நாட்டுப்புற மக்களின் வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கியது நாட்டுப்புறவியலாகும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே நாட்டுப்புறவியலும் இருக்கிறது எனலாம். நாட்டுப்புறவியல் நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், வரலாறுகள், செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள், சூழல்கள் முதலானவற்றை எடுத்துக் கூறுகின்றது. சமுதாயத்தின் வளர்ச்சியையும் அது காட்டுகிறது. பொதுவாக நாட்டுப்புறவியலை இரண்டு வகையாகப் பிரிக்காலம் 1) நாட்டுப்புற இலக்கியம் 2) நாட்டுப்புறக்கலை என்பவையே அவை. நாட்டுப்புற இலக்கியமானது சாதாரண, பாமர மனிதர்களால் உருவாக்கப்படுவது; மக்களுக்காகவே உருவாக்கப்படுவது. ''மண்ணின் மைந்தர்தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியம்'' என்கிறார் சு. சக்திவேல்.
சமுதாயம் நாட்டுப்புற இலக்கியத்தில் சிறப்பிடம் பெறுகிறது. சமுதாயம் குறித்த செய்திகள், சமுதாய மாற்றம், வளர்ச்சி போன்றவற்றை நாட்டுப்புற இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே காலந்தோறும் தோன்றும் பல்வேறு மாற்றங்கள் நாட்டுப்புற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. உணர்ச்சிகள் நிறைந்த இவ்விலக்கியங்கள் நாட்டுப்புற மக்களின் இன்ப, துன்ப உணர்வுகள், அனுபவங்கள், குற்றங்கள், துடிப்புகள் போன்ற பலவற்றையும் வெளிக் காட்டுகின்றன. இதனால் ஒவ்வொரு காலத்திலும் நடந்த நிகழ்வுகளைப் பின்வரும் பல தலைமுறை மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புற இலக்கியங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வர இதுவே காரணம். நாட்டுப்புற இலக்கியக் கூறுகளில் ஒன்றான கதை எல்லா இடங்களிலும் சிறப்பு பெறுகிறது. தென்காசி வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள மேலகரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. பார்வதி அம்மாளிடம் இருந்து பெறப்பட்ட ஐந்து கதைகள் இங்கு ஆய்வுக்களமாக அமைகின்றன.
கதை கேட்கும் ஆர்வம், ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. அதிலும் குறிப்பாகச் சிறுவர்கட்குக் கதை கேட்கும் ஆர்வம் அதிகம். கூட்டுக் குடும்ப முறையில், வீட்டிலிருக்கும் பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு உணவூட்டவும், தூங்க வைக்கவும் கதை சொல்லும் பழக்கம் இருந்தது. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் கதைகள் கூறப்பட்டன. தமிழ்நாட்டில் சில தலைமுறைகளுக்கு முன் சிறுவர்களுக்குக் கதையும் பாட்டும் ஊட்டி வளர்க்கும் முறை இருந்த வந்தது. கதையுணவும் பாட்டுணவும் பள்ளிக்கூடங்களில் தருவதைவிட, மிகுதியாக வீடுகளில் பாட்டிமாரும் பெற்றோர்களும் அளித்து வந்தார்கள். காலம் மாறியது. உணவைப் பிசைந்து ஊட்டும் நிலை குறைந்தது. உணவைத் தாமே அள்ளி உண்ணும் நிலையுள்ளது. ஆகையால் கதை நூல்களும் பாட நூல்களும் அள்ளியுண்ணும் நிலையிலுள்ளன என்று மு. வரதராசனார் கதை சொல்லுவதன் தேவையைக் கூறியுள்ளார்.
கதைகள், குழந்தைகளுக்குச் சமுதாயம் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பவை, கதைகள் மூலமாக உயர்ந்த எண்ணங்களைக் குழந்தைகளின் மனத்தில் வளரச் செய்ய இயலும். ஆய்வுக் களமாக அமைந்த ஐந்து கதைகளும் நல்ல நட்பு, வேண்டா நட்பு, பாச உணர்வு, உள்ளத்தால் வலியவனாதல், உண்மையே பேசுதல் என்ற நீதிக் கருத்துக்களை உள்ளடக்கியதாகப் பார்க்கப்படுகிறது.
நல்ல நட்பு:
நண்பனின் இன்ப துன்பம் இரண்டிலும் பங்கு கொள்வதே சிறந்த நட்பாகின்றது. கீழ்க்காணும் கதை நல்ல நட்பின் சிறப்பினை எடுத்தியம்புகிறது. ''ஒரு நாட்டுல வேடன் ஒருத்தன் இருந்தான் ஒரு நாள் மான் கூட்டத்தின் மீது நஞ்சு கலந்த அம்பை எய்தான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டது. நாளடையில் மரம் காய்ந்து பட்டுப்போனது. அம்மரத்தின் பொந்து ஒன்றில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி, மரத்தின் நிலையைக் கண்டு வருந்தினாலும் அம்மரத்தை விட்டுப் போகவில்லை. அக்கிளியின் அன்பைக் கண்ட தேவேந்திரன் மனித உருவில் வந்தான். மரத்தை விலகாமலிருக்கக் காரணம் கேட்டான். அதற்குக் கிளி, எல்லா வகையிலும் சிறந்த குணங்கள் நிறைந்த இந்த மரத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். இளமைப் பருவத்தில் இந்த மரம்தான் பாதுகாப்புக் கொடுத்தது. இப்போது விலகிச் சென்றால் அது எவ்வளவு மோசமான செயல் என்றது. கிளியின் பரிவைக் கண்ட இந்திரன் கிளிக்கு ஒரு வரம் தருவதாகக் கூறினான். உடனே கிளி மரம் முன்போல் தழைக்க வரம் கேட்டுப் பெற்றது. மரம் பூத்துக் குலுங்கியது. பின் கிளி இந்திரனுடன் தேவலோகம் சென்றது''.
நண்பன் துயருறும்போது, அவனிடமிருந்து, துன்பத்தில் பங்கு பெறுவதோடு, துயர்களையவும் வழிவகுப்பது நல்ல நட்பு ஆகும்; அதற்குத் தெய்வமும் உதவி செய்யும் என்ற நீதிக் கருத்து இக்கதையின் மூலம் அறியப்படுகிறது.
வேண்டா நட்பு:
நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். ''தீ நட்புடன் இருப்பதைவிடத் தனித்திருப்பது உயர்வானது'' என ஆங்கிலப் பழமொழியொன்று கூறும். வேண்டா நட்பினைப் பற்றிய கதையைக் காணலாம்.
''ஓர் ஊரில் நெருங்கிய இரு நண்பர்கள் இருந்தனர். ஒரு நாள் நடந்து செல்லும்போது ஒருவன் தங்கச் சங்கிலி ஒன்றைக் கண்டெடுத்தான். உடன் வந்தவன் ''எனக்கு அதிர்ஷ்டம்'' என்றான். கண்டெடுத்தவனோ ''உனக்கு அதிர்ஷ்டம் என்று கூறாதே! எனக்கு அதிர்ஷ்டம் என்று கூறு'' என்றான். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு திருடன் வந்தான். அவனைக் கண்ட, சங்கிலி கண்டெடுத்தவன் நமக்குத் துன்பம் என்றான். உடனே கூட வந்தவன், ''நமக்கு என்று கூறாதே! எனக்குத் துன்பம் என்று கூறு! என்று சொல்லி விட்டுச் சென்றான்''. இன்பம், துன்பம் இரண்டிலும் நட்பில் வேறுபாடு பார்த்தல் கூடாது என்னும் அறிவுரையை இக்கதை கூறுகின்றது.
பாச உணர்வு
இயற்கை நிகழ்வுகளுக்கு ஏதாவது ஒரு கதையைக் காரணமாகக் கூறிச் சுவை கூட்டுவது நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பாகும். ''நிலவில் பாட்டி வடை சுடுவது, வானவில்லுக்கு நிறங்கள் வந்தது, வானம் ஏன் மிக உயரத்தில் போனது'' போன்ற கதைக்கூறுகள் இயற்கை மற்றும் அறிவியல் உண்மைகளைக் குழந்தைகளுக்குச் சுவைபட இயம்புவனமாகும். ''அக்கா குருவி எழுப்பும் குரலுக்குப் பாச உணர்வைக் காரணங்காட்டி ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு அக்கா குருவியும் தங்கச்சிக் குருவியும் பாசமாக இருந்தன. இரண்டும் ஆற்றுக்குக் குளிக்கக் போகும்போது, அக்காக் குருவி தவறி ஆற்றில் விழுந்து இறந்து போனது. அக்காவைத் காணாத ஏக்கத்தில் தங்கச்சிக்குருவி ''அக்கா, அக்கா'' என்று கூப்பிட ஆரம்பித்தது. இன்று வரை தொடர்கிறது.
இக்கதை சகோதரிகளுக்கிடையே உள்ள பாச உணர்வை எடுத்துக்காட்டாக உள்ளது.
உள்ளத்தால் வலியவனாதல்:
''புத்திமான் பலவான்'' என்னும் கருத்தைப் பலகதைகள் கூறுகின்றன. சிறிய உடல் உள்ளவராயினும் உள்ளத்தின் வலிமையால் சாதிக்கலாம்.
''ஒரு கழுதையின் காலருகே இருந்த கட்டெறும்பு தன்னை மிதித்து விடாமல் இருக்கக் கெஞ்சியது. ஆனால் கழுதை ஆத்திரத்தோடு காலை ஒதுக்கியது. அதற்குள் கட்டெறும்பு கழுதையின் காதிற்குள் போய்விட்டது கழுதை கத்திக் கொண்டே ஓடியது''
இக்கதை, உடல் வலிமையை வைத்துப் பிறரைத் துன்புறுத்த நினைப்பது தவறு என்பதை வலியுறுத்துகிறது.
உண்மையே கூறல்:
என்றும் எப்போதும் உண்மையே வெற்றிபெறும். எவ்வாறாயினும் உண்மை தன் முகத்தைக் காட்டிவிடும் என்னும் நீதியும் கதைகளில் அறியக் கிடைக்கிறது.
''சாமி, துரை இருவரும் பக்கத்து, பக்கத்து வயல்காரர்கள் ஒருநாள் வரப்பின் மீது ஒரு முத்து மாலை கிடந்தது. அதன் பெரும்பகுதி சாமியின் இடத்தில் இருந்தது. இருவரும் சண்டையிட்டு, ஊர்ப் பெரியவரின் தீர்ப்பை வேண்டினர். அவர் மறுநாள் தீர்ப்புக் கூறுவதாகக் கூறினார். மறுநாள் முத்துமாலை கிடந்த அதே இடத்தில் செத்த எலி ஒன்று கிடந்தது. எலியின் பெரும்பகுதி சாமியின் இடத்தில் கிடந்ததால் துரை அவனைத் தூக்கிப் போடச் சொன்னான். அவனும் பணிவுடன் செய்தான். இதைப் பார்த்த பெரியவர் எலி எவ்வாறு சாமிக்குச் சொந்தமானதோ அவ்வாறே முத்துமாலையும் அவனுக்கே உரியது என்று தீர்ப்பு வழங்கினார்''.
''வாய்மையே வெல்லும்'' என்னும் அழியாத கருத்தை இக்கதை உரைக்கின்றது.
கதைகள் மனித வாழ்வின் வரலாறுகளை உணர்த்துவன. குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சியில் நீதிக் கதைகள் சிறப்பான பங்கினைக் கொண்டுள்ளன. தென்காசி வட்டாரக் கதைகள் சிலவற்றைப் பார்க்கும்போது, அக்கதைப் போக்குகள் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் காணப்படுவதை அறியமுடிகிறது. பொதுவாக சமூகத்தின் செய்திகளையும், குறிப்பாக - வட்டாரச் செய்திகளையும் தாங்கி நாட்டுப்புறக் கதைகள் அமைகின்றன. இக்கதைகளைச் சமூகவியல் நோக்கில் ஆராயும் போது அவற்றின் இன்றியமையாமை இன்னும் வெளிப்படும்.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக