22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 14 : தமிழின் சிறப்பு!

 யாழ்ப்பாணப் புலவர் .சி.கந்தையா பிள்ளை

""கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ''
என்று ஆன்றோர் கூறிய பொருள் சிற்சில மொழிகளை ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும் உலக வழக்கினும் திருத்தமடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வனவாய்ப் போதரும் பழைய மொழிகள் சிலவேயாம். இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியை ஒழித்து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப்பழத்தினும் இனிய மெல்லிய ஓசை இன்பம் வாய்ந்த செந்தமிழ் மொழியோ, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடும் உலவி வருதலை உற்று நோக்குங்கால் அதனை வழங்கிவந்த நன் மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், எவ்வளவு அமைதியான தன்மையும், எவ்வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதை அறிகின்றோம்.


பழைய நாள்களில் வேறு பல மொழிகளைப் பேசி வந்த மக்கள், நுண்ணறிவிலும் அமைந்த குணத்திலும் நாகரிகச் சிறப்புள்ளவர்களாக யில்லாமையினால், அவர்கள் வழங்கிய மொழிகள் எல்லாம் ஆண்டுகடோறும் மாறுதல்கள் பல எய்தி, இலக்கண வரம்பில் அகப்படாவாய்ப் பயனின்றிக் கழிந்தன. தமிழைச் சூழ இஞ்ஞான்று நடைபெறும் பல மொழிகளை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அம்மொழிகள் ஓர் இலக்கண வரம்பில்லாமல் பலபடச் சிதறி ஒழுங்கின்றிக் கிடத்தல் தெள்ளிதிற் புலனாகும்.

""தமிழ் கிரேக்க மொழியினும் நயமான செய்யுள் நடையுடையது;
லத்தீன் மொழியினும் பூரணமானது'' (வின்ஸ்லோ)
""மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும்
சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று'' (டெய்லர்)
தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள்:
""பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்''
(வில்லிபாரதம்)

"" கடுக்கவின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்கவந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்கவாரமென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ''
""தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்''
(திருவிளையாடற் புராணம்)

""தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்
தடாதகாதேவி யென் றொருபேர்
தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ
சவுந்தர மாறனா னதுவுங்
குமரவேள் வழுதி யுக்கிரனெப்பேர்
கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
கூட்டுண வெழுந்த வேட்கையா லெலிலிக்
கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்''
(மதுரைக் கலம்பகம்)

""ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனி யாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்''
(தண்டி-உரை-மேற்கோள்)

""வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ்
சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வைகை யாறுஞ்
சோலையாண் பணையும் வேதக் கதவமுந் தொழும்பு கொண்ட
வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி...''
(திருக்குற்றாலத் தலபுராணம்)

""நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்தில வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே''
(மனோன்மணீயம்)

இவ்வகைப் பாடல்கள் எழுதற்குரிய காரணங்கள்: தாசுக்கள், ஆரியர் எனப்படும் மக்களிடையே நடந்த யுத்தங்களைப் பற்றி வேத பாடல்கள் கூறுகின்றன. தாசுக்கள் எனப்பட்டோர் தமிழர். இவ்வுணர்ச்சியின் வேகம் நீண்டகாலம் இருந்து வந்தது. இதனால் தமிழை ஆரியத்திலும் தாழ்ந்ததாகக் கூறும் கட்சியொன்றும் தமிழ்நாட்டில் நீண்டகாலம் தொட்டு இருந்து வருவதாயிற்று. சமயகுரவர் காலத்தும் இவ்வகை உணர்ச்சி யிருந்தமையினாலேயே இரு கட்சியினரையும் சந்து செய்தற் பொருட்டுத் தேவாரத்தில், ""ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'' எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்கு நாள் வளர்வதாயிற்று. அதில் பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமையாமையும் அறியாது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே ""தேவ பாடையின் இக்கதை செய்தவர்'' எனக் கூறி வடமொழிக்குப் பணிகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானோர் அம்மக்களின் அறியாமைக்கு இரங்கி, அவர்கள் மனங்கொண்டு தமிழில் பற்று உண்டாகுமாறு அதன் பெருமையை உரைத்து வந்தனர். இம்மாறுபட்ட உணர்ச்சி இன்றும் முற்றாக அவிந்துவிடவில்லை. நீறு பூத்த நெருப்புப்போல் அடங்கிக் கிடக்கின்றது எனலாம்.
தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (தொல்.பொருள்-490)
""ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால்
செந்தமிழே தீர்க்க சுவா''
எனக் காட்டியுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ்வுணர்ச்சி தமிழ்நாட்டில் நீண்டநாள் உள்ளதென்பது நனி விளங்கும்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: