27/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 27

உண்மையில் சொல்லப்போனால், "அஃப் கோர்ஸ்' என்பது ஒரே சொல் அல்ல; இரண்டு சொற்களின் கூட்டுச் சேர்க்கை. இந்தச் சொல்லாக்கம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டில் "முன்னோட்டம்' அல்லது "முன்வழி ஓட்டம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பழைய ஃப்ரெஞ்சுச் சொல்லான "கோர்ஸ்' என்பதிலிருந்தும், கிட்டத்தட்ட அதே பொருளில் அல்லது "ஓட்டப்பந்தயம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பழைய இலத்தீன் சொல்லாகிய "கர்சஸ்ட என்ற சொல்லிலிருந்தும் ஆங்கிலத்தில் "கோர்ஸ்' என்ற சொல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், 14-ஆம் நூற்றாண்டில், ஓட்டம், இயக்கம் என்னும் பொருளிலிருந்து சற்று மாறுபட்டு, கல்விக் கூடங்களில் கொடுக்கப்படும் பாடத்திட்டத்தைக் குறிக்கவும் "கோர்ஸ்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் "பை கோர்ஸ்' என்று பயன்படுத்தப்பட்ட இச்சொலவடை 1540-க்குப் பின் "அஃப் கோர்ஸ்' என்று உருமாற்றம் பெற்றது. அவ்வாறு மாற்றம் பெற்றபோது, இது "ஆஃப் தி ஆர்டினரி கோர்ஸ்' என்ற சொற்றொடரைக் குறிக்கும் சுருக்கச்சொல்லாகப் பயனுக்கு வந்தது.

ஒரு நிகழ்வின் அல்லது செய்தியின் ஓட்டத்தையும், செல்வழியையும் குறிப்பதற்குப் பயன்படும் சொல்லாகிய கோர்ஸ் என்ற சொல், பை கோர்ஸ் (by course), இன் கோர்ஸ் (in course), இன் டியூ கோர்ஸ் (in due course of), இன் தி கோர்ஸ் ஆஃப் (in the course of), மேட்டர் ஆஃப் கோர்ஸ் (matter of course), அஃப் கோர்ஸ் (of course), ஆஃப் கோர்ஸ் (off course) என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் பயன்பாட்டிற்கு வந்தது. வெவ்வேறு சொற்களோடு கோர்ஸ் என்ற சொல் கூடும்போது, பல்வேறு வகையான படிவங்களை அது காட்டத் தொடங்கியது.

கேம்ப்ரிட்ஜ் அகரமுதலி, அஃப் கோர்ஸ் என்ற சொல்லுக்கு (1) ஆமோதிப்பதையோ, அனுமதிப்பதையோ குறிக்கப் பயன்படும் சொல் அல்லது (2) ஏற்கனவே அறிந்த ஒன்றையோ அல்லது இயல்பான ஒன்றையோ சுட்டிக்காட்ட உதவும் சொல் அல்லது (3) ஆச்சர்யத்தைக் கொடுக்காத (எதிர்பார்த்ததைப் போலவே நிகழ்ந்த) ஒரு நிகழ்வையோ, செய்தியையோ குறிக்கும் சொல் என்று மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு, இடத்திற்குத் தகுந்தாற்போல், பின்வரும், ஆச்சர்யம் தரா நிலை, ஆமாம், இப்போதே, இயற்கையில், இருப்பினும், இருக்கலாம், உண்மையில், உறுதியாக, தெரிந்ததுதான், நிச்சயமாக, முழுமையாக முதலிய பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

முனைவர் ஜி.ரமேஷ், "நாம் முன்பு அறிந்ததைப் பற்றியது சம்பந்தமான ஒன்று' என்றும், இருந்தாலும், இருந்தபோதிலும், தெரிந்தாலும் ஆகிய பொருள்களையும் இச்சொல் குறிக்கும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், "நாம் உரையாடல்களின் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான் அஃப் கோர்ஸ் என்றும், அதற்குப் பல இணையான தமிழ்ச்சொற்கள் உள்ளன என்றும், பொதுவாக உரையாடல்களின் போது அச்சொல், செல்லும் திசை, போக்கு, நடவடிக்கை, பந்தய ஓட்டக்களம் என்னும் பொருள்களைக் குறிக்கும் என்றும், இதற்கு இணையான தமிழ்ச்சொற்கள், கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக' என்றும் கூறியுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், சூழ்நிலைகளுக்கேற்ப இச்சொல், நிச்சயமாக, உறுதியாக, உள்ளபடியே, உண்மையில், அப்படித்தான், அப்படியே, இயல்புதானே, ஆம் அப்படித்தான், அப்படியே ஆகட்டும் ஆகிய பொருள்களைக் கொடுத்தாலும், "நிச்சயமாக' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதிலும் இந்தச் சொல் வடமொழியாக இருக்குமென்று எண்ணித் தவிர்க்க நினைத்தால், "உறுதியாக' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், எனினும், என்றாலும் என்னும் சொற்களையும், செ.சத்தியசீலன் ஏற்றது, பொருத்தமானது, உடன்பாடானது, இயல்பானது என்னும் சொற்களையும், மு.தனகோபாலன், "இருந்தாலும்' என்றும், தெ.முருகசாமி "ஒருவேளை' என்றும், என்.ஆர்.சத்தியமூர்த்தி, "உண்மைதான், இயல்பானதே, ஏற்புடையதே, தாராளமாக, தடையின்றி' முதலிய சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில், ஆங்கில அகரமுதலிகளில் இல்லாத ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். "கோர்ஸ்' என்கிற சொல்லுக்குப் பொருள் எழுதும் இடத்திலேயே பை கோர்ஸ் ஆஃப், இன் டியூ கோர்ஸ், இன் தி கோர்ஸ் ஆஃப், மேட்டர் ஆஃப் கோர்ஸ் மற்றும் அஃப் கோர்ஸ் ஆகிய அனைத்துச் சொற்றொடர்களுக்கும் பொருள்களை அளித்துள்ளார். அதில், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாக, "ஐயத்துக்கு இடமின்றி' என்ற சொற்களை வழங்கியுள்ளார்.

ஆனால், அஃப் கோர்ஸ் என்ற சொல், அது பயன்படுத்தப்படும் இடம், காலம் மற்றும் நிகழ்வை ஒட்டி, ஆமோதிப்பு, அனுமதிப்பு, ஏற்கனவே அறிந்த ஒன்று, எதிர்ப்பார்த்ததைப் போன்று நிகழும் நிகழ்வு ஆகிய பல பொருள்களைக் கொள்கிறது. இப்படிப் பார்க்கும்போது, "ஆம்' என்ற சொல் மட்டுமே ஆமோதிப்பு, அனுமதிப்பு, எதிர்ப்பார்ப்பு, இயல்பான நிகழ்வு ஆகிய அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே சமயம், முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், அரும்பாடுபட்டு உருவாக்கிய சொற்களஞ்சியத்தில் அளித்துள்ள பொருளை முற்றிலும் மாற்றுவதற்கு நமக்குப் போதிய அதிகாரமோ, அறிவோ இல்லை. எனவே, அஃப் கோர்ஸ் என்ற சொல்லுக்கு "ஐயத்திற்கிடமின்றி ஆம்' என்ற சொற்களை ஏற்பது சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தில் அளித்துள்ள பொருளை ஒட்டி அமையும் என்பதால், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு இணையான சொற்றொடர் "ஐயத்திற்கிடமின்றி ஆம்' என்பதே.

நன்றி - தமிழ்மணி 12 05 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 26

அறிவைப் பற்றி ஆயும் மெய்யியலின் ஒரு பிரிவே எபிஸ்டமாலஜி ஆகும். இந்த அறிவியலின் நோக்கம் "உண்மையான மற்றும் போதுமான அறிவை, உண்மையற்ற மற்றும் குறைபாடுடைய அறிவிலிருந்து, எது வேறுபடுத்திக் காட்டுகிறது?' என்ற கேள்விக்கு விடை காண்பதே ஆகும்.

1808-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோ நகரத்தில் பிறந்த நுண்பொருள் கோட்பாட்டியல்  (Metaphysical) அறிஞர் ஜேம்ஸ் ஃப்ரெடெரிக் ஃபெரியர் (James Frederick Ferrier) ஆவார். மனதின் விழிப்பு நிலை பற்றிய மெய்யியலுக்கான ஓர் அறிமுகம் (An Introduction to the Philosophy of Consciousness), என்ற தலைப்பில் 1838-இல் ஒரு கட்டுரைத் தொடரை எழுதத்தொடங்கிய இவர், 1854-இல் தன்னுடைய கோட்பாடுகளின் தொகுப்பை "Institutes of Metaphyscic-The Theory of Knowing and Being' என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்தத் தொகுப்பில்தான், முதன் முதலில் ஜேம்ஸ் ஃப்ரெடெரிக் ஃபெரியர் (James Frederick Ferrier) எபிஸ்டமாலஜி என்ற சொல்லை உருவாக்கினார். இச்சொல், அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் என்ற பொருள்களைக் கொண்ட "எபிஸ்டெமெ' மற்றும், படிப்பு என்ற பொருளைக்கொண்ட "லோகோஸ்' ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது. அறிவின் இயல்பையும், உண்மை, நம்பிக்கை, நிலைநாட்டுதல் இவற்றோடு அறிவுக்குள்ள தொடர்பையும் பற்றி ஆய்ந்தறிவதே எபிஸ்டமாலஜி ஆகும்.

ஸ்டான்ஃபோர்டு மெய்யியல் கலைக்களஞ்சியம், எபிஸ்டமாலஜி என்பது நியாயமான நம்பிக்கைகளையும், அறிவையும் பற்றிய படிப்பு என்று எடுத்துரைக்கிறது. மெரியம் வெஃப்ஸ்டர் அகரமுதலி, இச்சொல்லுக்கு அறிவின் இயல்பு மற்றும் ஆதாரங்களைப் பற்றிய படிப்பு அல்லது கோட்பாடு, அதிலும் குறிப்பாக அறிவின் வரம்பு எல்லைகளையும், அதன் ஒப்புக்கொள்ளத்தக்க அளவீடுகளையும் பற்றிய ஆய்வு என்று கூறுகிறது. ஆக்ஸ்போர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு, அறிவைப் பற்றியும், அதன் வகைமுறைகள், அதன் செல்லத்தக்கத் தன்மை ஆகியவற்றைப் பற்றியும் அறியப்படும் மெய்யியலின் ஒரு பிரிவு என்று உரைக்கிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகத் தயாரித்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு "அறிவாதார முறையியல், அறிவின் ஆதாரத்தையும், அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை' என்ற பொருள்களைத் தருகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எபிஸ்டமாலஜி என்பது உண்மையில் அறிவைப் பற்றிய இயல் ஆகும். எப்படி புவியைப் பற்றிய படிப்பு புவியியல் (Geography) ஆகுமோ, எப்படி பொருளாதாரத்தைப் பற்றிய படிப்பு பொருளியல் (Economics) ஆகுமோ, எப்படி குற்றங்களைப் பற்றிய படிப்பு குற்றவியல் (Criminology) ஆகுமோ, மற்றும் எப்படி தாவரங்களைப் பற்றிய படிப்பு தாவரவியல் (Botony) ஆகுமோ, அப்படி அறிவைப் பற்றிய படிப்பு அறிவியல் (Science) என்றே சொல்லப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே "சயன்ஸ்' என்ற சொல் விஞ்ஞானம் என்று மொழிபெயர்க்கப்பட்டு, அதன்பின் தமிழ்கூறும் நல்லுலகத்தால் "அறிவியல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. எனவே, அறிவியல் என்ற சொல் "சயன்ஸ்' என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட காரணத்தால், எபிஸ்டமாலஜி என்ற சொல்லுக்கு இச்சொல் மிகப் பொருத்தமானதாக இருப்பினும், அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இச்செய்திகளைக் கருத்தில் கொண்டு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் கோ. மன்றவாணன் இச்சொல்லுக்கு அறிவு இயங்கியல், அறிவுத் தேடலியல், அறிவு ஆய்வியல், அறிநுட்பவியல், அறிநோக்கியல் ஆகிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

பெ.கார்த்திகேயன் இச்சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் மனித அறிவின் அடிப்படை, அதன் மூலம் வரம்பு மற்றும் அவ்வறிவின் தன்மையை அறிதல் என்ற பொதுவான வரைமுறைகளைத் தருகின்றன என்றும் இச்சொல்லுக்கு மனித அறிவிற்கென்று தனியான பிரிவை நாம் அளிக்க வேண்டுமென்றும் கூறிவிட்டு அதன் காரணமாக மனித அறிவு அகழ்வாழ்வியல் என்றோ அல்லது பொதுப்படையாக மனிதவறிவகழ்வாழ்வியல் என்றோ சொல்லலாம் என்கிறார்.

டாக்டர் ஜி.ரமேஷ், மனித மூளையின் எல்லை, மனித குணங்கள் பற்றிய ஆய்வு, மனித அறிவு பற்றிய பாடம் அல்லது ஞானவியல் என்றும், என்.ஆர். ஸத்யமூர்த்தி ஞானஅகழ்வாழ்வியல், பல்லறிவாழ்வியல் என்னும் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

செ.சத்தியசீலன், "அறிவுக் கோட்பாடு' என்றும், தெ.முருகசாமி, "அறிவாராய்ச்சியின் அடிப்படை ஆதாரத்துறை' என்றும், டி.வி.கிருஷ்ணசாமி, "திருமுக விளக்கம்' என்றும், மதுரை பாபாராஜ், "அறிவுத்திறனியல்' என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், "அறிவுத்துறை விளக்க ஆராய்ச்சி, அறிவு பற்றிய ஆராய்ச்சி, அறிவாதார இயல்' என்னும் சொற்களையும் கூறியுள்ளனர்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது எபிஸ்டமாலஜி என்பது அறிவைப் பற்றி ஆய்வு செய்யும் இயல் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. எனவே, "அறிவாய்வியல்' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கும்.


நன்றி - தமிழ்மணி 05 05 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 25

எர்கோனாமிக்ஸ்' என்ற சொல் புழக்கத்திற்கு வந்தே சுமார் 60 ஆண்டுகள்தான் ஆகின்றது. இச்சொல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. காரணம், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, பிற அகரமுதலிகள், கலைக்களஞ்சியம் ஆகியவை இச்சொல்லைப் பற்றித் தரும் தகவல்கள் மாறுபட்டிருக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு, "மனிதர்கள் வேலை செய்யும் பணியிடத்தில், அவர்களுடைய திறமை, வசதி, அவர்களுக்குக் கிடைக்கும் நன்னலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு படிப்பு' என்று குறிப்பிடுகிறது. ஆனால், மெரியம் வெஃப்ஸ்டர் அகரமுதலி, இதற்கு இரு பொருள்களைத் தருகிறது. ஒன்று, "மனிதர்கள் கையாளும் பொருள்களை, அவர்கள் திறமையான வகையிலும், பாதுகாப்பான முறையிலும் பயன்படுத்தக் கூடியவகையில் வடிவமைக்கும் அறிவியலின் ஒரு பிரிவு'. இரண்டாவது, "ஒரு பொருளின் வடிவமைப்புப் பொருண்மைகள்'. ஆனால், கலைக்களஞ்சியம் இச்சொல்லைப் பற்றித் தரும் விளக்கம் "மனிதர்களின் நலன் மற்றும் உற்பத்தித் திறனை முழுமையாக வெளிக்கொணரும் விதத்தில் எந்திரங்களையும், வேலைப் பொருள்களையும், வேலைச் சூழ்நிலையையும் உருவாக்கித் தரும் தொழில்' என்பதாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்கப்பட்ட அனைத்துலக எர்கோனாமிக்ஸ் சங்கம், இச்சொல்லுக்கு "ஓர் அமைப்பில் கூட்டாகச் செயல்படும் மனிதர்களுக்கும் மற்ற பொருள்களுக்கும் இடையே உள்ள உறவையும், பரிமாற்றத்தையும் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஓர் அறிவியல் பாங்கு' என்று பொருள் தருகிறது. இதைத் தவிர "ஓர் அமைப்பில் செயல்படும் மனிதர்களுடைய நன்னலத்தையும், அவர்களுடைய உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்தும் நோக்கில், பொருள்களை வடிவமைக்கும் தொழில் எர்கோனாமிக்ஸ்' என்றும் விளக்கமளிக்கிறது.

அனைத்துலக எர்கோனாமிக்ஸ் சங்கத்தின் இணையதளத்தில், இச்சொல் "கிரேக்கச் சொற்களான எர்கான் (வேலை அல்லது பணி) மற்றும் நோமோஸ் (விதிகள்) என்ற சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகவும், இது ஓர் அமைப்பு சார் அறிவியல் கோட்பாடு என்றும், மனித நடவடிக்கைகளில் எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் ஒரு பகுதி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் ஆகும் (Occupational Safety and Administration). இந்நிறுவனத்தின் இணையதளத்தில் எர்கோனாமிக்ஸ் என்பது, "ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் திறமைகளுக்கேற்ப பணிச்சூழலையும், பணித் தேவைகளையும் தீர்மானிக்கும் அறிவியல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கும்போது, உற்பத்திப் பெருக்கமும், உடல்நலமும், அபாயக்குறைவும், பணியாளர்களின் மனநிறைவும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஓஷா (OSHA - Safety and Health Admistration) என்றழைக்கப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் ஓர் அங்கம், பணியாளர்களிடையே அவர்களுடைய உடல் மற்றும் மனதில் பணிச் சூழலால் ஏற்படும் தாக்கத்தினால் வரும் உடல்நலக் குறைவுகளை எர்கோனாமிக் குறைபாடுகள் (Ergonomic disorders) என்று பெயரிட்டு, அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கிறது. அவை: (1) மீண்டும் மீண்டும் ஒரே வேலையைச் செய்யும்போது, உடல்மேல் ஏற்படும் பாதிப்பு (Repetitive strain injuries), (2) சதைகளிலும், நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் குறைபாடு (Musculoskeletal disorders), (3) மன அழுத்தத்தால் ஏற்படும் குறைபாடு (Cumulative trauma disorders). இந்த விஞ்ஞானம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் கிளை உடலியல் எர்கோனாமிக்ஸ் (Physical ergonomics) என்றும், இரண்டாவது கிளை புலனுணர்வு எர்கோனாமிக்ஸ் (Cognitive ergonomics) என்றும், மூன்றாவது கிளை நிறுவன ரீதியான எர்கோனாமிக்ஸ் (Organizational ergonomics) என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தகையத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், எர்கோனாமிக்ஸ் என்ற சொல்லுக்கு பணியுயர் சூழலியல், பணித்திறன் வளர்சூழலியல், பணி மேம்பாட்டியல், பணித்திறன் மேம்பாட்டியல் ஆகிய சொற்களையும், முனைவர் பா.ஜம்புலிங்கம், பணிச்சூழலியல், பணியிடத் திறமையறி ஆய்வு, பணி சூழ் அறிவு கூர்நோக்கு என்னும் சொற்களையும், ஷா.கமால் அப்துல் நாசர், "பணிச்சூழலியல்' என்ற சொல்லையும், முனைவர் ஜி.ரமேஷ், பணிச்சூழலியல், வசதியான அலுவலகச் சூழல், பணியாற்றப் பாதுகாப்பான இடம், வேலை செய்ய சிறந்த பகுதி ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்கள்.

சி.அண்ணாதுரை, உடலை எவ்வாறு வளைத்து எப்பணியை எவ்வாறு எளிதாகச் செய்வது என்பதை அறிவுறுத்துவது வாகியல்தான். எனவே "வாகியல்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், மனிதப்பொறியியல், பணிச்சூழலியல், பணியியல் என்னும் சொற்களையும், என்.ஆர்.சத்தியமூர்த்தி, "பணியியல்' என்ற சொல்லையும், எழில் சோம.பொன்னுசாமி, "பணிச்சூழலியல்' என்ற சொல்லையும், மதுரை பாபாராஜ், "பணிச்சூழல் இணக்க ஆய்வு' என்ற சொல்லையும் குறிப்பிட்டுள்ளனர்.

வாசகர்களின் கடிதங்களையும், இந்தச் சொல் தோன்றி வளர்ந்த விதத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், பணிச்சூழலியல், பணி மேம்பாட்டியல் என்னும் இரு சொற்களும் பொருத்தமாகத் தோன்றுகின்றன. ஆனால், இவ்விரு சொற்களுக்குள், "சூழல்' என்பது வினையாகவும், "மேம்பாடு' என்பது பயனாகவும் விளையும் காரணத்தால், "பணிச்சூழலியல்' என்ற சொல்லே பொருத்தமுடையதாகும்.

"எர்கோனாமிக்ஸ்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுத்த இணைச்சொல் “பணிச்சூழலியல்'.

நன்றி - தமிழ்மணி 28 04 2013

26/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 24

ஆங்கில-தமிழ் அகரமுதலிகள் பலவற்றில் "என்லைட்டென்' என்ற சொல்லுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. ஆனால், "என்லைட்டென்மென்ட்' என்ற சொல்லுக்கு, அகரமுதலிகள் எதிலும் பொருள் தரப்படவில்லை. முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்திலும் "என்லைட்டென்' என்ற சொல்லுக்கு "ஒளியூட்டு, அறிவுறுத்து, அறிவுகொளுத்து, கற்பி, தெரிவி, ஐயந்தெளிவி, தப்பெண்ணம் அகற்று, மூடநம்பிக்கையிலிருந்து விடுவி' ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளனவே தவிர, என்லைட்டென்மென்ட் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இச்சொல்லுக்கு மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. முதல் பொருள், ஞானம் பெறும் நிகழ்வு அல்லது வழி; இரண்டாவது, 18-ஆம் நூற்றாண்டில் பழமை சார்ந்த, சமூக, சமுதாய, அரசியல் கருத்துகளைப் புறந்தள்ளி, பகுத்தறிவின்பாற்பட்டு எழுந்த ஒரு மெய்யியல் இயக்கம்; மூன்றாவது, ஆசையும், துன்பமும் அற்ற, ஓர் அருள் கைவரப்பட்ட நிலை என்று புத்தமதம் கூறும் கோட்பாடு.

இதே போல், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு,   ஞானம் பெறும் நிலை அல்லது ஞானம் தரும் செய்கை; 17-ஆம் நூற்றாண்டில் மெய்யியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட, பழமை வாதத்தை எதிர்த்து நின்ற, சுய சிந்தனை மற்றும் பகுத்தறிவு சார்ந்த இயக்கம் என இருவகையான பொருள்களைத் தருகிறது.

ஐரோப்பிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், மூட நம்பிக்கை, கண்மூடிப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எதிர்த்து நின்று, காரணம், தர்க்கம், விமர்சனம், கருத்தியல் சுதந்திரம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் உருவான அறிவும், கலாசாரமும் சார்ந்த இயக்கத்தை குறிப்பதற்காகவே இச்சொல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பகுத்தறிவு காலம் அல்லது அறிவு மலர்ச்சிக் காலம் (age of reason, age of rationalism)என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு காலம் 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், கலிலியோ, நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளாலும், கணிதத்தின் வளர்ச்சியாலும், மனிதனுடைய சிந்தனை வளம் பெறத் தொடங்கிய காலம், "என்லைட்டென்மென்ட்' என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் உருவான அறிவு மலர்ச்சியே அமெரிக்க விடுதலை மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது என்றும் கூறப்படுகிறது.

ஜெர்மானிய மெய்யியல் அறிஞர் இம்மானுவேல் கான்ட் 1784-ஆம் ஆண்டில் ""என்லைட்டென்மென்ட் என்றால் என்ன?-இக்கேள்விக்கான பதில்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை மிகப் பிரபலமானது. அக்கட்டுரையில் அவர், இச்சொல்லைப் பின்வருமாறு விவரிக்கிறார்:-

""தனக்குத்தானே மனிதகுலம் தருவித்துக்கொண்ட முதிர்ச்சியின்மையில் இருந்து பெறும் விடுதலையே என்லைட்டென்மென்ட்''. அலெக்சாண்டர் போப் 1733-இல் எழுதிய மனிதனைப் பற்றிய ஒரு கட்டுரையில் ""உன்னை அறிந்துகொள்; மனிதகுலத்தைப் பற்றிய முறையான படிப்பு மனிதனே ஆகும்'' என்றார்.

என்லைட்டென்மென்ட் காலத்தின் காரணமாக மிகப்பெரிய பயனொன்று மனித குலத்திற்கு விளைந்தது. அதுதான், மனித குலம் பெற்ற அறிவுத் திறன் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து, 1751 முதல் 1772-ஆம் ஆண்டுக்குள் 28 தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதைத் தொகுத்தவர்கள் டெனிஸ் டிடேராட் மற்றும் ழான்லா ரோண்டு அலம்பர்ட். இந்தத் தகவல்களோடு, இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, "ஞானோதயம்' என்ற சொல்லையும், முனைவர் வே.குழந்தைசாமி "அறிவார்ந்தநிலை அல்லது அறிவுசால்நிலை' என்னும் சொற்களையும், வெ.ஆனந்தகிருஷ்ணன், "அறிவு மற்றும் அறிவுசார்ந்த அறிதல், சார்புநீங்கிய, ஐயம் தெளிதல், கல்வி, உணர்வு, ஞானம், போதனை, ஆன்மா ஆகியவைகளைத் தொடர்புபடுத்திப் புத்திபுகட்டுதல், கற்றுக்கொடுத்தல், தெளிவித்தல், ஞானம் பிறக்கச்செய்தல் அதன் மூலம் அறிவொளி அல்லது மெய்யறிவு தோன்றல் இவைகளில் ஏதேனும் ஒரு சொல்லைக் கையாளலாம்' என்றும், புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "ஞானம், மெய்ஞானம், மெய்ஞான விளக்கம், மெய்ஞானத்தெளிவு, மெய்மைத் தெளிவு, மெய்மை விளக்கம் என்னும் சொற்களையும், முனைவர் ஜி.ரமேஷ், "தெளிவாக்குதல், விளக்குதல், போதித்தல், அறிவூட்டுதல், புலமை' என்னும் சொற்களையும், தி.அன்பழகன் "ஒளிரறிவு' என்ற சொல்லையும், புலவர் உ.தேவதாசு, "மெய்யுணர்தல்' என்ற சொல்லையும், முனைவர் பா.ஜம்புலிங்கம், "பயில்வித்து உணரவைத்தல், தெளிவுபடுத்துதல், தெளிவித்தல், ஐயம் அகற்றல்' ஆகிய சொற்களையும்-  இவ்வாறு பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

ஆங்கில அகரமுதலிகள் அளித்திருக்கும் பொருள்களை வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் ஆங்கிலத்தில் அறிவுசார்புடைய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், பெரும்பாலும் நடைமுறையில், அதிலும் நமது கலாசாரப் பின்னணியில் இச்சொல் "ஞானம்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே, இச்சொல்லுக்கு "ஞானோதயம்' என்ற சொல்லே பொருத்தமாகத் தெரிகிறது.

என்லைட்டென்மென்ட் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுத்த இணையான தமிழ்ச் சொல் ஞானோதயம்.

நன்றி - தமிழ்மணி 21 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 23

தி.அன்பழகன், தம் கூட்டத்தாருக்கு மட்டுமே பொருள் விளங்கும் அடையாளச் சொல் தமிழ் இலக்கணத்தில் "குழுஉக்குறி' எனப்படும் என்றும், இதன் அடிப்படையில், "குறிக்குழுக்கூடல்' (சந்திப்பு) என்று கூறலாம் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், காலமும், பொழுதும் கனியும் வரை காத்திருப்பதும்; இடம், பொருள், காலம் அறிந்து சந்திப்புக்கள் நிகழ்வதும்; குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பல அரசு மற்றும் அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவதும் திட்டமிட்ட சந்திப்பு என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதால், அதையே சரியான இணைச்சொல்லாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ட்ரிஸ்ட் என்ற சொல்லை இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தலாம் என்றும், இச்சொல்லுக்கு நட்புறவு, பரீட்சயம், அனுபவம், நெருக்கம், பழக்கம், சந்திப்பு, உறவாடல், உரையாடல் முதலிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, ஜவஹர்லால் நேரு, இச்சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து, இச்சொல் புதுமையும், பொலிவும் பெற்றது என்றும், ஸ்காட்டிஷ் சொல்லான (TRISTE) என்ற சொல்லிலிருந்து இச்சொல் தோற்றமெடுத்தது என்றும், இச்சொல்லின் பொருளை இது அடித்தளமாகக் கொண்டது என்றும், தொடக்கத்தில் வேடுவர்கள் சந்திப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இச்சொல், பின்னர் காலப்போக்கில் காதலர்கள் தாங்கள் சந்திப்பதற்காக முன்னரே ஏற்பாடு செய்துகொண்ட இடம், நேரம் இவற்றைக் குறிப்பதாக அமைந்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் முன்னரே குறித்தபடி நடக்கும் சந்திப்பு இச்சொல்லால் அறியப்படும் என்றும், இத்தகைய சந்திப்புக்கான ஒப்பந்தம், சந்திப்பு, சந்திப்பிடம் ஆகியவைகளையும் இச்சொல்லின் பொருளாகக் கொள்ளலாம் என்றும் எழுதியுள்ளார். மேலும், தேச விடுதலையை ஒட்டி நேரு ஆற்றிய சொற்பொழிவின் காரணமாக இச்சொல் உலகப்புகழ் பெற்றது என்பதால், மேற்கூறிய வழக்கமான பொருள்களைத் தாண்டி, நாட்டு மக்களின் வறுமை, படிப்பின்மை, வேலையின்மை போன்ற சவால்களைச் சந்திப்பது முதலிய பொருள்களில் பயன்படுத்தப்படுவதால், "ட்ரிஸ்ட்' என்ற சொல்லில் உட்பொதிந்துள்ள ஒளிவுமறைவுத் தன்மையை நீக்கி ஓர் உத்வேகமும், தன்மையும் உள்ள சொல்லாக இதை நேரு மாற்றியதைக் கருத்தில் கொண்டு, "சவால்களுடன் சலியாச் சந்திப்பு' என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். இதைத் தவிர, முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பு ஒப்பம், காதலர் முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பிடம் முதலிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாசிரியர் சிவ.எம்கோ, "அமர்த்தப்பட்ட நிகழ்வு' (An Appointed meeting), "மதிவுடம்படுத்தல்' (Meeting between lovers) என்னும் சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், திட்டமிட்ட சந்திப்பு, சந்திக்கும் நேரம், சந்திக்கும் இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார். தெ.முருகசாமி, "திட்டமிட்டுச் செய்தல்' என்றும், ச.மு.விமலானந்தன் பணிவு அல்லது அடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, இச் சொல்லுக்கு காதலர்களின் ரகசியமான சந்திப்பு என்ற பொருளைக் கொடுக்கிறது. அதைப்போல், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி காதலர்கள் சந்திப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம் ஆகிய பொருள்களைத் தருகிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியாரால், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக வெளியிடப்பட்ட ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், "இடந் தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, குறியிடந் தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறியீடு, குறியிடஞ் சந்திக்க உறுதிகொடு' ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கான பொருள் குறித்த இடம், நேரம், சந்திப்பு ஆகிய முப்பொருள்களையும் அடக்கியதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக அது அமையவில்லை. என்.ஆர்.ஸத்யமூர்த்தி குறிப்பிட்டதைப் போல், இச்சொல்லின் வீச்சு, நேருவின் பேச்சுக்குப்பின் வீரியமுள்ளதாக மாறிப் போனாலும், அதன் அடிப்படைப் பொருள் சந்திப்பு என்பதே. காதல், போர், சோதனைகள், சவால்கள், நெருக்கடியான சூழ்நிலைகள் இவையனைத்தையும் நேர்கொள்ளும் செயல்பாடும் சந்திப்பே ஆகும்.

எனவே, ட்ரிஸ்ட் என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் முன்குறி சந்திப்பு.

நன்றி - தமிழ்மணி 14 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 22

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைத் தருகிறது. ஒன்று, தற்பெருமை அல்லது வீண் கர்வத்திலிருந்து விடுபட்டவர் என்பது. இன்னொன்று உடை, பேச்சு அல்லது நடத்தையில் ஒரு ஒழுங்கு அல்லது மேம்பாடு என்பது. ஆனால், குற்றவியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இல் மாடஸ்டி என்ற சொல், ஒரு பெண்ணின் மானத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு, மானபங்கம் என்பது (outraging the modesty) தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சொல் ஆதியில் எப்படித் தோன்றியது என்று வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மனித குலம்,  சமயம்-மதம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றான உடைக் கட்டுப்பாடு தோன்றியபோது உருவானதாகத் தெரிகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சட்ட விதிமுறைகள்  (canon law) நான்கு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது என்றும், அதில் முதல் காலகட்டம் கி.பி.12-ஆம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியிலும், இரண்டாவது காலகட்டம் கி.பி.1100-ஆம் ஆண்டு முதல் 1500-ஆம் ஆண்டு வரையும், மூன்றாவது காலகட்டம் 1917-ஆம் ஆண்டு வரையும், நான்காவது காலகட்டம் 1917க்குப் பின்னும், உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1917-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் விதிமுறைகளில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரும்பொழுது, தலை மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் தளர்வு படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யத மதம், ஜொராஸ்டிரிய மதம், இஸ்லாம், சீக்கிய மதம் போன்ற பல மதங்கள் வழிபாட்டிற்குச் செல்லும்போது, தலையைத் துணியால் மூடிக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பொருள், இறைவன் சந்நிதியில் அடக்கமும், பணிவும் அவசியம் என்பதை வலியுறுத்துவதாகும் என்று ஒரு கருத்து உண்டு. எனவே, பெரும்பாலும் ஒருவரின் நடத்தை மற்றும் தோற்றத்தில் காணப்படும் ஒழுங்கை அடிப்படையாக வைத்து இச்சொல் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான், 1867-இல் தொடங்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணிகளுக்கான நவநாகரிகப் பத்திரிக்கையான "ஹார்பர்ஸ் பஜார்' என்ற பத்திரிக்கை ஒரு காலத்தில் பெண்களின் வயது கூடக்கூட, அவர்கள் அணியும் கவுனின் நீளமும் கூடவேண்டும் என்பதை ஒரு சித்திரமாக வரைந்து காட்டியது. இத்தகைய தகவல்களோடு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மாடஸ்டி' என்ற ஆங்கிலச்சொல் அடக்கம், நிதானம் என்ற நல்ல பண்புகளைக் குறிக்கிறது என்றும், அச்சொல் மாடஸ்ட், மாடரேட் என்பவற்றிலிருந்து வந்ததாகவும் கருதலாம் என்றும் கூறியுள்ளார். தெ.முருகசாமி, "நடைத்தூய்மை' என்ற இணைச் சொல்லைப் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில் தன்னுடைய தகுதிகள், சாதனைகள் பற்றிய பணிவான அல்லது அடக்கமான மதிப்பீடுகளைக் கொள்ளுதல் என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், சேம்பர்ஸ் அகரமுதலியில் தூய்மையுள்ள, கற்புள்ள என்னும் பொருள்கள் உள்ளதாகவும், பெண்கள் குறித்துப் பயன்படுத்தப்படும்போது, "கற்பு' என்ற பொருளிலும், இருபாலருக்கும் பயன்படுத்தப்படும்போது, அடக்கம், எளிமை, பணிவு என்னும் பொருள்களைத் தரலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், "அடக்கம்' என்றும், வே. குழந்தைசாமி "அடக்கமுடைமை' என்றும் கூறியுள்ளனர். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ்ச்சொல் அகராதியில் நாணம், தன்னடக்கம் என்ற பொருள்கள் தரப்பட்டிருப்பதாகவும், வள்ளுவப் பெருந்தகை இருவகைப் பொருள்களில் "நாண்' என்ற சொல்லைக் கையாள்வதால், "நாணம்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், மாடஸ்டி என்ற சொல்லைப் பெரும்பாலும் மகளிரோடு தொடர்புபடுத்தியே கூறமுடியும் என்றும், அதனால் பெண்மை, அடக்கம், தன்னடக்கம், பணிவு, நாணம். தனித்தன்மை என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். புலவர் சத்தியசீலன், "ஒழுக்கத்தின் தன்மையே பணிவு' என்ற கிரேக்க அறிஞரின் கூற்றை அடிப்படையாக வைத்தும், வள்ளுவரின் "பணிவுடையன் இன்சொலன்' என்ற குறளை ஒத்தும், மாடஸ்டி என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் "பணிவு' என்கிறார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணிமன்ற அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் இச்சொல்லுக்கு தன்னடக்கம், நாணம், எளிமை என்ற பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், குறள்வழி நோக்கின் "ஐந்தடக்கல்' என்ற தொடரும் பொருந்தி வரலாம் என்கிறார்.

முனைவர் அ.சிதம்பரநாத செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பித்த, ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு நாணம், தன்னடக்கம், பணிவு நயம் என்ற பொருள்களோடு, பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தை சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில் (ஸ்கார்ஃப் ஆக இருக்கலாம்) என்ற பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, மாடஸ்டி என்ற சொல் ஒருவரது ஆடை, தோற்றம், நடத்தை, இப்படிப் பல பொருள்களில் விரிவது தெரிகிறது. இதனடிப்படையில் நோக்கும்போது, இச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒரு மேன்மையான நடத்தையைக் குறிக்க வேண்டும், அதே சமயம் கண்ணியமான ஆடை அலங்காரத்தையும் குறிக்க வேண்டும். இது இருபாலருக்கும் பொருந்தும் என்பதையே வரலாறு காட்டுகிறது. ஆகவே, இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் "கண்ணியத் தோற்றம்'.

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "கண்ணியத் தோற்றம்’.

நன்றி - தமிழ்மணி 07 04 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 21

நாம் அன்றாடம் ஆங்கிலப் பேச்சு வழக்கில் "ஃபுல் - ஃப்ளெட்ஜ்டு' (full-fledged) என்ற சொல்லை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல் "ஃப்ளெட்ஜ்' என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதே. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில், இச் சொல்லுக்கு "பறப்பதற்குப் போதுமான அளவுக்குச் சிறகுகள் வளர்தல்' என்ற பொருளும், "ஃபுல்-ஃப்ளெட்ஜ்டு' என்ற சொல்லுக்கு "முழுமையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட அல்லது முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட' என்ற பொருள்களும் உள்ளன.

ஆங்கிலத்தில் பல சொற்கள் லத்தீன், கிரேக்க மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து தழுவப்பட்டிருந்தாலும், "ப்ளெட்ஜ்' என்ற சொல், "பறக்கும் திறன் கொண்ட' என்ற பொருளுடைய தொன்மையான ஜெர்மானியச் சொல்லான "ஃப்ளக்கி' (flucki) என்ற சொல்லிலிருந்து தொன்மையான ஆங்கிலத்திற்கு "ஃப்ளைஜ்' என்ற சொல்லாகவும், இடைக்கால ஆங்கிலத்தில் "ஃப்ளெஜி' என்ற சொல்லாகவும் மருவி வந்தது என்றும், அப்படி வந்த காலம் 1566 என்றும், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தெரிவிக்கிறது.

ஆர்னிதாலஜி (ornithology) என்று அழைக்கப்படும் பறவையியலில், பறவைகளுக்குச் சிறகு முளைப்பதைப் பற்றியும், தாய்ப் பறவைகள் தன் குஞ்சுகளை சிறகு முளைக்கும் வரை எப்படிப் பாதுகாக்கின்றன; அதன் பின், அவை எப்படிப் பிரிந்து விடுகின்றன என்பதைப் பற்றியும் பல சுவையான தகவல்கள் உண்டு. மூர் அல்லது முர்ரெலெட் என்று அழைக்கப்படும் ஒருவகை கடற்பறவை, தன் இனத்தோடு கூட்டமாக கடற்கரையில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலோ, பொந்துகளிலோ, வளைகளிலோ முட்டையிட்டு விட்டுப் போய்விடும். பின்னர், அப்பறவைகளின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும், அவை தாமாகவே கடல் அருகில் வந்து குரல் எழுப்பும். உடனே தாய்ப் பறவைகள் கூட்டமாகக் கரைக்கு அருகில் வந்து, அதனதன் குஞ்சுகளை அவற்றின் குரலில் இருந்தே அடையாளம் கண்டு, கடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். மனித இனத்தில் கூட, எந்தத் தாயாலும் குரலை வைத்தே பிறந்த குழந்தையை அடையாளம் காண முடியுமா? என்பது சந்தேகம்தான். இந்தச் சுவையான தகவலோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஷா.கமால் அப்துல் நாசர், கம்பராமாயணத்தில் சடாயுகாண் படலத்தில், "உருக்கிய சுவணம் ஒத்து' என்று தொடங்கும் பாடலில் வரும் "தெரிப்புறு செறி சுடர் சிறை விரித்து' என்ற வரியையும், "பெரிதும் நன்று' என்று தொடங்கும் பாடலில் வரும் "திண்சிறை விரியும் நீழலில் செல்ல' என்ற வரியையும், "மழைபுரை பங்குழல்' என்று தொடங்கும் பாடலில் வரும் "தழை புரையும் சிறைக்கூகை, பாறுமுதல் பெரும் பறவை' என்னும் வரிகளையும் மேற்கோள்காட்டி, "சிறைவிரி' என்ற சொல்லைப் பரிசீலனை செய்யலாம் என்கிறார்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, பறவைக்குச் சிறகுகள் முளைப்பதைக் குறிக்கும் என்றும், இடியமாடிக்காகப் (idiom) பயன்படுத்தும் போதுகூட, சிட்டுக்குச் சிறகு முளைத்துவிட்டது எனக் கூறுகிறோம் என்றும், இப்பயன்பாடு, ஒருவன் தன் காலிலேயே நிற்கும் நிலையை எய்துவதைக் குறிப்பிடவும் கையாளப்படுகிறது என்றும், எனவே இதை "தன் கால்நிலை' என்று குறிப்பிடலாம் என்கிறார். அவ்வாறு குறிப்பிடுகையில், தன் காலிலேயே நிற்கும் நிலை என ஏழாம்வேற்றுமை உருபும், பயனும் உடந்தொக்கத்தொகையாக விரியும் என்பதால் "தளிர்நிலை' என்றும் சொல்லலாம் என்கிறார். மேலும் ப்ளெட்ஜ்லிங்க் என்பது ஓர் இளம் பறவையையோ அல்லது அனுபவமற்ற ஒரு மனிதனையோ குறிக்கும் என்றும் கூறுகிறார்.

எம்.எஸ்.இப்ராகிம், "சிறகடிப்பு' என்ற சொல்லையும், சோலை.கருப்பையா, சிறகு முளைத்து, துளிர்விட்டு, பருவமெய்தி போன்ற சொற்களையும், தெ.முருகசாமி, "பக்கத்துணை' என்ற சொல்லையும் பரிந்துரைக்கின்றனர்.

அ.கு.மான்விழி, வழக்கமான பொருள்களைத் தாண்டி, சார்பற்றத் தன்மை (indipendent nature) என்ற ஒரு பொருள் உள்ளதாகவும், இச்சொல்லின் நீட்சி நிலைகளான வினைச்சொல், பெயர்ச்சொல், பெயர் உரிச்சொல், அடைமொழி ஆகியவற்றிலேயே நிறைய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்றும், அவை ஆரம்ப நிலையில் உள்ளவர், அனுபவமில்லாத ஒருவர் என்ற பொருள்களிலேயும் பயன்படுத்தப்படலாம் என்றும், இச்சொல்லின் பயன்பாட்டை நாம் வழக்கில் கொண்டுவரும் பொழுது, தனிநபர் சார்ந்த செய்திகளுக்கு, துவக்க நிலை (யாளர்), முதல் முயற்சியாளர், அனுபவத்தேடல், புதிய அனுபவம் போன்ற சொற்களையும், வணிக அமைப்பு, வணிக நிறுவனம் அல்லது பொது அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றின் செய்திகளுக்கு தடம்பதித்தல், காலூன்றல், அடியெடுத்துவைத்தல் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "அணியமாதல்' என்ற சொல்லும் பொருந்தலாம் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் மனிதர்களுக்கான பயன்பாட்டை மட்டுமே வைத்து உருவாக்கப்படும்போது, அதன் வீச்சு குறைவாகவும், பறக்கும் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும்போது, பொதுத்தன்மை உடையதாகவும் மாறுவதை உணரலாம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இச்சொல்லுக்குப் பொருத்தமான இணைச்சொல் "சிறகு வளர்தல்' என்றே எண்ணுகிறேன். சிறகு என்ற சொல் இலக்கியத் தமிழில் சிறை என்றும் காணப்படுகிறது. எனவே, சிறைவிரி அல்லது சிறகுவிரி என்ற சொற்கள் சுருக்கமாகவும், அழகாகவும் இருப்பினும், அவை வளர்தல் அல்லது முளைத்தல் என்னும் செயல்பாட்டைக் குறிக்காது.

நன்றி - தமிழ்மணி 31 03 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 20

நான் நினைத்ததைப் போலவே, ஒரு சிலர் "சப்லிமினல்' என்ற சொல்லுக்கும், "சப்ளைம்' என்ற சொல்லுக்கும் தொடர்பிருப்பதாக எண்ணிவிட்டார்கள். ஆனால், சில நேரங்களில் மொழியியலில், அதிலும் குறிப்பாக ஆங்கிலச் சொற்பிறப்பியலில் (எடிமாலஜி) நம்முடைய தர்க்கம் (லாஜிக்) வேலை செய்வதில்லை. "சப்ளைம்' என்ற சொல் மேன்மையான, உயர்வான, சிறப்பான, பெருமையான என்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், "சப்லிமினல்' என்ற சொல் நம் புலனுணர்வு அல்லது உணர்ச்சி நிலையின் நுழைவாயிலில் தூண்டப்படும் அல்லது நிகழும் ஒரு மனப்போக்கு அல்லது உளவியக்கம் என்று ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி பொருளுரைக்கிறது. அப்படித் தூண்டப்படும் மனப்போக்கு நம்மால் உணர முடியாததாகவும், அதே சமயம், நம்முடைய மனப்பாங்கை மாற்றக்கூடியதாகவும் இருக்குமென்றும், அந்த அகரமுதலி குறிக்கிறது.

இதே சொல்லுக்கு மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி, உணர்ச்சியை (சென்சேஷன்) அல்லது புலப்பாட்டைத் (பெர்சப்ஷன்) தூண்டுவதற்கியலாத என்ற பொருளையும் கொடுக்கிறது. இச்சொல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நுழைவாயில் என்ற சொல்லைக் குறிக்கும் "சப்-லிமன்' என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று பெரும்பாலும் உளவியலில் பயன்படுத்தப்படும் இச்சொல், பல நுகர் பொருள்களுக்கு நம்மை அடிமையாக்குவதற்கு விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் சில யுக்திகளைக் குறிக்கும் சொல்லாகப் பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

1959-ஆம் ஆண்டு சந்தை - அங்காடிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஜேம்ஸ் வைகரி என்பவர், ஒரு திரைப்படத்தின் இடையில் ""பசியா? பாப்கார்ன் உண்ணுங்கள்; தாகமா? கொகொகோலா பருகுங்கள்'' என்ற விளம்பரத்தை நுழைத்தார். அந்த விளம்பரம் ஒளிபரப்பாகிய கால அளவு பொதுவாக ஒரு மனிதனின் கவனத்தை ஈர்ப்பதற்குத் தேவையான கால அளவைவிடக் குறைவானதாகவும், ஆனால் உள்மனதின் அல்லது ஆழ்மனதின் (சப்கான்ஷியஸ்) கவனத்தை ஈர்ப்பதற்குப் போதுமானதாகவும் இருந்தது. ஆனால், இந்த விளம்பரம் பாப்கார்ன் விற்பனையை 57.8 சதவிகிதமும், கொகொகோலா விற்பனையை 18 சதவிகிதமும் அதிகரித்தது. 1999-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு மனிதனின் ஆழ்மனதில், அவனுக்கு வெளிப்படையாகத் தெரியாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில கருத்துகளை விளம்பரங்கள் மூலம் செலுத்திவிட முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். அதன் விளைவு, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தற்பொழுது புலன் உணர்வுகளைத் தூண்டும் கிளர்ச்சியூட்டும் செய்திகளையும், படிவங்களையும் தங்களுடைய விளம்பரங்களில், யாரும் வெளிப்படையாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளே புகுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், இவை இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை, அவர்கள் அறியாமலேயே அவர்களது அடிமனதில் ஏற்படுத்தி விடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பல போட்டி நிறுவனங்களுக்கிடையே நிகழும் விளம்பரப் போரிலும், "சப்லிமினல் மெசேஜ்' என்ற உத்தி தற்போது கையாளப்படுகிறது. இந்த முன்னுரையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

டி.வி.கிருஷ்ணசாமி, "சப்ளைம் என்ற சொல்லின் பொருளை வைத்து நோக்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிலும் அடக்கமானதாகவும், மேலானதாகவும் இருப்பதாகும். எனவே, இதற்கு இணையான தமிழ்ச்சொல் "மேல் அடங்கல்' என்று எழுதியுள்ளார்.

புலவர் உ.தேவதாசு, "ஆங்கில அகராதிகள் தரும் பொருள்களின் அடிப்படையில், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில தமிழகராதி உணர்வு நிலையின் அடி எல்லை, உணர்வுக்கருநிலை என்னும் பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், "ஆழ் மனநிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கலாம்' என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சங்க இலக்கியங்களில் காணப்படும் "உள்ளுறை உவமம்' என்ற சொல்லும் பொருத்தமாகலாம் என்பதனால் "உள்ளுறை உணர்நிலை' என்ற சொல்லையும் பரிந்துரைத்துள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "நம் உள்ளுணர்வில் ஒளிந்திருக்கிற அல்லது உணர முடிகிற சப்லிமினல் கிரேட்னஸ், சப்லிமினல் ட்ரூத் என்ற தொடர்புடைய பயன்பாடுகளை எண்ணிப் பார்க்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு "உணர்வுக்கப்பாலான' என்ற சொல் பொருந்தலாம் என்கிறார். 

முனைவர் வே.குழந்தைசாமி, "ஒருவரது எண்ண ஓட்டத்தில் அவரை அறியாமல் ஏற்படும் அகமாற்றத்தை இச்சொல் குறிப்பதாலும், வெளியிடா எண்ணங்களைத் திருவள்ளுவர் "கரந்து - கரப்பு' என்ற சொற்களால் குறிப்பிடுவதாலும், இதற்கு "கரந்துபடு மாற்றம்' அல்லது "புலனுணரா மாற்றம்' என்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.

 "உளவியலில் இச்சொல் நாம் விழிப்புணர்வோடு அறியமுடியாத வகையில் ஏற்படும் ஒரு மனநிகழ்வைக் குறிக்கும் என்பதால், இச்சொல்லுக்கு மேலோட்டமான முயற்சி, செயற்கையான, ஊக்கமளிக்காத, உணர்வுகளைத் தூண்டாத, உணர்ச்சியை எழுப்பாத, திடமான ஞானமிலாத என்னும் சொற்களை ஜ.ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "இச்சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி தூண்டுதல் புலப்பாட்டு எல்லைக்குக் கீழ்ப்பட்ட, புலப்படாத தூண்டுதல் நெய்மையுடைய என்ற இரண்டு பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ஆழ்மன உணர்நிலை, அறிதுயில்நிலை என்னும் தொடர்கள் கிட்டத்தட்ட பொருந்துவது போல் தோன்றினாலும், அவை ஏற்புடைத்தாய் அமையாது' என்றும், "விளிம்பிரு உள்மறை உணர்நிலை' என்றோ, "விளிம்புறை உணர்மறைநிலை' என்றோ பொருள் கொள்ளலாம் என்றும் கூறியுள்றார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், "சப்லிமினல் என்ற சொல்லுக்கு ஒருவர் அறியாமலேயே உள்ளம் நெய்மை அடையும் நிலை என்று அகராதியில் காணப்படுவதாலும், இச்சொல் கனவுக்கும், நனவுள்ளத்திற்கும் இடையில் இருக்கும் காரணத்தால், "துணை நனவுள்ளம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியுள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்குங்கால், விழிப்புணர்வின் அடிமட்டத்தில் அல்லது நுழைவாயிலில் நாம் உணராமலேயே நம்மைத் தாக்கும் மனப்போக்கை இச்சொல் குறிப்பதால் "உணர்வறியாப் போக்கு' என்பது பொருத்தமாகலாம். அதைவிட, புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைக்கும் "உள்மறை உணர்நிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாகும்.

 "சப்லிமினல்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் தரும் இணைச் சொல் "உள்மறை உணர்நிலை'.

நன்றி - தமிழ்மணி 24 03 2013

தேடல் - வாஸந்தி

கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் போர்த்தியிருந்த மாதிரி. சற்று எழுந்து கையை நீட்டினால் உள்ளங்கைக்குள் வசப்பட்டு விடும் போல. உட்கார்ந்த இடத்தை வெளிப்படுத்தாமல் பட்சிகள் குரல் எழுப்பின கூ…கூ… கீ…கீ… என்று சளசளத்தன. அவளுடன் அந்தரங்கம் பேச வந்தன. அவளுக்குத் தெரியும் மொட்டை மாடிப்படிகளில் ஏறிச் சென்று நின்றால் மரங்கள் தாழ்ந்து விடும். பட்சிகளை எத்தனை தேடினாலும் கண்ணில் படாமல் மாயமாய் இலைகளுக்குள் பதுங்கிக் கொண்டு கவி பேசும்.

குழந்தை சிணுங்கிற்று. ‘உஷ், நீ உன் குரலை எழுப்பாதே’ என்றாள் அவள் செல்லமாக. மார்போடு அணைத்து முழங்கால்களைச் சுற்றி கைகோர்த்து அமர்ந்தாள். பின்னால் அவனது காலடி சத்தம் கேட்கிறதோ என்ற சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தாள். கொல்லையிலிருந்து வாசல் வரை கப்சிப்பென்று இருந்தது. குழந்தை அழுதால் அவனுக்குப் பிடிக்காது. அது இருப்பதன் பிரக்ஞை கூட அவனுக்கு கிடையாது என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் குரல் எழும்போது திடுக்கிடுவான். அவளுக்கு மட்டுமே அது சொந்தம் போல் இருந்தது, அவனுடைய உணர்வுகளுடனோ உடலுடனோ சம்பந்தமில்லாமல். அவளது எண்ணங்களில் ஜனித்து உணர்வுகளோடு கலந்து. அதற்குப் பெயர் கூடக் கிடையாது. சமயத்திற்குத் தகுந்தாற்போல் அவளது கற்பனையில் பெயர்கள் தோன்றும். ஒரு நாள் நிலா, இன்னொரு நாள் ரோஜா, அல்லி, மல்லி, ஒரு நாள் காளி என்று கூடத் தோன்றிற்று. ஏன் கூடாது? அவளை அவன் எத்தனை முறை பத்ரகாளி என்று கூப்பிடுகிறான்! பத்ரகாளி என்பதற்கு ஆண்பால் என்ன என்று அவள் யோசித்தாள். குழந்தை மீண்டும் சிணுங்கிற்று. ‘உஷ் உஷ்’ என்று சமாதானப்படுத்தினாள். ‘பாட்டுப் பாடவா?’ என்றாள் குனிந்து மென்மையாக. கண்களை மூடி மனசுக்குள் முனகிக் கொண்டாள். மனசு முழுவதும் பொலபொலவென்று மல்லிகை மொட்டுகள் அரும்பி மலர்ந்தன. குப்பென்று எழுந்த வாசனை நெஞ்சை அழுத்திற்று. அதை உள்ளுக்கிழுத்து கண்களைத் திறந்த போது மரக்கிளைகளுக்கப்பால் புதிது புதிதாக வர்ணஜாலங்கள் தெரிந்தன. பதுங்கியிருந்த பட்சிகள் எட்டிப் பார்த்தன. பஞ்சபூதங்களும் இசைந்து சரிகமபதிநிஸ என்று சுருதி கூட்டினாற்போல் மௌனக் குகையில் புதையுண்டிருந்த வார்த்தைகள் வெடித்துச் சிதறி வரிவரியாக நெளிந்து மனத்திரையில் விழுந்தன. பனி மழையில் நனைந்த குளிர்ச்சியில் உடல் தண்ணென்றிருந்தது.

குழந்தையின் சிணுங்கல் அடங்கிப் போயிற்று. பேச்சு மூச்சில்லாமல் இருந்தது. அவளுக்குத்தான் களைத்து விட்டது. சற்று முன் வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன என்று சுத்தமாக நினைவில்லாமல் போயிற்று. வெற்றிடமாகிப் போன மனத்துடன் அவள் அமர்ந்திருந்தாள். இப்படித்தான் ஆகிறது எப்பவும். அவளுக்கு அம்மாவைப் பெற்ற பாட்டியின் நினைவு வந்தது. எண்பது வயதுப் பாட்டியைப் பார்த்துக் கொள்ளும் பொறுமை யாருக்கும் இல்லை. பாட்டியும் சும்மா இருக்கமாட்டாள். இரவு நேரத்தில் வீட்டுக்குள்ளும் கொல்லையிலும் அலையோ அலை என்று அலைவாள். என்ன தேடுவாள் என்று தெரியாது. கண் எப்படித் தெரிகிறது என்று அதிசயமாக இருக்கும். சில சமயம் வெல்லக்கட்டி, குழந்தைகள் பதுக்கியிருக்கும் சாக்லேட் அல்லது மோர், பால் எது இருந்தாலும் அவளுக்கு வாயில் போட வேண்டும். போடும்போது பாத்திரம் உருளும். சட்டி உடையும். அல்லது அவளே விழுந்து அடிபட்டுக் கொள்வாள். மாமியும் மாமாவும் கத்தோ கத்து என்று கத்துவார்கள். திருட்டுக் கிழம் என்று சபிப்பார்கள். ‘கிருஷ்ணா ராமான்னு கிடக்க வேண்டிய வயசிலே இது என்ன தீனிச் சபலம்’ என்று கத்தியபடி மாமா ரத்தத்தைத் துடைத்து மருந்து போடுவார். பாட்டி எதுவுமே காதில் விழாத மாதிரி உட்கார்ந்திருப்பாள். ‘ஏந்திருடரே… ஏந்திருடரே’ என்ற கத்தல் யாருக்கோ, தனக்கில்லை என்பது போல கண்ணை மூடிக் கொள்வாள். அவளுக்குத் தான் செய்தது ஞாபகம் கூட இல்லை என்று தோன்றும்.

எல்லாமே பழக்கத்தால் வருவது என்று தோன்றிற்று. மௌனமும் மறதியும் கூட. பாடப் பழகுவது போல பேசாமல் இருப்பதையும் பழகிக் கொள்ளலாம். ஆசைகளை அழித்துக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பழக்கம் ஏற்பட வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும். பல சமயங்கள் குழந்தை அழும்போது அவன் போடும் கூச்சலுக்காக, அதைத் தூக்கிக் கொண்டு அவள் ஆற்றங்கரையோரமோ அல்லது மாந்தோப்புக்கோ செல்வாள். மறந்து போய் அங்கே எங்கோ புதரில் அதை விட்டுவிட்டு வந்து விட்டதைப் போல கனவு வரும். எது நிஜம் எது கனவு என்று புரியாமல் நெஞ்சம் தடுமாறும். எத்தனை நாட்களுக்கு, அவனுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று குழந்தையைச் சுமந்து கொண்டு இப்படித் திரியப் போகிறோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. அவனது கட்டுப்பாடுகளையும் மீறி அது எப்படி ஜனித்தது என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அது அவளுக்கு வேறு ஒரு பிரபஞ்சத்தைக் காட்டும் அற்புதம். அதனாலேயே அதை அவனிடமிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ற வெறி நாளுக்கு நாள் அதிகரித்தது. கிட்டத்தட்ட பாட்டியின் வெறியைப் போல, அவளது நேரத்தை, சிந்தனையை ஆட்கொண்டது. இதை எப்படி நிறைவேற்றுவது என்ற யோசனையில் நேரம் போவது தெரியாமல் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.

”என்ன எப்ப பார்த்தாலும் ஏதோ பெரிய யோசனையிலே உட்கார்ந்திருக்கே?” என்று அவன் நையாண்டி செய்வான். அல்லது தான் சொல்வதை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்கிற எரிச்சலில் கேட்டிருக்கிறான்.

”ஒண்ணுமில்லே” என்பாள் அவள். அப்படி அவன் கேட்பதும், அப்படி அவள் பதில் சொல்வதும் பழக்கமாகிப் போயிருந்தது. அந்த ‘ஒண்ணுமில்லே’யில் பலவித பயங்கள் புதைந்திருந்தது அவனுக்குத் தெரியாது. அவளை ஆட்கொண்டு வரும் வெறியை அடக்கவே முடியாமல் போனால் என்ன செய்வது என்ற அவளது பீதியை அவனால் உணர முடியாது என்று தோன்றிற்று. மீராவுக்கும் ஆண்டாளுக்கும் கூட இப்படிப்பட்ட வெறி இருந்திருக்கும் என்று தோன்றிற்று. அவர்களைப் போல தன்னைக் கற்பித்துக் கொள்வது சுகமாக இருந்தது. துளசி மாலையை அணிந்து கண்ணாடி முன் அழகு பார்த்து, ‘உன்தன்னோடுற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்கொள்வோம்’ என்று விலகிப் போவது எத்தனை சௌகர்யம்! அழுகைச் சத்தம் கேட்கக்கூடாது, பாட்டுச் சத்தம் கேட்கக் கூடாது என்று கட்டளையிடாத ‘உத்தமன் பேர்பாடி’ தப்பித்துக் கொள்வது எத்தனை சுலபமான வடிகால்!

புருஷனும் வேணும், புள்ளையும் வேணும் என்றால் இப்படித்தான் பிசாசைப்போல் அலைய வேண்டும். புதருக்குள் மறைக்க வேண்டும். எங்கே மறைத்தோம் என்பது மறந்து போனால் கதை முடிந்து போகும். பிறகு ஆசையில்லை. வர்ணஜாலங்கள் இல்லை. மந்திரச் சொற்கள் இல்லை. தரிசனங்கள் இல்லை.

”ஜனனீ!”

அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். திரும்பிப் பார்க்க யோசனையாக இருந்தது. அவனை எதிர்கொள்ளும்போது அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில்களைத் தயார் செய்ய ஆயத்தமானாள். துளசி மாடத்தில் அம்மா நீர் வார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. தயக்கமேற்பட்டது. அம்மா, நீதான் அவசரப்பட்டே, செத்துடுவேன்னு பயமுறுத்தினே. நா செத்தப்புறம் உன்னை யாரு பாத்துப்பான்னு தினமும் துளைச்சே.

“ஜனனீ!”

வரேன், வரேன். வராம எங்க போக முடியும். உங்களைத் தவிர எனக்கு வேற யார் இருக்கா? எனக்கு நீங்க தேவை. உங்க துணை தேவை. அம்மா உரமேத்தி வெச்ச பாடம் இது. பொட்டை நெட்டுரு போட்ட பாடம். எனக்கு மீறத் தெரியாது. வரேன்.

”ஜனனீ!”

அவள் மெள்ள, மிக மெள்ளத் திரும்பினாள். ”உன்னை எங்கெல்லாம் தேடறது? உள்ளே வா. சாப்பாட்டு நேரம்” என்று கடுகடுத்தாள் வார்டு ஆயா.

”இல்லே உள்ளே வரல்லே நா” என்றாள் அவள் பீதியுடன்.

”நல்ல வார்த்தையிலே சொன்னா நீ கேட்க மாட்டே” என்று ஆயா தோளைப் பிடித்து இழுத்தபோது அவள் ஆட்டுக் குட்டியைப் போல் பின் தொடர்ந்தாள். வராந்தாவிலும் கூடத்திலும் நின்றிருந்த பெண்களின் முகங்களைப் பார்க்க பயந்து தலைகுனிந்தபடி நடந்தாள்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும்.

”என்னது?” என்றாள ஆயா.

”ஒண்ணுமில்லே.”

யாரோ கடகடவென்று சிரித்தார்கள். பழைய கோவலன் கண்ணகி சினிமாவில் வரும் கண்ணாம்பா போல. டி.வி.யில் காட்டியபோது பார்த்திருக்கிறாள். ”எரியட்டும்! எரியட்டும்..!” பின்னால் அட்டை மாளிகைகள் எரிந்த மதுரை சாம்பலாகும் – தலைவிரி கோலமாக கண்ணாம்பா ஹஹ் ஹஹ்ஹா… சிரிப்பு தொத்திக் கொண்டது போலிருந்தது. சங்கிலித் தொடர் போல் வெளிப்பட்ட சிரிப்பு கூரையில் எதிரொலித்துக் கூடம் அதிர்ந்தது. அவளுக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. ஓட்டமும் நடையுமாக ஆயாவைப் பின் தொடர்ந்தாள்.

”உம் உம், வாங்க வாங்க.”

மேஜை மேல் வைத்திருந்த அண்டாக்களிலிருந்து பீங்கான் தட்டுக்களில் களிபோல் சோறும் தோல்போல் சப்பாத்தியும் பருப்புக் குழம்பும், பொரியலும் விழுந்தன. அவள் தட்டை எடுத்துக் கொண்டு மாமரத்தைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டுக்குச் சென்று அமர்ந்தாள். சாப்பிட ஆரம்பிக்கும் சமயத்தில் சாப்பாட்டறையில் தட்டுக்கள் கீழே விழும் சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டதில் கையிலிருந்த தட்டிலிருந்து பொரியலும் சோறும் அவளது புடவையில் தெறித்தன. அவள் வார்டைச் சேர்ந்த அம்புஜமும் சாந்தாவும் ஒருவர் முடியை மற்றவர் பிடித்து இழுத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”ஏய் பேய்களா, நிறுத்துங்க உங்க சண்டையை” என்று ஆயா அலற, இரண்டு மூன்று நர்சுகள் வந்து பிடித்து விலக்கினார்கள். சாந்தா அம்புஜத்தைக் குரோதத்துடன் பார்த்தாள் – கொலைவெறி தெரிந்தது பார்வையில்.

”நம்ம தலையெழுத்து. இதுங்களோடு மாரடிக்க வேண்டியிருக்கு” என்று ஆயா தலையிலடித்துக் கொண்டாள். ”நானும் ஒருநாள் இங்கே பேஷண்டா வந்தாலும் வந்துருவேன்”.

ஜனனிக்கு உடம்பு லேசாக நடுங்கிற்று. தட்டைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின. தட்டைப் படிக்கட்டில் வைத்து இரண்டு கைவிரல்களையும் கோத்துக் கொண்டாள். மார்பு படபடத்தது. ரத்தம் சூடேறி மண்டைக்குப் போய்விட்டது போல் இருந்தது. புழுங்கி மூச்சிறைத்தது. மாமரத்து இலைகள் அசைக் காணோம். எல்லாம் ஸ்தம்பித்து உறைந்திருந்தன. பிரபஞ்சமே உறைந்திருந்தது. யாரோ “ஃப்ரீஸ்!” என்றாற்போல. அவள் முகத்தை முழங்கால்களில் கவிழ்த்துக் கொண்டாள். கூடத்து சத்தங்கள் ஓய்ந்து விட்டன. அவரவர்கள் மூலைக்கு மூலை உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

”என்ன ஜனனிம்மா, சாப்பிடலியா?” அவள் சுவாரஸ்யமில்லாமல் நிமிர்ந்தாள். கக்கூஸ் கூட்டும் அஞ்சலை நின்றிருந்தாள் வெற்றிலை மென்றபடி. இவளுக்கு வெற்றிலை வேண்டும் எப்பவும். தற்காப்புக் கவசம் மாதிரி. அவன் விடாமல் சிகரெட் புகைக்கும்போது அவளுக்கு அப்படித்தான் தோன்றும். அது ஒரு கவசம். உணர்ச்சிகளை மறைக்க. இயலாமையை மறைக்க. அதிகாரத்தின் அடையாளம் கூட. ‘நீ புகைச்சுடுவியா என் எதிர தைரியமா?’ என்பது போல, பதிலுக்கு வெற்றிலையையாவது அஞ்சலைபோல மென்றிருக்கலாம் என்று இப்போது தோன்றிற்று.

”என்ன சாப்பிடலே?”

அவள் பொம்மை போல தட்டை எடுத்துச் சோற்றை அளைந்தாள்.

”அவருக்கு சாதம் இப்படி இருந்தா பிடிக்காது.”

”பின்னே எப்படியிருக்கணுமாம்?”

”மல்லிகைப் பூவா ஒண்ணு மேல ஒண்ணு ஒட்டாம.”

”இல்லேன்னா என்ன செய்வாரு?”

”இப்படி சாந்தா தட்டை விட்டெறியலே, அப்படி விட்டெறிவார்.”

அஞ்சலை சிரித்தாள்.

”பின்னே அவரில்லே இங்கே வந்து இருக்கணும்!”

”ஐயையோ, வேண்டாம் பாவம்!”

அஞ்சலை படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள், ”ஏனாம், வந்து இருந்து பார்க்கட்டுமே இங்கே எப்படியிருக்குன்னு.”

”அவரும் வந்துட்டா, நா வீட்டுக்கு எப்படிப் போறது?”

”சில சமயம் நல்லாத்தான் பேசறே” என்று அஞ்சலை இழுத்துப் பேசினாள். ”சொல்லு, புருஷன் மேல ரொம்பப் பிரியமா?”

ஜனனி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘உனக்கு மட்டும் சொல்றேன்’ என்கிற முகபாவத்துடன் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

”என்..?” என்றாள் அஞ்சலை லேசாக.

ஜனனியின் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.

”என் குழந்தையைக் கொன்னுட்டார்.”

”என்னது?” என்றாள் அஞ்சலை திடுக்கிட்டு. ”எப்படி, ஏன்?”

”எப்படித் தெரியுமா? இப்படி” என்று தட்டில் இருந்த சப்பாத்தியை இரண்டாகப் பிய்த்து எதிரும் புதிருமாகப் போட்டாள். ”மகாபாரதத்திலே ஜராசந்தனை பீமன் பிச்சுப் போடல்லே அது மாதிரி.”

அஞ்சலை ஒரு வெற்றிலைச் சுருளை வாயில் திணித்துக் கொண்டாள்.

”நா என்னைத்தைக் கண்டேன் அதெயெல்லாம் – எதுக்குக் கொல்லணும்?”

”பிடிக்கலே. அது அழுதா பிடிக்கலே. சிணுங்கினா பிடிக்கலே. நா வெச்ச பாசம் பிடிக்கவே. அதே கவனமா இருக்கேனாம். அவரைக் கவனிக்கக் கூட நேரமில்லாம.”

அஞ்சலை பேசாமல் அவளையே பார்த்தபடி சற்று நேரம் இருந்தாள்.

”சரி, நீ சாப்பிடு தாயீ, இன்னொரு நாளைக்குப் பேசுவம்.”

”நா சொன்னது நிஜம். பொய்யில்லே” என்றாள் அவள். ”அவர் அப்படிப் பண்ணுவார்னு எனக்குத் தெரியும். எத்தனையோ நாள் குழந்தையைப் புதர்லே கொண்டு போய் மறைச்சு வைப்பேன். அப்புறம் எங்கே வெச்சோம்னு மறந்து போய் புதர் புதராத் தேடுவேன்.”

”நீ சாப்பிடு தாயீ.”

”நா சொன்னது நிஜம்.”

”சரி சரி. நா நம்பறேன். நீ சாப்பிடு”.

அஞ்சலை செல்வதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவள் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடாவிட்டால் ஆயா திட்டுவாள். பிறகு மத்தியானம் தூங்காவிட்டால் திட்டுவாள். இந்தத் திட்டுக்கு உடம்பும் மனசும் பழகிவிட்டது. மௌனத்துக்குப் பழகினது போல. திட்டு கேட்க்காவிட்டால்தான் என்னவோ போல் இருந்தது. ‘எழுந்திரிங்க எழுந்திரிங்க’ என்று சத்தம் கேட்டதும்தான் உடல் எழுந்தது. ‘பல் விளக்குங்க’ என்றதும் பல் விளக்கிற்று. ‘குளியுங்க’, குளித்தது. ‘சாப்பிடுங்க’, சாப்பிட்டது. ‘தூங்குங்க’, தூக்கம்தான் கட்டளைக்கு அடிபணிய மறுத்தது. மூடிய கண்களுக்குள் பிசாசுகளை எழுப்பி விட்டது. அவை போட்ட ஆட்டத்திலும் செய்த துவம்சங்களிலும் ஏற்பட்ட வேதனையில் அவள் அலறுவாள். அழுவாள். ஏன் அழறே?

என் குழந்தை. என் குழந்தை.

என்ன உன் குழந்தைக்கு?

அதைக் காணோம்.

இப்ப தூங்கு, நாளைக்குத் தேடுவோம். ஊசி குத்துவார்கள்.

நாளைக்கும் அதற்கடுத்த நாளும் குழந்தையைப் பற்றியே மறந்து போகும். அதை நினைத்து இப்போது துக்கமேற்பட்டது; ஆதார உணர்வுகளையே இழந்து வருவது போலத் தோன்றிற்று. சருமம் கூட முன்பு போல மிருதுவாக இல்லை. புறங்கையும் புறங்காலும் கட்டட வேலை செய்பவள் போல் சொரசொரத்து பாளம் பாளமாகத் தெரிந்தது. கட்டடத்துக்குள் நடக்கும் போது கண்ணாடிக் கதவில் தெரியும் அவளது உருவம் பீதியை அளிக்கிறது. அன்று டாக்டரின் அறைக்குச் சென்ற போது கழிவறையில் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிரதி பிம்பத்தைப் பார்த்து அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நானா? அது நிச்சயம் வேறு யாரோ. அல்லது அவளுள் ஏதோ ரசாயன மாற்றம் ஆகியிருக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் ‘டாக்டர் ஜெக்கில் அண்டு மிஸ்டர் ஹைட்’ கதை படித்திருக்கிறாள். நல்லவனும் கெட்டவனும், அழகனும் குரூபியும் ஒரே ஆளிலிருந்து வெளிப்படும் பயங்கரம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவளது நிஜ வாழ்வில் அது உண்மையாகும் என்று அவளுக்குத் தெரியாது. கல்யாணமான பிறகு அவன் ஒரு சமயம் குழைவதும் ஒரு சமயம் அனலைக் கக்குவதும் அந்தக் கதையை ஞாபகப்படுத்தும். வெளி உலகத்திடம் அத்தனை இனிமையாக இருப்பவன் அவளிடம் மட்டும் ஏன் அப்படி இருக்கிறான் என்று குழப்பும். அவனுடைய குற்றச்சாட்டுகள் கூடக் குழப்பும். நீ அதிகப்பிரசங்கி. மேதாவிங்கிற நினைப்பு உனக்கு. உன் சமையல் நன்னால்லே. புருஷன்ங்கற மதிப்பு இல்லே. உன் கடமை என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ. அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம் – காரணம் புரியாமல் குற்ற உணர்வு ஏற்படும்.

சரி. சரி. சரி.

புத்தகம் இல்லை. ரேடியோ இல்லை. டி.வி. இல்லை. கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தியாச்சு. சினேகிதாள் இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டுப் புழுங்கிச் செத்த அவதியில், மூடிய அறைக்குள் அது ஜனித்தது. ‘பரஸுரே’ என்று தான்ஸேன் பாடியபோது மழை பொழிந்தது போல, அதன் குரல் கேட்ட மாத்திரத்தில், அவளது குண்டலினி உசுப்பப்பட்டு உள்ளமெல்லாம் பிரகாசித்தது. ஒரு ஜ்வாலையில் வீற்றது போலாகியது.

ஒளிக்க முடியவில்லை. குரல் எழுப்பிற்று. நான்கு பேர் கவனத்தைக் கவரும்படி குரல் எழுப்பிற்று. அவனுக்குக் கோபம் வந்தது. அதையும் மீறி அது குரல் எழுப்பியதுதான் ஆச்சரியம். ஒருநாள் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் போயிற்று! குரலைக் காண்பிப்பியா? உனக்கு இத்தனை திமிரா? அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தாள். ஜராசந்தனுடன் போர் செய்யும் பீமன் போல் தெரிந்தான். அவன் அடிக்க அடிக்க அது செத்துச் செத்து திரும்பத் துளிர்த்தது. வானத்தை முட்டும் பீமனாய் அவன் நின்றான். சரக், சரக் – கிழியட்டும். ஜராசந்தன் மாதிரி – இரண்டாகத் தூக்கி வீசி எறிந்தான்.

அவள் விழி பிதுங்கிற்று. நாபியிலிருந்து ஒரு கேவல் எழுந்து தொண்டையை அடைத்தது. தேகம் முழுவதும் பற்றி எரிந்து பத்ரகாளியாக வீறு கொண்டு எழுந்தது. எல்லை மீறி ஆத்திரமும் கோபமும் எழ ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து விடுவது போல முறுக்கிக் கொண்டன.

“என்ன பண்றேள்? எங் குழந்தை. எங் குழந்தை. சாகடிக்கிறேளா? எப்பேர்ப்பட்ட ராட்சசன் நீ. சண்டாளன். நீ மனுஷனா? மனுஷனா?

கையில் கிடைத்ததை வைத்து அவன் முதுகை முகத்தை மண்டையைப் பதம் பார்த்தது நினைவுக்கு வந்தது.

‘பத்ரகாளீ, பத்ரகாளி! ராட்சஸி.” திமுதிமுவென்று அக்கம்பக்கத்து ஜனங்கள் நுழைகிறார்கள். அந்தக் கொலைகாரனை எதுவும் சொல்லாமல் நிற்கிறார்கள்.

”பாருங்கோ பாருங்கோ.” அவன் முதுகை, கன்னத்தை, மண்டையைக் காட்டுகிறான். அவளது கைகளை யாரோ கட்டுகிறார்கள். அவன் முதுகை அணைத்துச் சமாதானப்படுத்துகிறார்கள். குழந்தை என்ன ஆயிற்று என்று யாருக்கும் கவலையில்லை.

அவள் உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து சரம் சரமாய் நீர் வழிந்தது. முடியலே முடியலே. என்னாலே இங்கே இருக்க முடியலே. அழைச்சுண்டு போயிருங்கோ. நா பண்ணது தப்பு. இனிமே ஒழுங்கா இருக்கேன். அதற்கு மேல் தாங்க முடியாது போல அவள் விசித்து விசித்து அழுதாள். அவன் முகமே மறந்துவிடும் போல் இருந்தது. அஞ்சுகத்தையும் சாந்தாவையும் கோகிலாவையும் மற்றவர்களையும் பார்க்க வீட்டிலிருந்து வருகிறார்கள். அவளுக்குத்தான் யாருமில்லை. அவன் வந்து எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.

”நா வீட்டுக்குப் போறேன் டாக்டர். எனக்கு ஒண்ணுமில்லே. நன்னா இருக்கேன். இப்ப என் வீட்டுக்காரரை வந்து கூட்டிப்போகச் சொல்லுங்கோ.”

”இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா.”

இன்னும் எத்தனை நாள்? எத்தனை நாள்? மூச்சு முட்டிற்று. நாள் முழுவதும் ஓலங்களும் சிரிப்புகளும் அழுகைகளும் சண்டைகளும். ”உனக்கு இன்னும் மனநிலை தெளியணும். மறுபடி வயலென்ட் ஆயிட்டீன்னா?”

மாட்டேன். மாட்டேன், என்னை நம்புங்கோ. அப்படியெல்லாம் நடந்துண்டதுக்கு வெட்கப்படறேன்.

”அவங்க பயப்படறாங்க. கூட்டிட்டுப் போக மாட்டேங்கறாங்க.”

‘ஓ’ என்று அலற வேண்டும் போல் இருந்தது. முன்பெல்லாம் குழந்தையை அவனிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது என்று தீவிரமாக யோசித்தது போல இப்போது இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். எப்படித் தப்பிப்பது? பெரிய பெரிய பூட்டிய இரும்புக் கேட்டுகள். காவல்காரர்கள். இரவில் தூக்கம் வராமல் திட்டங்கள் தீட்டினாள். காலையில் தலையை வலித்தது. சாப்பிடப் பிடிக்காமல் வாந்தி வந்தது.

கண்டவர்களிடமெல்லாம் புலம்பத் தோன்றிற்று.

”அஞ்சலை, நா வீட்டுக்குப் போகணும். இங்க இருக்க முடியலே என்னாலே.”

”மறுபடியும் அந்தப் புருஷன்கிட்டேயா?”

”பின்னே யார்கிட்ட? எத்தனை புருஷன் இருக்கான் எனக்கு.”

”புடிக்காத புருஷன் கிட்ட போயி என்ன செய்யப் போற தாயீ. அவன் மறுபடி இங்க அனுப்புவான்.”

”மாட்டார். நா ஒழுங்கா இருப்பேன். சொன்னபடி கேட்பேன். வாயைத் திறக்க மாட்டேன். அவருக்குப் புடிச்ச சமையலைச் சமைச்சுப் போடுவேன். மல்லிகைப் பூ மாதிரி இட்லி பண்ணத் தெரியும் எனக்கு.”

அஞ்சலை இடுப்பில் கையை வைத்துக் கொண்டாள் ராணி மங்கம்மா மாதிரி. பிறகு அக்கம்பக்கம் பார்த்து மெள்ளச் சொன்னாள். ”நீ வெளியிலே போறதுக்கு நா உதவி செய்யறேன். ஆனா மறுபடி அந்த ஆள்கிட்ட போய் சாவாத.”

”வேற எங்க போவட்டும்? பிறந்த வீட்டிலே யாரும் இல்லே. என் படிப்புக்கு யார் வேலை குடுப்பா?”

”மல்லிப்பூ மாதிரி இட்லி பண்ணுவே இல்லே?”

அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. வேண்டாம் வேண்டாம். அவர்கிட்டயே போயிடறேன். அடிச்சாலும், உதைச்சாலும் அவர் யாரு? எம் புருஷன்தானே? அவர் எதிர்பார்க்கிறபடி நா நடந்துக்கலேன்னா அவருக்குக் கோபம் வரத்தானே வரும்? போக்கெடமில்லாத எனக்குப் பவிசென்ன வேண்டிக்கிடக்கு? அவர் வந்தால் இதைத் தெரிவிக்கணும். இரவு முழுவதும் அவள் புலம்பினாள்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன் தன்னோடு உற்றோமே யாவோம்;

உனக்கே நாம் ஆட்செய்வோம்.

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

சதா சர்வகாலமும் வாய் முணுமுணுத்தது – மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்…

அவன் டாக்டரின் பார்வையைத் தவிர்த்தபடி சங்கடத்துடன் அமர்ந்திருந்தான்.

”என்ன நீங்க, மாசத்துக்கு ஒரு தடவையாவது ஜனனியைப் பார்க்க வரவேண்டாமா?”

”எனக்கு டூர் போகற வேலை டாக்டர். ஒழுங்கா பணம் அனுப்பறேனே?”

”எங்களுக்கு அனுப்பறீங்க. அவ சமாதானத்துக்கு நீங்க வரணும்.”

”எனக்குச் சங்கடமாயிருக்கு. பழசெல்லாம் ஞாபகம் வருது. நானும் நிறைய கஷ்டப்பட்டுட்டேன் டாக்டர். எனக்கும் ஏமாற்றங்கள் இருக்கு.”

டாக்டர் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.

”குழந்தை செத்துடுச்சா?”

”குழந்தையா? இல்லையே?”

”ஜனனி அடிக்கடி சொல்லுவா. குழந்தை செத்திடுச்சின்னு.”

அவன் சிரித்தான்.

”குழந்தையே பிறக்கலே. குழந்தையில்லேன்னு எனக்கு ஏமாற்றம் கூட. அவ மூளைக் கலக்கத்திலே என்னவோ சொல்லுவா. குற்ற உணர்வோ என்னவோ.” டாக்கடர் ஏதோ சொல்ல நினைத்துப் பேசாமல் இருந்தாள்.

”இப்ப எப்படி இருக்கா?”

”நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. வீட்டுக்குப் போகணும்ங்கறா.”

”வேண்டாம், வேண்டாம். குழந்தை, கோட்டான்னு சொல்றாங்கறீங்க. நல்லா குணமான பிறகு வரட்டும். ஒரு வருஷம் ஆனாலும் ஆகட்டும்.”

டாக்டருக்குச் சோர்வாக இருந்தது. எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. ஒரு வருஷம் என்கிற கணக்கைக் கேட்டாயிற்று. விவாகரத்துக்குச் சுலபம் என்ற மனக்கணக்கு.

”ஜனனியைப் பார்த்துட்டுப் போங்க.”

”சரி.”

அவன் சங்கடத்துடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவனது சங்கடத்துக்குக் காரணம் நான் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. ”வாங்கோ” என்றாள் புன்னகையுடன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல.

”நா இப்போ நன்னா ஆயிட்டேன். பார்த்தா தெரியறதோல்லியோ.”

அவன், அவளுடைய காய்ந்த முகத்தை, குழி விழுந்த அருளற்ற கண்களை, பிசுக்குப் பிடித்த ஜடையை, கசங்கிய புடவையை லேசான அருவெறுப்புடன் பார்த்தான்.

”என்னை வீட்டுக்கு அழைச்சிண்டு போயிடுங்கோ. போறேளா?”

அவளுடைய கண்களில் தெரிந்த தீவிரம் அவனுக்குப் பீதி அளித்தது.

”இப்ப வேண்டாம். நன்னா தேவலையாகட்டும்.”

”எனக்கு நன்னா தேவலையாயிடுத்து.” அவள் சரேலென்று அவன் அருகில் சென்று அவனுடைய தோளைப் பற்றினாள்.

”நீங்க சொன்னபடியெல்லாம் கேக்கறேன்.” அவள் விசும்ப ஆரம்பித்தாள். ”சத்தியமா உங்க இஷ்டத்துக்கு விரோதமா நடக்க மாட்டேன். சத்தியமா கவிதை எழுதமாட்டேன். என்னை அழைச்சிண்டு போயிடுங்கோ ப்ளீஸ். எனக்கு வேற போக்கிடமில்லை.”

தோளைப் பிடித்து உலுக்கிய அந்த இரும்புக் கரங்களை அவன் திகைப்புடன் பார்த்தான். இவளுடன் எப்படி இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தினோம் என்று வியப்பேற்பட்டது. வெடுக்கென்று அவள் கையை விலக்கினான். ”நா செத்துப் போயிட்டேன்னு நினைச்சுக்கோ. நா உன்னை டைவோர்ஸ் பண்ணிட்டேன்னு நினைச்சுக்கோ” என்றான் அடிக்குரலில்.

அவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் வந்தது.

”ஏன், ஏன்? நா ஏன் அப்படி நினைக்கணும்? நீங்க என்னை ஏமாத்தறேள். என்னை இங்கே உயிரோடு குழி வெட்டப் பார்க்கறேளா? அதுதான் ப்ளானா?”

”டாக்டர், டாக்டர்! ஷி இஸ் டர்னிங் வயலென்ட் – டாக்டர் ஹெல்ப்!”

அவனுடைய அலறலைக் கேட்டு நர்சுகள் ஓடிவந்து, அவளை விலக்கி உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று அழ அழ, ‘தூங்கு’ என்று ஊசி போட்டார்கள்.

அவள் கண் விழித்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது. எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. வீட்டில் படுக்கையறையில் அவனருகில் படுத்திருப்பது போல ஒரு வினாடி தோன்றிற்று. எங்கோ அழுகுரல் கேட்டது. தொடர்ந்து சிரிப்பு. அவள் விடுக்கென்று எழுந்து சுற்று முற்றும் பார்த்தாள். மூலைக்கொருவராகப் போர்வை போர்த்திய உருவங்கள். விழிக்கும் நேரத்தில் பைசாசங்களாக உலவும் உடல்கள். ஆன்மாவைப் புதர்களில் தொலைத்துவிட்ட அப்பாவிகள். எல்லாரையும் கட்டித்தழுவிக் கண்ணீரால் கரைய வேண்டும் என்ற தாபம் அவளுள் எழுந்தது.

”நா விவாகரத்து செய்துட்டதா நினைச்சுக்கோ. நா செத்துட்டதா நினைச்சுக்கோ.”

அவளுக்குச் சிரிப்பு வந்தது. புருஷன் விஷத்தை அனுப்பிய போது மீரா சிரித்த ஞாபகம் வந்தது. மீராவைக் கண்ணன் காப்பாற்ற வந்தது போல இப்பொழுது யாரும் வரப் போவதில்லை. அவள் எழுந்தாள். ஆச்சரியமாக இருட்டில் கண் தெரிந்தது. பாட்டியின் ஞாபகம் வந்தது. பாட்டி இருட்டில் அறை அறையாக நகர்ந்தது போல அவள் சுலபமாக நடந்து வெளியே வந்தாள். பால் பாத்திரங்களைக் கொண்டு வரும் டெம்மோ வெளியே நின்றிருந்தது. டிரைவர் வாட்ச்மேனை சத்தம் போட்டு எழுப்பினாள். டெம்போ உள்ளே நுழைவதற்காக இரும்பு கேட் திறக்கப்பட்டது. தூங்கி வழியும் வாட்ச்மேன் கண்ணில் படாமல் அவள் புதுங்கிப் பதுங்கி வெளியேறினாள். மார்பு படபடத்தது. தார் ரோட்டில் வெறும் காலுடன் வேக வேகமாக நடப்பது நூதன அனுபவமாக இருந்தது. காற்றில் இருந்த மண்ணின் மணம் நாடி நரம்பையெல்லாம் உசுப்பி மீட்டி விட்டது. கீழ்வானத்தில் நெருப்புப் பொறி போல செவ்வொளி லேசாகப் படரத் துவங்கும் போது வானம் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும், மரமும் காற்றும், நட்சத்திரமும் கவிதைக் குழந்தைகளும். அவளும் ஏதோ ஒரு விதியின் உந்துதலில் இசைவுடன் பயணிப்பது போலிருந்தது.

*


நன்றி - குங்குமம் தோழி

தமயந்தி - மூவலூர் இராமாமிருதம் அம்மையார்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருவாரூரில் பிறந்தவர். வளர்ந்தது, வாழ்ந்தது மூவலூரில்.

இசை வேளாளர் குலத்தில் பிறந்ததினால் தேவதாசியாக மாறக் கட்டாயப்படுத்தப்பட்டவர். தன் குலத்தின் இழிவையும், சிலரின் சுய நலத்திற்காகத் தன் குலப் பெண்களின் வாழ்வு கலை, இலக்கியப் பாதுகாப்புப் போர்வையில் நசுக்கப்படுகின்றன என்பதையும் உணர்ந்த இவர், தேவதாசி முறை ஒழிப்பிற்காகவே தன் வாழ்நாளைப் போராட்ட நாட்களாக வரித்துக் கொண்டார்.

காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் கட்சிகளில் அவரின் ஈடுபாடு இருந்தாலும், சமூக நீதிக்கான போராட்டங்களிலேயே அவரின் தீவிர செயல்பாடு இருந்தது. தன்னுடைய சமூகப் போராட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவியாகவே இலக்கியத்தைக் கையாண்டார். இவர் எழுதிய ஒரே சிறுகதை ‘தமயந்தி’ (1945).

நூல்கள்:

* தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் –  நாவல் (1936).

* இஸ்லாமும் திராவிடர் இயக்கமும் (கட்டுரை).

———————————


‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே தங்கட்குப் பிள்ளைபேறு இல்லாது போயிற்று. இதற்குப் பரிகாரமாகத் தாங்கள் தீர்த்த யாத்திரை செய்தால் புதல்வன் பிறப்பான்’ என்று புரோகிதன் கூறினான். தள்ளாத வயதில் யாத்திரை செய்வது முடியாதென்றும், வேறு ஏதாவது மார்க்கம் இருந்தால் கூறும்படியும் அரசன் புரோகிதரைக் கேட்டான். உலகத்திலுள்ள தீர்த்தங்கள் எல்லாம் சமுத்திரத்தில் அடக்கம். சமுத்திரமோ பிராமணர் பாதத்தில் அடக்கம். ஆகையால் பிராமணர்களுக்கு ஏராளமான திரவியங்களைக் கொடுத்து அவர்கள் காலைக் கழுவி நீரைப் பருகுவீரானால் உமக்குப் புதல்வன் பிறப்பான் என்று புரோகிதன் கூறியதைக் கேட்ட அரசன் அங்ஙனமே செய்தான். செய்தும் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை. இதனால் மனமுடைந்த மன்னன், மடாதிபதியிடம் தன் குறையை விண்ணப்பிக்க, எல்லாம் விதியின்படிதான் நடக்கும் என்று மடாதிபதியும் கூறிடவே, இனி பிள்ளைப் பேற்றிற்காக முயற்சி செய்வதில் பயன் இல்லை என்ற முடிவோடு தனது புதல்வியையே தனக்குப்பின் அரசியாக்க வேண்டுமென்று நினைத்து அவளுக்கு வேண்டிய கல்வி கற்பிப்பதற்குத் தமயந்தி என்னும் பெண்ணை ஆசிரியையாக அமர்த்தினார். தமயந்தி சீர்திருத்த நோக்கம் கொண்டவளாதலால் தன்னிடம் கல்வி கற்கும் இளவரசிக்கும் சிறிது சிறிதாகச் சீர்திருத்தக் கருத்துகளைப் போதித்து வந்தாள்.

முன்னர், மந்திரி வேலையினின்றும் நீக்கிய திருநாவுக்கரசு என்பவர், சமூக நலப்பணியில் ஈடுபட்டு மக்களிடம் பதிந்திருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றித் தன்னுடைய கருத்துகளைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படிச் செய்து வந்தார்.

மடத்திற்குப் பணி செய்யும் மனோன்மணியின் மகள் தமயந்தி. தற்கால நிலைக்கேற்ப தாசித் தொழிலுக்கு விடுவதை விரும்பாது எத்தகைய எதிர்ப்புகளுக்கும், கேளாது கல்வி பயில வைத்தாள் அவள் அன்னை. தமயந்தியும் ஆர்வமாகக் கல்வி பயின்றாள். காலத்தின் சுழற்சியில் தமயந்தி கண்ணைக் கவரும் கட்டழகியாகிவிட்டதைக் கண்ட அவள் தாய் அவளைத் தன் குலத்தொழிலுக்கு விடுக்க முயன்றாள். அறிவும் ஆற்றலும் படைத்த தமயந்தி அன்னை மொழியை அலட்சியப்படுத்தி ஆகாதெனக் கூறினாள். மதனசுந்தரியும் தமயந்தியிடம் வந்து மடாதிபதி அவள் மேல் அவாவுறுவதாகவும் அவர் இஷ்டப்படி நடந்துகொண்டால் ஏராளமாகப் பொருள் தருவாரென்றும் சொன்னாள். அதற்குத் தமயந்தி, என்ன? முற்றும் துறந்த முனிவராயிற்றே அவருக்கு என் பேரில் மோகமா! இதை யாரும் நம்பமாட்டார்கள் என்றாள். அதைக் கேட்ட மதனசுந்தரி, உனக்கு ஒன்றும் தெரியாது. அது சாத்திரம் என்றாள்.

பேஷ்! நல்ல சாத்திரம்! இத்தகைய சாத்திரங்களைச் சுட்டுப் பொசுக்க வேண்டும். கடவுளின் பேரால் ஒரு வகுப்பாரை விபசாரிகளாக்கிய விபரீதச் செயலை விலக்கத்தான் வேண்டும். உலகத்தை உண்டாக்கிய கடவுள், ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் முத்தொழில் புரியும் கடவுள், அன்புக் கடவுள், தனக்கு மனைவியாகச் சிலரை ஏற்றுப் பலரறியச் செய்வதா? அவருக்கு வெட்கம் மானமில்லையா? அது மாத்திரமா?

நமது நாட்டில் எத்தனை மதங்கள்? எவ்வளவு சாதிகள்? பார்ப்பனர் தவிர மற்ற யாவரும் சூத்திரர், தீண்டாதாராகவே கருதப்படுகிறார்கள். உத்தமர்கள் உதித்த நம்நாடு ஏன் இன்று ஊதாரிகள் நிறைந்த நாடாயிற்று? வீரர்கள் தோன்றிய நாடு ஏன் இன்று வீணர்கள் மலிந்த நாடாயிற்று? நமது நாட்டுப் பெண்மணிகள், உத்தமிகளாய், வீரர்களாய், வலிமை பொருந்தியவர்களாய் விளங்கவே நான் பாடுபடப்போகிறேன். என் எண்ணம் நிறைவேற அரசாங்க உதவியையும் பெற்றுள்ளேன். என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் என்று கடுமையாகக் கண்டிப்பாகக் கூறவே மதனசுந்தரி தன் வீடு சென்றாள்.

ஒருநாள் இளவரசி, தமயந்தியிடம் ”மக்களிடத்தில் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் திருநாவுக்கரசு என்பவரின் நோக்க மென்ன?” என்று கேட்டாள். அதற்குத் தமயந்தி ”அம்மையே! இந்த இராச்சியத்தில் உழைப்புக்குத் தகுந்த ஊதியமில்லை. பலபேர் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டும் பசியாற உணவின்றிக்கிடக்க ஒரு சிலர் அவ்வுழைப்பின் பலனை உண்டு உல்லாசமாகயிருக்கிறார்கள். எனவே பசியால், பட்டினியால் வாடி வதங்கும் மக்கள் மன்னனைப் பகைக்கின்றனர். அதற்காகப் போராடுகின்றனர். ஏழ்மை என்பதில்லையானால் எத்தகைய கிளர்ச்சிகளுக்கும், கலவரங்களுக்கும் இடம் ஏற்படாது என்று சொன்னார்’’ என்று தெரிவித்தாள்.

இதைக்கேட்ட இளவரசி, அரசாங்கம் தன்னிடத்தில் வந்தால் அவற்றுக்குத்தக்கபடி நடந்து கொள்வதாக வாக்களித்தாள்.

தமிழகத்திற்கே தாயகமாய் விளங்கிய தருமபுரியை ஆண்டுவந்தார் துரைராஜர். நல்ல சீர்திருத்த நோக்கமுடையவர். மூடப்பழக்க வழக்கங்களை முறியடித்து நாட்டுமக்களுக்கு நல்ல சாதனங்களை ஏற்படுத்தி (தன்னுயிரைப்போல் மன்னுயிரும் என்பதை எண்ணி) பலரும் புகழ்ப் பரிபாலித்து வந்தார். அவருக்கு வீரகுணசீலன் என்ற ஒரே புதல்வன் இருந்தான். நல்லறிவு பெற்றவன், உயர்தரக் கல்வி கற்றவன், பலமொழிகள் பயின்றவன். விஞ்ஞானத்தில் தேர்ச்சிபெற்று விளங்கியவன். தன் மைந்தன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன் என்ற களி ஒருபுறமிருந்தாலும் அவன் குணத்திற்குத் தக்க குணவதி வேண்டுமே என்ற கவலையே அரசரைப் பெரிதும் பாதித்தது. எனவே தன் குறையைத் தன் நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் புவனகிரியை ஆளும் குணசேகர் ஜமீன்தார் புதல்வி, தமிழரசி கல்வியறிவிற் சிறந்தவளென்றும் அவளே வீரகுணசீலனுக்கு ஏற்ற மனைவி என்றும் சொல்லி மன்னன் மனதைத் தேற்றினார்.

நண்பர் சென்றதும் துரைராஜர் தனக்குள் யோசித்தார். புவனகிரி ஜமீன்தார் தனவந்தர், நாம் ஏழை. நம் மகனுக்கு அவர் மகளைத் தருவாரா? சரி! புரோகிதன் மூலமாவது அதை முடித்தேயாக வேண்டும் என்று புரோகிதன் ஜெயராமய்யரை அழைத்துத் தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்குப் புரோகிதன் ரூ.500 தந்தால் அந்தக் காரியத்தை எவ்விதமேனும் முடித்து விடுவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புவனகிரிக்குச் சென்று தன் மைத்துனர் சுப்பராயரிடம் நடந்த விவரத்தைச் சொன்னான்.

அச்சமயம் தமிழரசி மங்கைப்பருவமெய்தினாள். அரசன் சுப்பய்யரை வரவழைத்துச் சோதிடம் பார்க்கச் சொல்ல அவன் ஏதோ சக்கரம்போட்டு என்னவோ லக்கினம் பார்த்து விவாகம் சீக்கிரமே பூர்த்தியாகுமென்றும், மணமகன் தெற்குத் திக்கிலிருக்க வேண்டுமென்றும், பெயரின் முதலெழுத்து ‘வீ’ என்றிருக்கு மென்றும், கல்வியறிவிற் சிறந்தவனென்றும் அவனே அவசியம் தமிழரசிக்கு வரப்போகும் வரனென்றும் தெரிவித்தான். அரசன் சற்று யோசித்துத் தெற்குத் திக்கில் துரைராஜர் மகன் வீரகுணசீலன்தானிருக்கிறான் வேறு யாருமில்லையே, அவனோ ஏழை நமக்கு எப்படிப் பொருந்தும், என்றான்.

அதற்குச் சோதிடன் வீரகுணசீலனா? ஆம்! அவனேதான். பெயரின் முதல் எழுத்தும் ‘வீ’ என்று முன்னமே சொன்னேன். சந்தேகமில்லை. எல்லாம் விதியின்படித்தான் நடக்கும். சாதகப் பொருத்தம் சரியாக இருக்கிறது. நித்திய சுமங்கலியாயிருப்பாள், புத்திர சந்தானம் உண்டாகும். வீண்யோசனை வேண்டாம். வேறு விவாகம் செய்து வைத்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஏழையென்று பார்க்கக் கூடாது. எல்லாம் அவன் செயல். சுபஸ்ய சீக்கிரம் என்பதுபோல் விரைவில் விவாகத்தை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னான்.

அரசரும் எல்லாம் விதியின் விளையாட்டு என எண்ணி முதன் மந்திரியை தருமபுரிக்கு அனுப்பி விவாகத்தை முடித்துக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். மந்திரியும் தருமபுரிக்குச் சென்று அரசன் துரைராஜனைக் கண்டு பற்பல விதமாகப் பேசி விவாகத்தை நிச்சயிக்க ஏற்பாடு செய்துகொண்டு மீண்டும் புவனகிரி அரசரிடம் வந்து மணமகன் வீரகுணசீலன் கல்வியில் கை தேர்ந்தவரென்றும், கட்டழகு வாய்ந்தவரென்றும், கருணைக் கடலென்றும் புகழ்ந்து தமிழரசிக்குத்தக்க புருடர் அவரே என்றும் எடுத்துச் சொன்னான்.

நிற்க, வீரகுணசீலன் தன் விவாக விஷயத்தைத் தகப்பனார் மூலம் தெரிந்து தமயந்திக்கு, ”உண்மையில் அரசகுமாரி தன்னை விரும்புகிறாளா அல்லது புரோகிதனின் சூழ்ச்சியா? அவள் சம்மதிக்கவில்லையானால் நான் உன்னையே மணம் முடிப்பேன்; எல்லாவற்றிற்கும் விவரமாய் பதில் வேண்டுகிறேன்” என ஒரு கடிதம் எழுதிப் போட்டான். தமயந்தி கடிதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதை அரசகுமாரிக்குக் காண்பித்தாள். அவள் கடிதத்தைக் கண்டதும் ”நீயே அவரை விவாகஞ் செய்து கொள்” என்றாள். அதற்குத் தமயந்தி, ”அவசரப்படாதீர்கள். இருவருடைய பெயரை ஒரே கடிதத்தில் கண்டு எழுதியதற்குக் காரணமிருக்கிறது. அதாவது நான் சுயநலவம்சத்தில் பிறந்தவளாதலால் என்னுடைய கருத்தையறிவதற்கும் அதே சமயத்தில் தங்களின் அன்பைப் பரீட்சிக்கவுமே எழுதப்பட்டதாகும். எனவே தவறாக நினையாது தக்க விடையளிப்பீர்” என்றபின் அரசகுமாரியும் முழு சம்மதமே என்பதில் எழுத உத்தரவிட்டாள். அதற்குள் அரசனும் வந்து குமாரியின் விவாக விஷயத்தைப் பற்றிப் புரோகிதன் சொன்னபடி முடிந்துவிட்டிருப்பதையும் தெரிவித்தான்.

இரு பெண்களும் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் சந்தோஷமடைந்தனர்.

உடனே தமயந்தி அரசகுமாரியின் முழு சம்மதத்தைப்பற்றி வீரகுணசீலனுக்கு பதில் கடிதம் எழுதினாள். கடிதத்தைக் கண்ட அரசகுமாரன் கொண்ட ஆனந்தம் கொஞ்சமல்ல.

இடையே துரைராஜர் புவனகிரிக்குச் சென்று அரசனைக் கண்டு புரோகிதரை வரவழைத்து நாளைக் குறிப்பிடச் செய்து அதே முகூர்த்தத்தில் வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் விவாகம் வெகு விமரிசையாக வைதீக முறைப்படி நடைபெற்றது.

வீரகுணசீலனும் தமிழரசியும் இன்ப வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

வீரகுணசீலன் தன் நாட்டிலே தங்கம் விளையும் இடத்தைக் கண்டுபிடித்து மாமனார் உத்திரவு பெற்று அவறைத் தோண்டி எடுத்தார். அதைக்கண்ட மாமனார் மருமகனின் அறிவையும் ஆராய்ச்சியையும் புகழ்ந்து முன் தனக்கிருந்த செல்வத்திலும் அதிகமாகப் பெருகியதைக் கண்டு அகமகிழ்ந்தான். பூமியில் கிடைத்த பொருளில் மூன்றில் ஒரு பாகம் பிராமணாளுக்குச் சொந்தம் என்ற மனுமுறைப்படி அவர்களுக்கு ஏராளமான பொன்னைத் தந்தார். ஆனால் வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் சற்றும் பிடிக்கவில்லை. என்ன செய்வது?

இது செய்தி அறிந்த திருநாவுக்கரசு ஏழைகளிடம் சென்று ”தோழர்களே தங்கச்சுரங்கத்தைக் கண்டவர் ஒருவர், வெட்டி எடுத்தவர்கள் நீங்கள். அதிக பலனையனுபவிப்பவர்கள் ஆரியர். இதென்ன அநீதி? உழைப்புக்குத்தக்க ஊதியம் உங்களுக்கு இல்லை; நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டவர்களுக்குக் கூலி சுவல்பம். இந்த முறை ஒழிய வேண்டாமா? உங்களுக்கு உணர்ச்சியில்லையா? ஊக்கமில்லையா?” என உருக்கமுடன் எடுத்துக்காட்ட மக்கள் பலர் அவர் முன்னேற்றச் சங்கத்தில் சேர்ந்தார்கள்.

இதைக்கேட்டச் சனாதனிகள் சிலர் மக்களிடம் சென்று சனாதன தர்மத்தின் மேன்மையையும் அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி உபன்யாசம் செய்தனர். ஆனால் மக்கள் அவர்கள் மொழிகளில் செவி சாய்க்கவில்லை. ஏன் கூட்டத்தையே நடத்தவொட்டாமல் செய்துவிட்டார்கள். ஆம்! உண்மைக்கே வெற்றி!

ஒரு நாள் வீரகுணசீலன் தன் காரில் காட்டு மார்க்கமாகப் போகும் போது திடீரென கார் நிறுத்தப்பட்டது. டிரைவர் தலையில் குல்லாய் விழுந்தது. ஒரு வெடிச் சத்தம் கேட்டது. ஒருவன் இறந்து கிடந்தான். வீரகுணசீலனைக் காணவில்லை. நகர் முழுதும் அழுகுரல். அல்லோல கல்லோலம். தந்தித் தபால்கள் பறந்தன. போலீசார் தீவிரமாகப் புலன் விசாரித்தனர். வீரகுணசீலனைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் இனாம் என்ற விளம்பரம். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை. சந்தேகத்தின் பேரில் டிரைவரைக் கைது செய்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து வேடுவன் ஒருவன் அரண்மனைக்கு ஓடிவந்து வீரகுணசீலன் காட்டில் இறந்து கிடப்பதாகச் சொல்ல அரசரும், அமைச்சரும் மற்றும் பலரும் அவ்விடம் சென்று பார்க்க வீரகுணசீலனின் உடல் காணப்படவில்லை. ஆனால் இரத்தக் கரைபட்ட அவருடைய ஆடை ஆபரணங்கள் மட்டுமேயிருந்தன. எல்லோரும் அவர் இறந்துவிட்டார் என்ற இறுதி முடிவுக்கே வந்து விட்டார்கள்.

கணவன் இறந்த கஷ்டத்தால் தவியாய் தவித்துக் கொண்டிருந்தத் தமிழரசிக்குத் தந்தையின் கட்டளைப்படி தாலியறுக்கும் சடங்குகளெல்லாம் சரிவர நடந்து, வெள்ளைப் புடவையும் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் அவளுடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும்? தமயந்தியின் ஆறுதல் தேறுதல் இல்லையென்றால் தமிழரசி தற்கொலையே செய்து கொண்டிருப்பாள்.

ஒருநாள் திருநாவுக்கரசு மாறுவேடமணிந்து தமயந்தியின் வீட்டிற்குச் சென்று ஜெயிலில் இருக்கும் டிரைவரை எவ்விதமேனும் வெளிப்படுத்த வேண்டும். இவ்வுதவி புரிந்தால் இந்த நன்றியை என்றும் மறவேன் என்று வேண்ட, அவளும் அதற்கிசைந்து உண்மையான ஒருவனை – கோமாளிபோல் நடிக்கக் கூடிய ஒருவனைத் துணையாகத் தந்தால் அக்காரியத்தை முடித்துத் தருவதாக வாக்களித்தாள்.

ஜெயில் சூப்பிரண்டு தன் மனைவியைக் காட்டிலும் தாசி மனோரஞ்சனியை அதிகமாக நேசிப்பவர். அவளை இணை பிரியாதிருப்பவர். சதா அவள் வீடே கதியெனக் கிடப்பவர். தமயந்தி தருணம் பார்த்துச் சூப்பிரண்டின் மனைவியைக் கண்டு நாளடைவில் நீங்கா நட்புக்கொண்டாள். வழக்கம்போல் ஒருநாள் அவர் வீடு சென்று யாருக்கும் தெரியாமல் அன்றிரவு சூப்பிரண்ட் உடைகளைத் தான் அணிந்து கொண்டு கோமாளியைப் பியூனாக அழைத்துக் கொண்டு நேரே சிறைக்குச் சென்று முதலில் நோயாளிகள் அறையைப் பார்வையிட்டுப் பிறகு டிரைவர் இருக்கும் அறை சென்று தன்னுடன் வந்த கோமாளியை உள்ளேயிருக்கும்படி செய்து பியூன் உடைகளை டிரைவரை மாட்டிக் கொள்ளச் செய்து இருவருமாக வெளியேறினர்.

மறுநாள் சிறைக்குள் ஒரே கலவரம், போலீசார் ஜெயில் வார்டரை விசாரித்தனர். நடந்ததை அவன் கூறினான். சிறையறைலிருந்த கோமாளி விசாரிக்கப்பட்டான். ஆனால் அவனிடம் சரிவரப் பதில் கிடைக்கவில்லை. அரசாங்கம் அநேக வழிகளில் துப்பு விசாரித்தும் ஒன்றும் துலங்கவில்லை. எனவே அரசன் ஒன்றும் தோன்றாதவனாய் வீரகுணசீலன் காணாமற்போனதற்கும், சிறையினின்றும் டிரைவர் தப்பியோடிப்போனதற்கும் காரணம் கண்டுபிடித்தான். ஆள் தூக்கித் தேவதையின் அக்கிரமச் செயல்களே இவை என்ற முடிவுக்கு வந்தான். எனவே அத்தேவதையை நாட்டினின்றும் விரட்டுவதற்கு உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். நகர் முழுவதும் ஒரே அமளி, ஆர்ப்பாட்டம். இதனால் பார்ப்பனர்கள் உட்படப் பலபேர் நல்ல பலனடைந்தனர். பல ஆயிரக்கணக்கான பொருள் வீணுக்குச் செலவாயின.

அரசன் மனம் பின்னும் நிம்மதியடையவில்லை. தன் மகள் விதவை. அவள் பட்டத்திற்குத் தகுதியுடையவள் அல்ல என்று எண்ணி அரசாங்கத்தை அமைச்சன் கையில் ஒப்படைத்தான். அரசன் ஆளுகையையே எதிர்த்து வந்த ஏழை மக்கள் அமைச்சன் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பார்களா? நாட்டில் எங்கும் கலவரம், கலகம், குழப்பம், கூட்டம்.

இடையே தமயந்திக்கும் தமிழரசிக்கும் பல சம்பாஷணைகள் நடந்தன. இறுதியில் தமயந்தி தமிழரசியை இந்து மதத்தின் கொடுமை, ஆண் பெண் என்ற பேதம், ஆண்டான் அடிமையென்ற வித்தியாசம் இவற்றைப் போக்க நல்ல முறையில் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

நிற்க, தமயந்தி மடத்தின் ஊழல்களைத் தெரிந்து கொள்ளவும் மடாதிபதியின் அக்கிரமச் செயல்களை அறவே ஒழிக்கவும் எண்ணி மடத்திற்குச் செல்ல விரும்பித் தன் தாயிடம் வந்து, தான் முன்பு தாயின் வார்த்தையைத் தட்டிப் பேசியதற்கு வருந்துவதாகவும், தவறைப் பொறுத்துக் கொள்ளும்படியும் இனித் தாயின் இஷ்டப்படியே நடந்துகொள்வதாயும் சொல்ல, தாய் சந்தோஷப்பட்டு மடாதிபதியிடம் அவளின் சம்மதத்தைக் கூறித் தமயந்தியை மடாதிபதியிடம் விட்டு வந்தாள். அவ்வமயம் மடாதிபதி சிஷ்யகோடிகளுக்கு மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை எனும் மூவாசைகளையும் மறக்க வேண்டு மென்றும், காயம் பொய்யென்றும் சொல்லி உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

தமயந்தி உட்புகுந்ததும் பக்தகோடிகள் யாவரும் பறந்து போயினர். அவர்கள் சென்றதும் தம்பிரான் தமயந்தியிடம் காதற் சம்பாஷணைகள் நடத்தத் தொடங்கினார். இடையே தமயந்தி பல கேள்விகள் கேட்டாள். ஆனால் அதற்குத்தக்க பதிலை அவனால் அளிக்கமுடியவில்லை. அதற்குள் ஒரு சிஷ்யன் மறைவாயிருந்து கனைத்தான். உடனே மடாதிபதி அவன் பின்னோடு சென்றான். தமயந்தியும் அவன் அறியாதபடி பின் தொடர்ந்தாள். மடாதிபதி அங்கு தன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த மங்கையை முத்தமிட்டுக் கட்டித்தழுவினான். தமயந்தி உடனே கேமராவை எடுத்து அப்படியே படம் பிடித்துக் கொண்டு முன் தான் இருந்த இடத்திற்கு வந்து வந்து சேர்ந்தாள். பிறகு மடாதிபதி இவளிடம் வந்து தனகோடி செட்டியார் என்பவரின் மகள் சிறுவயதிலேயே விதவையாகி விட்டாளென்றும் அவளுக்கிருந்த ஏராளமான பொருளை மடத்திற்கே எழுதி வைத்துவிட்டாளென்றும் சொன்னான். தமயந்தி அவனைப் பல கேள்விகள் கேட்டதற்கு இயற்கையுணர்ச்சியை அடக்க எவராலும் முடியாது, நீ என்ன சொன்னாலும் உன்னை நான் மறவேன், இது சத்தியம் என்றான். தமயந்தி நேரமாய்விட்டதென்றும் நாளை வருவதாகவும் சொல்லி விடைபெற்றுக்கொண்டு நேரே அரசகுமாரியிடம் சென்று மடத்தில் நடந்த மோச காரியங்களை எடுத்துச் சொல்லிப் போட்டோவையும் காண்பித்தாள். அரசகுமாரி திடுக்கிட்டு மடாதிபதியின் போக்கைக் கண்டு மகாகோபமடைந்தாள். தமயந்தி சரி, அவசரப்படாதீர், கோபம் வேண்டாம், விஷயம் இரகசியமாகவே இருக்கட்டும். சமயம் வரும்போது எல்லாம் சந்திக்கு வரும் என்று சொல்லித் தன் வீடு சென்றாள். இதற்கிடையில் அரசர் நோய் வாய்ப்ட்டு உயிர் நீத்தார். வெங்கடேசய்யர் மடவடையாளின் வீட்டிற்கு வந்து தமயந்தியைத் தான் பார்த்துச் சிறிது நேரம் பேச வேண்டும் என்றான். உடனே தமயந்தி அழைக்கப்பட்டாள். அவளைத் தனியே விட்டு விட்டு அவள் தாயார் சென்று விட்டாள். மந்திரி, தமயந்தியிடம் அரசகுமாரிக்குக் குழந்தைகள் இல்லாததால் அரசாள உரிமையில்லையென்றும், விதவையாகி விட்டாளே என்று வீண் வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், விதவையாயினும் பிராமணனை இச்சித்துச் சந்ததி பெறலாமென்றும், பஞ்சபாண்டவர்களும், சங்கராச்சாரியாரும் விதவையின் புத்திரர்களேயென்றும் சொல்லி அரசகுமாரியை எவ்விதமேனும் தன் இஷ்டத்திற்கு இணங்கச் செய்து வைத்தால் ஏராளமான பொருள் தருவதாகவும் சொன்னார். தமயந்தியும் தக்க சமயம் வாய்த்ததெனச் சந்தோஷப்பட்டு, ‘சரி சம்மதிக்கச் செய்கிறேன்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு அரசகுமாரியிடம் சென்று நடந்ததைப்பற்றி தெரிவித்தாள். அரச குமாரி மிக வெகுண்டு அமைச்சனை வரவழைத்து அப்படியொரு விதி இருக்கிறதா என்று கேட்டாள். அவன் ஆம் என்றான். அரசகுமாரி கடுங்கோபங்கொள்ள மந்திரி பேசாமல் நழுவி விட்டான்.

பிறகு அரசகுமாரி தமயந்தியிடம் இனி இக்கொடுமைகளைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டு மக்களிடம் சென்று இனி நானே இந்நாட்டையாளப் போகிறேன் என்றும் அதற்கு அவர்களுடைய ஆதரவு அவசியம் தேவை என்றும் சொல்லச் செய்தாள். தமயந்தியும் திருநாவுக்கரசரிடம் சென்று நடந்த கொடுமைகளைச் சொல்லி இனி நம் ஆதரவால்தான் அரசகுமாரி ஆளவேண்டுமெனச் சொல்லத் திருநாவுக்கரசரும் அடுத்த நாள் ஓர் பிரமாண்டமான கூட்டங்கூட்டுவித்து, அதற்குத் தமயந்தியையே தலைமை வகிக்கச் செய்து, நாட்டு மக்களிடம் அரசகுமாரியின் அருங்குணங்களைப் பாராட்டியும், மந்திரியின் மதிமோசத்தை விளக்கியும், இனி நாட்டைத் தமிழரசியே ஆளவேண்டுமென்பதை வற்புறுத்தியும் தெளிவாய்ப் பேசினார். தமயந்தியும் அவருக்குப் பிறகு அருஞ்சொற்பொழிவாற்றினாள். சீர்திருத்தத் தோழியர் இராசாயி அம்மாள் அவர்களும் அழகாகச் சொல்மாரி பொழிந்தார்கள். மக்கள் யாவரும் தமிழரசியே  நாட்டையாள வேண்டுமெனத் தீர்மானித்துத் தக்க துணைபுரிய துணிந்துமிருந்தனர்.

விழாவில் கலந்துகொள்ளப் பல பெரியோர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. அதன்படி விழாவிற்குப் பல பகுத்தறிவாளர்களும், பெரியோர்களும், பிரமுகர்களும் விஜயஞ் செய்தனர். திடீரென வீரகுணசீலரும் திருநாவுக்கரசரும் அங்கு தோன்றினர். மக்கள் அவர்களைக் கண்டதும் ஆனந்தம் கொண்டனர். வீரகுணசீலர் வாழ்க, திருநாவுக்கரசர் வாழ்க என ஆரவாரஞ் செய்தனர். பல பெரியோர்களின் விருப்பப்படியும், மக்களின் வேண்டுகோளிற் கிணங்கியும் அதே நேரத்தில் வீரகுணசீலருக்கும் தமிழரசிக்கும் மறுமணமும், தமயந்திக்கும் திருநாவுக்கரசருக்கும் கலப்பு மணமும் இனிது நடந்தது. ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு ஆடை, அன்னம் அளிக்கப்பட்டது. பல இடங்களிலிருந்து வந்து குவிந்த வாழ்த்துத் தாள்கள் வாசிக்கப்பட்டன. மக்களடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

அது சமயம் நடந்த கூட்டத்தில் தமிழரசியும் தமயந்தியும் நல்ல சீர்திருத்தக் கருத்துகளைப் பற்றிப் பேசினர். பிறகு திருநாவுக்கரசர் தான் செய்த புரட்சி வேலைகளையும், வீரகுணசீலனைத் தூக்கிச் சென்றதையும், அன்று முதல் அவர் தம்மோடு உழைத்து வந்ததையும் பாராட்டிப் பேசினார். வீரகுணசீலர் திருநாவுக்கரசரின் அருந்தொண்டினைப் போற்றினார்.

வீரகுணசீலரும் தமிழரசியும் தம் நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களையும், கைம்பெண்களின் கஷ்டநிலைமையையும் பார்ப்பனப் புரட்டுகளையும், மடாதிபதிகளின் அக்ரமச் செயல்களையும் பணக்காரர்களின் கொடுமைகளையும் புதிய சட்டங்கள் மூலம் போக்கித் தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் பாவித்து எல்லோரையும் சரிநிகர் சமத்துவமாகக் கருதித் திருநாவுக்கரசர் தமயந்தி இவர்களின் துணை கொண்டு பலரும் போற்றிப் புகழப் பரிபாலித்து வந்தனர்.

அவர்கள் புதிய திட்டத்தின்படி மடாதிபதி மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கேட்டு மறுபடியும் நல்லமுறையில் மக்களுக்கு தமிழ்க்கல்வியைக் கற்பித்து வந்தார். மாஜி மந்திரி வேங்கடேசய்யரின் கொடுமைக் குற்றங்களுக்காக அவர் நாடு கடத்தப்பட்டார்.

நாட்டில் எங்கும், இன்பமும் அன்பும் நிலவி அறிவும் ஆராய்ச்சியும் பெருகிப் பிரகாசித்தது.

(‘திராவிட நாடு’ வார இதழில் 1945ம் ஆண்டு 15-04-1945 முதல் 13-05-1945 வரை ஐந்து வாரங்கள் தொடர்கதையாக வெளியான கதை)


நன்றி - குங்குமம் தோழி