26/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 23

தி.அன்பழகன், தம் கூட்டத்தாருக்கு மட்டுமே பொருள் விளங்கும் அடையாளச் சொல் தமிழ் இலக்கணத்தில் "குழுஉக்குறி' எனப்படும் என்றும், இதன் அடிப்படையில், "குறிக்குழுக்கூடல்' (சந்திப்பு) என்று கூறலாம் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், காலமும், பொழுதும் கனியும் வரை காத்திருப்பதும்; இடம், பொருள், காலம் அறிந்து சந்திப்புக்கள் நிகழ்வதும்; குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பல அரசு மற்றும் அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவதும் திட்டமிட்ட சந்திப்பு என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதால், அதையே சரியான இணைச்சொல்லாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ட்ரிஸ்ட் என்ற சொல்லை இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தலாம் என்றும், இச்சொல்லுக்கு நட்புறவு, பரீட்சயம், அனுபவம், நெருக்கம், பழக்கம், சந்திப்பு, உறவாடல், உரையாடல் முதலிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, ஜவஹர்லால் நேரு, இச்சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து, இச்சொல் புதுமையும், பொலிவும் பெற்றது என்றும், ஸ்காட்டிஷ் சொல்லான (TRISTE) என்ற சொல்லிலிருந்து இச்சொல் தோற்றமெடுத்தது என்றும், இச்சொல்லின் பொருளை இது அடித்தளமாகக் கொண்டது என்றும், தொடக்கத்தில் வேடுவர்கள் சந்திப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இச்சொல், பின்னர் காலப்போக்கில் காதலர்கள் தாங்கள் சந்திப்பதற்காக முன்னரே ஏற்பாடு செய்துகொண்ட இடம், நேரம் இவற்றைக் குறிப்பதாக அமைந்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் முன்னரே குறித்தபடி நடக்கும் சந்திப்பு இச்சொல்லால் அறியப்படும் என்றும், இத்தகைய சந்திப்புக்கான ஒப்பந்தம், சந்திப்பு, சந்திப்பிடம் ஆகியவைகளையும் இச்சொல்லின் பொருளாகக் கொள்ளலாம் என்றும் எழுதியுள்ளார். மேலும், தேச விடுதலையை ஒட்டி நேரு ஆற்றிய சொற்பொழிவின் காரணமாக இச்சொல் உலகப்புகழ் பெற்றது என்பதால், மேற்கூறிய வழக்கமான பொருள்களைத் தாண்டி, நாட்டு மக்களின் வறுமை, படிப்பின்மை, வேலையின்மை போன்ற சவால்களைச் சந்திப்பது முதலிய பொருள்களில் பயன்படுத்தப்படுவதால், "ட்ரிஸ்ட்' என்ற சொல்லில் உட்பொதிந்துள்ள ஒளிவுமறைவுத் தன்மையை நீக்கி ஓர் உத்வேகமும், தன்மையும் உள்ள சொல்லாக இதை நேரு மாற்றியதைக் கருத்தில் கொண்டு, "சவால்களுடன் சலியாச் சந்திப்பு' என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். இதைத் தவிர, முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பு ஒப்பம், காதலர் முன்குறி சந்திப்பு, முன்குறி சந்திப்பிடம் முதலிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாசிரியர் சிவ.எம்கோ, "அமர்த்தப்பட்ட நிகழ்வு' (An Appointed meeting), "மதிவுடம்படுத்தல்' (Meeting between lovers) என்னும் சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், திட்டமிட்ட சந்திப்பு, சந்திக்கும் நேரம், சந்திக்கும் இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார். தெ.முருகசாமி, "திட்டமிட்டுச் செய்தல்' என்றும், ச.மு.விமலானந்தன் பணிவு அல்லது அடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, இச் சொல்லுக்கு காதலர்களின் ரகசியமான சந்திப்பு என்ற பொருளைக் கொடுக்கிறது. அதைப்போல், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி காதலர்கள் சந்திப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம் ஆகிய பொருள்களைத் தருகிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியாரால், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக வெளியிடப்பட்ட ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், "இடந் தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, குறியிடந் தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறியீடு, குறியிடஞ் சந்திக்க உறுதிகொடு' ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கான பொருள் குறித்த இடம், நேரம், சந்திப்பு ஆகிய முப்பொருள்களையும் அடக்கியதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக அது அமையவில்லை. என்.ஆர்.ஸத்யமூர்த்தி குறிப்பிட்டதைப் போல், இச்சொல்லின் வீச்சு, நேருவின் பேச்சுக்குப்பின் வீரியமுள்ளதாக மாறிப் போனாலும், அதன் அடிப்படைப் பொருள் சந்திப்பு என்பதே. காதல், போர், சோதனைகள், சவால்கள், நெருக்கடியான சூழ்நிலைகள் இவையனைத்தையும் நேர்கொள்ளும் செயல்பாடும் சந்திப்பே ஆகும்.

எனவே, ட்ரிஸ்ட் என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் முன்குறி சந்திப்பு.

நன்றி - தமிழ்மணி 14 04 2013

கருத்துகள் இல்லை: