""மறைந்த ஒழுக்கத்து "ஓரையும்' நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கில்லை''
தொல்காப்பியம், நச்சினார்க்கினியர் உரை - களவியல் நூற்பா(135)வில் பயின்றுவந்துள்ள "ஓரை' எனும் சொல்லுக்கு இளம்பூரணர் உரையில் "முகூர்த்தம்' என்றும், நச்சினார்க்கினியர் உரையில், "இராசி' என்றும் உள்ளன. ஆனால், சங்க இலக்கியப் பாடல்களில்,
""தாதின் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்'' (48:1-3)
""நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரைமகளிர் அஞ்சி, ஈர்ஞெண்டு'' (401:2-3)
என குறுந்தொகையிலும்,
""ஓரையும் ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர்வார் கண்ணேன் கழலும் என்னினும்'' (143:2-3),
என நற்றிணையிலும்,
""கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி எனக்
கொன்னும் சிவப்போள் காணின்'' (60:10-12),
என அகநாநூற்றிலும்,
""ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்'' (176:1-2)
எனப் புறநானூற்றிலும், மகளிர் விளையாட்டு, ஆயம் என்றும் பல பொருண்மைகளில் சுட்டப்பட்டுள்ளன.
"ஹோரா' எனும் கிரேக்க மொழிச்சொல்தான் தமிழில் "ஓரை' என்று வழங்கி வருவதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர். இராசி எனும் பொருளுடைய ஓரை எனும் சொல், கிரேக்க மொழியிலிருந்து வடமொழியில் புகுந்து, பின்னர் தமிழ் மொழியில் நுழைந்ததென்று ஒரு சாராரும், ஓரை எனும் சொல் மகளிர் விளையாட்டு எனும் பொருளில் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் சுட்டப்பட்டிருப்பதால், இச்சொல் தமிழ்ச்சொல்லே என்று ஒரு சாராரும் கூறிவருகின்றனர். மேற்சுட்டிய கருத்தியல்களை நோக்கும்போது "ஓரை' எனும் சொல்லின் மெய்ப்பொருள் பற்றியும், ஓரை தமிழ்ச்சொல்லா அல்லது பிறமொழிச்சொல்லா என்பது பற்றியும் ஆய்வறிஞர்கள் நுணுகி ஆராய்ந்து அறிந்து தெளிவான ஆய்வு முடிவை தமிழுலகுக்குத் தந்துதவ வேண்டியது தலையாய கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக