டாக்டர் மு.வரதராசனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் மு.வரதராசனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முத்திரைப் பதிவுகள் - 5 - பிரம்பின் நிழல்


பழங்காலத்தில் பாணர் ஒரு தனிக்குடியினராகக் கருதப்பட்டு வந்தனர். அவர்களுள் இசைக் கலையை வளர்த்துச் சிறப்போடு வாழ்ந்தவர் பலர். கலையுலகில் சிறப்புப் பெறாத சிலர் வேறு துறையில் காலத்தைப் போக்கி வாழ்ந்து வந்தனர். மருத நிலத்துப் பொய்கைகளில் மீன்களைப் பிடிப்பதில் காலத்தைப் போக்கியவர் சிலர். அதைத் தொழிலாகக் கொண்டவர் சிலர். அதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அதில் தேர்ச்சி பெறுதல் இயல்பே அல்லவா? அத்தகைய பாணன் ஒருவன் மீன் பிடித்த காட்சியை அக்காலத்துப் புலவர் ஒருவர் தம் பாட்டில் தீட்டியுள்ளார். மருதநில வளத்தைச் சிறப்பித்துப் பாடுமிடத்தில் இதைத் கூறியுள்ளார்.


இறைச்சி கொண்ட தோல் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கோல் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டான் பாணன். ஒரு குளத்தின் கரையில் நின்று அந்த மூங்கிலின் முனையில் ஒரு கயிற்றை வலித்துக் கட்டினான். அந்தக் கயிற்றின் முனையில் வளைந்த தூண்டிலிரும்பைக் கட்டினான். அத்தூண்டிலில் இறைச்சித் துண்டு வைத்துக் கயிற்றினை நீரில் விட்டான். அவன் எதிர்பார்த்தபடியே ஒரு வாளை மீன் தூண்டிலில் இரையை நாடி வந்தது. வாயைத் திறந்து நெருங்கிய அந்த வாளை இரையைக் கெளவியது. தூண்டில் கயிறும் நடுங்கியது. ஆனால் இரை வாளையின் வாயில் அகப்பட்டதே தவிர, வாளை மீன் தூண்டிலில் அகப்படவில்லை. மீன் பிடிப்பதில் வல்லவனான பாணனுடைய முயற்சி தோற்றது. வாளை வென்றுவிட்டது.

 

பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்

கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த

நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொவீஇக்

கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்

பொதி யிரை கதுவிய போழ் வாய் வாளை

(பெரும்பாணாற்றுப்படை 283-7)

 

புலவர் இவ்வாறு கூறுவதில் கற்பனைச் சிறப்பு ஒன்றும் இல்லை. தாம் கண்ட காட்சி ஒன்றை உள்ளபடி கூறுவதுபோல் உள்ளது. இது விரிவான வருணனையும் அல்ல. பாணன் மீன் பிடிப்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். மீன் அகப்பட்டுக்கொண்டது என்று பாடியிருப்பாரானால், அது பாட்டில் அமைய வேண்டிய காரணமே இல்லை. சுவையற்ற எளிய நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். ஆனால், 

கோள்வல் பாண்மகன் என்று அவனுடைய மீன் பிடிக்கும் திறமையைக் கூறிவிட்டு, தூண்டிலிரும்பு தனியே இருக்க, இரையை மட்டும் வாளை கௌவிக்கொண்டது என்று சொல்லுவதில் கற்பனைக்குரிய பகுதி அமைந்திருக்கின்றது. அதையும் இவ்வளவில் நிறுத்திவிட்டிருந்தால் "எத்தனையோ நாள் இவன் வெற்றி பெற்றான்; ஒரு நாள் தோற்றான். வாளை மீன் எப்படியோ தப்பியது' என்று எண்ணி அப்பால் செல்லவே தோன்றும்.


மருத நிலத்தைப் பாடும் புலவர் மேலும் அந்த வாளை மீனைப் பற்றிக் கூறுவதுதான் கற்பனை வளத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது.


அந்தப் பாணனும் அந்தக் குளத்தை விட்டு வேறு குளத்தை நாடிச் சென்றுவிட்டான். குளத்தில் வேறு யாரும் வந்து மீன் பிடிக்கவுமில்லை. தூண்டிலின் இரையை அங்காத்த வாயால் விழுங்கிவிட்டுத் தப்பித்துக்கொண்ட வாளை மீன் மட்டும் அந்தக் குளத்திலேயே இருந்தது. அதைப் பற்றிப் புலவர் மேலும் ஓரடியில் கூறுகின்றார். அந்தப் பகுதியில்தான் கற்பனை சிறப்புறுகின்றது.


முதலில் தூண்டிலின் இரையை விழுங்கிய மீன் எளிதில் தப்பித்துக்கொள்ளப் போராடியதா என்பதைப் புலவர் கூறவேயில்லை. ஆனால், வளைந்த இரும்பில் பொருந்தியிருந்த இறைச்சியை வாளை விழுங்கியபோது, ஒரு துன்பமும் அடையவில்லை என்று கூற முடியாது. இரையை விழுங்கியபோது, வளைந்த இரும்பின் முனை அதன் வாயில் உறுத்தியிருக்கும்; பொத்திப் புண்படுத்தியிருக்கும். ஆயினும், வாளைமீனின் வலிமையும் திறமையும் அந்தத் தூண்டிலின் முனையிலிருந்து தப்பி ஓடத் துணை செய்தன. ஓடிய பிறகும் அந்த இரும்பு முனை தன்னை வருத்திய துன்பத்தை வாளை மீன் மறந்துவிடுமோ? இன்னொரு முறை அந்தத் தூண்டில் தன் வாயைப் புண்படுத்துமோ? என்ற அச்சம் அந்த வாளை மீனின் உள்ளத்தில் குடிகொண்டதாம்.


வாளைமீனின் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டிருப்பதைக் கூறுவதன் வாயிலாகவே, அது பாணனுடைய தூண்டிலால் பட்ட துன்பத்தைப் புலவர் உணர்த்துகின்றார். அந்த அச்சத்தையும், வாளை மீன் பயந்து நீருள் ஒடுங்கியது' என்று வாளா கூறவில்லை. அதை உணர்த்தும் முறையில்தான் சிறந்த கற்பனை அமைந்திருக்கின்றது.


அந்தக் குளத்தின் கரையில் பிரம்புக் கொடி வளர்ந்திருக்கின்றதாம். விடியற்காலையில் பாணன் வந்து மீன் பிடித்த போது, நிழல் விழும் நிலைமை இல்லை. ஆனால், சூரியன் மேலெழுந்து வர வர, கரையில் வளர்ந்துள்ள பிரம்பின் நிழல் நீரில் விழுகின்றது. காற்றால் பிரம்பு அசையும் போது பிரம்பின் நிழலும் அசைகின்றது. நிழலின் அசைவுக்கு அதுமட்டும் காரணம் அல்ல; நீரின் இயல்பான அசைவே பெரிய காரணம். அலையலையாக நீர் அசையும்போது பிரம்பின் நிழலும் நீரில் அசைந்தசைந்து தோன்றும். இவ்வாறு அசையும் பிரம்பு நிழலை அந்த வாளைமீன் கண்டபோது, அதன் உள்ளத்தில் அடங்கியிருந்த அச்சம் வெளிப்பட்டது. விடியற்காலையில் ஏதோ ஓர் இறைச்சித் துணுக்கை விழுங்கியபோது தான் பட்ட பாட்டையும், அந்தத் துணுக்கு இருந்த தூண்டில் கயிற்றையும் வாளை நினைத்துக் கொண்டதாம். நீரில் விழுந்தசைந்த பிரம்பின் நிழலைத் தூண்டில் என்று எண்ணி அஞ்சியதாம். முன்பட்ட துன்பத்தை நினைந்து, வாளை மீன் மிக அஞ்சியதாம்.

 

பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை

நீர் தணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்

நீத்துடை நெடுங் கயம்.

 

இதுவே கற்பனை சிறக்கும் பகுதி. வாளை மீனுக்கு நினைவாற்றல் உண்டா? முன்பட்ட துன்பத்திற்குக் காரணம் தூண்டில் என்று நினைத்து நடுங்கும் தன்மை உண்டா? பிரம்பின் நிழலைத் தூண்டில் என்று மயங்கி எண்ணியிருக்குமா? இவையெல்லாம் கற்பனையுலகத்திற்குள் அடங்காத ஆராய்ச்சிகள். புலவர் வாளை மீனாக இருந்து, தூண்டிலிரையை விழுங்கி வருந்தியது முற்பகுதி. பிரம்பின் நிழலைத் தூண்டிலென்று மயங்கி நினைத்து அஞ்சியது இரண்டாம் பகுதி. இவ்வாறு முன் நிகழ்ந்த துன்பம் பின் நிகழும் அச்சத்திற்குக் காரணமாவது மக்கள் வாழ்க்கையில் உண்டு.


அதனால் புலவர், மக்களின் மனப்பான்மையை வாளை மீனுக்குக் கற்பித்து, அதனை அஞ்சி ஓடுவதாகக் கூறுகின்றார். புலவரின் கற்பனையில் உயிருள்ளவற்றிற்கும் இல்லாதவற்றிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. உணர்வு உள்ளவற்றிற்கும் இல்லாதவற்றிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகையால், அழுகை, மகிழ்ச்சி, வெகுளி, அச்சம் முதலியவை மக்களுக்கே சிறப்பியல்புகளாக இருந்தாலும், புலவர்கள் மற்றவற்றிற்கும் அவை உள்ளன போல் கற்பனை செய்து பாடுவது உண்டு. இந்தப் பாட்டின் பகுதியில் வாளை மீன் அறிவு, நினைவு, அச்சம் எல்லாம் பெற்றிருப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம் அதுவே.


(கடியலூர் உருத்திரங் கண்ணனார்) என்றோ ஒரு நாள் பாணனின் தூண்டிலை உற்று நோக்கியிருப்பார் புலவர். மற்றொரு நாள் பிரம்பின் நிழலை உற்றுப் பார்த்தபோது அவருடைய நெஞ்சம் மீனின் துன்பத்தையும் அச்சத்தையும் கற்பனை செய்து பார்த்தது. இந்தக் கற்பனைக்குக் காரணமான பிரம்பின் நிழலையே இந்தப் பாட்டின் பகுதியில் காண்கின்றோம்.


‘மு.வ.கட்டுரைக் களஞ்சியம்’ முதல் தொகுதி. 


நன்றி - தமிழ்மணி 2016


வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 5 : தமிழுக்கு முதல் இடம்!


டாக்டர் மு.வரதராசனார்


ஒரு நாட்டில் பெரும்பாலான மக்கள் என்ன மொழி பேசுகின்றார்களோ அந்த மொழியிலேயே ஆட்சி முதல் ஆடல் பாடல் வரையில் எல்லாம் நடைபெறுதல் வேண்டும். அப்படி இல்லையானால், அது அந்த நாட்டிற்கே தீமையாக விளையும். அந்த நாட்டு மொழி பல வகையிலும் குறைபாடு உடைய மொழியாகவும் இருக்கலாம். வேறு நாட்டுமொழி அதைவிடச் சிறப்பு உடையதாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்த நாட்டின் வாழ்வில் நாட்டு மொழிக்கே முதன்மையான இடம் இருக்க வேண்டும்.

தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார்

"மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள்?

நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை... ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத்தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன்.

இந்த மாரியம்மன் கோயிலருகே சாலை ஓரத்தில் பகல் ஒரு மணி வெயிலில் படுத்துச் சுருண்டிருந்த உடம்பைக் கண்ட போதும் இந்த எண்ணமே உண்டானது. நடுப்பகலிலே இப்படிக் குடிக்கிறவன் பொழுது போனால் எவ்வளவு குடிப்பான் என்று சிறிது வெறுப்போடு எண்ணிக்கொண்டே நடந்தேன். அவனைப் பார்த்துக் கொண்டே இளைஞர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நிலைமை என்று தான் பார்க்கலாமே என்று நானும் அவர்கள் இருந்த பக்கமாக நடந்து சென்றேன்.

"குடிகாரனா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

"இல்லைங்க" என்றார் ஒருவர்.

"வேறு என்ன? காக்கை வலிப்பா?" என்றேன்.

"அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா?" என்றார் மற்றொருவர்.

அவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். தீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். "சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்?" என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.

அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் "வேலா, வேலா" என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, "இது என்ன அய்யா! பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே! நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா?" என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், "இதுதான் அய்யா பட்டணம்! போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா? எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா? அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்" என்றார்.

'பட்டினி' என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் - கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் - ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள்.

காப்பி குடிக்கச் சொல்வதற்கு அவனை அசைத்துப் பார்த்தார்கள்; கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒவ்வொரு வேளையில் மெல்லிய குரலில் ஏதோ ஒலி வந்தது. ஆனால் கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஓர் ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் உள்ளே விட்டார். மெல்லக் கண் திறந்து பார்க்கும் காட்சியைக் கண்டோ ம். உடனே ஒரு மாணவர் எழுப்பி உட்கார வைத்தார். இன்னொருவர் கையில் இருந்த காப்பியை நீட்டினார். அந்தக் காப்பியைக் கண்டதும், மயக்கத்தில் இருந்த அவனுடைய கைகள் ஒரே ஆவலாக அந்தக் காப்பிக் குவளையை இழுத்து வாயில் வைத்துக் கொண்டன. "சூடு, சூடு, பார்த்து, பார்த்து" என்று எதிரில் இருந்தவர் சொல்வதற்குள் காப்பி முழுவதும் எப்படியோ வாயினுள் சென்றுவிட்டது. அப்போது அவனுடைய கண்களில் புலப்பட்ட ஆவலையும் வேட்கையையும் நான் எப்போதுமே கண்டதில்லை. அந்தக் கண்கள் காப்பியையும் குவளையையும் சேர்த்து வாய்க்கும் கொடுக்காமல், தாங்களே விழுங்கிவிடுவன போல் அந்தப் பார்வை இருந்தது.

உடனே அவனுடயை முகத்தில் தோன்றிய மாறுதல்தான் வியக்கத் தகுந்ததாக இருந்தது. இதுவரையில் அந்த முகத்தில் வாட்டம் இருந்தாலும் துன்பம் இல்லை; களைப்பு இருந்தாலும், பசிக்கொடுமை இல்லை. இப்போதோ பல்லை இளித்துக் கொண்டு, தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்னான், யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. தரையில் சாய்ந்துவிட விரும்பினான். வேண்டா என்று தடுத்து ஒருவர் மாரியம்மன் கோவில் சுவர் பக்கமாக நகரச் சொல்லி அந்தச் சுவரில் சாயச் செய்தார். அதற்குள் இன்னொருவர் மற்றொரு குவளைக் காப்பியும் ரொட்டித் துண்டும் வாங்கி வந்து நீட்டினார். அவனுடைய பசிக் கொடுமையால் உடனே அவைகளும் மறைந்தன. வாழைப்பழங்களும் உடனே மறைந்தன. 'அப்பாடா' என்று அயர்ந்து சாய்ந்து, சுற்றிப் பார்த்து, மருண்டு கண்ணீர் விட்டான். எல்லோருக்கும் இரக்கம் மிகுந்து விட்டது.

"எந்த ஊர் அப்பா?" என்றார் ஒருவர்.

"மதுரை" என்றான் சிறிது தெளிவான குரலில்.

"எங்கே வந்தாய்?"

"பிழைக்கத்தான் அய்யா! என் கதி...!"

"போகட்டும்; என்ன உடம்புக்கு?"

"ஐந்து நாளாச்சு அய்யா" என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான்.

உடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள்.

"எழுந்து நடக்க முடியுமா?" என்று கேட்டேன்.

"இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி" என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான்.

பிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன்.

"எழ முடியுமா?" என்று மறுபடியும் அவனைக் கேட்டேன்.

"உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி" என்றான்.

"வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தேன்.

"வீடு எங்கே? சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்" என்றான்.

"இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும்? அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா?" என்றேன்.

"இன்னும் கொஞ்சம் தூரம் தானே? இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க!" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.

ஒரு பெருமூச்சு விட்டு, "நான் பிழைக்க மாட்டேனுங்க" என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். "சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா?" என்று விம்மி விம்மிச் சொன்னான். "அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்" என்று கலங்கிச் சொன்னான்.

"நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன? இந்தக் கோயில் மேல் பக்தி என்ன?" என்று மெல்லக் கேட்டேன்.

"பக்தி இல்லை சாமி. என்னோடு வந்தவன் - எங்கள் ஊரான் - இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போவது வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்" என்றான்.

இதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான். "சாமி! உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம்! கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்" என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன்.

"உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை? அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா?" என்று பல கேள்விகள் கேட்டேன்.

"அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்" என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான்.

இவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான். பெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது "வேலா வேலா" என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான்.

நான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது.

திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, "நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்" என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து "வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்?" என்று கேட்டேன்.

"வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ" என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான்.

இதுதான் நல்ல சமயம் என்று, நான் தேறுதல் சொல்வது போல், "நீ அவசரப்பட்டு பைத்தியக்காரனைப் போல் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என்னால் ஆன உதவி செய்வேன். கடும்பசியாக இருக்கும்போதெல்லாம் இங்கே வந்து போ" என்று சொன்னேன். வேலன் தொழில் என்ன என்று உண்மையை மறைக்காமல் சொல்லும்படி பலமுறை கேட்டேன். யாரிடமும் வெளிப்படுத்தமாட்டேன் என்றும், தீமை ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி கூறிய பிறகே அதைப்பற்றி வாய் திறந்தான். அப்போதும், நீண்ட முகவுரைக்குப் பிறகே சொல்லத் தொடங்கினான்.

"நீங்கள் யாருக்கும் சொல்லக் கூடாது, சாமி. சொன்னால் என் உயிருக்கும் முடிவுதான். முனிசாமி எங்காவது போலீசாரிடம் தன்னைப் பற்றிச் சொல்லிவிடுவானோ என்று அவன் பல நாள் பயப்பட்டான். அதனால் முனுசாமி மேல் சந்தேகமும் கொண்டான். ஆனால் முனிசாமி மிக நல்லவன். பகையாளிக்கும் தீங்கு செய்யமாட்டான். வேலனும் நல்லவன் தான். வேறு வழியில்லை என்று தான் இந்தத் தொழில் செய்கிறான். எனக்கு அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. ஒருநாள் ஒரு விலையுயர்ந்த பேனாவைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். அன்றெல்லாம் நான் வெளியே திரியாமல் ஒரு மூலையில் முடங்கியிருந்தேன். போலீசாரைக் கண்டாலும் நடுக்கமாக இருந்தது. வேலன் தைரியம் வராது. யாருக்கும் சொல்லாதீர்கள், சாமி" என்று சொல்லி முடித்துக் கெஞ்சுவதுபோல் என் முகத்தநப் பார்த்தான். மறுபடியும் உறுதி கொடுத்தேன். இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தபடியே பேசினான்.

"அவன் பட்டணத்துக்கு வந்த நாலாம் நாளே ஒரு கூட்டத்தில் சேர்ந்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் ஐந்தாறு போக்கிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் சைனாபசாரிலிருந்து மூர்மார்க்கெட் வரையிலும் எங்காவது நின்று கொண்டும் திரிந்து கொண்டும் இருப்பார்கள். சில வேளைகளில் பஸ் நிற்கும் இடங்களில் நிற்பார்கள். ஆட்கள் கூட்டமாகச் சேரும் இடங்களிலே அவர்கள் நடுவில் திரிந்து கொண்டிருப்பார்கள். வேலன் அவர்களோடு சேர்ந்து விட்டான். எனக்கோ முனிசாமிக்கோ அது பிடிக்கவில்லை. ஆனால், நாங்கள் கூலியும் கிடைக்காமல் பட்டினி இருந்த போதெல்லாம் எங்களுக்குக் காப்பி பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றினவன் அவன் தான். ஒரு நாள் வேலனிடத்தில் பத்து ரூபாய் நோட்டு ஐந்து பார்த்தோம். யாரோ சட்டைப் பையில் பணப்பை (மணிபர்ஸ்) வைத்துக் கொண்டு போனதாகவும், அதை அந்த ஐந்தாறு பேரில் ஒருவன் கத்தரித்து இன்னொருவன் கையில் கொடுத்ததாகவும், அது அப்படியே கை மாறி மாடர்ன் கபேயிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரையில் வந்ததாகவும், அது வேலன் கைக்கு வந்தபோது, அதிலிருந்து ஐந்து நோட்டு எடுத்து வைத்துக் கொண்டதாகவும் சொன்னான். இதைக் கேட்டதும் முனிசாமி எங்கள் மேல் கோபத்தோடு புறப்பட்டான்.

வேலன் ஓடிப்போய் அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, போலீசாரிடம் சொல்லாதிருக்குமாறு கெஞ்சினான். இனிமேல் அந்தத் தொழில் செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுக்கும்படி முனிசாமி கேட்டான். வேலன் வாக்குறுதியும் கொடுத்தான். ஆனால் சொன்னபடி நிற்கவில்லை. ஒருநாள் முன்னைப்போல் ஒருவர் பணப்பை போய்விட்டதாகவும் இருநூறு ரூபாய் இருந்ததாகவும் அழுது கொண்டே சைனாபசாரில் சொன்னார். அதைக் கேட்டபோது முனிசாமி என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய், "வேலன் இப்படிப் பலரை அழ வைத்துப் பாவம் தேடிக் கொள்கிறானே" என்றான். வேலனை நான் தனியே ஒருநாள் உருக்கத்தோடு கேட்டேன். தான் ஒன்றும் செய்வதில்லை. என்றும் மற்றவர்களுக்குத் துணையாக இருந்து திருடிய பொருள் கைமாறும்படி செய்வதாகவும் சொல்லிச் சத்தியம் செய்தான். முனிசாமி இறந்த பிறகு நான் வேலனை ஒன்றுமே கேட்பதில்லை. எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் பட்டினி இருந்ததைப் பற்றியும் வருத்தப்படவில்லை. ஐந்து நாளாக அவனைப் பார்க்கவில்லை.

இந்தக் கோயிலுக்கும் அவன் ஐந்து நாளாக வரவில்லை. வந்திருந்தால் எனக்குத் தெரியும் கிழக்கு இறவாணத்து மூலையில் கல்சந்தில் தேங்காய் கொஞ்சமாவது வைக்காமல் போக மாட்டான். ஐந்து நாளாக அங்கே தேங்காய் இல்லை. சைனாபசாரிலும், மூர்மார்க்கெட்டிலும் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. என்னாலும் நடக்க முடியாதபோதுதான் இந்தக் கோயிலில் இருந்து உயிரை விட வந்தேன். இரவில் நேரம் கழித்து வந்தால் பார்க்க முடியும் என்று வந்தேன். கையில் காசு அகப்படாத காரணத்தால் தேங்காய் வாங்க முடியாமல் போனதோ, அல்லது கூட்டாளிகள் துரத்தி விட்டார்களோ, அல்லது போலீசார் பிடித்துச் சிறையில் வைத்து விட்டார்களோ, என்ன ஆனானோ, ஒன்றும் தெரியவில்லை. என் மனத்தில் ஒரே கவலையாக இருக்கிறது. தூங்கிக் கொண்டே இருந்தேன். அதை நினைத்துத்தான் திடுக்கிட்டு எழுந்தேன்" என்றான்.

"என்றைக்கும் ஆபத்து பிக்பாக்கெட்" என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் எழுந்து என் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, "சாமி, சொல்லிவிடாதீர்கள்" என்று கண்ணீர் விட்டுக் கெஞ்சினான்.

மறுபடியும் அவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

கொஞ்ச நேரம் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, அவனே என்னைப் பார்த்து, "ஒருமுறை போலீசாரிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்து, இரண்டு நாள் சிறையில் இருக்கும்படியாகவும், மூன்றாம் நாள் வெளியே அழைத்து வந்து விடுவதாகவும் உறுதியாகச் சொன்னான். ஒரு குற்றமும் செய்யாத நான், அவனுக்காகச் சிறையில் அடைப்பட்டு இருந்தேன். ஆனால், சொன்ன சொல் தவறாமல் அவன் மூன்றாம் நாள் வந்து என்னை அழைத்துக் கொண்டு போனான். போலீசார் யாரும் அவனுக்குப் பகையாளி அல்ல. நாள்தோறும் நிறையப் பணம் வைத்திருக்கிறபடியால், அவனிடம் எல்லாரும் அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால், முனிசாமியும் நானும் சைனாபசாரில் நடப்பதற்குக் கூட பயந்தோம். அப்படி இருந்தும் எங்களை எல்லாரும் மிரட்டினார்கள். வேலன் உங்களைப் போல் வெள்ளை வெளேல் என்று மடிப்பு வேட்டியும், மடிப்புச் சொக்காயும் சிலவேளைகளில் கோட்டும் போட்டுக் கொண்டு திரிவான்.

சில நாட்களில் கடைகளில் வாடகைக்கு டவுசர் வாங்கி நல்ல செருப்பும் போட்டுக்கொண்டு திரிவான். இவ்வளவு தைரியம் இருந்தும், ஐந்து நாளாக வரவில்லையே, கண்ணில் படவில்லையே என்பதை நினைக்கும் போது வயிறு பகீர் என்கிறது. எங்காவது ஆசுபத்திரியில் இருக்கிறானோ, அல்லது சிறையில் இருக்கிறானோ, தெரியவில்லை. நான் நோயாளியாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான்; சிறையில் இருந்தாலும் அவன் வந்து விடுதலை செய்துகொண்டு போவான். அவனிடம் பணம் இருக்கிறது. ஆனால் நான் அவனை எங்கே தேடுவது? என்ன உதவி செய்வது? எப்படி விடுதலை செய்வது? என்னிடம் பணம் ஏது?" என்று சொல்லி ஒரே கலக்கமாகப் பைத்தியம் பிடித்தவன் போல் பழைய கல்லையே உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

அதற்குள் ஒருவர் என்னைத் தேடிக் கொண்டு வீட்டை நோக்கி வந்து உள்ளே நுழைந்து, "நல்ல காலம்; வெளியே போய்விட்டீர்களோ என்று நம்பிக்கை இல்லாமல் வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே அணுகினார். அவரை உள்ளே அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு முடிந்ததும் வெளியே வந்து பார்த்தபோது அந்த இளைஞன் அங்கே இல்லை. எவ்வளவு உறுதி கூறியும் என்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்று உணர்ந்தேன். "போனதும் நன்மையே, நமக்கு ஏன் இந்தத் தொல்லை?" என்று நானும் அமைதி அடைந்தேன்.

இது நடந்து இரண்டு வாரம் கழிந்து ஒரு நாள் மாலையில் நல்ல நிலவொளியில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பழைய அந்த மாரியம்மன் கோயிலைக் கண்ட கண், என் பழைய நினைவைத் தூண்டியது. அங்கே ஓர் இளைஞன் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான். எதிரே ஒரு சீப்பு வாழைப்பழமும் பெரிய தேங்காய் ஒன்றும் இருந்தன. தேங்காயை உடைத்துக் கற்பூரம் ஏற்றினான். கைகளைக் குவித்தபடியே நெடுநேரம் நின்று ஏதோ பாடிக் கொண்டிருந்தான். எனக்கு அந்த வேலன் நினைவு வந்தது. இருக்காது, இவர் யாரோ உண்மையான அன்பர் என்று நடக்க எண்ணினேன். எதற்கும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இளைப்பாற வந்தவன் போல் நடித்துக் கோயிலை அடுத்த திண்ணையின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த வாழைப் பழச் சீப்பை எடுத்துத் தெருவில் போய்க் கொண்டிருந்த சில பிள்ளைகளை அழைத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தான். ஒரு மூடி தேங்காயைத் தோண்டி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தான். சிறுவர்கள் போய்விட்ட பிறகு மற்ற மூடியை எடுத்துக்கொண்டு கிழக்கு இறவாணத்து மூலைக்கு வந்தான். அந்தக் கல்சந்தில் கைவைத்து எதையோ எடுத்து எடுத்து மெல்ல வீசி எறிந்தான். ஒவ்வொரு முறையும் ஒரு பெருமூச்சு விட்டது எனக்குக் கேட்டது. கடைசியில் மெல்ல நகர்ந்தான். சிறிது தொலைவு நடந்ததும், கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே செல்வதைக் கண்டேன். என் நெஞ்சத்தில் ஏதோ துயரம் குடி கொண்டது. சிறிது நேரம் கழித்து எழுந்து, அந்தக் கல்சந்தை அணுகிக் கை விட்டுப் பார்த்தேன்.

அந்தத் தேங்காய் மூடியை அப்படியே வைத்திருந்ததைக் கண்டேன். என்னை அறியாமல் என் வாய், 'அய்யோ' என்று ஒலித்தது. அப்பால் வந்தேன். அவன் எதையோ எடுத்து வீசி எறிந்தானே, அது என்ன பார்க்கலாம் என்று அந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். மேகங்கள் விலகிச் செல்ல, முன்னிலும் நன்றாய் நிலா ஒளி பரப்பியது. அந்த இடத்தில் தேங்காய்த் துண்டுகள் விழுந்து கிடந்தன; வாடிக்கிடந்தன; எறும்பு மொய்த்துக் கிடந்தன. எடுப்பாரின்றிக் கிடந்தன; கண்ணீரால் நனைந்து கிடந்தன.