22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 2 : முத்தமிழ்த்திறம்!

"முத்தமிழ் வித்தகர்' .வெள்ளைவாரணர்


மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்றாத நிலைக்களமாக விளங்குவது அவர்கள் பேசும் மொழியாகும். மொழியின் உதவியினாலேயே மக்களது கல்வி உருவாகின்றது. மக்கள் தாம் எண்ணிய எண்ணங்களை மற்றவர்களுக்கு விளங்க எடுத்துரைப்பதற்கும், பிறர் எண்ணியவற்றைத் தாம் கேட்டறிதற்கும் அவர்களால் பேசப்படும் மொழியே இடைநின்று துணை செய்கின்றது. மாந்தரது எண்ணத்தின் வெளிப்பாடாகிய மொழி, அவர்தம் கருத்து வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் துணை செய்யும் சிறப்புடையது என்பதனை நுண்ணிதின் உணர்ந்த பண்டைத் தமிழ் மக்கள், தம்மால் பேசப்படும் தாய்மொழியாகிய "தமிழை' இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அமைத்துக் கொண்டனர்.


உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினை உடையது இயற்றமிழ் எனப்படும். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது. தான் சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத்திறத்தால் புலப்படுத்தும் மொழிநடை இசைத்தமிழ் எனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டு, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழென வழங்கப்படும்.

எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத்தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற்றமிழ் என்றும், கேட்போர் உள்ளத்தினைக் குளிரச் செய்யும் இன்னோசை மிக்க உரையின் இயல்பினை இசைத்தமிழ் என்றும், மக்கள் சொல்வன அவர்களது உடம்பிற்தோன்றும் மெய்ப்பாடுகளால் பிறர்க்குப் புலப்படும்படி அமைந்த மொழிநடையினை நாடகத்தமிழென்றும் மிகப் பழமையான காலத்திலேயே தமிழ் முன்னோர் வகுத்துள்ளனர். மாந்தர் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரையினால் பிறர்க்கு அறிவுறுத்தவும், பிறர் உரையினால் அறிவித்தவற்றைத் தம் உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ்மொழி அமைந்தமையால் அதனை "முத்தமிழ்' என்ற பெயரால் முன்னையோர் வழங்குவராயினர்.

ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே முத்தமிழ்த்திறம் பற்றிய இலக்கண நூல்கள் பல இருந்தன. அவை எழுத்து, சொல், பொருள் என்னும் இயற்றமிழ் மாத்திரத்தோடு அமையாது இசையிலக்கணங்களும், கூத்திலக்கணங்களும் அமைந்திருந்தன. ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழுள் இயற்றமிழ் இலக்கணத்தை மட்டும் பிரித்து விளக்கும் முறையில் தொல்காப்பியத்தை இயற்றியருளியுள்ளார். இச்செய்தி,
""வடக்கின்கண் வேங்கடமும் தெற்கின்கண் குமரியும் ஆகிய அவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே, அவர் கூறும் செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னை இலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக் கண்டு, அவ்விலக்கணங்களெல்லாம் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு அறியலாகாமையின், "யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவல்' என்று அந்நூற்களிற் கிடந்தவாறன்றி, அதிகார முறையான் முறைப்படச் செய்தலை எண்ணி அவ்விலக்கணங்களுள் எழுத்தினையும், சொல்லினையும், பொருளினையும் ஆராய்ந்து பத்துவகைக் குற்றமும் தீர்த்து, முப்பத்திரண்டு வகை உத்தியோடு புணர்ந்த இந்நூலுள்ளே அம்மூவகை இலக்கணமும் மயங்கா முறைமையிற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்காட்டி, ஏனையிலக்கணங்களையும் தொகுத்துக் கூறினான்''
எனப் பனம்பாரனார் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரைப்பகுதியால் இனிது விளங்கும்.

முத்தமிழுள் இயற்றமிழ் இலக்கணத்தை மட்டும் உணர்த்த எடுத்துக்கொண்ட ஆசிரியர் தொல்காப்பியனாரும், முத்தமிழ்த் திறம்பற்றிய பழைய வழக்கினை ஒரோவிடத்து மேற்கொண்டு தமது நூலிலுள்ளும் இசைநூன் முடிபுகள் சிலவற்றை ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றார். அளபெடை கூறுமிடத்து,
""அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீட்டலும்
உளவென மொழிப இசையோடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்''
(தொல்.நூன்மரபு-33)
எனவரும் நூற்பா, எழுத்துக்களில் உயிர்க்கண்ணும் மெய்க்கண்ணும் மாத்திரை கடந்து மிக்கொலித்தல் இசையோடு பொருந்திய யாழ்நூல் இடத்தன எனப் பிறன்கோட் கூறலென்னும் உத்தியால், எழுத்திற்காவதோர் இசை மரபினைக் குறித்தல் காணலாம். பிறன்கோட் கூறலென்னும் உத்தியினை விளக்கவந்த பேராசிரியர் ""பிறன்கோட் கூறல் - தன்னுலே பற்றாக, பிறநூற்கு வருவதோர் இலக்கணங்கக் கூறுமாறு கூறுதல் அது'
""அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை'' (13)
""அளபிறந்த துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்'' (33)
""பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்
கண்ணிய புறனே நால்நான்கு என்ப'' (1195)
என இவை அவ்வந் நூலுள் கொள்ளுமாற்றால் அமையும் என்றவாறாயின'' எனத் தொல்காப்பியத்திலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்கள் தந்து விளக்கியுள்ளார். ஈண்டு தன்னூல் என்றது, ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழுள் இயற்றமிழுக்கு இலக்கணமாகச் செய்த தொல்காப்பியத்தை; பிறநூல் என்றது ஏனை இசைத்தமிழ், நாடகத் தமிழுக்குரிய இலக்கண நூல்களை. இவற்றுள்,
""அரையளபு குறுகல் மகரமுடைத்தே
இசையிட னருகும் தெரியுங் காலை'' (13)
என்னும் இந் நூற்பாவிற்கு ""மகரமெய் தனக்குரிய அரை மாத்திரையினும் குறுகி வருதலையுடைத்து; இசைத்தமிழின் கண் தனக்குரிய அரை மாத்திரையினும் பெருகி (மிக்கு) ஒலிப்பதாகும்; அதன் ஒலியளவினை ஆராயுங் காலத்து'' எனப் பேராசிரியர் பொருள் கொண்டுள்ளார். இதன்கண் அருகும் என்னும் சொல், பெருகும் (நீண்டொலிக்கும்) என்னும் பொருளில் பயின்றுள்ளது. இசையின்கண் மகரமெய் பெருகி ஒலிக்கும் எனப் பேராசிரியர் சுட்டிய இசைத்தமிழ் மரபு இங்கு நோக்கத்தகுவதாகும். மூலாதாரத்திலிருந்து இசையினை எழுப்புமிடத்து, மகர மெய்யினாலே சுருதியைத் தோற்றுவித்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாதத்தைத் தொழில் செய்து பாடுதல் தொன்றுதொட்டு வழங்கிவரும் இசைமரபாகும். இவ்வாறு இசைச் சுருதியினை மூலாதாரத்திலிருந்து தோற்றுவித்து, ஆளத்தி (ஆலாபனை) செய்தற்கு "மகரமெய்' துணையாகப் பயன்படும் திறத்தினை,
""மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்
பகருங் குறில்நெடில் பாரித்து - நிகரிலாத்
தென்னாதெனா வென்று பாடுவரேல் ஆளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை''
எனவரும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள் வெண்பாவில், மகரத்தின் ஒற்றால் சுருதி விரவும் என்ற தொடரால் நன்குணரலாம். இம்முறை சங்க காலத்திலும் தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கிலிருந்ததென்பது, "இம்மென விமிரும்' என்ற சங்கவிலக்கியத் தொடராலும், "மும்மென்றிசை முரல் வண்டுகள்' (1-11-3) என வரும் தேவாரத் தொடராலும் இனிது புலானாகும். இத்தொடர்களில் "இம்ம்', "மும்ம்' என மகரவொற்றால் சுருதியினைத் தோற்றுவிக்கும் முறை குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இயற்றமிழ் பற்றாக மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகுதலைக் கூறவந்த தொல்காப்பியர், இசைத்தமிழ் பற்றாக மகரம் தன் அரைமாத்திரையிற் பெருகியொலித்தல் இசையில் சுருதியைத் தோற்றுவிக்கும் நிலையில், மகரமெய் ஒன்றற்கேயுரிய சிறப்பிலக்கணம் எனவும், இவற்றின் வேறுபாட்டினைத் தெரிந்துணர்க என்பார்,
""நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்'' (அகத்திணை-52)
எனப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கினாலும், உலக வழக்கினாலும் புலவரால் பாடுதற்கமைந்த புலனெறி வழக்கமாகிய அகத்திணை நெறியிணை ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பிடுதலால், அவர் காலத்து நாடகத்தமிழ் பற்றிய நூல்களும் வழங்கியுள்ளமை புலனாகும்.
தொல்காப்பியனார்க்குக் காலத்தால் முற்பட்ட அகத்தியனார் மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தார் என்பதனைப் பண்டை உரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர். தென் மதுரைத் தலைச்சங்கத்து இயலிசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியனாரால் செய்யப்பட்ட "அகத்தியம்' என்றதொரு தமிழிலக்கண நூல், இறையனார் களவியல் உரையிலும் இளம்பூரணர் உரையிலும் சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.

""அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும்'' எனவும், ""தோன்று மொழிப் புலவரது பிண்டமென்ப'' என்றதனால், பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளதென்பது, அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின்'' எனவும் கூறுவார் பேராசிரியர். ""அகத்தியம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நிற்றலின், அது பிண்டத்தினை அடக்கிய வேறொரு பிண்டம்'' என்பார் நச்சினார்க்கினியர். மேல் எடுத்துக்காட்டிய உரைத் தொடர்களால் அகத்தியம் முத்தமிழுக்கும் இலக்கண நூல் என்பது நன்கு தெளியப்படும்.

""நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன'' என அடியார்க்கு நல்லார் கூறுதலால், முத்தமிழிலக்கண நூலாகிய அகத்தியம் பன்னூற்றாண்டுகட்கு முன்னரே இறந்தொழிந்தமை பெறப்படும். இவ்வாறு பன்னெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் இயல், இசை, நாடகம் என வளம்பெற்று வளர்ந்த "முத்தமிழ்'த் திறங்களையும் இனிது விளக்கும் இலக்கியமாக இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது சிலப்பதிகாரமாகும். முத்தமிழ்க் காப்பியமாகிய இதனை, ""பழுதற்ற முத்தமிழின் பாடல்'' எனப் போற்றுவார் அடியார்க்கு நல்லார்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: