தமிழில் உள்ள கலம்பகங்களை, கடவுள் மீது பாடப்பட்டவை, முனிவர் மீது பாடப்பட்டவை, அரசன் மீது பாடப்பட்டவை என மூன்றாக வகைப்படுத்துவர். அந்த வகையில், அரசன் மீது பாடப்பட்ட கலம்பகமாக நமக்குக் கிடைத்த ஒரே கலம்பகம் நத்திக்கலம்பகம்தான். கி.பி.825-850-இல் தமிழில் தோன்றிய முதல் கலம்பகமான இந்நூலின் பாட்டுடைத் தலைவன், தந்திவர்மனின் மகனான மூன்றாம் நந்திவர்மன். தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூலும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலைக் கற்போர் ஒரு வீரியமிக்க இலக்கியத்தைப் படித்த உணர்வைப் பெறுவார்கள். தொட்ட இடம் எல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூலிது.
இந்நூலில் ஓர் அரிய காட்சி. தலைவன் ஒருவன் இல்லறக்கிழமை பூண்டு தலைவியுடன் இடையறா இன்பம் துய்த்தான். இவ்வில்லறம் நல்லறமாகத் திகழப் பொருள் வேண்டுமல்லவா? எனவே, பொருள் ஈட்டக்கருதி அயலூர் சென்று பொருளீட்டினான். குறித்த காலத்தில் வருகிறேன் என்று தலைவியிடம் மொழிந்து சென்றது நினைவுக்கு வரவே, தேர் ஏறி விரைகிறான்.
மேகங்கள் கன்னங்கரேல் எனக் கறுத்து வானமெங்கும் பரந்து, விரைந்து ஓடிக்கொண்டிருந்தன. தலைவன் அவற்றை நோக்கினான்; அவை கடுவேகத்தில் செல்வதைக் கண்டான்; "ஆ! இம் மேகங்கள் எவ்வளவு விரைந்து செல்கின்றன; குதிரைகள் விரைந்து செல்லாமல், தேர் ஊர்ந்து செல்கிறதே!
எவ்வளவு விரைந்து செல்லினும் இம் மேகங்களுக்கு முன் நம் தேர் செல்ல இயலாதே எனக் கவலையுற்றான். உடனே அவன் மனதில், நமக்கு முன்னே செல்லும் இம் மேகங்களைத் தூதாக அனுப்பினால், நமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் தலைவிக்கு ஆறுதலாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றவே, மேகங்களைப் பார்த்துப் பாடுகிறான்...
""ஓடுகின்ற மேகங்களே! ஓடாது நகர்ந்து மெல்ல மெல்ல வருகின்ற தேரில் வெறும் கூடு வருகின்றதென்று முன்னதாகச் சென்று என் காதலியிடம் அறிவியுங்கள். நீங்கள் போகின்ற வேகத்தில் அவளை எங்கே சந்திக்கப் போகிறீர்கள்? அழகிய நெற்றியை உடைய அவளைக் காண நேர்ந்தால், அவசியம் என் நிலையைக் கூறுங்கள்'' என வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். தலைவியைக் காண எண்ணங்கொண்டு வருகின்ற தலைவனது உயிர், தலைவியிடத்தே இருக்கிறது. உயிர் நின்ற உடம்பில்தான் உணர்வும் எண்ணமும் இருக்கும். அவையில்லாத உடல், வெறும் கூடாகத்தான் இருக்கும் என்பதை எத்தகு ஆழமாக இத்தலைவன் உணர்த்துகிறான். அக்கலம்பகப் பாடல் இதோ,
""ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்
கூடு வருகுதென்று கூறுங்கள்-நாடியே
நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்
சந்திச்சீர் ஆமாகில் தான்''
(பா-110)
இது தலைவன் படும் வருத்தம். இனி, ஒரு தலைவி படும் துயரைக் காண்போம்.
நந்தி மன்னன் மேல் காதல் கொண்ட இந்நங்கைக்கு உணவு செல்லவில்லை; உறக்கமும் கொள்ளவில்லை; காதல் மிக விஞ்சியது; உடல் முழுவதும் அவளுக்கு நெருப்புப்போல் கொதிக்கிறது; கதறினாள்; வாய்விட்டுப் புலம்பினாள். அதைக் கண்ட தோழிமார், அவளது வெப்பம் தணிவதற்குச் சந்தனத்தை மணப்பொருள்களோடு கூட்டிக் கலந்து, குழைத்து அவள் உடலெங்கும் தடவினர். உடனே அவளுக்குச் சினம் பொங்குகிறது."யாரோ சில பைத்தியக்காரிகள், நெருப்பின் சாரத்தை எல்லாம் ஒன்றாகச் சேர்த்தெடுத்துக் குழப்பி அதற்கு மிகக் குளிர்ச்சியுடைய சந்தனமென்று பெயர்வைத்து என்மீது தடவிவிட்டார்களே! இதுவா சந்தனக்குழம்பு? சந்தனமானால் இப்படிச் சுடுமா? யாரை ஏமாற்றுகிறார்கள்? என்று வருந்துகிறாள்.
காதலர்க்கு, குளிர்ந்த பொருள் எல்லாம், காதல் வெப்பத்தால் சுடுவது இயற்கை. தழலுக்குச் சாறில்லை ஆயினும் மிக்க வெப்பம் என்பதைக் காட்டுவதற்கு இவ்வாறு பாடப்பட்டமை வியத்தகு கற்பனை. இது இல்பொருள் உவமை அணியைச் சேர்ந்தது. இத்தலைவியின் புலம்பலில் வெளியான ஓர் அருமையான பாடல் இதோ,
""செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்'' (பா-108)
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக