ஆதவன் தீட்சண்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதவன் தீட்சண்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை! - ஆதவன் தீட்சண்யா

இப்போது எல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன் முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம் முடிந்து எங்கள் ஊருக்கு சுசீலாக்கா வரும்போது எப்படி இருந்தாளோ... அப்படி. அப்போது பிரபலமாக இருந்த யாரோ ஒரு நடிகையின் சாயலில் அவள் உடுத்தி இருந்தாள். அவளது சிகை அலங்காரம் கூட அப்படித்தான் இருந்தது. அடிக்கடி ஜடையை முன் பக்கம் எடுத்துப் போட்டுக் கொள்வாள். அதன் நுனியைப் பிரித்தும் பின்னிக்கொண்டும்தான் பேசுவாள். 'அவளும் சினிமாக்காரியைப்போல் டோப்பா வைத்து இருக்கிறாளோ’ என்கிற சந்தேகம் எங்க அம்மாவுக்கும்கூட முதலில் இருந்தது. ஆனால், ஒரு நாள் சுசீலாக்கா பம்ப்செட்டில் குளித்துவிட்டு ஈர முடியின் நுனியில் நீர் சொட்ட வருவதைப் பார்த்த பிறகு, அதிசயமாகிப்போனாள். உண்மையில் அவளுக்கு தரை தொட நீண்டு இருந்தது கூந்தல். பனங்கொட்டைக்கு நார் சிலுப்பியதுபோல முடி வைத்திருந்த எங்கள் ஊர் பொண்டுகளுக்கு, அவள் கூந்தல் அற்புதம்போல் தெரிந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

அவளது புருசன், மாமியார், குழந்தைகள் எல்லோரையும் விட்டுவிட்டு தன்னந்தனியாகத்தான் என் கனவுக்குள் வருவாள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் இவளைக் காணவில்லை என்று, கனவுக்கு வெளியே அலைந்து திரிந்து தேடிக்கொண்டு இருப்பார்களோ என்னவோ? ஆனால், அவள் விடியும் மட்டும் என் கனவுக்குள்தான் இருப்பாள். தூக்கம் இல்லாத, வாட்டம் துளியும் இல்லாமல் ஆற்றோரத்துச் செடிபோல அப்படி ஒரு செழிப்பாக அவளால் மட்டும்தான் இருக்க முடியும்.

தனது கல்யாணச் சீதனத்தில் ஒன்றாகக் கொண்டுவந்து இருந்த மர்ஃபி ரேடியோவை அவள் எப்போதும் பிரிகிறவள் இல்லை. ஆனால், நாளாக நாளாக... அது அவளது நினைவில் இருந்து மறைந்துகொண்டு இருந்தது. பாட்டும் இசையும் ரீங்கரித்து வரும் சீர்மையில் அந்த ரேடியோவை டியூன் செய்வதில் சிரத்தை காட்டி வந்த அவள், இப்போது எல்லாம் பிரக்ஞையற்ற ஒரு மூதாட்டியின் அரற்றலைப்போல, அது கரமுரவென்று இரைந்துகொண்டு இருப்பதை பொருட்படுத்துவதே இல்லை. என்றாலும், எனது கனவுக்குள் வரும்போது ஒரு செல்லப் பிராணியைப்போல அந்த ரேடியோவைத் தன் மாரோடு அணைத்துப் பிடித்தபடி  எடுத்து வருகிறாள். ராத்திரியில் மரத்தடியில் உட்காரக் கூடாது என்று சாங்கியம் சொல்லி அதட்டுவதற்கு கனவுக்குள் ஒருவரும் இல்லையாதலால், நாங்கள் மா மரத்தடியில் அமர்ந்து 'இரவின் மடியில்’ பாட்டு கேட்போம். இருவருமே கண்களை மூடிக் கொண்டு பாடல்களில் லயித்து இருக்கும் தருணங்களில், இசைவயப்பட்டு அவள் தன்னுடலை அசைத்துக்கொள்வது... நாட்டியத்தின் சில அடவுகளை நினைவூட்டும் நளினத்துடன் இருக்கும்.

புத்தகங்களோடு அவள் கனவுக்குள் வரும் நாட்களில் நாங்கள் சந்திக்கும் இடம் நூலகமாக இருப்பது பொருத்தம்தானே. நூலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அந்த நூலகம் அவளுக்கு என்றே தனியாக கட்டப்பட்டதைப்போன்ற அமைதியுடன் காணப்படும்.  அலமாரியின் வரிசை நேர்த்தி குலையாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை வைத்துவிட்டு, வேறு ஒன்றை எடுத்து அவள் படிக்கத்தொடங்கி விடுவாள். ஒன்று முடிந்து மற்றொன்று. அது முடிந்ததும் இன்னொன்று என... அவளது வாசிப்பு கண்ணி இழைத்துப் போய்க்கொண்டே இருக்கும். புத்தகங்களில் இருக்கிற வெவ்வேறு உலகங்களுக்குள் பாய்ந்து மறைந்துவிடுபவளாக இருந்த அவள் திரும்பி வரும்வரை, நான் சைக்கிளை வைத்துக்கொண்டு காத்திருப்பேன். அவ்வப்போது தன் உடல் என்ற கூட்டுக்குத் திரும்புகிற அவள், இதோ கிளம்பி விடலாம் என்பதுபோல என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்துவிட்டு மறுபடியும் மறைந்து விடுவாள். அவளுக்குத் தெரியும், அந்தச் சிரிப்பு என்னை என்றென்றைக்கும் நிறுத்தி வைக்கும் என்று.

திடுமென அவள் நர்ஸ், டாக்டர், வக்கீல் என்று விதவிதமாக மாறிவிடுவாள். (ஒருநாள் கனவில் அவள் இந்திரா காந்தியைப்போல வந்ததைச் சொன்னபோது, உனக்கு கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று நையாண்டி செய்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.) வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு ஊரைச் சுத்திட்டு வர்றியா என்று அவளது புருசனோ, மாமியாரோ, கனவுக்குள் வந்து கேட்க முடியாது என்பதால், நாங்கள் மாலை வேளைகளில் நாடகம் அல்லது சினிமா பார்க்கப் போனோம். அல்லது கம்மாய்க்குப் போய் மீன் பிடித்து சுட்டுத் தின்றோம். தந்திக் கம்பத்தின் அடிப்பாகத்தில் காதுவைத்து ரீங்காரம் கேட்டோம். திரும்பும் பாதையின் மருங்கில் இருக்கும் இலந்தை மரத்தை நான் உலுக்குவேன். உற்சாகத்தோடு ஓடியோடி பழங்களைப் பொறுக்கி தன் மடியில் கட்டிக்கொள்ளும் அக்காவைப் பார்த்தால், ஒரு சிறுமியைப்போல் இருப்பாள்.

ஆனால், கனவுதானே என்று நான் அசட்டையாக இருந்துவிடுகிற நாட்களில், அக்காவின் நிழலுக்குள் மறைந்துகொண்டு கதிர்வேல் வந்துவிடுவான். கதிர்வேல், அக்காளின் புருசன் கனகவேலின் தம்பி. 'வயித்துக்குள்ளப் பூந்து இருக்கிற கருவை மாத்திவைக்க முடியுமா... விதைக்கிறதுதான் முளைக்கும்... இந்தவாட்டி உம்மவன் வந்ததும் கேளு, என்னாடாப்பா விதைச்சேன்னு. அதை விட்டுட்டு பிள்ளைங்களுக்கு ஏதாச்சும் தீம்பு பண்ணினே... அப்புறம் மூத்தப் பொட்டச்சி நீ மொதல்ல சாகுன்னு வெட்டிருவேன் ஜாக்கிரதை’ என்று தன் தாய் மாரியாயியைப்  பார்த்து அவன் போட்ட அதட்டலில்தான் அவள் அடங்கி இருக்கிறாள். தான் பெத்தப் பிள்ளைதான் என்றாலும் கதிர்வேலைக் கண்டால், மாரியாயிக்குக் கொஞ்சம் பயம்தான். சரியான முரடன். நன்றாக படிக்கக்கூடியவனாய் இருந்தும், அவங்க அப்பன் செத்த பிறகு பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக்கொண்டவன். ஒருத்தன் வெளியேறி வேலைக்குப் போனது போதும், நான் காட்டைப் பாத்துக்கிறேன் என்று பண்ணையத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டவன். பெரும்பாலும் ஊருக்குள் வரவே மாட்டான். காட்டுக் கொட்டாயோடு சரி. ராத்தங்கலும் அங்கேயேதான்.

நிஜத்திலும் அக்காவோடு கதிர்வேல் அதிகம் பேசி நான் பார்த்தது இல்லை. சாப்பாடு எடுத்துவைக்கும் நேரங்களில், 'போதும் அண்ணி’, 'இன்னுங் கொஞ்சம்’ என்பது மாதிரி ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசிக் கேட்டிருக்கிறேன். அப்பவும்கூட தண்ணிக்குள் பாயப்போகிற கொக்காட்டம் தலை குனிஞ்சே இருப்பான். வியாழக்கிழமையானால், வாரச்சந்தைக்குப் போகும்போது 'எதுவும் வாங்கியாரணுமா அண்ணி’ என்று கேட்பதற்கு வாய் திறப்பான். அக்காவும் கொழம்புச் செலவு, பெரிய பிள்ளைக்கு நொறுவாய், கண் மை, பவுடர் டப்பா, சின்னவளுக்கு கிரேப் வாட்டர் அது இதுன்னு சொல்லி அனுப்புவாள். சந்தையில் இருந்து திரும்பும்போது, ஸ்கூல் வாசலுக்கே வந்து என்னை கேரியரில் உட்காரவைத்து ஊருக்குக் கூட்டி வருவதை வாடிக்கையாகக்கொண்டு இருந்தான். வழி நெடுக நான்தான் லபலபன்னு ஏதாவது கேட்டுக்கொண்டு வருவேனேயழிய, அவனாக எதுவும் பேச மாட்டான்.

அப்பேர்ப்பட்ட இந்த கதிர்வேல், என் கனவுக்குள் அவனாகவே வந்தானா அல்லது அக்காவே கூட்டி வந்தாளா என்ற குழப்பத்தை நான் அவர்களிடம் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. எனக்கு அவனைப் பார்க்க ஐயோ என இருந்தாலும், அக்காவுக்கும் எனக்குமேயான கனவில் அவனை ஒரு தொந்தரவாகவே கருதி முகத்தை சிடுசிடுப்பாக வைத்துக்கொள்வேன். அவன் வந்ததை நான் ரசிக்கவில்லை என்பதை அறியாதவள் அல்ல அக்கா. இந்த நேரத்தில் மெல்லிதாக ஒருமுறை சிரித்தால்கூட, நான் சமாதானம் அடைந்துவிடுவேன் என்பது தெரிந்திருந்தும் அவள் சிரிக்க மாட்டாள். தன் சிரிப்பை மலினமாக செலாவணி செய்கிறவள் என்ற தப்பான அபிப்ராயம் எனக்கு வந்துவிடக் கூடாது என்று சிரிக்காமல் தவிர்ப்பதில்தான் சுசீலாக்கா ஜெயிக்கிறாள். எனவே, அவர்கள் இருவரையும் தனித்திருக்க விட்டுவிட்டு, நான் சைக்கிள் ஏறி வேறு பக்கம் கிளம்பிவிடுவேன். இப்போது என் கனவில் நான் இருக்க மாட்டேன். அவர்கள் மட்டுமே இருப்பார்கள். எதுவும் பேசிக்கொள்ளாமலே எதிரெதிராக உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள் வெகு நேரம். விடியப்போகிறது என்று சொல்வதற்காக நான் சைக்கிள் மணியை அடித்து சமிக்ஞை எழுப்பிக்கொண்டே வரும்போது, அவன் என் கனவில் இருந்து வெளியேறிப் போயிருப்பான்.

இப்படித்தான் ஒருநாள் துணி துவைத்துக்கொண்டு வருவதாய் சொல்லிக்கொண்டு பம்ப் செட் கிணற்றடிக்கு நானும் அக்காவும் போகிறோம். எங்களைக் கனவில் யாரும் பின்தொடர்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்தாள் அக்கா. மோட்டார் ஓடிக்கொண்டு இருக்கிறது. வயலில் தாங்கொழுத்துப் பாய்ந்துகொண்டு இருக்கிறது தண்ணீர். மடை ஒன்றையும் திருப்பாமல் இலவ மரத்தடியில் படுத்துக்கிடந்த கதிர்வேல் எங்களைக் கண்டதும் எழுந்து வருகிறான். ஏதோ தீவிரமான யோசனையில் மூழ்கி இருந்திருப்பான்போல. அவனது முகம் இயல்பானதாக இல்லை. எப்போதும் சமன் இழக்காத அக்காவும்கூட அவனது தோற்றத்தைப் பார்த்து சற்றே பதற்றம் கொண்டவளாகிவிட்டாள்.

'அவங்க எதிர்பார்க்கிறது எதுவோ, அது கிடைக்கிற வரைக்கும் உங்கள நிம்மதியா இருக்க விட மாட்டாங்க.  அது ஏன் கிடைக்கல அல்லது எப்படி கிடைச்சதுங்கிறது அவங்களுக்கு முக்கியமில்ல...’ என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தான். அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பது ஒருவேளை அக்காவுக்கு விளங்கியதோ என்னவோ, எனக்கு துளியும் புரியவில்லை. இருளைத் திரட்டிவைத்தது போன்ற ஓர் இறுக்கம் அங்கே நிலவியது. யாராவது ஒருவர் பேசிக்கொண்டே இருந்தால் சற்றே தேவலாம் எனத் தோன்றியது எனக்கு.

விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. அதற்குள் அவர்கள் என் கனவில் இருந்து வெளியேறித் தத்தமது இடங்களுக்குப் போகாவிட்டால், உள்ளுக்குள்ளேயே மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதைச் சொல்லி அவர்களை எச்சரிக்கைப்படுத்தினேன். ஆமாம், வெளியேறியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முணுமுணுத்தவன் திடுமென ஓங்காரமெடுத்து அலறினான். என்னவென்று நாங்கள் விளங்கிக்கொண்டு அவனைத் தடுப்பதற்குள்ளாகவே அவன் சூரிக்கத்தியால் தன் வயிற்றை வகிர்ந்து 'இதை வைத்தாவது அவர்களை சமாளித்துக்கொள்ளுங்கள்’ என்று ஒரு குழந்தையை எடுத்து, அக்காளிடம் கொடுத்துவிட்டு கனவில் இருந்து வெளியேறிப் போய்விட்டான். ரத்தமும் நிணமும் படிந்த உடலோடு வீறிட்டுக்கொண்டு இருந்த குழந்தையை அக்காவிடம் இருந்து வாங்கி நான் துடைக்கிறேன். 'அது ஆண் குழந்தைதானே’ எனக் கேட்கிறாள் அக்கா. 'ஆம்’ என்று நான் உறுதிப்படுத்தியதும், 'அதைக்கொடு, அவர்களது மூஞ்சியில் விட்டெறிந்துவிட்டு வருகிறேன்...’ என்று என்னைத் தன்னந்தனியாய் விட்டுவிட்டு கனவில் இருந்து வெளியேறினாள் குழந்தையோடு.

எனக்கு ஏன் இப்படிக் குழப்படியான கனவுகளே வருகின்றன என்பது  மற்றும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது. ஆனால், எல்லாமே சுசீலாக்காவால் வந்த வினை. ஆய்ந்தோய்ந்துப் பார்க்காமல், 'கவர்மென்ட் உத்தியோகம், நிலபுலம், ஊரிலேயே அவங்களுடையது மட்டும்தான் பில்லை வீடு, ரெண்டே ரெண்டு பசங்க மட்டுந்தான், நாத்தனார் நங்கை பிடுங்கல் கிடையாது’ன்னு பெத்தவங்க வற்புறுத்தி இருக்காங்க. பெத்த வங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. இந்தக்கா என்ன செய்திருக்கணும்? நிதானமா யோசித்து, 'டைப்பிஸ்ட் ஆகவோ, டீச்சர் ஆகவோ போகணும்னு எனக்கு ஆசை இருக்கு, ஏன் ஜில்லா கலெக்டர் ஆகிற யோகம்கூட எனக்கு இருக்கு, நான் மேற் கொண்டு படிக்கணும், அதனால் இந்த சதுர வெட்டுக் கிராப்புக்காரனை வேற இடம் பார்க்கச் சொல்லுங்க’ன்னு தைரியமா மறுத்து இருக்கணும். தன்னோட அறிவுக்கும் அழகுக்கும் அந்தப் பட்டாளத்தானை அக்கா கட்டியே இருக்கக்கூடாது. அட, பொண்ணு கேட்டு வந்துட்டான்னா... அதுக்காகக் கட்டிக் கணுமா என்ன?

எடுத்த எடுப்பிலேயே துளிக்கூட ஜோடிப் பொருத்தம் இல்லைங்கிறதை கண் திறவா சிசு வும்கூட கண்டுபிடிச்சிரும். அப்படி இருக்கிறப்ப 'எனக்கேத்த ஆள் இவன் இல்லே’ன்னு பட்டுன்னு சொல்லி இருக்கணும். சரி... ஆள்தான் அப்ப டின்னா குணமாச்சும் தகுமா? வெத்தலைப் பாக்கு எடுக்கறதுக்கு முந்தியே டைப்பிங் கிளாஸுக்குப் போறதை நிறுத்தச் சொன்னானாமே... அதிலேயே அவன் புத்தி அறிந்து, 'முடியாது சாமி’களேன்னு அக்கா மறுத்து இருக்கணும். இவனைவிட்டால், வேறு மாப்பிள்ளையே வரா மலாப் போயிருப்பான்? சுசீலாக்காவின் முக லட்சணத்துக்கு திருஷ்டிப் பொட்டு வெச்சாப்ல வந்து சேர்ந்தானே... இந்தக் காதறுந்த கனக வேல் புருசன் என்று (இவனை என் கனவுக்குள் நுழைய விடாததற்கான காரணங்கள் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்). அவன் எப்படியும் கிடந்து தொலையட்டும், அவனால்தான் சுசீலாக்கா எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தாள். அந்த மட்டுக்கும் அவனை சகிச்சிக்கலாம்.

எட்டாங் கிளாஸ் படிச்சதுக்கே எங்கள் ஊரிலேயே அதிகம் படித்தவளாகிப்போனாள் சுசீலாக்கா. எங்கள் ஊருக்குள் முன் கொசுவம் வைத்து சீலை கட்டிய முதல் பெண் அவள்தான். முதுகுப் பக்கம் கொக்கிவைத்து ரவிக்கை போட்டவளும் அவள்தான். அது மட்டும் இல்லை, அவள் பயன்படுத்திய குளியல் சோப், புலி மார்க் சீயக்காய்ப் பொடி, வார்வைத்த செருப்பு, ஜடை பில்லைகள்...  இவை எல்லாம் எங்கள் ஊர் முன், பின் கண்டிராதவை. பிடித்தவர்களுக்குக் கொடுப்பதற்கு என்று மாராப்பில் பணத்தை மறைத்துவைத்திருக்கும் பழக்கத்தை அக்காவிடம் இருந்துதான் எங்கள் ஊர் பெண் கள் கற்றுக்கொண்டார்கள். 'ரோசாப்பூ ரவிக்கைக் காரி’ படத்தில் தீபாவை சுற்றி ஊரே வேடிக்கை பார்க்குமே... அப்படி ஆகிவிட்டது. ஆனால், தனக்கும் ஊர்ப் பெண்களுக்குமான இடை வெளியை சுசீலாக்கா குறைக்க விரும்பினாள் போலும். அதற்காக, அவள் வெளியூர் போகும் தருணங்களைத் தவிர்த்து... மற்ற நாட்களில் ஊர்ப் பெண்களைப்போலவே விசேஷ அலங் காரம் எதுவும் செய்துகொள்ளாமல் இருந்தாள். ஆனால், அதுவும்கூட அவளை இன்னும் அழகாகக் காட்டியது என்றால், அது ரசனை இல்லாத அந்த கூமுட்டைக் கனகவேலின் குருட்டு அதிர்ஷ்டம்தான்.

நாங்கள் படிக்க வரும்போது, சுசீலாக்கா அவங்க வீட்டு வாசலுக்கும் பரவிக் காயும் லைட் வெளிச்சத்தில் பாய் விரித்து அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டோ, இல்லையானால்... ராந்தலின் கண்ணாடியை திருநீறு தேய்த்துத் துடைத்தபடியோ இருப்பாள். அவள் செய்யும் வேலைகளுக்கு மேஸ்திரியாட்டம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் கனகவேல் முணுமுணு என்று எதையாவது சொல்லிவிட்டு அவனே சிரித்துக்கொள்வான். அவள் ரசிக்கத்தக்கதாக அவன் பேச்சு இருப்பது இல்லைபோலும். சில நேரங்களில் நாங்கள் படிப்பதை எங்கள் ஹெச்.எம் மாதிரி பின் பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு மேற்பார்வை செய்வான். சிகரெட் பற்றவைத்துக்கொள்வதும் உண்டு.

பட்டாளத்தில் இருந்து தூக்கி வருகிற அந்தப் பெரிய இரும்புப் பெட்டியில் பாதிக்கும் மேல் சிகரெட்டும் சீமைச் சாராய பாட்டிலும்தான் இருக்கும்னு சிங்கப்பல்லன் மகன் சொல் வது நிஜம்தானாக்கும். கருமம், இவன் தன்கிட்ட நெருங்கி நெருங்கிப் பேசறப்ப, அந்த நாற்றத்தை அந்தக்கா எப்படித்தான் தாங்கிக்குமோ... த்தூ. காற்று பலமா வீசுறப்ப அக்காகிட்ட இருந்து கிளம்பி வரும் வாசனையில் படிக்கும் கவனம் குலைவதை நான் யார்க்கிட்டயும் சொல்லியதே கிடையாது. சொன்னால், அவ்வளவுதான், ஒம்பதாவது படிக்கறப்பவே உனக்கு இந்த நெனப்பான்னு நான் நினைக்காததை எல்லாம் நினைச்சதாகச் சொல்லி, எங்கப்பா சாட்டைக் குச்சியில் விளாசிடுவார்னு எனக்குத் தெரியும். ஆனால், குடிகுரா பவுடரும், மஞ்சளும், மல்லிகையும் சேர்ந்த வாசமாகத்தான் சுசீலாக்கா எனக்குள் எப்போதும் கமழ்ந்திருக்கப்போகிறாள் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்து இருக்க வில்லை. அவளை நினைத்துக்கொள்ளும் போது எல்லாம் என்னைச் சுற்றி பரவத் தொடங்கும் அந்த வாசனையை வீண் பிரமை என்று நான் புறந்தள்ளிவிடுவது இல்லை.

படித்தப் பெண் ஒருத்தியின் முன் வாய்விட்டு எதையாவது தப்பாகப் படித்துவிடுவோமானால், மானம் போய்விடும் என்ற எச்சரிக்கை உணர்வு ஆட்டியது எங்களை. அதுவும் இல்லாமல் நன் றாகப் படிக்கிற பிள்ளைகளாக்கும் என்று அவ ளிடம் பேர் வாங்கும் ஆசையும் உள்ளுக்குள் இருந்தது. அதனால், பொங்கலுக்கு சபையே றும் சமூக நாடகத்துக்கு ஒத்திகை பார்ப்பவர்களைப்போல, மனசுக்குள்ளேயே படிப்பது, வெளிச்சம் தெரிகிற தூரம் வரை நடமாடிக்கொண்டே படிப்பது, புத்தகத்தைப் பார்க்காமல் கண்ணை மூடியபடி அதுவரை

படித்ததை சொல்லிப்பார்ப்பது என்று ஆகிவிட்டோம். அவள் எங்களைக் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும், நாங்கள் அவளைப் பார்த்துக்கொண்டுதான் படித்தோம். அவள் இன்னாருக்கு என்று இல்லாமல் எங்களைப் பார்த்து எப்போதாவது பொதுவாக சிரித்துவைப்பாள். அந்தச் சிரிப்புக்கு இன்னும் நாலு பாடம் படிப்போம்.

கல்யாணமாகி ஒரு மாதம் கழித்து கனகவேல் தன் முரட்டு கால் ஜோடுகளை மாட்டிக்கொண்டு பட்டாளத்துக்குக் கிளம்பிவிட்டான். சிகரெட் பாக்கெட்டும் சீமைச் சாராய பாட்டிலும் தீர்ந்திடுச்சுபோல. 'போய் வாங்கி ரொப்பிக்கிட்டு வந்துருவான் அடுத்த வண்டியில்’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால், அவன் வர ஒரு வருடமாகும் என்று சுசீலாக்கா சொன்னபோது, ஒழியட்டும் சனியன் என்று இருந்தது. வராமலே இருந்தால்கூட நல்லதுதான், அக்கா நிம்மதியாக விரல் நோகாமல் பூ தொடுத்துக்கொண்டு இருந்துவிடுவாள்.

இப்போது எல்லாம் சுசீலாக்கா வீட்டு வாசலுக்கே போய்ப் படிக்கத் தொடங்கிவிட்டோம். ச்சே, அக்கா மாதிரி அழகா, பிரி யமா மனசுக்குப் பிடிச்ச வாசனையோடு சொல்லித் தருகிற ஒரு டீச்சர் இருந்தால், படிக்க எவ்வளவு நன்றாக இருக்கும்? அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் படித்துக்கொண்டே இருக்கலாம். அந்த டீச்சர் பத்தாம் வகுப்புக்கு வர மாட்டாள் என்றால், எப்படியாவது ஃபெயிலாகி ஒன்பதாவதிலேயே தங்கிவிடலாம். ஆனால், அப்படி ஒருத்தியை டீச்சராக ஏற்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டாமலே போய்விட்டது!

முழுப் பரீட்சை லீவ் விடுவதற்கும், சுசீலாக்கா பிரசவத்துக்குத் தாய் வீடு போவதற்கும் சரியாக இருந்தது. எனக்குத்தான் பித்து பிடிப்பதைப் போலாகிவிட்டது. எங்கே இருந்தோ திடீரென்று வந்து ஜடையை முன் பக்கம் தூக்கிப் போட்டபடி சிரிப்பதுபோல் இருந்தது. வெறும் காற்றில் அவளது உருவங்களைக் கண்டடைந்து பித்தானேன். பிள்ளைகள் இல்லாத பள்ளிக்கூடம்போல் ஊரே வெறும் மைதானமாகத் தெரிந்தது.

சுசீலாக்கா குழந்தையோடு வந்தபோது, பத்தாவது கால் பரீட்சை தொடங்கி இருந்தது. அக்கா இப்போது வேறு மாதிரி தெரிந்தாள். அவளோட முகத்தில் இருந்த சிரிப்பில் கொஞ்சத்தை குழந்தைக்குக் கொடுத்துவிட்டாள்போல. அது எப்போது பார்த்தாலும் தூங்கிய நேரம் போக பொக்கையாகச் சிரித்துக்கொண்டே இருந்தது. வாழ்வரசி என்று பெயர் வைத்திருந்தாள். பாலூட்டவும், குளிப்பாட்டவும், தூங்கவைக்கவும், துணிமணி அலசவுமே அக்காவுக்கு நேரம் சரியாக இருந் தது. அதனால், அக்காவைத் தொல்லை பண்ண வேண்டாம் என்று நாங்கள் மீண்டும் கம்பத்தடிக்கே படிக்க வந்துவிட்டோம். 'இந்த வருஷம் பப்ளிக் எழுதப்போறீங்க, ஏதாச்சும் சொல்லித்தரலாம்னா, முடிய மாட்டேங்குதே’ என்ற அங்கலாய்ப்பில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லித் தருவாள். ஒருநாள் அதுவும் கெட்டது.

அந்த கனகவேல் அதே இரும்புப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, 'இப்பத்தான் லீவ் கிடைச்சது’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்தான். ''விக்ரகமாட்டம் இருக்கு கொழந்தை. அதைக் கொஞ்ச மனசில்லாம, தலைச்சம்பிள்ளையே பொட்டையாப்போச்சேன்னு குதிக்கிறா அந்த மாரியாயி. பத்தாததுக்கு இப்ப மவனும் வந்துட்டான், இன்னும் என்னென்ன ஆட்டங் காட்டப்போறாளோ'' என்று அன்றிரவு எங்க அப்பாவிடம் புகார் தெரிவித் தாள் அம்மா.

இந்த முறை அவன் எனக்கு ஒரு பேனா கொடுத்தான். 'உங்கக்காதான்டா உனக்கு வாங்கியாரச் சொல்லி எழுதி இருந்தா’ என்று சொத்தைப் பல் தெரிய சிரித்தான். அவன் இருந்த காலம் முழுவதும் அக்காவைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

கனகவேல் கிளம்பிப் போன கொஞ்ச நாளி லேயே சுசீலாக்கா முன்பு மாதிரியே வாந்திஎடுத்தாள். சுருண்டு சுருண்டு படுத்துக்கொண் டாள். இந்த முறை பிரசவம் இங்கேயே நடந்தது. அப்பன் ஜாடையில் இருக்கிறது குழந்தை என்றார்கள். அதனாலேயே, எனக்கு அதைப் பிடிக்காமல் போய்விட்டது. தகப்பனும் பிள்ளைகளும் பாசமான ஒரு அக்காவை என் னிடம் இருந்து தூரம் கடத்திப்போவதை எப்படித்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? அதற்காக மாரியாயிபோல, 'இங்கதான் வந்து பொறக்கணும்னு இந்தச் சனியனை யாரு வேண்டி அழுதா... அதான் ஏற்கெனவே ஒரு பொட்டை இருக்குதே’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு கல் நெஞ்சம் இல்லை. அந்த கதிர்வேல் மட்டும் இல்லேன்னா, இந்நேரம் மாரியாயி குழந்தையை எதுவும் பண்ணியிருப்பாள் என்பாள் அம்மா.

சுசீலாக்கா ரொம்பவும் மெலிந்துகொண்டே இருந்தாள். கண்ணில் வற்றாமல் இருக்கும் அந்த வாஞ்சையை வைத்துத்தான் அவளை அடையாளம் காண முடியும்போல் இருந்தது. நஞ்சானும் குஞ்சானுமாக ரெண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவளாக இருந்தாள். பொழுதுக்கும் அவளுக்கு வேலை சரியாக இருந்தது. அவள் இருக்கும் தாவாரத்தில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டே இருந்தது.

பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது நான் லைப்ரரியில் எடுத்து வந்து தருகிற மூன்று புத்தகங்களையும் ஒரே நாளில் படித்து முடித்த அவள், இப்போதெல்லாம் எடுத்து வந்து ஒரு மாசமாகியும் ஒன்றையும் படிக்க முடியாமல் வெறுமனே ரெனியுவல் மட்டுமே செய்துகொண்டு இருந்தாள். சிலோன் ரேடியோவைத் திருப்பி இரவின் மடியில் கேட்டுக்கொண்டு, கூடவே ஹம் செய்கிற அக்காவை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவது இல்லை. இப் போது இருக்கிற அக்கா கனகவேலின் பொண்டாட்டி, அவனது ரெண்டு பிள்ளைகளுக்குத் தாய். மாரியாயின் மருமகள்.

இப்போதெல்லாம் கதிர்வேல் அடிக்கடி வீட்டுக்கு  வரத் தொடங்கி இருந்தான். 'பொட்டையப் பெத்தவளே, புருசன் வூட்ட அழிச்சவளே’ என்று எந்நேரமும் மொணமொணத்துக்கொண்டு இருக்கிற அவனது அம்மா மாரியாயி, அவன் இருக்கும் நேரங்களில் வாயடக்கிக்கிடப்பது அக்காவுக்கும் ஆறுதலாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அக்காளின் மூத்தப் பிள்ளையை உட்காரவைத்து ரவுண்ட் அடிப்பதற்காக அவன் தனது சைக்கிளில் புதிதாக பேபி ஸீட் பொருத்தி இருந்தான். அந்தப் பிள்ளையும் முட்டைக் கண்ணை உருட்டிக்கொண்டு அவனிடம் ஒட்டிக்கொள்ளத்தான் செய் தது. ராச்சாப்பாடு முடிந்ததும் கொட்டாய் திரும்புவதற்கு முன்புபோல அவன் அவசரம் காட்டுவது இல்லை. பிள்ளைகளில் ஏதாச்சும் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வந்து, லைட் வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருக்கிற எங்களிடம் விளையாட்டு காட்டிவிட்டு பின் நேரத்தில்தான் கிளம்பிப் போனான். அந்த மாதிரியான நேரங்களில் அக்கா, இன்னொரு பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு வெளித் திண்ணையில் உட்கார்ந்து இருப்பது கோட்டுருவாய்த் தெரியும். கதிர்வேல் கிளம் பிப் போன பிறகும் அக்கா வெகு நேரம் அங் கேயே உட்கார்ந்து இருப்பதை நான் பல நாட்கள் கண்டிருக்கிறேன்.

இந்த முறை கனகவேல் வந்து ஒரே வாரத்தில் திரும்பிப் போக வேண்டியிருந்தது. ரீ-கால் செய்து தந்தி வந்ததை அடுத்து அவன் கிளம்பிப் போன பிறகு, அக்கா பழைய உற்சாகத்துக்குத் திரும்பியிருந்தாள். காணாமல் போயிருந்த அவளது சிரிப்பு மீண்டும் வந்து விட்டிருந்தது. அவளது வாசனையால் காற்று பழையபடி மணந்தது. 'இந்த வருஷம் பப்ளிக், கவனமாப் படி’ என்று சொல்லும்போது அக்கா எங்களது டீச்சர்களில் ஒருத்தியாக மாறிக்கொண்டு இருக்கிறாளோ என்று நான் கொண்டிருந்த கவலை இப்படியாக நீங்கியது. முன்புபோல வீட்டுப் புழக்கடையில் அல்லாமல், துணிகளைத் துவைத்து வர இப்போது பம்ப்செட் கிணற்றுக்குப் போகத் தொடங்கினாள். அங்கே கதிர்வேல் இருந்தான்!

அக்கா தன் மூன்றாம் பிரசவத்தில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். அது என் கனவில் கதிர்வேலு தன் வயிற்றைக் கிழித்து எடுத்துத் தந்த குழந்தைதான் என்று நான் உறுதியாக நம்பினேன். அதே வேளையில் நிஜத்தில் பிறந்த இந்தக் குழந்தையைத்தான் அவன் தன் வயிற்றைக் கிழித்து எடுத்துக் கொடுப்பதுபோல கனவில் கண்டுவிட்டேனோ என்கிற குழப்பமும் எனக்கு இருந்தது. எப்படி யாயினும், தனக்கு என்று பெற்றுக்கொள்ளாத அந்தக் குழந்தையை அக்கா எப்படி வளர்க்கப் போகிறாள் என்று என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. பசியால் வீறி டும் குழந்தைக்குப் புகட்டாமல், நெறி கட்டிய தன் மார்களைப் பிதுக்கி சுவற்றின் மீது பாலைப் பீச்சியடிப்பவளாக என் கனவில் வந்த அக்காவை... நான் நிஜத்தில் பார்த்துவிடக் கூடாது என்பதே  என் கவலையாக இருக்கிறது!

நன்றி - விகடன்

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா – ஆதவன் தீட்சண்யா

லிபரல்பாளையம் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அயல்நாட்டு அரசியல் ஆர்வலர்களுக்கு அந்த செய்தி நம்ப முடியாததாகத்தான் இருந்தது. மிகுந்த அதிர்ச்சியும் திகைப்புமுற்ற அவர்கள் தாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா என்று தம்மைத்தாமே உசுப்பிவிட்டுக் கொண்டனர். டிவியில் ஏதேனும் அம்புலிமாமா கதைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமும்கூட எழும்பியது.

இந்தத் தேர்தலில் கழுதைகளும் நாய்களும் போட்டியிடப் போவதாக முதலில் செய்தி வந்தபோது, அது சுயேட்சை வேட்பாளர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பற்றிய செய்தியாக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அதற்கப்புறம் வேட்பாளர்களே கழுதைகளும் நாய்களும்தான் என்று தெரிந்தபோது தேர்தல் பரபரப்புக்காக யாரோ குசும்புக்காரர்கள் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தியாக இருக்கக்கூடும் என்று மறந்துபோனார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ஏழு நாய்களும் ஏழு கழுதைகளும் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி எளிதில் மீளக்கூடியதாயில்லை. மனிதர்கள் போட்டியிடும் தேர்தலில் மிருகங்களா என்ற குழப்பமே இன்னும் நீங்காத நிலையில் அவை வெற்றியும் பெற்றுவிட்டன என்றால் யார்தான் இயல்பாக இருக்க முடியும்? அதுவும் எதிர்த்துப் போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கவைத்துவிட்டு வெற்றி பெற்றுள்ளன என்றால்?

இதெல்லாமே, ஒரு உறைக்குள் இரண்டு மொன்னைக்கத்திகள்கூட ஒன்றாயிருக்க முடியாது என்பதற்கு கேடுகெட்ட உதாரணமாய் லிபரல்பாளையத்தில் இருக்கிற இரண்டு தலைவர்களின் தனிப்பட்ட அகந்தையாலும் வாய்க்கொழுப்பாலும் வந்த வினைதான். தனக்குள்ள செல்வாக்கை மிகைப்படுத்திக் காட்ட `நான் பார்த்து ஒரு கழுதையை நிறுத்தினாலும் இந்த மக்கள் அதற்குதான் ஓட்டுப் போடுவார்கள்' என்று அ கட்சியின் தலைவர் சொன்னதை வெறும்பேச்சாய் கருதி விட்டுவிட்டிருக்கலாம். அல்லது ஏற்கனவே உன் கட்சியில் கழுதைகள்தானே இருக்கு என்று மட்டம் தட்டிவிட்டு ப்ளு கிராஸ் அமைப்பிடம் மன்னிப்புக் கேட்டு நகர்ந்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் நடக்காததே அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு மூலப்புள்ளியாக அமைந்துவிட்டிருந்தது. ஒரு கட்சித்தலைவர் எவ்வளவு அற்பமான விசயங்களைப் பேசினாலும் அதற்கு இன்னொரு தலைவர் கல்யாண வீட்டிலோ கருமாதிக்காட்டிலோ மறுப்பு தெரிவித்து பெரும் பிரசங்கம் செய்வது இந்த நாட்டில் வாடிக்கைதான் என்றாலும் கழுதை விசயம் அப்படியாக முடியவில்லை. `எனக்கு மட்டும் செல்வாக்கில்லையா... என்னை லேசுப்பட்டவனென்று நினைத்துக்கொண்டாயா நீசனே, நான் பார்த்து ஒரு நாயை கைகாட்டினாலும் மக்கள் அந்த நாயைத்தான் ஜெயிக்கவைப்பார்கள்' என்று ஆ கட்சியின் தலைவரும் தன்பங்குக்கு எகிறி அங்கு ஒரு போட்டியை உருவாக்கிவிட்டார். கடைசியில் உன்னால் முடிந்தால் நிறுத்திப் பார்? என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டு நிலைமையை முறுக்கேற்றி இவ்வளவு சிக்கலாக்கிவிட்டிருந்தார்கள்.

பகிரங்கமாக சவால்விட்டுவிட்டாலும் அ கட்சித்தலைவருக்கு அவ்வளவு எளிதாக கழுதைகள் கிடைத்துவிடவில்லை. கழுதைகூட குட்டியில் அழகாய்த்தான் இருக்கும் என்று சொல்லப்படுவதால் வாக்காளர்களை எளிதாக ஈர்க்க குட்டிக்கழுதைகளைத் தேடியலைந்தார். எங்கும் கிடைக்காத நிலையில், சினைப்பட்டிருந்த கழுதைகளுக்கு சிசேரியன் செய்து குட்டியை வெளியே எடுத்து வேட்பாளராக்கிவிடலாமா என்றும்கூட யோசிக்குமளவுக்குப் போய்விட்டார். பத்துப்பிள்ளைகளை பெற்றதற்கு பதில் சில கழுதைகளையாவது பெற்றிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ மனைவி மீது எரிந்துவிழுந்தார். அதுக்கு நீ கழுதையா இருந்திருக்கணும்யா என்று அந்தம்மாவிடம் வசை வாங்க வேண்டிதாயிற்று. ச்சே, இப்படியாகுமென்று தெரிந்திருந்தால் முதலில் ஒரு கழுதைப்பண்ணையை சொந்தமாக உருவாக்கிவிட்டு அதற்கப்புறம் அறிவித்திருக்கலாம். அல்லது குதிரை எருமை ஆடு மாடு என்று எளிதில் கிடைக்கும் விலங்கு எதையாவது சொல்லித் தொலைத்திருக்கலாம். இளக்காரத்திலும் ஏளனத்திலும் அவசரப்பட்டு கழுதையை நிறுத்துவதாக சொல்லிவிட்டு இப்படி இம்சைப்பட வேண்டியிருக்கிறதே என்று தலைவர் தன்னையே நொந்துகொண்டார். ஒன்றிரண்டு கழுதைகளை வைத்திருந்த சலவைத் தொழிலாளர்கள் `எங்கப் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுராதீங்க...' என்று மறுத்துவிட்டார்கள். கட்சி, அதிகாரம் என்ற அஜால் குஜால் ஜம்பமெல்லாம் அவர்களிடம் பலிக்கவில்லை. கடைசியில் ஒவ்வொரு குட்டிச்சுவராய்த் தேடி கேட்பாரற்று புரண்டு கொண்டிருந்த ஏழு கழுதைகளை இழுத்துவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஆ கட்சித்தலைவருக்கோ வேறுமாதிரியான சிக்கல் இருந்தது. அவர் வீட்டிலேயே பத்து நாய்கள் வளர்ந்து வந்தாலும் அவற்றை தேர்தலில் நிறுத்துவதில் சங்கடமிருந்தது. வாரீசு அரசியல் நடத்திக் கொண்டிருப்பதாக அவர்மீது ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்தக் காரியத்தையும் இந்தத் தேர்தலில் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே ஏதாவது சில பதவிகளை ஆக்கிரமித்திருந்த நிலையில், நாய்களென்றாலும் அவர் வீட்டு நாய்கள்தானா என்று கட்சிக்குள்ளேயும் அதிருப்தி உருவாகும் வாய்ப்பிருந்தது. அதற்காக கட்சியின் பிறதலைவர்களது வீட்டு நாய்களுக்கு சீட் கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. எனவே தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஏழுநாய்களை தரதரவென இழுத்துவரச் செய்து விஷமுறிவு ஊசிகள் பலவற்றை அவற்றுக்கு ஏற்றி ஆபத்தானவையல்ல என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு வேட்பாளர்களாக அறிவித்தார்.

கழுதையை எதிர்த்து நாய் என்று நிறுத்தப்பட்டிருந்தால்கூட அது இரண்டு விலங்குகளுக்கிடையிலான போட்டி என்ற அளவில் சமதையானதாக கருதப்பட்டிருக்கும். ஆனால் கழுதைகள் நிற்கிற தொகுதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு வேறு ஏழு தொகுதிகளில் நாய்களை நிப்பாட்டியிருந்தார் ஆ கட்சித்தலைவர். இந்த இரண்டு தலைவர்களும் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிவிட்டதாக பிற கட்சிகள் கண்டித்தாலும் தம் இருப்பை காட்டிக்கொள்வதற்காக வேறுவழியின்றி களமிறங்கத்தான் வேண்டியிருந்தது. ஒரு கேக்கை ஆளுக்கொரு துண்டாய் வெட்டி பங்கிட்டுக்கொள்வதைப்போல ஆளாளுக்கு சில தொகுதிகளை கைப்பற்றுவதே தேர்தல் என்று இதுவரை இருந்த நிலை இப்போது மாறிவிட்டதோ என்ற அச்சம் அவர்களைப் பீடித்தது.

இது மற்ற தொகுதிகளில் நடப்பதுபோல வெறுமனே எத்தனை வாக்குகள் என்கிற எண்ணிக்கை விளையாட்டல்ல, தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை நிறுவிக் காட்டும் யுத்தம் என்று ஊடகங்கள் வர்ணித்து உசுப்பேற்றின. எனவே இரண்டு தலைவர்களும் தத்தமது மான அவமான கௌரவப்பிரச்னையாகக் கருதி இந்த 14 தொகுதிகளிலேயே தேர்தல் முடியும்வரை முகாமிட்டிருந்தார்கள். தலைவர்கள் என்றால் அவர்கள் தனிமனிதரல்லவே? எனவே அவர்களது மனைவி, துணைவி, உபமனைவி, துணைத்துணைவிகளும் அவர்தம் பிள்ளைச் செல்வங்களும், அடுத்த ஜென்மத்தில் உடன்பிறக்கக்கூடிய சகோதரிகளும் இந்தத் தொகுதிகளுக்குள் சூறாவளியென சுழன்றடித்து பிரச்சாரம் செய்தார்கள்.

இதனிடையே, நாய்க்கும் கழுதைக்கும் தலைவர்களிடம் ஏற்பட்டிருக்கும் மவுசைப் பார்த்து மிரண்டு போன தொண்டர்கள், பிற்காலத்தில் அவை அமைச்சர் உள்ளிட்ட பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்த்து இப்போதிருந்தே புதுமரியாதை காட்டத் தொடங்கினர். அது சிலவேளைகளில் தலைவர்களே பொறாமைப்படுமளவுக்கும் சென்றது. எப்படியாயினும் தான் கழுதையாகவோ நாயாகவோ மாறினால் மட்டுமே தலைவரின் கடைக்கண் பார்வை தன்மீது படும் என்ற எண்ணமும் தொண்டர்களிடையே வலுத்துவந்தது. ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ அரவாணியாகவோ மாறிவிட முடியும். ஆனால் இயற்கையாலோ அயற்கையாலோ இதுவரை ஒரு மனிதன் கழுதையாகவோ நாயாகவோ மாறியதாக வரலாறில்லை. எனவே விட்டலாச்சாரியா படத்தின் மந்திரவாதியால் சபிக்கப்பட்டவர்களைப் போல வேறுவழியின்றி அவர்கள் தம்மை கழுதையாகவோ நாயாகவோ பாவித்துக்கொண்டு நாலுகாலில் நடக்கத்தொடங்கினர். தலைவர்கள் காரில் போகும்போது சக்கரத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதில் அவர்களுக்கு பயிற்சியிருந்தாலும் இப்படி குனிந்து நடந்து பழக்கமில்லை. முதுகுத்தண்டில் வலி தெறித்தது. அப்போதுதான் தங்களுக்கும் அப்படியொன்று இருப்பதே பலருக்கும் நினைவில் வந்தது. ஆனாலும் அதை வைத்துக்கொண்டு இனி செய்வதற்கு ஒன்றுமில்லையென பல்லைக்கடித்தும் பச்சைமரத்தைப் பார்த்தும் வலியைப் பொறுத்துக் கொண்டார்கள். உஸ்சென்று ஓய்வாக அவர்களால் இப்போது உட்காரக்கூட முடியவில்லை. பிராணிகளைப்போல வளைந்துவிட்ட உடம்பை ஒருக்களித்து கிடத்தத்தான் முடிந்தது.

எல்லாவற்றுக்கும் உச்சமாக அ கட்சி தொண்டர்கள் கனைத்தும் காகிதம் தின்றும் சாம்பலில் புரண்டும் தாங்களும் கழுதைகள்தான் என்று நிரூபிக்க முயன்றுகொண்டிருந்தனர். ஆ கட்சியினரும் சளைத்தவர்களில்லையே? அவர்கள் கம்பத்தைக் கண்டுவிட்டால் உடனே காலைத்தூக்கிக் கொண்டு... தாங்களும் நாய்தான் என்று நம்பவைக்க பாடாய் பட்டுக்கொண்டிருந்தார்கள். பவ்யமாய் வாலாட்டுவதாக கற்பிதம் செய்துகொண்டு அவர்கள் இடுப்பை ஆட்டி ஆட்டிக் காட்டியது மிகுந்த ஆபாசமாயும் மரியாதைக்குறைவாயும் இருந்ததால் சனங்களிடம் கல்லடியும் படவேண்டியிருந்தது. இப்படி அ,ஆ கட்சியினர் அடித்த லூட்டியைப் பார்த்து கலக்கமுற்று தாங்களும் ஏதேனுமொரு விலங்கைப்போல நடந்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று மற்ற கட்சியினரும்கூட நாலுகாலில் நடக்கத் தொடங்கினர். அவரவர் கற்பனைக்கேற்ற விலங்கை மக்களே உருவகித்துக் கொள்ளட்டும் என்று ஒத்திகைப் பழகாத கத்துக்குட்டி நடிகர்களைப்போல இந்த வேட்பாளர்களும் கட்சிக்காரர்களும் செய்த சேஷ்டைகளைக் கண்டு ஊர்உலகமே சிரித்தது.

கழுதைகளை வெற்றிபெறச் செய்வது மட்டுமல்லாது நாய்களைத் தோற்கடித்து மொக்கைப்பட்டம் கட்டினால்தான் தனது செல்வாக்கின் வீச்சை உலகுக்கு முழுமையாக உணர்த்தமுடியும் என்று கருதினார் அ கட்சித் தலைவர். தீவிரமாக களப்பணியாற்றும் நாய்களுக்கு சில எலும்புத் துண்டுகளை வீசி `ஒதுங்கிப்போகச்' செய்வது, ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தெங்கம்பழத்தைக் கொடுத்து அதை என்ன செய்வதென்று தெரியாமல் உருட்டிக்கொண்டு அலைவதிலேயே கவனத்தை சிதறடிப்பது, வசப்படாத நாய்களை வெறிநாய் என்று முத்திரைக்குத்தி என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது போன்ற சதித்திட்டங்களையும் தீட்டிக்கொண்டிருந்தார். இதேமாதிரி கழுதைகளைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களுடன் ஆ கட்சித் தலைவரும் தயாராகிக் கொண்டிருந்தார். சண்டைக்கு சிங்காரமில்லை. போட்டி என்றால் எல்லாவற்றிலும்தானே? லிபரல்பாளையம் மக்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலில் கொள்கை கொத்தவரங்காய் என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், `இந்தியாவின் திருமங்கலம் பாணியையும்' அ, ஆ இரு கட்சிகளுமே கையாண்டன.

கழுதையை வேட்பாளராக நிறுத்தியதில் அ தலைவருக்கு கூடுதல் அனுகூலங்கள் இருந்தன. கழுதை முகத்தில் விழித்தால் காசு பணம் வரும் என்று `என்னைப் பார், யோகம் வரும்' என்ற ஸ்டிக்கர் மூலம் ஏற்கனவே கழுதை பலவீடுகளிலும் கடைகளிலும் அறிமுகமாகி பிரபலமாகிவிட்டிருந்தது. எனவே வேட்பாளர் இன்னார்தானென்று தனியான அறிமுகம் தேவைப்படவில்லை. கழுதை ஜெயித்தால் காலை மாலை இருவேளையும் குடும்பத்துக்கு ஒரு லிட்டர் கழுதைப்பால் இலவசமாக தரப்படும். மருத்துவ குணம் நிறைந்த அதை நீங்கள் குடிக்கலாம் அல்லது உலகப்பேரழகி கிளியோபாட்ரா போல் அதில் குளிக்கலாம் என்ற வாக்குறுதி வாக்காளர்களிடம் வெகுவாக எடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆ கட்சி தலைவர் மனதில் வேறு கணக்குகள் ஓடின. எப்போதும் கும்பலாகவும் கோஷ்டியாகவும் புடைசூழ அலைகிற குணம் ஏற்கனவே நாய்களுக்கிருப்பதால் அவை அரசியலுக்கு வந்தது வெகு இயல்பானதுதான் என்பது அவர் கருத்து. யாரைக் குதற வேண்டும் யாரிடம் குழைய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இந்நாய்கள் அரசியலுக்குள் லாவகமாகப் பொருந்திவிடும் என்பதும் அவரது யூகம். அதன்றி, அரசியலுக்குத் தேவையான தந்திரத்தையும் வேட்டையாடும் சாதுர்யத்தையும் தமது முன்னோர்களான ஓநாய்களிடமிருந்து நாய்கள் வழிவழியாகப் பெற்றிக்கக்கூடுமாதலால் நாய்களைக் கொண்டு நிறைய காரியம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு துளிர்த்திருந்தது. கறியை நாம் தின்றுவிட்டு எலும்பை மட்டும் வீசினாலேயே வாலாட்டுகிற இந்த நாய்களை எம்.பியாகவும் ஆக்கிவிட்டால் அவை காலகாலத்துக்கும் விசுவாசமாய் இருக்கும் என்பதும் அவருக்கு உவப்பாயிருந்தது.

அ,ஆ தலைவர்கள் என்ன நோக்கத்திற்காக இப்படி கழுதைகளையும் நாய்களையும் நிறுத்தியிருந்தாலும் லிபரல்பாளையத்திலுள்ள கழுதைகளும் நாய்களும் இவ்விசயத்தை சீரியசாகவே எடுத்துக்கொண்டன. இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பே கழுதையினம் தோன்றியிருந்தாலும் உலக வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக ஏழு கழுதைகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள எந்தக் கழுதையும் தயாராயில்லை. உலகம் முழுவதுமிருக்கிற சற்றேறக்குறைய 44 மில்லியன் கழுதைகளின் சார்பாகவே தாங்கள் போட்டியிடுவதாக இக்கழுதைகள் கனைத்தன. அமெரிக்க ஜனநாயகக் கட்சிகூட கழுதையை சின்னமாகக் கொண்டிருக்கிறதேயொழிய ஒருமுறைகூட ஒரு கழுதையையும் வேட்பாளராக இதுவரை அறிவித்ததில்லை. உலகிலேயே கழுதைகளுக்கென்று மட்டுமே தனியாக ஒரு சரணாலயத்தை நடத்திவருகிற இங்கிலாந்திலும்கூட இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டதில்லை. அந்தவகையில் லிபரல்பாளையத்தில் பெரும் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவே கழுதைகள் கருதின. ஒவ்வொரு தேர்தலின்போதும் மலைகிராமங்களுக்கு வாக்குப்பெட்டியை சுமந்துபோகவும் பிறர் சவாரி ஏறவுமே இதுவரை பயன்பட்டு வந்த கழுதையினம், நாட்டை ஆளவும் தகுதி படைத்தது என்பதை நிரூபிக்க இதுவே தக்க தருணம் என்று அறிவித்த லிபரல்பாளையம் கழுதைகள் நலப் பேரவை, எப்பாடுபட்டேனும் தம்மினத்தின் சார்பாக போட்டியிடும் ஏழு கழுதைகளையும் வெற்றிபெற வைப்பது என்று களமிறங்கியது. கொண்டான் கொடுத்தான் உறவில்லை என்றாலும் ஒருகாலத்தில் ஒரேயினமாக இருந்த பாசத்தில் குதிரைகளும்கூட கழுதைகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.

உண்மையில் கழுதைகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் பிற கட்சிகள் திணறித்தான் போயின. இரவானால் கிளம்பிவிடுகிற கழுதைப்படை, அ கட்சியின் சுவரொட்டிகளை மட்டும் கவனமாக தவிர்த்துவிட்டு பிறகட்சிகள் ஒட்டிவிட்டுப் போகிற விளம்பர சுவரொட்டிகள் அனைத்தையும் விடிவதற்குள் தின்று தீர்த்துவிடும் உத்தியைக் கையாண்டன. சுவற்றில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் மீதும் கழுதைகள் உரசிஉரசி இருந்தே சுவடே தெரியாமல் அழித்துவிட்டதால் இந்த ஏழு தொகுதிகளிலும் பிற வேட்பாளர்களின் சின்னங்களே தென்படவில்லை. தோல்வி பயத்தில் விளம்பரம் செய்யக்கூட வலுவற்று மற்ற கட்சிகளெல்லாம் சோர்ந்துபோய்விட்டதாக வாக்காளர்கள் கருதிக்கொண்டதால் கழுதைகளின் வெற்றி தவிர்க்கமுடியாததாகியது.

நாய்களும் சளைக்கவில்லை. பல்வேறு நாடுகளின் புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஒரு பாத்திரமாக பயின்று வந்திருக்கும் நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் தமக்கிருப்பதாக அவை குரைத்துக்கொண்டன. தங்களது இனத்தைச் சேர்ந்த லைகா என்ற நாய்தான் ராக்கெட்டில் ஏறி பூமியையே முதன்முதலாக சுற்றிப் பார்த்த ஜீவராசி என்று பெருமைப்பட்டுக் கொண்ட நாய்கள், தமது மோப்பசக்தியின் மகிமைகளைப் பற்றியும் விரிவாக பட்டியலிட்டிருந்தன. எஜமானர்கள் எந்த மொழியில் பேசினாலும் அவற்றை எளிதில் புரிந்துகொண்டு சேவகம் செய்யக்கூடிய தங்களது திறமையை வெளிப்படுத்த காலந்தாழ்ந்தேனும் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் குறியாயிருந்தன. `வீட்டைக் காப்பதும் நாய்களே இனி நாட்டைக் காப்பதும் நாய்களே' என்று வேட்பாள நாய்கள் ஏழும் விடுத்திருந்த கூட்டறிக்கை பிற வேட்பாளர்களை கலங்கடித்தது.

பிற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வரும் தொண்டர்களை தெருமுக்கிலிருந்தே துரத்தி அடுத்தத்தெருவுக்கு விரட்டியடிப்பது, அடுத்தத்தெருவிலிருக்கும் இன்னொரு குழு அதற்கடுத்த தெருவுக்கு விரட்டுவது என்கிற மிக முக்கியப் பொறுப்பை தெருநாய்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுத்தின. சும்மாவே தெருத்தெருவாய் மூச்சிரைக்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடித் திரிந்த இந்தத் தெருநாய்களுக்கு, இப்போது ஒரு நோக்கத்தை முன்வைத்து ஓடுவதில் சற்றே பெருமிதமும் இருந்தது. தங்களையும் விலங்குகளாக காட்டிக்கொள்ள நாலுகாலில் நடக்கப் பழகிய பிற கட்சியின் தொண்டர்களால் இம்மாதிரியான நேரங்களில் வேகமாக ஓடமுடியாமல் கடிபட நேர்ந்தது. எனவே அவர்களில் பலரும் தெருவில் நடமாடுவதை தவிர்த்து தேர்தல் பணிமனைகளிலேயே அடிபட்ட நாய்போல சுருண்டு கிடந்தனர். இவ்வாறாக நாய்கள் போட்டியிடும் இந்த ஏழு தொகுதிகளிலும் பிற கட்சிகளே போட்டியிடவில்லை என்கிற தோற்றத்தை தெருநாய்கள் ஏற்படுத்தியிருந்தன.

தெருநாய்கள் மட்டுமே இப்படி தேர்தல் பணியாற்றியதாக யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. காலையிலும் மாலையிலும் ஒன் அண்ட் டூ பாத்ரூம் போவதற்காக தெருவுக்கு அழைத்துவரப்படுகிற நேரம் தவிர ஏனையப் பொழுதுகளில் சீமான் அல்லது சீமாட்டிகளின் மடிவிட்டிறங்காது வளர்கிற செல்ல நாய்களும்கூட தம் பங்குக்கு வாக்கு சேகரித்ததை யாரும் மறந்துவிடக்கூடாது. அவை எஜமானர்கள் எனப்படும் தம் வளர்ப்புப் பெற்றோர்களிடம் அளவுக்கதிமாக கொஞ்சியும் வாலாட்டியும் அவர்களை தம்மினத்தின் ஆதரவாளர்களாக மாற்றியிருந்தன. தானாடாவிட்டாலும், நாய்களுக்கும் சதையாடும்தானே? எனவே அ கட்சித் தலைவர் வீட்டில் செல்லமாய் வளர்ந்து கொண்டிருந்த நாய்களும்கூட இந்த முயற்சியில் ரகசியமாய் ஈடுபடக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்திருந்தால் அவற்றைக் கண்காணிக்க தனிப்படை ஒன்றை அமைத்திருந்தார் அ கட்சித்தலைவர். இதனிடையே டால்மேஷன், அல்சேஷன், பாமரேனியன் போன்ற மேல்தட்டு நாய்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்திருந்தன. அண்டைநாடான இந்தியாவிலிருந்து ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை நாய்கள் அனுப்பியிருந்த வாழ்த்துத் தந்தி களத்திலிருந்த நாய்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் இவை மட்டுமே கழுதைகளும் நாய்களும் வெற்றிபெறும் சூழலை உருவாக்கிவிடவில்லை. அறுபதாண்டுகளாக ஓட்டுப்போட்டு சலித்துப் போயிருந்த மக்களின் மனநிலையே உண்மையில் இதில் பெரும் பங்கு வகித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தக்கப்பாடம் புகட்டிவிட வேண்டும் என்று காத்திருந்த மக்கள், கழுதைகளும் நாய்களும் போட்டியிடுவதை பயன்படுத்திக் கொண்டு ஒரு மௌனப்புரட்சியை நிகழ்த்தத் தயாராகிவிட்டிருந்தார்கள். ஒரு மாறுதல் வேண்டும் என்று மக்களுக்கு தோன்றிவிட்டால் அவர்கள் கழுதையா குதிரையா என்று பார்ப்பதில்லை என்பதுதான் லிபரல்பாளையம் தேர்தல் களம் தெரிவிக்கும் செய்தியாக இருந்தது.

சின்னம் ஒதுக்கப்பட முடியாதளவுக்கு நூற்றுக்கணக்கான மனிதர்கள் போட்டியிடும்போது ஒரு மிருகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு ஏற்பட்டது என்று பொய்ஸ் அண்ட் புருடாஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாயிருந்தது

``அதாவது, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் தொகுதி முழுவதையும் இரண்டு மூன்றுமுறை சுற்றி வந்துவிடுகிற வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பிறகான ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட தொகுதி பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் கழுதை அப்படியில்லை. அது எங்கும் போய்விடாது. கழுதை கெட்டால் குட்டிச்சுவர். அதற்கென்று தனியாக அலுவலகமோ உல்லாச பங்களாக்களோ தேவையில்லை. நாயும்கூட அப்படிதானே? அதன் வேலையே தெருத்தெருவாக அலைவதுதான். அது இன்றைக்கு எந்த வீட்டில் இருக்கிறதென்று தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. அப்படியிப்படி சுற்றினாலும் அதுவாகவே நம் கண்ணில் பட்டுவிடும்.

ஆனால் இந்த அருமையும் பெருமையும் தெரியாமல், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று ஆ கட்சித்தலைவர் இளக்காரமாய் பேசிவருகிறார். கழுதைக்கு கடவுளிடம் எந்தப் பிரார்த்தனையுமில்லாத போது அது எதற்கு கற்பூர வாசனையைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்? சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், இவரைப் போன்ற ஒரு தலைவருக்கு மக்களோட பிரச்னைகள் எதுவுமே தெரியாதிருக்கிறபோது, ஒரு கழுதைக்கு கற்பூரவாசம் தெரியாமல் இருந்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது? இவருக்கு சற்றும் குறைந்த முட்டாளல்ல அ கட்சித்தலைவர். அவர் நாயை ஜெயிக்கவைத்து நாடாளுமன்றம் அனுப்பினாலும் அது லொள்ளென்றுதான் குரைக்கும் என்று பதிலுக்கு ஏளனம் பேசுகிறார். அவர் நிறுத்தியிருக்கிற கழுதை மட்டும் `மாண்புமிகு சபாநாயகர் அவர்களே' என்று பேசவா போகிறது? இது குரைக்குமென்றால் அது கனைக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஐந்து வருடத்தில் ஒரு கேள்வியும் கேட்காமல் நாற்காலியை தேய்த்துவிட்டு வருகிற இந்தக் கட்சிகளோட எம்பிக்களைவிடவும் இப்படி குரைத்துவிட்டும் கனைத்துவிட்டும் வருகிற நாயும் கழுதையும் மேல்தானே?. அதுவுமில்லாமல் ஒரு கழுதையோ அல்லது நாயோ அதனதன் சுபாவத்திலேயே சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதல்லவா? தொகுதி பிரச்னைகளுக்காக அவை கனைப்பதையும் குரைப்பதையும் கட்டுப்படுத்தும் வானளாவிய அதிகாரம் எந்த சபாநாயகருக்கும் கிடையாது.

இதைவிட முக்கிய விசயம், இவர்களைப்போல அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைத்தான் தின்பேன் என்று ஒரு கழுதையும் அடம் பிடிப்பதில்லை. பசிநேரத்துக்கு ஏதேனும் நாலு காகிதம் போதுமானது. இதற்கென தனி ஏற்பாடுகூட தேவையில்லை. ஜனங்கள் கொடுக்கும் மனுக்களை வாசித்துப் பார்த்துவிட்டு அவற்றையே தின்று ஜீவித்துக்கொள்ளும். குப்பைத்தொட்டியில் எறிவதைவிடவும் இது உத்தமமானதுதான். தவிரவும், கத்தை கத்தையாக கவிழ்த்துக் கொட்டினாலும் எந்த ஒரு கழுதையும் கட்சி மாறாது. அந்தந்த வேளைக்கு தேவையானதைத் தவிர அடுத்தவேளைக்காகக்கூட எதையும் பதுக்கிவைக்காது. ஏழேழு தலைமுறையும் உட்கார்ந்து சாப்பிடுவதற்காக பினாமிப் பெயரில் அமுக்கி வைக்கவும் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கவும் ஒரு கழுதைக்கும் தெரியாது. தன் குடும்பத்து குஞ்சுகுளுவான்களுக்கெல்லாம் பதவி கொடுத்து கட்சியை கம்பனி மாதிரி நடத்தாது. காண்ட்ராக்ட் எடுப்பது கமிஷனடிப்பது என்பதெல்லாம் அறியாத இந்த அப்பாவிக் கழுதைகளைப் போலதான் நாய்களும். வாய் கொள்ளும் அளவே நாய் கொள்ளும். கவ்விக் கொண்டு போக முடியாத சைசில் நீங்கள் அமிழ்தத்தையே உருண்டை பிடித்துக் கொடுத்தாலும் அது சீண்டாது. ஆத்து நிறையத் தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். இவர்களைப்போல குழாய் போட்டு உறிஞ்சியெடுக்காது அல்லது பாட்டிலில் அடைத்து விற்காது''.

இப்படி, தலைவர்கள் கொழுப்பெடுத்துப் போய் கழுதைகளையும் நாய்களையும் நிறுத்தினார்கள் என்றால் அதையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதென்ற மக்களின் தந்திரத்தால் ஏழு கழுதைகளும் ஏழு நாய்களும் எம்பிக்களாகி விட்டிருந்தன. முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவிருக்கும் தம்மினத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தன தெருநாய்களும் கழுதைகளும். நாய்கள் ஒரு கட்சியிலும் கழுதைகள் வேறொரு கட்சியிலும் நின்று ஜெயித்திருந்தாலும் அது மனிதர்களுக்கெதிரான வெற்றி என்பதால் இரண்டுமே ஒன்றாகக் கொண்டாடுவதற்கு விலங்குகள் நலச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் மீது மக்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பது முன்பே தெரிந்திருந்தால் எல்லாத்தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டிருக்கலாமே என்ற விவாதம் அங்கு சூடு கிளப்பியது. ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை, விரைவில் அடுத்தத் தேர்தல் வரவிருக்கிறது, பார்த்துக்கொள்வோம் என்று தீர்மானமாகியது.

விரைவில் அடுத்தத் தேர்தல் வருகிறது என்று சொல்லப்பட்டதற்கு காரணம் இல்லாமலில்லை. எந்தக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டாமல் தொங்கு பாராளுமன்றம் உருவாகிவிட்டிருந்தது. அ, ஆ என்கிற இரண்டு பெரிய கட்சிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்கவில்லை. இவற்றின் தலைவர்கள் 14 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மற்ற கட்சிகள் கூடுதலாக சில இடங்களைப் பெற்றுவிட்டிருந்தன. இப்போது ஏதேனும் வித்தைகள் செய்து மந்திரிசபை அமைக்காவிட்டால் மீண்டும் தேர்தலை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி தேர்தல் வந்தால் போட்டி கட்சிகளுக்கிடையிலானதாக அல்லாமல் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமானதாக மாறிவிடும் ஆபத்திருப்பதை ஒரு கட்சியும் விரும்பவில்லை. விலங்குகளுக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் இருக்கும் இந்தநிலையில் இன்னொரு தேர்தலை சந்தித்து தோல்வியைத் தழுவுவதைவிட அரசியலில் தீண்டத்தகாத கட்சி எதுவுமில்லை என்ற புதிய / புளித்த வியாக்கியானத்தோடு எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ஒரு ஜம்போ உல்டாபுல்டா கூட்டணி மந்திரிசபை அமைப்பதென்று முடிவானது.

அவையின் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைக்கும் வைபவம் நாடாளுமன்றத்தின் நட்டநடு மண்டபத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற வரலாற்றில் நாய்களுக்கும் கழுதைகளுக்கும் பதவி பிரமாணம் செய்துவைக்கும் முதல் சபாநாயகர் என்பது தனக்கு பெருமையா சிறுமையா என்று யூகிக்க முடியாத குழப்பத்துடனேயே அந்த விழாவில் அவர் வீற்றிருந்தார். நடப்பிலிருந்த மும்மொழித் திட்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தவிரவும் அவருக்கு நாய்களின் பாஷையோ கழுதைகளின் பாஷையோ தெரிந்திருக்கவுமில்லை. ஆனாலும் நாய் என்றால் குரைக்கவேண்டும் கழுதை என்றால் கனைக்கவேண்டும் என்ற பொதுப்புத்தியிலிருந்து அவர் உறுதிமொழிப் (பிரமாண) பத்திரத்தை குரைத்தும் கனைத்தும் வாசித்துக் காட்டினார். நன்கு பேசத்தெரிந்த சபாநாயகர் ஏன் இப்படி தங்களைப்போல குரைக்கவும் கனைக்கவும் செய்கிறார் என்று திகைத்துப்போன நாய்களும் கழுதைகளும் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்ற அலுவல்மொழியில் உறுதிமொழியை திருப்பிச் சொல்லின. கழுதைகளும் நாய்களும் தங்கள் மொழியில் பேசுவது கேட்டு ஒட்டுமொத்த சபையும் அதிர்ச்சியில் உறைந்தது. சற்றே சுதாரித்து சுயநிலைக்கு மீண்ட சபாநாயகர் உங்களுக்கும் பேசத் தெரியுமா என்றார். எம்.பி வேஷம் போட்ட பிறகு பேசித்தானே ஆகணும் என்றன கழுதைகளும் நாய்களும்.

எம்.பி. என்றால் பதவி, பொறுப்பு என்று இவ்வளவுகாலமும் கித்தாப்பு காட்டிக்கொண்டிருக்கையில், இந்த கழுதைகளும் நாய்களும் வந்த முதல்நாளிலேயே வேஷம் என்று கண்டுபிடித்து அம்பலப்படுத்திவிட்டனவே என்ற கடுப்பில் அதற்கப்புறம் அங்கு ஒருவரும் பேசவேயில்லை. `சைலன்ஸ் ப்ளீஸ்' என்று சுத்தியைத் தட்டவேண்டிய சபாநாயகர் வழக்கத்திற்கு மாறாக `ப்ளீஸ் யாராச்சும் பேசுங்களேன் ' என்று கத்திக்கொண்டிருந்தார்.

நன்றி – தீராநதி

பொங்காரம் - ஆதவன் தீட்சண்யா

நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை. பேயும் பிசாசும் பித்தேறி நாயா நரியா அலையும் ராக்காடு. கிலியேத்தும் இருட்டு கிர்ருனு நாலா திக்கும்.

இருட்டு பழகுனதும் எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. கூமாச்சியா உச்சி சிலுப்பி நிக்கிது கரடு. குட்டான் பிடிக்காத ஜல்லி குத்தேரியா குமிஞ்சிருக்கு அடிவாரத்துல. அந்தாண்ட, வெள்ளெருக்கஞ்செடியில ஆரம்பிச்சு கிளுவமரம் வரைக்கும் மால் போட்டு அளந்து கட்டுன குட்டான் அச்சுவெல்லமாட்டம் லச்சணமா கெடக்கு. சக்கை புடிச்சி எகனைமொகனையா கெடக்குற பெருங்கல் எப்படிப் பாத்தாலும் நூறு லோடுக்கு தாங்கும்.

இங்கிருந்து பாத்தா சாளையில எரியற ராந்தல் காத்துக்கு தூரியாடறது தெரியுது. எப்பவும் போல இப்பவும் உள்ளார ஆளுங்க இருக்காங்கன்னு நம்ப வைக்கறதுக்கு அதே போதுந்தான். ஆனா இருக்காங்களா இல்லையானு சோதிக்க இந்த பக்கம்பராந்திரியில யாருமில்ல இப்ப. ஜாமயாம கணக்கில்லாம தொலவுல சன்னமா ரயில் சத்தம் கேக்குது.

வெடிஞ்சா ஞாயித்துக்கெழம. ஞாயிறு ஒண்ணு, சோமாரம் ரண்டு, செவ்வா மூணு, செவ்வான்னைக்கு காத்தாலதான் லோடுக்கு லாரி வரும். அன்னமுட்டும் ஒரு ஈ காக்கா எட்டிப் பாக்காது இந்த திக்குதெசையில.

நாலாபக்கமும் பாரா பண்ண தோதா வேலைக்காட்டுக்கு நடுவ பரணை. கீழ்க்கால்ல கட்டியிருந்த பந்தம் எண்ணை வத்தி கருகி மங்குது. யார் வந்து வாக்கப்போறாங்க இந்த அநாதிக்காட்ல? இருந்த உடுப்புக்காரனும் கங்காணியுந்தான் நாலா ஏழா மடங்கிக் கெடக்காங்களே தோள்ல.

பொணமாட்டம் கனக்கும்கிறது பொய்யில்ல. கனமான கனம். நாலாளு தூக்கறத ஒத்தையாளா சொமக்கறது செரமந்தான். வேற வழியில்ல. இன்னங் கொஞ்சதூரம். கரடு வந்துடும். பரமன் தோள்ல உடுப்புக்காரனும், கங்காணி சுப்புரு தோள்லயும் கனக்காங்க. கங்காணியாட்டம் இன்னொரு பங்கு ஒடம்பு உடுப்புக்காரனுக்கு- பீமசேனனாட்டம் . நிக்கிற எடம் நெளிஞ்சிரும்.

லோடுக்கு வர்ற லாரிங்களுக்கு வேணும்னு குவாரியில வாங்கி வச்சிருந்த டீசல்கேனை அர்ச்சுனன் எடுத்தாறான். ரண்டுபேரை எரிக்க அதேபோதும். முழுசா எரியணும்னுயில்ல. அடையாளந்தெரியாம உருவழிஞ்சிட்டாக்கூட போதும். மிச்சத்த காக்கா கழுவு கொத்தித் திங்கட்டும். ஊரான் ஒழப்புல ஊதுன ஒடம்பு உளுத்து புழுத்து ஊத்தையா நாறட்டும்.

உடுப்புக்காரனோட துப்பாக்கியும் ஆறுசெல் பேட்ரியும் இப்ப காளியப்பன் கைல. வேட்டைக்காரனாட்டம் துப்பாக்கி தாங்கி நடக்கறது அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சனியத்த பாத்துத்தான் இத்தினிநாளா பயந்து கெடந்தது எல்லாரும். கொஞ்சத்துல குறி தப்பிருச்சு. இல்லேன்னா அன்னிக்கே அர்ச்சுனனை கொன்னிருப்பான் உடுப்புக்காரன். தோட்டா தெறிச்சக் குழி இன்னம் வடுவாட்டம் பாறையில இருக்கு. அத பாக்கறப்பவெல்லாம் நடுங்கறான். ஆனா இத்தினிக்கும் அர்ச்சுனன் மேல தப்பில்ல. பொண்டுங்க ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்குறத பரணை மேல நின்னு பாக்காதன்னு இவன் சொன்னத்துக்குத்தான் அவனுக்கு ரோசம் பொத்து குறி பிடிச்சது. இன்னொருக்கா அந்தப்பையன் சின்னசாமிய மெரட்டியிருக்கான். இத்துனூண்ட வச்சிகிட்டு அவன் பண்ணின அழும்பு ஒண்ணா ரண்டா?

துப்பாக்கி சுட இவங்க யாருக்கும் தெரியாட்டியும் அது கைல இருக்கறது ரொம்ப தெகிரியமாயிருக்கு எல்லாருக்கும். ஆனாக்கூட ரோட்டுக்கு எட்டுனதும் இத எங்காச்சும் எறிஞ்சிரணும். நாம யார அடக்கி அடவாடி பண்ணப்போறோம்... நமக்கெதுக்கு துப்பாக்கின்னு நெனச்சான். ஆனா பேட்ரி வேணும். இருட்ட கவுக்கற வெளிச்சம் இருக்கு அதுல.

ஒரே ஒருவருசம், அப்புறம் இஷ்டமில்லாட்டி சொல்லுங்க, போய் வாங்க சாமிங்களேன்னு வண்டியேத்தி ஊருக்கு அனுப்பியுடறேன்னு இந்த கங்காணிப்பய சொன்னத நம்பி இங்க வந்து மாட்டி எமுட்டு காலமாச்சு. இருட்ல உருட்ற குருட்டுப்பூனையாட்டம் ஆயிருச்சு பொழப்பு. எங்க இருக்கறம்னு கூட பிருவு தெரியாம ராத்தாராத்திரியில கொண்டாந்து பட்டியில அடைக்கறாப்ல பண்ணிட்டான் மோசக்காரன். இவனையெல்லாம் இத்தினி நாள் உசுரோடவுட்டதே பாவம்.

ஊர்ல ஓங்காளியம்மன் நோம்பி சாட்டியிருக்கு. கோயிலுக்கு தலைக்கட்டு வரிதரணும். சாமிக்கு பொலிபோட எருமைக்கெடா வாங்கணும். பூசைச்செலவு அதுஇதுன்னு மேஞ்செலவு கொழுத்து கெடக்கு. வர்ற ஒரம்பர சரம்பரைக்கு ஆக்கிப்போடணும். வருஷம் பூராவுந்தான் சந்தையில பழசுப்பட்டு ஏலம் எடுத்து கட்டிக்கிட்டாலும் நோம்பிக்கும் அப்பிடி பண்ணிற முடியுமா? நல்லநாள் பொல்லநாள்ல கூட வூட்டுசனத்துக்கு புதுத்துணி எடுக்கலன்னா ஊரு என்ன சொல்லும்? கைல காக்காசு இல்லாம காத்தா அலையறான் அர்ச்சுனன். முன்ன வாங்குன கடனுக்கே முழி பிதுங்குது. புதுக்கடனுக்கு எங்கப் போறது? இதே கதிதான் சுப்புருக்கும்.

நோம்பி கெடக்குது நோம்பி. கடன் வங்கியாச்சும் கும்பிடிக்க பண்ணலன்னு கண்ணயா நோண்டிரும் சாமி? பெரியபுள்ளைக்கு கொழந்த பொறந்து எட்டுமாசம் ஓடிருச்சு. அரஞாக்கொடியும் கொலுசும் கொழந்தைக்குப் போடணும். அவளுக்கு சீலத்துணி எடுக்கணும். கூட்டிப்போக வர்றவங்களுக்கு கூழோ கஞ்சியோ ஊத்தியனுப்ப முடியாது. மூணுபடி அரிசியாவது வாங்கணும். பத்தாததுக்கு, போறப்ப மூட்டிரலாம்னு மவ காதுல கெடந்த தோடையும் அடமானம் வச்சிருக்கு. அதலயும் போனவாட்டி மருகன் வந்தப்ப எங்க புள்ள தோடு, காதுல குச்சி மாட்டியிருக்கேன்னு கேட்டுட்டு போனான். மூட்டுக் கொடுத்தனுப்பணும் அதை. எதுக்கும் தோதுபடாம இங்கியே கெடக்கா மவ. ஏண்டா பரமா மாடுங்கன்னும் வூட்லயே கெடக்குன்னு சாடைமாடையா யாராச்சும் கேக்கறப்ப நாக்கப் புடுங்கிட்டு செத்துரலாம்னு ஆயிருது.

நடுதூலமும் வாரைங்களும் உளுத்து மாவா எறங்குது வூட்ல. காமராசரு வந்து தொறந்த காலனி வூடு இது. இன்னிக்கோ நாளைக்கோன்னு இத்துக்கெடக்கு கூரை. போன அப்புசி மோடத்துல ஏறுன ஓதமாட்டம் மறுக்கா ஏறுனா செவுரும் தாங்காது. பிரிச்சி மரமாத்து பண்ணனும்னா அய்யாயிரமாச்சும் வுங்கறான் சாரி. அய்யாயிரம்தான்னு ஆரம்பிச்சப்புறம் லொட்டுலொசுக்குன்னு செலவு சொல்லி எக்கச்சக்கமா ஏத்திருவான். பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் சாரி பொய்யில அரைவாசியாகாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க... வெசனத்துல கெடக்கான் மாரப்பன்.

புள்ள சமஞ்சி அஞ்சி வருசமாவது இந்த சித்தரையோட. அவளுக்கும் பொறனால ஆளான கூழுத்தோட்டி மவுளுக்கு கண்ணாலமாகி இப்ப கையில ஒண்ணு வயித்துல ஒண்ணு. காலாகாலத்துல அததை செய்யலன்னா அந்துசு கெட்டுரும். பாலூரான் மவன் தொப்லானுக்கு ஆசை. கட்டிக்குடுங்கன்னு ஆள்மேல ஆளா தந்து வருது. பையனும் நல்ல சமுத்தாளி. ஓம்லூர் பாய் இவன நம்பித்தான் கசாப்புக்கடைய வுட்டுருக்காரு. எத்தசோட்டு மாடா இருந்தாலும் ஒத்தையாளா கீழ தள்ளிருவான். தோல் வேவாரமும் இருக்கு. கட்டிக் குடுத்தா கமானமா பொழைக்கும் புள்ள. தோடு, மாட்லு, சிமிக்கி, பையனுக்கு காப்பவுன்ல மோதரம், சைக்கிள், துணிமணின்னு... ரொக்கமா எங்காச்சும் பொரட்டி முடிச்சிரணும்னு ஒவ்வோர் முகூர்த்த நாளுக்கு முன்னயும் நெனச்சி நெனச்சி மருகுறான் காளியப்பன்.

ஆளாளுக்கொரு பிக்கலிருக்கு. அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு. காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப்போட்டாப்ல ஆயிருச்சு. எங்கயும் காசு கண்ணி பொரளுல. அப்பப்ப அள்ளையில வாங்குன கடனுங்களும் அரிக்குது சீலப்பேனாட்டம்.

இன்னிக்கு நேத்து இப்படியாகல. காலம் முச்சூடும் இப்படியேதான் நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்கு பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கு வழி தெரியல மாள்றதுக்கும் குழி தெரியல.

ஊர்ல ஒரு பயலுக்கும் நெலம்நீச்சு கெடையாது. அடுத்தவங்களை நம்பித்தான் அன்னாடப்பொழப்பு. பாட்டன் பூட்டன் காலத்துலயிருந்து பாத்த வேலைக்குப்போற ஆளுங்க ரொம்ப கம்மி. எவன் வூட்ல எழவு வுழும் ஏகாலிக்கு துணி கெடைக்கும்னு காத்திருக்க முடியுமா? அப்படியும் அஞ்சாறு வூட்டாளுக இன்னமும் கொட்டடிக்கப் போறாங்க. நடுவமங்கலம், நாலுகால்பாலம், தொளசம்பட்டி, தோக்கம்பட்டி, செம்மாண்டப்பட்டி, சின்னதிருப்பதி, காருவள்ளி, காமலாபுரம்னு சுத்துபக்க ஊர்ல எங்க சாவானாலும் இவங்கதான் வாத்தியம். நல்ல தொழில்காரனுங்க. அதும், ரண்டு கெளாஸ் ஊத்தியுட்டாச்சுன்னா வெளுத்து வாங்கிருவாங்க. பொணமே எந்திருச்சி இன்னொருக்கா அடிங்கடான்னு கேட்டாலும் கேக்கும்குற அளவுக்கு பேரிருந்துச்சு. இப்பவெல்லாம் சாவுக்கு கூட ரேடியோ செட்டு வச்சு அழுவறாங்க. பேண்டு வாத்தியம் கூட்டியறாங்க சேலத்துலயிருந்து. இவங்களுக்கு மவுசு கொறஞ்சிருச்சி இப்ப. அதுவுமில்லாம, ஊரு ஒலகம் இத்தினி டாம்பீகமா மாறிக்கிட்டிருக்குற இந்த காலத்துலயும் தோள்ல மோளத்த மாட்டிக்கிட்டு அல்லாட யாருக்குப் பிடிக்கும்?

ரோடு போடறது, காரைவேலை, செங்கல் அறுக்கறது, மணல்லோடு அடிக்கறது, கரூர்லயிருந்து கோரை வாங்குயாந்து பாய் நெய்யறது, புளி உலுக்கறது, ஈரோடு, பவானிக்கு நெல்லறுக்கப் போறதுன்னு பலபட்டறையா தொழில் மாறிடுச்சி. ரண்டொருத்தர் ஐவேஸ்ல கேங்கூலியா இருக்காங்க. தாலுக்காபீஸ்ல பிய்யோனா இருக்கான் அம்பேத்து. பத்தரம் எழுதறது பிட்டிசன் அனுப்பறதுல நாலோ ரண்டோ கெடைக்குதுன்னு கச்சேரிமேட்லயே கெடக்கான் நெட்டப்பெருமாள். மத்தபடி சர்க்கார் உத்யோகத்துல வேற யாருமில்ல. ஓம்லூரு பஸ் ஸ்டாண்ட்ல ஜோப்பு கத்திரிக்கிறவங்கள்ல ஊர் பசங்களும் இருக்காங்கன்னு கேள்வி. இதில்லாம பொண்டாளுகள் பயிர் நடறது, களை அலசறது, தட்டுதாம்பு அறுக்கறது, கருதடிக்கிறது, கல்லக்கா தொலிக்கறதுன்னு சிக்குற வேலைக்குப் போறாங்க. மாதம்பாடியான் பொண்டாட்டி ருக்குவையும் சித்துவேடன் தங்கச்சி பொன்னுருவியவும் ஓம்லூர் லாட்ஜ்ல போலிஸ் புடிச்சதிலேர்ந்து வயித்தக்கழுவ இப்பிடியும் ஒரு தொழில் இருக்குன்னு துணிஞ்ச பொண்டுங்க கொஞ்சம்பேர் இப்பவெல்லாம் போலிசுக்கு மாமுல் கொடுத்துக்கிட்டு ஜோரா பொழப்பப் பாக்குறாங்க. இன்னம், ஏரியில வெவசாயமுள்ளுப் பொதர்ல தண்ணி விக்கிறது, மோரி அடியில புள்ளிக்கு பத்துரூவான்னு பந்தயங்கட்டி சீட்டாடறது தாயமாடறதுன்னு ஆளாளுக்கொரு வேலையிருக்கு. அங்கயும் இங்கயும் கடன வாங்கிட்டு பிப்பு தாங்காம ராத்தா ராத்திரியில ரயிலேறி வெங்ளூருக்கு தப்பி ஓடறவங்களும் இருக்காங்க.

அர்ச்சுனன், பரமன், சுப்புரு, காளியப்பன், மாரப்பன் அஞ்சிபேரும் பங்காளி பாகாளிங்க. சித்தப்பன் மக்க பெரீப்பன் மக்க. அவங்கப்பன்மாரு காலத்லயிருந்தே ஜல்லியொடைக்கிறதுதான் வேலை. அருணாச்சல கவுண்டர், மந்திநாய்க்கர் ரெண்டுபேர்க்கிட்டயும் தான் ரெண்டு தலைமுறையா செஞ்சிட்டிருந்தாங்க. அவங்க எங்கெங்க ரோடுபோட காண்ட்ரேட் எடுத்தாலும் இவங்க கேங் அங்கப்போய் ஜல்லியொடைச்சிக் குடுக்கும். பத்துபர்லாங் இருபதுபர்லாங்கா இருந்தாலும் சோம்பிசொணங்கி நின்னுடாம ஜல்லிலோடு நேராநேரத்துக்கு போய்ச்சேந்துரும். அதனாலதான் தெக்கே ராமேஸ்வரம் வரைக்கும் இந்தாண்ட திருணாமலை வந்தவாசி வரைக்கும் இவங்க கேங்கை கூட்டிப்போனாங்க மொதலாளிங்களும். கவுண்டர் செத்ததுக்கப்பறம் நாய்க்கரும் கொஞ்சகொஞ்சமா வேலைய சுருக்கிக்கிட்டாரு. விழுப்புரத்துல செஞ்சதுதான் கடேசிவேலை.

அதுக்கப்பறம் தொலைதேசம் வேலைக்கு போறது நின்னுப்போயிருச்சி. இங்கியே அக்கம்பக்கமா மேட்டூர் தொப்பூர் அரூர் வெள்ளையப்பன்கோவில்னு போனாங்க. முன்ன நல்ல ஓட்டம். இப்பந்தான் கல்லொடைக்க மிசுனு வந்துருக்கே. செத்தநேரத்துல கரகரன்னு ஓடச்சுக் குமிச்சிடறதால ஆளுங்க அவ்வளவு அவசியமில்லேன்னு ஆயிடுச்சு. கத்த வேலைய உட்டுட்டு மத்தவேலைக்கு சட்டுனு போயிரமுடியுமா?

செஞ்ச வேலைக்கு காசு கேட்டாவே சள்ளுபுள்ளும்பான் கொத்துக்காரன். வாராவாரம் பட்டுவாடா பாத்து சந்தைக்குப்போனா சாத்துசெலவுக்கும் சோத்துசெலவுக்கும் கூட பத்தும் பத்தாம ஆயிருது. பொரிகல்ல, போண்டா, முறுக்கு, பஜ்ஜி, மொட்டசோளக்கதிரு, கொடிவள்ளிக்கெழங்கு, குச்சிக்கெழங்கு, தேங்கா ரொட்டின்னு அம்மாளும் அப்பனும் நொறுவாய் வாங்கியாருவாங்கன்னு சந்தைக்கூடைய தொழாவுற புள்ளைங்க வெக்குனு ஆயிருதுங்க. கண்ணுல தங்குற ஏக்கம் காலத்துக்கும் நின்னுருது.

வாரக்கூலிக்கு கல்லொடைக்குறதுல கஞ்சிப்பாடு தான் தீருது. அத வச்சி நல்லது கெட்டது எதுக்கும் தலை குடுக்கமுடியாது. லம்பா தொகை கெடைக்குற வேறவேலை ஏதாச்சும் தேடி எங்கியாவது போயிருவமான்னு நெனப்போடுறப்ப தான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இந்த கங்காணி வந்தான். யார்ட்டயோ வெலாவாரியா விசாரிச்சுத்தான் வந்திருக்கான்.

பரமன் வூட்டு வாதநாராயண மரத்தடியில குந்தாணி போட்டு ஒக்காந்து தொப்பி சிகரேட்ட பத்த வச்சிக்கிட்டு அவன் பேசறதப்பாத்தா அவனே மொதலாளியாட்டம் தெரியறான். ஜோப்ல கத்தையா இருந்த நூறுரூவா தாள்ல ஒண்ண உருவியெடுத்து எல்லாருக்கும் டீ வாங்கியாரச் சொன்னான். மூணுவெரல்ல மோதரம். கைல வாச்சி, பொடக்கழுத்து வேர்வைய தொடைக்கறப்பல்லாம் வடக்கயிறாட்டந் தெரியுது மைனர்சங்கிலி. கவண்டமாராட்டம் மினுமினுன்னு வார்வச்ச தோல்செருப்பு போட்டுருக்கான். வளவுல நின்ன சனமெல்லாம் வாய்ப் பொளந்து பாக்குதுங்க.

நானும் ஒங்களாட்டம் இங்கியே சிக்கி சின்னப்பட்டவன் தான். உள்ளூர்ல ஒரலு சொமந்து சம்பாதிக்கிறத பக்கத்தூர்ல பஞ்சு தூக்கி சம்பாரிச்சரலாம்னு துணிஞ்சி அங்கப் போனேன். கத்தத் தொழிலு கையுடல. இன்னிக்கு நல்லாருக்கேன். பத்து கேங் ஆளு கைலயிருக்கு. இப்பக்கூட வெங்ளூர்ட்ட கல்லொடைக்க பத்திருவது ஆள்வேணும். நீங்க வர்றதுனா வூட்டுக்கு அய்யாயிரம் அட்வான்ஸ் தர்ரேன்னு சொன்னப்ப கஷ்டத்தப் போக்கவந்த கடவுளா தெரிஞ்சான். ஓங்காளியம்மன் உண்டியில பத்துரூவா சேத்துப்போடணும் காணிக்கையான்னு நெனச்சுக்கிட்டான் பரமன்.

கங்காணி கணக்கு தப்பல. வலையில விழாம மீன் எங்கப்போகும் தலைக்கு வராம பேன் எங்கப்போகும்? பாண்டு பத்தரம்னு எதும் எழுதாம கடன் குடுத்தா கஷ்டத்துல இருக்குறவன் சும்மாயிருப்பானா? அஞ்சுக் குடும்பமும் கைநீட்டியாச்சு. குடும்பத்தோட வர்றவங்களுக்கு அய்யாயிரம். மத்தவங்களுக்கு ஆளுக்கு தக்கனாப்ல. ரோட்டு வேலைல சுடுதார் ஊத்தி கைகால் வெந்து படுக்கையா கெடக்குற வையாபுரி, ஆஸ்பத்ரி செலவுக்கு ரண்டாயிரம் வாங்கிட்டு பள்ளிக்கொடம் போய்ட்டிருந்த மவன் சின்னசாமியவும் அனுப்பியுட்டான். தாயில்லாத புள்ள இப்ப தவப்பனையும் உட்டுட்டு தொலைதேசம் வருது, நீங்கதான் பாத்துக்கணும்னான் வையாபுரி. செவுத்துல தொங்கற பொஸ்தகப்பைய பாத்து தேம்பிகிட்டே வந்தான் சின்னசாமி. இந்த முண்டச்சி இங்கயிருந்தா என்னா அங்கிருந்தா என்னா... நானும் வரேன்னு கௌம்பிட்டா ஆராயி. அவளோட சேத்து முப்பத்தாறாளு. அவ ரண்டாயிரம் வாங்கி அடமானத்துல முழுகிட்டிருந்த சில்லரைக்கொப்பை திருப்பி மூட்டி காதுல மாட்டிக்கிட்டா. அவங்கம்மா சாகறப்ப அவளுக்கு சீதனமா குடுத்ததாம் அது.

காசுக்கு காத்திருந்த காரியம் சிலதுதான் முடிஞ்சிருக்கு. அண்ணாந்துப் பாத்தா தான் காசம், கிழிச்சு எடுத்தா கீத்துதான... பிச்சி பிச்சிப் போட்டா எத்தனைக்கு ஆவும்? இன்னம் எத்தனையோ மிஞ்சி காத்திருக்கு அடுத்தக் கடனுக்காவ. ஊர்விட்டு ஊர்போறவங்க திரும்பி வருவாங்களோ மாட்டாங்களோங்குற சந்தேகத்துல கௌம்பறதுக்கு மிந்தி நம்மளதை பைசல் பண்ணிறப்பான்னு கேட்டவங்களுக்கெல்லாம் ஜவாப்பு சொல்லி மாளல. வாராவாரம் பட்டுவாடா முடிஞ்சதும் கொஞ்சங்கொஞ்சமா அனுப்பி கழிக்கிறோம்னு சொன்னதை அரைமனசா நம்பித்தான் கௌம்பவிட்டாங்க.

நோம்பி கழிஞ்ச பத்தாம்நாள் ராவோடராவா லாரியில ஏத்திக்கொண்டாந்து எறக்குன எடம் வெங்ளூர்க்கிட்டன்னு சொன்னது பொய்யுங்கிறான் மாரப்பன். லோடேத்த வர்றவங்க பேசறது கன்னடமில்ல, நம்ம மந்திநாய்க்கர் மாதிரி நீலு கீலுன்னு பேசிக்கிறாங்க.... ஒருவேளை பெஜவாடா பக்கம் கொண்டாந்துட்டானோ என்னமோங்கிறான். கண்ணக் கட்டியுட்டாக்கூட இந்தான மைசூர்ரோட்லயிருந்து அந்தான டும்கூர்ரோடு வரைக்கும் தலைகிழுதா உருண்டுக்கிட்டே வந்துருவேன், எனக்குத் தெரியாதா இது வெங்ளூரா இல்லியான்னு அவன் சொன்னத நம்பாம இருக்கமுடியல. அவனுக்கு வெங்ளூர் அத்துப்படி. ஒசூர் பாடர்லயிருந்து அத்திப்பள்ளி, சந்தாபுரம், பொம்மனள்ளி, மடவாளம் செக்போஸ்ட் வரைக்கும் சாளை போட்டு தங்காத எடமேயில்ல. கல்யாணத்துக்கு மிந்தி அஞ்சாறு வருசம் அவன் அங்கதான் திருணாமலை ஆளுங்களோட டெலிபோன் லைனுக்கு குழியெடுக்குற வேல செஞ்சிருக்கான். அப்ப அங்க சேத்திக்கிட்டு வந்த புள்ளதான் அவன் பொண்டாட்டி மல்லிகா.

ஆந்தராவுக்கு போனவங்கள்ல பாதிப்பேருக்கு மேல ஏழெட்டு வருசமாகியும் இன்னம் ஊர்திரும்பினதில்ல. அவங்க ஊடெல்லாம் கூரை கரையான் அரிச்சி செவுரு இடிஞ்சி குட்டிச்செவுரா பாம்புபல்லி அண்டிக்கெடக்கு. அந்த பயத்துல ஆந்தரான்னு கூப்புட்டா வரமாட்டாங்கன்னு தெரிஞ்சி வெங்ளூர்னு பொய் சொல்லிட்டானா ?

அக்கம்பக்கம் ஊரெதுவும் இருக்கான்னுகூட தெரியல. பெரிய கரடு. கூமாச்சியா நிக்கிற பாறைமேல ஏறிப்பாத்தாக்கூட கண்ணுக்கெட்டுன வரைக்கும் ஆளம்பு ஒண்ணையும் காங்கல. அடிவானம் தொடுவானமா அசையற எல்லையில சன்னமா பொகை எழும்பறதை சுப்புரு பாத்து சொன்னப்புறந்தான் நாம ஒலகத்தவிட்டே வெளிய வந்துட்டமோங்குற வெசனமும் பயமும் போச்சு அல்லாருக்கும். மூஞ்சில அடிச்சாப்ல செக்கச்செவேல்னு செம்மண் காடுதான் பரவிக்கெடக்கு. கரட்டடிவாரத்துல இருந்து கௌம்புற வண்டித்தடம் எந்த ஊருக்குப் போய்ச்சேரும்னு தெரியல. தடம்கூட இப்பதான் ஆகியிருக்கும்போல.

சீதைய சிறையெடுத்தாப்ல நம்மளக் கொண்டாந்து எங்கியோ தள்ளிப்புட்டானே பாதகன்னு வெம்பல் பொங்குது எல்லாருக்கும். வெங்ளூராயிருந்தா என்ன வேற ஊராயிருந்தா என்ன? வாங்குன கடனை அடைச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊருக்குத் திரும்பப் பாக்கணும், அவ்ளவுதான்னு ஆளாளுக்கு தெம்பு சொல்லி தேத்தப்பாத்தாலும் யாருக்கும் இங்க பிடிமானம் சிக்கல.

வேலக்காட்டுக்கு உடுப்புக்காரன்தான் ஜவாப்தாரி. அவம்பேர் என்னான்னு தெரியல. போலிஸாட்டம் காக்கி சொக்காயும் டவுஜரும் போட்டிருக்கறதால இவங்களா வச்சப்பேர். இவங்க வராங்காட்டியும் அவன் வந்து பரணை கட்டி படுத்திருந்தான். தாட்ரிக்கமான திமிர்த்தண்டி ஓடம்பு. கண்ணு பழுத்து கங்காட்டம் இருக்கறதப் பாத்தா மொடாக்குடியனா இருப்பானாட்டங்குதுன்னான் சுப்புரு. இவனையாட்டமே ஒரு குண்டன் எம்சியார் படத்துல வருவான்னா ஆராயி.

தண்ணிக்கு அல்லாடிறக்கூடாதுன்னு கரட்டடியில இருக்கற குட்டைக்குப் பக்கத்துல சாளை போடலாம்னு பாத்தா, களி உருட்டிப்போட தோதான பாறையெதும் பக்கத்துலயில்ல. ஊரூருக்கு தட்டு தாம்பாலம் கிண்ணி கெடாரம்னு தூக்கியார முடியுமா? அத்தனையவும் கழுவத் தண்ணிவேணும், கமுத்திவைக்க எடம் வேணும். இந்த அல்லாட்டமெல்லாம் வாணாம்னுதான் பாறையில போட்டுத் திங்கறது. அதுந்தவுத்து தண்ணிகூட நாலுமொடா மொண்டு தூக்கியாந்தரலாம், ஆனா ஆக்கின பானையத் தூக்கிக்கிட்டு அங்கயிங்க அலையமுடியுமா பாறைதான் பக்கத்துல வேணும்னு இங்க சாளை போட்டது.

ஒவ்வொரு வூட்டாளுங்களுக்கும் ஒரு சாளை. கூளையா இருக்கறவனே குனிஞ்சிக்கூட உள்ளாரப் போயிரமுடியாது. பன்னிக்குடிசலோட கொஞ்சம் பெருசா, மாட்டுவண்டிக் கூண்ட கவுத்தியுட்டாப்ல தரையோடத் தரையா அமுங்கியிருக்கு. கொஞ்சம் நிமுந்தாக்கூட நெக்கிரும். தெலுக்கமா மேஞ்சிருக்குற தென்னஞ்சோவை வெயிலுக்கும் தாங்காது குளுருக்கும் ஆவாது. இன்னம் ஒரு வரி நெருக்கமா தெத்தியிருக்கணும். மண்டிபோட்டு மாடு ஆடாட்டம் உள்ளப் பூந்தா மயமயன்னு இருட்டு. வெளிச்சமேயில்ல. எப்பிடி பொழங்கறதுன்னு பொண்டுக கேக்காங்க. ராத்திரிக்கு ராந்தல் இருக்கு. பகல்லயும் கொளுத்தறதுனா சீமெண்ணைக்கு எங்கப்போறது?

சின்னசாமியும் ஆராயியும் தனித்தனி ஒண்டிக்கட்டைங்க. அதால அவங்க சாளைங்க ரண்டுலயும் சமுட்டி, கொட்லான், கிட்னக்கம்பி, சேறுவாங்கி, கெடப்பார, பிக்காசு, மமுட்டி, பாண்டல்சட்டி, புட்டுக்கூடை, மால்சட்டம் எல்லாங் கெடக்கு. வெடிமருந்தும் திரியும் மாத்தரம் சவ்வுக்காயிதத்துல சுத்தி பரணையில இருக்கு. அதாட்டம் சவ்வுக்காயிதம் ஆளுக்கொன்னு குடுத்திருக்காங்க, மழப் பேயறப்ப கொங்காடையா மாட்டிக்கிட்டு கல்லொடைக்க.

பரணையிலதான் ஆரியமாவு, நொய்யரிசி, உப்பு, புளி, மொளகா, கல்லெண்ணை டின்னு, சீமெண்ணை டின்னு, வெத்தல, பொகல, பீடி, சுருட்டு, சாராயக்கேன் எல்லா ரேசனும் இருக்கு. லோடுக்கு வர்ற லாரியில கொண்டாந்து வச்சிக்கிட்டு அளந்தளந்து குடுத்துட்டு ஒத்தைக்கு ரட்டையா கணக்கெழுதிக்கிறான் உடுப்புக்காரன். அதோட வேணும்கிறமுட்டும் குடிச்சிப்புட்டு அதுக்கு ஈடா தண்ணி கலந்து இவங்களுக்கு வித்துடறான். ஒடம்புநோவுக்கு கேக்கும்னு சாயங்காலமானா ஒரு கெளாஸோ ரண்டு கெளாஸோ ஊத்திக்கிறாங்க. தண்ணி கலந்ததக் குடிச்சி மண்டையிடிக்குதுன்னு காலைல எழறப்ப அனத்தல் ஜாஸ்தியாயிருக்கும். பொண்டுகள்ல ஆராயி குடிக்கறா. சின்னசாமி பீடி மட்டும்.

கசப்புக்கட்டி சேக்காததால வெத்தல போட்டாப்லயே இல்லேன்னு எப்பவும் சலிப்பு பெருமாயிக்கு. அவங்காயாக்கிட்ட கத்துக்கிட்ட பழக்கம். கசப்பும் தொவப்பும் கலந்த ருசிக்கு பழக்கமான நாக்கு இங்க வந்ததுலயிருந்து அது கெடைக்காம அல்லாடுது. கசப்புக்கட்டி இருக்குமானு அந்த குண்டன்கிட்ட கேட்டுப்பாரேன்னு புருசன்கிட்ட சொன்னதுக்கு மாண்டி இந்த பாறையில பச்சைப்பாக்கு வெளையுது, வெட்டி வேகவச்சு, விடியறதுக்குள்ள தண்ணியிறுத்து கட்டியாக்கித் தரச்சொல்றேன்னு அவன் எகத்தாளம் பேசினதுக்கப்பறம் நாக்கை அடக்கிக்குறா.

கரட்டடியில இருக்கற குட்டையில தண்ணி மொண்டாந்து சட்டிப்பானை கழுவிட்டு ராத்திரி மீந்த சோத்தாண்ணிய குடிச்சிட்டு பொழுதேறறதுக்குள்ள ஆணுபொண்ணு அமுட்டுப்பேரும் வேலக்காட்டுக்கு போயிறணும். மத்தியானத்துக்கு களி கிண்டுறது ஆராயி வேல. எத்தினிப் படி மாவு கிண்டினாலும் ஒரு புட்டையோ கட்டியோ இருக்காது. நயமா சந்தனமாட்டம் வழுவழுன்னு எறங்கும் தொண்டையில. கிண்டியானதும் பாறைய கழுவி ஆளாளுக்கு பெரும் உண்டையா ஒவ்வொண்ணு சிப்பியில உருட்டி வச்சிட்டு, அரச்ச புளிக்கூட்ட அததுக்கு நெரவி நிமுந்தா பொழுது உச்சிக்கு வந்துரும். ஆளுங்களும் எப்ப எப்பன்னு வருவாங்க பசியில. வெயிலுக்கு பாறை சூடு பத்தியெரியறது பசியில தெரியாது. லவுக்கு லவுக்குனு முழுங்கிட்டு இன்னம் இருக்கான்னு கேக்காம வெரல்ல ஒட்டியிருக்கறத நக்குவாங்க. எப்பிடி இல்லேங்கிறதுன்னு ஆராயி வேறபக்கம் திரும்பிக்குவா.

வேலக்காட்ல இருந்து ஆளுங்க திரும்பறதுக்குள்ள ராத்திரிக்கு ஒலை வச்சிருப்பா ஆராயி. அதுல நொய்யரிசி மொளகா உப்பு போட்டு புளியூத்தி கட்டுச்சோறு கௌறுறதுல அலமேலுக்கு கைப்பாங்கு ஜாஸ்தி.

பட்டுவாடாவுக்கு சனிக்கிழம சாயந்திரம் லொடலொடன்னு சைக்கிள்ல வருவான் கங்காணி. அவன் வந்தா சனிக்கிழம. வேறநாள்ல வந்தாக்கூட வித்யாசம் தெரியாது. வர்றன்னிக்கு ராத்தங்கல் இங்கியேதான். உடுப்புக்காரன் காடை கவுதாரி மொசல்னு எதாச்சும் அடிச்சி சுட்டு வைப்பான். ரெண்டுபேறும் குடியா குடிப்பாங்க, கூத்தாடி மெதப்பாங்க.

விடிஞ்சதும் வேலக்காட்ட சுத்திவந்து அதுநொட்ட இதுநொள்ளைன்னு நோப்பாளம் படிப்பான் அவனே மொதலாயியாட்டம். பேபி ஜல்லிய எடுத்து சைசு பெருசாயிருக்கேம்பான். ஒன்ரயிஞ்சை எடுத்துப்பாத்துட்டு சிறுசா இருக்கேன்னு கொற சொல்லுவான். கருங்கல்ல ஒடச்சி குமிச்சிருந்தாலும் மாக்கல்லும் நொறம்புமா கெடக்கும்பான். கட்டியிருக்கற குட்டானுங்களுக்கு டேப் புடிச்சு மால்வச்சு அளவு கொறையுதும்பான். கொறச்சு கொறச்சு அளந்து கொசுறு புடிப்பான். கொசுறுன்னா கொசுறு இல்ல. அதுதான் பெருசு.

பட்டுவாடா பண்றேன்னு அவன் பீத்திக்கிட்டு வந்தாலும் அப்பிடியெதும் இங்க நடக்கிறதில்ல. அவன்கிட்ட பை ரொப்ப பணமிருந்தாலும் ஒத்தப்பைசா பேராது ஒரு ஆளுக்கும். குடுத்த அட்வான்சுக்கு பிடித்தம் அதுக்கு வட்டி சாப்பாட்டு சாமானுக்கும் சாராயத்துக்கும் மத்ததுக்கும் கணக்கு கழிச்சான்னா எதும் மிஞ்சாது. இன்னும் கடன் பாக்கி எவ்வளவுன்னு கேட்டா அது இருக்கு மலையாட்டம்பான். காலைக் கும்புட்டு கந்து கேட்டா மேலத் தொட்டதுக்கு வட்டி குடுடாங்கற கொடுமை. வாராவாரம் இதே லோலாயம்தான்.

வெய்யக்காலத்துல கரட்டுலயிருக்குற மூங்கப்பொதர்ல நெருப்பு புடிச்சி எரியும் அப்பப்ப. ஆனா இன்னிக்கி நெருப்பு தானா எரியல. டீசல் ஊத்தி பத்த வச்சது. நெருப்புக்குள்ள பொணங்களும் நெருப்புத்துண்டமாட்டந்தான் எரியுது. சதை கருகுற கவுச்சி கரடு முழுக்க காத்தா வீசுது. எதெதோ வெந்து வெடிக்குது. சுத்தியுமிருக்கற செடி கொடிங்க படபடன்னு பொரிஞ்சி தொவளுது. பக்கம் அண்டவுடாம பாஞ்சி பரவுது நெருப்பு. பாறைமேல நிக்கிற நாலுபேருக்கும் பதட்டத்துல பொங்குற வேர்வை அடங்காம ஊத்தாட்டம் வடியுது.

வங்குல சுருண்டிருந்த சாரையோ நாகமோ சீறி நகறுது உப்பைக்குள்ள. ராத்திரியானா குதியாளம் போடுற அதுங்க சூட்டுக்கு பயந்திருக்கணும். தெனமும் பாம்போ தேளோ அடிக்கறது சாதா விசயம். யாராச்சும் வூட்டுக்கு தூரம்போனா தீட்டுக்குத் தான் இப்பிடி பூச்சிப் பொட்டுங்க போக்கு காட்டி அலையுதும்பாள் ஆராயி. அலமேலும் மாமான்னு ஒத்தூதுவா.

அலமேலு மவன் சென்றாயன் பாம்பு தீண்டித்தான் செத்துப்போனான். சாகற வயசா அது? எனக்குத் தொணையா அவன இங்கியே வுட்டுட்டு போங்கடா. இப்ப பள்ளிக்கொடத்தலயும் மத்யான சோறு போடறாங்க. பையன் நாலு பருக்க கண்ணுல பாக்கும்னு கெஞ்சினா அவம்பாட்டி உட்டுட்டு வந்திருந்தாக் கூட உசுரோட இருந்திருப்பான். கூட்டியாந்து கொன்ன மாதிரி ஆயிருச்சு.

அங்கயும் இங்கயும் பெராக்கு பாத்துகிட்டு திரிஞ்சவன் செரிப்பொழுதுல நாதாளிப்பழம் நுனாப்பழம் காரக்காய்னு எதையாச்சும் பறிச்சுத்திம்பான். அன்னைக்கும் அப்பிடி திரியறப்பதான் குத்தடியிலயிருந்து கொத்தியிருக்கு. கடிவாய்க்கு கீழயும் மேலயும் இறுக்கி கட்டு போட்டுட்டு சீசாத்துண்டுல கீறனதும் வெஷம் எறங்குச்சு. ஆனாக்கூட பையன் நெப்புநெகாத் தெரியாமத் தான் கெடந்தான்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா பொழச்சிருப்பான். இத்தினிக்கும் அன்னிக்கு லோடுக்குவந்த லாரி கூட இருந்துச்சு. பாவி கங்காணி தான், பாடம் போட்டா சரியாயிரும் பச்சிலைத் தின்னா நல்லாயிரும்னு தடுத்துட்டான். நேரந்தாட்டினதுல வெஷம் கடுத்து பையன் கண்ணே முழிக்கல.

அனாதப் பொணமாட்டம் பொதைக்க வேண்டியதாயிருச்சு. சாங்கியப் பிரகாரம் பொதைக்கறதுக்கு செலவு வாங்கக்கூட கரட்டவுட்டு வெளிய அனுப்ப முடியாதுன்னு அடமா நின்னுட்டான் கங்காணி. ஒரு ஊதுவத்தி கப்பூரம் கூட இல்ல. சாத்து சட்டியக் கழுவி கொள்ளிப்பானையா ஒடைக்க வேண்டியதாயிருச்சு. மூணாம்நாள் பால் குத்தறத்துக்கு வதுலா தண்ணியத்தான் தெளிக்க முடிஞ்சது. இத சாக்கிட்டாச்சும் பெஜவாடாவுக்குப் போயி ஊருக்கு ஓட வழிதேடிட்டு வரலாம்னு பாக்குறீங்களா... கரட்டத்தாண்டுனீங்கன்னா காலிருக்காதுன்னு அவன் கத்துனது இன்னம் காதுகுள்ளயே இருக்கு.

மக்கியா நாள் வேலக்காட்ல மாரக்கா தான் ஆரம்பிச்சா. துள்ளத்துடிக்க ஒரு உசுரு போறப்பக் கூட மனசெரங்காத அந்தக் காதகன், அவனா மனசு வந்து ஊருக்கு அனுப்புவான்னு நாம நம்பிக்கிட்டிருக்கனுமான்னு அவ கேட்டதுக்கு யாரு வதிலு சொல்றது?

அந்த கெரகாச்சாரம் புடிச்சவனுங்க எப்ப வந்து இழுத்துட்டுப் போயிருவாங்களோ என்னென்ன சித்ரவத பண்ணுவாங்களோங்கற பயத்துல கண்ணக் குத்துனாக்கூட தூக்கம் வர்ரதில்ல எனக்கு. அவனுங்க பரணைக்கு இழுத்திட்டுப் போறத இத்தினி ஆம்பளைங்களும் பஞ்சபாண்டவங்களாட்டம் மொட்ட மரமா நின்னு வேடிக்கைப் பாக்குறீங்க. தூத்தேறி... இந்தா இந்தப்புள்ள மாதேஸ்வரி பெரியவளானதுக் கூட வெளியத் தெரியாம தலையில தண்ணி தெளிச்சி உள்ளார கூப்பிட்டுக்கிட்டம். இன்னிக்கு என்னயத் தொட்டவனுங்க இந்த கொழுந்த கிள்ளறதுக்கு எமுட்டு நேரமாவும்னு மல்லிகா பொங்கி பொங்கி அழுவுறா. யாரு தேத்தறதுன்னு தெரியாம எல்லாக் கண்ணுலயும் தண்ணி.

அவன் ஒரே ஒருவருசம்னான். இன்னிக்கு எப்பிடி கொறச்சு கொறச்சு பாத்தாலும் அஞ்சாறு வருசமாவது ஆயிருக்கும். வெங்ளூர்ட்ட வேலன்னான். அன்னிக்கு கோவத்துல பெஜவாடாங்குறான். பெஜவடாவுக்கு கல்லொடைக்க வந்து யாராச்சும் ஊர் வந்து சேர்ந்திருக்காங்களா. துணிமணி தொவைக்கவும் தண்ணி வாத்துக்கவும் வாரத்துல அரைநாள் வேலைய நிறுத்திக்கலாம்னு ஊர்ல சொல்லிட்டு இங்க வந்து இல்லைங்கறான். காய்ச்சல் தலைவலின்னு ஓய்ஞ்சு ஒக்கார வுட்டுருக்கானா? அவங்ககிட்ட அடிவாங்காம தப்பிச்சது யாரு? ஒரு நாளைக்கு ஒருபுட்டி கல்லொடச்சிருந்தாக் கூட கடன் தீந்திருக்கும். இவங்கிட்ட காலத்துக்கும் கழியாதுன்னே தோணுதுன்னு ஆளாளுக்கு பிராது இருக்கு. எல்லாத்தையும் நம்ப வச்சு கழுத்தறுத்த கங்காணி கழுத்த திருப்பி அறுத்தா என்னா குத்தம்னு ஆராயி கேட்டப்புறம் வேற யோசனையே இல்ல. எல்லோருக்கும் சூரியும் அருவாளும் வந்தது சொப்பனத்துல.

ஒருவாரமா அலமேலு கஞ்சித்தண்ணி ஒண்ணயும் சீந்தறதில்ல. அப்பப்ப ஓடியோடி குழிமேல பொரளுறா. குழிமேல கெடக்குற மண்ணை அள்ளியள்ளி தலைமேல போட்டுக்கறா. ராத்திரியெல்லாம் மாரடிச்சு அழுவுறப்ப கரடே கரையுது.

ரொம்பவும் தொவண்டு கெடக்கான்னு இன்னிக்கு அவள சாளையிலயே வுட்டுட்டு மத்தவங்க மட்டுந்தான் வேலக்காட்டுக்கு போவமுடிஞ்சது. ஆராயி அடுப்புவேலையப் பாத்துக்கிட்டு அவளயும் பாத்துக்கறா.

இன்னிக்கு நேரத்துலயே வந்துட்டான் கங்காணி. வேலக்காட்டுல ஆளுங்கள எண்ணிப் பாத்துட்டு ஒரு தலை கொறையுதேன்னான். இப்பிடியிப்பிடின்னு வெலாவாரி சொன்னான் மாரப்பன். தாட்பூட்னு எகிறிட்டு சாளைக்குப் போனவன் செத்தநேரத்துல ஓலமான ஓலம் போட்டதுல கரடே கிடுகிடுன்னு செலையோடுது. அதத அப்பிடியப்பிடியே போட்டுட்டு ஓடிப்பாத்தா பித்து பிடிச்சவளாட்டம் நின்னிருக்கா அலமேலு. கைல குட்டக் கடப்பாரை. கங்காணி கொடல் தள்ளி கெடக்கான். குதுகுதுன்னு ரத்தம் பொங்குது.

வந்தவன் மூடிட்டிருக்காம, சீமையில இல்லாத புள்ள செத்துருச்சேன்னு சிணுங்காத. உனுக்கு எத்தினி புள்ள வேணும்னு சொல்லு நாந்தர்ரேன்னு சொல்றான்னா ஆங்காரம் தான..? நான் தடுக்கறதுக்குள்ள சொருவிட்டாள்னு ஆராயி சொன்னா.

அதுக்குள்ள பரணையிலிருந்து துப்பாக்கியோட ஓடியாந்தான் உடுப்புக்காரன். யோசிக்க நேரமில்ல. இவனை வுட்டா எல்லாருக்கும் தொந்தரவுன்னு சாலைக்கு வெளிய சட்டி கழுவுற எடத்துல கெடந்த சூரிய எடுத்து ஒரே ஏத்தா ஏத்திட்டான் காளியப்பன். வலின்னா என்னான்னு தெரிஞ்சு அவன் கத்தறத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி.

லோடு லாரிங்க வந்துபோற வண்டித்தடத்துல நடக்கறப்ப யாரும் பேசல. எங்க போறதுன்னு திகிலாயிருக்கு. இந்தத் தடம் எங்கப்போயி முடியும்னு யாருக்குந் தெரியாது. எங்காச்சும் ஒரு எடத்துல நம்மூருக்குப் போற வழியா இதுவே பெரண்டு கெடக்கும்னு நம்பித்தான் பொறப்பட்டதே. ரயில் சத்தம் இப்ப பக்கத்துல கேக்குது.

ஒராளு, ரண்டாளுன்னா திருட்ரயில்ல கூட போயிறலாம். ஆனா இத்தினியாளுகளுக்கும் அப்பிடி ஒண்ணா தோதுபடாது. அப்புறம் அதுக்கு எங்காச்சும் மாட்டிக்கிட்டா அவ்ளோதான். வெயிலுக்கு பயந்து வெள்ளாவிப் பானைக்குள்ள ஒளிஞ்ச கதையாயிரும்.

பட்டுவாடாவுக்கு கங்காணி வாங்கியாந்த பணம் வண்டி செலவுக்கும் மேங்காரியத்துக்கும் போதும். அது தீந்துடறதுக்கு முன்ன எதாச்சும் வேல தேடணும்.

ரயிலேறுனாலும் நேரா ஊருக்கு போயிரப்படாது. தேடிவந்து புடிச்சிருவானுங்க குவாரிக்காரனுங்க. கழுத்துக்கு துண்டு போட்டு காசைக் கேட்டாலும் பரவால்ல. உடுப்புக்காரனையும் கங்காணியவும் என்னடா பண்ணினீங்கன்னு போலீச வச்சு பொடனி திருப்பிருவாங்க. மாட்டிறக் கூடாது. முழுசா தப்பிச்சிறணும். எங்காச்சும் ஆறுமாசமோ ஒருவருசமோ ஊருபக்கம் தலைகாட்டாம இருந்துட்டு அப்புறந்தான் போவணும். போறப்ப கைல கொஞ்சமாச்சும் காசு கொண்டு போவணும். இல்லாட்டி இத்தினி வருசமா ஏமாத்தனதுமில்லாம இப்ப வந்தும் ஏமாத்தறியான்னு ஊர்ல இருக்கற கடங்காரங்க நெரிச்சிருவாங்க.

இப்போதைக்கு சிக்கலில்ல. கையுங்காலும் தெம்பாத்தானிருக்கு. மணல் லோடுக்கோ காரைவேலைக்கோ செங்கல் அறுக்கவோ டெலிபோன் லைனுக்கு குழியெடுக்கவோ எங்காச்சும் கேங்கா சேந்துடவேண்டியதுதான். ஆனா, பாக்கறவங்களுக்கு சந்தேகம் வந்துறக்கூடாதுனு சட்டிமுட்டி சாமான் அம்புட்டயும் வேலக்காட்லயே வுட்டுட்டு வந்தாச்சு. தூங்குற கைக்கொழந்த எழுந்து கஞ்சின்னு கதறினா காய்ச்ச ஒரு சருவம் இல்ல. தொட்டது புடிச்சது எல்லாமே புதுசாத்தான் வாங்கணும். எந்த வேலைக்கு சேர்றதுக்கும் கைல சாமான் எதுவுமில்ல. புதுசாத்தான் வாங்கணும். அதுக்கு எல்லோருக்கும் கொஞ்சம் முன்பணம் தேவையாயிருக்கு.

மார்க்ஸை மருட்டிய ரயில் - ஆதவன் தீட்சண்யா

ரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான் எரிக்கும்போது நீங்கள் தேவையற்ற பதட்டத்திற்கு ஆளாக நேரிடும்.

அதோ கேட்கும் அந்த ஹாரன் சத்தம் ஒரு ரயிலுக்குரியதான கம்பீரத்தோடும் நளினத்தோடும் ஒலிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். காசில்லாத தாயிடம் கம்மர்கட் கேட்டு அடிவாங்கிய சிறுபிள்ளை விசித்து அழுவதுபோல் கூவிக்கொண்டு வருகிறது அந்த ரயில். அந்த அழுகுரலும் கூட மனதை நெகிழ்த்தி இரக்கத்தைத் தூண்டுவதாக இல்லாமல் எரிச்சலூட்டுவதாயும் தூக்கத்தைக் குலைப்பதாயும் இரை கிடைக்காத வெறியில் புதருக்குள்ளிருந்து வரும் நரியின் ஊளையாகக் கேட்கிறது. சிருங்காரம் குறைந்துவிடுகிறபோது தாபத்தின் பிதற்றமும் ஆபாசமாகிவிடுகையில் ஒரு ரயிலின் அலறலில் ரசிக்க ஏதுமில்லை.

இவ்விசயத்தில் என்னோடு மாறுபடுவோர் தமது கருத்தை தெளிவாகவோ குழப்பமாகவோ தெரிவிக்கலாம். இதற்காக நீங்கள் ரயிலைப் பார்த்திருக்கவேண்டிய முன்னிபந்தனை ஏதுமில்லை. குழந்தைகள் தம் பாதங்களால் மண்ணைப் புரட்டிக்கொண்டு தெருவில் கூடி விளையாண்டக் காலங்களில் ஒருவர்பின் ஒருவர் வரிசையாக நின்று முன்னிருப்பவனின் சட்டையையோ அரணாக்கயிறையோ பிடித்துக்கொள்ள எல்லோருக்கும் முன்னிருப்பவன் எல்லோரையும் இழுத்துக்கொண்டு க்கூ... ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு என்று ஓடும் ஒரு விளையாட்டை நீங்கள் பார்த்திருந்தால் கூட போதுமானாது. அதுதான் ரயில். தின்பண்டங்களை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு வந்துவிடும் கணம்வரைக்கும் பாகுபாடின்றி எல்லோரையுமே ஏற்றிக்கொள்ளும் பரந்த மனமுடைய அந்த ரயில் எந்த ஊரிலும் நிற்காமல் போகாது. தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் முன்பாகக்கூட நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் எங்கே இறங்கப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சொல்லாவிட்டால் வண்டி நிற்காது. பிறகு காணாமல்போன உங்களைத் தேடி அப்பா அம்மா அடுத்த வண்டியில்தான் வரமுடியும். அதற்குள் வண்டி ஷெட்டுக்குப் போய்விடும் ஆபத்திருப்பதால் பயணத்தில் கவனம் சிதறக்கூடாது.

அதையும் பார்க்க கொடுத்து வைக்காதவர்கள், மழைக்காலத்தில் கண்பறிக்கும் சிவப்பு வண்ண வெல்வெட் பூச்சிகளுக்கிடையே தன்போக்கில் ஊர்ந்து திரியும் நீளமான மரவட்டையைப் பார்த்திருக்கிறீர்களா... எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்... மழையே பெய்வதில்லை. சினிமாவில் பெய்கிற செட்டிங் மழையைப் பார்த்திருந்தால் உண்டு. அப்போதும் மழையைப் பார்க்காமல் வெள்ளுடையில் நனையும் நடிகையின்... சரி வேண்டாம். அந்த வழக்கு இப்போது எதற்கு, மழைக்காலத்தில் இனிமேல் வீட்டுக்குள் பதுங்காமல் வெளியிலிருக்கப் பாருங்கள். அடர்ஊதாவும் கருப்பும் சரிவிகிதமாய் குழைந்த நிறத்திலிருக்கும் அந்த மரவட்டையைப்போலவே கொஞ்சம் பெரியதாய் அதாவது ஆட்கள் ஏறி இறங்குமளவுக்கு பெரியதாய் இருக்கும் ரயில். மரவட்டையிலிருந்து வந்ததை மறைக்க விதவிதமான சாயங்களை பூசிக்கொண்டுள்ளன ரயில்கள்.

ஆபிசுக்கோ வியாபாரத்துக்கோ அடுத்தவனை கவிழ்க்கவோ போகவேண்டிய அவசரத்தேவை மரவட்டைக்கு இல்லையாதலால் ஊர்ந்துபோக அதற்கு கால்களே போதுமானதாயிருந்தன. ஆனால் முன்வரியில் சொன்ன உயரிய நோக்கங்களுக்காக ஓடியாடித் திரும்பவேண்டியவனாயிருந்த மனிதன் ரயிலில் கால்களிருந்த இடத்தில் சக்கரத்தை பொருத்திக்கொண்டான். கொசுவர்த்திச் சுருள்போல் சுருண்டு ஓய்வெடுக்கும் மரவட்டையைப் பார்த்துவிட்டு ரயிலும் இப்படித்தான் மண்டலம்போட்டு சுருண்டிருக்குமோ என்று பயங்கொள்ளத் தேவையில்லை. அப்படியிருந்தால் அது ஆக்சிடென்டான ரயில் என்பது விளையாட்டுப் பிள்ளைகளுக்கு தெரியும். ரைட், இப்போது நீங்கள் ரயிலைப் பற்றி சொல்லலாம். குறிப்பாய் அதன் ஹாரன் பற்றி. அல்லது முதுகில் கூடு சுமந்து நகரும் நத்தையைப் போன்ற கூட்ஸ் வண்டிகள் பற்றி... (துருப்பிடித்த நாற்பது பெட்டிகளின் கடைசியில் அநாதையைப்போல் வெள்ளுடை தரித்து தனிமையில் கருகும் கூட்ஸ் கார்டு பரிதாபத்திற்குரியவர். அவரது தனிமையும் சோகமும் தனிக்கதை.)

எனக்கு ஏன் இந்த ஹாரன் ஒலி பிடிக்கவில்லையென்று யோசிக்கும்போது தான் எனக்கு ரயிலே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. நெரிசலில் சிக்கிய அவஸ்தையினாலோ அல்லது அடுத்தவன் உட்கார்ந்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் தூங்குவதுபோல் பாவலா பண்ணி படுத்திருப்பவர்கள் மீதான ஆத்திரத்திலோ இந்த வெறுப்பு வந்திருக்க நியாயமில்லை. மாப்ளா எழுச்சிக்காரர்களை தன்னுள்ளடக்கி பிணக்குவியலாய் கொண்டுவந்து திரூரில் தள்ளியதாலோ, நாட்டுப்பிரிவினையின் பேரால் அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை இந்துப்பிணங்களாவும் இஸ்லாமியப் பிணங்களாகவும் இருநாடுகளின் எல்லைகளுக்கும் எடுத்துச் சென்று கொட்டியதாலோ ரயில்மீது எனக்கு இப்படியான வெறுப்புண்டாகியிருக்குமெனத் தோன்றுகிறது. ஆனாலும் பிடிக்காத ஒன்றைப்பற்றி இவ்வளவு யோசித்திருப்பதை வைத்துப்பார்த்தால் ஒருவேளை மனசின் ஆழத்தில் அந்தரங்கமாய் அது எனக்கு பிடித்தமானதாயிருக்கிறதோ என்று குழம்பவும் நேர்ந்துவிட்டது. என்னை நானே சமாதானம் செய்துகொண்ட பிறகு தொகுத்த காரணங்கள் உங்களுக்கு முக்கியமற்றதாயும் கூட தோன்றலாம்.

முதலில் அதன் ஹாரன் ஒலி குழந்தைகளுடையதைப் போல் இசைமையோடு இல்லை. துருப்பிடித்த டவர்மேலிருந்து நேராநேரத்துக்கு ஊதியடங்கும் பஞ்சாயத்தாபீஸ் சங்கு மாதிரி கத்துகிறது. கூ...வும் ஜிக்குபுக்குவும் இணையவேயில்லை. தொலைவிலிருப்பவனுக்கு வெறும் கூ மட்டுமே கேட்கிறது. நீந்தும்போது தோள்பட்டையிலிருந்து முன்னும் பின்னும் மடங்கிநீளும் முழங்கையைப்போல் வெட்டுக்கிளியின் றெக்கையெலும்பு வடிவில் சக்கரத்துக்கு வெளியிலிருந்து நீண்டு மடங்கும் ஒன்றிலிருந்தோ (கனெக்டிங் ராடு...? சரியான பெயர் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்) அல்லது ரயிலின் ஆயிரத்தெட்டு பாகங்களின் கூட்டியக்கத்திலிருந்தோ எழும்பும் ஜிக்குபுக்கை அமுக்கி இருட்டடிப்பு செய்துவிட்டு என்ஜினில் டிரைவரின் கைப்பாவையாய் கிடக்கும் ஹாரன் ஒலி மட்டுமே கேட்கும்போது அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சைக்கிள் பெல் மாதிரியோ ஊமத்தை மொட்டுபோல் நுனிப் பருத்துக் கூம்பிய ஐஸ் வண்டியின் ஹாரன் மாதிரியோ வெளிப்படையாயிருந்து குழந்தைகள் அமுக்கி ரசிக்க தோதற்று டிரைவரிடம் சிறைப்பட்டிருக்கும் ஒரு கருவியிலிருந்து உன்னதமான இசை ஒருபோதும் வராது. வெறும் ஒலி, எச்சரிக்கை செய்யமட்டுமே உதவும். எச்சரிக்கை செய்வது parental ego (உபயம்: சுவாமி ஜல்சானந்தா, மனசே டென்சன் ப்ளீஸ், பக்கம் 600097856).

இந்த ரயில் வருவதற்கு முந்தி நாமெல்லோரும் எங்குமே போகாமல் ஒரேயிடத்தில் அடைந்தா கிடந்தோம்...? இல்லையே... அடேயப்பா எங்கெல்லாம் போய் வந்திருக்கிறோம்...? இலங்கைக்கு பர்மாவுக்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு.... ரோம் வரைக்கும் போய் வியாபாரம் பண்ணியிருக்கான் நம்மாள். அம்புலிமாமாவில் இன்னும் அனேகநாடுகளின் பட்டியலுண்டு. அங்கேயிருந்து இங்கே வந்து போயிருக்கிறார்கள்... நாலந்தாவிலும் தட்சசீலத்திலும் படிக்க எவ்வளவோ பேர் வந்து போயிருக்கிறார்கள். ஏசுநாதர் கூட காஷ்மீருக்கு வந்திருந்ததாய் ஒரு தகவலுண்டு (பார்க்க: கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே, இடமருகு). இதோ FTVயில் பூனை நடையழகிகள் பொழுதும் நடக்கிற நடைக்கு, நேர்க்கோட்டில் நடந்தார்களென்றால் உலகத்தையே ஏழுமுறை சுற்றிவந்துவிடுவார்கள் தானே. இங்கேயிருந்து கிளம்பி கடல்மேல் நடந்துபோன பல்லவ இளவரசன்தான் அங்கே போய் ஜூடோவை கற்றுக்கொடுத்திருக்கிறான்.

மத்திய ஆசியாவிலிருந்து மாடு கன்றுகளோடும் குதிரைகளோடும் கிளம்பி கைபர் போலன் கணவாய் வழியாக இங்கே வந்து தங்கிவிட்டவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஆறுமாதத்திற்கு முன்பே டிக்கெட் ரிசர்வ் பண்ணி பெர்த்தில் தூங்கிக்கொண்டே வந்து சேரவில்லை. நடந்தும் குதிரைமீதும் நாவாய் செலுத்தியும் உலகத்தையே அளந்து தீர்த்திருக்கிறார்கள். வாமனனுக்கு நேர்ந்தது போலவே இவர்களுக்கும் அடுத்த அடி வைக்க இடமில்லாமல் போய்விட்ட நிலையில் தூக்கிய பாதத்தோடு நடராஜனைப்போல நின்றே கிடக்கமுடியாதென்று சந்திரனில் கால்வைத்தனர். இதோ இப்போது செவ்வாய் கிரகத்துக்கும் போகப்போகிறார்கள். அங்கேயே கொஞ்சகாலம் இருந்தபிறகு நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், நாங்கள் தான் பூர்வகுடிகள், நாங்கள் வந்தேறிகளல்ல என்றெல்லாம் வரலாற்றை திரிப்பார்கள். பிரச்னை இப்போது எதுவென்றால் அவர்கள் யாரும் இந்த ரயிலுக்காக ஸ்டேசனில் காத்திருக்கவில்லை என்பதுதான்.

அதாவது ரயில் இல்லாத காலத்திலும் வேறுவகையான போக்குவரத்து இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதுதான். எனில் ஆதிமனிதனை ஊர்ஊராய் தூக்கிச்சென்ற கழுதைக்கும் குதிரைக்கும் காளைகளுக்கும் இல்லாமல் நேற்றுவந்த ரயிலுக்கு மாத்திரம் தனியாக ரயில் போக்குவரத்து அமைச்சகம் எதற்கு? நிதிஷ்குமாரும் மம்தா பானர்ஜியும் சண்டையடித்துக் கொள்ளவா? ஏற்கனவே ஒற்றமையில்லாமல் பிரிந்து கிடக்கிற மந்திரிசபைக்கு நடுவில் இந்த ரயிலுமல்லவா தண்டவாளம் பதித்து ராவும் பகலும் ஓடிக்கொண்டிருக்கிறது?

சார் இதையெல்லாம் விடுங்கள். இந்த ரயிலே இந்தியாவுக்கு எப்படி வந்ததென்று யோசித்துப் பாருங்களேன். இந்தியர்கள் எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று திருபாய் அம்பானி போலவோ, பௌத்தன் அசோகன் சாலையோரம் நட்டு வளர்த்திருந்த லட்சக்கணக்கான மரங்களை வெட்டியெறிந்துவிட்டு பஞ்சம் பிழைக்க ஊர்ஊராய் மக்கள் ஓடுவதற்கு வசதியாக நாலுவழி சாலை போடவேண்டும் என்று புஷ்யமித்திர சுங்கனின் வாரிசான வாஜ்பாய் போலவோ இந்தியர்கள் எல்லோரும் நாடுபூராவும் சுற்றிவரவேண்டும் என்று வெள்ளைக்காரன் கண்ட கனவிலிருந்து இங்கு ரயில் வரவில்லை.

கோவில்பட்டியில் விளையுது பருத்தி. கோலாரில் விளையுது தங்கம். மலைநாட்டில் மிளகும் ஏலமும் கிராம்பும். டார்ஜிலிங்கிலும் நீலகிரியிலும் தேயிலை. சிம்லாவில் ஆப்பிள். சிங்கரேணியில் நிலக்கரி. பரந்துவிரிந்த இந்த நாட்டின் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் கொள்ளையடித்த வளங்களை துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கவும் தன்நாட்டுப் பொருட்களை துறைமுகத்திலிருந்து நாடுமுழுக்க ஏற்றிப்போய் விற்கவும் வசதியான சரக்கு வண்டியாகத்தான் ரயிலைக் கொண்டுவந்தான். அப்படியான கொள்ளையை தடுத்து அங்கங்கே ஜெய் ஜக்கம்மா, வந்தே மாதரம், டெல்லி சலோ, இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்குபவர்களின் குரல்வளையை அறுத்தடக்க பட்டாலியன்களை விரைந்தனுப்பவும் கோடைவாசஸ்தலங்களுக்குப் போய் உல்லாசமாய் கும்மாளமடிக்கவும் தனக்காகத்தான் பயணிகள் ரயிலை ஓடவிட்டான்.

ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொள்கிறேன் துரை ...என்று காந்தியும் மற்றவர்களும் ஏறிக்கொண்டார்கள். காந்தி இறங்கிக்கொண்டாலும் மற்றவர்கள் இறங்கவேயில்லை. பிறகு வெள்ளைக்காரனும் போய்விட மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து ஓடிப்போய் ஆக்ரமித்துக் கொண்டவர்கள் ஆயுளுக்கும் ரிசர்வ் செய்த நினைப்பில் பெர்த்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரத்தில் அப்பர் லோயர் மிடில் மூன்றில் எது வசதியான பெர்த் என்று வாதம் பண்ணி களைப்படைந்ததும் கழிப்பறைக் குழாயில் நீரருந்திவிட்டு மறுபடியும் தூங்கப்போய்விடுகின்றனர். எவ்வளவு தைரியமிருந்தா நான் படுத்திருந்த பெர்த்தில் படுத்திருப்பே என்று கனவில் மிரட்டும் வெள்ளையனுக்கு பயந்து அப்பர் பர்த்திலிருப்பவன் தூக்கத்தில் கழியும் மூத்திரத்தின் ஈரமும் வாடையும் மிடில், லோயர் ஆட்களை தூங்கவிடாமல் எழுப்பிவிடுவதுமுண்டு.

இதனால் மட்டுமே எனக்கு ரயில் பிடிக்காமல் போய்விட்டதாக நீங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் பிரதர். யாரையும் தொல்லை பண்ணாமல் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் வளைந்து நெளிந்து நம் பிள்ளைகள் எவ்வளவு லாவகமாய் ரயிலோட்டுகிறார்கள். முத்துபுல்லாக்கு போல மூக்கிலாடும் சளியைக்கூட துடைத்துக்கொள்ளத் தெரியாத சிறுபிள்ளைகளுக்கிருக்கும் இந்த சமயோசித அறிவு உலகத்தையே நல்வழிப்படுத்துவதாய் அலட்டிக்கொண்ட வெள்ளையனுக்கு இல்லாமல் போய் என்ன செய்தான் தெரியுமா? மூங்கில்வாரைகளுக்கு பதிலாய் இரும்பில் கட்டிய பாடை போல் நாடு நெடுகிலும் தண்டவாளம் பதித்தான். இதிலொரு குரூர முரண்பாடு என்னவென்றால் பாடைக்குக் கீழே பிணங்கள். ஆமாம், நிலத்தையே நம்பிக் கிடந்தவர்களைத் தான் தண்டவாளத்தைத் தாங்கும் ஸ்லீப்பர் கட்டைகளாய் குறுக்கி குப்புற படுக்கவைத்துக் கொன்றிருந்தான். உடைந்த அவர்களின் கனவுகள் பாதை நெடுகிலும் வெயிலிலும் மழையிலும் கிடந்து ஜல்லிக்கற்களாய் உருமாறிக் கிடப்பதை இப்போதும் காணலாம். சுரங்கத்துக்குள் தூர்ந்துபோகவும் பேரணைகளில் மூழ்கிப்போகவுமே சபிக்கப்பட்டதாயிருக்கிறது எளியவன் வாழ்க்கை என்பதை அறிவித்த முதல் பெருங்கேடு அது.

பைத்தியக்காரன் கிழிச்சது கோவணத்துக்கு ஆச்சு என்பதுபோல, வெள்ளைக்காரன் எதற்கோ போட்டிருக்கட்டும், இப்போது நமக்கு உதவுகிறதா இல்லையா என்று எனக்கான பதிலைச் சொல்ல பரபரக்கிறதா வாய்...? பொறுங்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் வெள்ளைக்காரன் எதற்காக ரயிலோட்டினானோ அதற்காகத்தான் இப்போதும் ஓடிக்கொண்டிருப்பதாய் நம்புகிறேன். அப்படியில்லை என்று வாதாட விரும்புகிறவர்கள் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏ.சி வகுப்பு என்ற பாகுபாடுகள் எதற்காகவென்று எனக்கு விளக்குங்களேன். அதைவிடவும் கொடுமை, ரிசர்வ்டு - அன்ரிசர்வ்டு. ரிசர்வேசன் கோச்சில் கால் வைத்துவிட்டால் கறுப்பனே கீழிறங்கு என்று காந்தியை அவமதித்து கத்திய வெள்ளைக்காரன் இன்றும் இங்கேயே இருப்பதை நேரடியாய் நீங்கள் காணக்கூடும். ரயிலுக்குள் இத்தனை பாகுபாடு என்றால் ரயில்களுக்கிடையேயும் ராஜதானி, சதாப்தி, துரிதவண்டி, தூங்கி வழியும் வண்டி என்று ஏற்றத்தாழ்வுகள். எல்லா வண்டியும் எல்லோருக்கும் பொதுதான். யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் என்று பசப்பாதீர்கள். ஏறுவதற்கு டிக்கெட் வேண்டும். டிக்கெட்டுக்கு பணம் வேண்டும். ஆனால் அந்தப் பணம் பொதுவிலில்லை. அப்புறம் என்ன மயிருக்குடா.... வேண்டாம்... பெண்களும் கதையைப் படிக்கவேண்டியிருக்கிறது. இல்லையானால் எனக்கு வரும் கோபத்தில் ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டிவிடுவேன்... பேசாமல் அடுத்த பாராவுக்கு போய்விடலாம்.

காமக்கிழத்திகளின் கதகதப்போடு குளிரை அனுபவிக்கவேண்டுமென்று ஒவ்வொரு ஸ்டேசனிலும் தங்கும் வசதியுடன் துவக்கப்பட்டு நூற்றாண்டைக் கடந்துவிட்ட ஊட்டி மலைரயில் கூட எனக்கு பிடிக்கவில்லை. காலகாலத்துக்கும் இங்கேயே ஆண்டு அனுபவிப்போம் என்ற கனவோடு அவர்கள் விட்ட அந்த ரயிலே ஒரு பொம்மை போலவும் விளையாட்டைப் போலவும் ஆகியிருப்பதால் அது தம்மை பகடி செய்வதாய் கருதி இப்போதெல்லாம் பிள்ளைகள் ரயில் விளையாட்டை கைவிடத் தொடங்கியுள்ளனர். தொட்டும் தொடர்ந்தும் ஆடிய விளையாட்டிலிருந்து யாரும் யாரையும் தொட்டு உறவாட அவசியமேயில்லாத கிரிக்கட் மாதிரியான ஆட்டங்களுக்கு அவர்கள் தாவிக் கொண்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்துவிட்ட இக்காலத்தில் குளிப்பாட்டிய பிற்பாடே வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளுமளவுக்கு தம் பிள்ளைகள் இனி தீட்டுப்படமாட்டார்கள் என்று ஆசாடபூதிகளுக்கு சந்தோசம்.

ரயில்தான் எனக்கு பிடிக்காதே தவிர ரயில்வே ஸ்டேசன் பிடிக்கும். அதிலும் ரயிலில்லாத ஸ்டேசனைப் போல் அலாதியானது எதுவுமேயில்லை. எதற்காக ஒரு இடம் அறியப்பட்டிருக்கிறதோ அதுயில்லாமல் இருக்கும்போது அந்த இடம் வேறொன்றாகி ஈர்க்கிறதல்லவா. ஓடாத மணிக்கூண்டுகள் மேல் எனக்கு ஈர்ப்பு வந்ததும் கூட இப்படித்தான். நாளையும் பொழுதையும் இருபத்திநாளாய் கிழித்துப் போட்டுவிட்ட மனிதனை கடுப்படிப்பதில் ஓடாமலிருக்கும் மணிக்கூண்டுகளுக்குத்தான் முதலிடம். ஓடாமலிருப்பதாலேயே அதில் தானாய் படிந்துவிடும் புராதனம் ரயிலில்லாத ஸ்டேசனின் துரு வாசனையிலும் இழைந்திருப்பதை மழைக்காலங்களில் நீங்கள் முகர்ந்தறியக்கூடும். ஊரின் மையமானதொரு இடமாகவும் சந்திப்பு மையமாகவும் உச்சிவெயிலுக்கு ஒதுங்கத் தோதான நிழற்கூடமாகவும் நாய்களுக்கு பிடித்த கம்பமாகவும் தேனிக்களுக்கு கூடுகட்டும் உயரத்திலும் ..... அப்பப்பா... மணிக்கூண்டு என்றால் நேரம் காட்டுவது என்று தன்மீது சுமத்தப்பட்ட ஒற்றை அடையாளத்தை மறுக்கும்போது எத்தனை அடையாளங்கள் சேர்ந்துவிடுகிறது... அதுபோலவே தான் ரயில்நிலையங்களும். ஆனாலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளைப்போலவும் அலுவலகங்களைப் போலவும் ரயில்நிலையங்களும் மக்களிடமிருந்து வெகுவாக தள்ளியிருப்பதை நான் மன்னித்துவிட்டதாக நீங்கள் இவ்விடத்தில் குழப்பிக் கொள்ளக்கூடாது.

ரயில்வே ஸ்டேசன் மீது நான் வைத்திருந்த பிடிப்பும் ஒருநாள் முடிவுக்கு வந்தது. கோயமுத்தூர் குண்டுவெடிப்புக்கு பிறகு முன்பு போல் அங்கு போய்வருவது எளிதாயில்லை. தாடியுடனிருக்கும் என்னைப் பார்த்ததுமே போலிசின் துப்பறியும் ஏழாவது அறிவு விழித்துக்கொள்கிறது. தீவிரவாதி தான் தாடியோடு இருப்பான், தாடியோடிருக்கும் தீவிரவாதியாய் ஒருவனிருக்கும் பட்சத்தில் அவனிடம் கட்டாயம் வெடிகுண்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவுடனேயே அவனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமே என்ற தேசபக்தி பொங்கிவிடுகிறது போலிசுக்கு. உடனடியாய் என்னை விசாரணைக்கு அழைத்துவிடுகின்றனர். ரயில்வே ஸ்டேசனுக்கு போவதின் உடன்விளைவாக போலிஸ் ஸ்டேசனுக்கும் போகவேண்டியதாகிவிட்டது. இப்போதெல்லாம் தீவிரவாதிகள் எல்லா ரூபத்திலும் மறைந்துத் திரிவதாக போலிஸ் நம்புவதால், குடிமக்கள் எல்லோருமே தினசரி தங்களது உடம்பின் ஒன்பது புழைகளிலும் மெட்டல் டிடெக்டரை நுழைத்து வெடிகுண்டை மறைத்து வைத்திருக்கவில்லை என்று நிரூபிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதுமாதிரியான மாற்றங்கள்தான் இந்திய சமூகத்தில் வரப்போகிறது என்று தெரிந்திருந்தால் பழமைவாதத்தில் இறுகிக்கிடக்கும் இந்திய சமூகத்திற்குள் ரயில் நுழைவதை வரவேற்று எழுதியிருக்கமாட்டார் கார்ல் மார்க்ஸ்.

வேடிக்கைப் பார்க்க ரயில்நிலையம் போவதே விபரீதமாகிவிட்ட இக்காலத்தில் எட்டாம் அத்தியாயத்தில் ரயிலை எரிக்கப்போவதாய் முதலில் நான் எடுத்த முடிவை கைவிடுவதாய் இந்த வரியிலேயே அறிவிக்கிறேன். எவனோ எரித்த இரண்டு பெட்டிகளுக்காக மூவாயிரம் அப்பாவிகளைக் கொன்ற நாடு இது. இனி என்னாலும் எதற்கு சேதாரம்?

புறப்பாடு - ஆதவன் தீட்சண்யா

நிலா வந்துவிட்டது.

எல்லையற்ற பெருவெளியை வெறிகொண்டு தழுவுகையில் தூரிகையில் பிடிபடாத வர்ணவினோதமாய் உருகி வழிகிறது கனவுக்குழம்பு .

கவிஞனும் ஓவியனும் கவனப்படுத்திவிட முடியாத நெருக்கத்தில், கோர்த்த விரலிடுக்கில் வியர்வை கசிய விழிமூடி ரசித்து லயிப்பின் முகடுகளில் இருவரும்.

உறைந்திருந்த மௌனம் மட்டுமே உடையாய் படிந்திருக்க, காலம் மூட்டிய பருவக்கொடுந்தணல் தகித்து ஜ்வாலையடங்கி காற்றின் லிங்கனத்தில் தானே எரிந்துவிட தவித்து கிடந்தது கனன்று.

அனுமானங்களை உதிர்த்துவிட்டு மனசை பிழிந்து மனசை நிறைத்துவிட்டுப் போகிற வெற்றியை நிகழ்த்தும் வார்த்தைகளுக்கான தவம், வரம் பெறாமலேயே கலைந்தது.

''சொல். வேர் மண்ணிலிருந்து வெளியேறுவது வேதனைதானே...?"

"வேருக்கும் மண்ணுக்கும் சாசுவத பிணைப்பொன்றுமில்லை. எல்லாமே தற்காலிகம்...ஒப்பந்தம் முறிகிற கால அளவிற்கான காத்திருத்தலை நிரந்தரமெனக் கொள்ளாதே. நிரந்தரம் தேக்கத்தின் குறி. சுருங்கி சுருங்கி பூஜ்யத்தில் வீழ்கிற துவக்கம். தற்காலிகம்...எல்லாமே தற்காலிகம்... விதையை உதறிவிட்டு செடி வருகிறதே..."

"நேரடியாக கேட்கிறேன். நாம் பிரிவதில் வருத்தமில்லையா உனக்கு..."

"இயந்திர வார்ப்புகளில் எல்லாமே வந்துவிட்டாலும், இதயம் இன்னும் உணர்வு சாகரத்தை உறிஞ்சி குடித்துவிட்டு தள்ளாடித்தான் திரிகிறது. வருத்தமில்லை என்று சொல்வது என்னை வேறாக பிம்பப்படுத்துகிற வார்த்தை. அதற்காக, நீயில்லாமல் எப்படி வாழ்வேன் என்று போலியாகவும் சம்பிரதாயமாகவும் பேசும் நாடக பாணியில் எனக்கு சம்மதமில்லை..."

மேகம் தன்னையே எல்லாதிசையிலும் அனுப்பியது உடைத்து உடைத்து. நிலவோ போக்குகாட்டி தப்பி குளிர்க்கரங்களை நீட்டியபடி எதிர்திசையில் சுழன்றது. இந்த நித்தியச் சண்டையில் இன்றாவது வெற்றி தோல்விக்கு சாட்சியமாகி விடுவதென்று ஓசையின்றி காத்திருந்தன நட்சத்திரங்கள்.

"ஆறுதலாக பேசத்தெரியாதா உனக்கு..."

"பொய்மரங்களில் ஊஞ்சல்கட்டி ஆடுவதில் உனக்கு விருப்பமிருக்கிறதா... காவியச்சாயல் படிந்த வார்த்தைகளை கண்ணீரில் தோய்த்து பிழிய பிழிய பேசுவதில் உனக்கு சந்தோசமா...மனசைக் காட்டினால் நீ ஏன் வாயைப் பார்க்கிறாய்... ஒப்புக்கு பேசினாலும் உனது உயிரை நீட்டிக்கும் வார்த்தைகள் என்னிடத்தில் உண்டு. இருக்கிற எல்லாவற்றையும் எடுத்துக்காட்ட நானொன்றும் விற்பனைக்கூடத்து வேலையாளில்லை..."

"இனிவரும் நாட்களின் தனிமை குறித்தாவது அச்சம் கொள்கிறாயா..."

"தேவையானதையெல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டபின் நாமே நமக்கு மாட்டிக் கொள்கிற கூண்டுதானே தனிமை... அதில் கிட்டாததும் எட்டாததும் எதுவுமில்லை. அதற்கேன் அச்சம்...அதன்றி, ஆற்றல் பொருந்திய பன்முகமாய் விரியும் வீரத்தின் மையப்புள்ளியே அச்சம்தான் என்று நம்புகிறேன்..."

"புரிகிற மாதிரி பேசேன்..."

"பிடிக்காத விசயத்தை எந்த மொழியில் யார் பேசினாலும் புரிவதில்லை உனக்கும் எனக்கும் யாருக்கும்..."

"நீ அதிகமாக பேசுகிறாய்..."

"ஊமைகளின் முணகல்களுக்கும் உள்ளர்த்தம் உண்டு..."

உறக்கத்தை விரட்டிவிட்டு, கண்ணாமூச்சியாயிருக்குமோ என்ற ஐயத்தில் வெறித்தன நட்சத்திரங்கள். பதில் கிடைக்காத இழுபறி.

"ஆண்துணை இல்லாமலேயே இனி வாழ்ந்துவிடப் போகிறாயா..."

"சத்தியம் சொல்லும் தருணமில்லை இது. பிறப்பின் நிர்மலத்தை ஆடை கொண்டு போர்த்தி அழகுபடுத்திக் கொள்ள பாடம் படிப்பதில்லை யாரும். தேவையே அதற்கானதை தேடிக்கொள்ளும். துணை என்கிற ஆதிசூத்திரத்திற்குள் அடங்காத வாழ்வும் உறவும் எங்குதானில்லை... நீயாக உன்னை பாதுகாவலனாக வரித்துக் கொள்ளாதே. வேலியை ஆடுகள் மட்டுமல்ல, விவரிக்க முடியாததும் நியாயமானதுமான பல காரணங்களுக்காக பயிர்களும் விரும்புவதில்லை..."

"என் மீது மெய்யான காதலில்லையா..."

"உன்னிடமிருக்கிறதா மெய்யுக்கும் பொய்யுக்குமான துலாக்கோல்..."

"அப்படியில்லை. என்னோடு வாழ உனக்கு விருப்பமில்லையா..."

"விருப்பம் சார்ந்ததில்லை வாழ்க்கை. அதன் போக்கில் வந்து படிவதை ஏற்கவும் நிராகரிக்கவும் மனம் கொள்கிற பக்குவத்தில் புதைந்திருக்கிறது விருப்பும் வெறுப்பும். சிற்பி நினைப்பது மட்டுமே சிற்பமாகிவிடுகிறதா என்ன...உளியின் ஜீவரசம் தன்னில் உயிர்பெற்றெழ பாறையும் ஒத்துழைக்க வேண்டுமே...நான் உளிகளையும் பாறைகளையும் படித்துக்கொண்டே, என்னை அவைகளினிடத்து படிப்பித்துக் கொண்டுமிருக்கிறேன்..."

மாயக்கால்களால் சுழன்றோடும் நிலவை கவ்வி விழுங்க மேகசர்ப்பம் வாய்பிளந்து துரத்துகிறது உடலெங்கும் தலைகளோடு. சாகச விளையாட்டின் முடிவை நோக்கி காத்திருந்தன இமையில்லாத நட்சத்திரங்கள்.

இருவரது அம்பறாத்தூணியிலிருந்தும் கிளம்புகிறது சமபலத்திலான அஸ்திரங்கள். மோதிக்கொள்ளும் கணச்சிதைவில், நோக்கை புறந்தள்ளி மூர்ச்சையற்று வீழ்ந்தபடியும் முத்தமிட்டுக் கொண்டபடியுமாக எய்தவர்களையே இளக்காரத்தில் வீழ்த்தின.

"அவ்வளவு தூரம் நீ போயாக வேண்டுமா..."

"தூரங்களை நெருங்கித்தொடாத பயணம் வாயை தைத்துக்கொண்டு பாடக்கிளம்புவது. அது உயிரின் கிளர்ச்சியை அனுமதிப்பதில்லை. மயானத்துக்கு செல்லும் சவ ஊர்வலத்தில் குயில்களுக்கும் ஸ்வரங்களுக்கும் வேலையில்லை..."

"நீ சம்பாதித்து ஆகவேண்டியது என்ன..."

"அது பணத்தின் குறியீடல்ல. விழிப்படலம் சிவக்க சிவக்க கற்றதற்கான அங்கிகாரம். பாடசாலைகளுக்கு வெளியே பரந்து திளைத்திருக்கும் அனுபவக் கல்வியை அடைய கிடைத்த வாகனம். எனக்கு சுயமாய் கால்களிருப்பதை சொல்கின்ற சூட்சும வடிவம். என்னை கௌரவப்படுத்தும் எதையும் கீழ்மையில் ஆழ்த்தமாட்டேன்..."

"உள்ளூர் நஷ்டமும் சரி வெளியூர் லாபமும் சரி என்பதை அறியாதவளா நீ..."

"நாற்றங்காலில் தங்குகிற பயிர் நல்லபடியாய் விளைவதாக உயிர் விஞ்ஞானம் ஒப்புவதில்லை. லாபமும் நஷ்டமும், பணத்தாள்களாகவும் பரிவர்த்தனைப் பிண்டங்களாகவும் உள்ள உங்கள் மதிப்பீடுகளில் நான் வேறுபடுகிறேன்..."

நிராயுதத்தின் விளிம்பு வந்தாகிவிட்டது. எஞ்சியவற்றை இனி கவனமாய் எய்வதில்தான் வெற்றி. வியூகத்தை மாற்றி உக்கிரமாய் தொடர்கிறது சண்டை.

"ஆணின் சம்பாத்தியத்திற்குள் அடங்கி வாழ்வதுதான் இலக்கணம் என்பதையும் நீ மறுக்கிறாயா..."

"நமது சந்திப்பை நீ ஒரு வழக்கைப்போலவும் பேட்டியாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறாய். ஆண்மை ஆணுக்கும், பெண்மை பெண்ணுக்கும் உள்ள குணங்களா...அது மனிதர்களுக்கு பொதுவானது. எல்லோரிடத்திலும் எல்லா குணங்களும் புயலும் தென்றலுமாய் நுழைந்து பரவி நுட்பமாக வாழ்கிறது. அதை இலக்கணமென்ற முரட்டு வார்ப்புக்குள் திணிக்காதே..."

"திசை திருப்பாதே. ஆணின் சம்பாத்தியத்தில் அடங்கி வாழ முடியுமா முடியாதா..."

"பொதி சுமக்கிற கழுதையைப் போலவும், ஏர் உழுகிற மாட்டைப்போலவும் சம்பாதிக்கிற மிருகமாக உன்னை பாவித்துக்கொள்ள உரிமையிருக்கிறது. அருவியை குழாயில் அடைத்துவைத்துக் கொண்டு, தேவைபடுகிறபோது திருகிவிட்டு குடிக்கவும் குளிக்கவும் நினைப்பது ஆதிக்கமா அராஜகமா என்ற தடித்த விவாதத்திற்கு இது இடமில்லை. நாம் காதலர்களாகவே பிரிவோம்..."

"இனியும் எங்கே இருக்கிறது காதல்..."

"தேடிப்பாரேன் எங்காவது தென்பட்டதா என்று- நாம் பிரிந்துவிட்ட பிறகாவது..."

"கடைசியாக கேட்கிறேன். திருமணம், தாம்பத்யம், புனிதம், பௌத்ரம் மீதெல்லாம் உனக்கு நம்பிக்கையுண்டா..."

"ஏனில்லை...எனக்கான கோணத்தில் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும். மூதாதையர்களின் மாண்புகளுக்குரிய மரியாதைகளோடு, மரபுகளை மதித்துக் கொண்டேதான் மறுதலித்து வருகிறேன்..."

"நீ கனவுகளை கட்டிக்கொண்டு காகிதத்தில் வாழ்பவளோ..."

"நன்றி. கனவுகளை தொலைத்தவர்கள் ஜடத்திலே ஜனித்தவர்கள் என்கிற குற்றப்பட்டியலில் என்னை சேர்க்காமல் விட்டதற்காக..."

துரத்தலும் வெளித்தாவி தப்புவதுமாக சண்டை நீள்கையில் நேற்று மிச்சம் வைத்திருந்த கிரணங்களோடு வானில் பாய்ந்தது சூரியன்.

ஏனிப்படி தகிக்கிறது குளிர்நிலவென்று விழித்தன வேடிக்கை சலித்து பின்னிரவில் உறக்கத்தில் தோய்ந்த நட்சத்திரங்கள்.

ஓடு மீன் ஓட.... - ஆதவன் தீட்சண்யா

அடர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து கிடக்கின்றன உருவழிந்து. விரைத்து மொன்னையாய் நிற்கும் கம்பங்களின் உச்சியிலிருந்து கிளம்பும் விளக்கொளி பனியில் நமுத்து பாதியிலேயே விழுகிறது நிழல்போல கறுத்து. ஆங்காரமாய் வீசும் காற்றில் குளிரின் கடுமை கூடி விஷமெனக் கடுக்கிறது.

கதகதக்கும் குளிராடைகளுக்குள் தூந்திரபிரதேசவாசிகளைப் போல் பதுங்கி, நிறைந்து மலிகிறது கூட்டம். சொந்த ஊருன்னு சுத்தி சுத்தி வந்தா ஒரு கவளச் சோறு வந்துடுமா என்று வித்தாரம் பேசி இங்கே வந்தேறியவர்கள் ஊர் பார்க்க ஓடுகிறார்கள். அப்பன், ஆத்தாள், உடன் பிறந்தாரை வசக்கி வயக்காட்டில் பூட்டிவிட்டு, படிப்பை துருப்புச்சீட்டாக்கி பட்டணம் புகுந்தவர்கள். இவர்கள் ஓடியோடி பார்த்துவருவது ஊர்தானென்றால் ஊர் என்பது என்னவென்ற கேள்வி எழுகிறது.

இங்கே வந்து இத்தனைக் காலமான பின்னும் சொந்த ஊர் மண் கொஞ்சூண்டு உள்ளங்காலில் ஒட்டியிருக்கும் போல. இல்லையானால், குளிக்கப்போன இடத்தில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்த நகை பற்றி பாதிவழியில் ஞாபகம் வந்தவர்களைப்போல இப்பிடி ஓடமாட்டார்களே. தாளிடையில் வைத்த மயிலிழை, குட்டி போட்டிருக்குமாவென்று தினமும் தூக்கத்திலேயே துழாவும் வசுக்குட்டியின் ஞாபகம் வருகிறது. தூங்குடா செல்லம்...அப்பன் தோ... இப்ப வந்துடறேன்...என்று காற்றிலேயே தட்டிக் கொடுக்கிறான் முருகேசன். கசிந்த ஈரம் மீசையில் படிகிறது திவலையாய்.

மின்னாம்பூச்சியாட்டம் சன்ன ஒளிகிளர்த்தி வந்தடையும் பஸ்கள் கூட்டத்தால் திணறி புகை கக்கி நகர்கின்றன. இதுமாதிரியான விசேஷ நாட்களின் முந்தியும் பிந்தியும் கூடுதல் ஏற்பாடுகள் தேவை. ஒவ்வொரு வண்டி கிளம்பும் போதும் ஆரவாரமும் கூச்சலும் வசவும் அலைபோல எழுந்து வலையாகி சுருட்டியது ஜனத்தை.

நைட்ஷிப்ட் முடித்தவர்களும் ஊருக்கு கிளம்பி வந்து குவிகிறார்கள். வேலையின் அலுப்பு ஊர்பற்றிய நினைவுகளில் அமிழ்ந்து விட்டிருந்தது. பஞ்சம் பிழைக்க பரதேசம் போவதாட்டம் குழந்தைகள், கிழடுகிண்டுகள் மூட்டை முடிச்சுகளோடு பின்னும் பெருத்தக் கூட்டத்தால் இருமலும் பொருமலுமாய் நிறைந்திருந்தது பஸ் நிலையம்.

குழந்தைகளின் பாடு பாவமாயிருந்தது. உறவாளிகளின் சகவாசம் முறிக்கும் முயற்சியாக பொம்மைகளை ரகசியமாய் அணைத்தப்படி தூங்கி விழுகின்றன. சனியனே, முழிச்சிக்கோ...பஸ்சுல தூங்கவே...என்று உலுக்கி சிடுசிடுக்கின்றனர் பெற்றவர்கள். கலைந்த கனவில், அநாதையாய் விடப்பட்ட தேவதைகளையும் பதினேழு கால் கொண்ட சாதுப்பூச்சியையும் நினைத்து கலங்குகின்றன சிலதுகள். நடுநிசியின் வினோதரூபத்தில் பரவசமுற்று கேள்வியெழுப்பும் குழந்தைகளுக்கு பொறுமையற்று பதில் கூறினர். கேள்விகள் சிக்கலாகி வலுக்கும்போதுகளில், சும்மா தொணதொணக்காதே என்று சலித்துக்கொண்டனர். கேள்விகளும் கனவுகளும் தம் பிள்ளைகளை நடைமுறை உலகிற்கு பொறுத்தமில்லாதவர்களாக ஆக்கிவிடுமோ என்ற பயம் பெருகி குரல் நடுங்கியது. சிணுங்கும் குழந்தைகளை மெல்லிய குரலில் மிரட்டவும், நாலு சாத்து சாத்தினாத்தான் சரிப்படுவே என்று கையோங்கவும் அவர்கள் தயங்கவேயில்லை.

குளிர்தாளாது வெடவெடக்கும் வயோதிகர்களை வாய்விட்டு கடியவும் அவர்கள் அதிகாரம் கொண்டோராயிருந்தனர். சற்றும் தேவைப்படாத சுமையோடு ஓடித் தொலைக்க வேண்டியுள்ளதே என்று பீறிய வெறுப்பிலும் தகிப்பிலும், வூட்லயே மொடங்கிக் கெடக்காம வயசான காலத்துல நமக்கு பாரமா...என்று காதுபடவே முனகினர்.

இப்படி பண்டிகை, விசேஷம்னு ஊர் போறப்பவாவது சொந்த பந்தங்களை பாத்துட்டு பொறந்து வளந்த மண்ணுலயே பொட்டுனு போயிடமாட்டமா... என்று பெரியவர்கள் ஒவ்வொரு முறையும் முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பிள்ளைகளை நம்பி வேர்களை அறுத்துக் கொண்டு முண்டம்போல வந்துவிட்டமைக்காக அவர்களது உட்கண்கள் ஓயாது அழுதவண்ணமுள்ளன. கிராமத்திலிருந்து வந்தவர்களின் பாடுதான் திண்டாட்டமாதிவிட்டது.

பரந்தவெளியில் புழங்கிய வாழ்க்கையை, ரத்தம் சுண்டிய முதுங்காலத்தில் நாலு சுவற்றுக்குள் ஒடுக்கும் நகரத்தை நரகமென்றுணர்ந்து மருண்டனர். டவுன்னா அப்படித்தான் என்று எத்தனை சமாதானம் சொல்லிக்கொண்டாலும், சாப்பாட்டிலிருந்து ஜலவாதி வரை சகலமும் வீட்டுக்குள்ளேயே என்பது ஒவ்வாமல், சாப்பிடும் போதெல்லாம் குமட்டுகிறது. மூப்பினால் அஜீரணம் என்கின்றனர் வாலிபங்களும் வைத்தியர்களும்.

உயிரினொரு பாகம் ஊரிலேயே தங்கிவிட்டதான தவிப்பு பிடித்தாட்டியது பெரியவர்களை. ஊரம்பலத்திலும் கோயிலடியிலும் கூடி கலகலக்கும் கொண்டாட்டமெல்லாம் கனவுபோல் மெல்லியப் படலமாகி, கண்மேல் படர்ந்து கரைகிறது நீராக.

ஊரென்றால் பொழுதுபோக எத்தனையோ மார்க்கமுண்டு. வயலடிக்கு மடைதிருப்புவது, விழுந்த நெற்றுகளை பொறுக்குவது, கிணத்தோர வாய்க்காலில் திமிர்த்து வளரும் காஞ்சிரம் பூண்டுகளை பிடுங்குவது, கட்டாந்தரையை சுத்தம் பண்ணுவது என்று வேலைகள் பலதுமிருக்கு. எதுவுமில்லாத போது கோயிலடிக்குப் போனால் அங்கே நாள் பத்தாது. பயலுகள் ஆடுபுலி ஆட்டம், தாயம், அஞ்சாங்கரம், கோலி என்று ஆடாத ஆட்டமில்லை. வெயிலமரும் நேரங்களில் சின்னது பெரிசென்று கணக்கில்லாமல் கரம்பக்காடுகளை திமிலோகமாக்கிவிடுவார்கள். சில்லோடு வைத்து நொண்டியாடுவது, பாண்டியாட்டம், பல்லாங்குழி என்று பொண்டுகளுக்கும் ஆட்டத்துக்கு பஞ்சமில்லை. இங்கே நகரத்தில் என்ன இருக்கிறது... வெறிக்க வெறிக்க கட்டிடங்களைப் பார்த்து சோர்ந்துவிடும் கண்கள் தூக்கத்தில் விழு கின்றன.

குருவிகள் பழத்தை தின்றுவிட்டு விதைகளை வீசிவிட்டுப் போகின்றன. சடக்கென முளைவிட்டு கணப்போதில் செடி திமுதிமுவென்று வளர்ந்து தோள்மீறுகிறது. தழைத்த செடி பூமி முழுக்க கிளைபரப்பி பெரீய்ய மரமாகிப் படர்கிறது. ஊர்க்குழந்தைகள் அத்தனையும் ஆளுக்கொரு கிளையேறி தூரியாடுகிறார்கள். குரங்காட்டம், ஒளியாமட்டம், தொடுவாட்டம் என்று விளையாட்டாய் கழிகிறது வாழ்க்கை. சூரிய வெளிச்சம் பரவாதபடிக்கு பச்சைக்குடையாய் நிழல் பாவிய மரத்தடியில் கண்ணயர்ந்து கிடக்கிறார்கள் பெரியவர்கள். கெட்டவாடை போல் எங்கிருந்தோ வரும் சதியாளர்கள் அடிமரத்தில் குறிவைத்து கோடாலி வீசுகிறார்கள். பதறியெழும் பெரியவர்கள் மரம் மேலே விழுமென முதலில் ஓட நினைத்தாலும், மரமில்லாத ஊர் எப்படியிருக்குமென்ற பயத்தில் கோடாலியால் இவர்களையும் மரத்தையும் ஒருசேர வெட்டிச் சாய்க்கிறார்கள்.

இப்படியான கனாக்களிலிருந்து அரண்டெழுந்த பின்பு தூக்கம் வருவதில்லை. ஊரின் பசுமையில் கிளர்ந்தலறும் மனசு இங்கே வீட்டுக்குள் வளரும் தொட்டிச்செடிகளை தழுவி அடங்குகிறது. பெற்றத்தாயை கொன்றுவிட்ட குற்றவுணர்வில் யாரோ ஒரு சவலைக்கு கஞ்சியூத்துவதை தர்மம் என்று நினைத்து திருப்திகொள்ளும் நகரமிது. காடுகளை அழித்து வீடு கட்டியவர்கள், பின்பு தவறுக்கு பரிகாரம்போல வீட்டுக்குள் ஏதேனும் ஒரு சாண் செடி வளர்த்து சமாதானம் கொள்கின்றனர். செடியும் கொடியும் வேர் பரப்பவியலாத இந்த கான்கிரீட் தளங்களில் எப்படி பச்சை வரும்... மண்ணிருந்தால் தானே உயிர் வளரும்...

இங்கே யாரும் யாரோடும் கூடுவதில்லை. யாரும் யாரையும் நெருங்கிவிடாதபடி மாயக்கூண்டுகளை மாட்டிக் கொண்டுள்ளனர். எதிர்வீட்டான் முகத்தை சரியாக அடையாளம் காண தெரிந்து வைத்திருப்பவன் உலக விசயமறிந்தவனுக்கு ஒப்பானவன். எப்போதும் சிறைபோல் மூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால், இக்கணத்தில் உயிரோடிருப்பதன்றி இவர்களுக்குள் ஒப்புமையான அம்சம் யாதென்றுமில்லை. வீட்டினுள்ளும், குடும்பமாய் வாழாமல் ஒரு கூரையின் கீழ் குடியிருப்பவர்களாக மாறிவருகின்றனர் என்ற உண்மையின் அச்சத்தை யாரோடும் பகிரமுடியாமல் தொண்டை வலிக்க வலிக்க விழுங்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவறி இங்கே உயிர்போனால் தூக்கிப்போக நாலுபேருக்கு எங்கே போவான் பிள்ளை என்கிற பயத்திலேயே சாவு தள்ளிப் போகிறது பெரியவர்களுக்கு.

திறந்தவெளியின் அலாதியை ரசிக்கவோ, மொட்டை மாடியேறி நட்சத்திரம் பறிக்கவோ பேரக்குழந்தைகள் கூப்பிடுவதேயில்லை. மழைப்பொழுதுகளில் கூட அவர்கள் வெளியே வருவதில்லை. கப்பலோடாத தெருவெள்ளம் வீணே சாக்கடையில் வீழ்ந்து அழிகிறது.

பள்ளிக்கூடம், வீடு, விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர், கராத்தே பயிற்சி வகுப்புகள், டியூசன் என மாற்றி மாற்றி ஏதேனுமொரு கதவின் பின்னே அடைபட்டுக் கிடக்குமாறு தமது பேரக் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்களாயிருப்பது கண்டு பெருகும் துயரத்தை ஆற்றுப்படுத்தும் வழியறியாது அரற்றினர். எஞ்சியப் பொழுதுகளில், கொடிய சர்ப்பத்தின் விஷம்சொட்டும் நா போல நீண்டு உள்ளிறங்கும் கறுத்த ஒயரில் வழியும் வண்ணமயமான மகுடியோசைக்கு மயங்கிக் கிடக்கிறார்கள். பால்யத்திலிருந்து கோர்த்து வைத்த அனந்தக்கோடி கதைகளை பேரர்களுக்கு சொல்ல முடியாமல் தாம்பலத்தோடு கடைவாயில் அடக்கியபடி, தாத்தா பாட்டிகளும் கண்ணவிந்து கிடக்கிறார்கள் அந்த டி.வி பெட்டி முன்பு.

இன்னும் சில வயசாளிகளுக்கு வேறுமாதிரியான உளைச்சலிருந்தது. நகரத்தின் புறத்தே ஒடுங்கிய நண்டு வலைகளில் வாடகைக்கிருந்த நிலைமாறி இன்று சொந்தவீடும், வீட்டின் எவ்விடத்தும் நிரம்பிக் கிடக்கும் நவீனச் சாதனங்களும் பொருட்களும் தம்பிள்ளைக்கு எப்படி சொந்தமாயின என்ற சந்தேகம் பிராண்டுகிறது சதாவும். வருமானம் மீறிய வசதிக்கும் ஆடம்பரத்திற்கும் பின்னே சூதும் களவும் விபச்சாரமும் உண்டாவென விசாரித்தறியும் துணிச்சல் வயதோடு சேர்ந்து உலர்ந்துவிட்டிருந்தது. நட்சத்திர விடுதிகளின் மங்கிய வெளிச்சத்தில், பிரகாசமான தமது மேனியை யாருக்கோ திறந்து காட்டிவிட்டு, மனசை மூடிக்கொண்டு இருளைப்போல் வந்துவிழுகிற இளம் பெண்களின் சோகம் எங்கும் கவ்விக் கிடக்கிறது. ஆண்பிள்ளைகளில் சிலர் 'உழைப்பால் உயர்ந்த உத்தமர்' என்ற அடைமொழி சூழ, நாகரீக கிளப்புகளில் உரையாற்றி, மனைவியை எதிர்கொள்ளும் யோக்யதையிழந்து நடுநிசியில் வீடடைகிறார்கள் வேசியைப் போல. மறுபடியும் குமட்டுகிறது பெரியவர்களுக்கு. இங்கிதம் தெரியாமல் இப்படியா வாந்தியெடுத்து அசிங்கம் பண்ணுவது என்று திட்டுவார்களே என்ற பயத்தில் அதையும் விழுங்கிக் கொள்கிறார்கள்.

பஸ்சில் இடம் பிடிப்பதானது, தமது ஆண்மைக்கு விடப்பட்ட மாபெரும் சவாலென அங்குமிங்கும் புஜம்தட்டி அலைந்தனர் ஆண்கள். நானில்லாது உன்னால் ஊர் போய்ச்சேர முடியாதென மனைவிக்கு இப்போது உணர்த்துவதன் மூலம் வேறுபல வகைகளிலும் தனது அவசியத்தை அவள்மீது நிலைநிறுத்த முடியுமென ஒவ்வொருவரும் அந்தரங்கமாய் நம்பினர். இதன் பொருட்டு அவர்கள் நானாவித சாகசங்களுக்கும் பயிற்சி எடுத்தோர் போல் தயாராகிக் கொண்டிருந்தனர். வேட்டுச் சத்தத்திற்காக காதுவிடைக்க காத்திருக்கும் பந்தய மிருகம் போல் உடலெங்கும் கண் கொண்டு துடித்துக் கிடந்தனர் பஸ்சுக்காக.

இடம் பிடிக்கமுடியாத அவமானத்தில் குலைந்தவர்கள், ''இந்த இம்சையில மாட்ட வேணாம்னுதான் ரெண்டு நாள் முன்னாடியே புள்ளைங்களோட கிளம்புடின்னேன். கேட்டாத் தான...'' என்று தத்தம் மனைவியைப் பார்த்து பல்லைக் கடித்தனர். பெண்கள் அதற்கொன்றும் செவிமடுப்பதாயில்லை.

அவர்கள் போனவாட்டி ஊருக்குப் போய்வந்ததிலிருந்து இன்றுவரை தவணையிலும் தள்ளுபடியிலும் வாங்கிய துணிமணிகள், நகைகள், பண்ட பாத்திரங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள் மனசிலும் உடம்பிலும். ஊரில் கொண்டு போய் காட்டி, 'ஆஹா ஓஹோ' என நாலுவார்த்தை சொல்லக் கேட்டால்தான் அந்த பாரம் குறையும். பார்த்த சினிமாக்கள்-சீரியல்கள், புதிதாய் கற்ற கோலம், சமையல் குறிப்பு, ஒயர் பின்னல் டிசைன், புருசன் பண்ணிய சேட்டை, பிள்ளைகள் கற்ற ரைம்ஸ், சிறுவாட்டில் வாங்கிய மூக்குத்தி, கட்டுகிற சீட்டுகள், ஓடிப்போன சீட்டுக் கம்பனியானிடம் ஏமாறாமல் தப்பிய சாமர்த்தியம் என்று ஆதியோடந்தமாய் சொல்லப்படவேண்டிய செய்திகளை அவர்கள் மௌனமாய் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தளவுக்கு கோர்வையாய் திட்டமிட்டுச் சென்றதாலும், சில விசயங்கள் ஊரிலிருந்து திரும்பிய பிறகு தான் ஞாபகம் வருகிறது. மறவாமல் இருக்க முந்தானையிலும் கொசுவத்திலும் சிலபல முடிச்சு போட்டு வைத்தாலும், எந்த சேதிக்கு எந்த முடிச்சு என்ற குழப்பம் சூழ்ந்ததில் பனியை மீறி வியர்த்தது.

பனியின் மூர்க்கத்தில் நேரம் இறுகி மெதுவாய் கரைகிறது. போலிசுக்கு பயந்தமாதிரி பாவ்லா செய்தபடி லைட்டுகளை அணைத்துவிட்டு, காடாவிளக்கின் புகையூடே டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுவென்று நடக்கிறது. அவ்வப்போது டீயும் சிகரெட்டும் பாராக்காரருக்கு போய்க்கொண்டிருக்கிறது கப்பம் போல. பால் கால்பங்கு பச்சைத்தண்ணி முக்கால் பங்கென ஓடும் டீ குடிக்க ஈயென மொய்க்கிறது கூட்டம். குளிரை விரட்ட நெருப்பை விழுங்கவும் சிலர் சித்தமாயிருந்தனர். எத்தனை டீ தான் குடிப்பதென்று சலிப்பாயிருந்தது முருகேசனுக்கு. அனைத்து வைத்திருந்த துண்டு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். நாறியது.

வண்டி கிடைக்காத ஏமாற்றம், தூக்கமின்மை, அலைச்சல் எல்லாம் கூடி எல்லோரின் முகத்திலும் கடுமையேறிக் கொண்டிருந்தது. ஒருவர் முகத்திலும் சினேகபாவமில்லை. இறுக்கமானதொரு மனநிலை எங்கும் பரவியிருந்தது. சிரிப்பது கூட தனது பிடிநிலையை தளர்த்தி இளக்கிவிடுமோவென அஞ்சினர்.

இதே முகங்களைத்தான் ரேசன்கடையிலும், நேர்முகத்தேர்வுகளிலும் தெருக்குழாயடியிலும் திரையரங்கத்தின் நீண்டவரிசையிலும் பார்த்திருக்கிறான் முருகேசன். எங்கும் எங்கும் இந்த முகங்களே. எல்லோருக்குமான இடங்கள் ஏனில்லை என்று நெற்றி சுருக்கி யோசிக்காத முகங்கள். இருக்கும் சொற்பத்தில் தனக்கொரு இடத்தை உறுதியாக்குவது மட்டுமே இலக்காகி விட்டது அவர்களுக்கு. போட்டியின் தருணங்களில், ஏதோவொரு மாயாவினோதத்தால் எல்லோரும் செத்துப்போய் தான்மட்டுமே மிஞ்சியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமென ஆசை கொண்டலைகிறார்கள். அது நிராசையென அறிய நேர்கிற உண்மையின் கணத்தில், சட்டதிட்டங்களை புறந்தள்ளி குறுக்குவழிகளில் ஓடிப்போய் இலக்கடைகின்றனர். குறுக்கு வழியில் செல்லும் சூட்சும நுட்பங்களறியாதவரும் இயலாதவரும், விரும்பாதவரும் கூடி நேர்வழியே நித்தியப்பாதை என்று தத்துவம் பிதற்றி வரிசையில் நின்று வயோதிகமடையாமலே மாண்டு போகின்றனர் மனசளவில்.

கூட்டத்தினூடே கைவரிசை காட்டிய ஜேப்படித்திருடன் ஒருவனைப் பிடித்து வெளுத்து வாங்கினார்கள். யார் யார் மீதிருந்த கோபமோ அவன் மீது இறங்கியது. பெருத்த தொந்தியின் மூலமாக குற்றங்களை குறைத்துவிட முடியுமென்று நம்பிக்கை கொண்ட போலீஸ் ஒருவர், சினிமாவில் கடைசி சீன் வசனமேதும் பேசாமல் அவனை இழுத்துப் போனார்.

இம்மாதிரியான விசேஷ நாட்களில் திருடர்களுக்கு கொண்டாட்டம். கச்சிதமாய் கன்னமிடுவதும் கத்திரிபோடுவதுமாய் கனஜோராய் தொழில் நடக்கும். சாதாரணமாகவே, சனிக்கிழமை ஷிப்டு முடித்து ஊருக்குப் போய் திங்கள் காலை திரும்புவதற்குள் அனேக வீடுகளின் பூட்டு பிளந்து தொங்கும். தீபாவளி, பொங்கல், கோடைவிடுமுறைக் காலங்களில் கேட்கவே வேண்டாம். முக்கால் வாசிப்பேர் ஊருக்கு கிளம்பிவிட, வீடுகள் அனாதையாகிவிடும். இது போதாதா திருடர்களுக்கு? ஊருக்குள் நடமாட்டம் முற்றாக ஒழிந்துவிடும். உறக்கக் காலத்தை துல்லியமாய் அளந்து காரியத்தில் இறங்குகின்றனர்.

வெளியூர் போவோர் வீட்டைப் பூட்டி சாவியை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு போகுமாறு சினிமா தியேட்டரில் சிலைடு போட்டு உபாயம் சொன்னது காவல்துறை. மக்கள் கமுக்கமாய் சிரித்துக் கொள்வார்கள். திருட்டுகள் மிக நுட்பமாகவும் நூதனமாகவும் நடக்கின்றன.

முன்பெல்லாம் நிறைய ஒண்டிக்கட்டைகள். இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிதாக தொழிலாளர் யாரும் வருவதில்லை. இருப்பவர்கள் தான் காலி பண்ணி போய்க்கொண்டிருக்கிறார்கள். நகரம், வெளியேறுவதற்கான ஒருவழிப்பாதையை மட்டும் திறந்துவைத்துவிட்டு மற்றெல்லாவற்றையும் மூடிக்கொண்டது. வெளியூர் கிளம்புவதென்றால் வீட்டில் படுக்க வைக்க ஆள் கிடைப்பது பெரும்பாடாகிவிட்டது. எதற்கிந்த வம்பென்று எங்கும் கிளம்பாதவர்களுக்கு அவரவர் வீட்டை பத்திரமாய் பார்த்துக் கொள்வதே ஏழு பூதங்களின் வேலையாக கனக்கிறது.

தொழிற்பேட்டையாக்கும் பொருட்டு இங்கிருந்த பூர்வமக்களின் நிலம் சாரமற்ற விலைக்கு பிடுங்கியெடுக்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களின் நிலம் பண்ணை வீடுகளாகவும், வீட்டுமனைகளாகவும் இழிந்து அழிந்தது. வாழ்வின் ஆதாரமாயிருந்த நிலம் கைவிட்டுப் போன பிறகு அவர்களின் வம்சாவழிகளில் சிலர்தான் வேறுவழியின்றி திருடுகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறது. நிறைய கம்பெனிகள் மூடப்பட்டு விட்ட நிலையில், ஊர் திரும்பமுடியாத அயலூர்க்காரர்களே வேறு வழியின்றி இத்தகைய துர்க்காரியங்களை நிகழ்த்துவதாகவும் குற்றச்சாட்டுண்டு. நகரத்தில் தொடர்ந்து பெருகிவரும் வழிப்பறி, வன்முறை, விபச்சாரம், போதைப்பொருட்கள், மோசடிகளுக்கும் கூட இப்படியான காரணங்கள் கூறப்படுகிறது. உள்ளூர்க்காரரோ அசலூராரோ, கஷ்டப்பட்டாவது கண்ணியமாய் வாழ முயலும் எத்தனையோ பேரை முருகேசன் அறிவான். இதுவரை தற்கொலை செய்துகொண்ட ஆறேழு குடும்பங்களை, இதன்பொருட்டு இன்னும் வாழ்வதாகவே அவன் கருதுகிறான்.

கடைசி வண்டியிலிருந்து கிளம்பிய கரும்புகையில் கூட்டம் காணாமல் போயிருந்தது. அந்தவண்டி ஊரையே சுருட்டிக்கொண்டு சூன்யத்தை நிறைத்துவிட்டுப் போனதுபோலிருந்தது. மிச்சம் சொச்சமாய் ஓரம்சாரம் ஒதுங்கியிருந்த கொஞ்சம்பேர் வேறு மார்க்கங்களில் செல்ல காத்திருப்பவர்கள்.

கூட்டம் ஒழிந்த பஸ் ஸ்டான்டைப் பார்க்க பார்க்க கூட்டத்தின் மீதிருந்த வெறுப்பு மெல்ல மெல்ல தணிந்து அனுதாபம் விரவியது முருகேசனுக்குள். இப்படி அடைத்துக் கொண்டு ஏறியவர்கள் எவ்வளவு தூரம் இடிபாட்டில் சிக்கியவர்களாய் பயணம் செய்ய முடியும்...? அந்தக் குழந்தைகள்... பெரியவர்கள்... சீக்காளிகள்... இரக்கமும் பெருந்தன்மையும் யார் மீதும் பொழிய யாரும் தயாரில்லாத நிலையில் எல்லோருமே வெறும் டிக்கெடுகளாக போய்க்கொண்டிருக்கின்றனர்.

தானும் ஊர் போய்ச் சேரவேண்டியவன் என்ற நினைவு வந்ததும் வெடுக்கென எழுந்து கொண்டான் பெஞ்சிலிருந்து. மணி இரண்டரை. இங்கிருந்து ஆறுமணி நேரப் பயணம்.

பார்வதி காத்திருப்பாள். சருகு விழும் சத்தத்தைக் கூட உன்னிப்பாக கவனித்து கேட்பாள் காலடியோசையா என்று. விடிய விடிய நடையாய் நடந்தாவது புருசன் வந்து சேர்ந்துவிடுவானென்று அவளுக்கு தெரியும். வசுக்குட்டிக்கும் ராமுவுக்கும் எடுப்பான நிறத்தில் துணி எடுக்கணும். நோம்பி நாளில் பிள்ளைகள் அக்கம்பக்கம் பார்த்து ஏமாறக்கூடாது. அந்த ஏக்கம் கடைசிவரை கண்ணோரம் தங்கிவிடும். பெற்றவர்களின் கஷ்டம் பிள்ளைகளை பீடித்துவிட்டால் அதுகள் குன்றிவிடும். பார்வதிக்கு வெள்ளையும் கத்திரிப்பூ நிறமும் கலந்த புடவை அழகாயிருக்கும். நைந்த பழசை உடுத்திக்கொண்டு பஞ்சையாய் நிற்பாளா நல்ல நாளில்...?

சட்டென்று ஞாபகம் வந்தவனாய் கக்கத்திலிருந்த பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான். எந்தப் பூட்டையும் எளிதில் திறக்கும் சாதூர்யமறிந்த அவனது தளவாடங்கள் ஓசையெழுப்பாது செல்லமாய் உள்ளிருந்தன.