15/12/2013

தம்பி - கௌதம சித்தார்த்தன்

என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ... அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா...” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா அப்பனும் மகனுக்கும்... போடா அந்தப்பக்கம்...” என்று ஆத்மாவை நெட்டித் தள்ளி விட்டு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
ஆத்மா கீழே விழுந்து கிடந்த தம்பியைப் பதட்டத்துடன் தூக்கி நிறுத்தி என் மடியில் உட்கார வைத்தான். நான் பதனத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். “தம்பி, அடிபட்டுச்சா... வலிக்குதா...?” ஏன்று கனிவாகக் கேட்டபடி தோளை உடம்பை எல்லாம் நீவி விட்டான். “அழுகாதே... இனிமே அம்மாவோட டூ... பேசவே கூடாது... அழுவாத ஸாமீ....” என்று ஆறுதல் கூறினான்.

நானும், “ராஜா அழுவாதே கண்ணா... இனிமே அம்மா இங்கே வரட்டும்... அடி பின்னி எடுத்தறலாம்... இங்கே வா உன்னைப் பேசிக்கறோம்...” என்று சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டு கறுவிய மாத்திரத்தில் என் மனைவி வந்து விட்டாள்.  “கதை பேசியது போதும், இந்தாங்க... இது மளிகைசாமான் லிஸ்ட்... மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்திருங்க போங்க... சீக்கிரமா போயிட்டுவந்திடுங்க...” என்று விரட்டியபடி என் கையில் பையை ஒப்படைத்து விட்டு உள்ளே போய் விட்டாள்.

நான் ஆத்மாவைப் பார்த்தேன். கன்னங்கள் சாரமிழந்து போய் மஹா பரிதாபமான சோகம் முகமெங்கும் அடர நிராதரவான நிலையை அடைந்தவன், “வா நாம நம்ம எடத்துக்குப் போலாம்... நம்மளோட சேராதவங்களோட நாமும் சேரக்கூடாது...” என்று தம்பியை அழைத்துக் கொண்டு போனான்.
ஆரம்பகாலங்களில் என் மனைவியும் மிக்க ஆர்வத்துடன் தான் இந்த விளையாட்டில் கலந்து கொண்டிருந்தாள். தம்பிக்குப் பாலூட்டுவாள். தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவாள். தம்பியைத் தூக்கி எடுத்து அந்தரத்தில் போட்டுப் போட்டு பிடிப்பாள். தம்பியுடன் தொட்டு விளையாட்டில் கலந்து கொள்வாள். கிண்ணத்தில் சாதம் பிசைந்து ஊட்டும் போது தம்பிக்கு ஒரு வாய், ஆத்மாவுக்கு ஒரு வாய், என்று மிக உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவள், நாளாக நாளாக இது சலித்துப் போய் அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். எனக்கும் ஆத்மாவுக்கும் சலிக்கவேயில்லை.

தம்பி பிறந்த கதை அற்புதமான கதை.

என் மனைவி தம்பியை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒரு நாள்.

இருள் மெல்ல கவிந்து கொண்டிருந்த வேளையில் என் மனைவி கட்டிலில் படுத்திருந்தாள். ஆத்மாவுக்குத் தூக்கம் பிடிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகளில் சூரல் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த என்னை அவர்களின் சம்பாஷணை ஈர்த்தது.

“வயித்துமேலே ஏறதடான்னா பாரு. மறுபடியும் மறுபடியும் வந்து ஏர்ரே... அடி வேணுமா?”

“ஏ... வயித்துமேல ஏறினா என்னவாம்? நான் அப்பிடித்தான் ஏறுவே...” என்றபடி வயிற்றில் கால் வைக்க, என் மனைவி சட்டென காலைப் பிடித்து தூக்க, அவன் பொத்தென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.

அவனைத் தூக்கி எடுத்துப் பக்கத்தில் படுக்க வைத்து “என் கண்ணில்லே என் தங்கமில்லே செரிசெரி போச்சாது, அப்பாவை அடிச்சி போடலாம் அழுவாதே சாமி” என்றாள். ஆத்மா டக்கென்று “அப்பாவா அடிச்சா..? நீதானே தள்ளி உட்டே.” என்று அழுகையினூடே தலையைச் சிலுப்பிக் கொண்டு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

நான் எழுந்து போய் அவர்களருகில் உட்கார்ந்து கொண்டு, ராஜா, அம்மா வவுத்துக்குள்ளே குட்டிப்பாப்பா இருக்கிறா... நீ மிதிச்சா அவளுக்கு வலிக்கமா இல்லியா...?” என்று அவன் முகத்தருகில் செல்லமாகச் சொல்லி கன்னத்தை நிமிண்டினேன். என் மனைவி சட்டென அவன் முகத்தை தன்பால் திருப்பி, “குட்டிப்பாப்பா இல்லடா... குட்டித்தம்பி...” என்றாள். இது குறித்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

தம்பி மெல்ல அழுகையை நிறுத்தியவாய் ஆர்வத்துடன் கேட்டான். “அம்மா தம்பி எப்பிடிம்மா இருப்பான், உம்மாதிரியா எம்மாதிரியா அப்பா மாதிரியா?”

“உம்மாதிரிதான் என் ராசா...”

“ஏம்மா தம்பி ஸ்கூலுக்கு வருவானா?”

“ம்... வருவான்”

“தம்பி சரவணம் மாதிரி கிரிக்கெட் வெளையாடுவானா?”

“ம் வெளையாடுவான்”

“கொய்யா மரம் ஏறுவானா?”

அவள் சுத்தில்லாமல் யந்திரம் போல பதில் சொல்லிக் கொண்டிருந்தது என்னுள் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்த இடையில் புகுந்தேன்.

“எந்த மரம் வேணாலும் ஏறுவான்... ஒரே ஜம்ப்ல கொய்யா மரம் ஏறி கொய்யாப் பழம் உனக்கொண்ணு அம்மாவுக்கொண்ணு எனக்கொண்ணு பறிச்சிட்டு வந்து கொடுப்பான்...”

ஆத்மாவுக்கு என் பதில் பிடித்துப் போகவே என் பக்கம் சாய்ந்தான்.

“ஏம்பா, தம்பி சைக்கிள் ஓட்டுவானா?”

“ஓ... உன்னைப் பின்னாடி வெச்சிட்டு சைக்கிளை அப்படியே வேகமா ஓட்டுவான்... பஸ் லாரியெல்லாம் சைடு வாங்கீட்டு பயங்கரமா ஓட்டுவான்...”

“பெரிய சைக்கிள்லயா?”

“பெரிய சைக்கிள் சின்ன சைக்கிள் எல்லாத்திலயும்...”

“அப்பா தம்பியை சாமிநாதன் அடிச்சிப் போடுவானா?” இதுவரை கம்பீரமாய் வந்து கொண்டிருந்த குரல் கம்மிப் போயிற்று.

“தம்பியை யாராலும் அடிக்க முடியாது... அவன்தான் எல்லாரையும் அடிப்பான். டிஷும் டிஷும்...”  என்று அவன் வயிற்றில் குத்தினேன்.

நெளிந்து கொண்டே என் நம்பிக்கையில் சமாதானமாகாமல் கேட்டான்.

“ராஜாமணியை?”

“எல்லோரையுமே...”

“அடேங்கப்பா... எங்க மிஸ்ஸை கூடவா?”

நானும் என் மனைவியும் பக்கென்று சிரித்து விட்டோம். அதில் ஊடுருவியிருந்த பலஹீனத்தைப் புரிந்து கொண்டவன் போல, “அதானே பாத்தேன்... எங்க மிஸ்ஸை யாராலும் அடிக்க முடியாது... அதுதான் எல்லோரையும் அடிக்கும்...” என்று தீர்மானமாகச் சொன்னான்.

“ஆனா தம்பியை யாரும் அடிக்க முடியாது...” என்றேன்.

திடீரென ஞாபகம் வந்தவனாய், “தம்பிக்கு என்னென்ன வெளையாட்டு தெரியும்..?” என்று ஆர்வம் முகத்தில் கொப்புளிக்கக் கேட்டான்.

“எல்லா வெளையாட்டும் தெரியும்” ஆனாயசமாய் சொன்னேன்.

“அம்மா அம்மா... தம்பியை எறக்கிஉடும்மா... நாங்க வெளையாடறோம்...” என்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

என்னிடமிருந்து குபீரென்று வெடித்துச் சிதறிய சிரிப்பால் என் மனைவி சங்கடத்துக்குள்ளாகி நெளிந்து கொண்டு சிரித்தாள்.

“அம்மா அம்மா, எறக்கி உடுமா...” என்று காலைப் பிடித்துக் கொண்டு சிணுங்கினான் ஆத்மா.
நான் அவனை அணைத்துக் கொண்டு “ராஜா... தம்பி எறங்கறதுக்கு இன்னும்...” மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து, “ஏழுமாசம் ஆகும்... அப்பறமா வெளையாடலாம்...” என்றேன்.

அவன் அழ ஆரம்பித்தான். என் மனைவி அவனைக் கட்டிலில் படுக்க வைத்து கதை சொல்லிப் பார்த்தாள். பயங்காட்டினாள். எழுந்து விளையாட்டுச் சாமான்களை எடுத்து விளையாட்டுக் காட்டினாள். தின்பண்டங்கள் எடுத்துக் கொடுத்தாள். அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. என்மனைவி அடிக்கக் கையை ஓங்கியதும் அழுகை பலமானதேயொழிய குறைந்த பாடில்லை. நான் வாங்கி சமாதானப்படுத்த ஏதேதோ வித்தைகள் காட்டியும் பயனில்லாமல் எரிச்சல் வந்தது.

“கண்ணா, தம்பி தூங்கீட்டிருக்கான்.. நாளைக்குத்தான் எந்திரிப்பான்... நாளைக்கு எந்திரிச்சதும் அப்பறமா தம்பியோட வெளையாடலாம்... என்ன செரி தானா...?” என்றேன்.  அவன் உடனே அழுகையை நிறுத்திக்கொண்டு அம்மாவின் அடிவயிற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டான். 

“ஆமாப்பா தம்பி தூங்கறாப்பா...” என்றான் கிசுகிசுப்புடன். அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
நான், “பாத்தியா, தம்பியெல்லா தூங்கறான்... நீயும் படுத்துத்தூங்கு ராசா... எங்கே கண்ண மூடிட்டு தூங்கு பாக்கலாம்...” என்று ஒருவாறாய் சமாதானப்படுத்தினேன். அவனுள் ஏமாற்றம் நிறைந்திருந்தாலும் மகிழ்ச்சி அதை மறைத்துவிட அம்மாவோடு படுத்து கண்களை மூடிக்கொண்டான். கையால் தம்பியை அணைத்தவாறு தூங்கினான்.

அடுத்த நாள் செண்டிமெண்டாய் தம்பி இறங்கி விட்டான். என் மனைவிக்கு கருச்சிதைவு ஆகிவிட்டது. அவள் காலையில் விஷயத்தை வருத்தத்துடன் தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியில் ஊடலெங்கும் அதிர்ந்தது. கனவுகள் கனவுகளாகவே போய் விட்ட துயரம் உள்ளமெங்கும் விரவி உஷ்ணத்தைப் பாய்ச்சியது மனசு வரண்டுபோய் சோகத்தின் துயர வலைக்குள் உழன்று கிடந்தநேரம் வந்து காலைக் கட்டிக் கொண்டான் ஆத்மா.

“அப்பா அப்பா... தம்பி எங்கப்பா?”

கண்களில் நீர் விசுக்கென தளும்பி நின்றது. முகத்தை வேறு பக்கம் திருப்பி மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தால் தூங்கி எழுந்து வந்தவன் போல முகம் சோபை இழந்து சோம்பல் முறித்துக்கொண்டு இல்லாமல், முகமெங்கும் ஆர்வத்தின் தேஜஸ் வழிந்துகிடக்க கைகால்களை துரு துருவென்று உற்சாகம் கலந்த பதட்டத்துடன் நின்றிருந்தான். என் மௌனம் அவன் பரபரப்பை அதிகப்படுத்தவே அம்மாவிடம் தாவினான்.

“அம்மா அம்மா, தம்பியை ஏறக்கி உட்டியா? எங்கம்மா தம்பி?” அவள் காலைக் கட்டிக்கொண்டு குதித்தான். என் மனைவியின் அழுகை ஆத்திரமாக மாறிற்று.

“போடா சனியனே... நீ  வாய் வெச்சதிலே தான் இப்படியாய்டிச்சி...” என்று அவனை இழுத்துத் தள்ளி விட்டாள்.

அவன் தடுமாறி விழுந்து திக் பிரமை பிடித்தவனாய் அழ ஆரம்பித்தான்.

“ஏய், அவனையேண்டி அடிக்கறே? ஏதோ நடந்துடுச்சின்னா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்... நீ வாடா ராஜா...” என்று அவனை மார்போடு தழுவிக் கொண்டேன். அவன் அழுகையினூடே விக்கி விக்கி  “அப்பா... தம்பி ஏங்கப்பா... நான் அவனோடே வெளையாடணும்...” என்றான். எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது.  ஏமாற்றத்தின் இடியை அந்தப் பிஞ்சு மனசு தாங்குமா? அவன் ஆசைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்ய விரும்பவில்லை.

“தம்பி வெளையாடப் போயிருக்காம்பா... அவன் வந்ததும் நாம மூனு பேரும் வெளையாடுவோமா...ம்..?” என்றேன்.

அதுதான் நான் செய்த பெரிய தப்பு.

“தம்பி வெளையாடற எடத்துக்கு என்னையும் கூட்டிப் போ...” என்று அழுகையை உச்சஸ்தாயிக்கு உயர்த்தினான். நானும் பேச்சை மாற்ற என்னென்னவோ தகிடுதத்தங்கள் செய்து பார்த்தேன். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே போனாலொழிய அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. “உன்பாடு உங்கப்பாபாடு” என்று அவள் சமையலறைக்குப் போய் விட்டாள். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பும்போது என்னுள் ஒரு ஐடியா பளீரிட்டது.

“இதபாரு தம்பி வந்துட்டாம்பாரு....”என்றேன் கண்களில் அற்புதம் விரிய.

ஆத்மா ஆர்வமாக “எங்கே எங்கே” என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தான்.

“இதபாரு. அட இங்கே பாரு...” என்று வெற்றுவெளியில் கைகளைத் துழாவி பையனைத் தூக்குவது போல பாவனை செய்து அந்தரத்தில் தூக்கிப் பிடித்துக் கொஞ்சினான்.

“டேய் தம்பி... ஆதுக்குள்ளே வெளையாடிட்டி வந்துட்டியா? திருட்டுப்பயலே, கிரிக்கெட் வெளையாடினயா? இதென்னடா தலையெல்லா ஒரே மண்ணு புழுதி... ப்பூ..ப்பூ..” என்று காற்றுக் கூட்டி ஊதிவிட்டேன். “என்ன சாமிநாதனை அடிச்சிப் போட்டியா? ஹ்ஹ்ஹ்ஹா ஆமா ஆத்மாவை உட்டு நீ மட்டும் எப்பட்றா வெளையாடப் போனே...? பாரு...நீ உட்டு வெளையாடப் போயிட்டேன்னு ஆத்மா அழுதிட்டிருக்காம் பாரு... இனிமேல் அவனை உட்டு வெளையாடப் போகாதே...” என்றபடி முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளுடன் கொஞ்சி... “எங்கே அப்பாவுக்கு ஒரு முத்தம் குடு... ம்... ஆத்மாவுக்கு...” என்று அவன் பக்கம் திருப்ப, அவன் வினோதமான ஆர்வத்துடன் முகத்தை நீட்டி முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.

“ம். செரிசெரி, ரண்டு பேரும் போயி வெளையாடுங்க... ஆத்மா, இந்தா தம்பியைக் கூட்டிப்போ” என்று ஆத்மாவிடம் கொடுத்தேன். அவன் மெல்ல தயங்கிக் கொண்டு கைகளை நீட்டி விசித்திரமாக வாங்கிக் கொண்டான்.

பின்வந்த நாட்களில் தம்பியை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனான். தம்பி பறித்துக் கொடுத்ததாக கொய்யாப்பழங்கள் கொண்டு வந்து கொடுத்தான். தம்பியை சின்ன சைக்கிளிலே வைத்துக் கொண்டு தெரு முழுக்கச் சுற்றினான். ‘தம்பி வீணாக சண்டைக்குப் போகமாட்டான் என்றும், வந்த சண்டையை விடமாட்டான் என்றும், தன்னோடு மல்லுக்கு நின்ற சாமிநாதனையும் மற்ற எதிராளிகளையும் அடித்து விரட்டி விட்டதாகவும்’ பெருமை பிடிபடக் கூறினான். ‘ஸ்கூலில் யாரும் தம்பியோடு சேருவதில்லை என்றும், தன் சகாக்களிடம் தம்பியைப் பற்றிக் கூறினால் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கவே தம்பியை யாருக்கும் அறிமுகப்படுத்தாமல் தானும் தம்பியும் மட்டுமே விளையாடிக் கொள்வதாய் சொன்னான். தம்பியும் அவனும் வினோதமாய் பேசிக்கொள்வதைக் கண்டு என் மனைவி, “நீங்க கெட்டது போதாதா? பையனையும் பைத்தியக்காரனாக்கனுமா?” என்று சத்தம் போட்டாள். ஆத்மா அடம் பிடிக்காமல் சோறு தின்ன, பாடம் படிக்க தம்பி உபயோகப்பட்டதால் அவளும் சகித்துக் கொண்டாள்.

நாளாக நாளாக விசித்திரமான நிகழ்ச்சிகளையெல்லாம் கூற ஆரம்பித்தான். ஸ்கூலில் மிஸ், குருவி ஓவியம் எப்படி போடுவது என்று கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள். முதல் நிலையில் ‘ந’ என்ற உயிர்மெய்யெழுத்தைப் போட வேண்டும்; இரண்டாவது நிலையில் அதன் மூக்கை கூராகக் செதுக்கி பின் பக்கம் வளைவு செய்து கழுத்து அமைக்க வேண்டும், என்று கொஞ்சம் கொஞ்சமாய் விரிவாக்கி கண், மூக்கு, இறக்கை, கால்கள் என்று பத்தாவது நிலையில் ஒரு அழகான குருவி காட்சியளிக்கும். ஆனால், தம்பியோ, ‘முதல் நிலையில் போட்ட ‘ந’ வே போதும் என்றும், அதை பத்தாவது நிலைவரை நீட்டவேண்டிய அவசியமில்லை’ என்றும் வாதாடியிருக்கிறான். மிஸ் மூக்கின் மேல் விரல் வைத்து நிற்கும் வியப்பின் உச்சியில் போய் நின்று கொண்டு பேயறைந்தது போல முழித்திருக்கிறாள்.

எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பயம் ஏற்பட ஆரம்பித்தது. என் அறைக்குள் நுழைந்து என்னுடைய புஸ்தகங்களையோ, மற்ற விஷயங்களையோ தொடக் கூடாது என்றும் ஒழுக்கமாக பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் எச்சரித்து விட்டேன். அவன் உடனே பழைய சமையலறையைச் சுத்தம் செய்து தன் அறை என்றான். அவனுடைய சமாச்சாரங்களையெல்லாம் அதில் ரொப்பிக் கொண்டான். அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் விசித்திரமான சமாச்சாரங்கள் நிறைய அவனிடமிருந்து வெளிப்படும்போது இது எங்கு போய் முடியும் என்று பயம் மண்டையை உலுக்கும்.
நான் அவன் அறைக்குள் பிரவேசித்தபோது இன்னும் தம்பியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான். 

“ஆத்மா, மார்க்கெட் வர்ரியா?” என்றேன். அவன் ஒன்றும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் பக்கத்தில் போய் அவன் முகத்தைத் திருப்பி கைவிரல்களால் கேசத்தைக் கோதி தாஜா செய்தேன்.

“அட அவகெடக்கறா... நாம மார்க்கெட் போலாம் வா... போ போயி டரஸ்சேஞ்ச் பண்ணீட்டு ரண்டு பேரும் வாங்க போங்க...”

தம்பியையும் சேர்த்துக் கொண்டதில் ஆத்மாவுக்கு ஒரே குஷி. “இருப்பா வந்திடறோம்...” என்று வீட்டுக்குள் ஓடினான்.

அறையைப் பார்வை விட்டேன். சுவரில் ஆணியடித்து தோள் பை மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாடப் புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் ஓரத்தில் விளையாட்டுச் சாமான்கள். 

மூலையோரத்தில் சின்ன சைக்கிள் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வலது பக்க  ஓரத்தில் களிமண் கொட்டியிருக்க பக்கத்திலிருந்த சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த தண்ணீர் மரக்கலரிலிருந்தது. அதன் ஓரத்தில் சதுரவாக்கில் பலகையாக ஒரு கருங்கல்... அதில் களிமண் படிந்திருக்க அதனடியில் முடிந்தும் முடிக்காமலும் களிமண் பொம்மைகள் சிதறியிருந்தன. ஆத்மா வந்து சேர்ந்தான்.

“ஏப்பா போலாமா?”

“ஆத்மா, பொம்மையெல்லாம் செய்வியா? எனக்குக் காட்டவேயில்லே...”

“இல்லப்பா இதெல்லாம் தம்பி செஞ்சது...”

“ஓ... செரி எங்கே பாக்கலாமே...” பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவன் ஒரு பொம்மை வித்தியாசமாய்த் தெரியவே எடுத்துப் பார்த்தேன்.

“இமா இதென்ன பொம்மை?”

“அது ஒத்தக் கண்ணுப் பிச்சைக்காரன்”

குச்சி குச்சியான இரண்டு கால்கள்; கால்களுக்கு மேல் ஒரு மனிதத்தலை; முகத்தில் தாடியும் மீசையும் கீறப்பட்டடிருந்தது; ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குச்சிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து... கமண்டலம்தானே அது...? முளைத்திருந்தது.  ஹா... உடலெங்கும் புல்லரித்தது. பிரமித்துப் போனேன்.
ஓரிரு நிமிஷங்கள் வெறித்தபடி நின்றிருந்தவன்,

“இந்த பொம்மைக்கு மட்டும் வயிறு மட்டும் வெச்சிருந்தா அற்புதமா இருந்திருக்கும்...” என்றேன்.
“அதுவா... அவன் கையில கழட்டி வெச்சிருக்கானே... அதான் வயிறு”

என் மண்டைக்குள் சம்மட்டி அடி விழுந்தது. அவனைப் பற்றி ஏதேதோ விவரிக்க முடியாத ரூபங்கள் மனமெங்கும் வியாபித்துத் திரிந்தன. ஜீனியஸ் ஆஃப் தி ஏஜ்.

“தினமும் இந்தப் பிச்சைக்காரனை ஸ்கூலுக்கு போரப்ப வாரப்ப பாப்பம். ‘வயித்துக்கு ஏதாச்சும் போடுங்க தரும தொரே...’ ம்பான்; அவனோட பேச்சு வயித்தையே கழட்டி கைல புடிச்சிருக்கிற மாதிரி தெரியும்...”

எனக்கு உடனே அவனுடைய எல்லாப் பொம்மைகளையும் பார்க்கவேண்டும் போல ஆர்வம் பரபரத்தது, சம்மணமிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனைத் தினம் ஸ்கூலுக்கு சுமந்துபோகும் சைக்கிள் ரிக்ஷாவும், ரிக்ஷாக்காரனும்; கிரிக்கெட் மட்டையுடன் ஒரு பையன்; மாடுகள் இல்லாமல் அவிழ்த்த விடப்பட்ட வண்டி; மிட்டாய் விற்கும் கூடைக்காரக் கிழவி; மனிதத் தலைகள், கைகள், வண்டிச் சக்கரங்கள்... ஒரு மனிதத் தலையை கையில் எடுத்து, “இதுதான் தம்பி...” என்றான் ஆத்மா.

முகம் மொழு மொழுவென்று உருண்டையாக கொஞ்சம் கூர்மையான மூக்குடன் அகலமான நெற்றியை சிகை மறைக்காமல் மேலே தூக்கி சீவியிருந்தது. இதழ்களில் குறுநகை இழையோட ஒரு கம்பீரத்துடனான அலட்சியம் பொதிய அந்தத் தலை காட்சியளித்தது, என்னுள் இன்னும் ஏதேதோ விரிந்தது “அப்பா, அம்மா சத்தம் போடறதுக்குள்ளே போயிட்டு வந்திடலாம் வாப்பா...”

இருப்பினும் எனக்கு அந்த அறையை விட்டு வருவதற்கு மனசில்லை. துருவித்துருவி ஆராய்ந்தேன். எத்தனையோ அற்புதங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது போல் பட்டது. “அப்பா போலாமா?” என்று கையைப் பிடித்து இழுத்தான் ஆத்மா.

போகும் வழியில் ஆத்மாவுடன் ஏதும் பேசவில்லை. அவனும் தம்பியும் உரையாடிக் கொண்டு வந்தார்கள். எனக்குள் அவனைப் பற்றிய சூட்சும ரூபங்கள் தனக்குள் பயங்கரத்தை புதைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் விரிந்து படர்ந்தன. அவனை நினைத்துப் பெருமைப் படுவதா அல்லது கவலை கொள்வதா என்று விளங்காமல் உள்ளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

ஆயாசத்துடன் நீண்டதொரு பெருமூச்சு கிளம்ப அதிலிருந்து மீண்டபோது வேறொரு பயம் சேர்ந்து கொண்டது. ‘இவன் ஸ்கூல் வாழ்க்கை எப்படி இருக்கிறது?’

“ஆத்மா, நேத்திக்கு உங்க மிஸ் என்ன பாடம் நடத்தினாங்க...”

“தெரியலேப்பா, நான் ஸ்கூல் போய் ஒரு வாரமாகுது”

சாட்டையின் நீண்டநாவுகள் உடம்பெங்கும் சொடுக்கி எடுத்தன. ரோட்டில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டேன்.

“என்ன... என்ன சொன்னே? ஸ்கூலுக்குப் போறதில்லையா அடப்பாவி... பின்னெங்கடா போறே?”
எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து உதைத்து நொறுக்கலாம் போல ஆத்திரம் பொங்கிப் பீறிட்டுக் கொண்டு வந்தாலும், இதற்கு அவன் ஏன்ன வினோதமான பதில் சொல்லப் போகிறானோ என்று ஆர்வத்துடனான கவலையுடன் அவன் முகத்தை ஊற்று நோக்கினேன்.

ஸ்கூலில் ஒரே மாதிரி தினமும் போய் உட்கார்வதும், டங் டங்கென்று மிஸ் வந்து ஏ,பி,சி,டி சொல்லச் சொல்வதும் அவர்கள் ஒப்பிப்பதும் ரைம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதிக் காட்டச் சொன்னால் எழுதிக் காட்டுவதும் மறுபடியும் மறுபடியும் இதேதானா என்று தம்பிக்கு ஒரேயடியாய் சலித்துப் போய்விட்டது. ‘உனக்கு சலிப்பாக இல்லையா’ என்று ஆத்மாவைக் கேட்டேன். அப்பொழுது தான் அவனுக்கும் உறைத்தது. தனக்கும் சலிப்பாகிக் கொண்டு வருகிறதென்று. அடுத்த நாள் ஆத்மா அம்மாவிடம் சொன்னான். “தம்பி கிம்பியெல்லாம் பறந்துடுவீங்க... ஏண்டா அவ்வளவு திமிரா? ஸ்கூல் பிடிக்காம போய்டிச்சா? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகாட்டி சூடு போட்ருவேன்... கழுதை...” என்று கோரத்தாண்டவமாடவே தம்பி ஆத்மாவை அடக்கி விட்டான். இருவரும் ஒழுங்காக நல்ல பிள்ளையாய் ஸ்கூல் போனார்கள். ஸ்கூல் வாசலில் ரிக்ஷா இறக்கி விட்டதும் எல்லாப் பிள்ளைகளும் ஹோவென்று சப்தம் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்குள் போக ஆத்மாவும் தம்பியும் மட்டும் வெளியே கால்போன போக்கில் நடந்தார்கள். சற்று தூரத்தில் பூங்கா ஏதிர்ப்பட்டது. அதன் அமானுஷ்ய தோற்றமும், பறவைகளின் சீச்சொலியும் பச்சைப் பசேலைப் போர்த்திக்  கொண்டு ஆகாயத்தை நோக்கி சரேலித்திருந்த மரங்களின் கிளைகளும் அசைந்து அசைந்து வரவேற்றன. நிலமெங்கும் செடி கொடிகளும் புல் வெளியும் படர்ந்திருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் பாஷையும் கவிந்திருந்த அமைதிக்கு மேலும் அழகூட்ட, உதிர்ந்திருந்த பூக்களும் சருகுகளும் சப்திக்க நடந்து உள்ளே போனார்கள். எங்கு பார்த்தாலும் அழுக்கு மூட்டைகளாய் சோம்பேறி ஜனங்கள். அந்த இடத்தின் அற்புதத்தை ரசிக்காமல் அழகியல் உணர்ச்சியே இல்லாத ஜடங்கள் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிக்கும் ஆத்மாவுக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் அழுகையே வந்து விட்டது. அந்தக் கோரத்தை காணச் சகியாமல், சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று, யாருமேயில்லாத ஒரு இடம் தேடி புல்வெளியில் அமர்ந்து அந்த இடத்தின் அற்புதத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையின் தூங்குமூஞ்சி சுவர்களைப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு அந்த இடம் கிடைத்ததற்கரிய அற்புதமாய்த் தெரிந்தது.

“எவ்வளவு அற்புதங்களை இழக்க இருந்தோம்” என்றான் தம்பி.

“ஆமாம் இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் வெளியே இருக்கக் கூடும்” என்றான் ஆத்மா.
அப்பொழுது ஆத்மாவின் தோளில் ஒரு கரம் மெல்லிய பீலியாய் விழுந்தது. திரும்பிப் பார்த்தால், எதிரே தும்பைப் பூவைப்போல நரைத்த தலையுடன் ஒரு பெரியவர் பளீரிட்ட பற்களைக் காட்டி குறுநகை புரிந்தார். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவர் போலிருந்தது. கேசத்தில் நீர் ஸ்படிகத்துளிகளாய் மின்னியது. கேசத்தை மேலே தூக்கி வாரி நடு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். முகம் மொழு மொழுவென்று உருண்டையாய் தேஜஸ் மின்னியது. கைவரை மூடிய ஜிப்பாவும் கால்வரை வேஷ்டியுமாய் தூயவெண்மையாடை தரித்து மின்னற் குமாரன் போல காட்சியளித்தார். அழுக்கு மனிதர்களைப் பார்த்து அருவருப்படைந்த கண்களுக்கு அவரை ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

“என்ன தம்பி, ஸ்கூலுக்கு போகலியா...?” என்றார் பெரியவர். “என்ன டீச்சர் அடிச்சிட்டாங்களா?”

ஆத்மா இல்லை என்று தலையாட்டினான்.

“ஏன் ஸ்கூலுக்குப் போகலே?”

“ஸ்கூல்ல எங்களுக்குப் பிடிக்கலே”

பெரியவர் ஆத்மாவைத் தூக்கி மார்போடு தழுவிக் கொண்டார். தம்பி சொன்னான்.
“ஸ்கூல்ல எங்களுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே...”

பெரியவர் அதிசயத்துடன் கண்களை அகல விரித்தார். அவர் இதழ்களின் கடைக் கோடியில் புன்முறுவலொன்று நழுவி ஓடியது.

“வாஸ்தவம்தான்... நீ ஸ்கூல்ல படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே... வெளியில படி சூரியனுக்குக் கீழேயிருக்கிற இந்த உலகத்தில படிக்கறதுக்கு நிறைய இருக்கு... அந்த கிளாஸ் ரூம்ல நேரத்தை வீணாக்கிட்டு இருக்காதே...”

ஆத்மாவின் கேசத்தைக் கோதி உச்சி முகர்ந்து மெல்லிய ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து, தலையை ஆட்டி விட்டு, மெல்ல நடந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனார்.

அவர் போனபிறகு ஆத்மாவும் தம்பியும் அவருடைய கூற்றில் கவரப்பட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். தினமும் வெளியே எங்கெல்லாமோ அலைவது, மனசுக்கு பிடித்த சம்பவங்களில் கிறங்கிப்போய் நிறபது, புரிபடாதவைகளைக் குடைந்து குடைந்து யோசிப்பது, ஒவ்வொரு நாளையும் புதிய புதிய கோணத்தில் அனுபவிப்பது, சாயங்காலம் ஸ்கூல் விடும் நேரத்தில் வந்து ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வந்து தங்கள் அறைக்குப் போய் ஓவியங்கள் வரைவது, களிமண் பொம்மைகள் செய்வது... என்றெல்லாம் தினமும் அவன் சந்தித்த நிகழ்வுகள், மனிதர்கள், நூலகத்தில் போய் படித்த - படம் பார்த்த - புத்தகங்கள் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான்.

எனக்கு பயம், கோபம், ஆத்திரம் அத்தனையும் ஒருசேர வெடித்தது. “வாயை மூட்றா கழுதை... தம்பியுமில்லே மண்ணாங்கட்டியுமில்லே... ஏண்டா ஸ்கூலுக்குப் போகச் சொன்னா ஊர் சுத்திட்டு வர்ரியாடா ராஸ்கல்”

நான் ஒருநாளும் அவ்வாறு கண்டித்ததில்லையாதலாலும், தம்பி இல்லை என்று அதிர்ச்சியடைய வைத்தாலும் ஆத்மா ஒரேயடியாய் பயந்து போய் கண்கள் சொருகிப் போய் கீழே விழுந்தான். நான் பதறிப் போனவனாய் அவனைத் தூக்கி “ஆத்மா, ஆத்மா,” என்று கூவினேன். யைன் மயங்கிக் கிடந்தான். என் சப்தநாடியும் பதறிப்போக, அவனைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு அருகிலிருந்த கடைக்குக் கொண்டு போய் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்தேன். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூட்டம் கூடி விசாரித்தார்கள்.

“ஒண்ணில்லீங்க... வெயில் பாருங்க கொளுத்தது... 108 டிகிரி நமக்கே ஒருமாதிரி இருக்குது... சின்னக் குழந்தைக்கு கேக்க வேணுமா... மயக்கம் போட்டான் போல...”

ஆத்மா கண் விழித்ததும் ‘தம்பி தம்பி’ என்று என்னென்னவோ உளறினான். “தம்பி இருக்காம்பா... இதபாரு நின்னிட்டிருக்காம் பாரு...” என்று அவனுக்குத் தண்ணீர் காட்டினேன்.  “நீ தம்பி இல்லேன்னு சொன்னேயில்லே... நீ என்னோட பேச வேண்டாம் போ...”

“இல்லைடா ராஜா... நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். இதபாரு தம்பி... நீ மயங்கி விழந்துட்டேன்னு அழுவுறாம்பாரு... வா எந்திரி போலாம்...” சட்டென்று அவனை கூட்டிக் கொண்டு நடந்தேன்.

அவன் ஏன்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான். அவனுடைய பேச்சு எதுவும் நான் வாங்கிக் கொள்ளவில்லை. என் உள்ளமெங்கும் கவலையின் ஊசிகள் சுருக் சுருக்கென்று குத்தி வதைத்தன.
இவனை ஞானி என்பதா பைத்தியக்காரன் என்பதா இந்தச் சின்ன வயசிலேயே நடைமுறை வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் போய்விட்டானே... இன்னும் வாழ வேண்டியகாலம் நீண்டு கிடக்கிறதே... எனக்குள் என்னென்னவோ குழப்பங்களும் வெளிச்சக் கசிவுகளும் புலனாகிய வண்ணமிருந்தன. தலை முழுவதும் கும்மென்று வலித்தது. நினைவுகளின் அதிர்வலைகள் உள்ளமெங்கும் பாய்ந்து ஸ்மரணை தப்பி எண்ணங்களின் இருட்குகையில் பாசம் படிந்த பாதைகளில் இழுத்துப்போயின. குழம்பிய இதயத்துடன் கட்டுக்கடங்கா எண்ண ஓட்டங்களோடு நடந்தேன். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போதும், பணம் செலுத்தும் போதும் நான் என் வசம் இல்லை. வீடு திரும்பும் போது ஓயாமல் உழலவைக்கும் குழப்பங்களைப் போக்க டக்கென்று ஒருயோசனை தோன்றியது. அந்த நிமிஷத்தில் உடலெங்கும் பதட்டமும் பரபரப்பும் ஊர்ந்து நெளிந்தது.
எதிரில் பஸ் வந்தது. சாலையின் ஓரத்தில் ஒதுங்கினோம்.

அடுத்த கணம், “ஆ... அய்யய்யோ தம்பி பஸ்ல உழுந்திட்டானே...” என்று கத்தினேன். ஆத்மா சற்று தாமதித்து அந்த பயங்கரத்தைப் புரிந்து கொண்டு “ஐயோ ஐயோ” என்று அலறினான்.

பஸ் தம்பியின் மீதேறிப் போயேபோய்விட்டது. நான் ஓடிப் போய் நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்து, “ஆத்மா, தம்பி செத்துப்போயிட்டானே... ஐயோ, ஐயோ...” என்று அழுதேன்.

ஆத்மா ஓ வென்று அழ ஆரம்பித்தான்.


நன்றி : கௌதம சித்தார்த்தன்

நன்றி - அழியாச்சுடர்கள்

ஒரு திருணையின் கதை - மு.சுயம்புலிங்கம்

பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை அவள் கண்ணில் இடித்தது. பார்வை போய்விட்டது. கண்ணு தெரியாத பாட்டி இந்தத் திருணையைக் காத்துக் கிடந்தாள்.

தாத்தா ரொம்ப காலம் இந்தத் திருணையில்தான் படுத்துக் கிடந்தார். அவர் முதுகுப்புறம் சதையில் புண் வைத்தது. புண்களில் புழு நெளிந்தது. தட்டைப் பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைத் தாத்தா ஓட்டி வந்தார். ஒரு ஓடையில் வண்டி கவிழ்ந்தது. தாத்தாவை இன்னும் ஒரு வண்டியில் தூக்கிக்கொண்டு வந்து இந்த திருணையில்தான் கிடத்தினார்கள். உடைந்த எலும்புகள் தாத்தாவுக்குச் சேரவே இல்லை.

அம்மாவையும் இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள். அவள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அப்பா விற்றபொழுது அம்மா சகித்துக் கொண்டாள். அவள் காதில் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்த நகையை அப்பாவிடம் கழற்றிக் கொடுத்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. மூளிக் காதோடு அவள் எப்படி ஊருக்குள் நடப்பாள். மோட்டுவளையில் ஒரு சுருப்பாங்கணியில் தூக்கில் தொங்கிய அம்மையை இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள்.

அப்பா இந்தத் திருணையில்தான் எப்போதும் படுப்பார். குளிர் அன்றைக்கு அதிகமாக இருந்தது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லா மூடிப் படுத்திருந்தார். சீக்கிரம் எழுந்துவிடுகிறவர் அப்பா. அப்பா மேல் வெயில் அடிக்கிறது. அப்பா அப்பா என்று கூப்பிட்டு எழுப்பினேன். அப்பாவைத் தொட்டு உருட்டிப் போர்வையை எடுத்தேன். அப்பா தலை துண்டிக்கப்பட்டு தனியே கிடக்கிறது.

திருணை மழையில் கரைந்து தரையோடு தரையாய் ஆகிவிட்டது.

இடிந்து கிடக்கிற இந்தத் திருணையையும் வீட்டையும் நாங்கள் கெட்டுவோம்.

நன்றி - பண்புடன் குழுமம்

சோகவனம் - சோ.தர்மன்

கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின் மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிளை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள். உடற்சூட்டின் கதகதப்பில் திரவம் உறைந்து அணுக்கள் இறுகிக் கெட்டியாகி உயிர் பெற்று அசைந்து, மண் நீக்கி முளைவிடும் விதையெனத் தோடுடைத்து சூரியனின் இயற்கைச் சூட்டைப் பெறும் வேட்கையிலும், தாயின் மூச்சே காற்றென இருந்த கணம் மாறி உள்காற்றை உந்தித் தள்ளி வெளிக்காற்றில் தலை நீட்டும் முதல் ஸ்பரிசத்திற்காய் காலுதைக்கும் குஞ்சுகள் பொரிக்க இடம் தேடிப் புறப்பட்டன ஜோடிக் கிளிகள்.

தன் வம்சத்தின் பாரம்பரிய நியதியை மீற முடியாமல் கிளைகளின் மேல் கூடு கட்டி வாழும் பறவைகளையும், கிளைகளிலிருந்து தொங்கும் கூடு கட்டி வாழும் பறவைகளையும் உதாசீனப்படுத்தி விட்டு மரப்பொந்துகள் தேடி வனங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் தேடி அலைந்தன. மலைக் குகைகளின் கல் பொந்துகள் மாறித்தான் மரப்பொந்துகள் உண்டாயிற்று போலும். தான் ஜனித்த தாய் வீட்டை நினைத்து காற்றில் அடையாளமிட்டிருந்த திசையில் பறந்து இடந்தேடியடைந்தன. தன் தாய் வீட்டை அந்த இடத்தில் காணாமல் விக்கித்து நின்றன. தன் வீடு இருந்ததற்கான அடையாளத்தையே காணவில்லை. திசைமாறி விட்டோமோ என்று திகைத்து அடையாளங்கள் தேடினால் அடையாளங்களாக நின்ற மரங்களையும் காணவில்லை. “ஆகா... எவ்வளவு பெரிய இலவ மரம் தன் தாய்வீடாயிருந்தது. எவ்வளவு உயரம், எத்தனை பொந்துகள். பக்கத்திலேயே கூடாரமாய் கிளை பரப்பி வெய்யில் முகமே காணாமல் எந்நேரமும் நீருக்குள் இருக்கிற மாதிரியான குளிர்ச்சியில் அசைந்தாடி பறவைகள் எல்லாவற்றையும் ‘வா, வா’ என்று கையசைத்துக் கூப்பிடும் நிலவாகை மரத்தையும் காணவில்லை. சந்தன வாசனை எங்கே போயிற்று? அடர்ந்த மட்டியும் கோங்கும் பிள்ளை மருதும் இருந்த இடம் எது? ஆயிரம் கைகள் விரித்தாற்போல் நின்ற தேக்கு எங்கே போயிற்று. தன் தாய்வீட்டில் வாசற்படிபோல் பொந்தின் அடியில் இருந்த பெரிய கணுவில் நின்றுகொண்டு இரையூட்டிய தன் தாயின் அலகும் தங்களின் அலகும் எவ்வளவு கச்சிதமாய் பொருந்தி மூடும் இரைகளை அலகு மாற்றிய பின் விருட்டெனப் பறந்து காற்றில் கலக்க எத்தனை தோதாயிருந்தது. அம்மரத்தின் கணு முற்றிப் பழுத்து வெடித்த பலாவின் மணத்தை இந்த நாசி உணரவே வழியிலலியே. உயிர்ப்பித்த பூமியா அத்தனை மரங்களையும் உள் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டது? கடுகளவு விதையையும் பெரிய மரமாக்கி வனமாக்கும் மண் நிச்சயமாய் விழுங்கியிருக்காது. மண் விழுங்கும் சருகுகள் கூட உரமாகி உயிர் பெற்று மரமாய்த்தானே வெளிவருகிறாது. அப்படியெனில் இந்த மரங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன. பெரு நெருப்பில் கருகியிருந்தால் தடயம் எங்கே. சாம்பலையும்கூட உரமாக்கி செடிகளுக்கு அளித்து பூ பிஞ்சு காய் பழம் விதையென சகக்ரச் சுழற்சியின் விதிக்கு மண் தானே ஆதாரம். அப்படியிருக்க மண் நிச்சயமாய் விழுங்கியிருக்க முடியாது.”

கனிந்து காம்பறுந்து தரையில் விழும் விதை சுமந்த பழங்களை கையேந்தி வாங்கிக் கொள்ளும் மண்போல் தன் உடலுக்குள் சூல் கொண்ட பழங்களைப் பத்திரமாய் இறக்கி வைக்க இடம் தேடியலைந்தன கிளிகள். மழை மேகங்களைச் சுமந்துகொண்டு வனமெல்லாம் அலையும் காற்றைப் போல் அலைந்தன கிளிகள். வயசாகி கிழடு தட்டி நரை திரண்டு முடியுதிர்ந்து வழுக்கையாகி சுருக்கங்கள் கண்டு பொந்துகளாகிப் போன மரங்கள் வனமெங்கும் தேடியும் கண்ணில் படவே இல்லை. நாகங்கள் உலா வரும் தரையில் தன் விதையை விதைக்க முடியாது. மென் பழங்களை மட்டுமே கொத்தும் செவ்வலகினால் மரப்பட்டைகளைக் குடைந்து பொந்துகள் உண்டாக்க முடியாது. கிளிகளின் அலகுகளும் பழுத்துத் தொங்கும் பழங்களும் வெவ்வேறல்ல. வாய்விட்டுக் கதறாமல் ஊமையாய்ச் சுற்றி வனங்களை வட்டமிட்டே காலங்கடந்து போனது. இனிமேல் ஒரு நாள் தாமதித்தால் கூட தன் வம்சம் தரையில் விழுந்து மடிந்து போகும். விதையைப் புஷ்பிக்கும் பூகிக்கு முட்டையைப் புஷ்பிக்கும் கலை மறந்து போனது. விதைவேறு, முட்டை வேறா? விதைக்குப் பூமி, முட்டைக்குப் பறவை. அப்படியானால் பூமியும் பறவையும் ஒன்றுதானே.

கனத்த வயிற்றின் சூல் விரட்ட, வனத்தை மறந்த பெண் கிளி சிறகடித்துப் பறந்தது வெகு தூரம். சோகத்தில் முகஞ்சுளித்த ஆண் கிளியின் இயலாமை, மரப்பொந்து கண்ணில் படவேயில்லை. கிழடு தட்டி வைரம் பாய்ந்த பொந்துகள் உள்ள மூத்த மரங்களைக் காணவேயில்லை. மரங்களற்று செடிகளாகிப் போன வனங்கள். பல்வேறு மலர்களின் சௌந்தர்ய நிறங்களும் மணங்களும் அற்ற வனம். பழங்களின் வாசனைகள் இல்லாத வனம். கூட்டங் கூட்டமாய்த் திரியும் காட்டு மிருகங்களற்ற வனம்.

வெகு நேரம் பறந்து இறக்கை ஓய்ந்து வெட்ட வெளியில் ஒற்றையாய் நின்ற மொட்டைப் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து எட்டிப் பார்த்தன. செத்த பனஞ்சிராய்கள் உள் விழுந்த ஆழப் பொந்து பெண் கிளி உள்ளே போய் முடங்கிக் கொண்டது. மொட்டப் பனையின் உச்சியிலிருந்து ஆண் கிளி கழுத்துருட்டிப் பார்த்தது. கண்ணெட்டும் தூரம்வரை வெட்டவெளி.

மொட்டைப் பனையை ஒட்டிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. ஓயாமல் கேட்கும் வாகன இரைச்சலும் ஹாரன் சத்தமும். பக்கத்திலேயே சாலையோரக் கேண்டீன், இரவு பகல் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்க சத்தமாய்க் கூச்சலிடும் ஸ்டீரியோ சினிமாப் பாடல்களும் புகை கக்கும் உயர்ந்த குழாயும், காற்றில் பரவி வரும் விசித்திரமான பிரியாணி வாசனையையும் வாகனங்கள் கக்கிச் செல்லும் டீஸல் பெட்ரோல் புகை நாற்றத்தை சுவாசித்து முகஞ் சுளித்தது ஆண்கிளி. பறந்து வந்த களைப்புத் தீர தாகம் தணிக்கப் பறந்து வெளியில் சென்றது ஆண் கிளி. மலையருவிகள் கொட்ட சிற்றோடைகளில் பாம்பின் நெளிவாய், சுவை கொண்டு பாய்ந்து வரும் கண்ணாடித் தண்ணீர் தேடி அலைந்தது. தூரத்தில் தெரிந்த குளத்தில் தாழப் பறந்து உற்றுப் பார்த்தது. ஒர்க்‌ஷாப் கழிவுகள் சேர்ந்து எண்ணெய்ப் படலம் மிதக்கும் கருமை நிறத் தண்ணீரின் நாற்றம் பிடிக்காமல் பறந்து போனது. சாலையோரக் கேண்டீனிலிருந்து வெளியேறி கிடங்கில் பெருகிக் கிடந்த மீன் செதில்கள் மிதக்கும் தண்ணீரில் ஒரு கொக்கு தவமிருக்கக் கண்டதும் கிளி பறந்து போனது. தூரத்தில் நடுக்காட்டில் பம்புசெட் கிணற்றின் உப்புத் தண்ணீர் வாய்க்காலில் தொண்டை நனைத்துப் பறந்து வந்தது.

மொட்டைப் பனையின் உச்சியில் உட்கார்ந்து எட்டிப் பார்த்த ஆண் கிளியின் முகத்தில் இளஞ்சூட்டின் வெக்கை படிந்தது. ஆண் கிளி புரிந்து கொண்டது. சாலையோரக் கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸின் ஜன்னல் வழியே எறிந்த பொட்டலங்களில் ஒட்டியிருந்த பிரியாணித் துகள்களையும் புளியோதரைப் பருக்கைகளையும் கொண்டுபோய் இரையாகக் கொடுத்தது. சில நேரம் ஆண் கிளி முட்டைகளுக்குக் காவல் காக்க பெண்கிளி வந்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு போனது. ஒருநாள் யாரோ எச்சிலையில் சிவப்பாய் பழங்கள் கிடக்க, கிளி சந்தோஷத்துடன் ஆவலாய் கொத்தித் தின்னப் போனபோதுதான் தெரிந்தது. அந்தப் பழம் வேறெந்த உயிர்ப்பிராணிகளுமே தின்னாத, மனிதர்கள் மட்டுமே தின்கிற தக்காளிப் பழமென்று. ஏமாற்றமடைந்த கிளி ஒரு குழந்தை கோபத்தில் விட்டெறிந்த காய்ந்த ரொட்டித் துண்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. ஒருநாள் பாலிதீன் பையின் கொஞ்சம் மீதம் இருந்த தண்ணீரை யாரோ தூக்கி எறிய, தொண்டை நனையக் குடித்து தாகம் தீர்த்தது. ஒரு வேளை அண்ணாந்து குடிக்கும் போதோ அல்லது பிளாஸ்ட்டிக் பையை பல்லால் கடித்துக் கிழிக்கும் போதோ கை தவறி விழுந்திருக்கலாம் இல்லையெனில் எந்தக் குழந்தையாவது கோபத்தில் தன் அப்பா அம்மா மீது எறிந்து குறி தவறிக் கீழே விழுந்திருக்கலாம்.

இரவில் எந்நேரமும் கண்களைக் கூச வைக்கும் வாகனங்களில் வெளிச்சங்களும் இடைவிடாது கேட்கும் இரைச்சல்களும் பேயாய் அலறும் ஹாரன் சத்தங்களும் கேண்டீன்களில் அலறும் ஸ்பீக்கரின் ஓலங்களும் தூக்கத்தை மறக்கடித்தன. காய்ந்த பணஞ் சிராய்களின் உறுத்தல் வேறு. ஆனாலும் ரொம்பவும் பயமுறுத்தியது ஓயாமல் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம்தான். வனத்தில் எப்போதாவது யானையோ சிங்கமோ புலியோ அல்லது இடியோ மின்னலோ பெரிய சத்தத்தையும் பயத்தையும் உண்டுபண்ணும். அந்த பயம் சமயத்தில் இரண்டுநாள் கூட மறக்க முடியாமல் அடிவயிற்றைக் கலக்கும். ஆனால் இங்கேயோ ஒரு நிமிஷம் தவறாமல் பயங்கர சத்தம். சத்தமே வாழ்க்கையென்றாகிப் போயிற்று கிளிகளுக்கு. ஒரு நாள் சில வித்தியாசமான சத்தங்கள் கேட்கவும் இரு கிளிகளும் ஆவலாய் பனைமேல் நின்று எட்டிப் பார்த்தன. தூரத்தில் சில மயில்களும் இன்னும் சில குயில்களும் ஒரு புறாக் கூட்டமும் இருக்கக் கண்டு சந்தோஷமாய் பொந்துக்குள் போய் முடங்கிக் கொண்டன. படை படையாய்ச் சென்ற சிட்டுக் குருவிக் கூட்டம் மொட்டைப் பனையை ஒட்டிப் பறந்தது.

ஒவ்வொரு தடவையும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும்போது அதன் தாய் பாஷையான கிகீகீ சத்தத்தைக் குஞ்சுகள் கேட்கவிடாமல் வாகனங்களின் ஹாரன் சத்தம் மேலெழும்பி அமுக்கியது. தொண்டை வலிக்கக் கத்தியும் தன் தாய் பாஷையை குஞ்சுகளின் காதுகளில் கேட்கவைக்க முடியாமல் தாய்க்கிளிகள் இரண்டும் தொண்டை வறண்டு ஓய்ந்து போயின. தன் வம்சத்தின் பாரம்பரிய நிறம் மாறி குஞ்சுகள் கிளிப்பச்சை நிறமிழந்து செம்பச்சையாய் வளர்ந்தது கண்டு தாய்க்கிளிகள் இரண்டும் ஒன்றையொன்று ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டன. தன் குஞ்சுகள் எழுப்பும் சத்தம் வாகனங்களின் ஹாரன் சத்தம் மாதிரி ஒலிக்கக் கண்டு இரு கிளிகளும் பதறித் துடித்தன. பஸ்ஸின் ஜன்னல் வழி விட்டெறிந்த அரைக் கொய்யாப் பழத்தை ஆசையாய் கொண்டு வந்து ஊட்டியது தாய்க்கிளி. பழங்களின் வாசனையறியாத ருசியறியாத குஞ்சுக்கிளி தூ.. வென்று துப்பி உமிழ்ந்தபோது தாய்க்கிளிகள் இரண்டும் கண்ணீர் விட்டு அழுதன.

கொஞ்ச நாள் கழித்து வாகனங்களே வராத நிமிஷ நேர இடைவெளியில் மொட்டைப் பனையிலிருந்து ஹாரன் சத்தம் கேட்கவும் சில பேர் பேய் என்றார்கள். சில வருடங்களுக்கு முன் ஒன்றோடொன்று மோதி நொறுங்கிச் செத்த டிரைவர்களின் ஆவி பனையில் குடியேறிவிட்டது என்றார்கள். பேய்கள் வாசஞ் செய்யும் மொட்டைப் பனையை தூரோடு வெட்டிச் சாய்த்து பேய்களின் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதற்கப்புறம் ஜனங்கள் பயமற்று நடமாடினார்கள். காற்றில் சிறகசைத்துப் பறந்து குஞ்சுக் கிளிகளைக் கூட்டிக் கொண்டு வனம் சேர்ந்தன தாய்க்கிளிகள். மரங்கள் குறைந்து செடிகள் நிறைந்திருந்த வனம் இப்போது செடிகள் குறைந்து கொடிகள் நிறைந்த வனமாய்க் காட்சியளித்தது. கிளிகளின் வித்தியாசமான ஹாரன் அலறலில் வனம் நடுங்கியது. அருகருகே வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சிங்கங்களும் புலிகளும் சிலிர்த்துக் கொண்டன. ஒன்றிரெண்டாய் உயிர் வாழும் யானைகள் தும்பிக்கைகள் தூக்கி மிரண்டு நின்றன. வானத்திலிருந்து ஓயாமல் கேட்கும் ஹாரன் சத்தம் வனமெங்கும் எதிரொலித்தது. தன் வம்சத்தின் சாபம் என்றெண்ணிய தாய்க்கிளிகளும் ஓடிப் பதுங்கிக் கொண்டன.

குஞ்சுக்கிளிகள் இரண்டும் வித்தியாசமான மணம், சூழல், இரைகல் கண்டு முகஞ்சுளித்துக் கவலையோடிருந்தன. பழம் கொத்தித் தின்னவும், எதிரியின் கண் முன்னாலேயே மரத்தின் இலையா மாறி தப்பிக்கவும் தெரியாமல் ஓயாமல் ஹாரன் சத்தத்தை ஒலித்துத் திரிந்தன. ஒருநாள் இச்சி மரத்தின் உச்சியில் நின்று இரண்டு கிளிகளும் பலமாய்க் கத்தின. நடுக்காட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு போவதைப் போல் விடாமல் ஹாரன் சத்தம் கேட்டது. திடீரென்று எதிர்திசையிலிருந்து பக்கத்திலேயே ரயில் வண்டியெழுப்பும் பயங்கரமான ஹாரன் சத்தம் கேட்கவும் கிளிகள் இரண்டும் மௌனியாய் நின்று கவனித்தன. ரயில் வண்டியின் ஹாரன் சத்தம் தங்களை நோக்கி மிக அருகே நெருங்கி வந்தது. மீண்டும் கிளிகள் உற்றுப் பார்த்தன. தங்களை நோக்கி இரண்டு மயில் குஞ்சுகள் கூவிக் கொண்டே வருவதைக் கண்ணுற்றன.


வனமெங்கும் பஸ் ஹாரன் சத்தமும் ரயில் ஹாரன் சத்தமும் விடாமல் கேட்கத் தொடங்கின. சில நாள் கழித்து நடுவனத்தில் ஆலைச் சங்கின் பயங்கரச் சத்தம் கேட்டது. எல்லாப் பிராணிகளும் உற்றுப் பார்த்தன. குயிலொன்று கூவிக் கொண்டு போன சத்தமது. சில நேரம் மிஷின்கள் ஓடும் பாக்டரிச் சத்தங்கூட கேட்கத் தொடங்கியது. பல்வேறு வாகனங்களின் பாக்டரிகளின் விதவிதமான பயங்கரச் சத்தங்கள் வனமெங்கும் ஒலிக்க வனம் சுருங்கிக் கொண்டே வந்தது. வரவர வனத்தின் சௌந்தர்யம் குறைந்து விகாரம் குடி கொண்டது. கடைசியாய் படைபடையாய்ப் பறந்து வந்த சிட்டுக்குருவிகள் ஊசிப் பட்டாசுகளாய் வெடித்துச் சிதறிச் சத்தமெழுப்பி மரக்கிளைகளுக்குள் மறைந்து கொண்டன. தன் செவிப்பறைகள் கிழிந்து ஊமையாகிப் போன வனம் நாளாவட்டத்தில் சுண்ணாம்புக் காளவாசலாய் மாறி அக்னியாய் தகித்தது. வனத்தைத் தேடியலையும் எஞ்சிய பறவைகள் எழுப்பும் பலவிதமான ஹாரன் சத்தங்கள் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன வனங்களையும் கடந்து.

நன்றி - பண்புடன் குழுமம்

ஹார்மோனியம் – செழியன்

மதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இருந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது.

“வணக்கம்.”

பண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன் விரல்களைத் தளர்த்தி நிறுத்தினார். அறையெங்கும் இசையின் அதிர்வு பரவித் தணிந்தது. பத்துக்குப் பனிரெண்டு அறை. சகல மதங்களுக்கான தெய்வங்களின் படங்களின் கீழே ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.

‘மியூசிக் கத்துக்கணும்…’

’உட்காருங்க. எங்கெ இருந்து வர்ரீங்க?’

‘சிவசங்கைலயிருந்து..’

அவரது விரல்கள் சப்தமில்லாது ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளின் மேலாக ஏதோ தேடுவதாகப் பாவனித்தன.

‘ம்.. சொல்லுங்க.. எங்கெருந்து. வர்ரேன்னு சொன்னீங்க..’

‘சிவகங்கையில இருந்து வர்ரேன். மியூசிக் கத்துக்கணும்னு ஆசை.’

‘என்ன பண்ணிட்ருக்கீங்க..’

‘வேல தேடிட்டிருந்தேன்.’

’நாள மறுநாள்….’ விரல்களில் ஏதோ கணக்குப் பார்த்தார். அஷ்டமி, என உதடுகள் முணுமுணுத்தன. ’வியாழக்கெழம அமாவாசை… அன்னிக்கே சேர்ந்திடுங்க… திங்கள் வியாழன் க்ளாஸ். வாரம் ரெண்டு க்ளாஸ். இருநூறு ரூபாய்.. சம்பளம் ஏற்கனவே மியூசிக் படிச்சிருக்கீங்களா’

‘இல்ல..’

‘வீட்ல யாராவது படிச்சிருக்கீங்களா’

‘இல்ல.. நான் தான் முதல்ல…’

’ஏன் கத்துக்கிடணும்னு நெனைக்கிறீங்க’

‘கத்துக்கணும்னு ஆசை’

ஹசன் பண்டிட் புன்னகைத்தார்.

வரும் திங்கள்கிழமையிலிருந்து வகுப்புக்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். நான் அறையைக் கடந்து மாடிப்படிகளில் இறங்குகையில் ஹார்மோனியத்தின் இசை மீண்டும் பரவியது. 

ஹார்மோனியத்தின் கட்டைகளின் ஊடே தயங்கி, தாவி, ஊர்ந்து, பின்வாங்கி ஸ்வரங்களைத் தேடும் அவரின் விரல்கள் என் நினைவில் வந்தன.

இருட்டத் துவங்கிவிட்டது. ஹசன் பண்டிட், இருட்டத் துவங்குகிற கறுப்பு. பாகவதர் போல தூக்கிச் சீவிய தலைமுடி. தீர்க்கமான சிறிய கண்கள். மீசையில்லாமல் சுத்தமாக மழித்த முகம். இசைக் கலைஞனுக்குரிய தேஜஸ்.

மொட்டை மாடியில் வெறுமனே மேகங்கள் பார்த்துக் கலையும் என் மாலைப் பொழுதுகள் இனி ஹசன் பண்டிட்டின் ஸ்வரங்களால் நிறையும் என நினைக்கையில் உற்சாகமாக இருந்தது.
திங்களன்று இசைவகுப்புகுப் போகிறோம் என்பதே எனக்குள் மிகுந்த பரவசத்தை அளித்தது. இரண்டு நீள அன்ரூல் நோட்டுக்கள் வாங்கிக் கொண்டேன்.

அன்று நடுத்தர வயதில் மேலும் இரண்டு பேர் நீள நோட்டுக்களுடன் காத்திருந்தனர். ஆசிரியர் அவர்களுக்கான வகுப்பு முடியும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னார். பக்கத்துக் கட்டிடத்திலிருந்த பேக்கரியில் இருந்து ரொட்டிகள் முறுகும் வாசனை இதமாய் இருந்தது. பச்சை நிற ரெக்ஸின் உறையினால் மூடப்பட்டு ஓரத்தில் இருந்த ஹார்மோனியத்தை ஒருவர் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் கவனித்தேன். அந்த அறையில் மொத்தம் மூன்று ஹார்மோனியங்கள் இருந்தன. ஹசன் பண்டிட்டின் ஹார்மோனியம் மட்டும் பெரியது.

‘ஜண்டை வரிசை வாசிங்க…’

ஸஸ ரிரி கக மம… எனத்துவங்கி ஹசன் பண்டிட் காட்டும் விரல் அசைவிற்கும் கைதட்டுதலுக்கும் ஏற்ப வேகம் இயல்பாய்க் கூடி.. சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறுமிகள் நடனமாடுகையில் அவர்கள் கையில் இருக்கும் வண்ண வண்ணமான ரிப்பன்கள் காற்றில் அலைவதைப் போல… ஸ்வரங்களின் நடனம். அலை அலையாய் மின்சாரம் போல அறையில் பரவும் இசை அதிர்வில் அந்த இடமே எனக்கு அற்புத உலகம் போல இருந்தது. அவர்கள் வாசித்து முடித்ததும் அதிர்வுகள் தணிந்து மௌனம் கவிந்தது. அவர்களுக்கான பாடக் குறிப்புகளை எழுதச் சொல்லிவிட்டு ஆசிரியர் என்னை அழைத்தார்.

எனது நீள நோட்டினை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து, கண்களை மூடிப் பிரார்த்தித்துவிட்டு, பெரிதாக பிள்ளையார் சுழி போட்டு என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினார்.

அறை நிசப்தமாய் இருந்தது.

கற்காலத்தில் இடுகாட்டில் கிடந்த எலும்புகளை ஊதி, சப்தங்களை எழுப்பிய கதையிலிருந்து துவங்கினார். தேர்ந்த கலைஞனின் அடவுகளைப் போல முகபாவனைகளாலும், விரல் அசைவுகளாலும் அவர் பேசப் பேச ஆதிமனிதனின் புதைமேடுகளில் கிடந்த எலும்புகளில் வண்டுகள் துளையிட்டுப் பறக்க.. காற்றின் சுழிப்பில், விசிறலில்.. இனந்தெரியாத சோகத்தோடு ஒரு குழலிசை புகையெனச் சுழல…  அறை இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்வரங்களை வாசித்துப் பழகிய அவரது கறுத்த விரல்கள், காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆர்மோனியத்தின் கட்டைகளை வாசிப்பது போல அபிநயித்தன. சூனியம் இல்லாத இருண்ட வனத்துக்குள் மயில்கள் அகவுகின்றன. அதிலிருந்து ஸட்ஜமம். கிரௌஞ்சப் பறவைகள் பாடுகின்றன. நிலா வெளிச்சத்தில் மூங்கில் துளிர்கள் தேடித் தின்ற களிறுகள் பாறைகளின் ஊடே தன் இணையை ஆளும் சுகத்தில் பிளிறுகின்றன. ஸ்வரங்கள் உயிர்த்து அசைகின்றன. கைலாயத்தில் நடனம் கொள்ளாது சிவனின் ஏழு தலைகளிலிருந்தும் ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு கதியில். இசைமுனி நாரதனின் வீணைத் தந்திகள் தாமாக அதிர்கின்றன.

ஸ ரி க ம ப த நி என ஏழு ஸ்வரங்கள். வேங்கட மகியின் பனிரெண்டு சக்கரங்கள். மேளகர்த்தாக்கள். எழுபத்திரெண்டு தாய். கோடிக்கணக்கான குழந்தைகள். திருவையாறின் பிரசன்ன வீதிகளில் தியாகையரின் தம்புரா அதிர்கிறது. காவேரியில் உதிர்ந்த நாகலிங்க மலர்கள் உயிர்த்துப் பறக்கின்றன. சியாமா சாஸ்திரியின் ஆலாபனை. முத்துச்சாமி தீட்சிதரின் ஸ்வரக்கட்டு. பனை ஓலைகளில் துளசிதாஸரின் எழுத்தாணி கீறி நகர்கிறது. சரளிவரிசை. ஹார்மோனியத்தின் கமகக் குழைவும் ஒரு காந்தர்வக் குரலுமாக…

ஸரிகம பா கம பா பா
கமபம நிதபம கம பக மகரிஸ
ஸா நித நீ தப தா பம பா பா
கம பத நித பம கமபக மக ரிஸ
ஸா ஸா நித நீநீதப தாதா பம பா பா
கமபத நிதபம கமபக மகரிஸ…

நான் மீண்டபோது எனக்கெதிரே நாற்காலி மட்டுமே இருந்தது. ஊதுபத்தியின் புகைவளையங்கள் சுழன்று திரிதிரியாய்ப் பிரிந்து மௌன ஆலாபனையாய்க் கலைந்தன.

‘ஸ்வரம் மாதா; லயம் பிதா

ஸ்வரமும் தாளமும் கூடிக் கூடிப் பிணைந்து, விலகி, ஸ்பரிசித்து.. தழுவி அணைத்து… துரித காலத்தில், விளம்பித காலத்தில் காற்றில்… காற்றுக்குள் நிகழும் கலவி. சூல் கொண்ட காற்று இசையாகிறது. மற்றதெல்லாம் உயிர்பிடிக்காது திரிதிரியாய்க் கலைகிற சப்தம். காற்றுதான் இசை. காற்றுதான் பிராணன். இசைதான் பிராணன். இசை கூடினால் தியானம். இசை கூடினால் ஞானம். ஜெபம் கோடி தியானம். தியானம் கோடி லயம். லயம் கொள். த்ருவம், மட்யம், ரூபகம், ஜம்பம், த்ருபுடம், அட, ஏகம் என ஏழு ராஜகுமாரர்கள். ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு தேவ கன்னிகைகள். ஏழு ராஜகுமாரர்களின் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு லயத்தில் குதித்து வருகின்றன. த்ருதம், அணுக்ருதம், லகு, புலுதம், காகபாதம் என சப்தக் கோவைகள். வண்ண வண்ணமாய் தொடுக்கப்பட்ட அட்சர மாலைகள். தக்கத்திமி தக்கத்திமி திமி திமியென.. காற்றின் புலனாகாத அரூப வெளியில் ராஜகுமாரர்களும் தேவகன்னியரும் மாலை சூழ சுயம்வரம் கொண்டு சூடித் திளைக்கிறார்கள்.

ஸ்வரம் மாதா; லயம் பிதா

கேட்பவை எல்லாம் ஸ்வரம்.. கேட்பவை எல்லாம் லயம். மேற்கூரையில் மழை பெய்கிறது. சட்டச் சட சட்டச்சட வென. திருபுட தாளம். பெய்து களைத்த மழை தாழ்வாரச் சருக்கத்தில் துளித்துளியாய்ச் சொட்டுகிறது ஏக தாளம். குழந்தை முனகுகிறது. மந்த்ர ஸ்தாயியில் கமகம். வீறிட்டு அலறுகிறது. தாரஸ்தாயி சஞ்சாரம். மணலைக் கயிறாய்த் திரிக்கிற மாதிரி காற்றை இசையாய் நெய்கிற ரச மந்திரம், சித்த மந்திரம். காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன். இயற்ற முடிந்தால் அதுதான் ஞானம். காற்றைக் கேள். கேட்கத் துவங்கு.’

காற்று முகத்தில் விசிற பேருந்தின் சன்னலோரம் அமர்ந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். காற்றிலும் இது பனிக்காற்று. பண்டிட்டைச் சந்தித்ததில் இருந்து என் சுவரில் இறுகியிருந்த சன்னல்கள் எல்லாம் தாமாகத் திறந்து கொள்வதாக உணர்ந்தேன். எனக்கான கிழமைகள் இசையென அதிர்ந்து அடங்குகையில் வியாழன் வந்திருந்தது.

சந்தன ஊதுபத்தியின் வாசனை ஈஸ்ட்டில் முகிழ்த்த மென் ரொட்டிகள் ஓவனில் முறுகும் வாசனை. ஹார்மனி இசைப்பள்ளி.

‘வணக்கம்.’

தன் ஹார்மோனியத்தின் முன் அமர்ந்து இசைக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த ஹசன்பண்டிட் நிமிர்ந்தார்.

‘உட்காருங்க.. ஒரு நிமிஷம்’ ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளில் ஐந்து விரல்களையும் விரித்து, சப்தம் வராமல் தொட்டுத் தொட்டுக் குறிப்புகள் எழுதிக் கொண்டு இருந்தார். அவர் தலைக்குப் பின்னால் மஞ்சள் சட்டமிட்ட மும்மூர்த்திகளின் படம் தொங்கிக் கொண்டிருந்தது.

‘போன வகுப்புல நடத்துன பாடத்தைப் படிச்சுப் பார்த்தீங்களா..’

‘படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.’

‘க’ங்கற ஸ்வரத்தோட பெயர் சொல்லுங்க’

‘காந்தாரம்’

‘நல்லது. ஸரளி வரிசைல பயிற்சி கொடுத்திருந்தேன். பாடம் பண்ணிட்டீங்களா’

‘இன்னும் பண்ணலை..’

‘ஏன்… பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லையா’

என்னிடம் ஹார்மோனியம் இல்லை என்பதை அவரிடம் சொன்னேன்.

‘அதனாலென்ன.. ஒண்ணு வாங்கிடுங்க. பெட்டி கையில இருந்தா சாதகம் பண்ண வசதியா இருக்கும். போகப் போக பாடங்கள் நிறையாப் போயிடும். கீ போர்டு கூட பெறகு வாங்கிக்கலாம். முதல்ல ஒரு பெட்டி பழசா இருந்தாக்கூட பாத்து வாங்கிடுங்க.’

வேலையில்லாமல் வகுப்புக்கு வருவதே சிரமமான நிலையில் பெட்டி வாங்க முடியுமென்று எனக்குத் தோணவில்லை.

’சங்கீதத்தை ‘ஹராம்’னு குரான்ல சொல்லியிருக்கும். அதனால எங்க வீட்ல என்னைய சங்கீதம் கத்துக்க விடல. அப்ப பத்தொன்பது வயசு எனக்கு. சீனிவாஸ சாஸ்திரின்னு ஒரு பண்டிதர். மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்தார். அவருக்கு சகல பணிவிடையும் செஞ்சு கத்துக்கிட்டேன். ஏன் சொல்றேன்னா.. மனசு இருந்தா மார்க்கம் உண்டு. ஞானத்தைக் கொடுத்தவன் அதுக்கான கருவியை ஒளிப்பானோ? எல்லாம் கெடைக்கும்’

அன்று மாயாமாளவ ராகத்தில் ஸரளிவரிசையின் மீதமுள்ள பாடத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டேன். அவரது ஹார்மோனியத்தை என் பக்கம் திருப்பி வாசிக்கச் சொன்னார்.

‘இது ஸட்ஜமம். ஸட்ஜமத்துக்கு கட்டைவிரல். இடது கையில் பெல்லோஸ் போட வேண்டும். இதிலிருந்து எழும்புகிற காற்று ஹார்மோனியத்தின் உள்ளறைகள்ல போய்த் தங்குது. நாம ஒரு கட்டைய அழுத்தும்போது, உள்ள அடைபட்ட காற்று துளையின் வழியே வெளியேறும். அப்படி வெளியேறும்போது அந்தத் துளையில் இருக்கிற ரீடு, நாக்கு மாதிரி இருக்கும். அது அதிரும். அதுதான் நாதம். எங்க… ஸட்ஜமம் வாசிங்க’

இடது கை பெல்லோஸ் அழுத்த, பதட்டத்துடன் கட்டைவிரலால் ஸட்ஜமம் தொட்டேன். புதரிலிருந்து சாம்பல் குருவிகள் விடுபட்டுப் பறப்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு. அடுத்து சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம் என ஒவ்வொரு விரலாக அழுந்த ஹார்மோனியம் விதவிதமான தொனியில் என்னுடன் பேச முயல்கிறது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்ல?

‘சப்தங்கள் எல்லாம் ஸ்வரம். ஏற்கனவே சொல்லியிருக்கேன். உலகத்தின் சப்தங்கள் எல்லாம் ஏழு ஸ்வரத்தில் அடக்கம்.’ அருகிலிருந்த டீ கிளாஸை ‘ணங்’கென்று மேடையில் வைத்தார். ‘இது ஒரு ஸ்வரம்’ காற்றில் சன்னலின் திரைச் சீலைகள் சரசரத்தன. ‘இதுவும் இசை’.

பேருந்தில் ஊருக்குத் திரும்பும்போது மழை பெய்தது. மழை எத்தனை பெரிய இசைக்கருவி. எத்தனை தந்திகள் கொண்ட வயலின். சதா சுழன்று கொண்டே இருக்கும் பூமி எத்தனை பெரிய இசைத்தட்டு. குளத்து நீரில் நிலா வெளிச்சம் வீணைத் தந்தியாய் நலுங்குகிறது. அதனதன் இசை. எனக்கு பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் காதுகளுக்கான உலகம். காற்றைக் கேள். இதுதான் சப்தங்களின் வாகனம். கேட்கத் துவங்கு.
திங்கள் – வியாழன், திங்கள் – வியாழன் என கிழமைகள் இசைபடக்கழிந்தன. இன்னும் ஹார்மோனியம் வாங்க முடியவில்லை. ஸரிகம ரிகஸரி என்று ஸ்வரங்கள் தாவித் தாவி நடனமிடும் தாட்டு வரிசை வந்துவிட்டது. என் கிழமையில் வகுப்புக்கு வரும் ஷங்கர கோடி, நேற்றுதான் பத்தாயிரம் ரூபாய்க்கு புது கீ-போர்டு வாங்கி வந்திருந்தார். அதில் கடல் அலைகளின் உறுமலையும், பின்னிரவில் எழும் சில்வண்டுகளின் ஓசையைக் கூட எழுப்ப முடிந்தது. ஆச்சர்யம் ஒரு புறம், இயலாமை ஒரு புறம். இசைக்கருவி இல்லாமல் வகுப்பை மேலும் தொடர்வது அயற்சியாக இருந்தது. மதுரை, கூலவாணிகன் தெருவில் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.

‘என்ன சார்… எப்படியிருக்கீங்க?’

’நல்லாயிருக்கேன் ஷாஜகான்…’

‘என்ன இந்தப்பக்கம்… ஏறுங்க வண்டில..’

வாகன வேகத்தில் புறந்தலையின் வியர்வை உலர்வது இதமாக இருந்தது. டவுன்ஹால் ரோட்டின் பழமுதிர்ச்சோலையில் ஆளுக்கொரு ஆப்பிள்சாறு.

’இப்ப… எங்க வொர்க் பண்றீங்க?’

‘வேலையில்ல ஷாஜகான். சும்மாதான் இருக்கேன்.’

’ஜோல்னாப் பையும் அதுவுமா மதுரையில என்ன பண்றீங்க’

‘மியூசிக் கிளாஸ். கீ போர்டு கத்துட்டிருக்கேன்.’  வேலையில்லாமல் மியூசிக் கற்றுக் கொள்வதைச் சொல்ல சற்றே குற்ற உணர்வாக இருந்தது.

‘ஓ.. இன்ட்ரஸ்டிங்… பாட்டெல்லாம் வாசிப்பியா’

‘இல்ல. இப்பதான் ஒரு மாசமா…’

‘எனக்கும் மியூசிக்ல இன்ட்ரஸ்ட். உனக்குத் தான் தெரியுமே. நானும் ஒரு பத்துநாள் மியூசிக் கிளாஸ் போனேன். அதோட சரி… எல்லாத்திலேயும் பாதிக்கிணறுதான். சரி… இன்ஸ்ட்ருமெண்ட் என்ன வச்சிருக்க..’

’இனிமேதான் வாங்கணும். பழையதா ஆர்மோனியம் தேடிட்டிருக்கேன்’

ஷாஜகான் சிரித்தார்.

‘சரி… வாங்க வீடு வரைக்கும் வந்துட்டுப் போகலாம்’

‘இல்ல ஷாஜகான் இன்னொருமுறை..’

’ஏறுங்க.. புதுவீடு கட்டிட்டு நீங்க வரவேயில்ல’

என்னை ஹாலில் அமர்த்திவிட்டு உள்ளே போனவர், வரும்போது சிறிய மரப்பெட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். ஹார்மோனியம் என்று பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. என் எதிரில் வைத்து மேலிருந்த தூசியைத் துடைத்தார். மரப் பலகையில் கீல் வைத்த மூடி இருந்தது. ஹார்மோனியப் பெட்டியின் மூடியைத் திறந்ததும், காவியேறிய பல்வரிசையுடன் பாகவதர் ஒருவர் சோகமாகச் சிரிப்பது போலிருந்தது. ரொம்பவும் பழமையானது. வெள்ளைக் கட்டைகளில் மைக்கா ஒட்டப்பட்டிருந்தது. அதன் முனைகள் உடைந்து நிறம் பழுப்பேறியிருந்தது. ஹார்மோனியத்தின் இருபுறமும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வெண்கலக் கைப்பிடி இருந்தது. முன்பக்கம், காற்றறைகளைத் திறந்து ஒலியின் அளவைக் கட்டுப் படுத்தும் இழுவைத் திறப்புகள் நான்கு இருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக நுனியில் வெள்ளைப் பளிங்குக் குமிழ்கள் பெரிய பொத்தானைப் போல இருந்தன. பார்த்த உடனேயே அது சிங்கிள்ரீட் பெட்டி எனத் தெரிந்தது. கீழே ஏதும் பழுதடைந்திருக்கிறதா என்று குழந்தையைப் போல இருகைகளாலும் தூக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது. கீழே வைக்கும்போதுதான் பார்த்தேன். இரண்டு பளிங்குக் குமிழ்களுக்கு இடையில் ஏதோ பெயர் பொறிக்கப் பட்டிருப்பதைப் பார்த்து, தூசியைக் கைகளால் துடைத்தேன். ‘எட்டுக்கட்டை முருகசிகாமணிப் பாகவதர், கண்டரமாணிக்கம்’ என்றிருந்தது.

ஹார்மோனியத்தின் மத்திம ஸ்தாயியில் வெள்ளை கறுப்பு நோட்டுகளின் மேலே ஸ்வரங்கள் எது என்று அறிய, அடையாளத்திற்காக ஸ,ரி,க,ம,ப,த,நி, என்று சிறிய சதுரமான காகிதத்தில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது. நல்ல தேக்கு மரத்தால் ஆன ஜெர்மன் ரீட் பெட்டி. பெல்லோஸ் காற்றுக் கசியாமல் கச்சிதமாய் இருந்தது.

‘ரொம்பப் பழைய பெட்டி. எல்லா நோட்டும் பேசுமா.’

’புரியல.’

’எல்லா கட்டையும் வாசிச்சா சத்தம் வருமா.. பழுது இருக்கான்னு’

‘வாசிச்சுப் பாரேன். நான் தொட்டே ரெண்டு வருஷம் ஆச்சு. எப்பவாவது எடுத்து துடைச்சு வச்சிடுவேன். ஒரு மாசமா அதுவும் இல்ல. பக்கத்துல வீடு எதுவும் இல்லையா. வாசிச்சா பாம்பு வரும்னு அம்மா இதைத் தொடவே விடறதில்ல. அப்படி என் இசையைக் கேட்டு பாம்பாவது வரட்டுமேன்னு மொட்டைமாடிக்கு தூக்கிட்டுப் போயி வாசிப்பேன். அந்த முருகசிகாமணி பாகவதர் ஒரு பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தாரு. அதுவும் இப்ப பாதி மறந்துபோச்சு’

ஷாஜகான் மனைவி கொடுத்த ஏலக்காய் தேநீரை அருந்தும்போது வலதுகையால் ஹார்மோனியத்தின் கட்டைகளை மெதுவாக வருடிப் பார்த்தேன். கட்டைகள் ஒன்றுக்கொன்று பிடிக்காமல் இலகுவாய்த்தான் இருந்தன.

‘சும்மா வாசிச்சுப் பாருப்பா. இங்கே குடு. நானே வாசிச்சுக் காட்டிர்ரேன்’ ஷாஜகான் அவர் பக்கம் திருப்பி, கீழ்ஸ்தாயியிலிருந்து ஒவ்வொரு கட்டையாக அழுத்திக் கொண்டே வந்தார். மணிமணியான ஸ்வரங்கள். கொஞ்சமும் பிசிறில்லாமல் காத்திரமாக இருந்தது.

‘சவுண்டு சும்மா ஏழு வீட்டுக்குக் கேக்கும். அந்த பாகவதர் தன்னோட சொத்துப் போல இதை வச்சிருந்தாரு. என் ஆர்வத்தைப் பாத்தாரு. அவருக்கு ஆஸ்த்மா. மாத்திரை வாங்கக்கூட காசில்ல. வறுமை. கடேசீல நீயே இதை வச்சுக்கன்னு கொடுத்திட்டாரு’

‘எவ்வளவுக்கு வாங்குனீங்க’

’அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா குடுக்கும்போது ஒண்ணு மட்டும் சொன்னாரு. இது நான் பழகுன பெட்டி என் தெய்வம். ஆசைப்பட்டுக் கேக்குறியேன்னு குடுக்கிறேன். நூலாம்படை மட்டும் அடையவிட்றாத. இது சரஸ்வதி. வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா. அவரு சொன்னதையே நான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தா, வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா’

அவர் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இருந்தது.

‘எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா.. ஒரு வாரத்துல..’

‘சரி நூறு ரூவா குடு. இசைக்கருவியை சும்மா குடுக்கக் கூடாது’

’இல்ல எவ்வளவுன்னு சொல்லுங்க..’

‘நான் வாங்குனதே அவ்வளவுக்குத்தான். போதுமா’

மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். தனக்குத் தெரிந்த ஒரே பாடலான ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’ என்கிற பாடலின் பல்லவியை மட்டும் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு சரளமில்லாமல் வாசித்துக் காண்பித்தார். நியூஸ் பேப்பர் போட்டு நைலான் கயிறால் கட்டி, கைகளால் தொட்டு வணங்கி, கழுத்து நிற்காத பச்சைக் குழந்தையை கையில் தருவது மாதிரி பதமாகத் தந்தார். நன்றி சொல்லி விடை பெற்று வெளியே வருகையில் நிலா வெளிச்சம் தார்ச்சாலைகளை மெழுகியிருந்தது. கையில் ஹார்மோனியத்தின் பாரம். நைலான் கயிறு அழுத்த கைமாற்றிக் கொண்டேன். இசைக் கருவியின் மௌனம் கனக்கிறது. தன்னை வாசிக்க விரல்கள் இல்லாமல் இருட்டறையில் இத்தனை ராகங்களோடும் இத்தனை ஸ்வரங்களோடும் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தியானம். வாசிக்கப்படாதபோது இசைக்கருவிகள் என்ன உணர்கின்றன?
எனக்குப் பிடித்தமான சன்னலோரப் பயணம். தூங்குகிற குழந்தையைப் போல அமைதியாக மடியிலிருக்க எனக்குள் ஏதோ பொறுப்புணர்வு கவிவதாக உணர்கிறேன். பாட்டியின் மந்திரக் கதைகளில் வரும் சொர்க்கபுரத்து இளவரனைத் திருமணம் செய்ய, தேவதைகள் காற்றும் எனும் பரத கணத்தோடு சேர்ந்து சூறாவளியாய் மாறித் துரத்துவது போல, முகத்தில் விசிறும் காற்று ‘என்னை இசையாக மாற்று’ என்று என்னையும் எனது ஹார்மோனியத்தையும் பயண வேகத்தோடு துரத்திக் கொண்டே வருவதுபோல் இருந்தது.

வீட்டுக்குள் ஹார்மோனியத்தைத் தூக்கி வந்தபோது எல்லோரும் விநோதமாகப் பார்த்தனர். ஹாலின் மையத்தில் வைத்து சுற்றியிருந்த காகிதத்தைப் பிரித்தேன். ஹார்மோனியத்தின் வருகை யாருக்கும் சந்தோஷத்தையோ, துக்கத்தையோ தரவில்லை. தொட்டு வணங்கிவிட்டு ஸரளிவரிசை வாசிக்கலாம் என யோசித்தேன். சின்ன வீடு. இந்த இரவு நேரத்தில், வேலையில்லாத இளைஞன் நடுவீட்டில் அமர்ந்து ஹார்மோனியம் பழகுவது யாருக்குப் பிடிக்கும். தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.
நாளை பௌர்ணமி. வெளிச்சம் இதமாக இருந்தது. அடுத்த இசை வகுப்புக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. ஹார்மோனியத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டேன். கீழ்ஸ்தாயியின் ஸட்ஜமத்தைத் தொட்டேன். இருட்டறையில் நெடுநாள் பூட்டியிருந்த கதவு திறப்பது போலிருந்தது. நடுவிரலால் பஞ்சமம். சுண்டு விரலால் மத்திமஸ்தாயி ஸட்ஜமம். மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து.. பூவைச் சுற்றும் கதம்ப வண்டு மாதிரி காற்றின் அரூப அடுக்குகளில் இருந்த ஸ்வரங்கள் ஹார்மோனியத்தைச் சுற்றி மொய்க்கின்றன. குரல் சேர்த்துப் பாடி சுதி சேர்த்துப் பார்த்தேன். சுதியோடு ஒட்டாது கலைந்த குரல், பிசிறு தேய்ந்து தேய்ந்து சுதி சேரும் கணத்தில்… மின்சாரம்.. சட்டென வீசிய காற்றில் என் உடல் சாம்பல் குவியலெனக் கலைந்து, குரல் மட்டும் நானாக மிஞ்சுகிறது. பிறகு குரலும் என்னுடையதில்லாமல் போக வெறும் ஸ்வரங்கள் அந்தரத்தில் இசை கூட்டிக் கொண்டு அதிர்கின்றன. ஸா பா ஸா.

தயங்கித் தயங்கி ஸரளி வரிசை. சவுக்க காலம், விளம்பியதம், துரித காலங்கள். ஜண்டை வரிசை. ஸ்வரங்களின் அடுக்கு. ஒன்றின் நிழலாய் அதே ஸ்வரம். விரல்கள் தளர்ந்து ஓர் இலகு கூடி வருகிறது. பூர்வாங்கத்தில் முன்னேறிப் பதுங்கி, உத்தராங்கத்தில் தாவி ஒரு ஸ்வரம் தொட்டு ஆரோகணித்து காற்றில் துவளும் துணியென மெதுவாய் அவரோகணம். ஸட்ஜமத்தில் இளைப்பாறி மேல்ஸ்தாயி வரிசை. தாட்டு வரிசை. ஸ்வரங்கள் துரித கதியில் பின்னிப் பின்னி பூத்தொடுக்கும் விரல்களின் அனிச்சை கொண்டு, ஹார்மோனியத்தின் கட்டைகளும் விரல்களும் ரகசியம் பேசி, குழைந்து, விலகிச் சீண்டி, கமகமெனத் தடவி ஸ்வரங்கள் அலைந்து மெது மெதுவாய் எழும்பி நுரைத்துப் பின்வாங்கி அலைகொண்டு எழும்பி அடித்துச் சிதறியது. பாற்கடல். ஹார்மோனியம் மிதக்கிறது. கால்கள் கடற்கன்னியின் செதில்களெனக் குழைய நான் நீந்துகிறேன். மொட்டை மாடியில் தங்க நிற மீன்கள் என் முகம் உரசி இடம் வலமாய் நீந்துகின்றன. சமுத்திரம் கொள்ளாத இன்னொரு அலை. ஹார்மனி இசைப்பள்ளியின் சாத்திய ஊதா நிறக் கதவில் அலைமோதி தண்ணீர் பொரிகளாய்ச் சிதறி விழுகிறது. கதவைத் திறந்தால் பாலைவனம். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மணல். புழுதிக் காற்று முகத்தில் அறைகிறது. எங்கோ தொலைவிலிருந்து அரபி மொழிப் பிரார்த்தனைப் பாடல் மிதக்கிறது. மணல்வெளியெங்கும் அலை அலையாகப் பாம்புகள் ஊர்ந்த தடமென காற்றின் சுவடுகள். காற்று கானலென நெளிகிறது. வெளியிலும், மணலிலும் காற்றின் லிபிகள். சற்றே தொலைவில் இரண்டு ஹார்மோனியங்கள் இருக்கின்றன -

துகள் துகளாக மணல் விசிறுகிறது. மணலுக்குள் கை புதைத்துக் கொண்டு ஹசன் பண்டிட் என்ன செய்கிறார். காற்று விசிற விசிற புதைந்த மணலிலிருந்து மீள்கிறது அவரது ஹார்மோனியம். அவரது விரல்கள் வாசித்துக் கொண்டே இருக்கின்றன.

‘பண்டிட் ஐயா… தீபக் என்ற தான்சேனின் ராகத்தை தாங்கள் வாசிக்க முடியுமா?’ ஹசன் பண்டிட்டின் விரல்கள் நின்று தயங்கின. பிறகு விரல்கள் காற்றில் தாமாக ஒத்திகையென அசைந்து பார்த்த கணத்தில் ஹசன் பண்டிட் வாசிக்கத் துவங்கினார். வாசிக்க வாசிக்க.. பஞ்சமத்தின் கட்டையிலிருந்து துளிர் நெருப்புப் பற்றுகிறது. எரியத் துவங்குகிறது ஹார்மோனியம். காற்று சிலிர்க்கிறது. பண்டிட்டின் விரல்கள் மெழுகுதிரி போல் பற்றிக் கொள்கின்றன. ஹார்மோனியம் முழுதும் எரிந்துவிடுமுன் அதன் ஸ்வரக் கட்டைகளைப் பிடுங்கி எடுக்கிறேன். புகை வளையங்கள் பெரிது பெரிதாய்ச் சூழ்ந்து மறைக்கின்றன. மணல் குன்றுகளில் கால் சறுக்க ஓடுகிறேன். கையில் இறுக்கிப் பிடித்திருந்த ஸ்வரக் கட்டைகள் உருவி விழ என்னிடம் ஒரே ஒரு வெள்ளைக் கட்டை மட்டும் இருக்கிறது. அதன் மேல் சிறிய சதுரமான காகிதத்தில் ‘க’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.

’ஒரு ஸ்வரத்தால் ராகம் இயற்ற முடியுமா பண்டிட்ஜி… அதுவும் என்னிடம் இருப்பது அந்தர காந்தாரம் மட்டும். முடியுமா பண்டிட்ஜி.’ பாலைவனம். முழுக்க நெளியும் பாம்புத் தடங்களுக்குள் என் பதட்டமான காற்சுவடுகளும் ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளும் இறைந்து கிடக்கின்றன.
பச்சை ரெக்ஸின் போர்த்தி ஒரு உருவம் படுத்திருக்கிறது. எழுப்பினேன். ஜடைமுடி வளர்த்த பாகவதர்.

‘ஐயா.. என்னிடம் அந்தரகாந்தாரம் மட்டும் வாசிக்கக்கூடிய ஸ்வரக்கட்டை இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு ஹார்மோனியம் தர முடியுமா?’

‘தருவேன்..’

பச்சை ரெக்ஸினை முழுவதுமாக விலக்கியதும், உள்ளங்கையில் வைக்கும் அளவுக்கு தந்தத்தால் ஆன வெண்மையான குட்டி ஹார்மோனியம் இருந்தது.

‘இது ஆலங்கட்டி மழையோடு சேர்ந்து வானத்திலிருந்து தவறி விழுந்தது. உனக்கு வேண்டுமா?’
‘வேண்டும். ஆனால் ரொம்பவும் சிறிதாக இருக்கிறதே’

‘நீ வாசிக்க வாசிக்கப் பெரிதாகும். தருகிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று தர வேண்டும்’

‘என்ன..?’

‘உன் கையில் உள்ள பத்துவிரல்களையும் தர வேண்டும்’ சொன்னவனின் கைகள் இரண்டு கட்டைகளின் முனையைப் போல விரல்களற்றுத் தீய்ந்திருந்தன. முன் புஜத்தில் முருகேசபாகவதர் என்று பச்சை குத்தியிருந்தது.

பண்டிட்ஜி என்று கத்திக் கொண்டே கானல் நீருக்குள் ஓடத் துவங்கினேன். கால்கள் பதியும் புதைமணல். எதிரே பச்சை நிறத்தில் அலைகள். சுழித்துக் கொண்டு ஆக்ரோஷத்துடன் பாலைவனத்தைக் கடல் கொள்ள வருகிறது அலை. மணற்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. என் கையில் உள்ள ஸ்வரக்கட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அலறுகிறேன். அலை முகத்தில் அடித்துச் சிதற பிறகு எல்லாம் கடல். கடற்குதிரைகளுடன் நீந்துகிறேன். என்னிடமிருந்த ஸ்வரக்கட்டை மீனாக மாறிப் பிடியிலிருந்த நழுவுகிறது. சமுத்ரத்தின் நீலப் பச்சை வெளியிலிருந்து குமிழிகள் பறக்க ஒரு ஹார்மோனியம் மிதந்து வருகிறது. இடது கையால் ஹார்மோனியத்தைப் பற்றி அணைத்துக் கொண்டு வலது கையால் வாசித்துக் கொண்டே வெளிச்சம் புகாத கடலின் அடி ஆழத்தில் நீந்திச் செல்கிறேன். நீரில் ஆழ்ந்த மலைத்தொடர்ச்சிகளின் படர்ந்த உப்புப்பாறைகளின் மேலே வரிவரியாய் மேற்கத்திய இசைக்குறிப்புகள். சுரங்கத் தொழிலாளி போல நெற்றியில் விளக்கைக் கட்டிக் கொண்டு உப்புப் பாறைகளின் மேல் இசைக்குறிப்புகளை ஹசன் பண்டிட் வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘இன்று திங்கட்கிழமை பண்டிட்ஜி’

‘அதனாலென்ன… இது புதைந்த நகரங்களுக்கான இசை வகுப்பு’

நீந்துவதான பாவனையில் கால்கள் உதறி விழிக்கையில், கடல் வற்றிப் போய் தரைதட்டி எழுந்தது மாதிரியான உணர்வு. பனிவிழும் மொட்டைமாடியின் சிமிண்ட் தரையில் படுத்திருந்தேன். சமுத்ரமாய் அலைந்த நீர் எதிரே கண்ணாடி டம்ளரில் சலனமில்லாமல் இருந்தது.

கீழே வீட்டில், எல்லோரும் தூங்கியிருந்தார்கள். அயற்சியாக இருந்தது. எனக்கென அடுப்படியில் மூடி வைக்கப்பட்டிருந்தது இரவுக்கான உணவு.

காலையில் திரும்பவும் தாட்டு வரிசை வாசித்துப் பார்க்க வேண்டும். ஹார்மோனியத்தின் வெள்ளைக் கட்டைகளில் நாள்பட்ட தூசு படிந்து அழுக்கேறிப் போயிருக்கிறது. திருகாணிகள் எல்லாம் துருவேறியிருக்கின்ற பெல்லோஸ் கொஞ்சம் துடைத்துச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

காலையில் ஹார்மோனியத்தைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். முத்துவிநாயகம் வந்திருந்தான்.

’என்னப்பா பாகவதர் ஆகப் போறியா? இதெல்லாம் வீட்ல இருந்தாலே தரித்திரம்’

அவனை நான் பொருட்படுத்தாது என் அன்பிற்குரிய ஹார்மோனியத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒரு திருப்புளி, பழைய துணி, சின்னக்குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். தூசியைத் துடைத்ததும் துணியைத் தண்ணீரில் நனைத்து வெள்ளைக் கட்டைகளைத் துடைத்தேன். விரல் படாமல் குருட்டு அழுக்கு ஏறிப்போய் இருந்தது. திட்டுத் திட்டாய் கறை படிந்தது போல அழுக்கு. என்ன துடைத்தாலும் அப்படியே இருந்தது. துருப்பிடித்து இறுகிப் போன திருகாணிகளைக் கஷ்டப்பட்டுக் கழற்றினேன். ஸ்வரக் கட்டைகளின் மேலே அழுத்திக் கொண்டிருந்த மரச்சட்டதைக் கழற்றினேன். இப்போது ஸ்வரக் கட்டைகளை கழற்றுவது எளிதாக இருந்தது. அவற்றின் கீழே சிலந்தி இழைகளும், தூசியும், எள்ளுப் போன்ற எச்சங்களும் இருந்தன. வாயால் ஊதிப் பார்த்துத் துடைத்தும் தூசி போகவில்லை. ஹார்மோனியத்தில் இருந்த கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அனைத்தையும் வரிசைப்படி தரையில் அடுக்கி வைத்தேன். தரையில் அந்த வரிசை அழகாக இருந்தது. உள்ளிருந்த பித்தளை ரீடுகளில் Made in German என்று பொடியான எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சின்னதிலிருந்து துவங்கி பெரிது பெரிதாக ரீடுகள் அழகாக அறையப்பட்டிருந்தன. அஞ்சறைப் பெட்டியைப் போலிருந்த ஹார்மோனியத்திலிருந்து ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் குமிழ்களை இழுத்து மெதுவாகக் கழற்றினேன். கம்பி மிகவும் துருவேறிப் போய் இருந்ததால் இழுப்பது சிரமமாக இருந்தது. ஹார்மோனியத்தின் உள் அறையில் இரண்டு அந்துப் பூச்சிகள் வெளிறிப் போய் உயிரோடிருந்தன. முருகேச பாகவதரின் காத்திரமான இசைகேட்டு இவை வளர்ந்திருக்கலாம் அல்லது அவரது இசையின் அதிர்வில் உயிர்பிடித்து மிஞ்சிய ராகங்களாக இருக்கலாம். எதுவாயினும் ஹார்மோனியத்தின் உள்தட்டு அறையின் இருட்டுக்குள் இசையுடன் காதல் கொண்டு வாழ்வது எவ்வளவு அற்புதமானது. லேசாகப் பக்கவாட்டில் தட்டியதும்… மறைந்த இசை குறித்து நீண்ட கனவில் இருந்த இரண்டு அந்துப் பூச்சிகளும் வெளிச்சம் பொறுக்காது வெளியேறி ஓடின.

காற்றுத் துருத்திகளின் உள்ளேயிருந்த தூசியினைத் துடைத்தேன். ஹார்மோனியம் இப்போது ஸ்வரக் கட்டைகள், குமிழ்கள், திருகாணிகள், மரச்சட்டங்கள் எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. 

ஹார்மோனியத்தின் வெளிப்புறமும், உட்புறமும் மரப்பலகையின் தன்மையை இழந்து நிறம் வெளிறிப் போயிருந்தது. ஸ்வரக் கட்டைகள் திரும்பவும் வெற்றிலைக் காவியேறின பல்வரிசையை நினைவுபடுத்தின. அந்த நிறமே வெறுக்கத் தக்கதாக இருந்தது.

அப்போதுதான் திடீரென எனக்கு அந்த யோசனை வந்தது. புதிதாக மாற்ற பெயிண்ட் அடித்தால் என்ன?

ஐம்பது மி.லி. ஆசியன் வெள்ளை, கறுப்பு வண்ணமும் வார்னிஷும், கடைக்காரரின் ஆலோசனைப்படி மென்மையான உப்புத்தாளும் சின்னதாக தூரிகையும் வாங்கிக் கொண்டேன்.

ஸவரக் கட்டைகளை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்து வரிசைப்படி அடுக்கி கிரமம் மாறாமல் இருக்க அவற்றின் பின்புறம் பென்சிலால் எண்கள் குறித்துக்கொண்டு, அக்கா எனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடுவது மாதிரி இதமாக கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கு வண்ணம் பூசினேன். 

ஹார்மோனியப் பெட்டிக்கு வார்னிஷ் அடித்து நிழலில் காய வைத்தேன். திருகாணிகள் புதிதாக வாங்கி விட்டேன். எல்லாம் முடிக்க பதினோரு மணியாகி விட்டது. இன்று திங்கட்கிழமை. மாலை இசை வகுப்பு. இன்று இசைவகுப்புக்கு எடுத்துப் போய் ஹசன் பண்டிட்டிடம் என் புது ஹார்மோனியத்தில் ஸரளி வரிசை வாசித்துக் காட்ட வேண்டும்.

மதியம் மூன்று மணியளவில் ஸ்வரக் கட்டைகள் உலர்ந்திருந்தன. ஹார்மோனியம், வார்னிஷ் அடித்ததும் தனது மர வண்ணத்துக்குத் திரும்பி அழகாய் இருந்தது. இழுப்புக் குமிழிகளைப் பொருத்தி, ஸ்வரக் கட்டைகளை வரிசைப்படி அடுக்கினேன். அடுக்க, அடுக்க மெருகு கூடிக் கொண்டே வந்தது. ஹார்மோனியம் புத்தம் புதிதாகி விட்டது. என்ன அழகாய் இருக்கிறது. ஒருமுறை கீழிருந்து உச்சஸ்ஹாயி வரை ஆரோஹணம், அவரோஹணம் போய்த் திரும்பலாம் போல இருந்தது. கட்டைகளைத் தொடுவதே, மெதுரொட்டியைத் தொடுவது போல் இதமாக இருந்தது. மணி ஐந்தாகிவிட்டது. எப்போதும் மூன்றரை மணிக்கே மதுரைக்குக் கிளம்பி விடுவேன். அவசர அவசரமாக திருகாணிகளைப் பொருத்தினேன். வாசிக்கவும் இப்போது நேரமில்லை. முதன் முதலில்… ஹசன் பண்டிட்டின் ஆசீர்வாதம் பெற்று அவர் முன்னிலையில் வாசித்துக் காட்டுவதுதான் சாங்கியமானது என்று மனதுக்குள் பட்டது. அவரும் சந்தோஷப்படுவார்.

ஆங்கிலத் தினசரியில், ஹார்மோனியத்தைச் சுற்றி நைலான் கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு மதுரைப் பேருந்தில் ஏறினேன்.

ஹசன் பண்டிட்டின் அறைக்கு வரும்போது மணி ஏழாகி விட்டது. அவர் இசை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தின் நகல் பிரதியை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, புத்தகத்தை மூடிவிட்டுப் புன்னகைத்தார்.

அறையில் மென் ரொட்டிகளின் வாசனையும் ஊதுபத்தியின் சந்தன வாசனையுமாக ரம்மியமாக இருந்தது.

என் தாமதம் குறித்து அவர் கேட்கத் துவங்குமுன், நண்பர் ஒருவரிடமிருந்து ஹார்மோனியம் வாங்கி விட்டேன் என்று சந்தோஷம் பொங்கச் சொன்னேன். நைலான் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்க ஹசன் பண்டிட் உதவினார். நான் மூடியிருந்த தாள்களைப் பிரித்தேன்.

‘ஜெர்மன் ரீடு பெட்டி. ரொம்பப் பழசா இருந்துச்சு.. அதான்’

ஹசன் பண்டிட் புரிந்து கொண்டு சிரித்தார். நான் அவரது ஆசீர்வாதம் கோரினேன். ஸ்வரங்களைக் குறிக்கும் கறுப்பு விரல்களால் ஹசன் பண்டிட் என் தலையைத் தொட்டார்.

’சார்… உங்களுக்குப் போன்’ கீழே மேன்ஷன் மேலாளரிடமிருந்து அழைப்பு வர ‘வாசிங்க வந்துர்ரேன்’ என்று சொல்லிவிட்டு ஹசன் பண்டிட் படிக்கட்டுகள் நோக்கி நடந்தார்.

எதிரே இருக்கும் மும்மூர்த்திகளின் படத்தைப் பார்த்தேன். இசை தவழும் அறையின் தியானத் தன்மையை மனதில் நினைந்து கண்கள் மூடி வணங்கினேன். ஹார்மோனியத்தைத் தொட்டு வணங்கிவிட்டு இடது கையால் பெல்லோஸ் அழுத்தி வலது கை கட்டை விரலால் மத்திமஸ்தாயியின் ஸட்ஜமம் தொட்டேன். சப்தமே இல்லை. பெல்லோஸ் கொஞ்சம் அழுத்திப் போட்டு ஸட்ஜமத்தோடு நடுவிரலால் பஞ்சமத்தையும் சுண்டு விரலால் மேல் ஸட்ஜமத்தையும் சேர்த்து அழுத்தினேன். ஸ்வரங்கள் ஊமையாய் இருந்தன. ஒலிக்கவே இல்லை. பதட்டத்தோடு பெல்லோஸை வேகவேகமாக அழுத்தி சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம் வாசிக்க… மாயமாளவ கௌளைக்குப் பதில் புஸ்புஸ் என்று காற்றுதான் வந்தது. பெல்லோஸை இன்னும் லாவகமாக அழுத்தி கீழ்ஸ்தாயி, உச்சஸ்தாயி என்று மேலும் கீழும் உள்ள கறுப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தினேன். ஸ்வரங்கள் பேசவே இல்லை. கொஞ்சங்கூட ஒலி எழவில்லை. என் ஹார்மோனியமே எங்கே உன் மணிமணியான காத்திரமான ஸ்வரங்கள். ஆஸ்துமாவில், மரணப்படுக்கையில் கிடக்கும் முருகசிகாமணிப் பாகவதரின் கடைசி மூச்சு போல ஹார்மோனியத்திலிருந்து காற்றுதான் வந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. ஊதுபத்தியின் புகை வளையம் சுழித்துப் பெரிதாகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.


- செப்டம்பர் 2002, கணையாழி

நன்றி - பண்புடன் குழுமம்

காலத்தின் விளிம்பில் - பாவண்ணன்

“பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்தி வந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான காரணமும் இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப் பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

பதினோராவது வாரத்துக்கான கட்டுரையை எழுதி முடித்ததும் அனுப்புவதற்காக மின் அஞ்சல் பக்கத்தைத் திருப்பியபோது எனக்கொரு மடல் வந்திருக்கும் செய்தியை அறிந்தேன். முதலில் திரையில் புலப்பட்ட ஒற்றைவரி முகவரியை வைத்து எழுதியவர் யாராக இருக்கும் என்று ஊகிக்க முயற்சி செய்தேன். என் மனத்தில் வழக்கமாக எனக்கு மடலெழுதும் நண்பர்களின் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் பளிச்சிட்டு மறைந்தன. கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவித ஆர்வம் உந்த அந்த மடலைத் திறந்தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தது அக்கடிதம். பல ஆண்டுகளாக இலக்கிய அறிமுகம் உள்ளவராகத் தெரிந்தார். தொடராக வந்திருந்த பத்துக் கட்டுரைகளைப்பற்றியும் சிற்சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அம்மடல் பொதுவாக என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது. நன்றியைத் தெரிவித்து அவருக்குப் பதில் அனுப்பினேன்.

அவர் பெயர் சந்திரன். எங்கள் நட்பு இப்படித்தான் தொடங்கியது. பிறகு கட்டுரை வெளியானதும் ஒவ்வொரு வாரமும் அவரிடமிருந்து அஞ்சல் தவறாமல் வரத் தொடங்கியது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதாகத் தெரிவித்திருந்தார் அவர். ஒவ்வொரு அஞ்சலிலும் தினசரி வாழ்வில் தாம் கண்ட விசேஷமான செய்தியொன்றை எழுதி அனுப்புவார். இருசக்கர வாகனத்தில் சென்று அவசரத்தில் தடுமாறி மரத்தில் மோதிக் கால் உடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கிதார் வாசிக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றிய குறிப்பை ஒரு மடலில் எழுதியிருந்தார். ஒரு பூங்காவில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து தன் சேமிப்புப் பையிலிருந்து ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆனந்தமாகத் தின்ற பிச்சைக்காரன் ஒருவனைப் பற்றி ஒருமுறை எழுதியிருந்தார். தன் வீட்டைப் பற்றியும் சுற்றுப் புறத்தைப்பற்றியும் சொற்சித்திரங்களாகவே தீட்டியிருந்தார். வீட்டுக்கு அருகிலிருந்த விலங்குக்காட்சிச் சாலையைப் பற்றி அவர் எழுதிய தகவல்கள் ஏராளமானவை. ஒவ்வொரு விலங்கின் கூண்டுக்கும் அவர் பெயர் சூட்டியிருந்த விதம் விசித்திரமானது. சிங்கத்தின் கூண்டுக்கு ”இடியோசையின் இல்லம்”. சிறுத்தையின் கூண்டுக்கு “வேகத்தைத் துறந்த விவேகியின் வீடு”. பஞ்சவர்ணக்கிளிகளின் கூண்டுகளுக்கு “பறவைகளின் இசைக்கோயில்”.

“பெங்களூர் நகரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் ஹுடி என்னும் கிராமத்தில் “ஆஷ்ரயா” என்கிற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தைத் தெரியுமா?” என்று ஒரு முறை கேட்டிருந்தார் சந்திரன். அச்சமயத்தில் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிற உள்ளூர் நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினேன். பலருக்கு அதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவர் மட்டும் அது ஒரு முதியோர் இல்லமென்றும் சேவை மனப்பான்மை கொண்ட சிலரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார். திருமணமாகாத தன் சகோதரிகள் இருவரும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்கிற முதியோர்களுடன் பேசியும் பழகியும் அவர்கள் தேவையை நிறைவேற்றியும் ஊக்கமூட்டியும் வருவதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் சொன்னார். அந்தத் தகவலை அன்று இரவே நான் சந்திரனுக்கு அனுப்பினேன். அதற்கப்புறம் இரண்டு மாதங்கள் அதைப்பற்றிய பேச்சே இல்லை.  ஒருநாள் திடீரென்று தன் பெரியம்மா அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன் சார்பில் அவரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் ஓய்வு நாளுக்காகக் காத்திருந்த இடைவெளியில் அவரிடமிருந்து விரிவான மடலொன்று வந்தது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் தனக்கு ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்தது என்று தன் மடலைத் தொடங்கியிருந்தார் சந்திரன். தாயார் மட்டுமே அவருக்கு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் தனியாகவே வாழ்ந்தார் சந்திரன். பிறகு இந்தியாவுக்குத் திரும்பி தாயாரையும் தன்னோடு அழைத்துச் சென்றார். தாயாருக்குப் பிரியமான சகோதரி ஊரில் இருந்தார். ஏழைக் குடும்பம். ஆறு பிள்ளைகள். முடிந்தவரை பெரியம்மாவின் குடும்பத்தையும் தாங்கியே வந்தார் சந்திரன். ஆப்பிரிக்கப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். பேரப்பிள்ளைகளோடு ஆனந்தமாக ஆடிப் பொழுது போக்கிய அம்மா வெகுகாலம் உயிருடன் இல்லை. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்துபோனார். இடைக்காலத்தில் இந்தியாவில் பெரியம்மாவின் நிலையும் மோசமானது. ஆறு பிள்ளைகளும் ஆறு விதமாக வளர்ந்தார்கள். சந்திரன் அனுப்பிய பணத்தையெல்லாம் தாய்க்குத் தெரிந்து பாதியும் தெரியாமல் பாதியுமாக சாப்பிட்டுத் தீர்த்தார்கள். மூத்தவன் சதாகாலமும் குடிபோதையில் மிதந்தான். இரண்டாவது மகன் சம்பாதித்த பணத்தையெல்லாம் விபச்சாரத்தில் அழித்தான். மூன்றாவது மகனும் நான்காவது மகனும் உள்ளூரிலேயே திருட்டு வழக்கொன்றில் அகப்பட்டுச் சிறையிலிருந்து தப்பித்து மும்பைப் பக்கம் ஓடிப்போனார்கள். பள்ளியிறுதி முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்து ஊரையே மறந்து போனான் ஐந்தாவது மகன். ஆறாவது பையன் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தான். அலுவலகத்துக்கு எதிரே இருந்த ஆயத்த ஆடை அங்காடியில் வேலைபார்த்த ஒரு பெண்ணோடு பழகித் திருமணம் செய்துகொண்டான். மனைவியை உள்ளே அழைத்துக்கொண்டதும் பெரியம்மா வாசலுக்கு மாற்றப்பட்டார். மனமுடைந்த பெரியம்மா தன் துக்கத்தையெல்லாம் யாரோ ஒருவர் மூலம் கடிதமாக எழுதிச் சந்திரனுக்கு அனுப்பினார். பெரியம்மாவின் துயரம் தன் அம்மாவின் துயரமாகத் தெரிந்தது சந்திரனுக்கு - இணையத் தளங்களில் தேடித்தேடி பெங்களூருக்கு அருகே ஹுடியில் தங்கும் ஆஷ்ரயா இல்லத்தின் முகவரியைக் கண்டறிந்து அங்கே சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை வேறொரு நண்பர் மூலம் செய்துமுடித்தார். ஒருவருடன் ஓடிவிட்டது. மாதத் தவணைகளை அங்கிருந்தபடியே நேரிடையாகச் செலுத்திவந்தார். சமீபகாலத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கனவுகள் அவரைப் பாடாய்ப்படுத்திவந்தன. விலங்குக்காட்சி சாலையில் நின்றிருந்தபோது அக்கூண்டுகளையும் முதியோர் இல்லங்களையும் சம்பந்தப்படுத்தி யோசித்த கணத்திலிருந்து அக்கனவு விரட்டத் தொடங்கிவிட்டது. பெரியம்மா பலவித விலங்குகளின் உருவத்துடன் ஒவ்வொரு  முறையும் கனவில் வந்து கம்பிகளைப் பிடித்தபடி ஏக்கத்துடன் முறைத்துப் பார்ப்பதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நினைத்தவுடன் விடுப்பெடுப்பது சாத்தியமாக இல்லை. அவர் சார்பில் இல்லத்துக்குச் சென்று அந்தப் பெரியம்மாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வரவேண்டும். இதுதான் அக்கடிதத்தின் சாரம்.

அடுத்த ஞாயிறு அன்று பேருந்துத்தடம் விசாரித்து அந்த இல்லத்துக்குக் கிளம்பினேன். மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருந்தது. இறுதியாக இறங்கிய நிறுத்தத்தின் அருகே ஓர் ஓலைக்குடிசை டீக்கடை மட்டும் காணப்பட்டது. ஒரே ஒரு சிகரெட் மட்டும் வாங்கிப் பற்றவைத்தபடி ஆசிரமத்தைப்பற்றி விசாரித்தேன். டீக்கடைக்காரப்பெண் குடிசைக்கு வெளியே வந்து தொலைவில் தோப்பைப் போலக் காணப்பட்ட ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி “அதுதான் இல்லம்” என்றாள்.

“அதுவரிக்கும் பஸ் போகாதா?”

“இல்லத்துக்கு இதுதான் ஸ்டாப். எல்லாரும் இங்க எறங்கித்தான் நடந்துபோவாங்க. நீங்க வெளியூரா?”

நான் வேடிக்கைக்காக “ஆமாம்” என்றேன்.

“வயசானவங்கள இங்க கொண்டாந்து உட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா போயிடறாங்க சார். கூழோ கஞ்சியோ ஒன்னா சேர்ந்து லட்சணமா குடிக்கறத உட்டுட்டு பணம்பணம்னு எதுக்குத்தான் சார் மக்கள் அலையறாங்களோ? காலம் ரொம்ப மாறிப்போச்சி சார்”.

”நல்லா கவனிச்சிக்கிடறாங்களா இங்க?”

“கவனிப்புக்கெல்லாம் எந்தக் கொறையுமில்ல சார். நூறுபேரு கவனிச்சிக்கிட்டாலும் பக்கத்துல பெத்த புள்ள இருந்து பாக்கற மாதிரி ஆவுமா, சொல்லுங்க.”

“அடிக்கடி நீங்க போவீங்களா?”

“காலையில அங்க பால்பாக்கெட் வாங்கிப்போயி குடுக்கறதெல்லாம் எங்க ஊட்டுக்காருதான். ஒங்க ஜனங்க யாராவது இருக்காங்களா இங்க? நான் வேற எகணமொகண இல்லாம ஏதேதோ பேசிட்டிருக்கேன்”.

“எங்க ஜனங்க யாருமில்ல. எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தருக்கு வேண்டியவங்க இருக்காங்க”.

புன்னகையுடன் சிகரெட்டை அணைத்துவிட்டு அவளிடம் விடைபெற்று நடக்கத் தொடங்கினேன். அவளுடைய தமிழ் திருவண்ணாமலைப் பக்கத்து மொழியைப் போல இருந்தது. பெங்களூரின் பல புறநகர்களில் இப்படிப்பட்ட பல குரல்களைக் கேட்டிருக்கிறேன். நமக்குப் பழக்கமான குரல் ஏதாவது காதில்விழாதா என்று நினைத்தபடி நடக்கும்போதெல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஒரு குரல் ஒலித்து அரைக்கணம் நிறுத்திவிடும்.

மஞ்சளாகப் பூப்பூத்த சின்னச்சின்ன முட்செடிகள் இருபுறமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்திருந்தன. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத குருவிகள் எல்லாம் கிளைகளிலும் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் சில பிள்ளைகள் கிரிக்கெட் ஆடியபடி இருந்தார்கள். அந்தப் பாதை முடியுமிடத்தில் “ஆஷ்ரயா” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. அதையொட்டி உடனடியாக சுற்றுச்சுவர் தொடங்கியது. சுவரின் மேல்விளிம்பு தெரியாத வகையில் சிவப்புக் காகிதப்பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. எல்லா இடங்களிலும் அவற்றின் கிளைகள் படர்ந்திருந்தன. வாசலில் இருந்த காவலரிடம் விவரம் சொல்லி உள்ளே நுழைந்தேன். பெரிய பூந்தோட்டத்தில் நுழைந்ததைப் போல இருந்தது. கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் வகைவகையான நிறங்களில் பூக்கள் பூத்திருந்தன. இரு சேவகர்கள் மரங்களின் கீழே உதிர்ந்திருக்கும் இலைகளையெல்லாம் கூட்டிச் சேகரித்த்படி இருந்தார்கள். பூந்தோட்டத்தையொட்டிப் பச்சைக் கம்பளத்தைப் போல பளபளக்கும் பெரிய புல்வெளி, பெரிய நிழற்குடையின் கீழே வட்டமாக வடிவமைக்கப்பட்ட சிமெண்ட் பெஞ்சுகள். அழகான சுற்றுச்சுவர். சிலைகளுடன் எளியமுறையில் அமர்ந்திருந்த கோவில். தேவாலயம். தொழுகைக்கூடம். கையில் கோலேந்தி நடக்கும் மூதாட்டி ஒருத்தியையும் முதியவர் ஒருவரையும் கரம்பற்றி நடத்திச் செல்லும் ஒரு சின்னஞ்சிறுவனைப் போன்ற சிலைகள் பீடத்தில் வீற்றிருந்தன. அதைச்சுற்றியும் அழகான பூச்செடிகள் பிறகு வட்டமான பளிங்குத்தொட்டி. அதற்குள் பலவித உயரங்களில் பொருத்தப்பட்ட நீரூற்றுகளிலிருந்து நீர் பீய்ச்சியடித்தபடி இருந்தது. எதிரில் ஒரு சிறிய கண்ணாடிக்கூடம். உள்ளே நான்கைந்து மேசைகள். கூடத்தின்மீது பலவிதமான கொடிகள் படர்ந்து பச்சைப்பசேலென காணப்பட்டது. பின்னால் விரிந்த வெளியில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுசிறு இல்லங்கள். எல்லாமே ஓட்டு வீடுகளுகு உரிய அமைப்பில் கட்டப்பட்டவை. மறுபுறம் மருத்துவமனை, வேறொரு புறத்தில் உடல் எரிமையம். அதன் புகைப்போக்கி மேகத்தைத் தொடுவதைப் போல மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே வாகன நிறுத்தங்கள், பக்கவாட்டில் நடப்பதற்குத் தோதான கிளைப்பாதைகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தேன். தாமதமாகத்தான் கட்டிட அமைப்புகளைக் கவனித்தேன். எல்லாமே தரையோடு ஒட்டியவை. படிக்கட்டுகளோ, மாடிப்பகுதியோ எங்கேயும் காணப்படவில்லை. முதுமையின் சக்தியைக் கருத்தில்கொண்டு அவை வடிவமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும் அந்த இடத்தின் தனிமை விசித்திரமான ஒரு உணர்ச்சியை என் மனத்தில் பரப்பியது. ஆழ்மனத்தில் என்னை அறியாமலேயே ஒருவித அச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

நீரூற்றுக்கு இடதுபுறமாக இருந்த விசாரணை மையத்துக்குள் நுழைந்தேன். அந்த அறையின் உள்சுவர் முழுக்க அழகான புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தன. தயக்கத்துடன் பார்வையை அங்குமிங்கும் படரவைத்தபடி திரும்பியபோதுஒரு மேசையின் பக்கம் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் புன்னகையைப் பார்க்க நேர்ந்தது. ஒருகணம் அப்புன்னகையை ஒரு சிற்பத்தின் புன்னகையாக நினைத்துப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு மெல்ல அவளை நெருங்கி என்னிடம் இருந்த குறிப்புகளைக் கொடுத்தேன்.

“தையல்நாயகி, எஸ் ஸெவன்”

என் குறிப்பை வாய்விட்டுப் படித்தபடி அவள் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். குடில்கள் தொடங்கும் பகுதிவரைக்கும் கூடவே வந்து நான் செல்ல வேண்டிய திசையையும் திரும்ப வேண்டிய இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றாள். அவள் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன் நான். எல்லா இல்லங்களும் ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இல்லத்துக்கு முன்னால் மொசைக் கற்கள் பதிக்கப்பெற்ற சிறு முற்றம். ஒரு சிறு நிழற்குடை. அதன்கீழ் ஒரு சாய்வு நாற்காலி. அதைச்சுற்றிச் சின்னத் தோட்டம். தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்களின் மஞ்சள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

தற்செயலாகத்தான் ஒரு இல்லத்தின் ஜன்னல் பக்கமாக என் பார்வை சென்றது. இரண்டு கண்கள் என்மீது பதிந்திருந்தன. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவை என்னைத்தான் பார்க்கின்றனவா என்கிற சந்தேகத்தில் மீண்டும் அத்திசையில் பார்த்தேன். வைத்த விழி வாங்காமல் அப்பார்வை என் மீதே நிலைகுத்தியிருந்தது. தோல் சுருங்கிய அம்முகத்தையும் எதையோ யாசிக்கும் அக்கண்களையும் நீண்ட கணங்களுக்கு என்னால் பார்க்க முடியவில்லை. உடனடியாகத் திரும்பி மற்ற இல்லங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். உண்மையிலேயே என் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஜன்னலில் பக்கத்திலும் இருகண்கள். நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து உயரும் பார்வை. பாதையைப் பார்த்தபடி  வேகமாக நடக்கத் தொடங்கினேன். யாரோ என்னை அழைப்பதைப் போலிருந்தது. தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. அடையாளம் காட்டிய பெண்ணைக்கூட இறக்கி வைத்துவிட்டுப் போன பெரிய பெரிய எந்திரங்களைப் போல நிமிர்ந்துகூட பார்க்கமுடியாத அளவு நெஞ்சில் அச்சம் துளிர்த்ததை ஆச்சரியமாக உணர்ந்தேன். மறுகணமே என் பகுத்தறிவு மூளை விழித்து அந்த அச்சத்தை விரட்டியது. அந்த இடத்தின் விசித்திரம் ஒரு சின்னச் சத்தம்கூட காதில் விழவில்லை என்பதுதான். ஒரு தும்மல் சத்தம்கூட கேட்கவில்லை.

இல்லத்தின் கதவை நெருங்கி அழைப்புமணியை அழுத்தினேன். என் புலன்கள் இல்லத்துக்குள் ஏற்படக்கூடிய துணிகள் உரசும் ஒலியையோ செருப்புகள் அழுந்தும் சத்தத்தையோஒ ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தன. சில கணங்கள் வரை எதுவும் கேட்கவில்லை. மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டெனத் திறந்தது. வெளிப்பட்ட அந்த உருவத்தின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உருக்குலைந்த சதைக் கோளத்துக்குக் கையும் காலும் முளைத்ததைப் போலிருந்தது அத்தோற்றம். என் இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

”தையல்நாயகிங்கறது நீங்கதானேம்மா?”

கேட்க நினைத்த கேள்வி நெஞ்சிலிருந்து எழாமல் வறட்சி அடைந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஈரத்தைப் படர வைத்தபிறகுதான் சகஜமாகக் கேட்க முடிந்தது. என் கேள்வியையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கண்கள் மட்டும் அசைந்தன. என்னை ஆராய்வதைப் போல உற்றுப் பார்த்தன. நான் மீண்டும் “தையல்நாயகிங்கறது நீங்கதானே?” என்று கேட்டேன். அவர் மேலும் நெருங்கிவந்து “ம்?” என்று என்பக்கம் செவியைக் கொடுத்தார். என் கேள்வியை மறுபடியும் நான் கேட்கவேண்டியதாக இருந்தது.

“என் சின்னப்புள்ளைதான் இங்க கொண்டாந்து உட்டுட்டுப் போனான். அப்புறமா வரவே இல்ல”

தொடர்பில்லாமல் பேசியபடி அவர் உள்ளே திரும்பினார். அவரைத் தொடர எனக்கு அச்சமாக இருந்தது. அதைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன். 

இல்லம் மிகவும் தூய்மையாக இருந்தது. டெட்டால்  மணம் கமழ்ந்தது. சுவரில் இயற்கைக் காட்சிகளின் ஓவியம் ஒருபுறமும் குழலூதும் கிருஷ்ணனின் படம் மறுபுறமும் ஒட்டப்பட்டிருந்தன. அப்பால் கம்பியிட்ட ஜன்னல். வெளிப்புறக் காட்சிகளும் மேகங்களும் அசையும்  மரக்கிளைகளும் படம்படமாகத் தெரிந்தன. மறுபுறம் குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. ஜன்னலோரமாகவே கட்டில். மருந்து மேசை. மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. என் உடல் பதறுவதை உணர்ந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிவயிற்றில் குளிர்ச்சி பரவி உறைவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே நின்றேன். தோல் சுருங்கிய முகம். ஒடுங்கிய கன்னக் குழிகள். வெள்ளையாகப் புரண்ட நீண்ட கூந்தல் அள்ளிக் கொண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அக்கண்கள் முதலில் ஊட்டிய அச்சம் கரைந்தது. குழப்பத்தையும் கலவரத்தையும் அவை வெளிப்படுத்துவதை உணர்ந்தேன். முதுமையின் சரிவும் தளர்ச்சியும் படிந்த உடல். காதுகளின் விளிம்பிலும் முன்நெற்றியிலும் வெண்முடி காற்றில் புரண்டு அலைபாய்ந்தஹ்டு. சட்டென என் பக்கமாக விரலை நீட்டி “நீங்க யாரு” என்று கேட்டார்.

”உங்க தங்கச்சி பையன் சந்திரனுக்கு சிநேகிதன் நான். சந்திரன் சந்திரன் தெரியுமில்ல..?”

சற்று சத்தமாகவே நான் சொன்னேன். ஆனால் என் ஒலிகள் எதுவும் கேட்காத உலகில் அவர் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. கட்டிலில் உட்கார்ந்தபடி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். மேலுதடும் கீழுதடும் உட்குழிந்து காணப்பட்டன. கோடுகோடாக எழுந்த சுருக்கங்களின் நீட்சி உதடுகள் வரை தாக்கியிருந்தது.

“ஆறு ஆம்பளை புள்ளைங்க பெத்து என்ன பிரயோஜனம் சொல்லு. ஊரு உலகத்துல புள்ளைங்க தலையெடுத்து பெத்தவங்கள காப்பாத்தும்ன்னு பேரு. நான் பெத்ததுங்க எல்லாமே அதுக்கு நேர்மாறா போச்சிங்க. ஒவ்வொருத்தனா போவும்போது கடைசி பையன் பாத்துக்குவான்னு இருந்தேன். அவனும் இங்க கொண்டாந்து தள்ளிட்டு போயிட்டான். என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”

”உங்க தங்கச்சி பையன் சந்திரன் சிநேகிதன்தான் நானு. அவர்தான் உங்கள பாத்துட்டு வரச்சொல்லி அனுப்பனாரு”

அவர் பதில் சொல்லவில்லை. என் சொற்கள் அவர் மூளையைத் தொடவே இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியே தெரியும் பனைமரங்களின் அசைவையே வெகுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர் மௌனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“அந்தக் காலத்துல எங்களுக்கு பெரிய பலசரக்குக்கட இருந்திச்சி. வில்வண்டி வச்சிருந்தாரு அவரு. எங்க போனாலும் நாங்க அதுலதான் போவோம்.”

அவராகவே ஒரு கதையைத் திடீரென சொல்லத் தொடங்கினார். அவரைப் பெண்பார்க்க வந்தது, திருமணம் நடந்தது, செழிப்பான முறையில் நடந்த வியாபாரம், வரிசையாகப் பிறந்த பிள்ளைகள், சந்தையில் யார் பிடியையோ விலக்கிக் கொண்டு ஓடோடிவந்த எருதுகளின் முரட்டுத்தனமான தாக்குதலால் நேர்ந்த மரணம் என அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனார். பிறகு ஒரு கணம் நிறுத்தி “நீங்க யாரு?” என்றார். நான் நிதானமாக மறுபடியும் என்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னேன். அவர் கண்கள் என்மீது படிந்திருந்தனவே தவிர என் சொற்களைக் கேட்டுக்கொண்ட சுவடுகளே அந்த முகத்தில் தெரியவில்லை.

மருந்துமேசை மீது ஒரு புத்தகம் கிடந்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள அதை எடுத்துப் புரட்டினேன். அதுவரை நான் பார்த்திராத புத்தகம். வெறும் படங்கள். எல்லாமே தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள். ஒருபுறம் குன்றும் மரங்களும் ஆறும் சூழ நிற்கிற கோயில்களின் கம்பீரத் தோற்றம். மறுபுறம் கருவறை நாயகரின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூடுதலாக சிற்சில பக்கங்களில் சில தூண்சிற்பங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

“ஒங்கள நல்லா கவனிச்சிக்கறாங்களா இங்க? சந்திரனுக்கு ஏதாவது சொல்லணுமா?”

அவர் எவ்விதமான பதிலும் சொல்லவில்லை. என் மனம் அதிர்ச்சியில் உறையத் தொடங்கியது. ஒரு சிற்பத்தின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போல சங்கட உணர்வு எழுந்தது. நான் அவர் புருவங்களைக் கவனித்தேன். வெளுத்து வளைந்திருந்தன அவை. கண்கள் மட்டும் இமைத்தபடி இருந்தன.

சட்டென அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

”அவருக்கு நான்னா ரொம்ப உசிரு. எங்க போய் வீட்டுக்குத் திரும்பிவந்தாலும் கையில பூ இல்லாம வரமாட்டாரு. சமையக்கட்டுக்கு வந்து அவரு கையாலியே தலையில வச்சிட்டுப் போனாத்தான் அவருக்கு நிம்மதி. ஒருநாளு அவர் எனக்கு பூ வச்சிவிடறத என் மாமியார்க்காரி பாத்துட்டா. சம்சாரி இருக்கற எடமா, இல அவிசாரி இருக்கற எடமா இதுன்னு ஒரே சத்தம். எவளுக்காவது இங்க கண்ணியமா இருக்கத் தெரியுதா, தாசி மாதிரி கொண்டை போட்டு பூ வச்சிட்டு திரியறாளுங்கன்னு பேசிட்டே இருந்தா. அவரு உடனே பின்பக்கமா போயிட்டாரு. நா சத்தம் காட்டாம அடுப்பு வேலையை கவனிச்சிக்கிட்டிருந்தேன். அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா. என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு. எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.

அவர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துத் தீயிலிட்ட பூ இன்னும் தன் கண் முன்னால் எரிந்து வதங்குவதைப் போல தேம்பித் தேம்பி அழுதார். உதடுகள் கோணிக்கொள்ள அவர் அழுத கோலத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. சங்கடமாக இருந்தது. அழுகையின் உச்சத்தில் அவர் சொன்ன சொற்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. எங்கோ பார்வை நிலைகுத்த சுவரில் சாய்ந்துகொண்டார். தேம்பலால் அவள் நெஞ்சு தூக்கித்தூக்கிப் போட்டது. கழுத்து நரம்புகளும் நெஞ்சுக்குழியும் நெளிந்தன. அவற்றின் அசைவுகள் என் சங்கட உணர்வை மேலும் மேலும் அதிகரித்தன. மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். முன் குவியலுக்கிடையே தவறிவிழுந்த கண்ணாடித் துண்டுகளைப் போல அவர் கண்கள் பளிச்சிட்டன. நாக்கைச் சுழற்றி உதடுகளை மற்றொருமுறை ஈரப்படுத்திக் கொண்டார்.

கண்ணீரும் அச்சமும் நிரம்பி அக்கண்களிலிருந்து என் பார்வையை விலக்க இயலவில்லை. பெரும் குற்ற உணர்வுடன் மூண்ட வேதனையால் என் தொண்டை இறுகி உலர்ந்து போனது. எழுந்து அவரை நெருங்கித் தொட்டு ஆறுதல் சொல்ல நினைத்தேன். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு பின்வாங்கினேன். சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது. அந்த உட்கூடம், ஜன்னல், திரைச்சீலை, சுவரோவியங்கள், கழிப்பறைக் கதவுகள், தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள் புத்தகம் என ஒவ்வொன்றின் மீதும் தயக்கத்துடன் என் பார்வை படர்வதையும் பெருமூச்சுடன் எழுந்திருப்பதையும் நடக்கத் தொடங்குவதையும் அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கி “நீங்க யாரு?” என்று கேட்டார். அக்கேள்வியால் என் உடல் குறுகிச் சிலிர்த்தது. சில நொடிகள் கதவில் சாய்ந்தபடி அக்கண்களைப் பார்த்தேன். அந்த இல்லங்களின் ஒவ்வொரு ஜன்னல்களிலும் தென்பட்ட கண்களையெல்லாம் மறுபடியும் எண்ணிக்கொண்டேன். ஒருகணம் கூட என்னால் அங்கே நிற்க முடியவில்லை. வேகவேகமாக இல்லத்தைவிட்டு வெளியேறினேன். கச்சிதமாக வளைந்து நீளும் சாலைகளையும் புல்வெளிகளையும் நீரூற்றுகளையும் தாண்டி நுழைவாயிலைக் கடந்து தரையில் கால்வைத்த பிறகுதான் சீராக மூச்சுவிட முடிந்தது. என் வேதனையைச் சந்திரனுக்குத் தெரியப்படுத்தும் விதத்தைப் பற்றிய கவலையை முதன்முதலாக உணர்ந்தது மனம்.


தீராநதி, ஏப்ரல் 2004

நன்றி - பண்புடன் குழுமம்