அணுவுக்கு அனுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை
ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக் கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில், எந்தக் கோவிலிலிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில், ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க முயலும் கூச்சல்களும் வெளிப்படுவதைக் கேட்டாள். குளப்படிக்கட்டில் ஒர் ஆண்பிள்ளை குந்தியவண்ணம் இரு கைவிரல் நகங்களையும் கடித்துக் கொண்டு பரபரப்போடு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தான்,
ஒர் இளம் பெண் மரத்தடியில் மல்லாந்து படுத்தவண்ணம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு துடித்தாள்.
ஜன்மம் எடுக்க வேண்டுமெனவே பரமாணுவாய் வந்திருக்கும் தேவியானவள், உடனே அவ்விளந்தாயின் உள்மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில் பிரவேசித்தாள். ஆனால், ஏற்கெனவே அவள் வகுத்திருந்த விதிப்படி அவ்விடத்தில் ஒரு பிண்டம், வெளிப்படும் முயற்சியில் புரண்டு கொண்டிருந்தது.
அதனுடன் தேவி பேசலுற்றாள்:
"ஏ ஜீவனே, நீ இவ்விடத்தை விட்டுவிடு. நான் இந்தக் காயத்தில் உதிக்கப் போகிறேன்."
"தேவி, சத்திய ஸ்வரூபியாகிய உனக்குக் கேவலம் இந்த ஜன்மத்தில் இப்பொழுது ஆசை பிறப்பானேன்? இதன் உபாதைகளைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படித் தவிக்கிறோம்?"
"குழந்தாய், நான் குழந்தையாயிருக்க விரும்புகிறேன். அன்னையாய் இருந்து, என் குடும்பமாகிற இவ்வுலகங்களைப் பராமரித்துப் பராமரித்து நான் கிழவியாகிவிட்டேன். எனக்கு வயதில்லையாயினும், குழந்தையாக வேண்டும் என்னும் இச்சை ஏற்பட்டுவிட்டது-"
"தேவி, இப்பொழுது நீ நினைத்திருப்பது அவதாரமா?"