திருவள்ளுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவள்ளுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவள்ளுவர் உணர்த்தும் இல்லறம் - தா.க.அனுராதா

உலகம் விளக்கமுற உதிக்கின்ற ஞாயிறு போல் உள்ளங்களில் விளக்கேற்றியவர் வள்ளுவர். வாசுகி என்னும் கற்புக்கரசியை மணந்து இல்லறமெனும் நல்லறத்தை உலகிற்கு உணர்த்திய உத்தமர்.

ஆணும், பெண்ணும் லயமும் சுருதியும் போல், சுடரும் கதிரும் போல், மலரும் மணமும் போல் இருவர் வாழ்வும் ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் நன்கறிந்து, நயம்பட அன்பாய் வாழ்வு நடத்துவதுதான் இல்லறம். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.

இல்வாழ்க்கைப் பண்பும் பயனும்

இல்வாழ்க்கையின் ஆணிவேரான பண்பு அன்பு; அதன் பயன் அறம். அறவழியில் இல்லறம் நடத்துபவரே உலகில் வாழ முயலும் அனைவரிலும் தலை மகனாவார்.
  
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

- - - (குறள் 45)

என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் காட்டும் இல்லற மாண்பு - வே.இராஜா

வள்ளுவர் பெண்கட்கு மதிப்பளித்தார். மகளிர் பிறரால் கட்டுப்படுத்தப்படுதலின்றி உரிமையுடன் வாழ வேண்டுமென விரும்பினார். ஆயினும் இல்லத்தில் தலைமை ஆடவனுக்கே உரியது என அவர் எண்ணினார் என்பது பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தினின்றும் புலனாகும்.

மனையும், மனைவியும்

தகுதி வாய்ந்த இல்லத் தலைவியையுடைய இல்லமே நல்லில்லமாக அமைதல் கூடும் என வள்ளுவர் கருதினார். ஒருவனின் மனைவியிடத்து மனைகேற்ற மாட்சி, இல்லறத்தை நன்கு நடத்தும் இயல்பு இல்லாவிடின் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய பிற பல நலன்களைப் பெற்றிருப்பினும் பயனற்றது. மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிடினும் யாதும் உள்ளது போலாகுமென்றும் அவள் சிறந்தவளாக வாய்க்காவிடில் பிற வளங்களனைத்தும் இருப்பினும் யாதுமில்லாதது போலாம் என்றும் கூறுகிறார்.

வள்ளுவர் காட்டும் இல்லறப் பண்பாடு - நா.து.சிவகாமசுந்தரி

இலக்கியம் என்பது வாழ்வின் விளக்கம் என்றும், காலத்தின் கண்ணாடி என்றும் கூறப்படுவதுண்டு. வழுக்கும் பாதைக்கு ஊன்றுகோல் பயன்படுவது போன்று வாழ்க்கைப் பாதைக்கு ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் பயன்படுகின்றன. அச்சொற்கள் அனைத்தும் வருங்கால சந்ததியினரைப் படிப்பாளிகளாக ஆக்கும் நோக்கத்தைவிடப் பண்பாளிகளாக ஆக்குவதையே குறிக்கோளாய்க் கொண்டு இயற்றப்பட்டன. இங்கு, பண்பு எனப்படுவது ''Character'' எனப்படுவதல்ல. நெய்தற்கலி பாடிய நல்லந்துவனார்,

''பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்''

என்று குறிப்பிடுகின்றார். இங்குப் ''பாடு'' என்பது துன்பம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. இதே கருத்தினையே குறளும்,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

என்று இயம்புகிறது. இப்பண்புகளை நினைவுகூர்வதுகூட இல்லங்களின் சிதைவுகளைச் சீரமைக்கும் முன்னேற்பாடே ஆகும்.

சட்டம் - வள்ளுவர் காட்டும் வழியில் - தி.நெ. வள்ளிநாயகம்

எழிலோடு வாழ்கின்ற தமிழ். இமயம் பல வென்று வந்த தமிழ், பொழில் நிறை பூவாகப் பூத்த தமிழ் பெற்ற ஒரு கருவூலம் ''திருக்குறள்''.

வள்ளுவர் செய் திருக்குறளை
மறுஅறநன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனு நீதி ஒரு குலத்துக்கு
ஒரு நீதி

என்று ''மனோன்மணியமும்'' மகிழ்ந்து மொழிகின்றது.

நன்றென எப்பா லவரும் இயைபவே
வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி

என்ற கருத்தினைக் ''கல்லாடர்'' சொல்லாடக் காண்கின்றோம்.

மனித குணங்கள் அனைத்தையும், சித்திரித்துக் காட்டுகின்ற சிறப்பால் இந்திய இதிகாசங்களில் மகாபாரதத்திற்கும், இராமகாதைக்கும் ஒரு தனி மதிப்பு உண்டு. சொத்துரிமை, ஒப்பந்தம், இயற்கை நீதி, கடமை, பாதுகாப்பு, பெண்ணுரிமை, சூட்சியுரிமை, வாக்குறுதி, மறைகாத்தல் போன்ற பலவற்றைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் அவற்றில் புதைந்து கிடக்கின்றன. இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் பல சட்ட விவரங்கள் இலைமறை காய்களாக அமைந்துள்ளன. எப்பொருளையும் தெளிவாக, அறிவு பெறும் வகையில் எடுத்துரைக்கும் திருக்குறளில் எல்லாமே உண்டு என்பதனால்தான் ''இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்'' என்று மதுரைத் தமிழ் நாகனார் கூறினார்.

திருவள்ளுவர் உணர்த்தும் அரசியல் - யு.ஜெயபாரதி

அரசியல் என்பதற்கு ஆங்கிலச் சொல் ''பாலிடிக்ஸ்'' (Politics). இது கிரேக்கச் சொல்லாகிய ''பொலிஸ்'' (Polis) என்ற சொல்லைத் தழுவியதாகும். ''அரசு'' என்றால் ''ஆட்சி'' அமைப்பாகும். அதற்கு அமைச்சர், தூதுவர், பெரியோர், ஒற்றர், படைவீரர் ஆகியோரின் பணி இன்றியமையாத தேவையாகின்றன.

அரசன் 

நீதி முறை தவறாது ஆள்பவன் மக்களால் இறைவனாய் மதிக்கப்படுவான் என்பதை,


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்டு
இறையென்று வைக்கப் படும்

- - - (குறள் 388)

என விளக்குவதொடு அத்தகைய ஆட்சியில்தான் மழையும் விளைச்சலும் ஒருங்கே கிடைக்கும் என்பதனைக் (குறள் 545) குறிப்பிடுகின்றார்.

வள்ளுவர் காட்டும் மெய்யுணர்தல்

மெய்யுணர்தல் எனில் உண்மையான் உணர்தல். இது எவ்விடத்தும் எக்காலத்தும் அழியாது நிற்பதை உணர்தலாகும். இதனைத் "தத்துவஞானம்' என வடநூலார் குறிப்பிடுவர். உலகம் பொறியுணர்வால் உணரப்படுவது. இறைவன் மன உணர்வால் உணரப்படுகின்றவன். இருவகை உணர்வுகளாலும் உலகையும் இறைவனையும் உணரும் தன்மையது உயிர். இம்முப்பொருள் உண்மையினை மன உணர்வால் உணர்தல் மெய்யுணர்தலாகும் என்கின்றனர் சான்றோர் பெருமக்கள்.

மெய்யுணர்தலில் மனமே அடிப்படை. மனம் ஒருபொருட்கண் மன்னியிருத்தலும் மன்னாதிருத்தலுமாக இரு நிலைகளிலும் விளங்குகிறது. உயிரையும் உடம்பையும் அலைப்பது மனமே. தானிருந்த இடத்திலிருந்தவாறே ஆட்டுவிக்கிறபொருள் மனதைத் தவிர வேறில்லை. மனதைப் பொறுத்தே அது உடையானுக்குப் பெருமையும் சிறுமையும் உண்டாவதாகும். இத்தகைய மனம் செம்மையுற்றால் உயிர்கள் நன்மை பெறும் என்பதை "மனமது செம்மையுற்றால் மந்திரம் செபிக்க வேண்டா' எனும் தொடரால் அகத்தியர் வலியுறுத்துகிறார்.

கடலலையாய் அலையாது, தெளிவான நிலையில், பன்நூலறிவால் நிறைந்து, குற்றமற்றதாய் விளங்கும் மனம் முக்தியுலகிற்கு வழிகாட்டும் என்கிறது திரிகடுகம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல் எது உள்ளது, எது இல்லது, எது உண்மை, எது பொய்மை எனக் கண்டறிதலுக்குச் சிறப்புப் பண்புகள் அமையப்பெற்றிருக்க வேண்டும். நடுநிலைமை, பற்றற்ற தன்மை, தூயமனம், அருளுள்ளம் உடைய சான்றோர்க்கே அது சாலும்.
அனைத்துப் பொருள்களுக்கும் நிகழ்வுகளுக்கும் தோற்றத்தாலன்றி உள்ளமைந்த மெய்ப்பொருள் என்பதொன்று உண்மை. இதை உணர்தலில் ஏற்படும் தடையே முரண்பாடுகளின் தோற்றம். விழுமிய எண்ணமுடையோர் தம் அறிவாற்றலால் காணும் பொருள்களில் செம்பொருளை உணர்ந்து நல்வழி காட்டுவர். மெய்யுணர்தல் என்பதற்கு,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள்-355)

எனும் குறட்பாவில் திருவள்ளுவர் விளக்கம் தருகிறார். எப்பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அந்தத் தோற்றத்தை உண்மையெனக் கொள்ளாமல், அதன் மெய்த்தன்மையைக் காண்பதே மெய்யுணர்தலாமென்பது இக்குறட்பாவின் கருத்து. உலகோர் ஒவ்வொரு பொருளுக்கும் கற்பித்து வழங்கும் கற்பனைகளை விட்டுவிட்டு, அதன்கண் உள்ள உண்மையைக் காண முயல வேண்டும். இதை ஒரு சொற்றொடர் மூலம் பரிமேலழகர் தெளிவாக்குகிறார்.

கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனக்கூறுமிடத்து, அரசன் என்பதோர் ஜாதியும், சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினை உடையான் என்பதொரு வடிவும், சேய் என்பதொரு இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதொரு சிறப்புப் பெயரும் ஒரு பொருளின்கண் கற்பனையாகலின், அவ்வாறுணராது, நிலம் முதல் உயிரீறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து அவற்றை நிலம் முதலா தத்தம் காரணங்கள் ஒடுக்கிக்கொண்டு சென்றால், காரண, காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை உணரலாம் என்கிறார். இதுவே மெய்யுணர்தலின் இலக்கணமாகும்.

மெய்யுணர்தலுக்கு மனம் அடிப்படையாதல் போல், அறியாமை அகற்றலும் அவசியத் தேவையாகும். அறிவுக்கு முரணானது அறியாமை. அதுவே துன்பகரமான பிறப்பிற்கும் முதல் காரணமாகிறது. எனவே, பிறப்பிலிருந்து விடுபட அறியாமையை நீக்க வேண்டும். அப்போதுதான் பொருள்கண்ணுள்ள உண்மைநிலை தெரியலாகும். அத்தெரிதலே அறிவாகும். இதனால்தான் வள்ளுவர் பிறப்பை பேதமை என்றும், பிறவாமையை சிறப்பென்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு (குறள்-358)

பிறப்புக்கு முதற்காரணமாகிய அவிச்சை (அறியாமை) கெட, வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது என விளக்குகிறார் பரிமேலழகர்.

அறியாமையை நீக்குவதால் உணரப்படும் மெய்யுணர்தல் பிறப்பறுக்கிறது. அறிவுடையோர் தோற்றத்தாலன்றி பொருளின் மெய்த்தன்மை காணவே விழைவர். இதனால் அவர்கள் வீடுபேற்று நிலையடைவர். நூல்களைக் கசடறக்கற்று மெய்ப்பொருளைக் கண்டோர் பிறவாமை பெறுவர். ஒருவனுள்ளம் பொருளை ஆய்ந்தறிந்து அதன் முதற்பொருளை உணருமாயின் அவர் பின்னைப் பிறப்புண்டு என நினைக்க வேண்டா. இக்கருத்தை,

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (குறள்-356)

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள்-357)

என்னும் குறட்பாக்கள் விளக்குகின்றன.

"அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என மானிடப் பிறப்பின் உயர்வை ஒளவையார் போற்றியுரைப்பார். பிறப்புக்குப் பெருமை தருவது அறிவே. அறிவினால் ஏற்படும் மெய்யுணர்வு இல்லையேல், மனிதப் பிறப்பும் மதிப்பற்றதாகிவிடும் என்பதை,

பொருளல் லவற்றைப் பொருளென்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு (குறள்-351)

எனும் குறளால் திருவள்ளுவர் உறுதிபடக் கூறுகிறார்.

பிறப்பிலும் வருத்தும் நோய்கள் பல உள்ளன. அவை வினைப்பயன்களாலும் பிறப்பாலும் தொடர்பவை. இவை ஐவகையாயினும் முதன்மையாகக் கருதத்தக்கவை அறியாமை, ஆசை, சினம், எனும் மூன்றே, ஒருவரிடத்து இம்முப்பெரும் குற்றங்களும் இல்லாது போயின், அவரைத் துன்பம் அணுகாது.

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் (குறள்-360)

எனும் குறள், இம்மூன்றினது நாமம் போக வினைபோம் என்கிறது.
எவ்வகையில் நோக்கினும் வள்ளுவர் காட்டும் மெய்யுணர்தல் அறியாமையை நீக்கி, அறிவால் செம்பொருள் காண வழிகாட்டுகிறது. அதன் நிமித்தமாய் துன்ப மயமான பிறப்பினின்று நீங்கி, பிறவாமை அடைய உதவுகிறது.

நன்றி - தமிழ்மணி