08/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 8 - ப.முருகன்


கலம்பகம் 

பலவகை வண்ணமும் வாசமும் நிறைந்த மலர்களைத் தொடுத்துக் கட்டிய மலர்ச்சரத்தை கதம்பம் என்போம். அதுபோல பலவகை உறுப்பும் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையைக் கலம்பகம் என்று அழைத்தனர். கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகக் கருதுவார் தமிழ்த்தாத்தா உவே.சாமிநாதய்யர்.

கலம் என்றால் பன்னிரண்டு. பகம் என்றால் அதில் பாதி ஆறு. அதனால் கலம்+பகம் என்பது 18 வகை உறுப்புகளால் பாடப்படுவது ஆகும். கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, மடக்கு என்னும் பல்வேறு செய்யுட்களால் பாடப்படுவது கலம்பகம். பகம் - எனும் ஆறும் ஆறு வகை குணங்களைக் குறிப்பதாகவும் அமையும் என்பர். ஆனால் முதல்பாட்டிற்கும் அடுத்த பாட்டிற்கும் இடையே கதை தொடர்பு இருக்காது.

பதினெட்டு வகை உறுப்புகள் என்றால் என்னென்ன? புயம், தவம், வண்டு, அம்மானை, ஊசல், ஊர், பாண், மதங்கு, மடக்கு, கைக்கிளை, சிந்து, களி, மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், தூது ஆகியவையே.

கலம்பக நூல்கள் யாருக்காக படைக்கப்படும்? தேவர்கள், முனிவர்கள், அரசர்கள், அமைச்சர்கள், வணிகர்கள், வேளாளர்கள் ஆகியோருக்காகப் பாடப்படும். அவை யார், யாருக்கு எத்தனை பாடல் என்று பன்னிருபாட்டியல் நூல் (130) பின்வருமாறு கூறுகிறது.

தேவர்க்கும் முனிவர்க்கும் காவல் அரசர்க்கும்

நூறு தொண்ணூற்றைந்து தொண்ணூறே

ஒப்பில் எழுபது அமைச்சியலோர்க்குச்

செப்பிய வணிகர்க்கு ஐம்பது முப்பது

வேளாளர்க்கென விளம்பினர் செய்யுள்.

ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட கலம்பகங்கள் அனைத்திலும் நூறு பாடல்கள் அமைந்திருக்கின்றன.

இதற்கொரு கதையும் உண்டு. கலம்பகம் பாடினால் அந்த கலம்பகத்தின் தலைவன் இறந்துவிடுவான் என்றொரு நம்பிக்கை (?) இருந்திருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. என்றாலும் அதனால் தானோ என்னவோ கலம்பகம் பெரும்பாலும் தெய்வங்கள் மீது பாடப்பட்டிருக்கிறது.

மதுரை மாநகரில் கோவில் கொண்டுள்ள மீனாட்சியையும் சொக்கநாதரையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குமரகுருபரரால் பாடப்பட்டது மதுரைக் கலம்பகம் ஆகும். இது 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். ஆயினும் காலத்தால் மூத்த கலம்பகம் என்ற சிறப்பைப் பெற்றது நந்திக் கலம்பகம் ஆகும். இது மூன்றாம் நந்திவர்ம பல்லவனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். இந்நூலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. என்றாலும் கூட நந்திக் கலம்பகம் அவரது புகழ்பாடிக் கொண்டேயிருக்கிறது.

நந்திக் கலம்பகம் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. நந்திவர்மனை வெல்ல முடியாத பகைவர்கள் அவனை வீழ்த்துவதற்காகவே கலம்பகம் பாடி அவனைக் கொல்ல நினைத்தனர் என்று கூறப்படுவதுண்டு. இதைத் தெரிந்து கொண்டே அவனும் கவிதை மேல் உள்ள காதலால் கலம்பகம் பாடுவதற்கு ஒப்புக்கொண்டான் என்றும் கலம்பகப் பாடல்களைக் கேட்டு அவன் உயிரிழந்ததாகவும் சொல்லப்படும் செவிவழிச் செய்திகள் நம்பும்படியாக இல்லை.

நந்திவர்மன் இறந்தபிறகு கையறு நிலையில் பாடியதாகக் கூறப்படும் பாடல்பின் வருமாறு:-

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் அடைந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

யானும் என்கலியும் எங்ஙனே புகுவோம்

நந்தியே நந்தி நாயகனே

இது தவிர உதீசித் தேவரின் திருக்கலம்பகம், பிள்ளைப் பெருமாளின் திருவரங்கக் கலம்பகம், குமரகுருபரரின் கச்சிக் கலம்பகம் போன்ற நூல்கள் கிடைக்கின்றன.

கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் சிறந்து விளங்கினர் என்பர். இரட்டையரில் ஒருவர் பார்வையற்றவர், இன்னொருவர் முடவர். பார்வையற்றவர் மீது அமர்ந்து முடவர் வழிகாட்ட பார்வையற்றவர் நடந்து பல தலங்களுக்குச் சென்று கலம்பகம் பாடினார்கள் என்று கூறுவார்கள். அதில் திருவாமாத்தூர் கலம்பகம், தில்லைக் கலம்பகம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

அர்ச்சூசையப்பர் கலம்பகம், மக்கா கலம்பகம் போன்ற கிறிஸ்தவ, இஸ்லாமியக் கலம்பகங்களும் உண்டு.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: