அரசியல் என்பதற்கு ஆங்கிலச் சொல் ''பாலிடிக்ஸ்'' (Politics). இது கிரேக்கச் சொல்லாகிய ''பொலிஸ்'' (Polis) என்ற சொல்லைத் தழுவியதாகும். ''அரசு'' என்றால் ''ஆட்சி'' அமைப்பாகும். அதற்கு அமைச்சர், தூதுவர், பெரியோர், ஒற்றர், படைவீரர் ஆகியோரின் பணி இன்றியமையாத தேவையாகின்றன.
திருமதி யு. ஜெயபாரதி
அரசன்
நீதி முறை தவறாது ஆள்பவன் மக்களால் இறைவனாய் மதிக்கப்படுவான் என்பதை,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்டு
இறையென்று வைக்கப் படும்
- - - (குறள் 388)
என விளக்குவதொடு அத்தகைய ஆட்சியில்தான் மழையும் விளைச்சலும் ஒருங்கே கிடைக்கும் என்பதனைக் (குறள் 545) குறிப்பிடுகின்றார்.
அரசனின் இயல்புகள்
அஞ்சாநெஞ்சம், ஈகை, அறிவு, ஊக்கம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும் (குறள் 382), எளிதில் காணக்கூடியவனாகவும் இன்சொல் கூறுபவனாகவும் இருக்க வேண்டும்.
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
- - - (குறள் 386)
மேலும், சோம்பலில்லாத மன்னன் மாநிலம் முழுதும் ஆள்வான் (குறள் 610). தன் குறைகளைச் சுட்டும்போது அதனைப் பொறுத்துக் கொள்ளும் பண்பும் (குறள் 389) வேண்டும். வறியவர்களுக்குக் கொடுத்தல், அன்பு காட்டுதல், நீதி தவறாமை, மக்களுக்குத் துன்பம் நேராமல் பாதுகாத்தல் ஆகிய பண்புகளும் பெற்றிருக்க வேண்டும் என்பதனை,
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையான் வேந்தர்க்கு ஒளி
- - - (குறள் 390)
என்ற குறளில் குறிப்பிடுகின்றார்.
ஆளுவோர்க்கு ஆலோசனை வழங்க அமைச்சன், தூதுவன், பெரியோர் ஆகியோரின் துணை அவசியம் எனக் குறிப்பிடுகின்றார்.
அரசனின் வல்லமை
பொருள் வரும் வழிகளை இயற்றுதல், வந்த பொருள்களைச் சேர்த்தும், பாதுகாத்தும், வகுத்தும் செலவிடல் வேண்டும் என்பதனை,
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
- - - (குறள் 385)
என்ற குறளில் குறிப்பிடுகின்றார்.
மேலும் வரக்கூடிய துன்பத்தை முன்பே அறிந்து தடுத்துக் கொள்ளும் அறிவு ஆள்வோர்க்கு வேண்டும் என்பதனையும் (குறள் 429) குறிப்பிடுகின்றார்.
ஆளுவோர்க்கு இடித்துக் கூறும் (அ) குற்றங்களைச் சுட்டிக்காட்டி வழிபடுத்தும் குழு தேவை என்கிறார். ஆலோசனையில் திருத்திக் கொள்ளும்போது அவனை யாராலும் அழிக்க முடியாது என்றும், அத்தகைய இடித்துக் கூறுபவர் இல்லையாயின் பகைவரின்றியே அரசு கெடும் என்றும் குறிப்பிடுகின்றார்.
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந்த தகைமை யவர்
- - - (குறள் 447)
இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
- - - (குறள் 448)
மேலும், ஆட்சிப் பீடத்திலுள்ளவர்கள் யாராயினும் அவர்கள் பிறருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். தன்னைத்தானே உயர்வாக எண்ணுதல் கூடாது. மேலும் நன்மை தராத செயல்களை நினைத்தலும் கூடாது (குறள் 439); ஆராய்ந்த பின்பே எச்செயலையும் செய்ய வேண்டும். தொடங்கிய பிறகு ஆராயக்கூடாது என்பதை,
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
- - - (குறள் 467)
என்ற இக்குறளில் குறிப்பிடுகின்றார்.
அரசில் தண்டனை
கொலையை ஒத்த கொடுமை செய்கின்றவர்களைக் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல் தவறல்ல என்பதனை,
கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
- - - (குறள் 530)
என்ற குறளில் சுட்டுகின்றார்.
''கள்வனைக் கோறல் கடுங்கோலன்று'' என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுவதால் அக்காலத்தில் திருட்டுக்குத் தண்டனையாகக் கொலைத் தண்டனை விதிக்கப்படும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது. கொலைத் தண்டனையை ஆதரிக்கும் அதே வள்ளுவர் தான் இவ்விடம் பின்வரும் கருத்தையும் குறிப்பிடுகிறார். ஆட்சியில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும்போது தண்டனை அச்சத்தைத் தருவதாக (குறள் 562) இருக்க வேண்டுமே தவிர அழித்து விடக்கூடாது என்று குறிப்பிடுகின்றார். மேலும் கல்வி மக்களின் அடிப்படை உரிமை அதனை வழங்குதல் அரசின் தலையாய கடமை என்கிறார்.
அமைச்சன்
அனுசரிக்க வேண்டிய அத்துணை முறைகளையும் வகுத்துக் கூறக்கூடிய ஆற்றல் மிக்கவன் அமைச்சன். அவனது இயல்புகளாகச் செயலுக்குரிய கல்வியும் அதற்கேற்ற காலமும் செய்யும் முறையும், செயல்திறனும் இருக்க வேண்டும் என்பதனை,
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு
- - - (குறள் 631)
என்ற குறளில் சுட்டுகின்றார். அஞ்சாமை, அறங்காக்கும் திறன், அறநூல் தெளிவு, விடாமுயற்சி ஆகியவற்றைப் பெற்றவனே அமைச்சன் என்றும் (குறள் 632), செயல்களை ஆய்ந்தும், வழிமுறைகளை ஆய்ந்தும், துணிவாகவும், கனிவாகவும் கருத்தை எடுத்துச் சொல்லுதலும் (குறள் 634); நுண்ணறிவோடு நூலறிவும் பெற்றவனாக இருக்க வேண்டும் என்றும் (குறள் 636) கூறுகிறார்.
தூதர்
ஒரு நாடு, மற்றொரு நாட்டில் கண்ணியமாய்க் கருதப்படுவதற்கும் இரண்டு நாடுகளிடையே நேசமனப்பான்மை வளர்வதற்கும் தூதர்களே முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். தூதர்க்குரிய பண்புகளாக,
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
- - - (குறள் 682)
இந்த மூன்றிலும் ஆராய்ந்த சொல்வன்மை முக்கியமாய்க் குறிப்பிடப்படுகிறது. இயற்கையான நூலறிவு, காண்போரைக் கவரும் தோற்றம், ஆராய்ச்சியுள்ள கல்வியுடன் (குறள் 684),
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
- - - (குறள் 681)
என மேலும் சிலவற்றைத் தூதுரைப்பார்க்கு உரிய தகுதிகளாய்க் குறிப்பிடுகின்றார்.
தூதுசெல்வான் தொகுத்துக் கூறுதல், கடுமையான சொற்களை நீக்குதல், பிறர்மனம் மகிழச் சொல்லுதல், தன்னரசனுக்கு நன்மை விளைவித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக விளங்க வேண்டும் என்பதனை,
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது
- - - (குறள் 685)
என்ற இக்குறளில் விளக்குகிறார்.
தனக்கு அழிவே தருவதாயினும் அதற்காக அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்பவனே தூதுவன் எனத் தூதுவனுக்கு இலக்கணம் வகுக்கும் குறள்,
இறுதி பயப்பினும் அஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது
- - - (குறள் 690)
என்பதாகும்.
படை. அரண்
நாட்டின் மீது செல்லும் பகைவரைத் தடுக்கவும், நாடடின் சுய ஆட்சியை நிலைநிறுத்தவும், அரசில் படை முக்கியப் பங்கு வகிக்கிறது.
கூற்றுவுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
- - - (குறள் 705)
வீரர்கள், கூற்றுவனே எதிர்வரினும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடையவர்கள். இத்தகைய படையை உடைய அரசனக்குத் தோல்வி என்றுமில்லை என்கிறார். அத்தகைய படையின் முக்கியத்துவத்தைப் ''படைமாட்சி''யில் விளக்குகின்றார். வீரர் தம் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத் தாங்கி வெல்லும் தன்மை அறிந்து அவரது படையை எதிர்த்து வெல்லும் திறமை உடையவராய் இருக்க வேண்டும் என்பதனை,
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து
- - - (குறள் 767)
என்ற குறளில் கூறுகிறார். அண்டை நாடுகளுடன் போரைத் தவிர்த்து நட்புக் கொள்ள வேண்டும். தற்காப்புக்காக மட்டுமே போர் புரிதல் வேண்டும். போரையும் அறவழியில் நடத்தவேண்டும். போர் நடத்தல் இயல்பாக இருப்பதால் அரண்களை அமைத்தும், படைகள் சேர்த்தும் தன் நாட்டைக் காக்க வேண்டும். தோற்ற பகைவரிடம் திறை பெறுதல் பற்றியும் குறிப்பிடுகின்றார். போரில் காலம், பொருள், ஆற்றல் வீணாவதைக் குறிப்பிட்டுச் சமாதானத்தையே வலியுறுத்துகின்றார்.
ஒரு நாட்டிற்குப் பகை நாட்டாரின் தாக்குதலின்று தப்பிக்க வலுவுள்ள அரண்கள் முக்கியம். அவை இயற்கையாக அமைந்திருப்பதால் மேலும் நன்மை பயக்கும். எனவே நாட்டுப் பாதுகாப்பில் அரண் முக்கியத்துவம் பெறுகிறது. (குறள் 742).
இலக்கியத்தின் தரத்தை, பிரான்சிஸ் பேக்கன் என்பவர் ''கற்கத்தக்கன, கற்று உணரத்தக்கன, கற்று உணர்ந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத்தக்கன'' என்று வகைப்படுத்தும்போது, இந்த இலக்கிய வரிசையில் வள்ளுவரின் குறள் கற்று உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றத்தக்க சிறப்புடைய இலக்கியமாய்த் திகழ்கிறது.
அரசியல் மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம். அது சமுதாய வாழ்க்கைக்கு ஒழுங்கமைதியைத் தருவது. தமிழகத்தைப் பொறுத்தவரை முடி மன்னராட்சி போற்றும் வகையிலே இருந்துள்ளது. உலக அரசியல் வரலாற்றில் நீதியை நிலைநாட்டும் பொருட்டுத் தன்னுயிரைக் கொடுத்த தமிழ் நாட்டரசர்கள் போல் எவருமில்லை என்பதனை வரலாறு அறிவிக்கிறது.
''எல்லோரும் இந்நாட்டு மன்னர்'' என்ற குடியரசு நாட்டில் வாழும் நமக்கு அரசியல் வழிமுறைகளை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சிமுறை இருக்க வேண்டிய அமைப்புகளைக் குறிப்பிட்டுள்ள அவரது அரசியல் மதிநுட்பத்தோடு கூடிய, தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதறிஞர், அறநெறியாளர், அரசியல் சிந்தனையாளர், ''எல்லா மக்களுக்கும் பொதுக் கவிஞர் என்று ஜி.யு. போப்பாலும் ''வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'' என்று பாரதியாராலும், குறிப்பிடப்படுவர் வள்ளுவர். அவர் வகுத்துள்ள அரசியல் முறைகளை ஆளும் அரசுகள் (மாநிலமோ, நாடோ) பின்பற்றினால் மட்டுமே அவ்வாட்சி உண்மையான பொற்கால ஆட்சியாக இருக்க முடியும்.
துணை நூல்கள்
1. திருக்குறள் அரசியல் அறிவுரை, மு. முத்துராமன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1996, ப. 14.
2. வள்ளுவர் தந்த தமிழகம், சாமி சிதம்பரனார், பாவை பப்ளிகேசன்ஸ், 2000, பக். 2, 83, 86, 87, 91, 105.
3. குறள்மொழியும் நெறியும், டாக்டர் கருணாகரன், டாக்டர் ஜெயா, மணியகம் பதிப்பகம், 1993, பக். 201, 150-152.
4. திருவள்ளுவர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1981, பக். 1, 82-83, 63.
5. திருக்குறள் கட்டுரைகள், பேராசிரியர், கட்டுரைகள் தொகுப்பு, திருக்குறள் மன்றம், 1995, பக். 126, 129, 35.
6. திருக்குறள், மு.வ. உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1967, பக். 81, 141, 157, 177.
தமிழியல் துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்
சிதம்பரம் - 608 002
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக