தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முத்திரைப் பதிவுகள் - 3

தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புக் கொள்கை!

முதல்நூல், வழிநூல் என நூல் இருவகைப்படும் என்பார் தொல்காப்பியர். வழி நூல்கள் நான்கு வகை என அவர் பகுத்துக் கூறியுள்ளார்.

 

"மரபு நிலை திரியா மாட்சியவாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின''

(தொல்.பொருள்.மரபியல்-92)

 

என்பது நூல்கள் முதல்நூல், வழிநூல் என் இருவகைப்படும் என்பதைக் குறிக்கின்ற நூற்பாகும்.

 

"வழியெனப்படுவது அதன் வழித்தாகும்''

(மேற்படி-95) என்பதும், "வழியின் நெறியே நால்வகைத்தாகும்'' (95) என்பதும் வழிநூல் பற்றிய பொதுவிளக்கம் தருவன.

 

"தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே'' (97)

 

என்பது வழி நூல்களின் வகைகளைப் பெயரிட்டுக் கூறும் சூத்திரமாகும். "மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்” என்று சுட்டுவதில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றித் தொல்காப்பியர் அறிந்திருந்தார் என்பது தெளிவு.


"மொழிபெயர்ப்பு' என்பதில் மூல மொழி நூலைப் பெயர்க்கும்போது இலக்கு மொழிக்குரிய மரபு கட்டாயம் பேணப்பட வேண்டும். "அதர்ப்படயாத்தல்” என்ற சொற்றொடர் இதனை உணர்த்தும். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் பொருள் விளங்காது. காரணம், அந்தந்த மொழிக்குரிய நடை மரபு உண்டு என்பதேயாகும்.

ஐ - அய் - வேறுபாடும் குறைபாடும்! - புலவர் ப.அரங்கசாமி

"ஐ" என்ற உயிர் நெடிலுக்குப் போலியாக "அய்" என்று எழுதப்படுகிறது. இது சரியா? தமிழ் எழுத்துகளுக்கு ஓசை அளவு உண்டு. அது மாத்திரை எனப்படும்.


முதல் குறைபாடு: ""க்கு 2 மாத்திரை; "அய்"க்கு ஒன்றரை மாத்திரை. "" குறிலுக்கு ஒரு மாத்திரை; "ய்" - மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை. எனவே முதல் குறைபாடு எழுத்துக்குரிய ஓசை (மாத்திரை) குறைவு.


"" க்குப் போலியாக "அய்" என எழுதக்காரணம் தொல்காப்பியம் கூறும் நூற்பா என்பர்.


"அகர இகர ஐகாரம் ஆகும்" (தொல். மொழிமரபு-21)


"அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்


என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” (தொல்.மொழிமரபு-23)


அதாவது, -க்குப் போலியாக "அய்" என எழுதலாம் என்பது. அப்படியானால் முதல் நூற்பாப்படி, அஇயன் (அய்யன்), வஅஇரம் (வயிரம்) என்று எழுதலாமே, எழுதுகிறோமா?

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம் - புலவர் சு.தி.சங்கரநாராயணன்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.


கேட்டையா - கண்டையா


உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, "அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

 

"கேட்டை என்றா நின்றை என்றா

காத்தை என்றா கண்டை என்றா

அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி

முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.’'


(தொல்.சொல். எச்-சூ.30)


"கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.


"நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? - முனைவர் ச.சுப்புரெத்தினம்

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது.

குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒளவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம்.

எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் சேர்த்துச் சொல்வது தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வந்துள்ளது. அதாவது, "அ'கரம், "ஆ'காரம், "ஐ'காரம் அல்லது "ஐ'கான் எனப் போல்வன சாரியைகளோடு இயைந்த அத்தகைய உச்சரிப்புகளாகும்.

இத்தகைய சாரியைகளைத் தவிர ஆனம், ஓனம், ஏனம் (தொல்.சொல்.நூ.296-சேனாவரையம்) என்பவைகளும் வழக்கிலிருந்தன. அவற்றுள் ஒன்றான "ஏனம்' என்பதே ஆய்த எழுத்திற்குரிய சாரியை ஆகும் எனக் கொள்ளவேண்டும்.


தனித்தியங்கும் ஆற்றலில்லாத ஆய்த எழுத்து "அ' என்னும் உயிரை முன்னொட்டாகப் பெற்று "அஃ' என்றாகி, அதனுடன் "ஏனம்' என்பது சேர்ந்து "அஃஏனம்' என்று உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது "அஃகு' என்பதுடன் (தொல்.மொழிமரபு.நூ.38) "ஏனம்' என்பது சேர்ந்து "அஃகேனம்' என்றும் உச்சரிக்கப்படலாம். எனவே, அக்கன்னா, அக்கேனா என்பன தவறான உச்சரிப்புகள். "அஃஏனம்' அல்லது "அஃகேனம்' என்பதே சரியான உச்சரிப்புகளாகும்.

நன்றி தமிழ்மணி 10 11 13

கருப்பும் கறுப்பும்! - தமிழண்ணல்

கருப்பு

கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் "கருப்பு' என்பதே.
கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் "நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன்பட்டன.

"கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம்.
உரிச்சொல் இலக்கணத்தில்,

""... ... பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்'' (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள். அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு.
கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...'' என்பார் தொல்காப்பியர் (783).

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி, கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார்வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் எல்லாம் வல்லினத்தைப் போட்டுப் பாருங்கள். தொடர்புடைய சொற்கள் எல்லாம் கருப்பு என்பதிலிருந்தே கிடைக்கின்றன. 

கறுப்பு

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' (தொல்.855)

வெகுளி - கடுங்கோபம். இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல' - பகைத்தவரின் கோட்டை போல. "நீ சிவந்து இறுத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. "நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப' (856) நிறத்து உரு - நிறம் வேறுபடல் (கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு. கறுத்தோர் - பகைவர். மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு. நிறம் மாறி, கறுத்துக்கொண்டு வரும். "வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' (குறிஞ்சி-22) இது கருநிறம் மட்டுமன்று; மிக முற்றிய கருநிறம். "கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறிவருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும். பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் "நிறத்துஉரு' என்று குறிப்பிட்டுள்ளார். "எச் சொல்லாயினும் வேறு பொருள் கிளத்தல்' என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சூழல் போன்றவற்றால் "நிறத்துரு' - தோற்றம் பெறும்; பிறகு மாறிவிடும். கறுப்பணசாமி என்றது கடுங் கோபக்காரச் சாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

"நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின "ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும். "கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

நன்றி - தமிழ்மணி

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம் - புலவர் சு.தி.சங்கரநாராயணன்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.

கேட்டையா - கண்டையா

உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, ""அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

""கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.''
(தொல்.சொல். எச்-சூ.30)

""கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.

""நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.

ஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது!

பெண்டாட்டி

உயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் ""பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப் "பெண்டாட்டி' என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.

அம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள ""ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள ""என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.

நெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் ""வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா! தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.

பெண் மகன்

""எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்''
(தொல்.சொல்.பெயரியல்.சூ.10)

""புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் "பெண் மகன்' என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். ""கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.

""புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் "மாறாந்தை' எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார். பெண்மையை வீரத்தின் விளைநிலமாக்கிய மகாகவி பாரதியாரும் மாறோகத்தாரே!

பெண்ணுக்குப் பெருமை சேர்த்தது தொல்காப்பியர் காலம். இன்றும் அவர் காலம் ஒளிவீசக் காண்கிறோம். ஆகவே, இந்திய வரலாற்றுப் பெண் மகன்களான ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, விஜயலட்சுமிப் பண்டிட், இந்திரா காந்தி, ராணி மங்கம்மாள், தில்லையாடி வள்ளியம்மை முதலியோரையும் தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபு வழியே "மாறோகத்தார்' எனும் தென்பாண்டி நாட்டாரின் வழக்கப்படி பெண்மகன்கள் என்று கூறி மகிழ்வோம்.

நன்றி - தமிழ்மணி

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு - முனைவர். இரா.குணசீலன்

உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

 தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு
  
தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது,

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே
(தொல்-1526)
என இயம்பியுள்ளார்.இதில் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
(தொல்-1526)

என வெளிப்படுத்தியுள்ளார்.

 ஓர் அறிவுடையன

புல்,மரம்,செடி,கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,


புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(தொல்-1527)

இந்நூற்பா சுட்டுகிறது.

ஈர் அறிவுடையன
  
நத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,

நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(தொல்-1528)

என்ற நூற்பா இயம்புகிறது.

 மூன்று அறிவுடையன

கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,

சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(தொல்-1529)

என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.

 நால் அறிவுடையன

நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(தொல்-1530)

என்ற நூற்பா உணர்த்தும்.

 ஐந்து அறிவுடையன

விலங்கினங்கள் அனைத்தும்,விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,

மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(தொல்-1531)

இந்நூற்பா இயம்புகிறது.

 ஆறு அறிவுடையன

மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர்.இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,


மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(தொல்-1532)

என்ற நூற்பா சுட்டுகிறது.


உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)
  
Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது.பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின.அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன.முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர்.இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இவ்;வுருமலர்;ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;

 ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)

உயிர்களின் முதல் நிலைசெல்ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம்.இது ஒருசெல் உயிரியாகும்.இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது.தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.

 செல்பிரிதல்

ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன.பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது.இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.

பல செல் உயிரி

 ஒருசெல் உயிரியை புரோட்டோசோவா என அழைப்பது போல பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர்.பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம். 1.முதுகுத்தண்டற்றவை,2.முதுகுத்தண்டுள்ளவை.

முதுகுத்தண்டற்றவை

கடற்பஞ்சு,புழுவினங்கள்,நண்டு,சிலந்தி,நத்தை,நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும்.தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை,மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன.இவை உற்றறிதலோடு,நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.

முதுகுத் தண்டுள்ளவை

கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன,நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.

நில வாழ்; உயிரிகளை ஊர்வன,பறப்பன,பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்

 ஊர்வன

கரையான்,எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர்.இவை உற்றறிதல்,சுவையுணர்வு,நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.

 பறப்பன

வண்டு,தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு,சுவை,நுகர்ச்சி,பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர்.அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.

பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.

பாலூட்டிகள்

விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர்.அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.

 மனித நிலை

உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதைஉடையவன் மனிதன் எனப்படுகிறான்.ஆறாவது அறிவானமனம்மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.

முடிவுரை

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.

செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.

செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.

அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது.இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.

தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.;து தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது