27/03/2011

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் - அபிதா சபாபதி

மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. மண்ணின் மைந்தர் தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர்பெற்று, உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும், இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். நாட்டுப்புற மக்களது உணர்வுகளையும், கவிதை புனையும் ஆற்றலையும், கற்பனை வளத்தையும் நாட்டுப்புறப் பாடல்களிலே காணலாம்.

நுவல் பொருள்கள்:-

வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தாமணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராமத் தேவைகள் முதலியவை இவற்றின் உட்பொருள்களாகக் கொண்டு பாடப்படுகின்றன.

வகைகள்:-

குழந்தைப் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள், தொழிற் பாடல்கள், சடங்கு மற்றும் பக்திப் பாடல்கள், பொழுது போக்கு மற்றும் கேலி, கொண்டாட்டப் பாடல்கள், கதைப்பாடல்கள் என நாட்டுப்புறப் பாடல்கள் பல வகையன.

கதைப் பாடல்கள்:-

கதைப் பாடலாகப் பாடப்படுவதைக் கதைப்பாடல் என்பர். இவ்வகைப் பாடல் பொதுவாக மக்களது பேச்சு மொழியிலே அமைந்திருக்கும். இயற்கை சூழல், மக்களின் மனப்பாங்கு, சாதிகளின் நடத்தை போன்றவை கதைப்பாடல் தோன்ற முக்கியப் பங்கு வகித்தன எனலாம். ''கதைப் பாடலில் கதையே இன்றியமையாதது கதையைக் கூறாத நாட்டுப்புறப் பாடலைக் கதைப்பாடலாகக் கருத மாட்டேன். மக்களது நினைவில் நிலைத்திருக்க வேண்டும். வாய்மொழியாகப் பரவ வேண்டும்'' என்கிறார் மால்கம் லாஸ் அவர்கள்.

கதைப் பாடலின் வகைகள்:-

தமிழில் கதைப்பாடல்களுக்குப் பல்வேறு பெயர்கள் அதன் தன்மையை விளக்குவனவாக உள்ளன. கதை, கதைப்பாடல், அம்மானை பாட்டு, மாலை, வெற்றி ஏற்றம், கும்மி, குறவஞ்சி, காவியம், விருத்தம் என பலவகைகளுக்கும் மேலானவைகள் கதைப்பாடலின் தன்மையை விளக்குகின்றன.

கதைப் பாடல்களில் கிராமத் தெய்வங்களைப் பற்றிய கதைகளே அதிகம். அத் தெய்வங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையோ, நவராத்திரி ஒன்பது நாட்களிலோ விழா எடுக்கும்பொழுது தொழில் முறை கலைஞர்கள் அவ்வித தெய்வங்கள் உருவாகக் கருதப்படும் தெய்வங்களின் கதைகளைப் பாடுவார்கள். இசக்கி, முப்பிடாரி, பேச்சி போன்ற வகை தெய்வங்களைப் பற்றிய நம்பிக்கைகள்.

இரண்டாவது வகைக் கதைகளைக் கண்டோமானால், இவை புராணக் கதை மாந்தர்களைப் பற்றியன. மாகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன், கிருஷ்ணன், கண்ணன், தருமன், துரியோதனன் இவர்களது புராணத்தில் காட்டப்பட்ட குணங்களை உடையவராய் கதைகளில் தோன்றுவர்.

மூன்றாவது வகை சமூகக் கதைப் பாடல்கள் குடும்ப நிகழ்ச்சிகளையும், சமூக நிகழ்ச்சிகளையும் பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சமூகக் கதைப் பாடல்கள் தெய்வப் பாடல்களை விடக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

வரலாற்று நாட்டுப் பாடல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிப் கதை, கட்டபொம்மு கதை, சிவகங்கை அம்மானை, கும்மி போன்ற பத்துக்கும் குறைவாகவே வரலாற்று நாட்டுப்பாடல்கள் உள்ளன.

கதைப் பாடலில் நம்பிக்கைகள்:-

ஒவ்வொரு சாதிக்கும் தொழில் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது. ஒவ்வாரு சாதியினரும் தனித்தனி வீதிகளில் வாழ்ந்ததாக நல்ல தங்காள் கதைப் பாடல் கூறுகின்றது.

''வேல் கொடுக்கும் மன்னர் பலர் மேவியவாழ் வீதிகளும்

கோல் கொடுக்கும் வேளாளர் கூர்ந்து வாழ் வீதிகளும்''

என்ற வரிகளில், இந்த நம்பிக்கை பெறப்படுகிறது.

சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தால், குழந்தை பிறக்கும் என்பதை

''அல்லும் பகலுமாக வாசியாலே சிவனை

மனத்தி லிருத்தியே வந்தித்தார் சிந்தனையுள்ளே''

என்னும் நல்லதங்காள் வரிகள் புரியவைக்கின்றன.

மேலும் பொன் கொடுத்துப் பெண் கொள்ளும் முறை, முறையான திருமணச் சடங்குகளை நிகழ்த்தி பெண்ணை மணம் முடிக்கும் முறை, மணப்பெண்ணுக்குச் சீதனம் அளித்தல், சகுனம் பார்த்தல், கனவு பலிக்கும் என்னும் நம்பிக்கை, இறந்தவரைச் சுட்டுக் கொள்ளி வைத்தல், குற்றமிழைத்தவருக்குத் தண்டனை, செத்தவர் இருந்தால் சீமைக்கு ஆகாது எனும் நம்பிக்கை, இறந்தவர்க்குக் கோயில் கட்டி வழிபடல் போன்ற பல நம்பிக்கைகள் நல்ல தங்காள் கதைப் பாடலில் பாடப் பட்டுள்ளன.

கதைப் பாடல்கள் வீர காவியங்களாகும். மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களையும் சமூகத்தின் சீர்கேடுகளையும் சமூதாயத்தின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் விளக்குகின்றன. பழம் வரலாற்றினை உணர்வதற்கும் ஏதுவாக அமைகின்றன. எனவே, கதைப் பாடல்கள் நாட்டுப் புறவியல் அறிஞர்களுக்கு மட்டுமின்றிச் சமூகவியல், மொழியியல் போன்ற பலதுறைகளுக்கும் பெருந்துணை புரிகின்றன.

நன்றி: வேர்களைத் தேடி (இயற்கை சூழல்)

 

கருத்துகள் இல்லை: