23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 13

கலிபோர்னியாவிலிருந்து புலவர்-பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு "நன்னடத்தை', "சீரொழுக்கம்' என்று பொருள் கொண்டுள்ளதாகவும், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு ஒழுக்கமுறை, நடத்தை நெறி, ஒழுக்க நெறி என்று பொருள் கொண்டுள்ளதாகவும், ஒரு சொல் நீர்மைத்தாய், வினைத்தொகையாக வேண்டுமானால் ஒழுகாறு, ஒழுகுநெறி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

முனைவர் சு.மாதவன், அகராதிகள் "நல்லொழுக்கம்' எனப் பொருள் குறித்தாலும், தமிழ்ச் சொல்லாக்கமாக "பண்பாட்டுத் தகவு நிலை' அல்லது "தகவு நிலைப் பண்பாடு' என்று கொள்ளலாம் என்கிறார். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகரமுதலி மரபமைதி, சீரொழுங்கு, நயநாகரிக அமைதி என்று பல பொருள்களைக் குறித்துள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டு, டெகோரம், எடிக்வெட் என்னும் சொற்களுக்கு "நனிநாகரிகம்', "நயன்மை' அல்லது "பற்றன்மை' என்னும் சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ் "அவையறிதல்' அல்லது "அவைப் பண்பு' ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார். புதுச்சேரி இலக்கியன் டெகோரம், எடிக்வெட் ஆகிய சொற்களுக்குப் பொதுவாக மதிப்பு, மரியாதை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆசாரம், சடங்கு, தகுதி ஆகிய பல பொருள்கள் இருந்தாலும், இவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு என்றும்; டெகோரம் - "புற ஒழுங்கு' அல்லது "புறநிலை ஒழுங்கு'; எடிக்வெட் - "அக ஒழுங்கு' அல்லது "அகநிலை ஒழுங்கு' என்னும் சொற்களையும் கொள்ளலாம் என்கிறார்.

ஆனந்த கிருஷ்ணன் டெகோரம், எடிக்வெட் ஆகியவை நவநாகரிகத் தன்மை பற்றியதாகும் என்று தொடங்கி, இச்சொற்களின் பொருள்களாகப் பல்வேறு சொற்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவையடக்கம் என்பது நன்னடத்தை, வெளிமதிப்பு, மெய்ப்பு, மதிப்பு, வரம்பு குறிப்பாக மரபொழுங்கு மீறாமல் செயல்படுதலாகும் என்றும், நிறைநலம், நிறை நடத்தை-பேச்சு, நன்மதிப்பும் நிறைநலமும் அடங்கிய நன்னடிக்கை முறை, நவநாகரிகத் தன்மை, ஒழுங்கு, ஆசாரம் ஆகியவை அவையறிதலில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும், மரியாதை, கண்ணோட்டம், சாதுர்யம், பண்பாடு ஆகியவை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கையுடன் ஒட்டி இருக்க வேண்டும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, நடை, உடை, பாவனை, உணவு, நல்லொழுக்கம் முதலியவைகளில் நேர்த்தியான தன்மை வெளிப்பட வேண்டும் என்றும், இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, "மரபொழுங்கு' என்ற சொல்லே இச்சொற்களுக்கு சரியான இணைச்சொற்களாகும் என்றும் எழுதியுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "நாகரிகம்' என்ற சொல் "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லாகவும், "டெகோரம்' என்ற சொல்லுக்கு "மாண்பு' என்ற சொல் இசைவான தமிழ்ச் சொல்லாகவும் கருதப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், சட்டமன்றத்தின் மற்றும் நீதிமன்றத்தின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் சொற்றொடர்கள், அவைத்தலைவர் மற்றும் நீதிமன்ற ஆணைகளில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணையாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமல்லாது, நன்னெறிக் கோவையில் வரும் நன்னெறி, "நன்றிக்கு வித்தாகும்' எனத் தொடங்கும் குறளில் வரும் "நல்லொழுக்கம்' ஆகிய சொற்களையும் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "டெகோரம்' மற்றும் "எடிக்வெட்' என்னும் சொற்கள் ஒருவர் மற்றவர்களுடன் பழகும் பாங்கு, நடந்து கொள்ளும் விதம் சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன என்றும், இதனையே திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் எனக் குறிப்பிடுகிறார் என்றும், எனவே, டெகோரம் - நயத்தகு பண்பு; எடிக்வெட் - நயத்தகு நடத்தை ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா. ஜம்புலிங்கம் "டெகோரம்' - கண்ணியம் காத்தல்'; "எடிக்வெட்' - "கண்ணிய நெறி' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

எடிக்வெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து 1750-இல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பிரெஞ்சு மொழியில் அதன் பொதுவான பொருள் "அனுமதிச் சீட்டு' என்று காணப்பட்டாலும், ஆங்கிலத்தில் அதன் பொருள் நற்குடிப்பிறப்பின் காரணமாக வரும் "நடத்தை' அல்லது "நடைமுறை' என்பதாகும் என்றும், அதற்கு இன்னொரு பொருள் சமூக அல்லது தாம் கொண்ட அலுவல் தொடர்பான வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நடத்தை அல்லது நடைமுறை என்றும் மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.

அதே சமயம், "டெகோரம்' என்ற வினைச்சொல் "டெகோரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து 1568-இல் பிறந்ததாகவும், அச்சொல்லுக்கு (1) இலக்கிய மற்றும் நாடகப்பாங்கிற்கு வரையறுக்கப்பட்ட முறைமை; (2) நடத்தையிலும், தோற்றத்திலும் நற்சுவையும், ஒழுங்குமுறையும் கொள்ளும் பாங்கு; (3) பணிவான நடத்தைக்கு ஏற்படுத்தப்பட்ட வரையறை என்று மூன்றுவிதமான பொருள்களை அதே மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.
ஆனால், அந்த வினைச்சொல் லத்தீன் மொழியில் பயன்படுத்தப்பட்ட முதுமொழித் தொடர் "துல் சி எட் டெகோரம் எஸ்ட் ப்ரோ பாட்ரியா மோரி' ஆகும். அத்தொடரின் பொருள் ஒருவரது நாட்டிற்காக உயிர் துறப்பது இனிமை மற்றும் அழகானது என்பதாகும்.

இவற்றை வைத்துப்பார்க்கும் போது, "டெகோரம்' என்ற சொல் நற்சுவை, நடத்தை, ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சுற்றி வருவதாகவும், "எடிக்வெட்' என்ற சொல் பொதுவிடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், ஒரு மனிதனிடம் வெளிப்படும் தோற்றம், பொலிவு, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்க முற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த அடிப்படையில் அணுகும் போது, "டெகோரம்' - "கண்ணியம்';  "எடிக்வெட்'  - "நனிநாகரிகம்' என்னும் சொற்கள்தான் பொருத்தமாகும். காரணம், வழக்கு மன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் "டெகோரம்' காக்கப் படவேண்டும் என்ற வரைமுறை "கண்ணியம்' என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், ""முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'' என்று நற்றிணையில் குறிக்கப்படும் "நாகரிகம்' என்ற சொல்லும், "பெயக்கண்டும்' என்ற குறளில் வரும் "நாகரிகம்' என்ற சொல்லும், "கண்ணோட்டம்' என்பதன் அடிப்படையில் அமைவதாகப் பெரியவர்கள் கருதுவதால், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு "நனிநாகரிகம்' சாலப்பொருந்தும்.

வாசகர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இணைச்சொற்கள்:

டெகோரம் - கண்ணியம்; எடிக்வெட் - நனிநாகரிகம்.

அடுத்த சொல் வேட்டை: ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றை அதன் காரணமாக அடியொற்றிப் பின்தொடர்ந்து வரும் இன்னொன்றுக்கு ஆங்கிலத்தில் "கொரோலரி' என்று பெயர். இதற்கிணையான தமிழ்ச்சொல் என்ன?

நன்றி - தமிழ்மணி 03 02 2013

கருத்துகள் இல்லை: