சிறுபத்திரிக்கை வட்டாரத்தில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சு. எல்லாம் முடிந்தது. நேற்றுத்தான் ''பால் தெளிப்பு''. புதைகுழி மீது துளசி துளிர்விட ஆரம்பித்துவிட்டது. யதார்த்தக் கதைகளின் காலம் முடிந்து விட்டது. விண்ணைத் தொடும் உரத்த முழக்கம் ''ஆந்த்ராக்ஸ்'' பீதி போல படைப்பாளிகளை யதார்த்தப் பீதி பற்றிக் கொண்டுள்ளது. சிலர் உறைந்து போய் விட்டனர். குப்பிகள் பொங்கி வழியும் இரவுக் கொண்டாட்டங்களிலும் வெள்ளென விடிந்த பின்னரும் எங்கும் இடைவிடாத பேச்சு. யதார்த்தம் ''அவுட்''. புதிதாக எழுதத் தொடங்கிய கத்துக்குட்டிப் படைப்பாளர்கள் இனம் புரியாத பயத்தில் தட்டையாயினர். அன்றாட நடப்பில் எதிர்கொண்ட அனுபவங்களை வட்டார மொழியில் புனைக்கதையாக்கினால் பெருவியாதியஸ்தரைப் போல ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம்.
இளைஞனே! இரவானதும் வீடு திரும்ப அச்சமா? என்ற டாக்டர் காளிமுத்து பிராண்ட் தாது புஷ்டி லேகிய விளம்பரம் போல பேனாவைத் தொடவே கை நடுங்கும் எழுத்தாளர்களுக்கு ஏதாவது விளம்பரம் வெளியானால் தேவலை என்று தோன்றுகிறது. ஏனெனில் எதார்த்தக் கதை பற்றிய சரியான புரிதல் அற்ற சில படைப்பாளிகள், நாளடைவில் எதுவும் செய்யவியலாமல், மறைந்து போகின்றனர். புதுவகைப்பட்ட தமிழ்ப் படைப்பு என்னிடமிருந்தே தொடங்குகிறது என்ற சண்டமாருதப் பிரசங்கம் வேறு ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியவுடன் அப்பாவி வாசகன் நடுநடுங்கிப் போகிறான். வாழையடி வாழையாக வரும் வாசகனுக்காக எழுதுவதாக நம்பிக் கொண்ருக்கும் சீனியர் எழுத்தாளர்களும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட காட்சியல்ல; இன்றைய சிறு பத்திரிக்கை உலகின் குறுக்குவெட்டுத் தோற்றம். நிற்க.
இத்தகைய சூழலில் பெருமாள் முருகனின் ''கூள மாதாரி'', யூமா வாசுகியின் ''இரத்த உறவு'' ஆகிய இரு யதார்த்த வகை நாவல்கள் களத்திற்கு வந்துள்ளன. யதார்த்த நாவல் எழுத இந்த ஆசாமிகளுக்குத் துணிவு எப்படி வந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் யதார்த்தக் கதைகளின் நிலை யாதுவென ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யதார்த்தச் சித்தரிப்பில் மிகவும் மோசமாக மொழியைக் கையாளும் சூழல் தமிழில் உள்ளது. அதுவே பல யதார்த்த நாவல்களில் தோல்விக்குக் காரணமாகும். மொழியின் அற்புதங்கள் மூலம் வடிவமைக்கும் கதை சொல்லல் எப்பொழுதும் அதற்கான ஸ்தானத்தில் நிலைத்திருக்கும். நவீன தமிழ்ப் படைப்பாளிகள் மொழியின் போதாமையினால் அல்லல்படுகின்றனர். சொல், தேர்வு, சொல் பயன்பாடு நைந்து போய் அர்த்தமிழந்த நிலையில், சொற்கள் மூலம் சித்தரிக்கப்படும் கதையுலகு அலுப்பூட்டுகிறது.
சங்க காலப் படைப்புகளிலிருந்து சிற்றிலக்கியம் வரை பயன்படுத்தப்பட்ட மொழிவளம், புதியதான சிந்தனையை வெளிப்படுத்தும் புதிய சொற்கள், குறிப்பிட்ட குழுவினருக்கே உரித்தான மொழி வழக்கு ஆகியவற்றின் மூலம் படைப்பாளி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். நடைமுறை வாழ்க்கைப் பரப்புகளை நுணுக்கமாக அவதானித்துக் கற்பனை தோய்ந்திட, அடிப்படையான கேள்விகளுடன் தர்க்கத்தையேற்படுத்தும் படைப்பு யதார்த்தப் பண்புடையதெனினும் நவீனமானதாகும். நேர்கோட்டுக் கதை சொல்லலில், பம்மாத்தும் பாசாங்கும் நிரம்பி வழியும் படைப்புகளில் புதிய உத்திகள் கையாளப்பட்டிருப்பினும், அவை கிழித்துக் குதறப்பட்ட கந்தல் துணிகள் போன்றவை. இந்நிலையில் யதார்த்தப் படைப்புகள் மரித்துவிட்டதென்ற ஓயாத கூச்சல், இலக்கியத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நிலையையே சுட்டுகின்றது.
யூமா, வாசுகி எழுதியுள்ள ரத்த உறவு நாவலினை வாசிக்கத் தொடங்குகையில் மறுபடியும் குடும்பக் கதையா என்று முதலில் அலுப்பேற்படுகிறது. கதை அறிமுகப்படுத்தும் குடும்பத்திற்குள் பயணிக்கையில், இது நாவலா அல்லது சுயவரலாறா என்ற சந்தேகம் தோன்றுகிறது. இந்த மனிதர்களுக்கு என்ன ஆச்சு? ஏணிப்படி நடக்கிறது? இதற்கான தாத்பர்யம், முகாந்திரம் என்ன? போன்ற கேள்விகள் வாசிப்பில் ஏற்படுகின்றன. குடும்பம் என்ற நிறுவனம் எங்கு மையம் கொள்கிறது? குடும்பத்திற்குள் மனித உறவுகளின் இருப்பு யாது? தனி மனிதனின் சீரழிவு / உன்னத இருப்பினுக்கப்பால் குடும்பம் என்ற அலகு எல்லாவிதமான அபத்தங்கள் / மேன்மைகளும் உள்ளடக்கியதாக இருக்கிறது. குடும்பத்தில் ஆணின் இடமானது அதிகாரத்துவமானதாகவும் கொண்டு செலுத்துலாகவும் உள்ளது. பெண்ணோ ஒவ்வொரு புள்ளியிலும் தன்னை குடும்ப மனுஷ’யாக அடையாளப்படுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. சமூக ரீதியில் பெண் எதிர்கொள்ளும் வலிகளை விட குடும்பத்திற்குள் மன ரீதியில் படும் கொடூரங்கள் ஏராளம்.
அதிலும் யூமா, வாசுகி சித்தரிக்கும் மரபு வழிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் வாழ நேரிடும் பெண் அடையும் பாதிப்புகள் இன்னும் கூடுதல், கணவன், மாமியார், கொழுந்தன்கள், கொழுந்தன்களின் மனைவிகள்... என அதிகார மையங்கள் ஆங்காங்கை வலுப்பெறுகின்றன. ஆணின் அதிகார மொழி போலவே, பெண்ணின் அதிகாரக் குரலும் நடப்பில் உச்சமடைவது எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. நாவலின் தீமையின் ஒட்டுமொத்த வடிவமாக வெளிப்படும் தாய், பால்பேதமற்ற நிலையில் ஒடுக்கு முறையைப் பெண்கள், குழந்தைகளின் மீது பிரயோகிக்கிறாள். மகன்கன் குடித்து விட்டுச் சீரழியும் நிலையிலும், அவள் தொடர்ந்து அதிகாரத்துடன் கலங்காமல் இருப்பது, மரபு வழிப்பட்ட ''தாய்'' பிம்பத்தைச் சிதைக்கிறது. அவளால் நசுக்கப்பட்ட உடல்களின் வேதனை வெளியெங்கும் உறைந்து இருக்கிறது. சக உயிர்கள் மீது அன்பற்ற அணுகு முறையால், வாழ்வின் கொடூரங்களுக்குள் கதையாடல் வாசகனை இட்டுச் செல்கிறது. துயரத்தின் பரப்பில் அறிவு பூர்வமான கேள்விகளை இழந்து, இதுவெல்லாம் இப்படியாக இருக்கிறது என்ற அழுத்தமான காட்சிகளின் சித்தரிப்பினால் திகைக்க வைத்துள்ளது யூமா, வாசுகிக்குக் கதை சொல்லலில் கிடைத்த வெற்றியாகும்.
சித்ரவதைகளினால் நசுக்கப்படும் அம்மா, அடக்கியொடுக்கும் பாட்டி, அப்பா, அப்பாவின் தம்பி, ஒடுக்கு முறைக்குள்ளாகும் அண்ணன், அக்கா, தம்பி....என கதைப் பரப்பு முழுக்க வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளது. வெறுப்பு உமிழும் கண்களுடன் சதா யாரையாவது திட்டிக் கொண்டிருக்கும் பாட்டி பற்றிய சித்தரிப்பு தமிழில் இது வரை காணக்கிடைக்காதது. காளை மார்க் சுருட்டு குடிப்பது, மகன்களுடன் சேர்ந்து ராவாக சாராயம், ரம் குடிப்பது, குழந்தைகளின் மீது வெறுப்பைக் கக்குவது, எதையாவது தின்று கொண்டிருப்பது, யாரையம் எடுத்தெறிந்து கேவலமாகப் பேசுவது, யார் மீதும் ஒட்டு உறவற்றுத் திட்டிக் கொண்டிருப்பது, பிறர்படும் சித்ரவதைகளைப் கண்டு மகிழ்ச்சியடைவது, மகன் இறந்த போது கூட அதைப் பொருட்படுத்தாமலிருப்பது.... என்ற பாட்டி பற்றிய பதிவுகள் நுட்பமானவை.
உயிரான ஆமையை நீருள்ள பாத்திரத்தில் போட்டு அடுப்பிலிட்டுக் கொதிக்க வைத்துக் கொன்று தின்னும் பாட்டியின் செயற்பாடு குறியீட்டு நிலையில் பாட்டியை அவதானிக்க உதவிகிறது. அடக்கியொடுக்கும் கணவன், மாமியாரின் நெருக்குதலுக்குள்ளான பாட்டி இயல்பிலே கசப்பும், கொடூரமும் ததும்பிட, கண்களில் சலிப்பும் கோபமும் கொப்பளித்திட காட்சி தருகின்றாள். வாசிப்பில் அதிர்வுகளைத் தோற்றுவிக்கும் பாட்டியின் இருப்பு குறித்து மாய்ந்து மாய்ந்து விவரிக்கும் யூமா, வாசுகி கதையோட்டத்தில் எவ்விதமான நிலைபாட்டினையும் எடுக்காமல், வாசகரிடத்து வேறுபட்ட விவாதங்களைத் தோற்றுவிப்பது சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இடைவிடாமல் குடிக்கும் அப்பாவின் வருகைக்கென ஊரின் ஒதுக்குப்புறத்தில் எந்நேரமும் காத்திருக்கும் சாராயக்கடைகள். குடித்து விட்டுத் தெருவோரம் வீழ்ந்து கிடப்பதும், அப்பாவியான அம்மாவை அடித்துக் காயப்படுத்துவதும் சிறிய குற்றங்களுக்குக்கூட குழந்தைகளைச் சித்ரவதைப்படுத்துவதும் தான் அப்பாவின் முழுநேரப்பணி. வீட்டில் அப்பாவின் இருப்பு ''சர்வாதிகாரி'' என்ற பிம்பம் பொதுப்புத்தியாக இன்று வரையிலும் நிலவுகிறது. வரன்முறையற்று ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அப்பா, தன்னுடைய தாயிடம் மட்டும் பணிந்து போவது என்பது குழப்பத்தையேற்படுத்துகிறது. அம்மாவுடன் சேர்ந்து சாராயம் குடித்துப் போதையேறி வீழ்ந்து கிடக்கும் மகன்கள் உள்ள குடும்பத்தில் மெல்லிய உணர்ச்சிகளுக்கோ வாழ்வு பற்றிய விழுமியங்களுக்கோ இடமேது? முப்பது பவுன் நகைகளுடன் வீட்டுக்கு வந்த மருமகளைப் பார்த்தவுடன், அதையெல்லாம் பறித்து அழித்து விடு என்று மகனுக்கு ஆணையிடும் பாட்டியின் மனவோட்டம் வக்கிரத்தின் உச்சமாகும்.
தரையில் விழுந்த மாம்பழத்தை எடுத்த அண்ணனை மரத்தில் கட்டி வைத்துச் சித்ரவதை செய்தல்.
மனைவி / குழந்தைகளை அடித்து உதைப்பதற்காக திருக்கை வாலினைப் பதப்படுத்தும் அப்பா.
அண்ணனைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டுக் கீழே நெருப்பிலிட்டு, அதில் மிளகாய் போட்டு நெடியேற்றுதல்.
விரல் நசுங்கி ரத்தம் வந்தாலும் தம்பியின் பம்பரத்தை அம்மியில் உடைக்கும் பாட்டி.
தெருவில் விரட்டியடித்து அம்மாவின் மண்டையை அடித்து நொறுக்கும் அப்பா, சித்தப்பா.
மான்கொம்பு / குத்து விளக்கு மூலம் அம்மாவை அடித்து நொறுக்கும் அப்பா.
இராணுவத்திலிருந்து திரும்பி வந்து குடித்துவிட்டுச் சாக்கடைக்குள் புரளும் பெரியப்பாவை அடித்து நொறுக்கும் சித்தப்பா, பெரியம்மா, அவரது பிள்ளைகள்.
இப்படி கதைபாடல் முழுக்க வன்முறைகளின் தொகுப்பாக விரிகிறது. அடி தாங்காமல் மாமா வீட்டிற்கு அம்மா ஓடியதால், குழந்தைகளின் தலையில் எண்ணைய் வைத்துத் தானும் தலைக்கு எண்ணைய் வைத்துத் தலைமுழுகும் அப்பா, பாட்டியின் செயற்பாட்டினை வன்முறையின் வெளிப்பாடாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
நாவலில் குடும்பம் மட்டுமல்ல; ஒரு பெரிய ஊரில் பல்வேறு காட்சிகளும் உள்ளன. குடும்பத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைச் சரியென நம்பும் ஊரார், ஒடுக்குமுறைக்காக அனுதாபப்படும் ஊரார் என இரு வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் எல்லாம் குடும்பம் என்ற அலகிற்குள் முடித்துக் கொள்ளப்படவேண்டுமென்ற வாதமே சூட்சமமாக முன்னிறுத்தப்படுகிறது.
சொந்த உடல்களின் மீது உரிமையற்ற குழந்தைகள், பெண்கள் மீது இடைவிடாமல் அதிகாரம் செலுத்தி நசுக்கி, எப்பொழுதும் ஒரு விதமான பயத்திற்குள் வைத்திருக்கும் குடும்பச் சூழலைச் சித்தரிப்பதில் யூமா, வாசுகியின் நோக்கம் நிறைவேறியுள்ளது. வெறும் புனைவு என்ற நிலைக்கப்பால் சம்பவங்களின் விவரிப்புத் தரும் அதிர்வுகள் முக்கியமானவையாக உள்ளன. ஒரு குடும்பம் என்ற தளத்தினை மையமாக்கிக் கொண்டு இண்டு இடுக்கிகளிலும் நுழைந்து, வாழ்க்கையின் விசித்திரங்களையும், சிதைவுகளையும் புனைகதையாக்கியுள்ள யூமா, வாசுகி, யதார்த்தக் கதை சொல்லலை உயரிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதுவே அவரைச் சாதனையாளராக்குகிறது.
பெருமாள் முருகன் எழுதியுள்ள ''கூளமாதாரி'' நாவல், கவுண்டர்களிடம் பண்ணையத்துக்கிருக்கும் சக்கிலியச் சாதியைச் சார்ந்த சிறுவர் சிறுமியரைச் சுற்றி விரிகிறது. இணையகங்களின் ஆதிக்கத்தில் சகலமும் தவவமைக்கப்படும் இன்றைய பூகோள கிராமச் சூழலில், ஆடு மேய்க்கும் சிறார்களின் வாழ்க்கை விசித்திரமாக இருக்கலாம். அடுத்த வேளைக் கூழுக்காக அதிகாலை எழுந்து தொழுவத்து வேலையை முடித்து அத்துவானக் காட்டில் ஆடுகளை மேய்த்து, மாலையில் வீட்டிற்கு ஓட்டிவரும் சிறுவர்களை எங்கு பொறுத்துவது? இப்படியெல்லாம் நடக்கிறதா என்று நகரிய கனவான்கள் கேட்கலாம். நுனிநாக்குகள் கான்வெண்டுகளில் ஆங்கிலம் பேசிட அமெரிக்க உணவுகளுடன் பிள்ளைகளை வளர்க்கும் தனவான்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஆனால் நடப்பில் எங்கும் கசப்பும் வெறுப்பும் பொங்கி வழியும் சூழலில் வாழ நேர்ந்திட்ட சிறுவர்களின் அவலம் நம் முகத்திற்கு எதிரே ஆயிரமாயிரம் கேள்விகளை முன்னிறுத்துகின்றது. எழுபதுகளில் கி.ரா. தொடங்கி வைத்த கிராமியச் சித்தரிப்பு, இடையில் நீர்த்துபோன நிலையில், பெருமாள் முருகள் ஆடு மேய்க்கும் சிறார்களின் உலகைச் சித்தரிப்பதன் மூலம் புதிய சிகரத்தை அடைய முயன்றுள்ளார்.
பெருமாள் முருகன் விவரிக்கும் கதையுலகு யதார்த்தக் கதை சொல்லலுக்கு நெருக்கமானது. சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பரப்பினுள் நுழைகையில், ரத்தமும் சதையுமான அனுபவங்களைச் சந்தித்த அனுபவமேற்படுகிறது. ஆடு மேய்க்கப் பயன்படும் அத்துவானக் காட்டின் விவரிப்பு ஒரு நிலையில் அச்சந்தருவதாக உள்ளது. குத்துச் செடிகள், மரங்கள், பறவைகள், ஆடுகள், பூச்சிகள் உலவிடும் நிலப்பரப்பில் ஒற்றையாகச் சிறுவர்கள் தனிமையில் அலைந்து கொண்டிருக்கின்றனர். கொதிக்கும் வெயில், அனல் காற்று, வெக்கை, புழுதி, மழை, சூறைக்காற்று..... எங்கும் சூழலைச் சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. விசித்திரக் குள்ளர்களைப் போல சிறுவர் சிறுமியர் ஆடுகளுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டு, வேடிக்கையும் விநோதமும் கலந்த விளையாட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நுணுக்கமாக இயற்கையைச் சித்தரிப்பதில் பெருமாள் முருகன் கையாண்டுள்ள மொழியானது பல்வேறு காட்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. கதை சொல்லலுக்குப் பின்புலமாக அமைந்துள்ள அத்தவானக் காடு கூட, கதையாடலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆளரவற்ற அத்துவான வெளியில் சின்னஞ்சிறிய புள்ளிகளாக நகரும் ஆடுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் கோவணம் கட்டிய சிறுவர்களுக்குச் சமூகம் காட்டும் கருணைதான் என்ன?
சாதியரீதியில் ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்கள் படும் வேதனையைக் விட அன்றாட உணவிற்காகச் சகித்துக் கொள்ள வேண்டிய துயரங்கள் நாவல் முழுக்கப் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு கணமும் விழிப்போடிருக்க வேண்டிய நிலை; ஆடுகள் காணாமல் போய்விடலாம்; ஆடுகள் சோளத்தட்டையைத் தின்று வயிறு மந்தமாகி சாக நேரிடலாம்; கவுண்டர் / கவுண்டச்சி இடும் ஒவ்வொரு ஏவலையும் கட்டாயம் செய்திட வேண்டிய அவலம். இளவயதிற்கேயுரிய குறும்புகளையும் துருதுருப்பான செயல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பெரிய மனிதராகப் பாவித்து மந்தையை வழிநடத்தும் பொறுப்பு ஏற்பது மிகவும் சிக்கலானது. எனவே தான் ஆடு மேய்க்கும் கூளையன் வயதுக்கு மீறிய ஜாக்கிரதை உணர்வுடன் செயல்படவேண்டியுள்ளது. எங்காவது பிசிறு தட்டினால் கவுண்டரின் சித்ரவதைக்குள்ளாக வேண்டும்; கொடிய தண்டனை எப்பொழுதும் காத்திருக்கிறது. ஆடு மேய்க்கையில் விளையாட்டாக தேங்காய் பிடுங்கியதற்காகக் கூளையனைத் தலைகீழாகக் கிணற்றுக்குள் தொங்க விட்டுக் கவுண்டர் தந்த தண்டனை, பலவீனமான உடல் மீது நடத்தப்படும் அதிகாரத்தின் கோரத் தாக்குதல், காலந்தோறும் உடல் மீது எவ்வித உரிமையுமற்ற அடக்கியொடுக்கப்பட்ட உடல்களின் மீது நடைபெறும் வன்முறைகள், அத்துமீறல்களின் தொடர்ச்சியாகத் தான் கூளையனுக்கு நேர்ந்த கொடூரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கோவணத்துடன் பசித்திருந்து ஆடு மேய்க்கும் சிறுவர் சிறுமியரின் உலகு பற்றிய புனைவு பல்வேறு தகவல்களால் நிரம்பி வழிகின்றது. இவை மிகப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்ற நினைவையழித்து நுணுக்கமான விவரங்களும் மொழியின் வெளிப்பாடும் வாசிப்பில் நம்பிக்கையைத் தருகின்றன. இளம் பருவத்திலே சொல் கதைகள் மூலம் வடிவமைக்கப்படும் சிறார்களின் மனம், நடப்பில் சக தோழர்களுடன் விளையாட்டு, சண்டை மூலம் சமனடைகிறது. அத்துவான வெளியான நிலப்பரப்பில் குறுக்கும் நெடுக்கிலுமாக அலைந்து திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கான தோதுவைக் கதைப் பரப்பெங்கும் பெருமாள் முருகன் சாத்தியப்படுத்தியுள்ளார்.
கிராமியப் புனைவில் மனிதனுக்கும் அமானுஷ்ய சக்திக்குமான இடைவிடாத உறவு நுட்பமானது. ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது நிகழலாம். சந்துகள், மரங்கள், நீர் நிலைகள், தோப்புகள் தெரு முக்குகள்..... இப்படி சகல இடங்களிலும் துடியான தெய்வங்களும் முனிகளும் பேய்களும் உறைந்துள்ளன. அவற்றுக்கான வேலை, வழிமுறை எல்லாம் ஒழுங்காக நடைபெற வேண்டும். ஒவ்வொரு முடுக்கு பற்றியும் திகிலூட்டும் / பயமுறுத்தும் வாய்மொழிக் கதைகள் மூலம் தொடர்ந்து புனையப்படும் புனைவுகள் சாதாரண மனிதனின் புலனுக்கு அப்பாற்பட்டவை. கிராமத்தில் வாழும் சிறுவன் வீட்டை விட்டு வெளியே வருகையில் நனவிலி மனதில் பதிந்துள்ள புனைவுகள் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டே இருக்கும். யாரும் தப்பித்தல் இயலாது. கடவுள் நம்பிக்கையை விட கோபங் கொண்ட தெய்வங்கள் கிராமிய வெளியையே தகவமைக்கின்றன.
பொட்டல் காட்டில் இரவு வேளையில் கிடைக்குக் காவல் இருக்கும் கூளையனிடம் முனியப்பன் வானத்துக்கும் பூமிக்குமாக நடந்து வந்து வழியை மறித்துக் கிடைபோட்டதற்காக கோபப்படும்போது, சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா வீரன் முன்னே வந்து அவனைக் காப்பாற்றுகிறது. எது புனைவு எது யதார்த்தம் என்ற எல்லை தகர்ந்து போய் கதையின் தளம் வேறுதளத்திற்குள் நுழைகிறது. தெய்வம் பற்றிய பயமே கிடாவீரனையும் தெய்வத்தின் அங்கமாக மாற்றுகிறது. எனினும் வீரன், முனியப்பனுக்காகப் பலியிடப்படும்போது கூளையனுக்கு ஏற்படும் உணர்வுகள் அன்பில் தோய்ந்தவை. அமானுஷ்ய சக்தியை விட உயிர் என்ற நிலையில், வீரன் பற்றிய பிம்பமானது கூளையனுக்கேற்படுத்தும் எண்ணங்களே கதையோட்டத்தில் முக்கியமானவை.
கூளையன், வவுறி, செவிடி, நெடும்பன், மொண்டி போன்ற பெயர்கள் சக்கிலியச் சிறார்களுக்கும் மணி, செல்வன் ஆகிய பெயர்கள் கவுண்டர் சிறுவர்களுக்கும் சூட்டப்பட்டிருப்பது எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. பன்னெடுங் காலம் பரம்பரை பரம்பரையாகப் பண்ணையம் பார்க்கும் சக்கிலியக் குடும்பத்தில் விடிவு இல்லை என்பதை பெயர்களும் சுட்டுகின்றன.
ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பற்றிய நுட்பமான தகவல்கள் அடங்கிய நாவல், இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரிந்தாலும் முடிவில் ஏனோ குறுநாவல் வாசித்த உணர்வே ஏற்படுகிறது. புனைவின் மையம் முழுக்க ஆடு மேய்க்கும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களின் தொகுப்பாக விரிவதனால் வாசிப்பில் வேறுபட்ட அனுபவங்கள் ஏற்படவில்லை. எனினும் நாவல் தரும் அசலான அனுபவங்கள் யதார்த்தக் கதை சொல்லலில் முக்கிய இடம் பெறுகின்றன. அவை வாசகனை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் பெருமாள் முருகனின் எழுத்து தனித்துவமுடையது.
''ரத்த உறவு, கூள மாதாரி'' ஆகிய இரு நாவல்களும் புதியதான உள்ளடகத்துடன் செறிவான மொழியின் மூலம் சிறந்த யதார்த்தப் படைப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. அநேர் கோட்டுத் கதையாடலுக்குப் பழக்கப்பட்ட சான்றாக விளங்குகின்றன. அநேர் கோட்டுக் கதையாடலுக்குப் பழக்கப்பட்ட வாசகராலும் வாசித்து அனுபவிக்கவியலும் படைப்புகள் இவை. சிறந்த படைப்புக்கு உத்திகள் இரண்டாம் பட்சமானவை என்பதை வெளிப்படுத்தும் இவ்விரு நாவல்களும் அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான படைப்புகள். அவை வாசிப்பில் பெரும் சலனத்தை ஏற்படுத்தக்கூடியன; மாறுபட்ட விவாதங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் யதார்த்த நாவல் வாசிப்பின் புதிய சிகரங்களை எட்டியுள்ளன. இதுவே இவ்விரு நாவல்களின் ஆகப் பெரிய பலம்.
நன்றி: திறனாய்வு சில புதிய தேடல்கள் 2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக