்கும் என்றார்கள். இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார் என்ற ஐதீகம் உள்ளது.

குறிஞ்சி நிலத்தில்  அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாகப் படைக்கின்றனர். கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதி யின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற தேவலோகவாசிகளின் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. சிவன், அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் காட்சி தருகிறார் என்கிறார்கள். பறம்பு மலையில்  தர்கா ஒன்று காணப்படுகிறது.  

கபிலர் பாரியோடு கொண்டிருந்த நட்பு நெகிழ்ச்சி யானது. கவிஞர், புரவலர் என்பதைத் தாண்டிய உறவது. பாரி கொல்லப்பட்ட துயரம் பற்றிய கபிலரின் பாடல்கள் நெஞ்சை உருக்குபவை.  பாரிக்குப் பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க கபிலர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார், பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதி அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை கபிலர் வேண்டினார் என புறநானூறு தெரிவிக்கிறது. 

இறுதியில், பாரி மகளிரை திருக்கோவிலூர் மலை யமானுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென் பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறார்கள்.  

கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் கபிலர் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றினுள் அமைந்துள்ளது.  
இந்த கபிலக்கல்லையும் தேடிச்சென்று பார்த்தேன். தென்பெண்ணை ஆற்றினுள் உள்ளது இந்த கபிலர் குன்று. உள்ளுர் மக்கள் இதனை கபிலக்கல் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆற்றில் தண்ணீர் ஓடாத காலம் என்பதால் நான் சென்றபோது வறண்டு போயிருந்தது பாறை. ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அது மிகுந்த அழகுடையதாக இருக்கக்கூடும்.  

பெரிய ஒற்றைப் பாறை. அதன் மீது சிறுகோவில் போன்ற அமைப்பு காணப்படுகிறது, கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. இந்தப் பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். 

என்னோடு வந்திருந்த தமிழ் ஆய்வாளர் கணேசன்,  திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறை யின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில், “செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலை யர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது”  என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆகவே தென் பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் தான் கபிலர் உயிர்நீத்தார் என்பது வரலாற்று சாட்சி என்றார்.   

இருட்டும் வரை அங்கேயே இருந்தேன். உலர்ந்த காற்றும் மங்கிய மாலை வெளிச்சமும் அந்த இடத்தின் மீதான நினைவுகளைக் கொப்பளிக்கச் செய்து கொண்டிருந்தன.  

கபிலர் குன்றினைத் தொல்லியல் துறை பராமரிக்கிறது என்றார்கள். முறையான பராமரிப்பு இல்லாமல் வழியில் பாதி குடித்து எறிந்த மதுப்புட்டிகளுடன் அந்த இடம் அசுத்தமாகவே இருந்தது. தொகை நூல்களில் நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்கள் ஐவரே. கபிலர், அம் மூவனார், ஓரம்போகியார், பேயனார், ஒதலாந்தையார். இவர்களில் கபிலர் முதன்மையானவர். இவர் மொத்தம் 235 பாடல்களைப் பாடியிருக்கிறார் என்கிறார் தமிழ் அறிஞர் ம. ரா. போ. குருசாமி.   

இவர் கபிலரின் பாடல்களை மட்டுமே தனித்து தொகுத்து கபிலம் என்றொரு நூலாக வெளியிட்டிருக்கிறார். வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நூலிது.   

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்  
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!   
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;   
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்  
பணைகெழு வேந்தரை இறந்தும்  
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!  

என பாரி இல்லாமல் போனபிறகு பறம்புமலையின் வளம் கெட்டு அழிந்துவிடுமோ என்று பயந்து கபிலர் பாடுகிறார். இப்பாடலில் மழைபெய்து ஓய்ந்த பின்பு செந்நிறத்தெறுழம் பூ ஆங்காங்கே மலர்ந்து காட்சி தருவது யானையின் முகத்தில் உள்ள செம்புள்ளிகள் போல விளங்குகின்றன என்று மிகுந்த கவித்துவமான உவமை கூறுகிறார். பாரியில்லாமல் போன துக்கம் இந்தப் பாடலில் ஆழமாக எதிரொலிக்கிறது. 

பிரான்மலையும் கபிலர் குன்றும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தபோதும் அவற்றைப் பொதுமக்கள் விருப்பத்துடன் தேடி வந்து காண்பதில்லை. தமிழ் பெருமை பேசும் பல்லாயிரம் பேரில் பத்துப் பேர் கூட இந்த இடங்களை நேரில் சென்று பார்த்து அதன் பெருமையை உணரவில்லை என்பது வருத்தமான உண்மை. 

கபிலரைப் போல இன்னொரு முக்கிய கவியாளுமை மாங்குடி மருதனார். இவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய  மதுரைக் காஞ்சியை இயற்றியவர். பாண்டிய மன்னரான. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  அரசவையில் புலவராக இருந்தவர், புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது. 

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு  வாழ் வின் நிலையாமை பொருளுணர்த்த மதுரைக் காஞ்சி எழுதப்பட்டது. இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது. மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அதைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். 

வெயிலேறிய சாலைகள், கையில் நாயைப் பிடித்த படியே முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் தெரியும் வெட்டவெளி. 
பிரதான சாலையை விலக்கிச் செல்லச் செல்ல ஊரே கண்ணில் படவில்லை. சிறிய தார்சாலையில்  சென்று திரும்பும்போது ஊர் சரிவில் வீழ்ந்து கிடக்கிறது. பெரிய கண்மாய் ஒன்றும் அதன்முன்னால் பேருந்து நிறுத்தமும் காணப்படுகிறது. ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய ஊர். ஒரு காலத்தில் நாட்டுச்சாராயத்திற்குப் பேர்போன ஊராக இருந்திருக்கிறது. இன்று ஊரெங்கும் ஆயத்த ஆடைகள் அதிலும் குறிப்பாக, நைட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. 

சிறிய ஊர் ஆனாலும் பல்லாயிர வருசத் தொன்மை கொண்ட நிலம். 

மாங்குடியை ஒட்டிய பகுதிகளில் தொல்கற்காலத்திலே மனிதர்கள் வசித்த தடயங்கள் அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. சங்ககாலத்தில் இந்தப் பகுதியில் நிறைய ஊர்கள் இருந்திருக்கின்றன. அவை காலமாற்றத்தில் அழிந்து போய்விட்டன என்கிறார்கள். இந்த ஊரில் நடைபெற்ற அகழ்வாய்வில் சங்க கால நாணயங்கள், பானைகள், கல் ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன. 

மாங்குடி மருதனாரின் நினைவுத்தூண் ஒரு வேப்பமரத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.  1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தூணின் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள். அடியில் ஒரு பீடம். அதில் புறநானூற்றுப் பாடல் பற்றிய குறிப்பு.  தூணில் மாங்குடி மருதனார் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது. தமிழகத்தின் மூவேந்தர்களைக் குறிக்கும் புலி, மீன் மற்றும் வில் முத்திரை காணப்படுகிறது. மற்றபடி முறையான பராமரிப்பின்றி குப்பைகளும்  கழிவுநீரும் தேங்கிக் கிடக்க, நிழலுக்கு உறங்கும் நாயுமாக அந்த இடம் அதன் புராதனப் பெருமையை மறந்து கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. வருடம் ஒரு முறை பொங்கல் நாளில் இங்கே விழா எடுப்பதுண்டு என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 

மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே. 

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்  தலைவனாக  
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்  
என்ற புறநானூற்றுப் பாடலால் மாங்குடி மருதனாரின் பெருமை  நன்கு விளங்குகிறது.  

குறுந்தொகையில் மூன்று பாடல்கள்,  நற்றிணையில் இரண்டு பாடல்கள், அகநானூற்றிலே ஒரு பாட்டு, புறநானூற்றிலே ஆறு பாடல்கள், திருவள்ளுவமாலையில் ஒன்று மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளன.  ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட  மதுரைக் காஞ்சி 782 வரிகளைக் கொண்டது. 

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது 
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,  
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.  

என்று மதுரை நகரில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கிறது. அதாவது  பொருள்களைக் குவிக்கக் குவிக்க, மக்கள் வாங்கிப் போய்க் கொண் டிருப்பார்களாம். கடல்நீரை மேகம் கொள்ளுவதால் கடல் ஒருபோதும் அளவில் குறைவதில்லை; ஆறுகள் சேர்வதால் கடல் மிகுதியாவதும் இல்லை. அதே போல் தான், மதுரையின் கடை வீதிகளும்.  

மக்கள் கூட்டமாக வந்து பொருள்களை வாங்குவதால் குறைந்து போனதாகவோ, பலர் விற்கக் கொண்டு வரும் பொருட்களால் அதிகமாகிப் போனதாகவோ இன்றி எப்போதும் போல் விரிந்து விளங்கியது என்கிறது மதுரைக்காஞ்சி. மதுரையில் ஒரு இரவு எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்ள அவசியம் மதுரைக்காஞ்சியை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.  முதல் யாம, இரண்டாம் யாம நிகழ்ச்சிகள் எப்படி நடைபெறுகின்றன, கடைகள் எப்படி மூடப்படுகின்றன என விரிவாக மாங்குடி மருதன் விவரிக்கிறார். 

கள்வரையும், அவர்கள் வராது ஊர்க்காவல் செய்யும் காவலர்களையும்  அவர் வர்ணிப்பது அற்புதமானது . பேய்களும், துஷ்ட தெய்வங்களும் கூடித்திரியும் மூன்றாம் சாமத்தில், பெண்யானையின் கருத்த தோலைப் போன்று அடர்ந்த கரிய இரவில் கள்வர் வருவார்கள்.  பயமற்ற கண்கள் கொண்ட அவர்கள் கையில் கல்லும், மரத்தையும் துண்டாக்கும் கூர்மையான வாளும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார்கள்.  இடையில்  உடைவாள். கருமையான மேலாடை. சுவரில் ஏற ஒரு நூலேணி கொண்டு வருவார்கள். ஊரைக்காவல் காக்கும் காவலர் கள் தூக்கம் அறியாதவர்கள். அஞ்சாத வீரம் கொண்ட வர்கள். களவு சாஸ்திரம் கற்றுத் தேர்ந்தவர்கள். தப்பி ஓட முயலும் கள்வரை அம்புகளால் அடித்து வீழ்த்து வார்கள். யானையைப் பிடிக்கச் செல்லும் புலிபோல் கள்வரை மடக்கிப்  பிடிப்பார்கள் என்கிறார். 

மதுரை நகரில் விதவிதமான கொடிகள் பறந்ததை மருதனார் விவரிப்பது ஒலிம்பிக்ஸில் காண்பது போலவே இருக்கிறது,  தச்சர், கொல்லர், பூ விற்போர், நெசவாளர், உழவர் உள்ளிட்ட தொழிலாளர்கள் மதுரை நகரில் வாழ்ந்தனர். அறுத்த சங்கைக் கொண்டு வளையல் போன்ற அணிகலன்களைச் செய்பவர்கள்  தனியே இருந் தனர். இரத்தினக் கற்களிலே துளையிட்டு அவைகளை மாலையாகக் கோர்த்துக் கொடுப்போர் வசித்தனர்.   

புடம்போட்டு எடுத்த பொன்னால் நகைகள் செய்பவர்களும் புடவைகளை விலை கூறி விற்கும் வியா பாரிகள், செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் வணிகர் கள், மலர்கள், அகில், சந்தனம் ஆகியவற்றை விற்பனை செய்வோரும் எதனையும் உயிரோட்டமாக வரையும்  ஓவியர்களும் இருந்தனர். இதனை, 

கோடுபோழ் கடைநரும் திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்  
பொன்உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்  
செம்புநிறை கொண்மரும் கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும்,  
வம்புநிறை முடிநரும் பூவம்புகையும் ஆயும் மாக்களும்,  
எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் விளைஞரும் 
என்ற மதுரைக்காஞ்சி வரிகள் தெளிவாக  எடுத்துக் காட்டுகின்றன.  

மதுரையில் சமணர்கள் வாழ்ந்த சமணப் பள்ளியின் சுவர்களில் அழகான இயற்கை வண்ண ஓவியங்கள் தீட்டப்பெற்றிருந்தமையை,  

கயம்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்க  
இறும்பூது சான்ற நறும்பூண் சேக்கையும் என்று மாங்குடி மருதனார் எடுத்துக் காட்டுகின்றார். 

இப்படித் தமிழ் மக்களின் வாழ்வைக் கொண்டாடிய ஒரு கவிஞரின் நினைவுத்தூண் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதாவது வெளியூரில் இருந்து ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லது வரலாற்று அறிஞர் வந்து இந்த நினைவுத்தூணைப் பார்வையிடுவதோடு சரி, வேறு எந்தக் கவனமும் கிடையாது. எங்கள் ஊர் விருதுநகர், திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களுக்கும் எல்லையில் இருப்பதால் இருவருமே எங்களைக் கண்டுகொள்வதில்லை என்று குறைபடுகிறார்கள் உள்ளூர்மக்கள்.  

செம்மொழி நிறுவனங்கள் கல்லூரி கல்லூரியாக  ஆண்டிற்கு நூறு கூட்டங்கள் நடத்தி பல லட்சங்கள் செலவு செய்கின்றன. ஆனால் இது போன்ற நினை வகங்களைக் கண்டுகொள்வதேயில்லை. செம்மொழி மையமோ, தமிழக அரசோ இதையும் கபிலர் குன்றினை யும் முறையாகப் பராமரித்து மாங்குடி மருதனாருக்கும் கபிலருக்கும் விழா எடுத்துக் கௌரவிக்க வேண்டும். அதுதான் நம் மண்ணையும் மக்களையும் பாடிய கவிஞர் களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. 


நன்றி - உயிர்மை ஏப்ரல் 2013

சங்ககால சறுக்கல் சிந்தனைகள் - அ.ப.பாலையன்

காலந்தோறும் புதிய புதிய கருத்துகள் உண்டாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. உருவானவற்றில் விழுமியவையும் மானுடத்தை மேம்படுத்துபவையும் எவ்வளவு காலமானாலும் நிலைத்து நிற்கின்றன. சில பிற்போக்காகவும் சுயநலத்தோடு தோன்றியவையாகவும் இருந்து மக்களில் ஒரு சாரார்க்கு மட்டுமே பயன்படுபவையாக அமைந்துவிடுதல் உண்டு. வலுவாகப் பரவிய பல கருத்துகளுக்கு வலுவான பின்னணியும் இருக்கும். ஆனால் கருத்துகளில் கவனம் செலுத்தும் மக்கள் அக்கருத்து தோன்றிய பின்னணியை மறந்துவிடுதல் இயற்கை.

இக்கட்டுரையில் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்த சில கருத்துகளையும் அவை தோன்றியதற்கான பின்னணியையும் பார்ப்போம்.

பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தோன்றிய பழங்காலத்தில் பெண்கள் உரிமையற்ற இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்பட்டனர். ஆண்களுக்கு அடங்கியவராக இருந்தனர். சில விதிவிலக்குகளும்கூட இருந்தன. கணவனை இழந்த பெண்டிர் எத்துணை துயரங்களைத் தாங்கியிருந்தனர் என்பதற்குப் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு (புறம் 246) பாடிய பாடலே சான்று.

பெண்கள் சமூகத்தால் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்ட போதிலும் ஒரு சில சமயங்களில் அவர்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டும் உள்ளார்கள். ஆண் மக்களைப் பெற்று வளர்த்து போருக்கு அனுப்பிய பெண்கள் "மூதின் மகளிர்' என வாயாரப் புகழப்பட்டு உள்ளனர்.
சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279)

இவளது எண்ணம் கெடுக. (வாழ்க எனப் பொருள்) இவள் பெண்களில் சிறந்தவள். முதல்நாள் போரில் இவள் தந்தை யானையைக் கொன்று மடிந்தான். அடுத்தநாள் இவள் கணவன் பசுக் கூட்டத்தை எதிரிகளிடமிருந்து காத்து மாண்டான். போர் தொடர்ந்தது. தன் ஒரே மகனை அழைத்து ஆடை உடுத்தித் தலைவாரி விட்டு கையிலே வேலைக் கொடுத்து வென்று வா என அனுப்பினாள் அத்தாய்.

இப்பெண் வாழும் நாட்டு மன்னனுக்கும் அடுத்த நாட்டு அரசனுக்கும் மண்ணாசை மீதுரப் பெற்றதால் போர் நடக்கிறது. அப்போருக்கு இவள் தன் ஒரே ஆண் மகனைப் போருக்கு அனுப்புகிறாள்.

இப்படி இப்பெண் தன்னைக் காப்பாற்ற இருக்கும் ஒரே மகனான சிறுவனையே தன்னைப் பற்றிய கவலையின்றி அரசனின் மண்ணாசைக்குப் பலி கொடுக்க அனுப்புகிறாள்.

இதனால் இவள் வாழ்க எனவும் மிகவும் துணிச்சல்காரி எனவும் மூதின் மகளிர் எனவும் அளவு கடந்து பாராட்டப்படுகிறாள்.

பெண்ணுக்குப் போதுமான உரிமை அளிக்காமலும் ஆண் செய்யும் அடாவடிச் செயலைத் தட்டிக் கேட்காமலும் அடக்கப்பட்ட பெண்கள் போருக்கு மகனை அனுப்பும்போதும் ஆண் மகனைப் பெற்றுத் தரும்போதும் (புறம் 312) பலபடப் பாராட்டப்படுவதும் புகழப்படுவதும் எதனால்?

அங்கேதான் அக்கால ஆண்கள் உண்டாக்கிய சூட்சுமமான கருத்து இருக்கிறது.

சங்கச் சமூகம் போரும் பூசலும் நிரம்பிய சமூகம். அரசர்கள் தமக்குள்ள மண் போதாதென்று தம் மக்களைப் பலிகொடுத்து அவர் பெண்டுகளை விதவை களாக்கியும் பிள்ளைகளை அனாதைகளாக்கியும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்ட காலம் அது.

அதனால்தான் அக்காலத்திய புலவர் பெருமக்கள் "ஒருவரை ஒருவர் அடுதல் புதுவதன்றே' எனப் போரிடும் அரசர்கள் செயலை ஏற்றித் தாளம் போட்டனர்.

மன்னர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பலம் வாய்ந்த வீரர்கள் தேவை; வீர மறவர்களைப் பெற்று மனம் கோணாமல் போருக்கு அனுப்பும் பெண்களும் தேவை. 

வீரர்களை அனுப்பும் பெண்கள் பாராட்டப்படவும் மதிக்கப் படவும் வேண்டும். அத்தகைய கருத்தை சமுதாயத்தில் பரப்பிக் காத்தலும் வேண்டும். அப்போதுதான் நினைத்தபோதெல்லாம் பெண்கள் எவ்வளவு துன்ப துயரங்களை ஏற்றாலும் பாராட்டுக்கு மயங்கி கணவர்களையும் பிள்ளைகளை யும் போருக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

அரச மரபினரின் ஆசைக்கு அவர்களின் விசுவாசி களால் உண்டாக்கிப் பரப்பப்பட்ட இக்கருத்து பெண்களை மயக்கிய கருத்துப் பரப்பல் என அறிதல் வேண்டும்.

அரசனுக்காக வீரர்கள் போரிட்டு மடிவர்; அப்படி மடிபவர்கள் மகிழ்ச்சியோடும் புகழ் போதை யோடும் மடிய வேண்டும் என்பதற்காகவே ஒரு கருத்து உண்டாக்கப்பட்டு நம்பிக்கையாக வளர்க்கப்பட்டிருந்தது அன்று; இன்றும் அக்கருத்து வேறு வடிவில் தொடர்கிறது.

ஓடல் செல்லா பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப.
(புறம் 287)

"போர்க்களத்தில் அஞ்சிப் புறம் கொடுக்காதவர் மறவர். மருத நிலத்து ஊர்களைக் கொடையாகப் பெறுவது அவர்களுக்குப் பெருமை அன்று. போரில் விழுப்புண்ணோடு மடிந்து மேலுலகம் புகுந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவதே அவர்களுக்குப் பெருமை' என்பது சாத்தந்தையார் எனும் புலவரின் கருத்து.

போரில் வீரர்கள் சாவது இயற்கை. செத்தவர்கள் சொர்க்கம் (மேலுலகம்) புகுவர் என்பதும் புகுந்தவர் தேவகுல மகளிரையே மணப்பர் என்பதும் உண்மைக்கு மாறானவை என்று அறிந்திருந்தும் இக்கருத்துகளைப் பரப்பி வந்துள்ளனர் புலமை உடையோர், ஏன்?

இல்லாத ஒன்றை அடைவதில்- நம்புவதில் மனிதர்க்கு எப்போதும் போதை உண்டு. நன்னீரை விடக் கானல் நீரைப் பருகத் துடிப்பவர்கள் உண்டல்லவா? மேலும் தேவகுலப் பெண்களை மணக்கும் பாக்கியம் வேறு கிடைக்கிறது.

இவ்விரண்டையும் அடைய அவாவிய வீரர்கள் சாரை சாரையாகப் புறப்பட்டால்தானே மன்னனுக்கு வெற்றி கிடைக்கும். அவன் வெற்றிபெற மறவர்க்கு ஏற்றப்பட்ட போதையே மேலுலகமும் தேவமகளிரும் என அறிதல் வேண்டும்.

மேலுலகத்தை ஒத்துக்கொண்ட வள்ளுவர் ஓரிடத்தில் மேலுலகத்தை மறுத்துவிடுதலையும் இவன் நினைக்கலாம். "மேலுலகம் இல் எனினும்' (குறள் 222) என்பது அது.

இப்பாடலுக்கு விளக்கம் எழுதிய உரை வேந்தர் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் "போர்க்களத்து உயிர் கொடுக்கும் மறவர் துறக்க உலகை அடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவர் என்பது பண்டையோர் கொள்கை' என்று எழுதினார். (புறநானூறு- கழகப் பதிப்பு. பா. 287)

நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் சிற்பம் செதுக்கப்பட்டிருக் கும். அச்சிற்பத்திற்கு மேலே வானர மகளிர் மலர் தூவி அவனை வரவேற்பது போலவும் சிற்பம் இருக்கும்.

இந்நடுகல் சிற்பத்தையும் புறப்பாடல் கருத்தோடு ஒப்பிட்டு ஒரே கருத்து இருவேறு முறைகளில் இருப்பதை உணரலாம்.

பண்டைக் காலத்தில் மன்னன் சில வீரர்க்கு மட்டும் தனியே சிறப்புகளைச் செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது. அவ்வீரர்கள் உடல், பொருள், ஆவியைத் தரும் விசுவாசிகளாய் இருப்பர் போலும்!

ஓர் அரசன் ஒரு வீரனுக்கு மட்டும் தனியே கள்ளைக் கொடுத்துப் பாராட்டி இருக்கிறான். ஆனால் போரில் அவன் சாகவில்லை.

இதனை நினைத்து அவனைப் பெற்றவள் ஏங்குகிறாள்; அழுகிறாள்.

"என் மகன் போரிலே மடிந்திருந்தால் 
அரசன் கண்ணீர் மல்க அவனைப் பாடையிலே கிடத்தி 
அவன் மேலே தூய வெள்ளாடை போர்த்தி மரியாதை செய்திருப்பானே. 
அப்பேறு அவனுக்குக் கிட்டாமல் போயிற்றே' 
என வருந்துகிறாள். இதோ பாடல்.
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூயவெள் அறுவை போர்ப்பித் திலதே.
(புறம் 286)

அரசன் செய்யும் இச்செயலுக்குப் பின்னணி யில் வீரர்கள் இப்பேறு பெற போருக்கு விரும்பிச் செல்லும் ஆசை உண்டாக்க வேண்டும் எனும் உந்துதல் மறைந்திருப்பதைக் காணமுடியும்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எந்தக் கருத்தும் தோன்றுவதற்கு வலுவான பின்னணி இல்லாமல் தோன்றுவதில்லை. இன்று மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் பொருளற்ற மூட நம்பிக்கைகளாகிய சொர்க்கம், நரகம், மறுபிறவி, தலையெழுத்து, வானுலகம் போன்ற அனைத்தும் தோன்றிய பின்னணியும்கூட இப்படித்தான் இருக்கும்.

ஒரு கருத்துப் பரவிய பிறகு, மக்கள் கருத்தை மட்டுமே உடும்புப் பிடியாகப் பற்றி நிற்பர்; பின்னணி கால வெள்ளத்தில் கரைந்து போகும். கருத்துகளின் பின்னணியை ஆராய்வ தால் அக்கருத்துத் தோற்றத்தின் மூலத்தை அறியலாம். சமூகத்திற்குப் பண்டு தோன்றிய கருத்துத் தேவையெனின் பின்பற்றலாம்; தீமை தருமெனின் நிராகரிக்கலாம்.


நன்றி - இனிய உதயம்