24/03/2013

"வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!


தமிழ் சினிமாவில் முன்னணி கதை-வசன கர்த்தாக்களுள் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தவர் வலம்புரி சோமநாதன். நல்லறம் நோக்கி அகத்துறை வாழ்வியலை நகர்த்தும் குடும்பக் கதைகளுக்கான இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் 1928-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மரபிலக்கியங்களைப் பயின்றதுடன், ஆங்கில மொழியும் நன்கு அறிந்தார். அந்தக் காலத்தில் மன்னர் ஆட்சியின் கீழிருந்த புதுக்கோட்டையில் காகிதம் எளிதாகவும், மலிவாகவும் கிடைத்ததால், அவ்வூரில் தொடங்கப்பட்டப் பத்திரிகைகளில் ஒன்று "திருமகள்'. அப்பத்திரிகையில் முதன் முதலாக விளம்பரம் சேகரிக்கும் பணியில் கவிஞர் கண்ணதாசன் நியமனம் பெற்று, பிறகு ஆசிரியராக உயர்த்தப்பட்டபோது நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தவர் வலம்புரி சோமநாதன்.

ஆசிரியரான கண்ணதாசனுக்குப் பத்திரிகையின் அத்தனைப் பக்கங்களுக்கும் செய்திகள் அளிக்க அவகாசம் இல்லை. எனவே, சோமநாதனையும் சில பக்கங்களை நிறைவு செய்யும்படி உற்சாகப்படுத்தினார். கருத்துச் சாரமிக்க சோமநாதனின் கதை, கட்டுரைகள் பத்திரிகைக்குப் பலம் சேர்க்க, கண்ணதாசன் மேலும் ஊக்கப்படுத்த, வலம்புரி சோமநாதன் எழுத்தாளராக அரும்பினார்.

தமிழின் முக்கிய இலக்கியப் பத்திரிகையான "சக்தி' மாத இதழின் ஆசிரியரான வை.கோவிந்தன் தலைமையில் பணிபுரிந்த சோமநாதன், "எழுத்து முதிர்ச்சி' பெற்றார். சண்டமாருதம், முல்லை, பேசும் குரல், டாக்-எ-டோன் போன்ற மாத இதழ்களும் சோமநாதனுக்கு இடமளிக்க, அவரது படைப்பாற்றல் மீது மக்களின் கவனம் திரும்பியது. ஏவி.எம்.செட்டியார் தனது பட நிறுவனத்தில் கதை இலாகாவுக்கு அழைத்தார். ஏவி.எம்.மின் கதைக் குழுவில் முக்கியமானவர்களுள் ஒருவராகி, சோமநாதன் சினிமா உலகில் அறிமுகமானார்.

இந்தி மேதை மோஹன்லாலிடம் சோமநாதன் ஒரு படத்தின் கதையையும் அதன் வசனத்தையும் நுட்பமான ஆங்கிலத்தில் சொல்ல, அதை இந்தியில் எழுதி மோஹன்லால் தயாரிப்பாளருக்கு அனுப்பிவைத்தார். அவர் தொலைபேசியில் மோஹன்லாலைப் பாராட்ட, அதற்கு, "நீங்கள் அனுப்பிய கதாசிரியர் சோமநாதன்தான் உங்கள் பாராட்டுக்குரியவர். நான் இந்தியில் மொழிபெயர்த்து அனுப்பினேன்; அவ்வளவுதான் என் பங்கு'' என்று கூற, தயாரிப்பாளர் வலம்புரியாரின் ஆற்றலில் பிரமிப்பு அடைந்தாராம்.

ஏவி.எம்.மின் பழைய படமான "என் மனைவி' படத்தை சிங்களத்தில் மறு ஆக்கம் செய்ய ஒரு படக்குழு செட்டியாரை அணுகியபோது, "என்னிடம் இருக்கும் சோமநாதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் வெற்றியடைவது நிச்சயம்'' என்று கூறினாராம். எல்.வி.பிரசாத் தனது "மங்கையர் திலகம்' படத்துக்கு சோமநாதனையே எழுத வைத்தார். படம் மகத்தான வெற்றிபெற்றது.

வலம்புரியாரின் வசனங்கள், வெகுஜன ரீதியாகப் படங்கள் வெற்றிபெற பெரிதும் துணைபுரிந்தன. பி.பானுமதியின் "மணமகள் தேவை' படத்துக்கு வசனத்தை சோமநாதன் எழுத, படம் நகைச்சுவை சித்திரமாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜனரஞ்சக ரசனையை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல புத்திப் பூர்வமான படங்களைப் படைக்க வேண்டும் என்று தீவிர ஆர்வம் சோமநாதனுக்கு ஏற்பட, பானுமதி தயாரிக்க சரத்சந்திரர் நாவலை மூலக் கதையாக வைத்து, "கானல் நீர்' படத்தை எழுதினார். படம் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தபோதிலும், படத்தைப் பார்த்த டி.கே.சண்முகம், எழுத்தாளர் அகிலன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் சோமநாதனுக்கு மனம் நெகிழ்ந்து பாராட்டுகளை வழங்கினார்கள்.

சோமநாதன் சொந்தப் பட நிறுவனம் ஆரம்பித்து, "திருமணம்' என்னும் படத்தை பீம்சிங் இயக்கத்தில் எடுத்தார். படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து பீம்சிங்கும், சோமநாதனும் இணைந்து பல வெற்றிப் படங்களை வழங்கினார்கள். வெற்றிப் படத்துக்கான கதையை கட்டமைப்பதில் சோமநாதனுக்குச் சிறப்பான திறமை இருந்ததால், இந்தி நடிகர் திலீப்குமார் சோமநாதனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் நடிக்கும் படங்களின் கதைகளை சோமநாதனிடம் சொல்லி, ஆலோசனைகள் பெற்றபின்பே நடிக்கத் தொடங்குவாராம்.

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலை சோமநாதன் படமாகத் தயாரித்தார். அந்தப் படம் இந்தியன் பனோரமாவுக்கு அனுப்பப்பட்டு தமிழுக்கு மாநிலப் பரிசைப் பெற்றுத்தந்தது.

கதை, வசனம் தவிர்த்து, இயக்கத்திலும் ஈடுபட்ட சோமநாதன், கண்ணதாசனின் "சிவப்புக்கல் மூக்குத்தி' மற்றும் "லலிதா', "துணையிருப்பாள் மீனாட்சி', ஆகிய படங்களையும் இயக்கினார். "துணைவி' படத்தின் வசனத்துக்காக அந்த ஆண்டின் சிறந்த வசன கர்த்தாவுக்கான விருதைப் பெற்றார். ஆஸ்கார் விருது பெற்ற "காந்தி', என்.எஃப்.டி.சி. தயாரித்து மம்முட்டி நடித்த "டாக்டர் அம்பேத்கர்' போன்ற படங்களின் தமிழாக்க வசனங்களை எழுதினார். 1984-இல் தமிழக அரசின் "கலைமாமணி' விருது பெற்றார்.

தமிழ்ப் படங்களில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் குழுவில் அவர் பல ஆண்டுகள் இடம்பெற்றார். திரைப்படம் தொடர்பான சங்கங்களில் தலைவராகவும், நிர்வாகக்குழு அங்கத்தினராகவும் நேர்மையுடன் செயல்பட்டார். ரஷிய திரைப்பட விழாவுக்கு அந்த அரசு சோமநாதனை இருமுறை அழைத்து கெளரவப்படுத்தியது தமிழ்க் கலைஞனுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

திரையுலகில், பல கதாசிரியர்கள் உருவாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த சோமநாதன், 2010-ஆம் ஆண்டு தன் 82-வது வயதில் காலமானார்.

நன்றி - தமிழ்மணி

மரபுக் கவிஞர் காரை நா.பூமிநாதன் - கடல் நாகராஜன்


மதுரை மாவட்டம் காரைக்கேணி என்ற சிற்றூரில் 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி, நாராயண தேவருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் பிறந்தவர் பூமிநாதன். இவருடைய மூத்த சகோதரி ஜானகி. பூமிநாதனுக்கு ஐந்து வயதிருக்கும்போதே பெற்றோர் இறந்ததால், அவரை சகோதரி ஜானகிதான் அரவணைத்து வளர்த்தார்.

டி.கல்லுப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பூமிநாதன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

பள்ளிப் பருவத்திலேயே கவிஞர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பக்தனாக இருந்தார். தேவரின் நடை, உடை, பாவனையுடன் நல்ல எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் குறிப்பாக மரபுக் கவிதை எழுதும் ஆற்றலும் கைவரப்பெற்றிருந்தார்.

மதுரை மாவட்டத்திலேயே சில காலம் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணிபுரிந்தார். "தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' தேர்வு எழுதி வெற்றிபெற்றார். அங்கிருந்து விருத்தாசலம் வட்டத்தில் நல்லூர் என்ற ஊரில் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ)யின் அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக (எல்.டி.சி.) 1963-இல் பணியில் அமர்ந்தார்.

நல்லூரில் அலுவலகப்பணி புரிந்துகொண்டே பல அருமையான மரபுக் கவிதைகளை எழுதி, அன்றைக்குத் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த பல இதழ்களுக்கும் அனுப்பிவைத்தார். பல வெளிவந்தன. அக்கவிதைகள்தான் இவரை ஒரு மரபுக்கவிஞராக மக்களுக்கு அடையாளம் காட்டின.

"பாரதம்' இதழில் இவரது 18 வரிக் கவிதை "பேய்களெனும் சாதிமதம் இல்லை' என்ற கவிதைக்குப் பரிசும் பாராட்டும் கிடைத்தது. அறிஞர் அண்ணா நடத்திவந்த "காஞ்சி' இதழில் இவருடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இதனால், இவர் பெயர் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது.

"காதல்' என்ற தலைப்பில் மரபுக் கவிதை ஒன்று 1967-ஆம் ஆண்டு "காஞ்சி' இதழில் வெளிவந்தது. அந்தக் கவிதையை படித்துவிட்டு அண்ணா இவரைப் புகழ்ந்து பாராட்டினாராம். 22.10.1972-இல் வெளிவந்த காஞ்சி சிறப்பு மலரில் "ஆமை' என்ற தலைப்பில் வெளிவந்த இவருடைய கவிதை பலராலும் பாராட்டப்பட்டது.

இவர் பணிபுரிந்து கொண்டிருந்த நல்லூரில் வசித்துவந்த, லலிதா என்ற பெண்ணைக் காதலித்து 1971-இல் கலப்புத் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய அலுவல் காரணமாக அடிக்கடி கடலூருக்குச் சென்று வந்தார். அங்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராகப் பணிபுரிந்துவந்த ஆனந்த மனோகரனின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் புதுச்சேரி வானொலியில் பணிபுரிந்த அறிவிப்பாளர் கவிஞர் நடாத்தூர் நம்பியார் நட்பும் கிடைத்தது.

புதுவை வானொலியில் பல கவிதைகளை வாசித்தார். நல்ல சன்மானமும் பெயரும் புகழும் கிடைத்ததால் கவிதையை இன்னும் ஆழமாக நேசித்தார்.

12.4.1964 அன்று புதுச்சேரியில் அழ.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிதைபாடி அனைவரையும் அசத்தினார். பல இதழ்களில் வெளிவந்த கவிதைகளைத் தொகுத்து "பொன் விரிப்பு' என்ற பெயரில் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை 1968-இல் வெளியிட்டார்.

பின்னாளில், திரைப்படத்தில் பாடல்கள் எழுதி புகழடைய வேண்டும் என்ற ஆவல் இவருக்கு ஏற்பட்டது. அரசுப் பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையில் சில மாதங்கள் தங்கினார். நாடறிந்த கவிஞராக வலம்வந்த பூமிநாதன், கவியரசர் கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். திரையிசைக் கவிஞராக அவர் எதிர்பார்த்தது போல் புகழ்பெற முடியாமல் மனம் வெதும்பினார்.

"கெட்டும் பட்டணம் சேர்' என்பார்கள். ஆனால், நேர்மையாக இருந்த பூமிநாதனால் சென்னையில் வசிக்க முடியவில்லை. திரையுலகில் நடந்த அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கவும் முடியவில்லை. இறுதி முயற்சியாக ஒரு திரைப்படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத நல்ல வாய்ப்பு பூமிநாதனைத் தேடி வந்தது. ஆனால், இவர் "சமரசம்' செய்துகொள்ள முடியாமல் நல்லூருக்கே திரும்பிச் சென்றுவிட்டார்.

திரைப்படத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு வழக்கம்போல மரபுக் கவிதைகளை இதழ்களுக்கு அனுப்பினார். 13.4.1976 அன்று இவருடைய கதை வசனத்திலும், இனிய பாடல்களும் கொண்ட "வீரமாமுகம்' என்ற வரலாற்று நாடகம் அரங்கேறியது. வீரசிவாஜியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது வீரமாமுகம் நாடகம்.

1988-ஆம் ஆண்டில் சட்டமேதை அம்பேத்கரைப் பற்றி சில பாடல்களை எழுதிக்கொடுத்தார். அவை அம்பேத்கர் இயக்கத்தின் சார்பாக பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் - சசிரேகா இருவரும் பாடி, வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பரவியது.

உள்ளூரிலேயே கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவைகளில் கலந்துகொண்டு இலக்கியப் பணியை செய்துவந்த இவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு 1993-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி காலமானார்.

புதுக்கவிதையின் வரவால் மரபுக் கவிதைகள் மறைந்துகொண்டே வருகிறது என்பது உண்மை. ஆனால், காரை பூமிநாதன் போன்றவர்களால்தான் மரபுக் கவிதைகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நன்றி - தமிழ்மணி

இலக்கியம் படைத்த கல்வியாளர் - கே.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்கார்! - திருப்பூர் கிருஷ்ணன்


அரவிந்தரது ஆன்மிகச் சிந்தனைகளில் நாட்டம் உடையவர்கள் ஒருபோதும் (கோடகநல்லூர் ராமஸ்வாமி ஸ்ரீநிவாச ஐயங்கார் என்கிற) கே.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்கார் பெயரை மறக்க முடியாது. தற்கால இலக்கியத்தில் நாட்டம் உள்ளவர்களும் கூட அவர் பெயரை மறக்கமுடியாதுதான். அரவிந்த இலக்கியத்திற்கும் தற்கால இலக்கியத்திற்கும் அவர் செய்த தொண்டு அளப்பரியது. (வாழ்ந்த காலம் 1908 முதல் 1999 வரை - 91 ஆண்டுகள்)

1969 முதல் 1978 வரை சுமார் எட்டாண்டு காலம், ஆங்கிலப் பேராசிரியர் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் சாகித்ய அகாதெமியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். சில பொறுப்புகளைச் சில பொருத்தமானவர்கள் அலங்கரிக்கும் போதுதானே அந்தப் பொறுப்புக்கே ஒரு பெருமையும் முக்கியத்துவமும் ஏற்படுகின்றன. தற்காலத் தமிழிலக்கியத்தின் சிறப்பை இந்தியா அதிக அளவில் உணர்ந்தது அவரது சாகித்ய அகாதெமி பதவிக் காலத்தில்தான். ஏராளமான உயர்தரத் தமிழ் இலக்கியப் படைப்புகளை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கொண்டுவர அவரது பதவி அவருக்கு உதவியது.

படிப்பு என்றால் சாமான்யமான படிப்பு அல்ல அவர் படித்தது. வாழ்நாள் முழுதும் படித்துக்கொண்டே இருந்தார். அவரை நினைக்கும்போது, அவரோடு அவர் கையில் ஒரு புத்தகமும் இருப்பதாகத்தான் பலரும் நினைவுகூர முடியும். பற்பல நூலகங்களில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர்.

அவரது இல்லத்திலேயே மிக அருமையானதொரு நூலகத்தையும் வைத்திருந்தார். அவரது இல்ல நூலகத்தை அலங்கரித்த புத்தகங்கள் எல்லாம் அவர் படித்துக் குறிப்பெடுத்தவை. அந்த நூல்களை அவர் இல்லம் செல்பவர்கள் ஒரு பார்வை பார்த்தாலே அவரது அபார மேதைமையைப் புரிந்துகொள்ள முடியும். (வாழ்வின் கடைசி நான்கு ஆண்டுகள், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் போலவே இவரும் பார்வையிழந்த நிலையில் வாழ்ந்தார். அப்போதும் புத்தகங்களைக் கையில் வைத்துத் தடவிக் கொடுத்தவாறிருப்பார். கேட்டால், "புத்தகம் கையில் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகவும், பழைய நினைவுகளில் மூழ்குவதாகவும்' அவர் மனம் நெகிழ்ந்து சொல்வதுண்டு.)

பட்டங்கள் பல பெற்ற சிறந்த கல்வியாளரும் கூட. சென்னைப் பல்கலையில் ஆங்கிலத்தில் எம்.ஏ., பட்டமும், சென்னை, ஆந்திரப் பல்கலைக்கழகங்களில் டி.லிட்., பட்டமும் பெற்றவர். பற்பல இடங்களில் ஆங்கிலப் பேராசிரியராய்ப் பதவி வகித்தவர். அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் கூட அவர் பேராசிரியராகப் பணிபுரிந்ததுண்டு. அவருடைய மாணவர்கள் உலகெங்கும் உள்ளனர்.

புதுவை ஸ்ரீஅரவிந்தரது தத்துவங்களில் சரண்புகுந்து வாழ்ந்தவர் கே.ஆர்.ஸ்ரீ. பகவான் ஸ்ரீஅரவிந்தர், அன்னை ஆகிய இருபெரும் ஆன்மிகச் சிங்கங்களின் தத்துவத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நூல் எழுதி, அவர்களின் ஆசியைப் பெற்றவர். அரவிந்தரது "சாவித்திரி' காப்பியத்தின் தத்துவப் பொருள்கள் குறித்து விளக்கியும் நூல்கள் இயற்றியிருக்கிறார். ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

உலக அளவில் ஷேக்ஸ்பியரின் 400-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றபோது, ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஆங்கில அறிஞர் இவர்தான். இவரது ஆங்கிலப் புலமையின் பெருமை கடல்கடந்தும் பரவியிருந்தது.

ஆங்கில இலக்கியத்திற்கு இந்தியர்கள் அளித்த கொடை, ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியம் எனலாம். தமிழ் எழுத்தாளர்களில் கா.சி. வெங்கடரமணி, க.நா.சு., ஆதவன் சுந்தரம், ஆர். சூடாமணி (சூடாமணி ராகவன்), சங்கரராம் முதலிய பலர் ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். (அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் தற்போது அவ்வகையில் இயங்கி வருகிறார்கள்)

அவ்வரிசையில் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்காரின் பெயர் முக்கியமானது. சங்கரர், விவேகானந்தர், தாகூர் பற்றிய இவருடைய ஆங்கில நூல்கள் குறிப்பிடத்தக்கவை. வால்மீகியின் சுந்தரகாண்ட மொழிபெயர்ப்பு, கிருஷ்ண கீதம் முதலிய இவருடைய ஆங்கில நூல்கள் உலக அளவில் பேசப்பட்டவை. பல நூல்களின் பதிப்பாசிரியரும் கூட. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலக் கவிதைகள் நூல் அவற்றில் முக்கியமானது.

பற்பல உயர்நிலைப் பதவிகளை வகித்த பெருமைக்குரிய கே.ஆர்.ஸ்ரீ., ஆந்திரப் பல்கலையின் துணைவேந்தராகவும், ஆங்கிலம் மற்றும் மேலை மொழிகள் நிறுவனத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அமெரிக்காவின் நவீன மொழிக் கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினராகவும், அகில இந்திய ஆங்கிலப் பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

மிகச் சிறந்த ஆய்வாளர். ஒப்பீட்டு அழகியல் ஆய்வு, ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு கணிசமானது. இந்திய அமெரிக்க இலக்கியங்களை ஒப்பிட்டு இவர் செய்துள்ள ஒப்பாய்வுகள் குறிப்பிடத்தக்கவை. 25 ஆண்டுகளுக்கு மேல் பற்பல ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து அவர்களை வழிநடத்தி, பல முனைவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

இவருடைய ஒரே புதல்வர் பேராசிரியர் எஸ். அம்பிராஜன், உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். ஒரு புதல்வியான டாக்டர் பிரேமா நந்தகுமார், மேடைப்பேச்சிலும் திறனாய்விலும் புகழ்பெற்று விளங்குகிறார். (டாக்டர் பிரேமா நந்தகுமாரின் மாமியார் தான் புகழ்பெற்ற எழுத்தாளரான அமரர் குமுதினி)

தமிழில் செழித்துவரும் ஆன்மிக இலக்கியமும் தற்கால இலக்கியமும் அந்தத் துறைகளுக்கு வித்திட்டு வளர்த்த கே.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்காரின் பெயரை என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும். 

நன்றி - தமிழ்மணி

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் - சு.சமுத்திரம்! - மு.பரமசிவம்


தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் ஏழை எளியவர்களைப் பற்றி, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி சிறுகதைகளில் எழுதியவர்களை முன்னோடியாகக்கொண்டு எழுதி வெற்றி பெற்றவர் சு.சமுத்திரம்.

நெல்லை மாவட்டம், திப்பணம்பட்டியில் 1941-ஆம் ஆண்டு பிறந்த சமுத்திரம், குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.

"கடையம்' கிராமத்தில் ஆரம்பக்கல்வி பயின்று, பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர், அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ்ச் சேவை பிரிவில் பணிபுரிந்தார்.

தன் நண்பர்களுடன் இணைந்து "தேசிய முழக்கம்' என்கிற நாளிதழை வெளியிட்டார். 1973-இல் தில்லியில் மத்திய அரசு ஊழியராக இருந்த சமுத்திரம், தன் முதல் கதையை "ஆனந்த விகடனு'க்கு அனுப்பினார். "அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா' - இதுதான் கதையின் தலைப்பு. சமுத்திரத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு வானொலிக்கு மதிப்புரைக்காக அனுப்பப்பட்டது. அப்போது வானொலியில் இருந்த பிரபல எழுத்தாளர், ஒரு மார்க்சிய எழுத்தாளரிடம் மதிப்புரைக்குக் கொடுத்து, "பார்த்து எழுதுங்கள்; இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்'' என்று சொல்ல,

சமுத்திரத்தின் சிறுகதைகளைப் படித்த மார்க்சிய எழுத்தாளர், "பரிந்துரை வேண்டாம்; கதைகள் அற்புதமாக இருக்கின்றன'' என்றாராம்.

மத்திய அரசின் செய்தி - விளம்பரத் துறையில் பணிபுரிந்தவர் சமுத்திரம். அத்துறையின் மூலம் அரசியல் தலைவர்களின் நட்பைப் பெற்றவர். எனினும், அடிப்படையில் அவர் ஒரு காங்கிரஸ்காரர்; இடதுசாரிக் கொள்கையில் நாட்டம் உடையவர்; முற்போக்குச் சிந்தனையாளர்.

15 நாவல்கள், 8 குறுநாவல்கள், 500 சிறுகதைகள் எழுதியுள்ளார். ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி ஆகிய புதினங்கள் அவருடைய படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை.

சமுத்திரத்தின் இலக்கியப் பணிகளை ஆதரித்து அங்கீகரிக்கும் வகையில் அவர் எழுதிய "பாலைப் புறா' நாவலை அரசின் சுகாதாரத்துறை 5 ஆயிரம் பிரதிகள் விலைகொடுத்து வாங்கியதோடு, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிமாற்றமும் செய்தது.

ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் சமுத்திரம் எழுதிய கதைகளில் யதார்த்தவாதமும், மனித நேயமும், எள்ளல் ஆகியவையும் எடுப்பாகத் தென்பட்டதால், சமுத்திரம் இடதுசாரி வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளில் சமுத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அவற்றில் தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு கொண்டிருந்தவர். அதனால் அவர் பெற்ற நன்மைகள் ஏராளம். இந்த இலக்கியச் சங்கத்தில் ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடைபெறும். அதில் "ஊருக்குள் புரட்சி', "சோத்துப் பட்டாளம்' ஆகிய நாவல்களை வெளியிட்டது சமுத்திரத்தின் படைப்பாற்றலுக்கு மேலும் மெருகூட்டியது.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் பற்றி சமுத்திரம், தாமரை, செம்மலர் ஆகிய இதழ்களில் எழுதியதையும், இடதுசாரி இலக்கிய அமைப்புகளில் பேசியதையும் வைத்து சமுத்திரம் ஓர் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர் என்று முத்திரை குத்தப்பட்டது. எனினும், அவர் பணியாற்றிய துறையில் அரசியல் பிரமுகர்கள் அறிமுகமானவர்கள் என்பதால் அவர் ஒரு நடுநிலைவாதி என்று நம்பினர்.

சமுத்திரம் ஓர் அரசு ஊழியர் என்பதற்காக எங்கும் வளைந்து, நெளிந்து போகாமல் அவரின் சுய மரியாதைக்குப் பங்கம் விளைவித்த திசையை நோக்கிப் பொங்கியெழுந்து போராடினார். பொதுவாகவே சமுத்திரம் ஒரு சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டு இலக்கிய உலகில் வலம் வந்தவர்.

 சமுத்திரத்துக்கு "சாகித்ய அகாதெமி' விருது வழங்கி கெளரவித்தபோது, ஒருசில பத்திரிகைகள் "இட ஒதுக்கீடு' என்று ஏளனமாக எழுதின. ஆனால், "இட ஒதுக்கீடு' எதன் பொருட்டு வந்தது என்பதை நன்கு புரிந்துகொண்டு சமுத்திரம் தன்னைப் பழித்தவர்களைப் பத்திரிகை மூலமும் மேடைகளிலும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தப் போராட்டத்துக்கு இடதுசாரி இலக்கிய அமைப்புகள் தோழமையுடன் தோள் கொடுத்து உதவின.

வெகுஜனப் பத்திரிகைகளில் சமுத்திரம் எழுதினாலும் அந்த எழுத்துகள் அனைத்தும் ஒரு நோக்கத்தோடு எழுதப்பட்டவை. உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கிய நாவல்களைப் படைத்த சமுத்திரம், உலகப் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடை ஏற்றினார்.

தம் படைப்புகளை வெளியிடுவதற்கு "ஏகலைவன்' பதிப்பகத்தைத் தொடங்கி, நூல்களை வெளியிட்டார். வள்ளலாரின் மனிதநேயக் கொள்கைகளை தம் வாழ்நாள் வரை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்.

வழக்கம் போல் மனைவியிடம் "போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்ற சமுத்திரம், ஒரு கார் விபத்தில் சிக்கி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி காலமானார்.

சமூகச் சீரழிவுகளை, சுரண்டல் தன்மைகளை, அதிகாரவர்க்கப் போக்கைக் கடுமையாக விமர்சிப்பது, காயங்களுக்கு மருந்திடுவது, பாவப்பட்ட ஆத்மாக்களுக்கு ஆறுதல் கூறுவது போன்றவற்றை தம்முடைய படைப்புகளின் மூலம் வாசகர்களுக்கு அடையாளம் காட்டி, இலக்கியத் துறையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர் சமுத்திரம். அவர்தம் படைப்புகள் அனைத்தும் என்றென்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

நன்றி - தமிழ்மணி

‘ஆதார ஸ்ருதி'யின் நாயகன் - ரஸவாதி! - எஸ்.குரு


‘ரஸவாதி' என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த எழுத்தாளரின் இயற்பெயர் ஆர்.சீனிவாசன்.

தஞ்சை நன்னிலம் தாலுக்கா, நல்லமாங்குடியைச் சேர்ந்த இவர், 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி பிறந்தார். அந்தக்கால பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். சீனிவாசனின் தந்தைக்கு ரயில்வே பணி. ஊர் ஊராக மாற்றலாகிக்கொண்டே இருப்பார். அதனால், சிறுவயதிலேயே பல ஊர்களையும் பல்வேறு மனிதர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ரஸவாதிக்குக் கிடைத்தது. பின்னாளில் இவர் எழுத்தாளராக மலர்ந்தபோது, இந்த அனுபவங்கள் இவர் எழுத்துக்குப் பக்கபலமாக இருந்தன.

மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தி இருக்கிறார். துணையாக இருந்தவர்கள் ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) மற்றும் பின்னாளில் கர்நாடக சங்கீத உலகில் புகழுடன் திகழ்ந்த டி.ஆர்.சுப்ரமணியம்.

கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கிய ரஸவாதி, 1949-இல் புகழ்பெற்ற எழுத்தாளராக ஒளி வீசிக்கொண்டிருந்தார். கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. 1956-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, "கலைமகள்' மாத இதழில் தொடர்கதையாக வெளிவந்த "ஆதார ஸ்ருதி' என்ற நாவல் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

கலைமகள் இதழில் வெளியான இந்நாவலைத் தொடர்ந்து வாசித்து வந்த பெண் வாசகிகள் பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். அந்தக் காலகட்டத்தில் இது மிகவும் புரட்சிகரமான நாவலாக அறியப்பட்டது - விவாதிக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த நாவலில் காணலாம்.

எளிமையான வார்த்தைகள், எதார்த்தமான நிகழ்ச்சிகள். "ஆதார ஸ்ருதி' கன்னட எழுத்து வேந்தர் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பேத்தி ரமா தேவியால் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, "ஜீவனா' என்கிற கன்னட வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற "அழகின் யாத்திரை' என்ற நாவலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஸவாதியே "அழகின் யாத்திரை'யை மேடை நாடகமாக்கி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.

"விடிந்தது' என்ற சிறுகதையின் மூலம் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய ரஸவாதி, சிறந்த பல சிறுகதைகளை எழுதிக் குவித்தார். ஆனந்த விகடன் வார இதழில் பல முத்திரைக் கதைகளை எழுதினார்.

"சங்கராபரணம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுதியும், "கடலூருக்கு ஒரு டிக்கெட்' என்ற மகுடம் சூட்டிக்கொண்ட இன்னொரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட நூற்றிருபது(120)சிறுகதைகள் இன்னும் தொகுக்கப்படாமல் உள்ளன.

தி.ஜா.வும், லா.ச.ரா.வும் ரஸவாதியின் ஆதர்ஷ புருஷர்களாக இருந்தார்கள். தி.ஜா.வும் ரஸவாதியும் நெருங்கிய நண்பர்கள். ஒருவர் எழுத்தை மற்றவர் கையெழுத்துப் பிரதியாகவே படித்து, விமர்சித்த அனுபவங்களும் உண்டு!

புல்லாங்குழல் மேதை மாலியின் வீட்டில் குருகுல வாசம் செய்த ரஸவாதி, குழல் ஊதவும் கற்றுக்கொண்டார். உடன் பயின்றவர் பிரபல புல்லாங்குழல் வித்வான் என்.ரமணி.

நாடகப் பிரியரான ரஸவாதி, "சேவா ஸ்டேஜ்' நாடகங்களில் மனதைப் பறிகொடுத்தார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தை அடிக்கடி சந்தித்துப் பேசி, அவரது அன்புக்குப் பாத்திரமானார். "பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', "பாஞ்சாலி சபதம்' ஆகிய சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். நடிகர் வி.எஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு இவர் எழுதிக்கொடுத்த நாடகம் "வழி நடுவில்'. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பரிசை வென்றது இந்தக் கலை ஓவியம்.

அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். வலது புறம் செயலிழந்து போனது. என்றாலும் அவர் அதிர்ச்சி அடையவில்லை. தன் கையைக் குணப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், "சேது பந்தனம்' என்கிற நாவலை அதே மணிமணியான கையெழுத்தில் எழுதி முடித்தார்.

1994-இல் ரஸவாதி காலமானார். "சேது பந்தனம்' 1999-ஆம் ஆண்டுதான் பிரசுரமானது. அதைக் கண்டுமகிழ அவர் இவ்வுலகில் இல்லை.

நன்றி - தமிழ்மணி

11/03/2013

நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் - ஆர்.கனகராஜ்


பத்திரிகையாளர், நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், அரசியல் அபிமானி எனப் பல பரிமாணம் கொண்ட கோமல் சுவாமிநாதன் குறிப்பிடத்தக்கக் கலையுலகவாதி.

1935-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, செட்டிநாட்டில், ஸ்ரீநிவாசன்-அன்னபூரணி தம்பதிக்குப் பிறந்தவர். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1952-களில் காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைகளில் பேசத் தொடங்கினார். அவரின் ஆவேசப் பேச்சாற்றலால் "கோடையிடிக் கோமல்' என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார். காமராஜரிடம் இவருக்கும், இவரிடம் காமராஜருக்கும் தனி மதிப்பு இருந்தது. "சுவாமிநாதன்' என்ற பெயரில் காமராஜருடன் பலர் இருந்ததால், இவருக்குத் தனித்த அடையாளம் வேண்டும் என்ற நோக்கில், இவரது சொந்த ஊரான "கோமல்' என்ற ஊரைச் சேர்த்து, "கோமல் சுவாமிநாதன்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1969-இல் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தபோது, "இதயத்துடிப்பு' என்னும் அனல் பறக்கும் காங்கிரஸ் பிரசார நாடகத்தை அரங்கேற்றி வந்தார். பிறகு அரசியலில் தார்மிக ஆதரவாளராக மட்டும் செயல்பட்ட அவரது முழு கவனமும் நாடகத்துறைக்குத் திரும்பியது. சென்னைக்கு வந்து, "சேவா ஸ்டேஜ்' எஸ்.வி.சகஸ்ரநாமம் மற்றும் பி.எஸ்.ராமையா, வி.கோபி, நடிகர் முத்துராமன் ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். சேவா ஸ்டேஜுக்காக புதிய பாதை, மின்னல் காலம், தில்லை நாயகம் ஆகிய நாடகங்களை எழுதினார்.

சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டு இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கற்பகம், கைகொடுத்த தெய்வம் மற்றும் அவருடைய பல வெற்றிப்படங்களிலும், இந்தியில் தயாரிக்கப்பட்ட "சாரதா' படத்திலும் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் தேவர் பிலிம்ஸின் இந்தித் திரைப்பட கதை விவாதங்களில் கலந்துகொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

சில நண்பர்களுடன் இணைந்து "ஸ்டேஜ் பிரண்ட்ஸ்' என்னும் நாடகக் குழுவை சொந்தமாக உருவாக்கிய கோமல் சுவாமிநாதன், சன்னதி தெரு, நவாப் நாற்காலி, மந்திரி குமாரி, பட்டணம் பறிபோகிறது, வாழ்வின் வாசல், ஜீசஸ் வருவார், யுத்த காண்டம் எனப் பல நாடகங்களை மேடையேற்றினார். அந்நாள்களில் அபத்த நகைச்சுவைக் குவியல்களான மேடை நாடகங்களுக்கு எதிரான மேதைத்துவம் மிக்க பகடிகளாக இவருடைய நாடகங்கள் செயல்பட்டு தனி கவனம் பெற்றன.

இவரது "பெருமாள் சாட்சி' என்ற நாடகம், "பாலாழி மதனம்' என்னும் பெயரில் மலையாளத்திலும், "குமார விஜயம்' என்னும் பெயரில் தமிழிலும் திரைப்படங்களாயின. மற்றும் நவாப் நாற்காலி, யுத்த காண்டம், பாலூட்டி வளர்த்த கிளி ஆகிய படங்களும், "அனல் காற்று, தண்ணீர்...தண்ணீர்..., ஒரு இந்தியக் கனவு எனச் சிறப்பாகப் பேசப்பட்ட படங்களும் இவருடைய நாடகங்களேயாகும். வணிக நாடக உலகம் நினைத்துப்பார்க்க முடியாத நவீன நாடக வடிவ சோதனைகளை மேடைகளில் நிகழ்த்திய சாதனையாளர் கோமல் சுவாமிநாதன். மேடை நாடகங்களை மேன்மைப்படுத்த தன்னை இறுதிக்காலம் வரை அர்ப்பணித்தவர்.

தமிழ்ப் பிராமணக் குடும்பப் பின்னணியை வைத்து, நடிகை மனோரமாவுக்காக இவர் எழுதிய ஒரே நாடகம், "என் வீடு, என் கணவன், என் குழந்தை'. மேஜர் சுந்தர்ராஜனும் கோமலும் மதுரையில் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். பின்னர், மறுபடியும் 60-களில் (சென்னையில்) நாடக உலகில் சந்தித்துக் கொண்டார்கள். மேஜருக்காக "அப்பாவி', "டெல்லி மாமியார்', "அவன் பாத்துப்பான்' ஆகிய நாடகங்களை கோமல் எழுதினார்.

நடிகர் சிவகுமார், சத்யராஜை கோமலிடம் பரிச்சயம் செய்ய, தனது "கோடு இல்லா கோலங்கள்' நாடகத்தில் ஒரு சிறுவேடம் கொடுத்து சத்யராஜை அறிமுகம் செய்தவர் கோமல்.

அனல் காற்று, யுத்த காண்டம், ஒரு இந்தியக் கனவு என்ற மூன்று படங்களைக் கோமல் இயக்கினார். இலங்கைக்குப் பயணம் செய்து, ஈழத்தமிழ் சார்ந்த இலங்கை அன்பர்களைச் சந்தித்தார். அங்கு சொற்பொழிவாற்றினார்.

இவருடைய மனைவி பெயர் விஜயலெட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 நாடகம் மற்றும் திரைத்துறை தவிர, பத்திரிகைத் துறையிலும் கோமல் அடியெடுத்து வைத்தார். அவரின் நெருங்கிய நண்பரும், எழுத்தாளருமான நா.பார்த்தசாரதியின் "தீபம்' இலக்கியப் பத்திரிகையின் தாக்கத்தால், அந்த இதழின் பெயரைக்கொண்டே ஓர் இதழ் நடத்த எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் கைகூடவில்லை. அதனால், வணிக இதழாக வெளிவந்து கொண்டிருந்த "சுபமங்களா' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்த இதழைத் தரமான இலக்கிய இதழாக மாற்றினார். இதனால், "சுபமங்களா' இலக்கிய இதழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் ஆசிரியரான பிறகு வெளிவந்த இரண்டாவது இதழிலிருந்து, "பறந்துபோன பக்கங்கள்' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதினார். இவர் இறப்பதற்கு முன்பு வரை அத்தொடர் வெளிவந்தது. இறந்த பிறகு "சுபமங்களா' மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்து பின் நிறுத்தப்பட்டது.

"கலைமாமணி' மற்றும் பல விருதுகளைப் பெற்ற கோமல் சுவாமிநாதன், 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி காலமானார்.

ஜனரஞ்சகத் தளங்களில் சமூக பொறுப்புமிக்க கலைஞராக இயங்கியவர்கள் வரிசையில் கோமல் சுவாமிநாதனுக்கும் இடமளித்திருப்பது பெருமைக்குரிய விஷயம்!

நன்றி - தமிழ்மணி

தமிழர் தேசியகீதம் படைத்த பரமஹம்சதாசன்! - கவிஞர் மரு.பரமகுரு


20-ஆம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள் பலர், தெய்வப்பெயர், அறிஞர் பெயருடன் "தாசன்' என்ற சொல்லை இணைத்து அதைப் புனைபெயராகக்கொண்டு எழுதினர். அவர்களைப் போலவே, இலங்கையில் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞராக விளங்கியவர் பரமஹம்சதாசன் ஆவார்.

இவர், பிறப்பால் தமிழ்நாட்டினர்; கவிதையால் இலங்கையில் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், "அதிகரம்' என்ற சிற்றூரில் முத்துப்பழனியப்பர் - அழகம்மை இணையருக்கு, 16.12.1916-இல் முதல் பிள்ளையாகப் பிறந்தவர். இயற்பெயர் சுப்பராமன்.

இளம் வயதிலேயே பணியின் காரணமாக சுப்பராமன் இலங்கைக்குச் சென்றார். அங்கே மட்டக்களப்பு நகரில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். இயல்பாகவே உணர்ச்சியும், தமிழார்வமும் நிறைந்த இவரை, மட்டக்களப்பு மண் கவிஞராக்கியது. அந்த நகரத்தின் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொடர்பு இவரை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தாசனாக்கியது. கி.பி. 1945 முதல் இவருடைய கவிதைகள் இலங்கைத் தமிழ் இதழ்களில் வெளிவரத் தொடங்கின.

இவருடைய கவிதைகள் உணர்ச்சி நிறைந்தவை; இனிமையும் எளிமையும் உடையவை. பக்திச்சுவைததும்பும் இவருடைய கவிதைகள் அன்பர் பலரைத் தன்பால் ஈர்ப்பவை. எனவே, இக்கவிஞர் "பக்திக்கவிஞர்' பரமஹம்சதாசன் என்றே அழைக்கப்பெற்றார்.

பக்திக் கவிதைகள் மட்டுமன்றி, நாடு, மொழி, சமூகம் எனப் பல துறைகளிலும் இவர் பாடிய கவிதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மகாகவி தாகூர் பாடிய "கனிகொய்தல்' என்ற கவிதை நூலையும், கீதாஞ்சலியையும் மரபுக்கவிதை வடிவில் தமிழுக்குத் தந்த பெருங்கவிஞர் இவர். இவற்றுள் "கனிகொய்தல்' நூலைத் "தீங்கனிச்சோலை' என்ற பெயரில் இலங்கை நாவலப்பிட்டி ஆத்மஜோதி நிலையம், 1963-இல் பதிப்பித்தது.

மகாகவி தாகூரின் பல பாடல்களைத் தமிழில் உரைக் கவிதையாக வடித்துள்ள ஆங்கில இலக்கியப் பேரறிஞர் வி.ஆர்.எம்.செட்டியார், "தாகூரின் இதயக்கமலத்திலே சுடர்கின்ற உலக ரகசியங்களை எல்லாம் மூலமொழியின் வனப்புடன் நமது கவிஞர் (பரமஹம்சதாசன்) அருமையாகச் சித்திரித்துக் காட்டும்போது நாம் அளவுக்கு மிஞ்சி இன்பமடைகிறோம்' என்று இந்நூல் பற்றிக் கருத்துரைப்பது பரமஹம்சதாசனின் கவித்துவ மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கவிஞர் பல காரணங்களால் 1962-இன் இடைக்காலத்தில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்பினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட "தமிழர் தேசிய கீதத்தை' உருவாக்கிய பெருமை கவிஞர் பரமஹம்சதாசனுக்கு உரியது. "இந்த நாட்டின் அநீதியானதொரு அரசியல் சட்டத்திற்குப் பலியாகி அவர் தமது தாய்நாடு திரும்ப நேரிட்டிருப்பினும் கூட, அவர் கவியுலகில் தமது தேன்சொட்டும் பாக்களால் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சிக்கு இலக்கிய அன்பர்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்' என்று இலங்கையின் அந்நாளைய மட்டக்களப்பு முதல் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை பாராட்டியுள்ளது (வீரகேசரி நாளிதழ், 29.05.1962) எண்ணத்தக்கது. இதனால், இலங்கைத் தமிழர் தேசிய கீதத்தை உருவாக்கிய பெருமையுடையவர் இவர் என்பதை அறிகிறோம்.

கவியோகி சுத்தானந்த பாரதியார் மீது பக்தியும் மதிப்பும் கொண்டிருந்தார் பரமஹம்சதாசன். தன் மீது இவர் பாடியுள்ள பாடல்களைக் கவியோகி, தாம் இயற்றிய பாரதசக்தி மகா காவியத்தின் பிற்காலப் பதிப்புகளின் முகப்புப் பகுதியில் பெருமையோடு இணைத்து வெளியிட்டுக் கொண்டார். இது அவர்கள் இருவருக்கிடையே இருந்த அன்புக்கும் மதிப்புக்கும் எடுத்துக்காட்டாகும்.

பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில், அவரோடு உடனுறைந்து பழகியவர் பரமஹம்சதாசன். சுவாமி சித்பவானந்தா, சுவாமி சச்சிதானந்தா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருலோகசீதாராம், துறைவன் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இறுதிக்காலம் வரை இவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்பது கூடுதலான செய்தி.

1962-இல் தமிழகம் வந்த கவிஞர் பரமஹம்சதாசன் உடல் நலக்குறைவால், 49-ஆவது வயதின் தொடக்கத்திலேயே அதாவது, 1965-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன் சொந்த ஊரான "அதிகரத்தில்' காலமானார்.

கவிஞர் பரமஹம்சதாசன் மறைந்தாலும், அவர் பாடிய கவிதைகள் என்றும் மறையாத தமிழ்க் கருவூலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இவர் எழுதிய கவிதைகள், ஆயிரக்கணக்கானவை. மகாகவி தாகூரின் "தீங்கனிச்சோலை', "கவிதை மணிமாலை' என்னும் இவ்விரு நூல்களும் அளவால் சிறியவை என்றாலும், அக்கால இதழ்களில் வெளிவந்தவையும், கையெழுத்துப் பிரதிகளாக உள்ளவையுமான பிற கவிதைகள் நூல் வடிவம் பெற்றால், தமிழ்த்தாயின் சிறந்த அணிகலன்களாக அவை விளங்கும் என்பது உறுதி.

நன்றி - தமிழ்மணி

புதுவையில் மற்றொரு புரட்சிக்குயில்! - கலைமாமணி விக்கிரமன்


புதுவையில் பூத்த புரட்சி மலர்களுள் பாரதி, பாரதிதாசனுடன் இணையாக எண்ணத்தக்கவர் புதுவை சிவம். இவர் ஒரு சீர்திருத்த, சுயமரியாதைக் கவிஞர். நோக்கம், சமயம், கொள்கை வேறுபட்டாலும் தமிழ் வளர்த்த சிற்பி என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளமுடியாது.

புதுவை சிவம் என்று அறியப்பட்ட ச.சிவப்பிரகாசம் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி, புதுச்சேரி பகுதிகளில் ஒன்றான முத்தியாலுப்பேட்டையில் பிறந்தார். சண்முக வேலாயுதம் - விசாலாட்சி அம்மையாருக்குப் பிறந்த இரு புதல்வர்களில் மூத்தவர் சிவப்பிரகாசம்.

புதுவை பிரெஞ்சுப் பகுதியான முத்தியாலுப்பேட்டையில் புதுவை அரசின் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர், அவர் பாட்டனார் தளவாய் வேங்கடாசல நாயக்கர். அவர் பெயரால் தெரு ஒன்றே இருந்தது. அவர்களின் முன்னோர் உடையார் பாளையம் ஜமீன் பரம்பரையினர். இவர்கள் காலப்போக்கில் புதுச்சேரிக்குக் குடியேறியவர்கள் என்று கவிஞர் புதுவை சிவம் தன் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பரம்பரையாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் சிவப்பிரகாசம் குடும்பத்தினர். அந்தத் தொழிலில் நலிவு ஏற்பட்டதால், பிறகு நெசவுத் தொழிலுக்கு மாற நேர்ந்தது. தறித் தொழிலாளர் துயரம் குறித்துப் பிற்காலத்தில் சிவப்பிரகாசம் கவிதை எழுதுவதற்கு அவருக்கு அத்தொழிலில் இருந்த அனுபவமே காரணம்.

சிவப்பிரகாசம், கவிஞர் சிவமாக மாறப் பல சூழ்நிலைகள் காரணமாக அமைந்தன. முற்போக்குச் சிந்தனைகளின் தாக்கம் அவருக்கு ஏற்பட்டது. தன் நண்பர்களுடன் சேர்ந்து மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பேசி நண்பர்களையும் தன் வழிக்குச் சிறிது சிறிதாக மாற்றினார். ஈ.வெ.ரா.வின் எழுத்தையும் அவர் நடத்திய இதழையும் படித்து, சீர்திருத்தவாதியாக மாறினார்.

1926-ஆம் ஆண்டு, ஈ.வெ.ரா., புதுவைக்கு வந்தபோது அவர் பேச்சைக் கேட்டு ஈடுபாடு மிகக்கொண்டு அவருடைய இயக்கத்தில் இணைந்தார். அந்தச் சூழ்நிலையில்தான் பாரதிதாசன் அறிமுகம் கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது, பாரதிதாசனைச் சந்தித்தார். கவிதை எழுதுவதில் முதல் அத்தியாயமான "யாப்பு' இலக்கணத்தை அவரிடம் பயின்றார்.

1930-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "புதுவை முரசு' என்னும் சுயமரியாதை இதழின் பதிப்பாசிரியரானார். அவ்விதழில் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதன் காரணமாக, "புதுவை முரசு' இதழ் மீது சம்பந்தப்பட்டவர்களால் புதுவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 1932-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிவப்பிரகாசத்துக்கு 550 பிராங்க் (பிரெஞ்சு நாணயம்) அபராதமும், மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் சிவப்பிரகாசம் பிரபலமடையத் தொடங்கினார். பாரதிதாசன் நட்பு பலப்பட்டது. அவருடைய கவிதைகளைப் படியெடுக்கும் பணியை ஏற்றார். கட்டுரைகள் எழுதினார். நெசவுத் தொழிலில் அவருக்கு முன்பே இருந்த அனுபவமும், அத்தொழிலில் ஏழைகள் படும் துயரமும் முற்றிலும் அறிந்தவராதலால், நெசவாளர் துயர் குறித்துப் பாடல்கள் எழுதினார். அவற்றைத் திரட்டிப் "புதுவை நெசவுத் தொழில் - ஏழையர் எழுச்சிப் பாடல்' என்னும் தலைப்பில் கவிதை நூலாகத் தொகுத்து வெளியிட்டார். அந்தக் கவிதைத் தொகுப்பு பரபரப்பாக விற்பனை ஆயிற்று.

புதுவையில், மக்கள் ஆயிரக்கணக்கில் பஞ்சாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் நல வாழ்வுக்கு என்று தனிச் சட்டமில்லை. இந்தத் துயர் நிலையை பாரதிதாசனும், சிவப்பிரகாசமும் "புதுவை முரசு' இதழில் எழுதி எழுச்சி ஏற்படுத்தினர். தோழர் வ.சுப்பையா போன்றவர்கள் தொழிலாளர் நலனுக்குக் கனல்கக்கப் பேசியும் எழுதியும் வந்தனர். இதனால் சில ஆண்டுகளில் புதுவையில் தொழிலாளர் புரட்சி கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. கூட்டங்கள், வேலைநிறுத்தங்கள் பல ஏற்பட்டன. 1936-ஆம் ஆண்டில் ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பன்னிரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். "புதுவை சவானா மில் படுகொலைப் பாட்டு' என்னும் தலைப்பில் இந்த நிகழ்ச்சியைப் புதுவை சிவம் கவிதையாக எழுதினார்.

1940-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஜெகதாம்பாள் என்பவரை பாரதிதாசன் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.

1944-இல் புதுவையில் திராவிடர் கழகம் தொடங்கப் பெரும் பாடுபட்டார், பின்னர் அக் கழகத்தின் செயலாளரானார். பொருளாதாரம் காரணமாக "புதுவை முரசு' இதழ் நிறுத்தப்பட்டது. அதனால் அவர் ஓய்ந்துவிடவில்லை. தமிழ் நாட்டினின்று வெளிவந்த குடியரசு, நகர தூதன், சண்டமாருதம் முதலிய இதழ்களில் பாரதிதாசனுடன் இணைந்து கவிதை, கட்டுரைகள் எழுதினார்.

மகாகவி பாரதியிடமும் பெரும் ஈடுபாடு கொண்டவர் சிவப்பிரகாசம். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' என்னும் இதழை மீண்டும் புதுப்பித்து வெளியிட்டார். எஸ்.ஆர்.சுப்பிரமணியம் போன்ற பாரதிப் பித்தர்கள் பொருளுதவி செய்ய, பாரதிதாசன் ஆசிரியராக இருக்க, புதுவை சிவம் மேற்பார்வையில் "பாரதி கவிதா மண்டலம்' இதழ் முற்றிலும் கவிதை இதழாக வெளிவந்தது. பாரதியார் பாடல்களும், பாரதியாரைப் பற்றி பாரதிதாசன் எழுதிய கவிதைகள் பலவும் கவிதா மண்டலத்தில் பூத்துக் குலுங்கின. ஆனால், பாரதி கவிதா மண்டலம் இதழை ஓராண்டுக்கு மேல் நடத்த இயலவில்லை. பாரதியாரைப் போற்றிய புதுவை சிவத்தைப் பாரதி அன்பர்கள் மறந்துவிடக்கூடாது.

புதுவை சிவம் நாடக இலக்கியத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டார். சுயமரியாதை இயக்கத்திற்கென்று நாடகங்கள் பல எழுதி அவை மேடையேறின. ரஞ்சித சுந்தரம், நீதி வர்மன், பூங்கொடி, கோகில ராணி, சிதைந்த வாழ்வு ஆகிய நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

முத்தியாலுப்பேட்டைத் தொகுதியில் புதுவை நகர மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். புதுச்சேரி நகர மன்றத் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கான மாநில உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

இயக்கப் பணி காரணமாக அரசுப் பணியை ஏற்காமல் தனியார் பள்ளியில் பணியாற்றினார். "தமிழிசைப் பாடல்' என்னும் பாடல் தொகுதி உட்பட, 19 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு, புதுவை சிவத்துக்கு 1983-ஆம் ஆண்டில் "பாரதிதாசன்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

புதுவை சிவம் 1989-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி காலமானார்.

புதுச்சேரி அரசு, புதுவை சிவம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி, "நூற்றாண்டு பாமாலை' என்ற நூலை வெளியிட்டு அவர் நினைவைக் கொண்டாடியது. தமிழ்நாட்டிலும் அக் கவிஞருக்கு நாம் அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி - தமிழ்மணி

வீரக்கலைஞர் விசுவநாததாஸ் - முனைவர் சொ.சேதுபதி


தேசப்பற்று உள்ளவர்களாக நடித்துக்கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டவர்களுக்கு மத்தியில், நடித்துக்கொண்டே தேசப்பற்று உள்ளவர்களாக மக்களை வளர்த்து, தம்மைத் தேய்த்துக் கொண்டவர் தியாகி விசுவநாததாஸ்.

ஏறினால் நாடகமேடை; இறங்கினால் ஆங்கிலேயச் சிறை என்ற நிலையில், அடிமை இருள் அகற்ற சுதந்திரச் சுடராய்ச் சுழன்று இசை ஒளிவீசிய இயக்கம் அவர்.

1886-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி, சிவகாசி சுப்பிரமணியம் - ஞானம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார். இளம் பருவத்திலேயே நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த விசுவநாததாஸ், மழலைக் குரல் உள்ளவரை பெண் வேடம் தரித்தார். வாலிபரான பின் புராண நாடகங்களின் தலைமைக் கதாபாத்திரங்களை ஏற்று, மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

1911-இல் தூத்துக்குடிக்கு வருகை தந்த காந்தியடிகள், விசுவநாததாஸின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தார். நாட்டு விடுதலைக்கு அதைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அன்றிலிருந்து பட்டாடைகளை விடுத்து கதராடைகளை உடுத்துவதையே வழக்கமாகக் கொண்ட தாஸ், நாடகங்களில் விடுதலைக்குரிய பாடல்கள் பலவற்றைப் பாடினார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆங்கில அரசின் காவல்துறை இவரைக் கைதுசெய்ய விரைந்து, வாரண்டை நீட்டியது. முருகவேடத்தில் நின்ற விசுவநாததாஸ் ""யாருக்கு வாரண்டு?'' என்றார். ""ஆட்சியாளர்களை எதிர்த்துப் பாடிய விசுவநாததாஸýக்கு'' என்றார் கைது செய்யவந்தவர். ""அப்படியா, நான் விசுவநாததாஸ் இல்லை. முருகக்கடவுள். அவரைக் கைது செய்ய வாரண்ட் இருந்தால் கொண்டு வாருங்கள். அல்லது வேடம் களைந்து விசுவநாததாஸ் வரும் வரையில் நாடகம் பாருங்கள்'' என்று கூறிவிட்டார். வேறுவழியின்றி விடியவிடிய நாடகம் பார்த்துவிட்டு முடிந்த பிறகு அவரைக் கைது செய்தவந்த அதிகாரியிடம், ""நான் எப்போது அப்படிப் பாடினேன்?'' என்றார் தாஸ். ""முருகன் வேடத்தில்'' என்றார் அதிகாரி. அடடா, ""நாடகத்தில் பாடியது முருகப் பெருமான், விசுவநாததாஸ் இல்லையே. அவர் பாடியதற்கு என்னை ஏன் கைது செய்கிறீர்கள். சட்டம் தெரியாமல் ஆட்சி செய்வதுதான் உங்கள் நீதியா?'' என்று சாடினார். பலனில்லை. வேலூர்ச்சிறை ஓராண்டு காலம் அவருக்கு வீடானது. வெளிவந்த தாஸýக்கு மீண்டும் மேடை; கூடும் கூட்டம்; பாடும் பாடல்கள் முடிந்ததும் சிறை அல்லது அபராதம். தொகையைச் செலுத்தி நண்பர்கள் மீட்டபின்னும் இதே நிலைதான். ஒருமுறை இவருக்காக வழக்காட, வ.உ.சி.யும் வந்ததாகக் கூறுவர்.

1932 நாடுமுழுவதும் விடுதலை எழுச்சி வேகம் கொண்டிருந்த நேரம். தாஸின் நாடகங்களைக் காணவேண்டும் என்று கட்டுக்கடங்காமல் மக்கள் கூடிய காலம். எப்படியும் மேடை ஏறுமுன் அவரைக் கைது செய்துவிட வேண்டும் என்று காவலர்கள் மேடையின் முன்பு காத்திருந்தனர். தாûஸக் காணவில்லை. ஆர்மோனியத்தோடு அவர் சகோதரர் சண்முகதாஸ் மேடையில் ஏறினார். "விசுவநாததாஸ் எப்படியும் வந்துவிடுவார். அவர் வரவு தாமதம் ஆவதால், அவருடைய மகன் சுப்பிரமணியதாஸ் நடிப்பார். அனைவரும் இருந்து ஆதரவு தாருங்கள்' என்று அறிவிக்கப்பட்டது. தாஸின் ஒப்பனைப் பொருள்கள் உள்ள பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒரு கூலிக்காரன் காவலர்களைக் கடந்து மேடைக்குப் போனான். நாடகம் அரங்கேறியது. முருகன் வேடமிட்டு தாஸின் மகன் பாடியவிதம் அனைவரையும் கவர்ந்தது. தந்தையைப் போலவே மகனும் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். "கொக்குப் பறக்குதடி' என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம். மக்கள் ஆவேசமுற்று கரவொலி எழுப்பினர். உன்னிப்பாகக் கவனித்துக் கேட்ட காவல் துறையினருக்குக் கூலிக்காரன்போலப் பெட்டி தூக்கிக்கொண்டு வந்தது "தாஸ்'தான் என்பது புரிந்துவிட்டது. கைது செய்ய விரைந்தனர். கூட்டமாய்ச் சூழ்ந்துகொண்ட மக்கள் விடாது தடுத்தனர் என்பது வரலாறு.

அவருடைய மூத்தமகன் சுப்பிரமணியதாஸýம், தங்கை மகன் சின்னச்சாமியும் இவரைப் போலவே பாடல்கள் பாடி நடித்தனர். முடித்ததும் சிறைத்தண்டனை பெற்றனர். இப்படிக் குடும்பம் முழுவதும் தேசத்திற்காகப் பாடுபட்டது நெகிழ்ந்து நினைக்கத்தக்க வரலாறு.

சிறைவாசம், குடும்ப வறுமை, கடன் சுமை என அடுக்கடுக்காக இன்னல்கள். கடனுக்காக வீடு ஏலம். எட்டயபுர மன்னர் உதவ முன்வந்ததையும் தன்மானமிக்க தாஸ் தவிர்த்தார். அக்காலத்துச் சென்னை மேயராக இருந்த வாசுதேவநாயர் நிலைமை புரிந்து உதவ முன்வந்தார். காங்கிரஸ் இயக்கத்தைவிட்டு வெளியேறுங்கள். இழந்த சொத்துக்களை மீட்டுத்தருவதோடு மாதாமாதம் தொகையும் தருகிறோம் என்றதை தாஸ் மறுத்தார்.

1940 டிசம்பர் இறுதி நாள்கள். வீடு ஏலம் போகுமுன் மீட்பதற்காகச் சென்னைக்கு வந்தார். 5 நாடகங்கள் ஏற்பாடாகியிருந்தன. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். அதற்கான நிதிதிரட்ட, ஆங்கிலேயருக்காக நாடகம் நடத்திக் கொடுக்க முன்வந்தால், கடன்களை அடைப்பதோடு, மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையும் தருகிறோம் என்று அப்போதைய சென்னை கவர்னர் எர்ஸ்கின்துரை, தாஸýக்குத் தகவல் தந்தார். சில காங்கிரஸ் தலைவர்கள்கூட இதை ஆதரித்துப் பேசிப்பார்த்தனர். ஆனால் தாஸ் மறுத்து விட்டார். உடல்நலக் குறைவானதால் ஒப்புக்கொண்ட முதல் 3 நாடகங்களில் நடிக்க முடியவில்லை.

31.12.1940 இரவு வள்ளி திருமணம் நாடகம். நலக்குறைவோடு முருகவேடம் ஏற்று மேடையேறினார் தாஸ். புரட்சிமிக்க பாடலைக் கேட்க மக்கள் பெருங்கூட்டம். வழக்கம்போல கைதுசெய்ய, காவலர்தம் காத்திருப்பு. கழுகாசலக் காட்சி. மயில்மீது அமர்ந்து முருகனாகப் பாடுகிறார் தாஸ். ""மாயா பிரபஞ்சத்திலே...'' சற்றே கம்மிப் பின்னர் கணீரென்று ஒலிக்கிறது அவரது மணிக்குரல். வேலேந்தியபடி பாடிய முருகனின் தலை சற்றே தளர்வெய்தித் தொய்கிறது. ஆர்மோனியம் இசைத்துக்கொண்டிருந்த சகோதரன் ஓடி வந்துத்தாங்குகிறார். பார்வையாளர்களில் இருந்த ஒரு மருத்துவர் அரங்கேறிவந்து பரிசோதித்தபோது அவர் மூச்சு நின்றிருந்தது.

மக்களின் கண்ணீர் மலர்களைக் காணிக்கையாக ஏற்று, மயில் வாகனம் மீதமர்ந்த முருகப்பெருமானாகவே விசுவநாததாஸின் இறுதி யாத்திரை. நடந்தது நாடகம் அல்ல; முடிந்தது அவரின் வாழ்க்கையும் அல்ல. என்றும் நிறைந்து, இன்னும் நம் மனக்கண்களில் நிகழ்வதும் தொடர்வதும் அவரது வரலாறு. தியாகம் நிறைந்த வரலாற்றுக்குத் தொடக்கம் உண்டு, முடிவுதான் ஏது..?

நன்றி - தமிழ்மணி

விடுதலைப் போராட்ட வீரர் க.ரா.ஜமதக்னி - பேராசிரியர் மு.நாகநாதன்

1903-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கடப்பேரி என்னும் கிராமத்தில், ராகவன்-முனியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். வாலாஜா அருகிலிருந்த கிராமத்துப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். வேலூர், ஊரிஸ் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை 1926-இல் முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இடைநிலை கலையியல் பட்டம் பெற்றார்.

பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஜமதக்னிக்கு, ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியா முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த உணர்வின் தாக்கத்தால், காங்கிரஸ் இயக்கத்தின் மீது தீவிர பற்றுகொண்டார்.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது வேலூர் கோட்டையின் மீது கல்வீசி வன்முறையில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் காவல் துறை அவரை 1926-ஆம் ஆண்டு முதன் முறையாகக் கைதுசெய்து, ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது.

விடுதலைப் போராட்ட வீரர் ஆக்கூர் அனந்தாச்சாரியார் 1968-இல் எழுதி வெளியிட்ட "அரசியல் நினைவு அலைகள்' என்ற நூலில், நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஜமதக்னி எவ்வளவு துடிப்போடு செயல்பட்டார் என்பதை விளக்கியுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜமதக்னிக்கு பிரிட்டிஷ் அரசு ஓராண்டு ஒரு மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்து விடுதலை அடைந்த ஜமதக்னியை, 1928-இல் பிரிட்டிஷ் அரசு ராஜ துரோக குற்றத்தைப் பொய்யாகச் சுமத்தி ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி லாகூர் சிறையில் அடைத்தது.

சிறையில் இருந்து வெளிவந்த ஜமதக்னி தொடர்ந்து பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று, ஓராண்டு சிறைத் தண்டனையைப் பெற்றார்.

இக்காலக்கட்டத்தில்தான் சிறையில் இருந்த பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலரை முதன்முதலாக சந்தித்தார். ""சிங்காரவேலரோ தனக்கு தரப்பட்ட மாமிச உணவை எனது வயிற்றுப் பசிக்கு அன்புடன் அளித்தார். அறிவுப் பசிக்கோ மார்க்சிய உணவை அளித்தார். இந்தப் பயிற்சியே மார்க்சிய நூல்களை முறையாகக் கற்கும் பக்குவத்தை எனக்கு அளித்தது. சிறையில் இருந்த மற்ற தலைவர்களுக்குப் பிற்காலத்தில் மார்க்சிய வகுப்புகளை எடுப்பதற்கு வழிவகுத்தது. "மூலதனம்', "மிகை மதிப்பு' நூல்களைத் தமிழில் முழுமையாக மொழியாக்கம் செய்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியது'' என்று கூறியுள்ளார் ஜமதக்னி.

சிறையில் இருந்து வெளிவந்த சில மாதங்களிலேயே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு, ஓராண்டு சிறைத்தண்டனைப் பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1939-இல் இந்திய பாதுகாப்பு விதியின்படி கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் வேலூர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார். அப்போது பெருந்தலைவர் காமராஜரும் இவரும் பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தனர். 1975 ஜூன் மாதத்தில் தலைவர் காமராஜரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, காமராஜர், ""ஜமதக்னிதான் எனக்கு மார்க்சியம் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்'' என்று நினைவுகூர்ந்துள்ளார்.

மீண்டும் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தார். அப்போது சம்ஸ்கிருதம், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளைக் கற்றார். இதுகுறித்து ஜமதக்னி குறிப்பிடுகையில், ""மூதறிஞர் ராஜாஜி, சிங்காரவேலர், டாக்டர் இராசன், பட்டாபி சீத்தாராமையா, பலுசு சாம்பமூர்த்தி, ஈ.எம்.எஸ். நம்பூதிபாட், ஏ.கே.கோபாலன், கொண்டா வெங்கடசுப்பையா, காளா வெங்கட்ராம், அன்னபூர்ணய்யா ஆகியோருடன் சிறையில் இருந்தமையால் பல மொழிகளையும் கற்பதற்குத் தனக்கு வாய்ப்பு ஏற்பட்டது'' என்று அடிக்க நினைவுகூர்வார்.

சம்ஸ்கிருத மொழியை முழுமையாகக் கற்றுணர்ந்த அறிஞர்களில் ஜமதக்னியும் ஒருவர். காளிதாசரின் மேகசந்தேசம், ரகுவம்சம் ஆகிய நூல்களைத் தமிழில் கொண்டு வந்த பெருமைக்குரியவர். புகழ்பெற்ற ஜெய்சங்கர் பிரசாத் இந்தியில் எழுதியுள்ள "காமாயிணி' என்னும் காப்பியத்தை, தமிழில் "காமன் மகள்' என்று மொழிபெயர்த்து வழங்கினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் தலைமறைவாய் வாழ்ந்த தனக்கும், தனது தோழர்களுக்கும் பணம் தேவைப்பட்ட போது, திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குமரேச சதகம் ஆகிய நூல்களுக்கு விளக்க உரை எழுதி வருவாய் ஈட்டினார்.

1938-இல் சோஷலிஸ்ட் கட்சி உருவானபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து இக்கட்சி தமிழகத்தில் உருவாவதற்குப் பெரிதும் பாடுபட்டார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் அதன் நிறுவன உறுப்பினரானார். அக்கட்சியின் வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றினார். 1938-ஆம் ஆண்டில் மார்க்சியம், நீ ஏன் சோஷலிஸ்ட் ஆனாய்?, இந்தியாவில் சோஷலிசம் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார். இதற்காக சிறைத் தண்டனையையும் பெற்றார். கம்பனுடைய சில முக்கிய பாடல்களைத் தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.

1947-இல் இந்தியா விடுதலை பெற்றபின், ஜமதக்னி தனது வாழ்நாளை எழுத்து, இலக்கியப் பணிகளுக்கு செலவிட்டார்.

ஜமதக்னியின் குடும்ப வாழ்க்கை சிறைத் தொடர்பு கொண்டதுதான். கடலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளை சிறையில்தான் சந்தித்தார். அவரின் மகள்தான் அம்மாக்கண்ணு. இந்த அம்மாக்கண்ணுவின் பெயரை காந்தியடிகள் லீலாவதி என மாற்றினார். பின்னாளில் அஞ்சலையம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அஞ்சலை அம்மையாருக்கு அளித்த வாக்குப்படி விடுதலைப் போராட்ட வீரர் லீலாவதியை 1942-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் (சிவாஜி), இரு மகள்களும் (கிருபா, சாந்தி) பிறந்தனர் (கட்டுரையாளர் பேராசிரியர் மு.நாகநாதனின் மனைவிதான் முனைவர் சாந்தி). மகன் சிவாஜி, மகள் கிருபா ஆகிய இருவரும் மறைந்து விட்டனர்.

1981-இல் தனது பயணத்தை முடித்துக் கொண்டார் ஜமதக்னி. அவரின் பல படைப்புகள் இன்னும் வெளியிட வேண்டியுள்ளன. ஜமதக்னியின் சிந்தனைப் பயணம் தொடர்கிறது...

1998-ஆம் ஆண்டு க.ரா.ஜமதக்னி மொழிபெயர்த்த மூலதனம் மற்றும் மிகைமதிப்பு நூல்களுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஐந்து லட்சம் உதவி வழங்கிச் சிறப்பித்தது.

நன்றி - தமிழ்மணி

அறிஞர் பொ.திருகூட சுந்தரனார் - கலைமாமணி விக்கிரமன்


இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டன. தன்னலமற்ற நாட்டுப்பற்று மிக்க ஓர் அறிஞர், சென்னையில் புகழ்பெற்ற நூலகத்துக்குச் சில குறிப்புகள் எடுக்கச் செல்கிறார். கையிலே மடிக்கப்பட்ட குடை, இடுப்பில் கதர்வேட்டி, மேலே உடலை மறைக்கத் துண்டு. நுழைவாயிலில் நிறுத்தப்படுகிறார்.

வியப்படைந்த அந்த அறிஞர் காரணம் வினவ, "நாகரிகமாக' அவர் உடை அணியவில்லையாம்!

மேலே உடலை மறைக்கத் துண்டு, நாலுமுழ வேட்டி அணிந்த அவரைக் கிராமத்திலிருந்து வந்தவர் என்று நூலக அதிகாரி எண்ணிவிட்டார் போலும். அவரோ எம்.ஏ.பி.எல்., படித்தவர். மாநிலக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று எம்.ஏ., முடித்தவர். பள்ளிப் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர். அவர்தான் பொ.திருகூட சுந்தரம்.

1917-ஆம் ஆண்டு பொ.திருகூட சுந்தரம், மகாத்மா காந்தியின் சொற்பொழிவை சென்னைக் கல்லூரி ஒன்றில் கேட்டார். ""பிறருக்கு உதவி செய்ய விரும்புபவர் முதன் முதலாகச் செய்ய வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாதது ஒன்று உண்டு. ஆடம்பர வாழ்க்கையை விட்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்வதுதான். உயிர் வாழ்வதற்கு முக்கியத் தேவையானவற்றை மட்டும் உடையவனாயிருக்க வேண்டும்''. மகாத்மாவின் இந்த உரையைக் கேட்ட அறிஞர் பொ.திருகூட சுந்தரம், எதிர்காலத்தில் இப்படித்தான் வாழவேண்டும் என்று உறுதி மேற்கொண்டார். அதன் விளைவுதான், பிரபல நூலக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம். அந்த உடையுடனேதான் உள்ளே செல்வேன் என்ற பொ.திருகூட சுந்தரம் பிள்ளைக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைத்தது.

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் என்ற புகழ்பெற்ற திருத்தலத்தில் பொன்னம்பலம் பிள்ளை-சொர்ணாம்பாள் தம்பதிக்கு 1891-ஆம் ஆண்டு பிறந்தார்.

அந்த ஊரிலேயே தொடக்கக் கல்வி பயின்றார். திருநெல்வேலியில் உயர்கல்வி கற்றார். பின்பு எம்.ஏ., (தத்துவம்) பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்து வழக்கறிஞரானார்.

காந்திஜியின் கட்டளைக்கிணங்க ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு வழக்கறிஞர் தொழிலை விடுத்து, தேசியப் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

கிராமங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற காந்திஜியின் லட்சியத்தைக் கடைப்பிடித்து, திருநெல்வேலி மாவட்டம் எங்கும் பயணம் செய்து மேடை ஏறிப் பேசலானார். ராட்டையில் நூற்று, தன் ஆடையைத் தானே தயாரித்துக் கொண்டார்.

"தூய்மை செய்' என்று மகாத்மா, மாணவர்களுக்கு நல்லுரை வழங்கியதை செய்தித்தாளில் படித்தார் அறிஞர் பொ.தி.

""எதைத் தூய்மை செய்வதென்று சிந்தித்தேன். உடல், உள்ளம், சுற்றுப்புறம், மூன்றில் வாழும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதென்று முடிவு செய்தேன். காரைக்குடிப் பகுதியில் உள்ள ஊருணியை, வீதிகளைச் சுத்தம் செய்யத் தொண்டர்களைச் சேர்த்து செயலில் இறங்கினேன். கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தேன். என்னைப் பார்த்து, பலர் அவ்வாறு தூய்மைப் படுத்தும் பணியில் இறங்கினார்கள். "எங்கள் பகுதியில் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வாருங்கள்' என்று கிண்டலாகப் பேசினார்கள். அவ்வாறு கூறியவர்களைப் பற்றி காரைக்குடியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "ஊழியன்' பத்திரிகையில் எழுதினேன். மற்றொரு இதழான "குமரன்' ஆசிரியர், என் காந்தியப் பணியைப் பாராட்டி "தோட்டி மகாத்மா' என்ற விருது கொடுத்தார்'' இவ்வாறு பொ.திருகூட சுந்தரனார் காந்திய சொற்படி நடந்த வரலாற்றை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

மகாத்மா மீது கொண்ட பக்தியை அறிந்த கவி சுத்தானந்த பாரதியார், "காந்தி பக்தரே வருக, கனல் தெறிக்கும் எழுத்தாற்றல் கொண்ட தமிழ் எழுத்தாளரே வருக'' என்று  பொ.தி.யைக் கட்டியணைத்துக் களிப்பெய்தினாராம்.

"பாலபாரதி' என்ற இதழை கவியோகி சுத்தானந்த பாரதி உதவியுடன் நடத்திவந்த வ.வே.சு. ஐயர், பொ.திருகூட சுந்தரனாரைக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அவர் எழுதிய தேசபக்தி உணர்வூட்டும் கட்டுரைகள் பல பாலபாரதியில் வெளிவந்தன. சுதேசமித்திரன் இதழில் தொடர்ந்து கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார்.

1942 இயக்கத்தில் பொதுமக்களால் சிறையை உடைத்து விடுவிக்கப்பட்ட  இளைஞர் அண்ணாமலை சென்னைக்கு வந்து, சக்தி வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார் உதவியுடன் "தமிழ்ப்பண்ணை' என்ற புத்தக வெளியீட்டகத்தை தியாகராய நகரில் தொடங்கினார். புத்தக அமைப்பில் பல புதுமைகள் செய்து வாசகர்கள் மனம் கவர்ந்த அண்ணாமலை, சின்ன அண்ணாமலை என்று ராஜாஜியால் அழைக்கப்பட்டவர், மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தபோது, அவர்தம் கொள்கைகளையும் சத்தியாக்கிரகம் அகிம்சை நிர்மாணத் திட்டங்கள், கிராம அபிவிருத்தி போன்ற செய்திகளை மக்களிடையே பரவச் செய்ய "யங் இந்தியா' என்ற வார இதழை வெளியிட்டு வந்தார். அந்தப் பெயரை "ஹரிஜன்' என்று மாற்றினார். சென்னை வந்தபோது, தமிழில் ஹரிஜன் பதிப்பை வெளியிட எண்ணினார். தமிழில் சிறந்த முறையில் வெளியிட ஏற்றவர், சின்ன அண்ணாமலைதான் என்று ராஜாஜி பரிந்துரைக்க, தமிழில் ஹரிஜன் வெளியிடும் உரிமையை சின்ன அண்ணாமலைக்கு வழங்கினார்.

தமிழ் ஹரிஜனுக்குத் தக்க ஆசிரியர் பொ.திருகூட சுந்தரம் பிள்ளையே என்று முடிவு செய்த சின்ன அண்ணாமலை, அவரைச் சென்னைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

முன்பே மொழிபெயர்ப்பு நூல்கள் பல எழுதிப் பாராட்டுகள் பெற்றவர் பொ.தி. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் "வார் அண்ட் பீஸ்' என்ற பிரசித்தி பெற்ற நாவலை "போரும் அமைதியும்' என்ற பெயரில் தமிழாக்கம் செய்து புகழ் பெற்றவர். சிறந்த காந்தியவாதி என்று மக்களால் பாராட்டப்பட்ட பொ.தி. தமிழ் ஹரிஜனின் ஆசிரியராக அமர்ந்து, "ஹரிஜன்' பத்திரிகையின் உள்ளடக்கம் போலவே தரம் குறையாமல் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். மகாத்மா காந்தி மறையும் வரை அந்த வார இதழ் தொடர்ந்து வெளிவந்தது.

"தமிழ் ஹரிஜன்' இதழின் ஆசிரியராக இருந்தபோதே புரட்சிகரமான நூல்கள் இரண்டை எழுதினார். "விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை', "குழந்தை எப்படிப் பிறக்கிறது?' முதல் புத்தகம், குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்தி யோசனைகள் கூறுவது. மற்றொன்று, தாய் கருவுற்றதிலிருந்து குழந்தை பிறப்பு வரை "குழந்தை எப்படிப் பிறக்கிறது?' என்ற புத்தகம்.

தொடர்ந்து, குழந்தைகள் மனதில் அறிவியல் சார்ந்த செய்திகளை விதைப்பது அரிய விளைச்சலைப் பெருக்கும் என நம்பிய அறிஞர், "அப்பாவும் மகனும்', "கேள்வியும் பதிலும்' என்ற நூல்களையும் எழுதினார்.

தமிழ் ஹரிஜன் வார இதழ் நிறுத்தப்பட்டவுடன் மிகப்பெரிய பணி  திருகூட சுந்தரத்துக்குக் காத்திருந்தது. பேரறிஞர் பெ.தூரனை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கத் திட்டமிட்ட கலைக் களஞ்சியத்தின் துணை ஆசிரியர் பொறுப்பு காந்தியச் செல்வருக்கு அளிக்கப்பட்டது. கவிஞர் பெ.தூரனின் வலது கரமாகவே இருந்து "கலைக் களஞ்சியம்' பதிப்புகளைச் சிறப்பாக வெளியிட பொ.தி. உதவினார்.

"அறிவுக் கனிகள்', "இதய உணர்ச்சி', "அழியாச் செல்வம்' ஆகிய அறிவுப் பொக்கிஷங்களை இயற்றி வெளியிட்டார்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் மிக்க புலமையுடைய அறிஞர், சென்னை செனட் சபை அங்கத்தினராக இருந்திருக்கிறார். தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பத்து நூல்களையும், சொந்தமாக எழுதப்பட்ட பத்து நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

கலப்புத் திருமணம் செய்துகொண்டவர் பொ.தி. மனைவி, நாகர்கோயிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் ஒன்றை நிறுவி, ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலியவர். கணவரின் தொண்டுகள் அனைத்திலும் பங்கு கொண்டவர். இவர்களுக்கு ஓர் ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். தன் பெற்றோர் பெயரையே அவர்களுக்குச் சூட்டி மகிழ்ந்தவர் பொ.தி.

தியாகராய நகர் கோவிந்து தெருவில் இறுதிக் காலம் வரை வசித்த அறிஞர், ஏறத்தாழ காந்திய நெறியில் உழன்று தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி சிறந்த நூல்களை எழுதி, தன் தியாக வாழ்க்கையை 1969-ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.

நன்றி - தமிழ்மணி

07/03/2013

ஆண்மை 13 - எஸ்.பொன்னுத்துரை


ஈச்சேரில் விழுந்த சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.

வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

பயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள் இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கப்பால் “கேற் தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.

கேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும் ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப் பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை? சோட்டைக்குத்தானும் அவளுக்கு ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.

வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும் முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.

உந்த வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன் ம் பக்கத்திலை பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”

பொட்டு மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.

அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடைபயில அந்த நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு

விழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.

வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன் இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.

உங்கை என்ன காத்தையைக் கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப் போக ஓமெண்டுவன்.

அதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின் பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.

உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள்? இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன்? மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக் கொடுத்தாள் தாய்.

தொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.

டேய் சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய்? உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன்? கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார் புதிய வேகம் கொடுத்தார்.

அடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே? நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய் இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.

பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை. ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று கூடச் சொல்லலாம்.

தூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார் சந்திரசேகர்.

சரசக்கா! எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது – இது பூரணத்தின் குரல்.

அவளின்ரை குரல் அப்பிடித்தான் கிடக்குது? ஒரு உடைவோ ஒரு கரகரப்போ?

பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.

வாருங்கோ பூரணமக்கா! பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக் கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை?

இதெணை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான். இதுதானே மூத்த பொடிச்சி? உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும் எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”

சந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார். “ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னித் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.

பழைய பூரணமே? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே, அந்த மங்குளிப் பெண்ணா இவள்? இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்

சந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.

உத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன் டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை – பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ – நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு – லைட் அவுட் – தூக்கம்!

இராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு. நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.

சாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார். “அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம் ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு “ஆர் விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார் கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன் என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.

சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம் போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப்பொழுது வயது நாலு. “ஊமை என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

மூத்தவன் இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன் எண்டுதானெணை சொல்லுறான்.. பூரணம் இன்னும் போகவில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.

என்னை எடுத்தவர்? என்ஜினியரிங்கோ? சரஸ்வதி மூத்த பெண் திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.

இல்லை, புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப் பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.

சந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார். மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.

கடையப்பக்காரியள் என்று சாம்பசிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக் கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள், கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம் பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே மாடு சாகப் போகுது? சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது!

ஓமெணை, அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும் வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..

பூரணம் உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள்? அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம்? சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன்? இந்த வீடும் வளவும்! காடலைந்த முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக் குடுக்கத்தான் தேறும்

பத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும் வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச் சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும்? பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது? பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”

காதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார் புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.

விழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர் உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக் கொடுத்தாள். “யார் தந்தது? என்று கேட்காமலேயே சாப்பிடத் தொடங்கினார்.

பூரணத்தின் சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது

கேட்டியளேய்யா இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”

கொழும்பிலை இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”

பூரணக்காதான் சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”

ஓமணை உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்

பூரணமக்கா தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்

நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர் என்று சிரித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

நான் ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்

பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.

மனசார இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்

நாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். விடியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.

வெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக் கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை இல்லையே.

சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.

நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும் என்று பூரணம் சொல்லுகிறாள்.

அந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார் நினைத்தார்.

பொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம் அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச் சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக இழுக்கிறார்.

இருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.

நன்றி - பண்புடன் குழுமம்