பிறர் தவறின்றிப் புரிந்து கொள்வதற்கும், தவறின்றிக் கருத்தை வெளியிடுவதற்கும் கருவியாக இருப்பது இலக்கணம்.
பிழையில்லாமல் நல்ல தமிழில் எழுத விரும்புவோர், வலி மிகும் - மிகா இடங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். வல்லெழுத்து மிகுந்து வருவதையே இலக்கணத்தில் "வலிமிகுதல்' என்பர். இரண்டு சொற்கள் இணையும்போது, இடையில் க், ச், த், ப் ஆகிய ஒற்றெழுத்து வந்து இரு சொற்களையும் ஒன்று சேர்த்தால் அதற்கு "வலி மிகுதல்' என்று பெயர்.
வலி மிகுவதால், சொற்களில் பொருள் வேறுபாடு தெரிவதற்கும் - பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும், உச்சரிக்கும்போது தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
வலி மிகுதல், தமிழ்மொழியிலும் மலையாள மொழியிலும் காணப்படுவதன்றி பிற மொழிகளில் இல்லை என்று மொழி நூலறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் - நூல்கள், நாளிதழ்கள், வார, மாத, இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள், விளம்பரப் பலகைகள், ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகள் என எல்லாவற்றிலும் வலி மிக வேண்டிய இடத்தில் வலி மிகாமலும், வலி மிகாத இடத்தில் வலி மிகுத்தும் இருப்பது (ஒற்றுப்பிழைகள்) மலிந்து காணப்படுகின்றன.
பல மொழிகளை ஆராய்ந்து அறிந்த மொழி நூலாசிரியரான, "ஆட்டோ யெஸ்பர்சன்' என்பவர், ""ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்றால், பல சொற்களை அடுக்கி எழுதப் படித்துக்கொள்வது மட்டுமாகாது.
எந்த மொழியைக் கற்கிறார்களோ அந்த மொழிக்கு உரிய இலக்கண முறைப்படி மரபு தவறாது சொற்களைச் சேர்த்தெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.'' என்கிறார்.
இலக்கணம் படிக்காதவர்களும் மிகமிக எளிதாக வல்லெழுத்து மிகுதலை அறிந்துகொள்ள வேண்டுமானால் கீழே தரப்பட்டுள்ள சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ, இ, எ,
அந்த, இந்த, எந்த,
ஆங்கு, ஈங்கு, யாங்கு,
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு (இடம்), ஈண்டு, யாண்டு,
அவ்வகை, இவ்வகை, எவ்வகை,
அத்துணை, இத்துணை,
எத்துணை,
இனி, தனி, அன்றி, இன்றி
மற்ற, மற்றை, நடு பொது,
அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து,
முன்னர், பின்னர்.
ஆகிய இவை நிலைமொழியாக அதாவது, முதலில் நிற்கும் சொல்லாக இருந்து - க, ச, த, ப என்னும் எழுத்துகளுள் எது வருமொழி முதலாக வந்தாலும் வல்லெழுத்தானது கட்டாயம் மிகும். "க' என்றால், "க' முதல் "கெü' வரையிலுள்ள எழுத்துகளைக் கொள்ளவேண்டும்.
இவ்வாறே, ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும் கொள்ள வேண்டும். அதாவது, அடுத்து வரும் சொல்லின் முதலில் க, ச, த, ப வருக்கம் வந்தால்தான் வல்லெழுத்து மிகும். உயிரெழுத்து வந்தால் மிகாது, க, ச, த, ப வருக்கம் தவிர வேறு எழுத்துகள் வந்தாலும் மிகாது. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் கட்டாயம் வல்லெழுத்து மிகும். சில எடுத்துக்காட்டுகள்:
அ - அப்பக்கம், இ - இச்செடி, எ - எப்பக்கம், அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்?, அங்குச் சென்றான், எங்குக் கேட்டாய்?, எங்குச் சென்றாய்?, ஆங்குச் சென்றான், அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்?, அவ்வகைச் செடி, இவ்வகைப் பூக்கள், எவ்வகைக் கொடி?, அத்துணைப் பெரிய, இத்துணைச் சிறிய, எத்துணைப் பாடல்கள், அங்குப் போனார், இங்குச் சென்றார், இனிப் பேசமாட்டேன், தனிக் குடித்தனம், மற்றப் பிள்ளைகள், நடுக்கடல், பொதுக் கூட்டம், அணுக்குண்டு, முழுப்பக்கம், புதுப்பொருள், புதுத்துணி, அரைப்பக்கம், பாதித்துணி, எட்டுக் குழந்தைகள், பத்துச் செடிகள், முன்னர்க் கண்டேன், பின்னர்ப் பேசுவேன்.
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலி மிகும். (எ.கா.)
பூ+பறித்தான் = பூப்பறித்தான்
தீ+பிடித்தது = தீப்பிடித்தது
கை+குழந்தை = கைக்குழந்தை
பூ+பந்தல் = பூப்பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும். (எ.கா)
அறியா+பிள்ளை = அறியாப்பிள்ளை
காணா+காட்சி = காணாக்காட்சி
சொல்லா+சொல் = சொல்லாச்சொல்
நிலையா+பொருள் = நிலையாப்பொருள்
தீரா+துன்பம் = தீராத்துன்பம்
சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர். மக்கு, தச்சு, செத்து, விட்டு, உப்பு, கற்று ஆகிய இவை வன்தொடர் குற்றியலுகரச் சொற்கள்.
இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகள் வந்தால், கட்டாயம் வல்லெழுத்து மிகும். (எ.கா) மக்குப்பையன், தச்சுத்தொழில், விட்டுச்சென்றார், செத்துப் பிழைத்தான், உப்புக்கடை, கற்றுக் கொடுத்தார், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, எதிர்த்துப் பேசினார், விற்றுச் சென்றான்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின்னும் வல்லெழுத்து மிகும். (எ.கா) வரக்கூறினார், தேடப்போனார்.
இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும். (எ.கா.) கூறிச்சென்றார், வாடிப்போயிற்று.
"போய்' என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும். (எ.கா.) போய்ச் சொன்னார், போய்த் தேடினார்.
"ஆய்' என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும். (எ.கா.) சொன்னதாய்ச் சொல், வந்ததாய்க் கூறு.
ஈரொற்று வரும் வழி: பதினெட்டு மெய்யெழுத்துகளில் ய, ர, ழ - என்னும் மூன்று மெய்யெழுத்துகளின் பின் இன்னொரு மெய் (வலி) மிகும். (எ.கா.) காய் காய்க்கும், ஊர்க்குப் போ, நல்வாழ்க்கை.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக