07/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 6 - ப.முருகன்


பரணி

ஒரிசா மாநிலத்தில் மத வெறியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீதும் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய மாநில அரசில் தாக்குதல் நடத்துபவர்களின் ஆதரவாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். எனவே தொடர்ந்து காந்தமால் பகுதியில் வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. எனவே இவற்றை அறிவிக்கப்படாத யுத்தம் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு ஜனநாயக நாட்டிலேயே இந்த நிலை இருக்கிறது என்றால் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை சொல்லத் தான் முடியுமோ?

இன்றைய ஒரிசாதான் முந்தைய கலிங்க நாடு. அங்கம், வங்கம், கலிங்கம் என ஐம்பத்தாறு தேசங்கள் இருந்தன என்று கூறுவதுண்டு. கலிங்கம் வரலாற்றிலும் சரி இலக்கியத்திலும் சரி அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறது.

பரணியில் பிறந்தவன் தரணியாள்வான் என்று சொல்லப்படுவதை நம்புபவர்கள் பலருண்டு. மன்னன் அசோகன் நம்பினானோ நம்பவில்லையோ. ஆனால் நாடுகள் மீது படையெடுத்தான். வெற்றி கண்டு மாமன்னன் ஆனான். அவனது போர் வெறி கொண்ட மனதை மாற்றியது கலிங்கப் போர். போரின் அழிவினால் மனம் நொந்த அவன் அகிம்சை போதிக்கும் புத்த மதத்தை தழுவினான். அதை உலகம் முழுவதும் பரப்பிட முனைந்தான்.

இந்திய வரலாற்றில் கலிங்கம் வென்ற அசோகன் இடம்பிடித்தான். தமிழக வரலாற்றில் முதலாம் குலோத்துங்கன் பெயர் பெற்றான். அவனது தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றியுடன் திரும்பினான். அந்த வெற்றியை செயங்கொண்டார் எனும் புலவர் கலிங்கத்துப் பரணி என்ற பெயரில் இலக்கியமாய் வடித்தார்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் (838). போர் நடக்கும்போது பரண் மீது அமர்ந்து பாடியதால் பரணி எனப்பட்டது என்றும், பரணி நட்சத்திர நாளில் போரிட்டு வென்றதால் அப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

யானை பிறந்த நாள் பரணி, கொற்றவைக்கும் காளிக்கும் ஏற்றநாள் பரணி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் வென்றதால் பரணி எனப்பட்டது என்றும் காரணம் பல கூறப்படுகிறது.

பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள் மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் கூறுவார்.

பரணி தோற்றவர் பெயரில் வழங்கப் பெறும். கலிங்கமன்னன் அனந்தவர்மன் சோடிகங்கன் மீது வெற்றி கொண்டதால் கலிங்கத்துப் பரணி எனும் பெயர் பெற்றது. இந்நூல் தான் தமிழின் முதல் பரணி நூல்.

போர்வீரன், ஆசிரியர், கடவுள் ஆகியோர் மீது பரணி பாடப்படும். பதிற்றுப் பத்து போல பிற்காலத்தில் எழுந்தது பரணி என்றும் சொல்லப்படுகிறது. இது 13 பகுதிகளைக் கொண்டது. அவை கடவுள் வாழ்த்து, கடைத் திறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திர ஜாலம், இராஜ பாரம்பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம், காளிக்குக்கூளி கூறியது, போர் பாடியது, களம் பாடியது ஆகியவை.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி 509 தாழிசை பாடல்களைக் கொண்டது. இது அகச்சுவை, வீரச்சுவை, நகைச்சுவையும் கொண்டது. வீரச்சுவைக்கு உரித்தான உணர்ச்சி வேகத்துக்கு ஏற்ற பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

எடும் எடும் எடும் என எடுத்ததோர்

இகல் ஒலி கடல்ஒலி இசைக்கவே

விடுவிடு விடுபரி கரிக் குழாம்

விடும் விடும் என ஒலி மிகைக்கவே

எனும் (474) பாடல் ஓசை நயத்துக்கு மட்டுமின்றி உணர்ச்சி வேகத்துக்கும் ஏற்றதல்லவா? இந்நூல் நிலைத்து நிற்கக் காரணம் இத்தகைய ஓசைநயம் தான்.

தெய்வங்களின் மீது பாடப்பட்ட பரணியில் கடைத்திறப்புக்குப் பதிலாக இறைவனை வாழ்த்தும் பகுதி அமைந்திருக்கும். இவை ஆன்மீகப் பரணி எனப்படும். ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணி, தத்துவராயரின் அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணியும் குறிப்பிடத்தக்கவையாகும்.

கடைத்திறப்பு எனும் பகுதி முத்தொள்ளாயிரத்திலும் தனிப்பாடலாக இடம்பெற்றுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் கதவு திறந்தது எனும் பாடல் படைத்தது இதன் தாக்கம்தான். போர்க்களம் சென்ற கணவர் வந்து விட்டாரா எனப் பார்க்க கதவருகிலேயே மனைவி காத்திருப்பாள். “தாயர் அடைப்ப மகளிர் திறப்ப தேயத்திரிந்த குடுமியவே” என்பது முத்தொள்ளாயிரம். காத்திருந்து காத்திருந்து கதவாகவே மாறிப் போனதால் கணவன் கதவின் மீது கை வைத்ததும் திறந்தேன் என்ற சொல் வந்ததைக் கண்டு ஆச்சரியமடைவதாக பாரதிதாசன் கவிதை படைத்திருக்கிறார். இது தான் இலக்கியப் பாரம்பரியம்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: