22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 24 : தற்கால தமிழ்ப் பத்திரிகை!

 "பேனா மன்னர்' டி.எஸ்.சொக்கலிங்கம்

பிரான்ஸ் ஜெர்மனியர் "பருந்து பாய்ச்சலில் விமானங்களை உபயோகித்தார்கள்' என்ற செய்தியை தமிழ்ப் பத்திரிகைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். படிப்பவர்களுக்கு இந்த வாக்கியத்தில் புதிதாக எதுவும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், பத்திரிகைக்காரர்களுக்குத்தான் அதிலுள்ள கஷ்டம் தெரியும். யுத்தம் நடக்கிற வேகத்தில் எத்தனையோ புதுப்புது வார்த்தைகளும் சொற்றொடர்களும் சிருஷ்டியாகின்றன. இவையெல்லாம் தாய்பாஷை பத்திரிகைக்காரர்களின் தலையில் வந்து விழுகின்றன. தந்திகள் எல்லாம் ஆங்கிலத்தில் வருவதால் ஆங்கிலப் பத்திரிகைகளை நடத்துபவர்களுக்கு, மொழிபெயர்க்க வேண்டிய சிரமம் எதுவும் கிடையாது.
வந்த வார்த்தைகளை அப்படியே போட்டுவிடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் அதை மொழிபெயர்த்தாக வேண்டும். சாவகாசமாக யோசித்து ஒரு தமிழ் வார்த்தையைக் கண்டுபிடிக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்று வந்த செய்திகள் அன்று மாலை பத்திரிகைகளில் போயாக வேண்டும். அதற்குள்ளாக வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு அவசரம். ÷எனவே, புதிதாக ஒரு வார்த்தை வந்துவிட்டால், பத்திரிகை ஆபீசில் ஏற்படும் பரபரப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் மூளையை ஓட்டுவார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு வார்த்தையைச் சொல்லுவார்கள். எல்லாவற்றையும் பார்த்து அவற்றில் எது பொருத்தமானதென்று தோன்றுகிறதோ அது அன்றைய பத்திரிகையில் வரும்.  Dive Bombers  என்ற ஆங்கில வார்த்தைக்குப் "பருந்து பாய்ச்சல் விமானங்கள்' என்ற தமிழ்ப் பெயரை கேட்டபின்பு, அது பொருத்தமாயிருக்கிறதென்று அநேகர் ஒப்புக் கொள்ளலாம். ஆனால், அந்த வார்த்தை பத்திரிகை நிலையங்களில் எவ்வளவு வேலையைக் கொடுத்தது என்பது, வெளியிலுள்ளவர்களுக்குத் தெரியாது.
 ரஷ்யாவுடன் ஜெர்மனி யுத்தம் ஆரம்பித்தவுடன் Scorched Earth Policy என்ற பதங்கள் புதிதாய் உபயோகத்திற்கு வந்தன. இதற்குத்தான் "பொசுக்கல் கொள்கை' என்ற தமிழ்ப் பதம் அமைக்கப்பட்டது. Successful retreat என்ற பதம் யுத்த செய்திகளில் தற்சமயம் தண்ணீர்பட்ட பாடாய் இருக்கிறது. அதற்கு தமிழ் வார்த்தைகளாக "வெற்றிகரமான வாபஸ்' என்ற பதத்தை தமிழ்ப் பத்திரிகைகள் உபயோகிக்க ஆரம்பித்தன. இன்று தமிழ் நாடெங்கும் இந்த "வெற்றிகரமான வாபஸ்' என்ற பதம் சர்வ சாதாரணமாக வழங்குகிறது. அதை அறியாதவர்களே இருக்க முடியாது. இம்மாதிரியாக பல புது வார்த்தைகளையும், வாக்கியங்களையும், அர்த்தங்களையும் ஏற்படுத்தும் வேலையை தமிழ்ப் பத்திரிகைகள் செய்து வருகின்றன. ஆங்கிலம் படிக்காதவர்கள் கூட தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்து யுத்த செய்திகளின் பொருளை நன்றாய் தெரிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மொழி தற்சமயம் வளர்ந்திருக்கிறது. இதற்குப் பத்திரிகைகளே காரணம்.

 தமிழில் பிறபாஷை வார்த்தைகள்
 இப்பொழுது நடந்துவரும் யுத்த செய்திகளைப் படிப்பதில்தான் ஜனங்களுக்கு ரொம்ப ஆவல் இருக்கிறது. இந்த செய்திகளை தனித் தமிழில் கொடுக்க பண்டிதர்களால் முடியுமா? டாங்கி, விமானம், பெட்ரோல், மோட்டார், பீரங்கி, குண்டு, துப்பாக்கி, தோட்டா ஆகிய வார்த்தைகளை உபயோகிக்காமல் யுத்த செய்திகளை அவர்களால் சொல்லவே முடியாது. டாங்கியும், பெட்ரோலும், மோட்டாரும் ஆங்கிலம். இவற்றை எப்படி மொழிபெயர்ப்பார்கள்? "தான் இயங்கும் ஊர்தி' என்று ஒவ்வொரு தடவையும் மோட்டாருக்கு பதில் நீளமாக எழுதுவார்களா? இவற்றையெல்லாம் பார்த்தால், தனித் தமிழில் யுத்த செய்திகளைச் சொல்லவே முடியாது என்பதை அறிந்துகொள்ளலாம்.
 ÷தனித் தமிழில்தான் பேசுவேன் என்று யாராவது வைராக்கியம் கொண்டால், யுத்த செய்திகளைப் பற்றிப் பேச வேண்டிய இடங்களில், ஊமையரைப்போல அபிநயத்தில் காட்டலாமேயொழிய, வாயினால் பேச முடியாது. அபிநயத்தால்தான் கருத்தை வெளியிட முடியுமென்றால், அப்புறம் அந்த பாஷை இருந்துதான் பயனென்ன? இதைப்போலவே மற்ற துறைகளிலும் வளர்ச்சிக்குத் தக்க வார்த்தைகள் தமிழுக்கு அவசியமாயிருக்கின்றன.
 ÷தமிழ் தனித்தியங்கக்கூடிய மொழி என்பது உண்மையானால், கலைச் சொற்களைச் தமிழில் அமைக்க வேண்டும் என்ற பேச்சுக்கு அவசியமே இல்லை. புத்தம் புதிய கலைகளுக்கு வேண்டிய சொற்கள் தற்சமயம் தமிழில் இல்லையென்பதையே அது காட்டுகிறது. அந்த நிலைமையில் "மொழி பாதுகாப்பு' என்று பேசுவதற்கு அர்த்தமே இல்லை. ஏனெனில், சுலபமாய் புரியக்கூடியதும், பழக்கத்தில் வந்து விட்டதுமான ஒரு வார்த்தையைத் தமிழாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதற்கு பதில் தனித்தமிழ் வார்த்தையை உண்டுபண்ணப் புறப்படுவது வீண் வேலையே தவிர வேறு எதுவுமில்லை. அறிவு வளர்ச்சிக்குத்தான் பாஷையேயொழிய, சில கிணற்றுத் தவளைகளின் தற்பெருமைக்காக பாஷையல்ல.

 தமிழர் வளர; தமிழ் வளர வேண்டும்!
 தமிழ்மொழி வளர்ச்சி முடிந்ததல்ல. வளர்ந்துகொண்டே இருப்பது. வளர்ச்சி முடிந்ததற்கோ அல்லது வளரவிடாமல் தடுப்பதற்கோதான் "பாதுகாப்பு' வேண்டும். அந்தப் பாதுகாப்பு வேலைக்கு யாரும் தர்மகர்த்தாக்களாக முன்வருவதற்கு தமிழர் இடம் கொடுக்கக்கூடாது. ஏனெனில், தமிழர் வளர்ச்சியடைய வேண்டும். தமிழர் வளர்ச்சியடைய வேண்டுமானால் தமிழ் வளர வேண்டும். தமிழ் வளர வேண்டுமானால், தமிழ் வளர்ச்சிக்கு அவசியமான எந்த திசைச் சொல்லையும் தள்ளிவிடக் கூடாது. கூடியவரையில் தமிழில் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியதுதான். முடியாத இடங்களில் தாராளமாக பிற பாஷை சொற்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 புலவர்கள் உருப்படியான வேலைகள் எதுவும் செய்ய முன் வருவதில்லை. மோட்டாரை, தானே இயங்கும் ஊர்தி என்று அவசியமில்லாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்திலுள்ள அவசியமான வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில்லை. உதாரணமாக, பாலிஸி, பிரின்ஸிபிள், கிரீட், டாக்டரின் ஐடியா ஆகிய இத்தனை வார்த்தைகளும் வெவ்வேறு பொருளைக் கொண்டவை என்றாலும், இவை எல்லாவற்றிற்கும், "கொள்கை' என்ற ஒரே வார்த்தைதான் தற்சமயம் வழக்கத்தில் இருக்கிறது. இந்தப் புலவர்கள் ஏன் ஐந்து வெவ்வேறு வார்த்தைகளைக் கண்டுபிடிக்கக் கூடாது? வக்கீலுக்கு, வழக்கறிஞர் என்று சொல்லலாமா, நியாயவாதி என்று சொல்லலாமா? என்ற ஆராய்ச்சி அவசியமில்லை. பெயர்களை மொழிபெயர்ப்பதை விட்டு, பலரது கருத்து வார்த்தைகளுக்குப் பொருத்தமான, சுலபமான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பார்களாக. அதுதான் ரொம்ப அவசியம். அந்த வேலையில் அவர்கள் இறங்கினால் தமிழ் தானாகவே வளர்ச்சியடையும். "பாதுகாப்பு' வேண்டுமே என்ற பயம் அவர்களுக்கு ஏற்படவே செய்யாது.

 ஆதாரத் தமிழ்
 தமிழ்மொழி வளர்ச்சியடைய வேண்டுமானால், சில காரியங்களை நாம் உடனே செய்தாக வேண்டும். ராஜாங்க பாஷை ஆங்கிலமாய் இருப்பதாலும், செய்திகளும் புதிய கருத்துகளும் ஆங்கில மொழியிலேயே வருவதாலும் அதற்குத் தக்கபடி தமிழை வளர்க்க வேண்டும். தற்காலம் வழக்கத்திலுள்ள தமிழ் மொழியை அடிப்படையான (பேஸிக்) தமிழ் என்றே சொல்லலாம். ஆங்கிலமொழி ரொம்ப விரிவடைந்திருப்பதால், புதிதாகக் கற்றுக் கொள்ளுகிறவர்களுக்குச் சுலபமாய் இருக்கும் பொருட்டு "அடிப்படை ஆங்கிலம்' என்று ஒரு முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு அம்மாதிரிச் செய்யவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், தமிழ் அந்த அடிப்படையில்தான் இருக்கிறது. ஆங்கிலத்தைப்போல விரிவடையும்படி அதைச் செய்ய வேண்டும். அதற்கு அதிகமான வார்த்தைகள் வேண்டும். வெவ்வேறு பொருளுள்ள பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தற்சமயம் ஒரே தமிழ் வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது.
 பிரீடம், லிபர்ட்டி, இண்டிபெண்டன்ஸ் மூன்றுக்கும் "விடுதலை' என்பதுதான் தற்சமயம் உபயோகத்திலுள்ள வார்த்தை. பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதனால் இன்ன ஆங்கில வார்த்தைக்கு இன்ன தமிழ் வார்த்தைதான் அர்த்தம் என்ற நிச்சயமில்லாமல் தமிழ் உழலுகிறது. நிச்சயமான பொருளை வரையறுத்தால்தான் பாஷை வளர முடியும். இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் போட்டோ, அல்லது சுற்றி வளைத்து வியாக்கியானஞ் செய்தோ சொல்லிக்கொண்டு போவதால் பாஷை வளர முடியாது. அவசியமான ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடித்தாக வேண்டும். வழக்கத்தில் நிலைத்துப்போன பிறமொழி சொற்களுக்குப் பதிலாக, கண்டிப்பாக தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சைக்கிள், மோட்டார், ரயில், பெட்ரோல், பீரங்கி, துப்பாக்கி இம்மாதிரி வார்த்தைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். இம்மாதிரியாகத் தமிழ் வார்த்தைகளைத் தொகுத்து ஒரு நிச்சயமான அர்த்தத்திற்குள் அவைகளை அமைக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. அதுதான் ஆங்கில-தமிழ் அகராதி இல்லாதிருப்பது தமிழுக்கே பெரிய அவமானம் என்று நினைக்கிறேன்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: