தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு
'ஐம்பெருங் காவியங்கள்' என்று போற்றப்பெறும் ஐந்து அரிய நூல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் சிறந்தது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியம் ஆகும். இது கண்ணகி என்னும் கற்பரசியின் காற்சிலம்பால் விளைந்த கதையை விளக்கும் நூலாகும். தமிழில் தோன்றிய முதல் காவியம் இச்சிலப்பதிகாரமே. இஃது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவிய முத்தமிழ்க் காவியம் ஆகும். அதனால் இந்நூலை ‘இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்' என்று அறிஞர் போற்றுவர். இதனைத் தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு என்றே புலவர் போற்றுவர். ‘நெஞ்சை - அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு’ என்று இந்நூலைக் கவிஞர் பாரதியார் பாராட்டினார்.
சிலம்பைப் பாடிய இளங்கோ
இத்தகைய முத்தமிழ்க் காவியத்தைப் பாடிய புலவர் ஒரு முனிவர் ஆவர். சேர நாட்டு வேந்தனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மைந்தர் இருவர். மூத்தவன் செங்குட்டுவன், இளையவன் இளங்கோ. இவ்விளங்கோவே இளம் பருவத்தில் துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் எனப்பட்டார். இவரே சிலப்பதிகாரக் காவியத்தைப் பாடிய செந்தமிழ் முனிவர் ஆவர்.
அரசவையில் நிமித்திகன்
ஒரு நாள் சேர வேந்தனாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் அத்தாணி மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் மைந்தர் இருவரும் அமர்ந்திருந்தனர். அமைச்சரும் பரிவாரத்தாரும் புடை சூழச் சேரன் வீற்றிருந்தான். அவ்வேளையில் வேந்தனைக் காண நிமித்திகன் ஒருவன் வந்தான். அவன் மைந்தர் இருவருடன் மன்னன் வீற்றிருப்பதைக் கண்டான். அம்மூவரையும் நிமித்திகன் கூர்ந்து நோக்கினான். முடி மன்னனாகிய சேரலாதனை நோக்கி, ‘அரசே! தங்கட்குப் பின்பு முடி சூடும் தகுதியுடையவன் இளங்கோவே’ என்று இயம்பினான்.
தம்பியின் தவக்கோலம்
அதைக் கேட்ட மூத்த மைந்தனாகிய செங்குட்டுவனுக்குச் சினம் பொங்கியது. அதைக் கண்ட இளங்கோ,
தமையனின் சினத்தைத் தணிக்க நினைத்தார்; அவன் மனத்துயரை அப்பொழுதே மாற்ற எண்ணினார். உடனே ஆசனத்தை விட்டு எழுந்து அரண்மனையுள் புகுந்தார். சற்று நேரத்தில் காவியுடையுடன் முற்றுந் துறந்த முனிவராகக் காட்சியளித்தார். தம்பியின் தவக்கோலத்தைக் கண்ட தமையனின் சினம் தணிந்தது; துயரமும் தொலைந்தது. இளங்கோவின் தவக்கோலத்தைக் கண்டு தந்தை சிந்தை கலங்கினான். தம்பியின் தியாக உள்ளத்தைக் கண்டு தமையன் கண்ணீர் சிந்தினான். தம்பியாகிய இளங்கோவைத் தன் மார்போடு சேர்த்துத் தழுவிக் கொண்டான்.குணவாயில் கோட்டத்தில் தவமுனிவர்
தவக்கோலம் பூண்ட முனிவராகிய இளங்கோவடிகள் அன்றே அரண்மனை வாழ்வைத் துறந்தார். வஞ்சி மாநகரின் கீழ்த்திசையில் திருக்குணவாயில் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் சமணர் வாழும் தவப் பள்ளியொன்று விளங்கிற்று. அது குணவாயிற் கோட்டம் என்று கூறப்படும். அரச வாழ்வைத் துறந்த அடிகள் அக்கோட்டத்தில் சென்று தங்கினார், அவர் தம் தவவாழ்வைத் தமிழ் வாழ்வாக மாற்றினார். சீத்தலைச் சாத்தனாரைத் தமக்குத் தமிழாசானாகக் கொண்டார். அவர் பால் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இனிது கற்றுப் பெரும் புலமை பெற்றார்.
மலைவளம் காண மன்னன் புறப்படல்
தமிழ்ப்புலமை பெற்ற தவ முனிவராகிய இளங்கோவடிகள் இடையிடையே வஞ்சி மாநகருள் புகுவார். தமையனாகிய செங்குட்டுவனின் அரசவையில் கலந்து மகிழ்வார். ஒரு சமயம் செங்குட்டுவன், தன் நாட்டு மலைவளத்தைக் காணப் புறப்பட்டான். அவன் தன் பட்டத்தரசியாகிய வேண்மாளுடனும் தம்பியாகிய இளங்கோவுடனும் மலை நாட்டிற்குச் சென்றான். அங்குள்ள பேரியாற்றங்கரை மணல் மேட்டில் அனைவரும் தங்கினர். அவர்களுடன் தமிழாசிரியராகிய சாத்தனாரும் வந்து தங்கினார்.
மலைநாட்டில் வேட்டுவரைக் காணல்
செங்குட்டுவன் மலைவளம் காண வந்திருக்கும் செய்தியை மலையில் வாழும் வேட்டுவர் அறிந்தனர். மலையிலுள்ள அரிய பொருள்களையெல்லாம் அரசனுக்குக் கையுறையாக எடுத்துக் கொண்டு வந்தனர். பேரியாற்றங்கரையில் வீற்றிருந்த வேந்தனைக் கண்டு களித்தனர். அவனை வாழ்த்தி அடி பணிந்து நின்றனர். குன்றக்குறவர் வரவினைக் கண்ட செங்குட்டுவன் அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். அவர்களை நோக்கி, ‘இம்மலை நாட்டில் ஏதேனும் சிறப்பு உண்டோ?' என்று கேட்டான்.
நெடுவேள் குன்றில் கண்ட காட்சி
அவ்வேட்டுவர் நெடுவேள் குன்றத்தில் அரிய காட்சியொன்றைக் கண்டனர். அதனை அரசனுக்கு அறிவிக்கும் பொருட்டே அவ்வேட்டுவர் அங்கு வந்தனர். அவர்கள் அரசனை வணங்கி, 'அரசே! தங்கள் திருமுன்பு தெரிவிக்க வேண்டிய அரிய செய்தியொன்று உண்டு. திருச்செங்குன்று மலைமேல் ஒரு வேங்கை மரம் உள்ளது. அம்மரத்தின் நிழலில் மார்பு ஒன்றை இழந்த மங்கை ஒருத்தி வந்து நின்றாள். அவள் விரித்த கூந்தலோடும் பெருத்த கவலையோடும் காணப்பட்டாள். அவளைக் கண்ட யாங்கள் அவள் பக்கத்தில் சென்று, நீர் யார்?' என்று கேட்டோம். அவள், “மாடமதுரையோடு மன்னன் கேடுற ஊழ்வினை வந்து உருத்தியது; அதனால் அந்நகரில் கணவனை இழந்து இங்கு வந்த தீவினையேன் யான்” என்று பதில் கூறி நின்றாள்.
அன்று மாலையில் விண்ணிலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதில் தேவர்கள் பலர் அமர்ந்திருந்தனர். அவர்கள் அப்பெண்ணின் மீது மலர் மாரி சொரிந்தனர். அவ்விமானத்தில் இருந்த அவள் கணவனைத் தேவர்கள் அவளுக்குக் காட்டினர். கணவனைக் கண்ட அப்பெண் களிப்புடன் அவ்விமானத்தில் ஏறிக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவ்விமானம் விண்ணில் பறந்து மறைந்தது. அந்தப் பெண், தெய்வமாகவே திகழ்ந்தாள். அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளோ? யார் பெற்ற மகளோ? நாங்கள் அறியோம். இச்செய்தியை அரசராகிய தங்களிடம் அறிவிப்பதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம் என்று கூறி வாழ்த்தி நின்றனர்.
புலவரின் புன்சிரிப்பு
குன்றக்குறவர் கூறிய செய்தியைக் கேட்டுச் செங்குட்டுவன் முதலானோர் வியப்புக் கொண்டனர். அப்போது அங்கிருந்த தமிழாசிரியராகிய மதுரைச் சாத்தனார் அச்செய்தியைக் கேட்டு வியப்புறவில்லை. அவர் சிறிதே புன்சிரிப்புக் கொண்டார். அதைக் கண்ட செங்குட்டுவன், புலவரின் புன்சிரிப்புக்குக் காரணம் யாதெனக் கேட்டான். அங்கிருந்த இளங்கோவடிகளும் உண்மையை உணர விரும்பினார். கோப்பெருந்தேவியாகிய வேண்மாளும் புலவரின் சொற்களைக் கேட்கப் பெரிதும் விரும்பினாள். அமைச்சர் முதலான சுற்றத்தார் எல்லோரும் புலவரின் கருத்தை அறியும் விருப்புடன் இருந்தனர்.
சாத்தனாரின் விளக்கம்
சாத்தனாராகிய புலவர் அங்கிருந்த எல்லோருடைய உள்ளத்தையும் அறிந்து கொண்டார். குன்றக்குறவர் கண்ட கற்பரசியின் வரலாற்றை விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார். "மதுரை மாநகரில் அரசன் ஆணையால் கண்ணகியின் கணவன் கொலையுண்டான். அதனால் கடுந்துயரம் அடைந்த கண்ணகி, மன்னன் முன்னே சென்று வழக்காடினாள். தன் கணவன் கள்வன் அல்லன், குற்றமற்றவன் என்று நிலைநாட்டினாள். தவறுணர்ந்த அரசன் சிங்காதனத்திலிருந்து மயங்கி வீழ்ந்து மாண்டான். பின்பு கண்ணகியின் கற்புத் தீயால் மதுரை மாநகரம் எரிந்தது'' என்று கூறி முடித்தார்.
கண்ணகிக்குக் கற்கோவிலும் கலைக்கோவிலும்
இவ்வாறு சாத்தனார் வாயிலாகச் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் கண்ணகியின் வரலாற்றைத் தெரிந்தனர். செங்குட்டுவன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்கு வஞ்சி மாநகரில் கோவில் அமைக்க எண்ணினான். இமயமலையில் சென்று கல்லெடுத்தான். அக்கல்லைக் கங்கையாற்றில் நீராட்டினான். வஞ்சி மாநகரில் கட்டிய கோவிலில் அமைத்து விழா எடுத்தான். தமிழ்ப் புலவராகிய இளங்கோவடிகள், தமையன் கற்கோவில் கட்டிய சிறப்பைக் கண்டு மகிழ்ந்தார். அவர் அக்கற்புத் தெய்வத்திற்குக் கலைக்கோவில் அமைக்க விரும்பினார்.
சிலப்பதிகாரம் செய்து முடித்தல்
இளங்கோவடிகள் தம் விருப்பத்தைத் தமிழாசிரியராகிய சாத்தனாரிடம் தெரிவித்தார். அவரும் அவ்வாறே செய்தருளும்படி வேண்டினார். கண்ணக் காவியத்தை ஆக்குதற்குத் தாமும் தக்க துணையாக இருந்தார். அடிகளாருக்கு வேண்டிய செய்திகளை எல்லாம் சேகரித்துக் கொடுத்தார். கண்ணகியின் சிலம்பு காரணமாக நிகழ்ந்த கதையாதலின் ‘சிலப்பதிகாரம்’ என்று காவியத்திற்குப் பெயர் கொடுத்தார். நூலைப் பாடி முடித்துச் சாத்தனாரிடம் அதனை வாசித்துக் காட்டினார்.
இரட்டைக் காவியங்கள்
சாத்தனார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய மணிமேகலை வரலாற்றைப் பாடினார். அதனைத் தம் நண்பரும் மாணவருமாகிய இளங்கோவடிகளிடம் வாசித்துக் காட்டினார். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலத்தில் தோன்றிய இரட்டைக் காவியங்கள் ஆகும். இவை இரண்டும் ஐம்பெருங்காவியங்களைச் சேர்ந்தன ஆகும்.
இளங்கோவின் இனிய உள்ளம்
இளங்கோவடிகளின் தூய்மை வாய்ந்த உள்ளம் சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்கும். அவர் அக்காவியத்தின் இறுதியில் ‘பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்’ என்று தொடங்கிச் செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்' என்று முடிக்கும் செய்யுள் அவர் உள்ளத்தைத் தெள்ளிதில் காட்டும். நல்வினை செய்தவர் நன்மையே அடைவர். ஆதலால் நல்லறமே செய்து உய்யுமாறு உலக மக்களை அவர் வேண்டுகிறார்.
தமிழ்த்தாய்க்குச் சிறந்த அணிகலன்
சேர நாட்டு இளங்கோவாக விளங்கிய முனிவர் இனிய செந்தமிழ்ப் புலவர் ஆவர். அவர் தமிழ்ப் பெருங்காவியம் ஆகிய சிலப்பதிகாரத்தை இயற்றித் தமிழ்த்தாய்க்குச் சிறந்த அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்தார்.
-----------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக