முன்னுரை
விஞ்ஞானத்தின் விளைவால் நாளும் தொழில் பெருகிப் புழங்கு பொருள் வகையிலும் பயன்பாட்டிலும் புதுமை உருவாகி வருகின்றது. வாழ்க்கை முன்னேற்றம் கருதி நாம் அனைவரும் அதனை அவாவி நிற்கின்றோம். எனினும் நாட்டுப்புறப் பண்பாட்டை உணர்த்தும் புழங்கு பொருள்கள் நம் வாழ்க்கை முறைகளுள் தகுந்த இடத்தைப் பிடிக்காமல் இல்லை. இத்தகைய சூழலில் நாட்டார் வாழ்வும் அவர்களால் உற்பத்தி செய்யப்பெறும் புழங்கு பொருட்களும் அடிப்படை மரபுகளில் எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்று ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
நாட்டார் விளக்கம்
நாட்டார் என்ற சொல் பல்வேறு கருத்து விவாதத்திற்கு உட்பட்டதாயினும் நாட்டுப்புற ஆய்வில் அறிஞர்கள் சிலரின் கருத்து முடிவால் சில நிலையான மரபுகளையும் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு கைத்தொழில் செய்துவரும் மக்கள் குழுவே நாட்டார் என வழங்கப்படுவதாக நாம் கருதலாம். நாட்டார் என்ற சொல் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பொதுவான பண்பைக் கொண்ட எந்த ஒரு குழுவையும் குறிப்பிடலாம். அது ஒரு பொதுவான தொழிலாக, மொழியாக, சமயமாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு காரணத்தையாவது அடிப்படைப் பண்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு தனக்குச் சொந்தமானது என்று சொல்லிக் கொள்ளக் கூடிய சில மரபுகளைக் கொண்டிருப்பது முக்கியமாகும் (தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல், ப.17) என டாண்டிஸ் கூறும் கருத்து மேற்கண்டதற்குப் பொருந்துகின்றது. பரம்பரை பரம்பரையாக மரத்தச்சுத் தொழில் புரிந்து வரும் நாட்டார் இவ்வாய்வின் தகவலாளியாகின்றனர்.
மரத்தச்சரின் தொழில் கற்கும் மரபுகள்
தகவலாளர் சிறுபருவம் முதல் மரபுத் தொழிலைக் கற்கத் தொடங்கியுள்ளார். தந்தை இவரது சிறுவயதில் இறந்ததால் பிறர் வாயிலாகத் தொழில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மரத்தச்சுத் தொழில் நடைபெறும் இடத்திற்குச் சென்று உதவியாளராக இருந்து தொழில் பயின்றுள்ளார். கற்கும் இப்பருவத்திலேயே எளிதாகக் கிடைக்கும் மரப் பொருட்களைக் கொண்டு பயன்தரத்தக்க புழங்கு பொருட்களை உருவாக்கி விற்றுப் பொருள் ஈட்டியுள்ளார்.
நாட்டார் கைத்தொழிலே கைவினைக் கலைகள் என்றும் குறிப்பிடப்பெறுகின்றன. இவை மரபுவழிக் கலைகளே. மரபின் ஆற்றலை இவற்றால் அறியலாம். அண்மைக் காலம் வரை இவை பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்களால் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வந்தன. இத்தொழிலைப் பிறர் வாயிலாகக் கற்பதையே குடும்பப் பெரியோர் விரும்பியுள்ளனர். கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் தங்கள் குழந்தைகளை அடுத்தவர்களிடம் விட்டுப் பயிற்றுவித்துள்ளனர். (நாட். வழ. ப. 358) இவ்வடிப்படையில்தான் தகவலாளியும் தொழில் கற்றுள்ளார். பெற்றோரிடம் பிள்ளைகள் தொழில் கற்றுள்ளனர். பெற்றோரிடம் பிள்ளைகள் தொழில் கற்கும்பொழுது குரு என்ற எண்ணம் தோன்றாது அக்கறையும் அச்சமும் குறைந்துவிடும். அதனால் தொழில் நேர்த்தி குன்றிடும் என்பதால் இவர்கள் பிறர்வாயிலாகத் தொழில் கற்பதை முதன்மையாகக் கருதியுள்ளனர்.
தொழிலின் மூலப் பொருட்களைப் பெறுதல்
தொழிலுக்குரிய மூலப்பொருட்களைப் பெரும்பாலும் மரக்கடைகளில் பெறுகின்றனர். தேக்கு மரம், கோங்கு, படாகு, ஈட்டி போன்ற மர வகைகளைச் சதுரக்கணக்கில் சொந்த மரத்தைக் கொடுத்தால் அவற்றைக் கொண்டும் பொருள்களைச் செய்து தருகின்றனர்.
தொடக்ககாலத்தில் மர அறுவைச் சாலைகள் இல்லாததால் முழு மரங்களை விலைக்கு வாங்கியோ, நுகர்வோரிடம் பெற்றோர் அவற்றைத் தாங்களே இரம்பம் கொண்டு அறுத்தும் இழைத்தும் ஒழுங்குபடுத்தியுள்ளனர். ஆனால் தற்காலத்தில் மர அறுவைச் சாலைகள் பெருகிவிட்டதால் அவற்றோடு இவர்களால் போட்டிபோட இயலவில்லை. எனவே காலவிரயம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் தொழிலைத் தக்க வைக்கவும் மர அறுவைச் சாலைகட்டுச் சென்று உருவாக்கவிருக்கும் புழங்கு பொருட்களுக்கு ஏற்றவாறு தொழில் நிகழும் அடிப்படைச் சூழல்கள் மாற்றமடைகின்றன.
எடுத்துக்காட்டாக முழுமையான பெரிய மரங்களை அறுக்க முற்காலத்தில் மரத்தச்சர்களின் வீட்டுக் கருகிலோ அல்லது பட்டறைக்கருகிலோ நீண்ட, அகண்ட கிடங்கு வெட்டியிருப்பர். கிடங்கிற்கு மேலும் கீழும் ஒவ்வொருவர் நின்று நீண்ட இரம்பத்தைப் பிடித்து மரத்தை அறுப்பர். அப்பொழுது ஒருவித ஓசை கேட்டுக் கொண்டிருக்கும் அது இப்பொழுது மாறிவிட்டது. காலத்திற்கேற்ப இவர்களும் மாறவேண்டியுள்ளது. இம்மாற்றம் இவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது.
தொழிலின் மாதிரி
மரத்தச்சர்கள் தங்கள் தொழிலுக்கு மாதிரியாகக் குறிப்பிட்டவற்றை வைத்துக் கொள்வதில்லை. தேவைக்கேற்பத் தங்கள் தங்கள் சிந்தனைத் திறனையும் இணைத்துக் கலை நுணுக்கத்துடன் பொருட்களைப் படைக்கின்றனர். தொடக்ககாலத்தில் இவ்வாறே தங்கள் தொழிலைச் செய்து வந்துள்ளனர். ஆனால் இப்பொழுது நவநாகரிக முறைகளுக்கேற்பப் புதிய புதிய தினுசுகளில் பொருள்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குப் பல்வேறு மாதிரிகள் தேவைப்படுகின்றன. இதற்குப் பல்வேறு இதழ்கள், தொலைக்காட்சி, புகைப்படங்கள் வாயிலாகப் பெறுகின்றனர். கைவினைப் பொருள் கலைநுணுக்கம் நிறைந்த பொருளாக மாறுவதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. தொழில் வளர்ச்சியுற்ற பகுதிகளில் அவற்றிற்கேயுரிய நாட்டார் வழக்காறுகள் அழிந்துவிட்டன என்று கருதுவதைவிட நாட்டார் பண்பாடு அப்பகுதிகளில் தொழில்மயமானதாலும் நாகரிகமயமானதாலும் அடைந்துவரும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் அளவிட முனைவதே சிறப்பானதாகும் என்ற பாசிங்கரின் கருத்து இவண் ஒப்பு நோக்கிச் சிந்திக்கத் தக்கதாகும் (நாட். வழ. ப. 125)
நாட்டார் வாழ்க்கையும் தொழில் அறமும்
நாட்டார் வாழ்க்கை என்ற சொற்றொடர் நாட்டார் பண்பாட்டின் அனைத்து துறைகளையும் ஆராய்வதைக் குறிப்பிடும். உழவுத் தொழில், வரலாறு, குடியிருப்பு வகைகள், கிளை மொழிகள் அல்லது நாட்டார் பேச்சு வழக்கு, நாட்டார் கட்டிடக்கலை, நாட்டார் சமையல், நாட்டார் உடைகள் நாட்டார் ஆண்டு முறை, நாட்டார் சமயம், நாட்டார் மருத்துவம், நாட்டார் பொழுதுபோக்கு, நாட்டார் இலக்கியம், நாட்டார் கலைகள், நாட்டார் கைத்தொழில்கள் அனைத்தும் நாட்டார் வாழ்க்கை ஆகும் என்கிறார் டான்யோடர் (நாட். வழக். ப. 120). நாட்டார் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்காக இலாபத்தை நோக்கியிருப்பது இயல்பு. இதுவே உலக நியதி என்றாலும் மரத்தச்சுத் தொழில் செய்யும் நாட்டார் தங்கள் தொழிலில் அறத்தைப் பின்பற்றுகின்றனர். நுகர்வோர் மனத்தையும் பொருளாதார நிலையையும் அறிந்து கூலியைப் பெறுகின்றனர். தங்கள் நிலையிலிருந்து கூலிக்காகத் தாழ்ந்து விடுவதில்லை.
புழங்கு பொருள் செய்வதில் பின்பற்றப்படும் உத்தி
ஒரு பொருளைச் செய்வதற்கான நேரத்தைப் படிமானம் என்கின்றனர். நுகர்வோர் தங்களிடம் நடந்துகொள்ளும் விதமறிந்து படிமானத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நுகர்வோர் பெருந்தன்மையுடன் நடந்து தொழிலாளியை மதித்து வந்தால் தொழிலில் கறாராக இருப்பதில்லை. மாறாக அவர்கள் தொழிலாளி முதலாளி என்ற வரம்பைக் கடைப்பிடித்தால் இவர்கள் படிமானத்தில் சிக்கனத்தை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாகப் பத்துமணி நேரம் செய்யும் பணியை மனமொன்றிச் செய்ய விருப்பமில்லையேல் 5மணி நேரத்திற்குள்ளேயே முடித்துவிடுவர். இவ்வாறு நுகர்வோரின் பண்பறிந்து தொழில் செய்வதில் படிமானத்தைக் கொள்கின்றனர். கைவினைக் கலைஞர்களின் உளவியல் பாங்கை அறியும் ஏதுவாக இவ்வுத்தி விளங்குகின்றது.
புழங்கு பொருள் பண்பாடு
மானுடச் சமூகங்கள் எல்லாம் தாம் வாழும் சுற்றுச் சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ப வாழ்ந்தாக வேண்டும். இந்தப் படிமுறையில் தத்தம் சொந்த நோக்கத்திற்கேற்ப இயற்கை வளங்களைப் பண்பாட்டுப் படைப்புக்களாகவும் கலைப்படைப்புக்களாகவும் மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள்சார் பண்பாடு என்கிறோம். (நாட். வழக். ப. 357) மரத்தச்சர் இனத்தில் பிறந்தவர்களாலேயே இத்தொழிலை நேர்த்தியுடன் செய்யமுடியும் என்பது தகவலாளியின் கருத்து. இன்று இயற்கை மாற்றத்தாலும் வாழ்வியல் மாற்றத்தாலும் தொழிலின் நிலையும் மாறுகின்றது. பல்வேறு தொழில்களும் பெருகிவருகின்றன. எனவே விரும்பியோர் விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. பரம்பரைத் தொழில் என்பது மாறிவிட்டது. இருந்தாலும் மரத்தச்சர்கள் தங்கள் தொழிலையும் தொழில் நுணுக்கங்களையும் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே பிற இனத்தால் இதனைக் கற்கும் வாய்ப்பு அருகிலேயே உள்ளது.
ஆண்கள் பணிபுரியும் பொழுது பெண்களும் இணைந்து கொள்கின்றனர். சம்பட்டி அடித்தல், இரம்பம் அறுத்தல், தமர் போடுதல் போன்ற சிறு சிறு பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதுவரை பெண்கள் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் முடியாது என்பது தகவலாளியின் கருத்து.
தொழிலைத் தொடங்குமுன்னர் இறைவழிபாடு செய்கின்றனர். இதற்கான பத்தி, சூடம், தேங்காய், பழம் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இரத்தப்பலி கொடுப்பது வழக்காக இப்பொழுது இல்லை. ஆனால் முற்காலத்தில் வீட்டிற்கு ஓடு போடும்பொழுது இவ்வழக்கம் பின்பற்றப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் ஆடு ஒன்றை வாங்கி வந்து அதன் காதை அறுத்து இரத்தப்பலி கொடுத்துவிட்டு அவ்வாட்டை மரத்தச்சர்களுக்கே தானமாகக் கொடுத்துள்ளார். இப்பொழுது இதற்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தை அறுத்துக் குங்குமத்தைத் தடவிக் காட்டி வருகின்றனர்.
மரத்தச்சர்களும் தொழில் மாற்றமும்
இத்தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. நேர்மையானவர்களில் பணத்தை மிச்சப்படுத்த இயலாது. அதனால் இளஞ்சந்ததியினர் இதே நிலையில் இத்தொழிலைச் செய்வது கடினம். இவ்வினத்தாருள் ஓரளவு பணம் படைத்தோர் நவீனத் தொழில் முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வசதி குறைந்தோர் வேறு வழியின்றி இதே நிலையில் இத்தொழிலைத் தொடர்கின்றனர். புழங்கு பொருள் பண்பாடு பற்றிய படிப்பு ஒரு வகையில் தொல்லியலோடு தொடர்புடையது. மக்கள் குழுவொன்று வாழ்ந்துள்ளது என்பதற்குச் சான்றாகப் புழங்கு பொருள் மட்டுமே நிகழ்கின்றது (நாட். வழக். ப. 375) என்பார் கூற்றை மெய்ப்பிப்பதாகத் தகவலாளியின் கருத்து அமைகின்றது.
முடிவுகள்
1. தகவல் தொடர்பு வசதியாலும் பண்பாட்டுக் கலப்பாலும் கிராமம் நகரமாகிக் கொண்டு வந்தாலும் நாட்டார் தொழிலும் அவர்கள் உருவாக்கும் பொருள்களும் உணர்த்தும் உண்மைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன என்பதை இக்கட்டுரை மெய்ப்பிக்கின்றது.
2. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்காகவே மரத்தச்சர் போன்ற நாட்டார் தங்கள் தொழில் முறைகளில் புதுமையைப் புகுத்துகின்றனர்.
3. தொழில் அறத்தையும் நுகர்வோர்க்கும் தங்களுக்கும் இடையே வேண்டிய உறவையும் தொழில் மூலமாகவே வளர்க்க விரும்புகின்றனர்.
4. விஞ்ஞானம் வியக்கும் அளவு வெவ்வேறாக வளர்ந்தாலும் நாட்டார் தொழில் அனைவரும் நாடும் தொழிலாகவே நிலைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக