23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 11

""காமன் சென்ஸ் ஈஸ் தி மோஸ்ட் அன்காமன் திங் இன் தி வோர்ல்டு'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அமெரிக்க வரலாற்றை அடியோடு மாற்றிப்போட்ட 48-பக்கங்கள் கொண்ட ஒரு துண்டுப் பிரசுரத்திற்கு, தாமஸ் பெயின் இட்ட பெயர் "காமன் சென்ஸ்'. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன் (ஜனவரி,1776-இல்) ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல் மொட்டையாகப் பிரசுரிக்கப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரம்தான், காலனி ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா விடுதலைபெறக் காரணமாக அமைந்தது. அப்பிரசுரம், அமெரிக்க அரசியலில் மட்டுமன்றி, துண்டுப் பிரசுர விற்பனையிலும் 1776-இல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. முதல் மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகளும், முதலாண்டிலேயே 5 லட்சம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். 

அமெரிக்கா - கலிபோர்னியாவிலிருந்து புலவர், பொறிஞர். சி.செந்தமிழ்ச்சேய், ""கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என்ற குறளை மேற்கோள் காட்டி, "சென்ஸ்' என்ற சொல்லுக்குப் புலன், புலன் உணர்வு, அறிவு நலம் என்பது பொருளாகும் என்றும், ஆகவே, "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாகிய புலனுணர்வு, இயல்பாகிய புலனறிவு என்பவை பொருந்தக் கூடும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை பதிப்பித்துள்ள ஆட்சிச் சொற்கள் அகர முதலியில் "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, "இயல்பறிவு' என்று பொருள் கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, (1) பகுத்தறிந்து பார்ப்பதால் பகுத்தறிவு, (2) விவேகத்தோடு சிந்திப்பதால் விவேக அறிவு, (3) பொதுப்படையாக இருப்பதால் பொதுப்படை அறிவு, (4) சிந்தனையை சரிநிகராகப் பயன்படுத்துவதால் சிந்தையறிவு ஆகிய நான்கு சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

பேராசிரியர் மருத்துவர் பி.ஞானசேகரன், "விவேகம்' என்ற சொல்லையும், கவிக்கோ. ஞானச்செல்வன், "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்பதனால், "ஒப்புரவறிவு' என்பதே பொருந்தும் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

ஏ.ஸ்ரீதரன் பூங்கொடி, 355-ஆவது குறளையொட்டி "மெய்யறிவு' என்ற சொல்லையும், "நெஞ்சே தெளிந்து' என்ற ஈற்றில் முடியும் திருவாய்மொழியை அடியொற்றி "தெள்ளறிவு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், "காமன் சென்ஸ்' என்பது அனைவர்க்கும் அடிப்படையில் இருக்க வேண்டிய ஒன்றாகும் என்றும், "நெருப்பு சுடும்' என்பது அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக இருப்பதுபோல் தாமாக அறிந்திருக்க வேண்டிய காமன் சென்ûஸ, "தன்னறிவு' என்பதே சரியாகும் என்றும் கூறுகிறார்.

வி.என்.ராமராஜ், காணல், கேட்டல், தொடுதல் ஆகியவை மக்களுக்கும், மாக்களுக்கும் இயல்பானவையாயினும், மனிதன் கற்றும், கேட்டும், பட்டும், படித்தும் பெறும் அறிவினால் அகத்திற்கும், புறத்திற்கும் எது நல்லது, எது கெட்டது என்ற மதிநுட்பம் பெறும் காரணத்தால், "காமன் சென்ஸ்' என்ற வார்த்தைக்கு "புத்தி' என்ற ஒரு வார்த்தையையோ, அல்லது நுட்ப அறிவு - மதிநுட்பம் என்னும் இரு சொற்களையோ பயன்படுத்தலாம் என்கிறார். சான்றாக, மதி அல்லது மதிநுட்பம் ஆகிய சொற்களை திருவள்ளுவர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பயன்படுத்திய பாக்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

புலவர் உ.தேவதாசு, காமன், ஜெனரல் ஆகிய இரு சொற்களுமே "பொது' என்ற பொருளைக் குறித்தாலும், ஜெனரல் ஆஸ்பிடல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் போன்ற சொற்களில் பயன்படுத்தப்படும்போது "ஜெனரல்' என்ற சொல்லுக்கு "தலைமை' என்ற பொருளும் வரக்கூடிய காரணத்தால், "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய சொற்கள் பொருந்தலாம் என்கிறார். நடைமுறை அறிவும் நடைமுறை ஒழுக்கமும் தனி மனித வாழ்வையும், அறிவையும் தாண்டி, சமூக அளவில் செயல்படும் காரணத்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகலின் அவசியத்தை வள்ளுவம் உணர்த்துவதாலும், "ஒட்ட ஒழுகல்' என்ற இலக்கிய வடிவத்தை "பொது ஒழுங்கு',  "நடைமுறை அறிவு' ஆகிய இவ்விரு சொற்களால் குறிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, ""ஒரு பொருண்மை அல்லது நிகழ்வைச் சாதாரணமாகப் புரிந்து கொண்டு அதன் விளைவாக நாம் அதைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் முறையான கருத்தாக்கம் அல்லது முடிவு'' என்று பொருள் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் அகரமுதலி, அதே சொல்லுக்கு ""ஒரு மனிதனுக்குச் சரியாக மற்றும் பாதுகாப்பாக வாழத் தேவையான நடைமுறை அறிவும் கருத்தாக்கமும்'' என்று பொருளுரைக்கிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அரிஸ்டாட்டில், ஜான் லாக் போன்ற சிந்தனையாளர்கள், நமது புலன்களால் தனித்தனியாக அறியப்படும் ஒன்றுக்கு, நம் உள்ளம் அல்லது உள்ளுணர்வு கொடுக்கும் முழு வடிவம் அல்லது ஒட்டு மொத்த உருவகம் "காமன் சென்ஸ்' என்றார்கள்.

இதை வைத்துப் பார்க்கும் போது, புலன்களாலும், மனத்தாலும் அவற்றைத் தாண்டிய உள்ளுணர்வாலும் மனித உயிர்கள் இயல்பாக அறிந்து கொள்ளும் ஒன்றே காமன் சென்ஸ் ஆவதால், அதற்கு இணைச் சொல் "இயல்பறிவு' என்பதே பொருத்தமாகும்.

காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு  வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.

அடுத்த சொல் வேட்டை: வானியல் தொடர்பானவற்றிலும், மனித உடலைப் பற்றிய ஆன்மிக அல்லது தத்துவ விசாரத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். அதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?

நன்றி - தமிழ்மணி 20 01 2013

கருத்துகள் இல்லை: