தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புக் கொள்கை!
முதல்நூல், வழிநூல் என நூல் இருவகைப்படும் என்பார் தொல்காப்பியர். வழி நூல்கள் நான்கு வகை என அவர் பகுத்துக் கூறியுள்ளார்.
"மரபு நிலை திரியா மாட்சியவாகி
உரைபடு நூல்தாம் இருவகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின''
(தொல்.பொருள்.மரபியல்-92)
என்பது நூல்கள் முதல்நூல், வழிநூல் என் இருவகைப்படும் என்பதைக் குறிக்கின்ற நூற்பாகும்.
"வழியெனப்படுவது அதன் வழித்தாகும்''
(மேற்படி-95) என்பதும், "வழியின் நெறியே நால்வகைத்தாகும்'' (95) என்பதும் வழிநூல் பற்றிய பொதுவிளக்கம் தருவன.
"தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே'' (97)
என்பது வழி நூல்களின் வகைகளைப் பெயரிட்டுக் கூறும் சூத்திரமாகும். "மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்” என்று சுட்டுவதில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றித் தொல்காப்பியர் அறிந்திருந்தார் என்பது தெளிவு.
"மொழிபெயர்ப்பு' என்பதில் மூல மொழி நூலைப் பெயர்க்கும்போது இலக்கு மொழிக்குரிய மரபு கட்டாயம் பேணப்பட வேண்டும். "அதர்ப்படயாத்தல்” என்ற சொற்றொடர் இதனை உணர்த்தும். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் பொருள் விளங்காது. காரணம், அந்தந்த மொழிக்குரிய நடை மரபு உண்டு என்பதேயாகும்.
எ-டு: He has a pen ‘அவன் உடையன் ஒரு பேனா' என்பது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும் முறை. ‘அவன் ஒரு பேனா வைத்திருந்தான்' என்றோ, ‘அவனிடம் ஒரு பேனா இருக்கிறது' என்றோ மொழிபெயர்ப்பதே தமிழ் நடை மற்றும் தமிழ் மரபின்பாற்பட்டதாகும்.
வடமொழியில் சொல்லிறுதி எழுத்தைக்கொண்டு பால் வேற்றுமை கொள்வர். தமிழில் பொருள் பற்றியே பால் வேறுபாடு சுட்டுவர். பார்யா-ஆண்பால், களத்ரம்-அலிப்பால். இவை வாழ்க்கைத் துணையாகிய மனைவியைக் குறிக்கின்ற வடமொழிச் சொற்கள். பொருள் குறித்த பால் பாகுபாடு இல்லா வடமொழியும், பொருளின் அடிப்படை கொண்டே பால் வகுக்கும் தமிழ் மரபும் ஒன்றாக முடியாது. இந்தப் பின்னணியில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் (அதர்) வழி மாறிவிடும் என்பது தெளிவு.
பின்னே தோன்றிய நன்னூலும் நூல் வகைகளைச் சொல்கிறது. முதல்நூல், வழிநூல், சார்புநூல் என நூல்களை மூவகைப்படுத்திய பவணந்தியார், மொழிபெயர்ப்பு நூலை விதந்தோதவில்லை.
"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்' என்பதற்கு "வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ் மொழியாற் செய்தல்' எனப் பொருள்படும்.
முனைவர் வீ.சந்திரனின் ‘மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை' நூலிலிருந்து…
நன்றி தமிழ்மணி 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக