23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 18

மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ஆகிய பொருள்களும், சுரா ஆங்கிலத் தமிழ் அகரமுதலியில் "குருக்களின் படிநிலைக் குழுமம்' என்றும் பொருள் தரப்பட்டுள்ளதால், "தரவரிசை' அல்லது "நிலை வரிசை' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

எழில் சோம.பொன்னுசாமி, அதிகார மரபு, அதிகார வரிசை, அதிகார அமைப்பு நிலை, அதிகாரப் படிநிலை என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, அருங்கலைச் சொல்லகராதியில், "படிமரபு' என்ற பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் ஜி.ரமேஷ், படிநிலை, பதவிப்படிநிலை, பொருள் படிநிலை, குருமரபு ஆகிய பொருள்கள் காணப்படுவதால், பல்வேறு சமூக அமைப்புகளைக் குறிக்கும் வகையில் கையாளப்படும்போது, இச்சொல்லுக்கு "வகுப்புப் படிநிலை' என்ற சொல்லையும் அதிகாரத்தின் பொருட்டு கையாளப்படும்போது, "அதிகாரப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார். 

முனைவர் ப.ஜம்புலிங்கம் வம்சாவளி, வழிவழியாக, பரம்பரை பரம்பரையாய், தலைமுறை தலைமுறையாய் என்னும் சொற்களையும், அலுவல் நிலை பயன்பாட்டில் பதவி நிலையைக் குறிக்கும்போது, "பதவிப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "ஹைரார்கி' என்ற சொல் சமூக தளத்தில் அல்லது நிறுவன மற்றும் ஆட்சியமைப்பில் காணப்படும் உயர்வு, தாழ்வு அடிப்படையிலான கட்டமைப்பைக் குறிக்கும் என்பதாலும், பதவி, பணம், இனம் போன்றவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும் தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடைய ஓர் அடுக்குமுறை அமைப்பு உருவாவதாலும், இச் சொல்லுக்கு அடுக்குமுறை அமைப்பு' அல்லது "படிநிலை அமைப்பு' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு ஓர் அமைப்பிலோ அல்லது நிறுவனத்திலோ அதைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்கள் அவர்களது அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ ஒட்டி ஒருவர் மேல் ஒருவராக அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்படுவது என்ற பொருளைக் குறிக்கிறது. இவை தவிரவும், சில பொருள்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியோ, பல பிரிவுகளாகப் பிரித்தோ வைப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது. மேலும், கிறிஸ்தவ மெய்யியலில் தேவதைகளும், வானவர்களும், பாரம்பரியமாய் குறிக்கப்படும் "வரிசை' என்ற பொருளையும், கத்தோலிக்க திருச்சபையின் குருமார்களின் வரிசை அல்லது மரபு என்னும் பொருளையும் கூட ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி அளிக்கிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி ஐந்து விதமான பொருள்களைக் கூறுகிறது. அவை: (1) தேவதைகளின் வரிசை அல்லது பிரிவுகள், (2) குருமார்களின் மரபு, (3) அதிகாரத்தில் இருப்பவர்களின் வரிசை, (4) திறமை அல்லது சமூக, பொருளாதார அல்லது தொழில் மேம்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவைச் சார்ந்த மக்களை வரிசைப்படுத்துவது, (5) மதிப்பீடுகளை வரிசைப்படுத்துவது.

"ஹைரார்கி' என்ற சொல் ஆதியில் கிரேக்க மொழியில் விண்ணகவரிசை அல்லது வான்வெளிவரிசை ((Celestial Hierarchy)) என்ற பொருளிலும், கிறிஸ்தவ திருச்சபையின் குருமார் மரபு (Ecclesiastical) என்ற பொருளிலேயும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் 14, 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. முதன் முதலில் இச்சொல்லை கிறிஸ்தவ மெய்யியல் அறிஞர் சூடோ-டெனிஸ் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி கோள்கள், வானவர்கள், தேவதைகள், மதகுருமார்களின் படிவரிசையைக் குறிப்பிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இச்சொல், காலப்போக்கில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் அதிகார வரிசையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்சியல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் பரவியது. பின்னாளில், பொருளின் தரவரிசை அல்லது படிவரிசையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவற்றையும் தாண்டி, உளவியலில் ஒரு மனிதனின் தேவைகளை முக்கோண பிரமிடு வடிவில் வரிசைப்படுத்தி ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் மாஸ்லோவின் தேவைகளின் வரிசை (Maslow's Hierarchy of Needs) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இப்படி இச்சொல் எங்கோ தொடங்கி, எங்கெங்கோ போய், இன்று பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், "ஹைரார்கி' என்ற சொல்லின் வேர்ச்சொல்லிருந்து தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம் மற்றும் ஒரு சிறுகுழு ஆட்சி (Matriarchy, Patriarchy and Oligarchy) என்ற சொற்களெல்லாம் உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஹைரார்கி என்ற சொல்லின் அடிப்படை வீச்சு அதிகாரம், படி, வரிசை ஆகியவற்றைச் சுற்றிச்சுற்றி அமைவதைப் பார்க்கிறோம். 

அது அந்த வரிசையிலுள்ள மக்களைக் குறிக்கத் தொடங்கிய காலத்தைத் தாண்டி, பொருள்களையும், தேவைகளையும் கூட உள்ளடக்கும் நிலைக்கு வந்து விட்டதால், பெருவாரியான வாசகர்கள் குறிப்பிட்டுள்ள "படிநிலை வரிசை' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். ஆனால், படிநிலை என்பதும் வரிசை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமென்பதால் "படிநிலை அமைப்பு' என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

நன்றி - தமிழ்மணி 10 03 2013

கருத்துகள் இல்லை: