23/11/2012

சங்கச் சுரங்கம் - 1 : ஓரிற்பிச்சை - சு.பசுபதி


கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த என் நண்பன் நம்பியை வீட்டுக்குள் வரவேற்றேன்.

தமிழ்ப் பாடல்கள் என்றால் நம்பிக்கு மிகவும் பிடிக்கும், மணிக்கணக்கில் என்னுடன் அவற்றைப் பற்றிப் பேசுவான்; கூடவே என் மனைவி கொடுத்துக் கொண்டே வரும் தின்பண்டங்களும் உள்ளே போய்க்கொண்டே இருக்கும். இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்துவிடுவான்.

காலணியைக் கழட்டிக்கொண்டே நம்பி சொன்னான்: " முதலில், என் தாக சாந்திக்காக... இந்தக்குளிருக்கு இதமாக.... ஏதாவது கொடு! பிறகு பேசலாம்" என்றான். நான் அவனை ஏற இறங்கப் பார்த்து, சிறிது தயங்கிப் பின்னர் சொன்னேன்: " நிச்சயமாய்த் தருகிறேன்! குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. இப்படித்தான் பனிக்காலத்தில் வரும் 'அறிவர்'களுக்கு என்ன திரவம் கொடுக்கவேண்டும் என்று அது சொல்கிறது. அதைக் கொடுக்கட்டுமா?" என்றேன். நம்பியின் கண்கள் நூறு வாட் பல்புகள் போல் பிரகாசித்தன.

"பேஷ்! பேஷ்! அந்தக் காலத்துப் பானமா? அமர்க்களமாக இருக்குமே! கொண்டுவா! " என்றான். "சரி! சோபாவில் உட்கார். அந்தப் பாடலைச் சொல்கிறேன். அதற்குள் என் மனைவி உனக்கு அதைத் தயாரித்து கொண்டு வருவாள்" என்றேன். நான் அவனுக்குச் சொன்ன பாடலை உங்களுக்கும் சொல்கிறேன், சரியா?

மார்கழி, தை மாதங்களை முன்பனிக்காலம் என்பார்கள். அதற்கு ' அச்சிரம்' 'அற்சிரம்' என்று பெயர்.
பனிக்காலம் பற்றிய பல குறுந்தொகைக் காட்சிகளில் இதுவும் ஒன்று. ஓரில் பிச்சையார் என்ற புலவர் பாடியது. அந்தப் பாடல் தீட்டும் ஓவியம் இதுதான்:

வேலை காரணமாகத் தலைவன் வேறு நாட்டிற்குச் சென்றிருந்தான். குளிர் காலம் வரும்போது வீடு திரும்புவதாகத் தலைவியிடம் அவன் சொல்லி இருந்தான். தலைவியோ காத்துக் காத்துப் பொறுமை இழந்தவளாய்த் துடித்துக் கொண்டிருந்தாள். இன்னும் தலைவன் வந்தபாடில்லை. தோழி, தலைவியின் நிலையைப் பார்த்துப் பரிதாபப் பட்டு, ஊருக்கு வந்துள்ள ஓர் அறிவரிடம் சொல்வது போல் அமைந்துள்ள பாடல் இது.

அறிவர் என்பவர்கள் துறவிகள்; முக்காலத்தையும் அறியும் ஆற்றலுள்ளவர்கள்.

"நான் துறவியல்ல; ஆனாலும் ... உனக்கு ஆட்களை மதிப்பிடுவதில் 100 மார்க்! என்னை 'அறிவாளி' என்று சொல்வது மிகப் பொருத்தமே!" என்று காலரைச் சரிசெய்துகொண்டே பூரித்தான் நம்பி.

அறிவர்கள் பொதுவாக அந்தணர்கள் இருக்கும் வீடுகளிலும், நாய்கள் இல்லாத வீடுகளிலும் போய் சோறு அளிக்க வேண்டுவர். இப்படிச் சோறு வாங்கி உண்டு வாழ்வதை உஞ்சவிருத்தி என்றும் சிலர் சொல்வர்.

"அட, அந்தக் காலத்திலேயே இந்த நாய்கள் கடித்துக் குதறும் பிரச்சினை இருந்தது போலிருக்கிறதே?"
என்றான் நம்பி.

சில சமயங்களில் அறிவர்களுக்குத் தலைவன் எப்போது வருவான் போன்ற தகவல்கள் தெரிந்திருக்கும்.
அதனால், தோழி அறிவரிடம் கேட்கிறாள் :

"அறிவரே! மின்னலைப் போன்ற இடையுடைய என் தலைவி தலைவன் வருகைக்குக் காத்திருக்கிறாள். நடுக்கும் குளிர் காலத்தில், வாடைக் காற்று வீசும் பருவத்தில் வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறான் தலைவன். அந்தப் பருவம் எப்போது வரும் என்று சொல்லுங்கள்! உங்களுக்குக் கோடிப் புண்ணியம்!
பொதுவாக நிறைய வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து, அங்கே கிடைக்கும் சிறு, சிறு உணவுப் பகுதிகளைச் சேர்த்து உண்டு பசியைத் தீர்த்துக் கொள்ளும் உங்களுக்கு ஒரு வீட்டிலேயே முழுமையான, நல்ல விருந்து கிடைக்கட்டும்!

குற்றமற்ற தெருவில், நாய் இல்லாத வீட்டில், செந்நெல் சோற்றுருண்டையும், வெண்மையான நெய்யும் சேர்ந்த பிச்சை உணவை ஒரே வீட்டில் பெறுவீர்! மேலும், நீரைச் சேமிக்க நீங்கள் வைத்திருக்கும் செப்புப் பாத்திரத்தில் (கமண்டலத்தில்) பனிக்காலத்திற்கே உரிய வெந்நீரும் கிடைக்கட்டும்!" என்று வாழ்த்துகிறாள் தோழி. (இப்படி ஒரு அற்புதமான வாழ்த்து.... அறிவருக்கு ஒரே வீட்டில் அன்றைய பிச்சை கிடைக்கட்டும்...என்று சொல்லியதால், இந்தப் புலவர்க்கு 'ஓர்+இல்+ பிச்சையார்' 'ஓரிற் பிச்சையார்' என்ற பெயர் கிட்டியது.)

இதோ அந்தப் பாடல்:

ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே -
"மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது? ' என்றி:
அக்கால் வருவர், எம் காதலோரே. (குறுந்தொகை - 277)

(ஆசு இல் - குற்றம் இல்லாத, வியன் - அகன்ற, கடை - வாயில், அமலை - சோற்றுத்திரள்,
இழுது - நெய், சேம - சேமித்து வைக்கும், கடைப் பெயல் வாடை - இறுதியில் மழையைக் கொடுக்கும்
வாடைக்குரிய காலம்; வாடை முன்பனிப் பருவத்திலும் இருப்பதால் கூறப்படும் பருவம் அற்சிரம் அல்லது
முன்பனிக் காலம் )

"சே! கடைசியாகப் போயும், போயும் வெறும் வெந்நீர் கொடுத்து என்னை ஏமாற்றப் போகிறாயா?" என்று முகத்தைச் சுளித்தான் நம்பி.

"பரவாயில்லை, அதைக் குடித்துவிட்டு, இங்கேயே இருந்து இரவுச் சாப்பாட்டை இந்த எளியனின் 'ஓரில்லில்' முடித்துக் கொண்டு போயேன்" என்றேன்.

""அவ்வளவுதான், வேறு வினையே வேண்டாம்! இங்கே சாப்பிட்டுவிட்டு என் வீட்டிற்குச் சென்றால், உணவு தயாரித்துக் காத்திருக்கும் என் மனைவியாகிய என் 'இல்' .. , இனிமேல் வீட்டில் உங்களுக்கு உணவு 'இல்' , தினமும் எங்கேயோ சென்று 'ஓரிற்பிச்சை'யோ , 'பல இல் பிச்சையோ' எடுக்கப் போம்! என்று சொல்லி என்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவாள்! " என்று சொல்லி, வெந்நீரை அவசரம், அவசரமாகக் குடித்துவிட்டு, தன் வீட்டிற்குக் கிளம்பினான் நம்பி.

நன்றி - திண்ணை 2009

18/11/2012

தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி? - முனைவர் மு.இளங்கோவன்


தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான  ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.

தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது. தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின்  தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. 

தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.
குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவதிலும், வானவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம். 

தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.
தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது. சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் மொழியின் 247 எழுத்துக்கள் தவிர்த்து கிரந்த எழுத்துக்களும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) தமிழோடு பழகி விட்டன.  கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.

கிரந்த எழுத்துகள் என்றால் என்ன?

கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும்.  வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து. அதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம்.  "கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்' என்பர் மொழிஞாயிறு பாவாணர்.

தமிழகத்தில் வடமொழியை எழுத, வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின. பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர். இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.

ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான் மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு அரசாட்சியில் வட மொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது.

கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும். தொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது. அதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளது.

"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே''

என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது. பின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத்தெற்றென விளங்கும்.

கி.பி.12, அல்லது கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் கூறுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது (நன்னூல் நூற்பாக்கள்: 146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர். அந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச் செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.

இந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்ததை நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து (எ, ஒ, ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. (இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார். அது புலவர் காலம். இந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுது முடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும்.)

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும் (மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்.

கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?

தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம். தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது. ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.

அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன. தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது. திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது.

முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர். அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்.

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரின் கடமையாகும்.

நன்றி - கலைக்கேசரி

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 21 - ப.முருகன்


முடிவுரை

இலக்கியங்கள் வாழ்க்கையின் எதிரொலிகள். இவை சமுதாயத்தின் வளர்ச்சியைக் காட்டும் கருவிகளாகும். தமிழ் இலக்கியம் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே பெருநிலை பெற்றதாகும். பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை உலக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறும் தகுதி மிக்கவையாகும்.

தொல்காப்பியச் செய்யுள் இயலில் தமிழ் இலக்கிய வகைகள், இலக்கிய மரபு, இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு ஆகிய அனைத்தையும் காண்கிறோம்.

காப்பியம் என்ற ஓர் இலக்கிய வகையைத் தவிர தமிழில் அமைந்த பிற இலக்கிய வகைகள் அனைத்தும் சிற்றிலக்கியங்கள் என்னும் பகுப்பில் கூறப்பெறுகின்றன. பொருண்மையாலும் அளவாலும் இவை சிற்றிலக்கியங்கள் என அழைக்கப்பட்டாலும், பெருமையிலும் சிறப்பிலும் இவை பேரிலக்கியங்களே ஆகும். பிரபந்தங்கள் தொண்ணூற்று ஆறு வகையின என்பதை பாட்டியல் நூல்கள் குறிப்பிடினும், இலக்கிய வரலாற்றில் முந்நூற்றிற்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களின் வகைகளை அறிகிறோம் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் ‘தமிழில் சிற்றிலக்கிய வரலாறு’ எனும் நூலின் அணிந்துரையில் கூறியுள்ளார்.

பொதுவாக சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிகம் என்பது நன்றாகத் தெரிகிறது. அதன் எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். இவற்றில் பரவலாக அறிந்திருக்கும் வகைகள் சிறிய அளவுதான். சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தை பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன இயம்புகின்றன என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை குறிப்பிடுகிறார்.

பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல் ஆகிய இரு நூல்களையும் பார்க்கும் போது 12ஆம் நூற்றாண்டு வரையிலும் இலக்கிய வகைகள் 96 என வரையறுத்துக் கூறும் வழக்கு ஏற்படவில்லை என்றும், முதன்முதலாக கிபி. 16ம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்த மரபியல் எனும் நூலில்தான் காண முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

பிள்ளைக்கவி முதல் புராணம் ஈறாகத், தொண்ணூற்றாறு என்னும் தொகையதாம் என்று பிரபந்த மரபியலும் பதினாறை ஆறிற்பெருக்கிப் பிரபந்தாதி/பலவகை எடுத்துரைக்கின் என்று பிரபந்த தீபிகையும் 96 என வீரமாமுனிவரின் சதுரகராதியும் சுட்டிக்காட்டுகின்றன. இவை பல்கிப் பெருகி முந்நூற்று முப்பத்தொன்று ஆகிவிட்டன என்கிறார் ந.வீ.செயராமன், தனது சிற்றிலக்கியத் திறனாய்வு எனும் நூலில்.

பிள்ளைத்தமிழ், பரணி, கலம்பகம், கோவை, உலா, தூது, அந்தாதி, ஆற்றுப்படை, குறவஞ்சி, பள்ளு, மாலை, பதிகம், செவியறிவுறூஉ, கையறு நிலை, கைக்கிளை, எண்செய்யுள், தாண்டகம், சதகம், ஒருபா ஒரு பஃது போன்றவற்றை பற்றி பார்த்துள்ளோம். இவை அல்லாத நொண்டி நாடகம், கீர்த்தனைகள் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டோம்.

சங்க காலத்துக்குப் பிறகு மன்னன், வள்ளல், இறைவன் பற்றிய இலக்கியங்கள் அதிகரித்தன. அதன் விளைவாக பக்தி இலக்கியம் பல்கிப் பெருகியது. இந்தக் காலங்களில் மன்னனின் அங்கங்களாக உள்ள மலை, ஆறு, நாடு, ஊர், தார்(மாலை), குதிரை, களிறு (யானை), கொடி, முரசு, செங்கோல் ஆகியவற்றைப் புகழ்ந்துபாடுவது தசாங்கம், தசாங்கத்தயல், சின்னப்பூ என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இவை பாவினத்தின் அடிப்படையில் வேறுபடும். நேரிசை வெண்பா, வெண்பாவால் பாடப்படுவது தசாங்கம், சின்னப்பூ. ஆசிரியப்பா அல்லது ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவது தசாங்கத்தயல். சின்னப்பூ என்பது அரசனின் சின்னத்தைப் பற்றி பாடப்படுவது. தசாங்கத்துக்கு எடுத்துக்காட்டு திருத்தசாங்கம். இது திருவாசகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாரதியாரும் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் இதன் முன்னோடி.

ஆடவர் அல்லது பெண்டிர், இறைவன் அல்லது இறைவி ஆகியோரின் உறுப்பு அல்லது உறுப்புகளைப் புகழ்ந்து பாடுவது நயனப்பத்து (கண்கள்), பயோதரப் பத்து (மார்பு) அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம்.

பெண்களைப் புகழ்ந்துபாடும் இலக்கிய வகைகள் புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, தாரகை மாலை ஆகியவை. யானையை எதிர்கொண்டு அடக்கிய செய்திகளை குறிப்புகளை கருவாக வைத்து பாடப்பட்ட புதிய இலக்கிய வகையே வாதோரண மஞ்சரி ஆகும்.

இவை யாவும் ஒரு சுருக்கமான அறிமுகமாகவே இருக்கும். ஒவ்வொரு வகையும் ஒரு புத்தகமாக எழுதக்கூடியவை. அவற்றை மிக விரிவாக எடுத்துரைத்தால் இந்தப் பகுதியை படிப்பதை சலிக்கச் செய்துவிடும். “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்பது போல நாம் தெரிந்தது ஓரளவு, தெரிய வேண்டியது பேரளவு. முயன்று கற்றால் அவற்றை அறிந்து ரசிக்கலாம். ஒவ்வொருவரும் ரசிகமணி ஆகலாம்.

நன்றி - தீக்கதிர்


சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 20 - ப.முருகன்


கீர்த்தனை

“நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் மகாகவி பாரதி. தமிழில் வழங்கும் நாடோடிப் பாடல்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றின் பா வடிவங்களுக்கு வரைமுறை இல்லை. என்றாலும் நெஞ்சத்தை ஈர்ப்பவை அவை. வண்ணம், சிந்து, கண்ணி, கீர்த்தனை எனப் பல வடிவங்கள் உள்ளன.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வரிப்பாடல்கள் பாடினார். மாணிக்கவாசகர், ஆண்டாள் போன்றோர் இலக்கிய வடிவம் தந்தனர். தாயுமானவர், இராமலிங்க வள்ளலார், பாரதியார் போன்றோரும் நாட்டுப்புறப் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஓர் எதுகைபெற்ற இரண்டடிகள் அளவு ஒத்து வருதல் சிந்து எனப்படும். “பூவும் வேண்டாமே பழமும் பொரியும் வேண்டாமே! மேவும் உள்ளன்பே - தேவி விரும்பும் நல்லமுதாம்” நான்கு அடிகள் ஓர் எதுகையாய் வருவதும் உண்டு. காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து, தங்கச்சிந்து, வளையல் சிந்து, ஆனந்தக்களிப்பு, தெம்மாங்கு என சிந்து பலவகைப்படும். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து புகழ் பெற்றது.

இரண்டு இரண்டு அடிகளால் ஆவதே கண்ணி. இதற்கு தாயுமானவரின் பராபரக்கண்ணி, கிளிக்கண்ணி சிறந்த எடுத்துக்காட்டு.

கீர்த்தனை என்பது இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலை. இது எடுப்பு, தொடுப்பு, படுப்பு என மூன்று நிலைகளில் அமைந்திடும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதும் அவைதான். கீர்த்தனைக்கு உதாரணங்கள் காட்டுவது எனில் அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை, கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆகியவற்றைக் காட்டலாம். இதை நாடகமாகவும் கொள்ளலாம். சிற்றிலக்கியமாகவும் கொள்ளலாம்.

அருணாசலக் கவிராயர் (1712-1779) பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் சீர்காழி மூவர் என்றழைக்கப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். இசைத்தமிழ் வளர்த்த சீர்காழி முத்துத்தாண்டவர் (1525-1600), மாரிமுத்துப் பிள்ளை (1712-1787) ஆகியோர் மற்றவர்கள். இவர்களுக்குப் பிந்தையவர்கள் தான் திருவையாறு மும்மூர்த்திகள் எனப்படும் தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோர்.

கீர்த்தனைகளில் மிகவும் கீர்த்தி வாய்ந்தது கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையாகும். மற்றெல்லா கீர்த்தனைகளுக்கும் இல்லாத சிறப்பு நிலவுடமை சாதிய ஆதிக்கத்தை எதிர்க்க நந்தன் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த மகனை தன் கதாபாத்திரமாக்கிக் கொண்டது தான் என்கிறார் இலக்கிய ஆய்வாளர் கே.முத்தையா. அவர் தமது `தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்’ எனும் நூலில் மேலும் கூறுவதாவது:-

வேதியர் என்பவர் ஒரு பெரு நிலச்சுவான்தார். அவருக்குக் கீழ் அடிமையாகப் பணியாற்றிய கூலி உழைப்பாளி நந்தன். நந்தனுக்கு மேல்சாதித் தெய்வமான நடராஜர் மீது பக்தி மேலிட்டுவிட்டது.

காத்தவராயன், கருப்பண்ணன், முனியன், மூக்கன், காட்டேரி போன்ற சாமிகள் தாம் நந்தன் கும்பிட வேண்டிய தெய்வங்கள். மேல்சாதி தெய்வமான தில்லை நடராஜர் மீது நந்தனுக்கு பக்தி பிறந்தது அவனுக்கு அடுக்காத செயல். எனவே வேதியருக்குக் கோபம் மூண்டது. அவர் கேட்கிறார்.

பறையா நீ சிதம்பரம் என்று சொல்லப்படுமோடா

போகப்படுமோடா-

அட பறையா!

அறியாத்தனம் இனி சொன்னால் இனிமே

அடிப்பேன் கூலியைப் பிடிப்பேன் - பாவிப்பறையா!

சிதம்பரம் என்பதை விடு

கொல்லைச் சேரியிலே வந்து படு - நாத்தை

பதத்திற் பிடுங்கினதை நடு - கருப்பண்ண சாமிக்கே பலி கொடுத்திடு

இதுதான் வேதியர், நந்தனுக்குக் கூறிய நீதி, மேல் சாதி தெய்வத்தை நந்தன் கனவிலும் நினைக்கக்கூடாது என்பது மட்டுமல்ல; நினைத்தால் கூலியைப் பிடித்துவிடுவாராம் நிலச்சுவான்தாரான வேதியர். சாதியும் நிலவுடமை ஆதிக்கமும் இவ்வாறு இணைந்து பிணைந்து நின்றன என்கிறார் கே.முத்தையா.

இப்படி எழுதியதற்காகவே பிராமண சமூகத்தில் பிறந்த கோபாலகிருஷ்ண பாரதியை சாதிப்பிரஷ்டம் செய்தார்கள். ஒதுங்குவதற்குக் கூட மேல்குலத்தோர் என்பவர்கள் தம் வீடுகளின் திண்ணைகளில் கூட இடம்தர மறுத்துவிட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளலாம். பிறகு நந்தனுக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே.

இது தவிர, அவர் எழுதிய நீலகண்ட நாயனார் கீர்த்தனை, இயற்கை நாயனார் சரித்திரக் கீர்த்தனை, காரைக்கால் அம்மையார் சரித்திரக் கீர்த்தனை ஆகிய நூல்களும் சிறப்பானவை. மாயூரம் வேத நாயகம் பிள்ளை சர்வசமய சமரசக் கீர்த்தனை, சத்திய வேதக் கீர்த்தனை ஆகியவற்றை எழுதினார்.

கி.பி. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கீர்த்தனை நூல்கள் மிகுதியாகத் தோன்றின. வேதநாயக சாஸ்திரி யார் பல கீர்த்தனைப் பாடல்களை எழுதினார். இவர் தவிர இதர ஐரோப்பியர் எழுதிய கீர்த்தனை நூல்கள் குறிப்பிடும்படியாக இல்லை என்கிறார் டாக்டர் சா.சவரிமுத்து.

வீரமாமுனிவர் கூறிய 96 பிரபந்தங்கள் தவிர ஒருசிலவற்றை பார்த்தோம். ஆயினும் சிற்றிலக்கியங்கள் எல்லாவற்றையும் தொல்காப்பியர் விருந்து எனும் வனப்பினுள் அடக்கலாம். எனினும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்’ என்கிற நூலில் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். குணவீர பண்டிதர் எழுதிய வச்சணந்தி மாலை எனப்படும் வெண்பா பாட்டியல் எனும் நூலில் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 19 - ப.முருகன்


நொண்டி நாடகம்

வீரமாமுனிவர் தனது சதுரகராதியில் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்கள் தவிர வேறு சிலவும் சிற்றிலக்கியங்கள் என்றே அறிஞர் பெரு மக்களால் அழைக்கப்படுகின்றன. அதில் ஒன்று `நொண்டி நாடகம்.’

பல நாடுகளில் நாட்டியக் கலையும் நாடகக் கலையும் இணைந்தே வளர்ந்து அமைந்தன. தமிழ்நாட்டிலும் அந்த நிலைமை இருந்து வந்ததைக் `கூத்து’ என்ற பழைய சொல் விளக்கும் என்கிறார் டாக்டர் மு.வரதராசனார். இலக்கிய மரபு எனும் நூலில் அவர் மேலும் கூறுகிறார். கூத்தர், பொருநர் என்ற பெயரில் கலைஞர்கள் வாழ்ந்து நடன, நாடகக் கலைகளை வளர்த்து வந்தனர் என்பது தொல்காப்பியம் முதலான பழைய நூல்களால் தெளிவாகின்றது; வசைக்கூத்து, புகழ்க்கூத்து, வேத்தியல் கூத்து, சாந்திக்கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, இயல்புக்கூத்து, தேசிக்கூத்து முதலான பலவற்றின் குறிப்புகள் அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படுகின்றன என்கிறார்.

பத்தாம் நூற்றாண்டில் இராஜராஜேசுவர நாடகம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்தது என்பதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டினால் அறியலாம். பிற்காலத்தில் குறவஞ்சி எனும் நாடக வகை தோன்றி வளர்ந்தது. திரிகூடராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி இதற்கு எடுத்துக்காட்டு.

அழகர் குறவஞ்சி, ஞானக் குறவஞ்சி, மீனாட்சியம்மை குறம், கொடுமகளூர்க் குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முதலியன இவ்வகையைச் சேர்ந்தவை.

இவ்வகை நாடகம் அகவல், வெண்பா, கலிப்பா, கலித்துறை, விருத்தம் முதலிய செய்யுட்களோடு சிந்து, கீர்த்தனம் முதலிய இசைப் பாட்டுக்களும் கொண்டிருப்பதால் ஓசை நயம் மிகுந்து கேட்பவர்க்கு இனிமை தரும்.

பள்ளு என்னும் நாடக வகையும் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியது. உழவர்களின் வாழ்க்கையை சுவைபட எடுத்துரைப்பது இந்நாடகம்.

இந்நாடகத்தில் பலவகை செய்யுள்களும் கலந்து ஓசை இனிமை தரும். நாட்டுப் பாடல்களின் இசையிலும் சில அமையும். முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, பறாளைப்பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு, குருகூர்ப்பள்ளு, வடகரைப் பள்ளு, கதிரைமலைப்பள்ளு, வையாபுரிப் பள்ளு முதலிய நாடக நூல்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.

குறவஞ்சி, பள்ளு நாடக நூல்கள் கற்றோர் மட்டும் அல்லாமல் மற்றவரும் கேட்டு இன்புறும் வகையில் உள்ளவை. ஆதலால் மக்கள் பேசும் கொச்சைச் சொற்களும் இடையிடையே வருதல் உண்டு.

அருணாசலக் கவிராயர் இராமாயணத்தை (இராமநாடகம்) நாடகமாக்கித் தந்துள்ளார். அது போலவே மகா பாரதம் பாரத விலாசம் எனும் பெயரில் நாடகமாக்கப்பட்டது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் தலையெடுத்தது. புராண நாடகங்கள் மட்டுமின்றி காத்தவராயன் போன்றவையும் உருவாயின.

நாடகங்களுக்கு மன்னர்களிடமும், கற்றவர்களிடமும் ஆதரவு குறைந்த பிற்காலத்தில் தெருக்கூத்து என்ற பெயரில் வாழ்வன ஆயின. ஆடல், பாடல்களில் கலை மெருகு இல்லாமல் அமைந்தன என்று குறைப்பட்டனர். ஆனால் அவற்றில் உணர்ச்சி இல்லாமல் போகவில்லை. கற்பனை இல்லாமல் போகவில்லை. அதனால் பாமர மக்கள் பாராட்டும் தன்மையுடையதாய் விளங்கின.

இந்த வகையில் 17-ம் நூற்றாண்டில் மக்களிடையே செல்வாக்குடையதாய் விளங்கியது தான் நொண்டி நாடகம். நாட்டுப்புறப் பாடல்களில் பாளையக்காரர்களைப் போற்றும் வகையில் பாடல்கள் உள்ளன. நாட்டுப்புறத்தில் இவர்களின் ஆதரவில் நாடகங்கள் படைக்கப்பட்டன.

நொண்டிச் சிந்து வகையில் அமைந்துள்ள நொண்டி நாடகம், 96 வகை பிரபந்தங்களில் ஒன்றாகக் கூறப்பட வில்லை என்றாலும் இந்த நாடகங்களையும், ஒரு சிற்றிலக்கிய வகையாகக் கொள்ளலாம் என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து.

18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழனிநொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் என்பவை ஏட்டுச்சுவடியாக உள்ளன. திருக்கச்சூர் நொண்டி நாடகம் அச்சிடப்பட்டது என்கிறார் டாக்டர் மு. வரதராசனார்.

இத்தகைய நொண்டி நாடகங்களில் வரும் தலைவன் நெறிதவறி நடக்கிறான். பரத்தையரோடு உறவு கொண்டு ஒழுக்கக் கேடன் ஆகிறான். உடல் நோயும் மனநோயும் பெறுகிறான்.

நோய் மிகுந்து நடக்கும் வலிமை இழந்து நொண்டியான பிறகு தவறை நினைத்து இரங்கி கடவுளை வேண்டுகிறான். கண்ணீர் விட்டு கசிந்து உருகுகிறான். பின்னர் உடல் நலம் தேறுகிறான். இது தான் நொண்டி நாடகத்தின் அமைப்பாகும்.

இன்றுள்ள நொண்டி நாடகங்களில் கந்தசாமிப் புலவர் எழுதிய திருச்செந்தூர் நொண்டி நாடகமே முதல் நாடகம் என்றும், இவரே சீதக்காதி நாடகத்தையும் எழுதினார் என்றும் டாக்டர் ந. இளங்கோ கூறுகிறார். திருமலை நொண்டி நாடகம், சாத்தூர் நொண்டி நாடகம் போன்ற நாடகங்கள் சிறந்தவை என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து. ஆயினும் இவற்றில் சில நாடகங்களே கிடைக்கின்றன என்றும் கூறுகிறார்.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 18 - ப.முருகன்


தாண்டகம்

வீரமாமுனிவர் கூறும் சிற்றிலக்கிய வகைகள் 96. ஆயினும் பரவலாக அறியப்பட்டவை நான்கில் ஒரு பங்குதான் தேறுகிறது. அவர் முதலாவதாக குறிப்பிடுவது சாதகம். நமக்கு என்ன தோன்றுகிறது.

சங்கீதம் அறிந்தவர்களாக இருந்தால் ‘சாதகம்’ செய்வது பாடிப் பயிற்சி எடுப்பது (கழுத்து வரை தண்ணீரில் உடல் மூழ்கியிருக்குமாறு நின்று கொண்டு செய்வதும் உண்டு). சாதாரணமாக ஜோதிடம் பார்ப்பதற்கு பயன்படுகிறது சாதகம் என்றும் நினைக்கலாம். ஜாதகக் கதைகள் என்று புத்தமதத்தினர் கூறும் கதைகள் உண்டு. இவற்றில் எது என்பது ஓரளவு நூலறிவு உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆறாவதாக உள்ளது ஐந்திணைச் செய்யுள். இதற்கும் உதாரணம் காட்டுவது சிரமம்தான். நாற்பத்து மூன்றாவது எண் செய்யுள். அதை பார்த்துவிட்டோம். நாற்பத்து நான்காவதாக உள்ளது தொகை நிலைச் செய்யுள். நாற்பத்து ஐந்தாவது ஒலியல் அந்தாதி. அடுத்தடுத்துள்ள பதிற்றந்தாதி, நூற்றந்தாதி பற்றியும் இந்தப் பகுதியில் சொல்லப் பட்டுள்ளது.

நாற்பத்து எட்டு உலா. பார்த்து விட்டோம். உலா மடல், வளமடல் ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. மடல் என்றால் கடிதம். அந்தக் காலத்தில் திருமுகம் என்பார்கள். ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டின் மன்னனுக்கு கொடுத்துவிடும் கடிதம் மடல். அதைத் திருமுகம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டு உண்டு. ஐம்பத்து நான்காவதாக இருப்பது கண்பெடை நிலை. அடுத்தடுத்து துயிலெடை நிலை, விளக்கு நிலை (61), புறநிலை (62), கடை நிலை (63) ஆகியவை உள்ளன. அறுபத்து நான்காவது கையறு நிலை. இதுபற்றி ஏற்கெனவே தெரிந்துகொண்டோம்.

அறுபத்து ஐந்தாவது தசாங்கப்பத்து, தசம் - பத்து, அங்கம் - உறுப்பு, பத்து அங்கம் கொண்ட பத்து. நமது சங்க இலக்கியத்தில் உள்ள பதிற்றுப்பத்து போலத் தான், அதற்கடுத்தது தசாங்க பத்து அயல். இலக்கணம் படிக்கும் போது ஈற்று அயல்அடி என்பார்கள். அதாவது கடைசி அடிக்கும் முதல் அடி. அப்படி எனில் ஒன்பதாவது அடியாக இருக்கலாம். இதே மாதிரியாக நயனப்பத்து (68), பயோதரப் பத்து (69) ஆகியவை உள்ளன. அதற்கடுத்தாற் போல் உள்ளது அரசன் விருத்தம், எழுபதாவது பாதாதி கேசம். எழுபத்து ஒன்று கேசாதிபாதம். உள்ளங்கால் முதல் உச்சிவரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ளது.

இதற்கிடையில் அரசன்விருத்தம் (67) உள்ளது. விருத்தப்பா வகையினால் அரசனைப்பற்றிப் பாடுவது ஆகும். எழுபத்து இரண்டாம் இடத்தில் அலங்காரப் பஞ்சகம். எழுபத்து நான்காவதாக வருவது மங்கல வள்ளை, அடுத்து வருவது (76) நாற்பது, (77) குடிமகன் ஆகும். அதற்கு அடுத்தது தாண்டகம். இதற்கு எடுத்துக்காட்டு உண்டு. திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைப்பார்கள் என்பதை கேள்விப்படாதவர்கள் மிகக் குறைவு. அவர் “ஆளுடைய அரசு” என்றும் “தாண்டக வேந்தர்” என்றும் சிறப்பிக்கப்படுகிறார். அவரது மறுமாற்றத் திருத்தாண்டகம் நூலில் இருந்து எடுத்துக்காட்டு தருகிறோம்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணியறி யோம் பணிவோம் அல்ல

இன்பமே எந்நாளும் துன்பமில்லை

எண்பத்து இரண்டாவது வாயுறை வாழ்த்து. அடுத்தது புற நிலை வாழ்த்து, 93வது இயன் மொழி வாழ்த்து. இவற்றுக்கு எடுத்துக்காட்டு சொல்வதெனில் சங்க இலக்கியத்தில் பல்வேறு பாடல்களின் துறை இயன்மொழி வாழ்த்துதான்.

பெயரின்னிசை(56), ஊரின்னிசை(57), பெயர் நேரிசை (58), ஊர் நேரிசை (59), இது தவிர ஊர் வெண்பா என்பது ஏதாவது, ஊரைப்பற்றி வெண்பா வகையினால் பாடப்படுவது ஊர்வெண்பா என்கிறார்கள். இது போல் கடிகை வெண்பா (89) உள்ளது. எண்பத்து நான்காவதாக உள்ளது பவனிக்காதல். இது உலாவோடு ஒட்டியதாகும். எண்பத்து ஏழாவது ஊசல். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் கூட பெண்பால் பிள்ளைத்தமிழில் இடம் பெற்றிருக்கும்.

எண்பத்து எட்டாவது எழு கூற்றிருக்கை, 90வது சின்னப்பூ, 91 விருத்தவிலக்கணம், 92 முதுகாஞ்சி, 94 பெருமங்கலம், 95 பெருங்காப்பியம், 96 சிறுகாப்பியம், இவையே சதுரகராதியில் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகை பிரபந்தங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள். இவை தவிர வேறு சிலவற்றையும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. சிற்றிலக்கியங்களை ஆய்வுக்குட்படுத்தினால் சமூகச் சூழலைப் புரிந்து கொள்ளலாம்.

நன்றி - தீக்கதிர்

17/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 17 - ப.முருகன்


பதிகம்

வீரமாமுனிவர் கூறும் 96 வகை பிரபந்தங்களில் - சிற்றிலக்கியங்களில் 79வது வகை பதிகம் எனப்படும். ஒரு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை - பாட்டுடைத் தலைவனை பற்றி பாடப்படும் பத்துப் பாடல்கள்தான் பதிகம் ஆகும்.

சங்க இலக்கிய காலத்தில் பதிகம் எனும் பாடல் உண்டு. அது ஒரு நூலின் இறுதிப் பகுதியில் அமைந்திருக்கும். அந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாட்டுடைத் தலைவன் யார்? பாடியது யார்? பாடல்களின் பின்னணி என்ன? பாடிப் பெற்ற பரிசு என்ன? என்பவை பற்றிய குறிப்புகள் இருக்கும்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. அதில் முதல் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்காததால் மீதம் எட்டுப்பத்து உள்ளது. அதன் ஒவ்வொரு பத்துப்பாடலின் முடிவில் பதிகம் எனும் தலைப்பில் பாடல் ஒன்று இருக்கும். அது மேற்கண்ட விபரங்களை கொண்டதாக அமைந்திருக்கும்.

பொதுவாக பக்தி இலக்கிய காலம் என்றழைக்கப்படுவது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியபிரபந்தம் ஆகியவை பாடப்பட்டகாலம். 64 நாயன்மார்களில் கணிசமானவர்கள் பதிகம் பாடியுள்ளனர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் - தேவார மூவர், மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியவர். திருஞானசம்பந்தர் 16 ஆயிரம் பதிகங்கள் பாடினார் என்று பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். எனினும் 383 பதிகங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே”

இது நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடல்.

இவரது ஒவ்வொரு பதிகத்திலும் உள்ள 8வது பாடலில் இராவணன் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. 9வது பாடலில் திருமால், சிவன் பற்றிக் கூறப்பட்டு அதில் சிவனே சிறந்தவன் என்று குறிப்பிடப்படுகிறது. 10வது பாடலில் அனைத்துச் சமயங்களும் போற்றுதற்கு உரியன அல்ல என்றும், சைவமே சிறந்தது என்றும் கூறியுள்ளார் என்று முனைவர் சா.சவரிமுத்து தமது தமிழ் இலக்கிய வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்கள் 4900. இவற்றில் கிடைப்பவை 313. இறைவனை தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் பாவித்து அகத்துறையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். திருவாரூர்ப்பதிகம் இதற்கு எடுத்துக்காட்டு.

சுந்தரர் பாடிய பதிகங்கள் 38000. ஆனால் 100 பதிகங்களும் 1026 பாடல்களும் நமக்குக் கிடைக்கின்றன. அவரது திருப்புகலூர்ப் பதிகத்தின் 2வது பாடல் இது.

“மிடுக்கிலாதானை வீமனே

விறல் விசயனே வில்லுக்கிவன் என்று

கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை

பொடிக்கொண் மேனியெம் புண்ணி யன் எந்தை புகலூர்ப் பாடுமின் புலவீர்காள்

அடுக்குமேல் அமரும் உலகம் ஆள்வ தற்கு யாதும் ஐயுறவில்லையே”

இல்லாதது எல்லாம் சொல்லிப் புகழ்ந்து பாடினேன் அவனும் எனக்கு ஒன்றும் கொடுக்காமல் இல்லை என்று கூறிவிட்டான் என்று ஒளவை பாடிய பாடல்போல இருக்கிறதல்லவா.

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் மனதை உருக்குபவை என்றும் இதற்கு உருகாதவர் வேறு எதற்கும் உருகார் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருச்சதகம் போன்றவை தவிர அவர் பாடிய அச்சோப்பதிகம் மிக முக்கியமானது.

இந்த நால்வர் தவிர திருமாளிகைத் தேவர் (4) கருவூர்த்தேவர் (10), சேந்தனார் (4), பூந்துருத்தி காடவநம்பி (2), கண்டராதித்தர் (1), வேணாட்டடிகள் (1), திருவாளியமுதனார் (4), புருடோத்தம நம்பி(2), சேதிராயர் (1), திருமூலர் (232) என நிறைய பதிகங்கள் உள்ளன.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை ‘பெரிய நாயகி அம்மாள் பதிகம்’ பாடியுள்ளார்.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 16 - ப.முருகன்


எண் செய்யுள்

தமிழ் இலக்கியத்தை வகைப்படுத்தும் பொழுது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று கூறுகிறோம். இவை சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதை பதினெண் மேல்கணக்கு என்றும் குறிப்பிடுவர். அப்படி எனில் பதினெண் கீழ்க்கணக்கு என்று இருக்க வேண்டும் அல்லவா? உண்டு, திருக்குறள், நாலடியார், திரிகடுகம் உள்ளிட்ட பதினெட்டு நூல்கள்தான் அவை.

அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவை பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த பெயர். பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூல் பத்து சேர மன்னர்களைப் பற்றி பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. அதுபோல கீழ்க்கணக்கு நூல்களில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது என எண்ணிக்கையால் ஏற்பட்ட பெயர்கள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் எண் செய்யுள்கள் எனும் பெயரால் அழைக்கப்படவில்லை.

இலக்கண விளக்கப் பாட்டியலில் எண் செய்யுள் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் சொல்லப்படுகிறது.

ஊரையும் பேரையும் உவந்து எண்ணாலே

சீரிதிற் பாடல் எண் செய்யுளாகும்.

என்கிறது 88வது சூத்திரம்.

பிரபந்த தீபிகை எனும் நூலின் 14வது சூத்திரம்,

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை

இசைத்து எண்ணாற் பெயர்பெற

ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைச் சொல்

எண் செய்யுளாகும்

என விளக்குகிறது.

இலக்கண விளக்கப் பாட்டியல் உரையில் பாட்டுடைத் தலைவன் ஊரினையும், பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருள் சிறப்பினாலே பாடுதல் அந்தந்த எண்ணால் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யுள் என்று வகைப்படுத்தப்பட்ட நூலே உணர்த்தப்படுகிறது. இதன்கண் வரும் செய்யுள்களின் பேரெல்லை ஆயிரமாகும். அதாவது ஆயிரத்தை மிஞ்சுதல் கூடாது. இத்தனை என்பது நூற்பெயரால் அறியப்படும் என்று இலக்கியச் சிந்தனைகள் எனும் நூலில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

முத்தொள்ளாயிரம் என்பது மூன்று தொள்ளாயிரம் எனச் சிலரால் குறிப்பிடப்படுகிறது. அப்படி எனில் 2 ஆயிரத்து 700 பாடல்கள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இலக்கணப்படி பார்த்தால் தொள்ளாயிரம் என்பதே பாடல்களை குறிப்பது என்றும் மூன்று அரசர்கள் (சேர, சோழ, பாண்டியர்) பற்றிப் பாடப்பட்டது என்றும் முடிவுக்கு வருவதே சிறந்தது.

இந்நூல் முழுவதுமாக கிடைக்கவில்லை. புறத்திரட்டின் ஆசிரியர் (பேரா.வையாபுரியார்) கருதிய 109 செய்யுட்களே இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. பழைய இலக்கண உரைகளில் ஒருசில செய்யுள்கள் முத்தொள்ளாயிரத்தை சார்ந்தன என நினைக்க இடமுண்டு என்கிறார் அவர். சென்னை பல்கலைக்கழகப்பதிப்பாக புறத்திரட்டு எனும் தொகை நூலை பதிப்பித்து 1938ல் வெளியிட்டவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உரையாசிரியர் இளம் பூரணாரால் எடுத்துக் காட்டப்பட்ட செய்யுள் வருமாறு:-

ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்

ஆற்றலும் ஆள்வினையும் ஒத்து ஒன்றின் ஒவ்வாரே

கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம்

ஆற்றல்சால் வானவன் கண்

இங்கே ஏற்றூர்தியான், கூற்றக்கணிச்சியான் என்பன சிவபெருமானைக் குறிப்பது, வானவன் என்பது சேரனைக் குறிக்கிறது.

வேறொரு பாடலை பார்ப்போம் - பாண்டிய மன்னன் யானை மீது உலா வருகிறான். அக்காட்சியை இளம் பெண்கள் மூவர் காண்கின்றனர். ஒருத்தி யானையின் முகத்தை அலங்கரித்த பொன்முகபடாம் அழகாக இருக்கிறது என்கிறாள். இன்னொருத்தியோ, அதைவிட யானை அழகாக உள்ளது என்கிறாள். மூன்றாமவளோ, மன்னவனுடைய மார்பிலே தவழும் மாலை அழகாக இருக்கிறது என்கிறாள். அரசனின் அழகிலே மயங்கி அவனது மார்பிலே தவழும் மாலையாக எண்ணத் தலைப்பட்டாள் போலும்.

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்

என்னோடு நின்றாரிருவர் அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்கு

யானை நன்றென்றாளும் அந்நிலையள் - யானை

எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார் நன்றென்றேன் தியேன்.

தியேன் என்பது தீயேன் என்பதன் குறுக்கம். இதுபோல அழகிய பல செய்யுள்கள் உடையது முத்தொள்ளாயிரம்.

மன்னனின் முகங்கண்டு மையல் கொண்ட பெண் தன்னை முற்றிலுமாக அவன்வசம் கொடுத்துவிட்டாள். அதை அவள் எப்படிக் குறிப்பிடுகிறாள் என்றால் அவனது அநியாயத்தை பாரடி. ஏதோ ஒரு பங்கு எடுத்துக் கொள்ளாமல் முழுவதுமாக கவர்ந்து சென்றுவிட்டான். நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தனது பங்காக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கைத்தான் பெற்றுச் செல்வார்கள். ஆனால் இவனோ என்னை முற்றிலுமாக அல்லவா அள்ளிச் சென்று விட்டான் என்கிறாள்.

‘அரவகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ அவன் பங்கு’ என்கிற அந்தப்பாடல் காதல் சுவை தோய்ந்த பாடல் மட்டுமல்ல, அக்காலத்திய நிலவுடமைச் சமுதாயத்தில் உழவனுக்கும் நில உரிமையாளனுக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது என்பதைப்பற்றியும் நமக்கு உணர்த்துகிறது. முத்தொள்ளாயிரம் தவிர அரும்பைத் தொள்ளாயிரம், வச்சத் தொள்ளாயிரம் போன்றவையும் எண் செய்யுளுக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன.

நன்றி - தீக்கதிர்

15/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 15 - ப.முருகன்


செவியறிவுறூஉ

வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகை பிரபந்தங்களில் 81வதாக வருவது செவியறிவுறூஉ ஆகும்.

ஒருவர் சொல்கிற சேதியை, கருத்தை கேட்பதற்கு செவிமடுத்தல் என்று சொல்வோம். ஒருவர் மற்றவருக்குச் சொல்வதை - குறிப்பாக அறிவுரையாகச் சொல்வதை செவிக்கு அறிவுறுத்தல் என்று சொல்லலாம். அப்படி எனில் செவியறிவுறுத்தல் என்றுதானே வர வேண்டும். ஏன் செவியறிவுறூஉ?

உப்போ உப்பு என்று உப்பு விற்கிறவர் ராகம் போட்டு கூவி விற்பதை உப்போ ஒ.... உப்பு என்றுதான் எழுத வேண்டும். அப்படி எழுதுவது இலக்கணப்படி அளபெடை என்று குறிப்பிடப்படும். அதாவது கடைசி எழுத்து நீட்டி அளவு கூடுதலாக - ஒலிப்பது ஆகும். இந்த செவியறிவுறு என்பதில் று=ற்+உ என்றிருப்பதால் செவியறிவுறூஉ என்று ஆகியது.

இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் சங்க காலப்பாடல்களில் திணை, துறை என்ற பிரிவுகளில் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் செவியறிவுறூஉ என்பது ஒரு துறையாக அமைந்திருக்கிறது.

இத்துறைக்கு புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பொருள், “மறம் திரிபு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம் தெரிகோலாற்கு அறிய உரைத் தன்று” என்பதாகும். அதாவது பகைமையும் கெடுதலும் அற்ற பெரிய எண்ணங்களை அரசனுக்கு உரைத்தல் செவியறிவுறூஉ எனப்படும்.

வரும் பொருள் உரைத்தல் அமைச்சர்க்கு அழகு என்பது மூதுரை. அமைச்சர்கள் மட்டுமின்றி புலவர்களும் கூட புரவலர்களுக்கு (அரசர்களுக்கு) நல்ல அறிவுரை கூறுவர். அத்தகைய பாடல்கள் புறநானூற்றில் ஏராளம் உள்ளன.

பாண்டியன் அறிவுடை நம்பியின் ஆட்சித் திறத்தில் கொஞ்சம் பிசிறடித்தபோது தலையிடுகிறார். பிசிராந்தையார் என்ற புலவர் அதாவது வரியை கூடுதலாக விதித்ததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அது உனக்கும் நல்லதல்ல, பொதுமக்களுக்கும் நல்லதல்ல என்பதை நயமாக எடுத்துரைக்கிறார்.

காய்நெல் அறுத்துக்

கவளம் கொளினே;

மாநிறைவு இல்லதும்,

பல்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும்,

தமித்துப் புக்கு உணினே,

வாய்புகுவ தனினும்

கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன்

நெறிஅறிந்து கொளினே,

கோடியாத்து, நாடு

பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன்

ஆகி,வைகலும்

வரிசை அறியாக்

கல்லென் சுற்றமொடு,

பரிபுதப எடுக்கும்

பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போல,

தானும் உண்ணான்

உலகமும் கெடுமே.

(புறநானூறு 184)

ஒருமா அளவுக்கு குறைந்த நிலமாக இருந்தாலும் அதில் விளைந்த நெல்லை அறுவடை செய்து கவளமாக்கிக் கொடுத்தால் யானைக்கு அது பல நாட்களுக்கு உணவாகப் பயன்படும். ஆனால் பெரும் அளவிலான நூறு வயல்களாய் இருந்தாலும் யானை, தானே புகுந்து உண்ணுமானால் அதன் வாய்க்குக் கிடைப்பதைவிட, காலடியில் சிக்கி அழிவதுதான் மிகுதியாகும். அதுபோல அரசன், தான் விதிக்கும் வரியை நெறி அறிந்து விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாடு, கோடிப் பொருளை ஈட்டித் தரும்; செழிப்பாக இருக்கும். ஆனால் அரசன் அறிவால் மெல்லியனாகி(குறைந்து) தன்மை அறியாமல் இருக்கும் சுற்றத்தோடு சேர்ந்து, குடிமக்களின் அன்புகெடும் வகையில் வரியை வசூலித்தால் - அதாவது அளவுக்கு அதிகமாக வசூலிக்க முற்பட்டால் - கருவூலத்துக்கு வந்து சேருவது குறைந்து போகும். அதனால் உனக்கும் கேடு, நாட்டு மக்களுக்கும் கேடு ஏற்படும் என்று கூறி லேசாக இடித்துக் கூறுகிறார் பிசிராந்தையார்.

தான், சொல்ல விரும்புகிற கருத்தை மன்னனின் மனம் கோணாமல், யானையை உவமையாய்க் கூறி நயமாக அரசனின் செவியில் புகுந்திட அறிவுறுத்தியதால் இந்தப் பாடல் செவியறிவுறூஉ துறை இலக்கிய வகையாக அமைந்தது.

மகாகவி பாரதி தனது பாஞ்சாலி சபதத்தில் விதுரன் மூலம் துரியோதனனுக்கு அறிவுரை கூறுகின்றார்.

தெய்வத் தவத்தியைச்

சீர்குலையப் பேசுகிறாய்

நின்னுடைய நன்மைக்கு

இந்நீதியெலாம்

சொல்லுகிறேன்

என்னுடைய சொல், வேறு

எவர் பொருட்டும்

இல்லையடா;

பாண்டவர் தாம் நாளையப்

பழியிதனைத் தீர்த்திடுவார்

மாண்டு தரைமேல்

மகனே! கிடப்பாய் நீ.

என்ற பாடலும் செவியறிவுறூஉ வகைதான். ஆனால் துரியோதனன் அதைச் செவி மடுக்கவில்லை. அதனால் பாஞ்சாலியை சபைக்கு இழுத்து வந்து துகில்உரித்து அவமானப்படுத்தி, அதனால் அவள் சபதமிட்டு, பின்னர் குருசேத்திரயுத்தம் நடத்தி துரியோதனனை வீழ்த்தி வெற்றி கொண்டு பழி வாங்குகின்றனர் பாண்டவர், விதுரன் கூறியது போல. செவியறிவுறுத்தலும் வேண்டும். அதைச் செவிமடுத்தலும் வேண்டும். அதுதான் ஆட்சியாளர்க்கும் ஆளப்படும் மக்களுக்கும் நலமாக இருக்கும். இல்லையெனில் முற்பகல் ஆளப்படும் மக்களுக்குத் துயரம். பிற்பகல் ஆள்பவர்களுக்குத் துயரம். எனவே செவியறிவுறூஉவை மனம் கொள்வோம்.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 14 - ப.முருகன்


கையறுநிலை

அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா எனும் பாடல் ஒரு திரைப்படத்தில் சோகமயமான சூழலிலும் பாடப்படும் இந்தப்பாடல் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பிரதிபலிப்பு.

“அற்றைத்திங்கள் அவ்வெண்ணி லவில்

எந்தையும் உடையேம் எம் குன்றும்

பிறர்கொளார்

இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம்

எந்தையும் இலமே” (112)

இந்தப்பாடல் பாரி மகளிர் பாடியது. இது கையறுநிலை எனும் துறையைச் சேர்ந்தது.

கடையேழு வள்ளல்களில் ஒருவனாம் பாரியை மூவேந்தர்களும் சேர்ந்து போர் செய்து வீழ்த்தினர்.(!) அவனது புதல்விகள் இருவரும் புலவர் கபிலரின் பாதுகாப்பில் இருந்தனர். அவர் தந்தையைப் போல் சிந்தித்தார் செயல்பட்டார். அவர்களுக்கு மணம் செய்து வைக்க முயற்சித்தார். அதை தமது கடமையாக எண்ணினார் கபிலர். அவரது பாடல்கள் பல கையறு நிலைப்பாடல்தான்.

பொதுவாக புலவர்கள் மன்னர்களைப் பாடி பரிசில்கள் பெற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். கைகொடுக்கும் வள்ளல்கள். புரவலர்கள். அவர்கள் இல்லை எனில் அதாவது இறந்துபடின் புலவர்கள் நிலை என்னாகும்? நமது வாழ்வுக்கு என்ன செய்வது என்று கையைப்பிசைந்து கொண்டு நிற்கும் ஆதரவற்ற நிலைதான் கையறுநிலை.

புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் ‘பாராமலே’ கொண்டிருந்த நட்பு பார் போற்றும் தன்மையது. சோழன் வடக்குநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்க நினைத்தபோது பிசிராந்தையாரும் வருவார். அவருக்கும் இடம் போட்டு வையுங்கள் என்று கூறினானாம். அவ்வாறே பிசிராந்தையாரும் எவ்விதப் பிசிறுமின்றி நடந்து கொண்டார் என்பதை படிக்கும் போதே நம் கண்கள் பனிக்கும். அவரைப் போல் இன்னொரு உயிர் நண்பரான உறையூர்ப் பொத்தியார் என்பவரும் வடக்கிருந்தாராம். அவர் பாடியதும் கையறு நிலை பாடல்தான் (புறநானூறு217)” அன்னோனை இழந்த இவ்வுலகம் என்னாவது கொல்? அளியதுதானே!” அத்த கையவனை இழந்த சோழ தேசம் எவ்வாறு துன்பங்களுக்கு இரையாகுமோ? அதுவே இரக்கத்தைத் தருகின்றது என்பது பாடலின் பொருள்.

சோழன், பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்ததை கண்ட கண்ணகனார் பாடிய பாடலும் (218) கையறு நிலையை சேர்ந்ததுதான். இதுபோல நிறைய உண்டு.

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை குடவாயில் நல்லாதனார் பாடிய பாடல் பின்வருமாறு கூறுகிறது. ஒல்லையூர் நாட்டிலே இளைய வீரர்கள் கண்ணிசூடாராயினர். வளையணியும் மங்கல மகளிரும் மலர் கொய்யாராயினர். பாணனும் மலர் சூடானாயினன். பாடினியும் மலர் அணியாளாயினள். வலிய வேலோனான சாத்தன் இறந்ததனால், இவ்வாறு யாவரும் நல்லணி துறந்திருக்கும் வேளையிலே முல்லையே நீமட்டும் பூக்கின்றாயோ?

“முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?’’ (புறம் 242)

இவையெல்லாம் மன்னர்கள், வள்ளல்கள், புரவலர்கள் இறந்ததையொட்டிப் பாடியவை. ஆனால் ஒரு மன்னன் தன் மனைவி இறந்ததற்கு இரங்கிப் பாடிய பாடல் படித்திருக்கும் வாய்ப்பு அபூர்வம்.

சேரமான் கோட்டம்பலத்திலே துஞ்சிய மாக்கோதை, அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அதாவது பட்டத்தரசி இறந்துவிட்டாள்.

யாங்குப் பெரிதுஆயினும், நோய்

அளவு எனைத்தே

உயிர் செகுக் கல்லா மதுகைத்து

அன்மையின்

கள்ளிபோகிய களரியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளை

விறகு ஈமத்து,

ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,

இன்னும் வாழ்வல்; என் இதன்

பண்பே (புறம் 245)

கள்ளி வளர்ந்த புறங்காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின் கண், அழற் பாயலிலே அவளைக் கிடத்தினேன். அம்மடவாள் போய்விட்டாள். என் துயரம் எவ்வளவு பெரிதாயினும் என் உயிரையும் போக்கி அவளுடன் சேர்க்கும் வலியற்றதாயிற்றே. அவள் இறந்தும் யான் வாழ்கின்றேனே? இதன் பண்பு தான் என்னே? என்று அவளோடு தானும் இணைந்து உயிர்விடவில்லையே எனக் காதலால் வாடுகிறான் சேரமன்னன்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி வழக்கிலே குற்றமுடையவன் தான்தான் எனத் தெரிந்ததும் அரியணையிலிருந்து நிலத்தில் வீழ்ந்து உயிர் விட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அவன் இறந்ததுமே ‘கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்று கூறி அவனது மனைவி கோப்பெருந்தேவி அப்போதே உயிர்விட்டாள் என்றும் அது மேலும் கூறுவதை நாம் அறிந்து இருக்கிறோம் அல்லவா? அந்தக் காட்சிக்கு மாறுதலானது அல்லவா இது.

நன்றி - தீக்கதிர்

14/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 13 - ப.முருகன்


கைக்கிளை

காதலும் வீரமும் தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கம். இவையன்றி சங்க இலக்கியங்கள் இல்லை. காதல் அகத்துறையாகவும் வீரம் புறத்துறையாகவும் வகைப் படுத்தப்பட்டது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

என்கிற இந்தப் பாடல் முன்னைப் பின்னை யார் எனத் தெரியாத தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டு உயிருக்கு உயிராய் செம்மண்ணில் விழுந்த தண்ணீர் சிவப்பாக மாறி விடுவது போல் ஒன்றி விட்டதைக் கூறுகிறது.

இது ஒத்த தகுதியுடைய தலைவனும் தலைவியும் கொண்ட காதலைப் பற்றியது. சுட்டி ஒருவர் பெயர் சொல்லாத தன்மையினால் இது அகத்திணை சார்ந்ததாக விளங்குகிறது. இதில் தலைவனும் தலைவியும் யார் எனத் தெரியும் வகையிலான பாடலாக படைக்கப்பட்டிருந்தால் இது புறத்திணை சார்ந்ததாக ஆகிவிடும்.

அவ்வாறில்லாமல் தலைவனோ தலைவியோ யாராவது ஒருவர் மட்டும் மற்றவர் மேல் காதல் கொள்வது ஒரு தலைக் காதல் என்றழைக்கப்படுகிறது. சங்ககால இலக்கியச் சொல் மூலம் குறிப்பது என்றால் ஒருதலைக் காமம், அதாவது, ஒருதலை விருப்பம், இதற்கு இலக்கியம் கூறும் மற்றொரு பெயர் ‘கைக்கிளை’ என்பதாகும்.

ஆணோ பெண்ணோ யார் எனக் குறிப்பிடாத பாடலாக அமைந்தால் அது அகத்திணை சார்ந்தது. யாராவது ஒருவர் அல்லது இருவரும் சுட்டிக் காட்டப்பட்டால் அதாவது பெயர் குறிப்பிடப்பட்டால் அது புறத்திணை சார்ந்ததாக ஆகிவிடும். எனவே, கைக்கிளை என்பது அகத்தினையிலும் வரும். புறத்திணையிலும் வரும். ஆனால் ஒரு தலையாகத்தான் வரும்.

அரசனோ, தெய்வமோ உலா வரும் பொழுது இளம் பெண்கள் அரசன் மீதோ, தெய்வத்தின் மீதோ காதல் கொண்டால் அது கைக்கிளையின் பாற்படும்.

முத்தொள்ளாயிரம் என்பது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவர் மீதும் பாடப்பட்டது. வெண்பாக்களால் ஆனது. இதில் உலா வரும் மன்னனைக் கண்ட ஒரு பெண்ணின் நிலை என்னவாக இருந்தது என பின் வரும் பாடலில் காணலாம்.

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப்

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு

(முத்தொள்.7)

உலா வந்த மன்னனைக் கண்டு மனதைப் பறிகொடுத்த பெண் ஒருத்தி மதி மயங்கியதால், தான் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிட்டால் என்னாவது என்றஞ்சி நாணம் மேலிட வீட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொள்கிறாள். ஆனால் காதல் கொண்ட மனசு சும்மா இருக்க விடுகிறதா என்ன. கதவைத் திறந்து பார்ப்போமா வேண்டாமா என்று அதன் அருகில் வருவதும் போவதுமாய் இருந்ததாம். எப்படி? பெரும் செல்வர் வீட்டில் உள்ள ஏழையைப் போல. இருந்தும் இல்லாதவள் போல். மாடி வீட்டு ஏழைபோல் மனது கிடந்து துடிக்குது.

இது ஒரு மாதிரி காதலியின் நிலை என்றால் தெய்வத்தின் மேல் காதல் கொண்டவள் நிலை எப்படி இருக்கும். மீராவும் ஆண்டாளும் கண்ணன் மீது காதல் கொண்டது அப்படித்தானே.

வாரணமாயிரம் சூழவலம் வந்து எனத் தொடங்கும் பாசுரத்தில் ஆண்டாள் என்ன சொல்கிறாள்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 561வது பாடலில் ஆண்டாள் கல்யாணமே முடிந்துவிட்டதாய் கனவு காண்கிறாள். இதற்கு மேல் என்ன சொல்ல?

தேவாரத்தில் திருநாவுக்கரசர், இறைவன் மேல் கொண்ட காதலால் என்ன செய்கிறார் என்று சொல்கிறார்.

முன்னம் அவனது நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

இந்தப் பாடலின் திரையிசை வடிவம் தான் “அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன், அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்” பாடல்.

1980களில் பிரபலமான திரைப்படம் ஒருதலை ராகம். அதில் வரும், ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ பாடலில், ஒரு ஆண், தன்னை விரும்பாத பெண் மீது கொண்ட காதலால் படும் துயரத்தை வெளிப்படுத்துகிறான் கவித்துவமாக, விடிந்துவிட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் என்று கூறும் தலைவன் ‘ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது’ என்று புலம்பித் தவிக்கிறான். காதல் என்றால் கைகூடுவதும் உண்டு. கூடாததும் உண்டு தான். ஆனால் அதனால் நமக்கு கவிதை உண்டு ரசிக்க.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 12 - ப.முருகன்


ஆற்றுப்படை

வீரமாமுனிவர் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்களில் 53வதாக வருவது ஆற்றுப்படை.  இந்த நூல் வகையின் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே காணப்படுகிறது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்(கு) அறிவுறீ இச்

சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்

என்பது புறத்திணையி யல் நூற்பா (36)

ஆறு எனும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருள். ஆற்றுப்படுத்துதல் என்றால் அறிந்தான் ஒருவன் அறியாதான் ஒரு வனை வழிப்படுத்துதலாகும். இவ்வகை நூல்கள் புறம் சார்ந்தவை. ஏனெனில் அகப்பாடல்கள் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் என்பதன் அடிப்படையில் அமைந்தவை அல்லவா?

புலவர்களின் நிலை ஏழ்மையாய் இருப் பதால் அவர்களைப் பாதுகாக்க புரவலர்கள் பொன்னும் பொருளும் தேவையான இன்னபிறவும் அள்ளி வழங்கி ஆதரித்து வந்துள்ளனர். அதற்கு பதிலாக புலவர்களும் வஞ்சகம் இன்றி பாடிப் பரவி புகழ்ந்துள்ளனர். அரசவைப் புலவர்கள் மட்டுமின்றி மற்ற புலவர்களும் தங்களைப் பாடிப் புகழ்வதை மன்னர்கள் பெருமைக்கு உரியதாய் எண்ணியுள்ளனர்.

சங்க இலக்கியமாம் பத்துப்பாட்டில் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை). தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுவதில் விறலியாற்றுப்படை தான் இல்லை. தனி நூலாக இல்லை எனினும் இவ்வகைப் பாட்டு புற நானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் உள்ளது. சேயிழை பெறுகுவை (புறம் 105), மெல்லியல் விறலி (புறம் 133) என்ற செய்யுள்களை உதாரணமாக காட்டலாம். கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப் பற்றிய ஆற்றுப்படைச் செய்யுள்களும் புறநானூற்றில் காணப்படுகின்றன.

இவை எல்லாம் உலக வாழ்வு (லௌகீகம்) பற்றியவை. அதாவது பாட்டுடைத்தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும் மீளும் வழியில் கூத்தர் முதலியோரைக் காணலும் அவர்களைத் தலைவனிடத்தில் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச் செய்தலும் பண்டைக் காலத்து உலகியல் செய்திகளே. ஆனால் திருமுருகாற்றுப்படை இதிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது.

லௌகீக வாழ்க்கையிலிருந்து விலகி இறையருள் பெறுவதற்காகச் சொல்லப்படுகிறது. அத்துடன் மற்றெல்லா ஆற்றுப்படைகளும் கூத்தர், பொருநர், பாணர் பெயருடன் விளங்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத்தலைவன் பெயரையே கொண்டு திகழ்வதும் நினைத்தற்கு உரியதாகும். அதற்கு புலவராற்றுப்படை எனும் பெயரும் வழங்கப்படுகிறது.

“மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க - ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப்பாருங்க தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க” என்ற திரைப்படப்பாடல் கூட ஆற்றுப்படைப் பாடல்தான்.

பொருநர் ஆற்றுப்படை 248 அடிகளைக் கொண்டது. வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா இதன் பாடல் வகை. பரிசில் பெறவிரும்பும் பொருநனைப் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் கரிகால் சோழனிடம் ஆற்றுப்படுத்திய பாடல் இது. இதைப் பாடியது முடத்தாமக் கண்ணியார். பொருநர் என்றால் மற்ற ஒருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள். இது வருணனைச் சிறப்பு மிக்க இலக்கியம். கரிகாலனிடம் பொருநர் பொற்றாமரை பெறுதலும் விறலியர் பொன்மாலைகள் பெறுதலும் கூறப்படுகின்றன. வெண்ணிப்பறந்தலை எனுமிடத்தில் சேர, பாண்டியர்களை கரிகாலன் இளமையில் வென்ற வரலாற்றுச் செய்தியும் கூறப்படுகிறது.

சிறிய யாழைக் கொண்டிருக்கும் பாணர்கள் பாடியது சிறுபாணாற்றுப் படை, இது 269 அடிகளை கொண்டது. இதன் பாவகை ஆசிரியப்பா. ஓய்மா நாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப் படுத்துகிறது. இதைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கடற்கரைப் பகுதியே இடைக் கழிநாடு. அங்கு உள்ளது நல்லூர். திண்டிவனம் வட்டத்தின் பெரும்பகுதி விழுப்புரம் வட்டத்தின் கிழக்கு பகுதி மதுராந்தகம் வட்டத்தின் தென் பகுதி என்ற நிலப்பரப்புதான் ஒய்மாநாடு என்கிறார் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.

பொதுவாக வறுமைப்பட்ட வீட்டின் அடுப்பில் பூனை தூங்குவதாகத் தான் சொல்வதுண்டு. ஆனால் சிறுபாணாற்றுப் படை பாணன் வீட்டில் அண்மையில் குட்டி போட்ட நாய் தனது குட்டிக்கு பால் கொடுக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறது.

திறவாக் கண்ண சாய் செவிக்குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

(சிறுபாணாற்றுப்படை -130- 132)

பெரும்பாணாற்றுப் படை 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பா உடையது. தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. இதில் யாழின் வருணனை, பாலை நிலத்தின் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தவரும் கொண்டாடும் விழாக்கள் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

மலைபடுகடாம். 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா உடையது. இதனைப் பாடியது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். செங்கண் மாத்துவோள் நன்னன் சேய் நன்னனைப் பற்றியது. மலைபடு கடாஅம் மாதிரத்து இசைப்ப என்ற அடி யானையை உவமித்து அதிலிருந்து பிறக்கும் ஓசையைக் கடாம் என வருணித்ததால் மலைபடு கடாம் என்று வழங்கப்படுகிறது என்பர்.

திருமுருகாற்றுப் படை நக்கீரரால் பாடப் பட்டது. 317 அடிகள் கொண்டது. இதன் பாவகை ஆசிரியப்பா. முருகனின் ஆறுபடை வீடுகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் ஆறு பகுதிகளைக் கொண்டது. இந் நூல் காலத்தால் பிற்பட்டது என்றே தமிழ்த் தாத்தா உ.வே.சாவை மேற்கோள் காட்டி பேரா. எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் கூறுகின்றனர்.

நன்றி - தீக்கதிர்

13/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 11 - ப.முருகன்

மாலை

“மாலை வண்ண மாலை - இந்த உலகத்தில் ஆயிரம் மாலை ஆயிரம் பொன்பெறும் அருட்பா மாலை ஆண்டவன் அடியார்க்கு அருள்மணி மாலை...” என பலவகை மாலைகளை அடுக்கும் ஒரு திரையிசைப்பாடல்.

பிரபந்தங்கள் என்றழைக்கப்படும் சிற்றிலக்கியங்களில் ஏராளமான மாலை வகைகள் உண்டு. அவையாவன: அங்க மாலை, அநுராகமாலை, இரட்டை மணிமாலை, இணைமணிமாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாமமாலை, பலசந்தமாலை, கலம்பக மாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை காப்பு மாலை, வேனில்மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவமாலை, தானை மாலை, மும்மணிமாலை, தண்டகமாலை, வீர வெட்சிமாலை, காஞ்சி மாலை, நொச்சிமாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை. இவற்றுடன் வெற்றிக்கரந்தை மஞ்சரி, வதோரண மஞ்சரி ஆகியவற்றையும் சேர்த்தால் முப்பது ஆகிவிடும். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மாலை வகை சிற்றிலக்கியங்கள்.

இவற்றில் வீரவெட்சி மாலை, காஞ்சிமாலை, நொச்சிமாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை ஆகியவை போர் தொடர்புடைய திணைகளின் பெயரில் அமைந்தவை.

வெட்சி நிரை கவர்தல் மீட்டல் கரந்தையாம்

வட்கார் மேல் செல்வது வஞ்சி உட்காது எதிர் ஊன்றல் காஞ்சி

எயில் காத்தல் நொச்சி அதுவளைத்தலாகும் உழிஞை

அதிரப்பொருதல் தும்பை மிக்கார் செருவென்றது வாகை

என்பது புறப்பொருள் வெண்பாமாலை பாடல்.

புறப்பொருள் பற்றிய விபரங்களை வெண்பாக்களிலே பாடியிருப்பதால் இதற்கு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பெயர் வந்தது. இதேபோல் ஆசிரியப்பாவினால் பாடப்பட்டது ஆசிரிய மாலை என்ற பெயரைப் பெற்றது. ஆயினும் வெண்பா மாலையே பரவலாக எடுத்தாளப்படுகிறது.

பழங்காலத்தில் மன்னர்கள் தங்கள் போர் முறைகளாக சிலவற்றை மேற் கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் மீது படையெடுக்க நினைத்தால் முதலில் அவனது நாட்டில் உள்ள பசுக்களை (ஆநிரைகள்) கவர்ந்து வரச் செய்வார்களாம். இதுதான் வெட்சித் திணையில் பாடப்படுகிறது. அந்தப் பசுக்களை எதிரி மன்னன் படை மீட்டுச் சென்றால் அது கரந்தைத் திணையாகும். இந்த ஆட்டம் ஒரு வழியாக முடிந்தால் அடுத்த கட்டம் எதிரி நாடு மீது படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணை. அவர்களை தன் நாட்டுக்குள் நுழையவிடாமல் எதிர்த்து நிற்பது காஞ்சித்திணை. அதை முறியடித்து கோட்டை மதிலை சுற்றி வளைப்பது உழிஞைத் திணை. சுற்றி வளைத்த எதிரிப் படையிடமிருந்து மதிலை பாதுகாப்பது நொச்சித் திணை. மதிலையும் கடந்த நிலையில் இரண்டு படைகளும் மோதி போர் செய்வது தும்பைத் திணை. இதில் வெற்றி பெறுவது வாகைத் திணை.

போரில் வெற்றி பெற்றால் வாகை சூடினான் என்று குறிப்பிடுவர். அதாவது வாகைப்பூவை தலையில் அணிந்து வெற்றியை கொண்டாடுதல் வாகைத் திணை. இந்தத் திணைகளில் குறிப்பிடப்படுபவை எல்லாம் மலர்களே. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை மலர்களைச் சூடிக் கொண்டு போர் நிகழ்த்துவது அந்தக்கால போர் நெறியாக இருந்தது என்று இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேற்கண்ட மாலைகள் யாவும் அரசர்கள் தொடர்புடையவையாக விளங்குபவை. இவை தவிர்த்த பிற மாலை வகைகள் இறைவன் மீது பாடப்படுபவை. வேனில் மாலை, வசந்த மாலை மட்டும் இயற்கை மீது பாடப்படுபவை. இயற்கை எழில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் இயற்றப்பட்டவை வேனில் மாலையும் வசந்தமாலையும்.

கி.பி.10 அல்லது 11ம்நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் கோயில் நான்மணிமாலை எனும் மாலை நூலையும் எழுதியுள்ளார்.

14ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது திருவாவடுதுறை ஆதீனம். இதை நிறுவியவர் நமச்சிவாய மூர்த்தி. அந்த மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர், நமச்சிவாயமாலை, அதிசய மாலை போன்ற நூல்களைப் படைத்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் வித்வானாக விளங்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘அகிலாண்டநாயகி மாலை’ உள்ளிட்ட 4 மாலை நூல்களை இயற்றியுள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை 19ம்நூற்றாண்டின் முக்கால்பகுதி வரை வாழ்ந்தவர். (1815ல் பிறந்து 1876ல் மறைந்தார்)

இதேகாலத்தில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளை திருவருள் மாலை, தேவதோத்திர மாலை போன்ற வழிபாட்டுப்பாடல்களை எழுதியுள்ளார். 17ம்நூற்றாண்டைச் சேர்ந்த சிவப்பிரகாசர் நால்வர் நான் மணிமாலை, அபிசேகமாலை, கைத்தல மாலை ஆகியவற்றை படைத்துள்ளார்.
நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 10 - ப.முருகன்

ஒருபா ஒரு பஃது

சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் பதினெண் மேல்கணக்கு நூல்கள். திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். மேல்கணக்கு நூல்களான ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவை எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. இவற்றில் பதிற்றுப்பத்து, பத்து அரசர்கள் பற்றிப் பாடப்பட்ட பத்துப்பத்துப் பாடல்களைக் கொண்டது.


கீழ்க்கணக்கு நூல்களில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது போன்றவை எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. இவை சங்கம் மருவிய காலத்திய படைப்புகள். அதற்கடுத்த பக்தி இலக்கிய காலத்தில் விளைந்தவை தான் பிரபந்தங்கள். பிரபந்தங்கள் 96 வகை என்று கூறப்பட்டாலும் அதற்கு மேலும் உண்டு என்பதைப் பல இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
“தெய்வம் பற்றி தோன்றியுள்ள பிரபந்த வகைகளும் வேறுபாடுகள் சிறிதும் இன்றி ஒரே அச்சில் வார்த்தன போல் உள்ளன. உதாரணமாக கோவை, உலா முதலிய பிரபந்தங்களைக் கூறலாம். இவற்றில் உலாப் பிரபந்த வகையிலாவது சிலவேற்றுமைகள் உண்டு; கோவையில் அதுவும் இல்லை. கோவையில் காட்சி முதல் காரிப் பருவம் கண்டு இரங்கல் வரையுள்ள பலதுறைகளும் அழகு யாதுமின்றி, கவித்துவச் சிறப்பின்றிப் பாடப்பட்டுள்ளன. ஸ்தலம் பற்றியுள்ள சரித்திரக் குறிப்புகள் கூட இவற்றில் கிடைத்தல் அருமை....” என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தமது தமிழின் மறு மலர்ச்சி நூலில்.


பாவேந்தர் பாரதிதாசன் கூட மகாகவி பாரதி பற்றிய தனது புதுநெறி காட்டிய புலவன் பாடலில்


“கலம்பகம் பார்த்தொரு கலம்பகத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும் மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியம் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று விரைந்து தன்
பேரை மேலே எழுதி” என்று, குறிப்பிடுகிறார்.


பிற்கால நாயன்மார் பாடல்கள் சைவ சித்தாந்த நூல்கள் என குறிக்கப்படுகின்றன. கி.பி. 12, 13,14ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உய்ய வந்த தேவ நாயனார் போன்ற புலவர்கள் பாடிய 14 நூல்கள் இத்தகையவை. இவற்றை சாத்திர நூல்கள் என்று அழைப்பர். இந்த சாத்திர நூல்கள் பற்றிக் கூறும் வெண்பாப் பாடல்.


“உந்திகளிறு உயர் போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றி கொடி பாசமிலா நெஞ்சு விடு
உண்மை நெறி சங்கற் பகம் மூன்று”


அதாவது திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியவை.
இதில் உள்ள இருபா இருபஃது நூலை அருள் நந்தி சிவாச்சாரியார் என்பவர் எழுதியுள்ளார். இதன் நூற்பாக்கள் வெண்பாவிலும் கலிப்பாவிலும் உள்ளவை. காப்புப் பாடல் தவிர ஆணவம், மாயை, கர்மம் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 20 பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.


இதுபோன்றே ஒருபா ஒருபஃது, இதில் எத்தனை படைப்புகள் உள்ளன என்பது சரியாக தெரியவில்லை. மகாகவி பாரதி எழுதிய ‘ஒருபா ஒருபஃது’ எளிதில் கிடைக்கக் கூடியதாகும். பிரபந்தம் எனும் தலைப்பிலே இளசை ஒருபா ஒருபஃது என எழுதியுள்ளார். இளசை என்பது எட்டையபுரத்தைக் குறிப்பது. அது பற்றிய பாடல் பத்தும் முதலில் அதன் காப்புச் செய்யுளும் என 11 பாடல்கள் உள்ளன. காப்புச் செய்யுள் உள்பட பதினொரு பாடல்களிலும் இரண்டாம் அடியில் தனிச்சீர் பெற்று வரக் கூடியவையாக உள்ளன. இது வெண்பா பாடலாக மட்டுமே அமைந்துள்ளது.


தேனிருந்த சோலை சூழ் தென்னிளசை நன்ன கரின்
மானிருந்த கையன் மல ரடியே - வானிற்
சுரர்தம னியன்மால் தொழுங்காற் கிரீடத்
தரதனங்கள் சிந்து மகம்


இது முதல் பாடல்.


காப்பு, பத்துப்பாடல் தவிர தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.


கண்ணனெனும் எங்கள் கருணைவெங்கடேசு ரெட்ட
மன்னவன் போற்றுசிவன் மாணடியே - அன்னவனும்
இந்நூலுந்த தென்னாரி ளசை எனும் நன்னகரும்
எந்நாளும் வாழவைக் கும்மே

நன்றி - தீக்கதிர்

08/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 9 - ப.முருகன்


அந்தாதி

அமாவாசையை பவுர்ணமி என்று சொல்பவர் யாராவது உண்டா? அப்படி ஒருவர் சொன்னதாகவும், அப்படியா, அதை நிரூபிக்கவில்லை என்றால் நெருப்பின் மீது நிற்க வைப்பேன் என்று ஒரு மன்னன் கூறியதாகவும் ஒருபுராணக் கதை உண்டு. அப்படிச் சொன்னது அபிராமி பட்டர் என்பார்கள்.

ஆதி பராசக்தி என்றொரு திரைப்படம் இதைக் காட்சியாக்கி, அபிராமி பட்டர் ஆதி பராசக்தியை வேண்டிப் பாடுவதாக ஒரு பாடலும் இடம் பெற்றிருக்கும். கீழே நெருப்பு எரியும் மேலே ஊஞ்சலில் அபிராமி பட்டர் நின்று கொண்டு பாடுவார். சொல்லடி அபிராமி. வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி என்ற பாடலை எப்போதாவது கோவில் திருவிழாக்களில் கேட்டிருக்கலாம்.

அந்தப் பாடல் முடியும் தறுவாயில் பராசக்தி வானில் தோன்றுவதாகவும், அவளது காதணியை கழற்றி எறிவதாகவும், அது நிலவாக ஜொலிப்பதாகவும். அதைக் கண்ட மன்னன் ஆகா, நாம் அபிராமி பட்டரை துன்புறுத்தி விட்டோமே. அவரது பக்திக்காக அமாவாசையே பவுர்ணமியாக மாறிவிட்டதே என்று மனம் மாறி அபிராமி பட்டரை வாழ்த்தி வணங்குவதாகவும் காட்சிகள் விரியும்.

இவற்றில் நமக்கு வேண்டியது அந்த அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதிதான்.

அந்தாதி என்றால் என்ன? அந்தம் என்பது இறுதி. ஆதி என்பது தொடக்கம். அதாவது ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமைந்து தொடர்ந்திடும் பாடல் அமைப்புடன் கூடிய சிற்றிலக்கிய வகை அந்தாதி.

அழகிய மணவாளதாசர் என்றும் திவ்யகவி என்றும் அழைப்பட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திரு வேங்கடத்தில் கோவில் கொண்டிருக்கும் திருமாலை பற்றிய அந்தாதி நூலை எழுதி உள்ளார். இவர் திருமலை நாயக்கர் அரசவையில் ஓர் அலுவலராய் பணி புரிந்தவர்.

திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன; சிற்றன்னையால்...... என்று தொடங்கும் மணவாள தாசரின் பாடல், அஞ்சலென்று ஓடின மால் கழலே என்று முடியும்.

இந்த பாடலின் இறுதியில் உள்ள மால் என்ற சொற்பொருளை முதலாகக் கொண்டு மாலை மதிக் குஞ்சி ஈசனும் போதனும்.... என்று அடுத்த பாடல் தொடங்கும்.

இத்தகைய பாடல் வகை அந்தாதி எனப்படும். ஒரு சொல் என்று கூட இல்லை. கடைசி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ கூட வரும் வண்ணம் அமைந்திருக்கலாம். இந்த இலக்கிய வகையை தொல்காப்பியர் ‘இயைபு’ என்று குறிப்பிடுகிறார். யாப்பருங்கலக் காரிகை இதை அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி என்று கூறுகிறது. சொற்றொடர் நிலை என்றும் சொல்வார்கள்.

இந்த வகை நூல் வெண் பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ பாடப்படும். பக்தி இலக்கியத்தில் அதாவது, தேவார, திருவாசகத்தில் திவ்யப்பிரபத்தத்தில் இருக்கும் அந்தாதிப் பாடல்கள் இதற்குச் சான்றாகும். சங்க காலத்தில் கூட அந்தாதிப் பாடல் வடிவம் இருந்திருக்கிறது.

மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளிதலை இய தீயும்

தீமுரணிய நீரும்

என்கிறது புறநானூற்றில் வரும் (2: 1-5) பாடல்.

ஒரு பாடல் இன்னொரு பாடல் தொடராமல் ஒரு சொற்தொடர் இன்னொரு சொற்தொடரைத் தொடர்வதாக புறநானூற்றுப் பாடல் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

கம்பர் கூட சடகோபர் அந்தாதி எனும் அந்தாதி எழுதியதாகக் கூறப்படுகிறது. நக்கீர தேவ நாயனார் கயிலை பாதி களாத்தி பாதி அந்தாதியும் கபில தேவநாயனார் சிவபெருமான் திருவந்தாதியும் எழுதியுள்ளனர். பரணதேவ நாயனாரும் சிவ பெருமான் திரு அந்தாதி எழுதியிருக்கிறார் 101 பாடல்களில்.

சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்து அந்தாதி எழுதியிருக்கிறார். பொன்வண்ணம் என்ற சொல் தொடர்ந்து வருவதால் இந்தப் பெயர் பெற்றது. அவரே திருவாரூர் மும்மணிக் கோவை எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் உள்ள 20 பாடலும் கட்டளைக் கலித்துறையில் அந்தாதியாக உள்ளன. பட்டினத்தாரின் 100 வெண்பா கொண்ட திருவேகம்பமுடையார் திருவந்தாதி சைவ இலக்கியமாய் விளங்குகிறது.

நம்பியாண்டவர் நம்பி கோவில் திருப்பண்ணியர் விருத்தம் என்று 70 பாடல்களில் தில்லை நடராசர் மீது அந்தாதி முறையில் பாடியிருக்கிறார். அவரே திருத்தொண்டர் திருவந்தாதி என்று 63 நாயன்மார்கள் மீது 86 பாடல்கள் எழுதியுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படும் வைணவ இலக்கியத்தில் பல அந்தாதி உண்டு.

பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாராம் பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியும் 2வது ஆழ்வாராம் பூதத்தாழ்வார் 2ம் திருவந்தாதியும் எழுதியுள்ளனர். அவர் 100 வெண்பாக்களை பாடியுள்ளார். பேயாழ்வார் 3ம் திருவந்தாதியும் திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியும் நம்மாழ் வார் பெரிய திருவந்தாதியும் படைத்துள்ளனர்.

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருவேங்கடத் திருவந்தாதியும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தில்லையமக அந்தாதியும் எல்லப்ப நாவலர் எழுதிய திருவருணை அந்தாதியும் குறிப்பிடத்தக்கவையாகும். கவிஞர் கண்ணதாசன் கூட அந்தாதி எழுதியுள்ளார் அதன் பெயர் கிருஷ்ணன் அந்தாதி.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 8 - ப.முருகன்


கலம்பகம் 

பலவகை வண்ணமும் வாசமும் நிறைந்த மலர்களைத் தொடுத்துக் கட்டிய மலர்ச்சரத்தை கதம்பம் என்போம். அதுபோல பலவகை உறுப்பும் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையைக் கலம்பகம் என்று அழைத்தனர். கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகக் கருதுவார் தமிழ்த்தாத்தா உவே.சாமிநாதய்யர்.

கலம் என்றால் பன்னிரண்டு. பகம் என்றால் அதில் பாதி ஆறு. அதனால் கலம்+பகம் என்பது 18 வகை உறுப்புகளால் பாடப்படுவது ஆகும். கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, மடக்கு என்னும் பல்வேறு செய்யுட்களால் பாடப்படுவது கலம்பகம். பகம் - எனும் ஆறும் ஆறு வகை குணங்களைக் குறிப்பதாகவும் அமையும் என்பர். ஆனால் முதல்பாட்டிற்கும் அடுத்த பாட்டிற்கும் இடையே கதை தொடர்பு இருக்காது.

பதினெட்டு வகை உறுப்புகள் என்றால் என்னென்ன? புயம், தவம், வண்டு, அம்மானை, ஊசல், ஊர், பாண், மதங்கு, மடக்கு, கைக்கிளை, சிந்து, களி, மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், தூது ஆகியவையே.

கலம்பக நூல்கள் யாருக்காக படைக்கப்படும்? தேவர்கள், முனிவர்கள், அரசர்கள், அமைச்சர்கள், வணிகர்கள், வேளாளர்கள் ஆகியோருக்காகப் பாடப்படும். அவை யார், யாருக்கு எத்தனை பாடல் என்று பன்னிருபாட்டியல் நூல் (130) பின்வருமாறு கூறுகிறது.

தேவர்க்கும் முனிவர்க்கும் காவல் அரசர்க்கும்

நூறு தொண்ணூற்றைந்து தொண்ணூறே

ஒப்பில் எழுபது அமைச்சியலோர்க்குச்

செப்பிய வணிகர்க்கு ஐம்பது முப்பது

வேளாளர்க்கென விளம்பினர் செய்யுள்.

ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட கலம்பகங்கள் அனைத்திலும் நூறு பாடல்கள் அமைந்திருக்கின்றன.

இதற்கொரு கதையும் உண்டு. கலம்பகம் பாடினால் அந்த கலம்பகத்தின் தலைவன் இறந்துவிடுவான் என்றொரு நம்பிக்கை (?) இருந்திருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. என்றாலும் அதனால் தானோ என்னவோ கலம்பகம் பெரும்பாலும் தெய்வங்கள் மீது பாடப்பட்டிருக்கிறது.

மதுரை மாநகரில் கோவில் கொண்டுள்ள மீனாட்சியையும் சொக்கநாதரையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குமரகுருபரரால் பாடப்பட்டது மதுரைக் கலம்பகம் ஆகும். இது 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். ஆயினும் காலத்தால் மூத்த கலம்பகம் என்ற சிறப்பைப் பெற்றது நந்திக் கலம்பகம் ஆகும். இது மூன்றாம் நந்திவர்ம பல்லவனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். இந்நூலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. என்றாலும் கூட நந்திக் கலம்பகம் அவரது புகழ்பாடிக் கொண்டேயிருக்கிறது.

நந்திக் கலம்பகம் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. நந்திவர்மனை வெல்ல முடியாத பகைவர்கள் அவனை வீழ்த்துவதற்காகவே கலம்பகம் பாடி அவனைக் கொல்ல நினைத்தனர் என்று கூறப்படுவதுண்டு. இதைத் தெரிந்து கொண்டே அவனும் கவிதை மேல் உள்ள காதலால் கலம்பகம் பாடுவதற்கு ஒப்புக்கொண்டான் என்றும் கலம்பகப் பாடல்களைக் கேட்டு அவன் உயிரிழந்ததாகவும் சொல்லப்படும் செவிவழிச் செய்திகள் நம்பும்படியாக இல்லை.

நந்திவர்மன் இறந்தபிறகு கையறு நிலையில் பாடியதாகக் கூறப்படும் பாடல்பின் வருமாறு:-

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் அடைந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

யானும் என்கலியும் எங்ஙனே புகுவோம்

நந்தியே நந்தி நாயகனே

இது தவிர உதீசித் தேவரின் திருக்கலம்பகம், பிள்ளைப் பெருமாளின் திருவரங்கக் கலம்பகம், குமரகுருபரரின் கச்சிக் கலம்பகம் போன்ற நூல்கள் கிடைக்கின்றன.

கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் சிறந்து விளங்கினர் என்பர். இரட்டையரில் ஒருவர் பார்வையற்றவர், இன்னொருவர் முடவர். பார்வையற்றவர் மீது அமர்ந்து முடவர் வழிகாட்ட பார்வையற்றவர் நடந்து பல தலங்களுக்குச் சென்று கலம்பகம் பாடினார்கள் என்று கூறுவார்கள். அதில் திருவாமாத்தூர் கலம்பகம், தில்லைக் கலம்பகம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

அர்ச்சூசையப்பர் கலம்பகம், மக்கா கலம்பகம் போன்ற கிறிஸ்தவ, இஸ்லாமியக் கலம்பகங்களும் உண்டு.

நன்றி - தீக்கதிர்

07/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 7 - ப.முருகன்


சதகம்

இந்தப்பாடல் மாணிக்க வாசகரால் பாடப்பட்டது. நடுநிலைப் பள்ளிவரை படித்தவர்கள் இந்தப்பாடலை படிக்காமலும் கேள்விப்படாமலும் இருக்க வாய்ப்பில்லை.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கிய காலம் என்று குறிப்பிடப்படும் காலம் ஒன்றுண்டு. அதற்கு முந்தைய காலம் காப்பிய காலம் எனப்படும். அதில் பெரும்பகுதி தர்க்கவாதம் புரியும் காட்சிகளும் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். இது, புத்த, சமண சமயங்கள் கோலோச்சிய காலம். பொதுவாகச் சொல்வதெனில் பல்லவ மன்னர்களின் காலம். அதையடுத்த பிற்காலச் சோழர்களின் காலம், சைவ, வைணவ சமயங்கள் ஆட்சி புரியத் தொடங்கிய காலம்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார். சைன சமயம் அறிவு வலியாலும் சாஸ்திர ஞானத்தாலும் தர்க்க வன்மையாலும் சிறந்து விளங்கிற்று. வைதீக சமயங்கள், (சைவ, வைணவம்) பக்தியையே பெருந்துணையாகக் கொண்டு அந்த பக்தி நெறியையே வலியுறுத்தி வந்தன. சிறிதுகாலம் தர்க்க நெறியின் முன்எதிர் நிற்கலாற்றாது இவை தளர்ச்சியுற்றிருந்தன. ஆனால் உணர்ச்சி மேலீட்டால் எழுந்த இந்த பக்தி நெறி வெகுவிரைவில் தர்க்க நெறியைப் புறங்கண்டு விட்டது. நாடு முழுவதும் பக்திப் பெருவெள்ளம் பரந்து பாய்ந்து தர்க்கமாகிய பெருநெருப்பை அவிழ்த்துவிட்டது. பக்திக்கு வித்தூன்றியவர்கள் அப்பர், சம்பந்தர் முதலிய சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார், குலசேகரர் முதலிய வைணவ ஆழ்வார்களுமே ஆவர்.

(இலக்கிய சிந்தனைகள் - நூற்களஞ்சியம் :தொகுதி-1)

நாயன்மார்களில் ஒருவரும் சமயக்குரவர் நால்வர் என்றழைக்கப்படுபவர்களில் ஒருவருமான மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம், திருக்கோவையார், திருச்சதகம் முதலியன. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று புகழப்பட்டது. தமிழ் பக்தி மொழி என்று கூட ஆங்கில கல்வியாளர்களால் குறிப்பிடப்பட்டது.

மாணிக்கவாசகர் மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்தவர், இது அவரது இயற்பெயரா எனத் தெரியவில்லை. ஊர்ப்பெயரால் ‘திருவாதவூரார்’ என்றும் ‘வாதவூர் அடிகள்’ என்றும் அழைக்கப்பட்டவர். இவர் பாண்டிய மன்னன் அரிமரித்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர். அவன் மாணிக்கவாசகரை ‘தென்னவன் பிரம்ம ராயன்’ என்ற பட்டமளித்துப் பாராட்டினான் என்றும் கூறப்படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள நரியைப் பரியாக்கியது இவருக்காகத்தான் என்பது புராணம்.

அவர் சமண மதத்தின் தர்க்கவாதப் போக்கை மாற்றிட அவர்களது வழியிலேயே சென்று திருப்புபவராக இயற்கையோடு இயைந்தவன்தான் இறைவன் என்று இத்தகைய பாடல்களை பாடினார். இந்தப் பாடல் திருவாசகத்தில் உள்ளது அல்ல. திருச்சதகம் என்பதில் உள்ள 15வது பாடல்.

பதிற்றுப்பத்து போன்றும் பிள்ளைத்தமிழ் போன்றும் பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டு பாடுவது சதகம் என்று அழைக்கப்படும். இந்த திருச்சதகம் தான் தமிழின் முதல் சதக நூல் என்று கூறப்படுகிறது. சதகம் என்பது வட சொல். கி.பி. 17, 18, 19ம் நூற்றாண்டுகளில் தோன்றிய சதக இலக்கியங்களை நீதிக் களஞ்சியங்கள் என்று அழைப்பர் என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து.

சதக இலக்கியம் பொதுவாக அரசன், இறைவன், சான்றோர், அடியார் பற்றி பாடப்படுபவை. இவற்றுள் தொண்டை மண்டல (பல்லவ) சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், நந்தி மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம் முதலியவை தமிழில் உள்ள சிறந்த நூல்கள் எனப்படுகின்றன.

சோழ மண்டல சதகத்தை ஆத்ம நாத தேசிகரும் பாண்டி மண்டல சதகத்தை ஐயம்பெருமாளும் கொங்கு மண்டல சதகத்தை கார்மேகக் கவிஞரும் தொண்டை மண்டல சதகத்தை படிக்காசுப் புலவரும் பாடியுள்ளனர்.

அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் நீதிக்கருத்துக்கள் நிறைந்தது எனக்கூறப்படுகிறது. அதில் உள்ள 10வது பாடல் பின்வருமாறு:-

கோவில் இல்லாத ஊர், நாசி இல்லாத முகம்

கொழுநன் இல்லாத மடவார்

குணம் இல்லாத விதை, மணம் இல்லாத மலர்

குஞ்சரம் இல்லாத சேனை

காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை

கதிர்மதி இல்லாத வானம்

இதுபோன்ற பாடலின் தாக்கம்தான் “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது போன்ற மூதுரை மொழி. இது மனிதனை உணர்வுகள் மூலம் தாக்கி, கோவில் இல்லாத ஊரில் குடியிருப்பது பாவம் என்ற எண்ணத்தை திணித்து விடுகிறது. அதற்காகத்தான் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மனிதனை யோசிக்கவிடாமல் திணறடித்து ஒரே அமுக்காய் அமுக்கிவிட முயற்சிக்கின்றன.

தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், செயங் கொண்டார் சதகம் போன்றவை பழமொழிகளைக் கொண்டு பாடப்பட்டவையாகும். குருபாததாசர் எழுதிய குமரேச சதகம், மனிதர்களில் லஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்கு துன்பம் விளைவிப்பவனைப் ‘பேய்’ என்று குறிப்பிடுகிறது. திருவண்ணாமலை, திருப்பதி போன்ற தலங்களைப் பற்றியும் சதக நூல்கள் பாடப்பட்டுள்ளன.

அகத்தீசர் சதகம், அரபிச்சதகம் போன்றவற்றை இஸ்லாமியர்கள் பாடியுள்ளனர். இயேசுநாதர் திருச்சதகம், திருக்குமார சதகத்தை யாழ்ப்பாணம் சதாசிவப்பிள்ளையும் தாவீது அதிசயநாதனும் எழுதியுள்ளனர்.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 6 - ப.முருகன்


பரணி

ஒரிசா மாநிலத்தில் மத வெறியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீதும் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய மாநில அரசில் தாக்குதல் நடத்துபவர்களின் ஆதரவாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். எனவே தொடர்ந்து காந்தமால் பகுதியில் வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. எனவே இவற்றை அறிவிக்கப்படாத யுத்தம் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு ஜனநாயக நாட்டிலேயே இந்த நிலை இருக்கிறது என்றால் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை சொல்லத் தான் முடியுமோ?

இன்றைய ஒரிசாதான் முந்தைய கலிங்க நாடு. அங்கம், வங்கம், கலிங்கம் என ஐம்பத்தாறு தேசங்கள் இருந்தன என்று கூறுவதுண்டு. கலிங்கம் வரலாற்றிலும் சரி இலக்கியத்திலும் சரி அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறது.

பரணியில் பிறந்தவன் தரணியாள்வான் என்று சொல்லப்படுவதை நம்புபவர்கள் பலருண்டு. மன்னன் அசோகன் நம்பினானோ நம்பவில்லையோ. ஆனால் நாடுகள் மீது படையெடுத்தான். வெற்றி கண்டு மாமன்னன் ஆனான். அவனது போர் வெறி கொண்ட மனதை மாற்றியது கலிங்கப் போர். போரின் அழிவினால் மனம் நொந்த அவன் அகிம்சை போதிக்கும் புத்த மதத்தை தழுவினான். அதை உலகம் முழுவதும் பரப்பிட முனைந்தான்.

இந்திய வரலாற்றில் கலிங்கம் வென்ற அசோகன் இடம்பிடித்தான். தமிழக வரலாற்றில் முதலாம் குலோத்துங்கன் பெயர் பெற்றான். அவனது தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றியுடன் திரும்பினான். அந்த வெற்றியை செயங்கொண்டார் எனும் புலவர் கலிங்கத்துப் பரணி என்ற பெயரில் இலக்கியமாய் வடித்தார்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் (838). போர் நடக்கும்போது பரண் மீது அமர்ந்து பாடியதால் பரணி எனப்பட்டது என்றும், பரணி நட்சத்திர நாளில் போரிட்டு வென்றதால் அப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

யானை பிறந்த நாள் பரணி, கொற்றவைக்கும் காளிக்கும் ஏற்றநாள் பரணி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் வென்றதால் பரணி எனப்பட்டது என்றும் காரணம் பல கூறப்படுகிறது.

பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள் மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் கூறுவார்.

பரணி தோற்றவர் பெயரில் வழங்கப் பெறும். கலிங்கமன்னன் அனந்தவர்மன் சோடிகங்கன் மீது வெற்றி கொண்டதால் கலிங்கத்துப் பரணி எனும் பெயர் பெற்றது. இந்நூல் தான் தமிழின் முதல் பரணி நூல்.

போர்வீரன், ஆசிரியர், கடவுள் ஆகியோர் மீது பரணி பாடப்படும். பதிற்றுப் பத்து போல பிற்காலத்தில் எழுந்தது பரணி என்றும் சொல்லப்படுகிறது. இது 13 பகுதிகளைக் கொண்டது. அவை கடவுள் வாழ்த்து, கடைத் திறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திர ஜாலம், இராஜ பாரம்பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம், காளிக்குக்கூளி கூறியது, போர் பாடியது, களம் பாடியது ஆகியவை.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி 509 தாழிசை பாடல்களைக் கொண்டது. இது அகச்சுவை, வீரச்சுவை, நகைச்சுவையும் கொண்டது. வீரச்சுவைக்கு உரித்தான உணர்ச்சி வேகத்துக்கு ஏற்ற பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

எடும் எடும் எடும் என எடுத்ததோர்

இகல் ஒலி கடல்ஒலி இசைக்கவே

விடுவிடு விடுபரி கரிக் குழாம்

விடும் விடும் என ஒலி மிகைக்கவே

எனும் (474) பாடல் ஓசை நயத்துக்கு மட்டுமின்றி உணர்ச்சி வேகத்துக்கும் ஏற்றதல்லவா? இந்நூல் நிலைத்து நிற்கக் காரணம் இத்தகைய ஓசைநயம் தான்.

தெய்வங்களின் மீது பாடப்பட்ட பரணியில் கடைத்திறப்புக்குப் பதிலாக இறைவனை வாழ்த்தும் பகுதி அமைந்திருக்கும். இவை ஆன்மீகப் பரணி எனப்படும். ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணி, தத்துவராயரின் அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணியும் குறிப்பிடத்தக்கவையாகும்.

கடைத்திறப்பு எனும் பகுதி முத்தொள்ளாயிரத்திலும் தனிப்பாடலாக இடம்பெற்றுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் கதவு திறந்தது எனும் பாடல் படைத்தது இதன் தாக்கம்தான். போர்க்களம் சென்ற கணவர் வந்து விட்டாரா எனப் பார்க்க கதவருகிலேயே மனைவி காத்திருப்பாள். “தாயர் அடைப்ப மகளிர் திறப்ப தேயத்திரிந்த குடுமியவே” என்பது முத்தொள்ளாயிரம். காத்திருந்து காத்திருந்து கதவாகவே மாறிப் போனதால் கணவன் கதவின் மீது கை வைத்ததும் திறந்தேன் என்ற சொல் வந்ததைக் கண்டு ஆச்சரியமடைவதாக பாரதிதாசன் கவிதை படைத்திருக்கிறார். இது தான் இலக்கியப் பாரம்பரியம்.

நன்றி - தீக்கதிர்

06/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 5 - ப.முருகன்


குறவஞ்சி

மருத நிலத்துப் பள்ளி, பள்ளன் பற்றிய இலக்கியம் பள்ளு என்றால் குறிஞ்சி நிலத்துப் பாடல் குறவஞ்சி ஆகும். இது தொல்காப்பியர் வனப்பு என்று கூறும் இலக்கிய வகை ஆகும். வீரமாமுனிவர் தனது சதுர் அகராதியில் குறத்திப் பாட்டு என்று குறிப்பிடுகிறார்.

குறவஞ்சி என்பது குறவர் குலத்துப் பெண்ணைக் குறிப்பதாகும். இது ஒருவகை நாடகம் ஆகும். இறைவனோ, தலைவனோ உலா வருவர். உலா வந்த தலைவனை கண்டு காதல் கொண்ட தலைவி காதலால் கசிந்துருகுகிறாள். தலைவன் மேல் தான் கொண்ட காதல் நிறைவேறுமா என குறத்தியிடம் குறி கேட்கிறாள். குறத்தி தனது மலைவளம், நாட்டுவளம் பற்றி புனைந்து உரைக்கிறாள். பின் தலைவியின் கையைப் புகழ்ந்தும் கைக்குறி, முகக்குறி, பல்லி சொல் முதலியவற்றால் தலைவியின் மனக்கருத்தை கண்ணோர்ந்தும் சொல்வாள்.

குறிகேட்டு மகிழ்ந்த தலைவி நல்ல வார்த்தை சொன்னதற்காக குறத்திக்குப் பரிசுப்பொருளை அளிக்கிறாள். அதை பெற்றுக் கொண்டு வரத் தாமதமாகி விட்டதால் தேடி வரும் சிங்கன் (குறவன்) மற்றும் அவர்கள் இடையிலான உரையாடலும் கடவுளை வாழ்த்தி விடைபெறுவது என இவை ஒவ்வொன்றும் நாடகக் காட்சிகள் போல அமைந்திருக்கும்.

குறவஞ்சியில் பாட்டுடைத் தலைவன், தலைவியைவிட குறமகளின் செயல்பாடுகள் பற்றியே விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். கீழ் நிலைப்படுத்தப்பட்ட குறவர் இன மக்களின் நிலையை உயர்த்துவதற்காகவும் நாட்டுப்புற இலக்கிய வடிவத்துக்கு முதன்மை தரவேண்டும் என்பதற்காகவும் இவ்விலக்கியம் தோன்றியிருக்கலாம் என்கிறார் முனைவர் சவரிமுத்து.

குறிகேட்கும் வழக்கம் இன்றும் கூட நம் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இம்முறையைக் கையாண்டு காதலை மையமாக்கி குறவஞ்சி இலக்கியம் படைக்கப்படுகிறது. இந்த இலக்கியங்கள் தத்துவ உட்பொருளை கொண்டிருந்தாலும் எளிய நடையிலும் வழக்குச் சொற்கள் நிறைந்தும் காணப்படும். இந்தக் குறவஞ்சி நூல்கள் தற்போது சுமார் 110 கிடைக்கின்றன. இவற்றுள் கி.பி. 18ம் நூற்றாண்டில் திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி சிறப்புடன் அமைந்திருக்கும்.

குறவஞ்சி நூல் அகவல்பா, வெண்பா, கொச்சகக் கலிப்பா எனும் யாப்புடன் இடையிடையே வசனங்கள் கலந்து கண்ணி, சிந்து ஆகிய மெட்டுக்களில் படைக்கப்பட்டிருக்கும். இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலை கீர்த்தனை எனப்படும். இது எடுப்பு, தொடுப்பு, படுப்பு என மூன்று நிலைகளில் அமையும். இவைதான் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று அழைக்கப் படுபவை.

காதலைத்தவிர பக்தி அடிப்படையிலும் குறவஞ்சி நூல்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் வேத நாயக சாஸ்திரியர் எழுதிய பெத்லகேம் குறவஞ்சி கிறிஸ்தவ குறவஞ்சி நூலாகும்.

அரசனை தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி. இதை எழுதியவர் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் .

தமிழைத் தலைவியாகக் கொண்டு வரத நஞ்சையப்ப பிள்ளை எழுதியது தமிழரசி குறவஞ்சி. மனிதரைப் பற்றி எழுதிய குறவஞ்சி நூல் விராலிமலைக் குறவஞ்சி. இலங்கை யாழ்ப்பாணம் விசுவநாத சாஸ்திரியார் எழுதியது வண்ணக் குறவஞ்சி. இவை தவிர நகுல மலைக் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, அர்த்த நாரீசுவரக் குறவஞ்சி போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. பொன்னு ஆ.சத்தியசாட்சி எழுதியது தாமஸ் மலைக்குறவஞ்சி

பெத்லகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவும் தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும் குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும் சிங்கன் குருவாகவும் நூவன் உபதேசியாகவும் அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படுத்தப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப்பட்டுள்ளன. இந்நூல் முற்றுருவகமய்த் திகழ்வது தனிச் சிறப்பு.

விசுவாசக் குறவஞ்சி தேவமோகினிக்கு மலை வளம் கூறுவதாக வரும் பாடல், குற்றாலக் குறவஞ்சியின் ‘வானரங்கள்கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ பாடலை ஒத்திருக்கும். அந்தப்பாடல்,

‘வானவர்கள் கூடிவந்து

தோத்திரங்கள் படிப்பார்

வன்மையுள்ள சித்தரெல்லாம்

அருந் தவங்கள் பிடிப்பார்.

ஞானமுடன் முல்லை நிலத்

தலைவர் வந்து தொழுவார்

நட்சேத்திர சாஸ்திரிகள்

காணிக்கைகள் தருவார்.

மேலைநாட்டு கதை என்றாலும் நமது நாட்டுக்கு ஏற்றாற்போல் படைக்கப்படுவது பெரிய இலக்கியமான சீறாப்புராணம், தேம்பாவணி போன்ற வற்றில் மட்டுமல்லாது சிற்றிலக்கியமான பெத்லகேம் குறவஞ்சியிலும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மண்மயமாக்குதல் இலக்கியப் படைப்புக்கு முற்றிலும் உகந்தது.

நன்றி - தீக்கதிர்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 4 - ப.முருகன்

பள்ளு

திருவிழாக்காலங்களில் கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு. கட்டபொம்மன் நாடகத்தில் ‘சக்களத்திச் சண்டை’ எனும்காட்சிகள் சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டிருக்கும். அந்த சக்களத்திச் சண்டை எதனுடைய பிரதிபலிப்பு - தாக்கம் என்றால் முக்கூடற்பள்ளு எனும் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் சக்களத்திகளின் சண்டை தான்.

முக்கூடற்பள்ளு புகழ்பெற்ற பள்ளு இலக்கியமாகும். இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களில் ஒன்று மருதநிலம். வயலும் வயல் சார்ந்த இடமும் கொண்ட இந்த நிலப் பகுதியில் செழித்து நடைபெறும் தொழில் உழவுத் தொழில். இந்தத் தொழிலில் ஈடுபடும் பள்ளர் இன மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு கூத்து வடிவில் பாடப்படுவது பள்ளு இலக்கியம். இதை உழத்திப் பாட்டு என்றும் அழைப்பார்கள். தமிழின் முதல் தலித் இலக்கியம் எனவும் கொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் அருணன்.

உழவர்களின் தொழில் பள்ளத்தில் அதாவது பள்ளமான நீர் வயலில் நடைபெறுகிறது. அதனால் அவர்கள் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று கூறுவர். உழவுத் தொழிலும் பள்ளத்தில் நடக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும் பள்ளத்தில் கிடக்கிறது. அதனால்தான் உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது போன்ற பழமொழிகள் தோன்றின. அந்த அனுபவ மொழிகள் இன்றும் மாறாமல்தான் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் தற்போதைய விவசாயிகளின் தற்கொலைச்சாவுகள்.

பள்ளு நூல்களின் மூலம் பள்ளரின் பெருமை, மழைக்குறி, பள்ளர் பள்ளியர் பேச்சு, நெல்வகை, மாட்டுவகை, பயிர்த்தொழில் நுட்பங்கள், உழவு, நடவு, அறுவடை முதலியவை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று முனைவர் சா.சவரிமுத்து குறிப்பிடுகிறார்.

நெல்லு வகையை எண்ணினாலும் எண்ணலாம் பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் பழமொழியால் பள்ளு நூல்கள் மிகுதியாக இருந்திருக்கின்றன என்பதை அறியலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பள்ளு இலக்கியங்களுள் அருணாசலக் கவிராயர் எழுதிய சீர்காழிப் பள்ளும், பெரியவன் கவிராயர் எழுதிய முருகன் பள்ளும் குறிப்பிடத்தக்கவை. திருவாரூர் பள்ளு, வாரானைப் பள்ளு, ஞானப்பள்ளு, வைசியப் பள்ளு, திருநீலகண்டன் பள்ளு, கதிரமலைப்பள்ளு, குருகூர்ப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு போன்ற நூல்கள் சிறப்பானவை. எல்லாவற்றையும் விட சிறப்புடையதும் புகழ் பெற்றதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதுதான் பள்ளு நூல்களுள் பழமையானது.

இந்நூலை எழுதியவர் என்னயினாப் புலவர் என்று கூறப்படுகிறது. என்றாலும் நூலை எழுதியவர் பெயரை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. 18ம்நூற்றாண்டு எனத் தெரிகிறது. அந்தக் காலத்தில் சைவ, வைணவ சமயப் பிரிவினரிடையே மோதல்கள் நிகழ்ந்தன. அதனால் அக்காலத்து நூல்களில் இத்தகைய சமயப்பூசல்கள் வெளிப்படுகின்றன. நூலாசிரியர்கள் அவரவர் சமயத்துக் கருத்துக்களை தத்தம் நூல்களில் புகுத்தியுள்ளனர்.

இதர சிற்றிலக்கியங்களில் அரசன், இறைவன் போன்றவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். இதில் மட்டும்தான் உழைப்பாளி அதாவது விவசாயி, அவன் மனைவியர், அவனது ஆண்டை பாடப்படுகின்றனர். அவர்கள் தெய்வத்தைப் பற்றிப் பேசுவார்கள்.

முக்கூடற்பள்ளு நூலிலே காப்புச் செய்யுள்கள், குடிமை பெருமை, வளமை, செழுமை, குமுறல் கொடுமை, விடுதலை விளக்கம், விளைவு மகிழ்வு, கலங்கல் தெளிவு என ஏழு பகுதிகள் உள்ளன. இவற்றில் கொச்சகக்கலிப்பாவும் சிந்துவும் பாவகைகளாக இடம்பெறுகின்றன. பெரும்பாலான சிந்து பாடல்கள் பல்வேறு இராகம், தாளத்துடன் உள்ளன.

காப்புச் செய்யுள் பகுதி முடிந்ததும் பள்ளியரின் வரவு, முக்கூடற்பள்ளி, மருதூர்ப்பள்ளி என அறிமுகம் களை கட்டுவதே நாடகப்பாங்கிலானது. நிறைவுப் பகுதி பள்ளியரின் சமாதானம். கூடிப்பாடுதலுடன் அமைகிறது. பிறந்த ஊர்ப் பெருமையும் வணங்கும் கடவுள் நிறைவையும் சொல்லி ஏசலும் பூசலும் ஏராளமாய் நடக்கிறது. பள்ளனின் வரவும் பண்ணையாரின் உருட்டல் மிரட்டலும் தொடர்கிறது. இவற்றுக்கிடையில் அமைந்த கவிச்சுவையை நாம் பருகலாம்.

கடின உரையைக் கேட்டு வடிவழகக் குடும்பன்

குடிலிலிருந்தே அரை நொடியில் வந்தான்

பள்ளனைப் பண்ணைக்காரன்

கள்ளமாய்ப் பார்த்துப் பள்ளா

துள்ளாதே பண்ணைச் சேதி விள்ளடா என்றான்

என்ற பண்ணையாரின் கேள்விக்குப் பள்ளன் கூறிய பதில்,

பத்து உருவத்தழகர் பண்ணையான் கேட்டபடி

வித்துவகை மாட்டுவகை மேழி ஏர்க்கால் முதலாய்க்

கொத்துவகை அத்தனையும் கூட்டி வரத்துஞ் செலவும்

வைத்த இருப்புங்குடும்பன் மாறாமல் கூறினானே

இந்தப் பள்ளுக்குள் நுழைந்தால் இலக்கியச் சுவையை மட்டுமின்றி சமுதாய நிலையையும் தெளிவுறத் தெரி யலாம்.

நன்றி - தீக்கதிர்

05/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 3 - ப.முருகன்


தூது

நொடிப்பொழுது யுகமாவதும் யுகம் கூட கண நேரமாவதும் காதலில் விளைந்திடும் அதிசயம். பிரிவும் சேரலும் செய்யும் ரசவாதம்.

பிரிந்திருக்கும் காதலர்கள் தங்கள் எண்ணங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் பகர்ந்து சொல்லவும் ஏதாவது ஒரு வகையில் தூது நடைபெறும். தூது அனுப்புதல் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

காப்பியங்களில் கதைத் தலைவனோ தலைவியோ கிளியையோ அன்னத்தையோ தூதாக அனுப்பியதை படித்திருப்போம். அது காப்பியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஆனால் தூது பற்றி மட்டும் எழுதினால் அது தூது எனும் சிற்றிலக்கியமாகிடும்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் குணமாலை கிளியை தூது அனுப்புகிறாள். நளவெண்பாவில் நளன் அன்னத்தைத் தூது அனுப்புகிறான்.

தூது இலக்கியம் என்பது காதல் கொண்ட தலைவனோ, தலைவியோ தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு உயர்திணைப் பொருட்களையோ, அஃறிணைப் பொருட்களையோ தூதுப் பொருளாக கொண்டு பாடப்படுவதாகும்.

அப்படியானால் அவை என்னென்ன?

இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை பயில்பெறு மேகம், பூவை, பாங்கி
நயந்த குயில் பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம்
ஈரைந்து மே தூது ரைத்து வாங்கும் தொடை.

- (பிரபந்தத் திரட்டு)

என்று கூறப்பட்டுள்ளது.

இதில் பிரமரம் என்பது வண்டு. பாடலில் கூறப்பட்டுள்ள பத்து இனங்கள் தவிர நாரை, காக்கை, கழுகு, பணம், துகில், ஜவ்வாது, நெல், விறலி, தமிழ், புகையிலை, கழுதை போன்றவையும் தூதுப் பொருளாக பாடப்பட்டுள்ளன. பாடல்வகை கலிவெண்பாவில்தான் அமைந்திடும். நூலின் பெயர் தூதுப் பொருளின் பெயரால் விளங்கிடும். காதலில் மட்டும் தான் தூது இடம் பெறும் என்றில்லை. பிற துறைகளிலும் தூது இடம் பெறும்.

தூது நூல்கள் அகத்தூது, புறத்தூது என இரு வகையில் அமையும். அகநானூறு 170ம் பாடலில் தலைவி நண்டைத் தூது அனுப்புகிறாள். நற்றிணை 54, 70ம் பாடல்களில் வெள்ளாங்குருகும் 102ம் பாடலில் கிளியும் தூது அனுப்பப்படுகிறது. மகாபாரதத்தில் கண்ணன் தூதும், கந்தபுராணத்தில் வீரபாகுத்தேவர் தூதும் புறத்தூதாக நிகழ்கிறது. தமிழ் விடுதூதும், அகத்தூதாகவே அமைகிறது. அதன் சிறப்பான வரிகளாக பலராலும் மேற்கோள் காட்டப்படும் வரிகள், இருந்தமிழே உன்னால் இருந்தேன்.

இமையோர், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (151) என்பதாகும். இது தமிழின் சிறப்பை உணர்த்தும் தலைவியின் வார்த்தைகளாய் வருகின்றன.

கி.பி.14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் நெஞ்சுவிடுதூது எனும் நூலை எழுதியுள்ளார். பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் கிள்ளை விடுதூது, கச்சியப்ப முனிவர் வண்டு விடு தூது , சுப்ர தீபக் கவிராயர் கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது, சரவணப் பெருமாள் கவிராயர் சேதுபதி விறலி விடு தூது ஆகியவற்றை எழுதியுள்ளனர். விறலி விடுதூது நூல்கள் காமரசம் கொண்டவையாகும்.

“தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி” எனும் திரைப்பாடல் அவ்வப்போது நம் காதுகளில் விழுந்திருக்கும். காலம் மாறுகிறது தூதும் மாறுகிறது. இன்னும் ஒரு தலைவி, “கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ” என்று ரயிலைத் தூது அனுப்புகிறாள். எனவே ஏதாவது ஒரு வடிவில் தூது தொடரவே செய்கிறது.

நன்றி - தீக்கதிர்